Wednesday 31 March 2021

தீக்கொன்றை மலரும் பருவம்


தீக்கொன்றை மலரும் பருவம் 
சர்வதேச இலக்கிய வரிசை நூல் 

பதிப்பகம் : எழுத்து 
விலை : ரூ 499
பக்கங்கள் : 404
 
எழுதியவர் : அபுபக்கர் ஆடம் இப்ராஹிம்.

இவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் ஆவார். சிறந்த எழுத்துக்கான ஆப்பிரிக்க பிபிசி பரிசு பெற்றவர் இவர். சஹாரா துணைக் கண்ட பிரதேசங்களின் சமகாலத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். உலக அளவில் வெளியிடப்பட்டுள்ள Season of Crimson Blossoms நாவலுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான நைஜீரியாவின் .NNLG இலக்கியத்துக்கான பரிசைப் பெற்றவர். 

தமிழில் மொழிபெயர்த்தவர் :
 லதா அ.ருணாச்சலம் ,

இவர் கவிதை , கட்டுரை , மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆங்கில முதுகலை மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்த இவர் , 14 வருடங்கள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வாழ்ந்தவர். சில காலம் அங்கு ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். கடந்த சில வருடங்களாக சென்னையிலும் நைஜீரியாவிலும் மாறி மாறி வாசம் செய்கிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு 'உடலாடும் நதி ° கடந்த வருடம் வெளியானது . தீக்கொன்றை மலரும் பருவம் இவரது முதல் மொழி பெயர்ப்பு நாவல். 

தீக்கொன்றை மலரும் பருவம் நூலைப் பற்றி ....

இந்த நூலின் தலைப்பும் அட்டைப் படமுமே நம்மை வெகுவாக ஆட்கொள்கின்றன. மொழிபெயர்ப்பு நூலாக எண்ணவே முடியாமல் இருக்கும் படி நமது தமிழ் மொழியில் எழுதப்பட்ட உணர்வுடன் ,நீண்ட நாவலாக நம்முடன் பயணிக்கிறது. நைஜீரியா நாட்டு நாவல் என்றோ உலகின் வேறொரு பகுதியின் மனிதர்கள் என்றோ இதைப் படிக்கும் போது உணர முடியவில்லை.  கதாபாத்திரங்களின் பெயர்கள் வேண்டுமானால் அந்நியமாக இருக்கலாம். ஆனால் கதைக்.களம் , கதைக்கரு , உணர்வுகள்  , கதை மாந்தர்கள் என அனைத்தும் நம்முடன் மிக நெருக்கமாக பயணிக்கின்ற வகையில் மொழிபெயர்த்துள்ளார் லதா அருணாச்சலம் .சுவாரஸ்யம் குறையாமல் ஆனால் மிக ஆழமாகப் பேசப்பட்டுள்ள கதை. மொழியாக்கம் செய்த உத்தி என இரண்டுமே நிறைவான அழகு எனலாம் .
மனிதர்களின் நிழல் வாழ்க்கையாக நாம் உருவகம் செய்யும் பல முடிச்சுகளைப் பிணைத்து புதினம் உருவாகியுள்ளது . போதை மருந்துகள் விற்பனை செய்யும் இளைஞர்களின் தலைவனாக வரும் ரெஸா நாவலின் இறுதி வரை நம்முடன் பயணிக்கிறான். பெண்களின் ஆழ்மனதின் புதையுண்ட விருப்பவெளிப்பாடாகக் காட்டப்பட்டுள்ள  காமம் , பேசப்படாத யாரும் வெளிப்படையாகப்  பேச விரும்பாத, முறையற்ற பாலின ஈர்ப்பு என்ற  பொருண்மை தான் நாவலின் அடிநாதமாக வீற்றிருக்கிறது . ஐம்பந்தைந்து வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கும் அவளது மகன் வயதுள்ள இளைஞனுக்கும் இடையே உருவாகும் காதல் உணர்வு , மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதும்  அதன் நீட்சியாக நடக்கும் நிகழ்வுகளும் தான் இக்கதையின் போக்கு. அதே சமயத்தில் அந்த நாட்டின் சமூகத்தில் நிலவும் அரசியல் சூழல் , பொருளாதாரத்தில் நலிவுற்ற இனத்திற்கு கல்வி மறுக்கப்படும் சூழல், எளியோரைப் பயன்படுத்தி வலியோர் வாழுதல் என அனைத்தும் குறியீடுகளாக
நாவல் முழுவதும் அடையாளம்
காட்டப்படுகிறது. அவற்றைப் பார்க்கும் போது உலகெங்கிலும் நிகழும் குற்றங்களைப் பற்றிய பார்வையை நாம் ஆழமாக செலுத்த முடிகிறது. அதே போல எல்லா நாடுகளிலும் நிகழும் பிரச்சனைகள் , குற்றங்கள் இவற்றைப் பொதுமைப்படுத்தக் கூடியதாகத் தான் தோன்றுகிறது.  அதுவே யதார்த்தம். 
இரண்டு பாகங்களில் 32 அத்யாயங்களாக வளர்ந்துள்ளது கதை . வல்லாஹி ... கதை முழுவதும் பெண்களின் அக உலகத்தின் பயணம்  குறித்து பதிவு செய்வதாக லதா அவர்கள்
தனது முன்னுரையில் கூறியது தான் உண்மை. ஒரு பெண்ணின் நடத்தை மாற்றங்களுக்கான  
உளவியல் கூறுகளை  ஆய்வு செய்யும். பொருட்டும் இந்நூல் வழிகாட்டுகிறது.  சமூகத்தின் பார்வையை தைரியமாக உடைக்கும் விதமாக  ஹஜியா பிந்த்தா பைஜூரு என்ற , பிரதான பெண் பாத்திரத்தை உருவாக்கி வாழ வைத்துள்ள நூலாசிரியரைப் பாராட்டியே தீர வேண்டும்.  எல்லாவற்றைக் காட்டிலும் தமிழில் மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்த தோழி லதா அவர்களுக்கு ஒரு வாசகியாக அன்பு முத்தங்கள் . நிச்சயமாக வாழ்நாள் முழுக்க படிப்போரின் எண்ணங்களில் வாழும் இந்த தீக்கொன்றை மலரும் பருவம் .

இந்தப் புத்தகம் ,  கவிஞரும் எழுத்தாளருமான யூமா வாசுகி அவர்களது  தன்னறம் விருது விழாவில் நூலின்  மொழிபெயர்ப்பாளரான
தோழி லதா அருணாச்சலம் அவர்களது கரங்களாலேயே எனக்கு வழங்கப்பட்டது என்பதையும் மகிழ்வுடன் பதிவு செய்கிறேன். 

உமா

No comments:

Post a Comment