Thursday 18 March 2021

இந்திய இலக்கியச் சிற்பிகள் ஆர்.சூடாமணி. .

இந்திய இலக்கியச் சிற்பிகள் 

ஆர்.சூடாமணி. .


சாகித்திய அகாதெமி வெளியிட்ட இந்த நூல் 2017 இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. 


ஆசிரியர் : முனைவர்  கே.பாரதி . சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் .எழுத்தாளர் சூடாமணியின் உயிலைச் செயல்படுத்தியவர். ஆர்.சூடாமணி நினைவு அறங் கட்டளையின் அறங்காவலர். சிறுகதை , கட்டுரை , குறுநாவல் போன்ற படைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ள இவர் , இலக்கிய வீதியின் 'அன்னம் விருது' பெற்றவர். 


இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்கள் குறிப்பிடத் தக்கவர் . சுமார் ஐம்பது ஆண்டுகள் 1954 முதல் 2004 வரை தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கியவர் .உளவியல் நுட்பங்களை எழுதும் ஆற்றல் பெற்றவராக வாழ்ந்துள்ளார். இந்த நூலை வாசிக்கும் போது ஒரு ஆதர்ஸ பெண்மணியின் வாழ்வு சிந்தனை , கருத்தாக்கம் , மதிப்பீடுகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. 


அர்ப்பணமாக ஒரு வாழ்வு , மானுட மேன்மைகள் , உளவியல் நுட்பங்கள் , பெண்ணிலைப் பார்வை , நாவல்கள் குறுநாவல்கள் என்ற ஐந்து தலைப்புகளால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 


திருமணம் செய்து கொள்ளாமலேயே தனித்து வாழும் ஒரு பெண் அவரது குடும்ப உறவுகளுடன் கொண்ட அபரிதமான பிணைப்பு, அவர்களுக்குப்  பின் தன் எழுத்துப் பணியில் கடந்த பயணங்களின் செறிவு படிப்பவரை நெகிழ வைக்கிறது. சூடாமணியின் அத்தனை பரிமாணங்களும் அவரது தாய் தந்த சீதனமாகவே வெளிப்படுகிறது.


சாதரணமாக மற்றவர்கள் செய்யக் கூடிய எந்த வேலையுமே சூடாமணிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்துள்ளது. அந்த சவாலை அவர் ஏற்றுக் கொண்ட விதமும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து இயங்கியதும் எங்ஙனம் என்பதை விரிவாக விளக்குகிறது நூல். இத்தனைக்கும் ஆதாரம் அவரது தாய் கனகவல்லியாக இருந்துள்ளார். அம்மா கனகவல்லி பற்றி வாசிக்கும் போது நமக்கு இப்படி ஒரு தாய் அமையவில்லையே என ஏக்கம் வருகிறது. 


சூடாமணி முழு நேர எழுத்தாளராக அறியப்பட்டு கலைமகள் , சௌராஷ்டிரமணி , தீபம் , கல்கி , ஆனந்த விகிடன் ஆகிய பத்திரிகைகளில் அவரது சராசரியாக மாதம் ஒரு சிறுகதை பிரசுரமாகியுள்ளது அறியப்படுகிறது. இவை தவிர நாடகம் , நாவல் , குறுநாவல் என்ற பல முயற்சிகளும் வெற்றி அடைந்துள்ளன. 


1959 இல் மனத்துக்கினியவள் என்ற இவரது நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசு கிடைத்துள்ளது. ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில் சூடாமணி எழுதிய இருவர் கண்டனர் நாடகம் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. ஆங்கிலத்திலும் இவரது  200 க்கும் மேற்பட்ட ஆங்கிலச் சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.


சூடாமணியின் நண்பர்கள் மிகச் சிலரே எனத் தெரிய வருகிறது. ராஜம் கிருஷ்ணன் , மகரம் , அம்பை ஆகியோர் சிலர். 


தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கே உரிய தனிமைப் படுத்தப்பட்ட வாழ்வை (lonely life) சூடாமணி வாழவில்லை. Solitude என்று ஆங்கிலத்தில் சொல்லக் கூடிய மேன்மையான ஒரு தனிமை வாழ்வை சூடாமணி அம்மையார் தேர்வு செய்திருந்த வாழ்க்கையை நூல் அழகாக விவரிக்கிறது. 


எளிய தோற்றம் ,எளிய உடை ,எளிய உணவு ,எளிய வாழ்க்கை என்று வாழ்த்து , காந்தியச் சிந்தனையின் தாக்கத்தாலும் வாக்கு வேறு வாழ்க்கை வேறு என்று இல்லாத ஒரு மனுஷியாக அவர் வாழ்ந்திருக்கிறார் சூடாமணி. 


தன்னைத்தானே மேம்படுத்திக் கொண்டு முழுமை அடையும் குறிக்கோளுடன் இயங்கியவர் சூடாமணி , அதற்கான சுயமுயற்சியும் அவரது எழுத்து பிரதிபலிக்கிறது. தன்னையும் உயர்த்திக் கொண்டு வாசகர்களையும் உயர்த்திய அறம் சார்ந்த எழுத்து அவருடைய தாக இருந்து வருகிறது. 


சூடாமணியின் படைப்புலகம் குறித்து மானுட மேன்மைகள் என்று விரிவாக தொகுத்துள்ளார் நூலாசிரியர். மானுடத்தின் மேன்மைகள் எந்த தருணங்களிலெல்லாம் வெளிப்படக் கூடும் ? எப்போது எவ்விதம் வெளிப்பட்டால் அது சராசரிகளை விஞ்சி நிற்கும் ? இது போன்ற கேள்விகளுக்கு சூடாமணியின் சில கதைகளில் ஆழமான விளக்கங்கள் பொதிந்திருக்கின்றது என புத்தகம் குறிப்பிடுகிறது. மனித இயல்பின் மேன்மையை மட்டுமே மீட்டியெடுக்கும் வீணை போன்ற இலக்கியம் அவருடையது.


சுலபமாக அளந்துவிட முடியாத மனித மனத்தின் சில கூறுகளை தன்னால் முடிந்த அளவுக்கு அடையாளம் காட்டியிருக்கிறார் சூடாமணி .


தமிழ் இலக்கியத்தில் உளவியல் கதைகள் என்ற ஒரு பிரிவு இருக்குமேயானால்  சூடாமணியின் கதைகளை அந்தப் பிரிவில் அடக்கி விட முடியும் என்கிறார் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்.


கூச்சலோ கூக்குரலோ இல்லாமல் எந்தவிதப் பிரகடனங்களும் இல்லாமல் மெல்ல தனக்காக இலக்கியத்தில் ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொண்டாள் சூடாமணி. பெண்கள்  குறித்தான தமது பார்வையில் இலக்கியம் படைப்புகள் குறித்து எழுதியதை பெண்ணிலப் பார்வையில் தொகுத்துள்ளார் பாரதி.பெண்களின் அக வுலகம் குறித்த சூடாமணியின் கதைகள் மிக அழுத்தமானவை என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் .


இறுதிப் பகுதி இவரது நாவல்கள் குறுநாவல்கள் குறித்து பதிவு செய்கிறது. புன்னகைப் பூங்கொத்து (1964) , தீயினில் தூசு (1967) , தந்தை வடிவம் (1967) மானிட அம்சம் (1974) , கண்ணம்மா என்  சகோதரி (1980) ஆகியவை நாவல்கள் .குறு நாவல்கள் குறித்து விடிவை நோக்கி (1959) , உயர்வு உள்ளத்திலே (1967), வாழ்த்துவோம் (1971) , மங்கை பி.ஏ (1971)  , உள்ளடக்கம் (1972) முக்கோணம் ( 1978 ), களங்கமில்லை (1980) ஆகியவை பற்றி விவரிக்கப் பட்டுள்ளது .


இலக்கியம் குறித்து அறியப் பட வேண்டியவர்களில் முக்கியமான பெண்மணி குறித்த இப்புத்தகம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும். 







.

No comments:

Post a Comment