Sunday 22 May 2022

பனி விழும் மலர்வனம்

பனி விழும் மலர்வனம்
ஆசிரியர் : பால குமாரன்
குரல் : கீர்த்தனா
நேரம் : 2 மணி 18 நிமிடங்கள்

இரு தோழிகள் , எதிரெதிர் குடும்ப சூழலில் இருந்து வந்து ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர். புனிதா , நாகலட்சுமி இருவர் தான் அந்த கதாபாத்திரங்கள். கவிதை எழுதும் திறன் பெற்றவள் புனிதா . மென் உணர்வுடன் பெண் என்ற சமூகத்தின் கற்பிதங்களை நம்பும் , சராசரி குடும்பத்திலிருந்து வருபவள் . கிராமம் சார்ந்து வளர்ந்தவளாக வளைய வருகிறாள். நகரத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாகலட்சுமி  , பகுத்தறிவு , தைரியம் என்று தன்னை  சிந்தனையால் கட்டமைத்து எங்கும் தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்யத் தயங்காதவள். சமூகத்தின்  கற்பிதங்கள் மீது எதிர்க் கருத்து கொண்டு வீட்டிலும் வெளியிலும் அலுவலகத்திலும் சுதந்திரமாக இயங்குபவள். புனிதாவை ஒரு முறை நாகு இலக்கியக் கூட்டம் ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு ஹைக்கூ கவிதையைப் பகிர்ந்து விவாவதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகும் சந்திரமெளலியை சந்திக்கின்றனர். கவிதைகள் பற்றி பேசப் பேச கவிதை எழுதும் இருவருமான புனிதாவும் சந்திரமௌலியும் காதல் உணர்வால் இனணய ஆரம்பிக்கின்றனர்.  இந்த சூழலில்,நாகுவிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்து நிச்சயிக்கப்படுகிறது. மூவரும் ஒரு நாள் திரைப்படத்திற்கு செல்ல , திரையரங்கில் நாகுவையும் சந்திர மௌலியையும் அருகருகே பார்க்கும் நாகுவின் மாப்பிள்ளைக் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்தி விட, திருப்பங்கள் உருவாகி குழப்பங்கள் உருவாகுவதும் ,இறுதியில் நாகுவிற்கும் சந்திர மௌலிக்கும் திருமணம் நடப்பதும் அந்த சூழ்நிலைகளை சமாளிக்க இயலாமல் இருவரும் கடந்து புனிதாவிற்கு வாழ்க்கை அமைவது என கதை நகர்கிறது .  

இன்றைய கால கட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் , பெண்களின் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களில் தான் எத்தனை தடங்கல்கள் ? ஒரு நண்பனுடன் தான் திரைப்படம் சென்றேன் ,தோழியின் காதலன் அவன் என எத்தனை கூறியும் பல கட்டுப்பாடுகளை வைத்து அச்சுறுத்தி தோழியின் காதலனைத் திருமணம் செய்யப் பிடிவாதம் பிடிக்கும்  நாகுவின் அண்ணன் , இறுதியில் அவனே வெல்கிறான். ஆண்களுக்குத் தான் எத்தனை அகங்காரங்கள் ? தைரியமாக எதிர்க்கும் பெண்ணாக இருந்தாலும் , தோழியின் குடும்பத்தைக் குழப்பத்திற்கு ஆட்படுத்தி அவளது வாழ்வை சிதைத்து விடுவதாகக் கூறும் செய்யத் துணியும் காட்டு மிராண்டித் தனமான தனது அண்ணனை மீற முடியாமல் சூழ்நிலைக் கைதியாக மாறும் பெண்ணாகிப் போகிறாள் நாகு . முதல் தலைமுறை கல்வி பெற்றவளாக சமாளித்து இந்த இடத்திற்கு நகர்ந்துள்ளாள் என நாகு ஓரிடத்தில் புனிதா குறித்து பேசும் போது பெண்களின் கல்விப் பயணத்தின் வலியை உணர முடிகிறது. 

பாலகுமாரன் கதைகளில் எப்போதும் போல அலுவலக நடைமுறைகள் , ஹாஸ்யமான உரையாடல்கள் , எதார்த்த சூழ்நிலைகள் , அறிமுகமான கதாபாத்திரங்கள் என பனி விழும் மலர்வனம் இனிமையானதொரு கதையே. பெண்களுக்கான சிந்திக்க வேண்டிய உரையாடல்களும் இருக்கின்றது. 


மோக முள்

22 RM258 , 11/50

நூலின் பெயர் :மோக முள்
எழுதியவர் : தி.ஜானகி ராமன் 
ஒலி : ஜிஜி , ரவிஷங்கர் , பாலாஜி
நேரம் : 21 மணி நேரம் 9 நிமிடம் 

ஆசிரியர் குறிப்பு :

தி.ஜானகிராமன் ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா. என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர். தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர் எனக் குறிப்பிடுகிறது விக்கி .பத்தாண்டு காலங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். 

நூல் பற்றிய கருத்து :

1964 இல் எழுதப்பட்டுள்ள இந்த நாவல் நம்மை அந்த காலகட்டத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறது.  மோகமுள் இந்த நாவலை ஒரு வாழ்க்கையாகவே படைத்திருக்கிறார் ,
தி ஜானகிராமன் அவர்கள் . நாவலை படிப்பதற்கு அல்லது கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாகத் தான் பெரும்பகுதி இருக்கிறது .ஒவ்வொரு குரலும்   நம்மோடு உயிரோட்டமாக உலவுகிறது .இந்த ஒலிப்புத்தகத்தில் .பாபு, யமுனா, பார்வதி ,ரங்கண்ணா, வைத்தி, ராஜன், பாபுவின் அம்மா பாபுவின் அக்கா, வெங்கட்ராமன், சங்கு, பத்மாஷினி என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மையறியாமல் நம்மோடு பயணம் செய்கின்றனர்.   

 கதை நடந்த காலம், கதைக்களம் ,கதை மாந்தர்கள் என எல்லாவற்றையும் மிகவும் அழகாக வடிவமைத்து இருக்கிறார் தி. ஜானகிராமன். கதை பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த கும்பகோணம் பாபநாசம் பகுதிகளை களங்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அங்குள்ள பேச்சு நடை, உரையாடல் வடிவம், வட்டார வழக்குச் சொல் என அனைத்தையும் நம்மால்  உணர முடிகிறது

பாபுவின் குடும்பமும் யமுனாவின் குடும்பமும் ஐம்பதாண்டு காலமாக குடும்ப நண்பர்களாக இருக்கின்றனர். பாபுவின் சிறு வயது வாழ்க்கை முதல் அவன் கல்லூரிக்கு செல்வது, தங்கிப் படிப்பது அவனுடைய பண்புநலன்கள், அவனுடைய தந்தைக்குக் கீழ்ப்படிதல் ,அவனுடைய குரு ரங்கனா பாட்டு சொல்லிக் கொடுப்பவர் அவருக்கு கீழ்ப்படிதல், அவனுக்கு உண்மையான நண்பனாக ராஜன் .இவர்களுக்கு இடையே ஏற்படக்கூடிய சம்பாஷனைகள், அவர்களது குடும்பத்திற்கு மிக நெருக்கமான யமுனாவின் குடும்பம். யமுனாவின் குடும்பத்தில்  அம்மாவும் அவளும் மட்டும்தான். அவரது தந்தை இறந்துவிடுகிறார். மராத்திய வம்சத்தில் வந்தவர்கள் இரண்டாம் திருமணமாக ராஜா காலத்திலிருந்து வந்த வழியில்  திருமணம் செய்துகொண்டது இப்படி கதை நகர்கிறது.

 அழகான அறிவான மிகவும் நிதானமான பெண்ணாக யமுனா என்ற கதாபாத்திரத்தை படைத்திருக்கின்றார் தி.ஜா . அவளுக்கான திருமணம் தள்ளிக்கொண்டே போகின்றது அவரது தந்தை ஐயராகவும் அவரது தாய் மராட்டிய மாகவும் இருப்பதனால், இரண்டாவது மனைவியாகவும் அவருக்கு பிறந்த குழந்தையாக இருப்பதனால், என நிறைய சமூகம் சார்ந்த காரணங்களால் யமுனாவிற்கான திருமணம் தொடர்ந்து தட்டிப் போகிறது. சில வரன்களை  அவளும் மறுக்கிறாள் எனக்கான கணவர் இல்லை, எனக்கு, படித்தவர் வேண்டும் என்று இப்படி நகர்கிறது .இதையெல்லாம் பார்க்கிறான்  பாபு. பாபுவிற்கும் ஜமுனாவிற்கும் 10 வருடங்களுக்கு மேல் வயது இடைவெளி.  யமுனாவின் மீது பாபுவிற்கு வெளிப்படுத்த முடியாத அன்பு அது ஒரு கட்டத்தில் காதலாக மலர்கிறது அதை அவன் வெளிப்படுத்தக்கூடிய காலகட்டத்தில் அவள் இது சரியல்ல சமூகத்தில் நீ கௌரவமாக வாழ முடியாது என்று மறுக்கிறாள். அவளது அம்மாவும் அவளும் தனியாக வசிக்கின்றனர் வாழ்க்கையை ஓட்ட அவர்களுக்கு பணம் இல்லை வருமானம் இல்லை இதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை பாபு பார்க்கிறான்.  அவ்வப்போது அவர்களுக்குதவி செய்தல்  என நாவல் நகர்கிறது .

 பாபுவின் வீட்டில் திருமணத்திற்கு அவனது தாய் அவனை வற்புறுத்துகிறாள் ஆனால் அவன் திருமணமே வேண்டாம் என்று சொல்லி விடுகின்றான் பாபுவின் அக்கா இளமையில் திருமணம் செய்து பட்டு என்று ஒரு குழந்தை பிறந்து , வளர்ந்த பிறகு அது இறந்து, எனக்  கிளைக் கதைகளும்  வளர்கின்றன.

 பாபு படித்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு,   பாட்டு கற்றுக் கொண்டு சாதகம் செய்தல்
 அதிலேயே தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறான். இடையில் தங்கம்மாள் என்றொரு பெண்,  பாபுவை விரும்பும்  சூழல் ஏற்படுகிறது அவள் இரண்டாம் தாரமாக வயதான ஒரு ஆணுக்கு மனைவியாக வந்து பக்கத்து வீட்டில் வசிப்பவள் இப்படியாக பல கிளைக் கதைகளும்  அங்கங்கே இந்த நாவலில் இடம் பெறுகின்றது.

திடீரென ஒரு ஒருநாளில் பாபு சென்னையில், தனக்கான ஒரு வேலையை   பிடித்துக் கொள்கின்றான் .அவனுடைய   சங்கீத ஞானத்தைக் குறித்து அவன் பெரிதாக நினைக்கவில்லை .ஆனால் அவனுடைய இசைஞானம் மிகவும் உயர்ந்ததாகப் படுகிறது , அவனது பாட்டுப் பாடும் திறனைப் பார்ப்போருக்கு , கேட்போருக்கு .அது பற்றிய புரிதல் இருப்போருக்கு . அவனுக்கு பாடல் கற்றுக்கொடுத்த ரங்கண்ணா, மேடை கச்சேரிகளை செய்வது இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்ன ஒரு காரணத்திற்காக மேடைகளை முற்றிலுமாக தவிர்த்து ஒரு பொதுக்காரியதரிசியாக தன்னுடைய பணியை ஏற்கிறான்.

 காலங்கள் ஓடுகின்றனர் யமுனாவும் அவளது அம்மாவும் தஞ்சை மாவட்டத்திலேயே வசித்து வருகின்றனர்.   பாபு எல்லாவற்றையும் மறந்து சென்னையில் தன்னுடைய வேலையை பார்க்கிறான் திடீரென ஒருநாள் யமுனா பாபுவின் அலுவலகத்திற்கு வந்திருப்பதாக அறிந்து விவரம் விசாரித்து அவள் மூன்று மாதமாக பட்டினியாக இருப்பதை உணர்ந்து மிகவும் வேதனை அடைந்து அவளுக்காக ஒரு வேலையை த்தேட ஆரம்பித்து ஒரு ஆசிரமத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றான் அங்கு வரக்கூடிய பத்மானி சமூக சேவையாக மிகவும் புரிதல் உள்ள ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டு இருக்கின்றார்.

 சென்னை வந்தபிறகு பாபுவிற்கு யமுனாவிற்கும் இடையே மீண்டும் அந்த அன்பின் மோகம் இருக்கின்றதா அது எவ்வாறு பயணிக்கிறது இருவருக்குமிடையே நடக்கக்கூடிய சந்திப்புகள் ஒரு கட்டத்தில் எவ்வாறு மாற்றமடைகின்றது அது எல்லோராலும் ஏற்கப்படுகின்றதா? ராஜன் என்ன ஆனான்? யமுனா தன்னை எவ்வாறு மாற்றிக் கொள்கிறாள் அல்லது தன்னை எவ்வாறு உயிர்ப்புடன் வைத்துக் கொள்கின்றாள் ? பத்மாசினிக்கும் - யமுனாவிற்கும் இடையே ஏற்படக்கூடிய உறவு, எட்டு ஆண்டுகளுக்கு ப்பிறகும் பாபுவிற்கு யமுனா மீது அதே காதல் உணர்வு இருக்கின்றதா என்பதை எல்லாம் நாம் இந்த கதையின்  பின்பகுதியில் அறிந்து கொள்ள முடிகிறது.  மிகவும் சிறப்பாக மனதைத் தொடும் அளவிற்கு எழுதப்பட்டுள்ளது இதை வாசித்த பிறகு அல்லது ஒலிப் புத்தகத்தில் கேட்ட பிறகு அந்த நாவலில் இருந்து நம்மால் மீளவே முடியவில்லை என்பதுதான் உண்மை அந்த காலகட்டத்திலேயே இப்படியான ஒரு முரண்பாடான உறவை மையமாக வைத்து ,ஆனால் அதை எவ்விதத்திலும் நெருடல் இல்லாமல் எடுத்துச் செல்கின்றார் தி.ஜானகிராமன் 

நாவலும் கதைகளும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தானே எழுதப்படுகின்றன. அதேபோலத்தான் இந்த கதையை உணரமுடிகிறது எங்கோ நடந்த ஒரு கதையின் முடிச்சை வேராகக் கொண்டு இந்த நாவல் படைக்கப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன் மிகவும் சிறப்பான நாவல் நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

 அதேபோல யமுனாவிற்கான குரலும் பாபுவிற்கான குரலும் மிகவும் நேர்த்தியாக நம் மனதை விட்டு அகலாமல் அப்படியே இறுக்கி பிடித்துக் கொள்கின்றது. வயதானவர்களாக வரக்கூடிய வர்களுக்கு வாசிக்கக்கூடிய குரல்கள் அதேபோல மிகவும் நடுக்கத்துடன் வருகின்றது. எல்லா குரல்களும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Friday 20 May 2022

பேராசிரியர் ஜவஹர் நேசன்


 பேராசிரியர் ஜவஹர் நேசன் அவர்களது புத்தகம் நேற்று சென்னை ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் அரங்கு ,எக்மோரில் நடைபெற்றது.

 இந்திய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு - எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு என்ற இந்த நூல் தமிழ் , ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பாரதி புத்தகாலயம் அவர்களால் வெளியிடப்பட்டது நிகழ்வை ஒருங்கிணைத்த அமைப்புகள்  அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி , அண்ணாமலை பல்கலைக்கழக மதச்சார்பற்ற பொறியாளர் அமைப்பு மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியன.

 நிகழ்வில் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றியவர் மேனாள் நீதியரசர் ஹரிபரந்தாமன் அவர்கள். அவர் கல்வி மட்டுமல்ல நீதித்துறையும் எமர்ஜென்சி காலகட்டத்தில் மத்திய அரசிற்கு சென்றுவிட்டது அது இன்னும் யாரும் அறியவில்லை என்ற கருத்தை பகிர்ந்து, நாம் கல்வியை மட்டும் மாநிலப் பட்டியலுக்கு கேட்பதைவிட எல்லாவற்றையும் கொடுங்கள் என்று கேட்கவும் அதற்காக புரிந்து போராடவும் வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த, அரசியல் அமைப்புச் சட்டத்தை இந்த புத்தக கருத்துகளுக்கு ஒப்பிட்டு நடைமுறை பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் முன்வைத்து பேசினார். 

 அதோடு மத்திய அரசிற்கு, மாநில அளவில் செயல்படக்கூடிய பல்கலைக்கழகங்கள் மீது உரிமை ஏன் ? நாம் செலவழிக்கிறோம் கல்விக்காக .... இவர்கள் ஏன் உரிமை கோருகிறார்கள் என்பதோடு   மாநில அளவில் மட்டுமல்ல மாவட்ட நீதிமன்றங்களில் கூட எதிர்காலத்தில் வடநாட்டவர்கள் வந்து பணியாற்றலாம் என்ற கருத்தையும் நம்மிடம் கூறும் பொழுது நமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதற்கான அரசியல் அமைப்பு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் , எமர்ஜென்சி கால கட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டு உரிமைகளெல்லாம் எத்தகைய நிலையில் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதனையும் தெளிவாகப் புலப்படுத்தினார். சரத்துக்களைக்  குறிப்பிட்டு ஆதாரங்களுடன் பேசினார்.

மற்ற பேச்சாளர்கள் நால்வருமே அவரவர் கோணத்தில் புத்தகத்தையும் தேசிய கல்வி கொள்கை ஏன் வேண்டாம் என்பதையும் இப்போதைய கல்விச்சூழல் எப்படி இருக்கிறது என்பதையும் அலசி ஆராய்ந்து பார்வையாளர்களுக்கு மிகத் தெளிவாக கொடுத்தனர்.

 பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்கள் தனது ஏற்புரையில் கர்ஜனை செய்தார் என்று கூறலாம். உண்மையான கல்வி எது அதைவிடுத்து நாம் எங்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம்?, மக்கள் முடிவு செய்ய வேண்டியது எல்லாம் ஆட்சியாளர்கள் ஏன்  செய்கிறார்கள்?, கல்வியை அரசியல் வயப்படுத்துவது  சரியா ? அது எத்தகைய விளைவுகளை கொடுக்கும் என்று பல கோணங்களில் நமக்கு விவரித்தார்.

 ஜெர்மனியும் இத்தாலியும் முசோலினி ஹிட்லர் தங்களின் பிடியில் மக்களை எடுத்துச் செல்வதற்காக தேசியவாதமாக மாற்ற கல்வியை எப்படி ஒரு கருவியாக பயன்படுத்தினர் என்பதனை முன்வைத்து, இந்தியாவிலும் அத்தகைய சூழல் உருவாகிவிட்டது என்பதை நமக்கு உணர்த்தினார்.

 தேசப்பற்றுக்கும், தேசத்தின் மீது வெறி ஏற்படுவதற்கும் உள்ள இடைவெளியை படிநிலைகளாக வகுப்பு எடுப்பது போல எடுத்தார் ஜவஹர்  அவர்கள் .ஆகவே நாம் அனைவரும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது மட்டுமல்ல எப்படிப்பட்ட கல்வி இங்கு தேவை என்பதனை பற்றி சிந்திக்க இப்போதாவது துவங்க வேண்டும்.

கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கல்வி தளத்தில் பணியாற்றுவோர் கல்வித் தளத்தின் மீது ஆர்வமாக செயல்படுவோர் பொதுமக்கள் குறிப்பாக பெற்றோர்கள் இவர்கள் எல்லோரும் இணைந்து ,  எதிர்காலத்தில் நாம் முழுமையாக அடிமைச் சமுதாயமாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால் இப்போதைய கல்வி முறையைக் கட்டாயமாக கேள்விக்கு உட்படுத்தி மாற்றங்களை கொண்டு வருவது மிக முக்கியம் என்பதனை  இந்த நூல் வெளியீடு நமக்கு உணர்த்தியது.

 நிகழ்வின் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் யாரையுமே  நாம் குறைத்து மதிப்பிட முடியாது எல்லோரும் மிகத் தகுதி வாய்ந்தவர்கள் மிகவும் ஏராளமான வருடங்கள் பணியாற்றி இந்த சமூகத்திற்காக தங்கள் உழைப்பைக் கொடுத்து அக்கறை கொண்டவர்கள் . அவற்றில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை 

ஆனால் அங்கு பெண்களின் இடம் என்பது மிகவும் சொற்பமாக, ஏன் கூட்டத்தில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரு அமைப்பு ரீதியான நபராக தான் நான் அந்த இடத்தில் பிரதிநிதித்துவம் பெற்றேன் .மற்றபடி பேசுவதற்கும் மற்ற முன்னிலை வகித்தவர்கள்  இடத்திலும் எந்த பெண்களுமே இல்லை அது மிகவும் எனக்கு வருத்தமாக இருந்தது கீழிருந்து மேடையை பார்க்கும்போது வருத்தமாக இருந்தது அதே அளவு மேடையில் நான் அமர்ந்து எதிரில் அமர்ந்திருந்த ஜன கூட்டத்தை பார்க்கும் பொழுது முக்கியமான நபர்கள் கட்சி சார்ந்தவர்கள் அரசியல் பொறுப்புகளில் இருப்பவர்கள் ஊடகத்தில் இருந்து வந்தவர்கள் என்று நீ ஏராளமான மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இருந்தாலும் பெண்களில் மிக மிக குறைவான எண்ணிக்கையில் பத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஏனென்றால் இன்று கல்வி தளத்தில் வேலை செய்பவர்கள் எல்லோருமே ஆசிரியர்களாக பேராசிரியர்களாக மற்ற எல்லா இடங்களிலும் பெண்களே அதிக சதவீதத்தில் இருக்கும்பொழுது கல்வி என்பது சமூகத்தை மாற்றுவதற்கான ஒரு காரணி என்கிற போதும் அவர்களில் இதில் ஈடுபட வேண்டும் அல்லவா அவர்களுக்கு இது குறித்த புரிதல் வர வேண்டும் எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை முன்னேறிய மாநிலங்களில் உலக அளவில் கூட இந்திய அளவில் நம்மளுடைய தமிழகம் பெண் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்று எல்லோரும் பறை சாற்றுகிறார்கள் ஆனால் இதுபோன்ற கல்விக்கான கூட்டங்களில் பெண்களின் இடம் என்னவாக இருக்கிறது என்பது நாம் அனைவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மிக்க நன்றி அன்பு




Sunday 15 May 2022

யாருக்காக அழுதான்



குறு நாவல் : யாருக்காக அழுதான் ? (ஒலிப் புத்தகம் )

ஆசிரியர் : ஜெயகாந்தன்

குரல் : குலசேகர்

நேரம் : 1 மணி  28 நிமிடம்

ஒரு முதலாளியையும் தொழிலாளியையும் பணத்தால் அல்ல குணத்தால் வேறுபடுத்திக் காட்டி நெகிழ வைக்கிறது நாவல் ,ஜோசப் தான் முக்கிய கதா பாத்திரம். ஒரு தங்கும் விடுதியின் பணியாளர்கள் , அவர்களது அன்றாட வாழ்க்கை இவர்களிலிருந்து ஜோசப்பின்  வாழ்க்கை எவ்வாறு மாறுபடுகிறது ? ஜோசப்  எல்லோரிடமும் எத்தகைய அன்பு மிக்கவனாக இருக்கிறான் , அடுத்தவர்களுக்காகத் தன்னை எப்படி எல்லாம் வருத்திக் கொள்கிறான் என்பதை ஒவ்வொரு வரியிலும் உணர வைக்கிறது இக்குறுநாவல் .

வளர்ந்து வரும் கார்ப்பரேட் வணிகச் சூழலில் அந்த கிராமத்து உணவு விடுதி நலிவடைந்த சூழலில் அதன் முதலாளி கடன்களை அடைக்க , கவலையுற்றிருந்த வேளையில்  விடுதியில் தங்க வந்த வாடிக்கையாளர் மது போதையில் இருக்கும் போது அவரிடம் இருக்கும் பணத்தைக் களவாடி வைத்துக் கொள்கிறார். 

 அடுத்த நாள், அந்தப் பழி ஜோசப்பின் மீது சுமத்தப்பட்டு அடி வாங்கும் சூழலில் கூட நான் எடுக்க வில்லை என்று மட்டும் கூறும் ஜோசப் கதாபாத்திரம் , யார் எடுத்தார்கள் எனத் தெரிந்திருந்தும் இறுதி வரைக்கும்  காட்டிக் கொடுக்காமலேயே அமைதி காக்கும் போக்கு , மூன்று குரங்குகளின் பொம்மையை வைத்துக் கொண்டு அதற்குரிய விளக்கத்தைக் கேட்கும் அப்பாவித் தனத்தின் பின்னே தியாகம் சொறிந்த ஒரு மனிதனின் வாழ்க்கை இருப்பதை ஜோசப் வழியே ஜெயகாந்தன் படைத்திருப்பது  நெகிழ்ச்சி .

மனதில் நிற்கும் கதையும் கதாபாத்திரங்களும் .  
சிறப்பான குறுநாவல்

மணல் வீடுகள்



புத்தகம் :மணல் வீடுகள் 
ஆசிரியர் : இந்துமதி
குரல்.. ஜெயகீதா
நேரம் : 4 மணி 48 நிமிடம் 

எழுத்தாளர் இந்துமதி அவர்கள் எழுதிய நாவல். சசி , புவனா , கிருபா இவர்கள் மூன்று பேரையும் மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இக்கதை பெண்களில் இருக்கும் பல வித குண நலன்களை பல பாத்திரங்கள் வழியாகக் காட்டுகிறது. குடும்பம்  வறுமையால் அல்லாடும் சூழல்.  வேலை கிடைக்காமல் பல மாதங்களாக அல்லாடும் சசி ,எத்தனையோ அலுவலகங்களை ஏறி இறங்கி ஓய்ந்து போன வேளையில் செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை வைத்து ஓரிடத்தில் வேலைக்கு  விண்ணப்பிக்க , அழைக்கிறார்கள் சசியை . அவள்அங்கு சென்ற பொழுது எந்த  வேலைக்காக விண்ணப்பித்திருந்தாளோ, அதுவே அவளது வாழ்க்கையாக மாறிப் போகின்றது. புவனா கிருபா தம்பதியினருக்கு குழந்தைகள் பெற்றுக் கொடுக்கும் ஒரு கருவியாக சசி மாறுகிறாள். பணம் ஒரு காரணம் இல்லை என்றாலும் கிருபாவின்   மீது ஏற்பட்ட காதல் உணர்வால் அதை ஏற்றுக் கொண்டாலும் பணமும் ஒரு அடிப்படைக் காரணியாக விளங்குகிறது டெஸ்ட் டியூப் பேபி பற்றி இப்பொழுது பேசுகின்றோம் ஆனால் நேரடியாக ஒரு குடும்பத்துடன் இணைந்து குழந்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு செயலை பதிவுசெய்கிறார் இந்துமதி ஏதோ திரைப்படத்தில் கூட இதே போன்ற ஒரு கதை பார்த்ததாக எனக்கு நினைவு இப்படியான மனிதர்கள் இருக்கின்றார்களா இந்த சமூகத்தில் இருந்தார்களா என்பது போல சசியின் குணம் கிருபாவின் குணம் சாந்தமான அன்பான அருமையான ஒரு கணவன் புவனாவிடம் அவன் படும் வேதனையைக் கண்டு அதைப் போக்குவதற்காக தன்னையே ஒப்புக் கொடுக்கக்கூடிய ஒரு பெண்ணாக சசி வருகிறாள் .சசியினுடைய தோழி சாந்தி இப்படி எல்லாம் தோழிகள் இப்பொழுது இருக்கிறார்களா என்பது அதிசயமாகத்தான் இருக்கிறது மிக உயிர்ப்பான பாத்திரங்களைப் படைத்து நாவலை சுவைபட கூறியிருக்கிறார் ஆசிரியர் .இந்த  மணல் வீடுகள் வெயிலுக்கும் மழைக்கும் தாங்காத வீடுகளாக இறுதிக் கதை முடிகின்றது.

சில நேரங்களில் சில மனிதர்கள்



ஒலி வடிவ நூல் :
 சில நேரங்களில் சில மனிதர்கள் 
ஆசிரியர் : ஜெயகாந்தன்
குரல் : சுமதி ராஜா 
நேரம் : 8 மணி 58 நிமிடம்

இந்த நாவலை அல்லது இந்த திரைப்படத்தை வாசிக்காதவர்கள் அல்லது பார்க்காதவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இருப்பார்கள் தமிழகத்தில். 

ஜெயகாந்தன் அவர்கள்  எழுதிய  தேர்ந்த கதைகள் பலவற்றுள் மிக முக்கியமான நாவல் இது. பெண்களின் மீதான கற்பு , ஒழுக்கம் , திருமண உறவு இவற்றின் மீதான சமூகத்தின் பார்வையும் , குடும்ப உறுப்பினர்களின் அணுகுமுறையும்   அதை உடைத்தெறியும் பெண்ணின் மனத் திடமும் எல்லாவற்றுக்கும் கல்வி அடிப்படையாக இருப்பதும் மிக அழகாக கோர்க்கப்பட்ட மாலையாக கவனத்தை ஈர்க்கிறது.

 கங்காவும் பிரபுவும் , மஞ்சு , ஆர்.கே , கங்காவின் அம்மா , மாமா , பத்மா இந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் செதுக்கப் பட்டு மிகச் சிறந்த படைப்பாக இருப்பதால் தான் 50 ஆண்டுகள் கடந்தும்  சில நேரங்களில் சில மனிதர்கள் நம் மனதில் நிற்கிறது.

 பல இடங்களில் வாழ்க்கையின்  தத்துவங்களும்  கதையின் போக்கில் கொடுத்துச் செல்கிறார் ஜெயகாந்தன் . இன்றைய கால கட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கங்காவின் போக்கு போல பெண்கள் சிந்திப்பதில் ஏற்பும் மறுப்பும்  மாறி மாறி ஏற்படுகிறது. ஆனால் 1970 இல் இப்படியான ஒரு நாவல் என்பது நம்மால் நினைத்து பார்க்க பிரமிக்க வைக்கிறது ,காரணம் பெண்களின் மீது கட்டி அமைக்கப்பட்ட விதிகளைக் கேள்விக்குள்ளாக்கி கங்கா வழியாக சமூகத்தின் பிணிகள் சிலவற்றை வெளிப்படையாகப் பேசி இருப்பது அட்டகாசம். 

இன்றைய குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கான பங்கு குறித்தும் மிக அழகாக அங்கங்கே வெளிப்படுகிறது. 

நாவலின் முடிவில் . பிரபுவின் மாற்றம் விரும்பத் தக்கதாக இருக்கிறது. ஆனால் 
கங்காவின் வீழ்ச்சி   நம்மை வேதனைப்படுத்துகிறது 

. ஆண்களின் வன்மத்தை , பாலியல் தொல்லை தரும் போக்கை மீ டூ விவகாரங்களை 1970களில் Uதிவு செய்கிறது நாவல். உளவியல் சார்ந்த ஒரு நாவல் இது. பெண்கள் கண்டிப்பாக வாசித்தால் பல செய்திகளைப் பெற முடியும் கங்காவின் வழியாக . மனக்கண் முன் பாத்திரங்கள் உயிருடன் உலவுவது போல் ஒரு அற்புதப் படைப்பு .

சுஹல்தேவ் புராணம்



ஒலிப்புத்தகம் :சுஹல்தேவ் புராணம்
ஆசிரியர் : அமீஷ் திரிபாதி
தமிழில் : கதிரவன்  (நமது குழு அட்மின் )
குரல் : செங்கமலநாதன் 
நேரம் : 12 மணி நேரம் 6 நிமிடம்

இது ஒரு வரலாற்றுப் புதினம் , உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் புனைவுகளாக எழுதப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மீது படையெடுத்த கஜினி முகம்மது – துருக்கியர்களின் கொடூரங்கள். வட இந்தியாவில் நடத்திய அராஜகங்கள் பற்றி நாம் படித்திருப்போம்  . போர் என்பது வரலாற்றின் போக்குக்கும் நாடுகளின் திசை மாறும்  வரலாறுகளுக்கும்  மிக முக்கியமானதாக இருக்கலாம். வெற்றி தோல்விகளாக மட்டும் பார்க்கப்படுகின்றன படையெடுப்புகள் .  தற்போதைய உக்ரைன் போர் வரை இது தான் நடைமுறை  ஆனால் சாதாரண மக்கள் , பெண்கள் , குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாகி துன்பம் அனுபவித்து மீளாத் துயரில் தோய்ந்து போகின்றனர் என்பது குறித்து வரலாறுகள் குறைவாகப்  பேசுகின்றனவா  முழுமையாகப் பேசுகின்றனவா  அல்லது பேசுவதே இல்லையா என்பதெல்லாம்   அவரவர் சிந்தனைக்கு விட்டு விடலாம்.

பொதுச் சொத்துகள் அழிக்கப்பட்டு சூரையாடப்படுவதை, வெறி கொண்டு தாக்கும் கும்பல்களின் அரக்கத்தனத்தை கண் முன் நிறுத்தும் இந்த படைப்பு , 
சுஹல்தேவ்  என்ற   நாயகன்  ஒருவரை தாய் நாட்டைக் காக்கும் மன்னராக நம் முன் கொண்டு வந்து நிறுத்தி அவரது உணர்வு , உடன் நிற்கும் வீரர்கள் படை வலிமை என  விஸ்தரிக்கிறது சம்பவங்களை. 

எதிரிகளின் சாணக்கியத்தனம் சுஹல் தேவின் சாமர்த்தியம் என ஒன்றை ஒன்று விஞ்சுகிறது. மதம் சார்ந்து பிரிவினைகளை உருவாக்கும் போர்த் தந்திரங்கள் இன்றைய நிகழ்வுகளை நம்மிடையே ஒப்புமைப்படுத்திப் பார்க்கக் கற்றுத் தருகிறது. சோமநாதபுரம் கோவில் உள்ளே சூரையாடும் பகுதிகள் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தின் விவரிப்புகளை நினைவு படுத்துகிறது. 

சுஹல்தேவ் –இதை மொழிபெயர்ப்பு நூல் போல உணர முடியவில்லை. 
மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கப்
பட்டுள்ளது..வாழ்த்துகள் தம்பி  கதிர்  அவர்களுக்கு.

செங்கமலநாதனின் குரல் கூடுதல் கம்பீரம் இந்தப் படைப்பிற்கு.

Wednesday 13 April 2022

என் பெயர் ரங்கநாயகி"


ஒலி வடிவில், நான் கேட்ட முதல் நூல் இது. ஆசிரியர் இந்திரா செளந்தர்ராஜன் . பரவலாக மக்களிடையே மிகவும் அறியப்பட்ட எழுத்தாளர். 

 "என் பெயர் ரங்கநாயகி" எனும்  இந்த நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது.

 என்  பெயர் ரங்கநாயகி என்கின்ற இந்த நூலை , சாதாரண ஒரு நாவல்  என்று தான் படிக்க ஆரம்பித்தேன் அதாவது கேட்க ஆரம்பித்தேன் .ஆனால் கதை நகர நகர  முக்கியமான புத்தகமாக ,  இதில் வரக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரமும் , குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக படைக்கப்பட்டதாகவும்  ஆழமாக அவர்கள்  பங்காற்றியதாகவும் தோன்றியது.

 பெண்கள் காலம் காலமாக எந்தெந்த வழிகளிலெல்லாம் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் என்றும் சமூகத்தில், திருமணம் என்பதற்கான அடையாளம் என்ன , பெண்கள் எவ்வாறெல்லாம்  திருமணம் என்ற பெயரில் 
ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் மையமாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. 

  பெண்களின் பிரச்சனைகள் குறித்து,  அவள் தோன்றிய பொழுதிலிருந்து இன்று வரை ஏராளமான வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட்டும்  ஆவணப்படுத்தப் படாமலும்  இருக்கின்றன . ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் , தன்னைச் சுற்றி வாழக்கூடிய அக்கா, தங்கை ,, அத்தை, சித்தி, பாட்டி ,  தோழி. என்று ஒவ்வொரு வகையான உறவுப் பெண்களுக்குள்ளும் இதே போன்ற பாதிப்புகளைத் தொடர்ந்து கண்டு வருவது தான் சமூகத்தின்  கள எதார்த்தம். 

  இந்த சமூகம் பெண்களின் மீது வைத்திருக்கக்கூடிய கற்பிதங்களை ஒருபக்கம்  சுட்டிக்காட்டி அவற்றை எப்படி எல்லாம் உடைப்பது என்பதையும் இந்த நூல் கதாபாத்திரங்களின் வழியே தொடர்ந்து
பேசுகிறது. 

 அக்ரஹாரத்துப் பெண்களை மையமாக வைத்து,  அவர்கள் இப்படித்தான்   இருப்பார்கள் என்றும்  பெண் என்பவள் பொதுவாகவே காதல் வசப்படுகிறவள் , அவளது கணவன் பிரச்சனைக்குரியவன் என்றால் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பொதுவாக மக்களிடையே நிலவக்கூடிய பல்வேறு நடைமுறைகளை கற்பனைகளை மக்களின் மனப் போக்குகளை அங்கங்கே உடைத்து இல்லை பெண்கள் என்றால் இப்படியும் இருக்கலாம் ஆனால் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எழுதப்படவில்லை 

 திருமணத்திற்கு இது அர்த்தமல்ல சமூகத்தில் நிலவுகின்ற ஒவ்வொன்றுக்கும்  பயப்பட்டு அர்த்தப்படுத்திக் கொண்டு அதன் போக்கில் நாம் போக வேண்டியது அவசியம் இல்லை என்றெல்லாம் கதையின் மைய நாயகியான ரங்கநாயகியின் வழியாக பெண்களுக்கு நிறைய சொல்கிறது இந்த நாவல் .

அம்முனி அம்மா வயதான பெண்மணி என்றாலும் ஐயர் வீட்டு பெண்மணி என்றாலும் அவரது வெண் உடையையும் மொட்டை அடித்துள்ள உருவத்தையும் வைத்து பிற்போக்குத்தனமாக இருப்பார் என நினைக்கும் வாசகர்களின் மனச் சித்திரத்தை அவரது உரையாடல்களால் உடைக்கிறது இந்த கதை .

அம்முனி அம்மாளின் முற்போக்கு சிந்தனை பெண்கள் குறித்து அவருக்கு இருக்கக்கூடிய எதிர்பார்ப்பு, குறித்து கவனிக்கும் போது ,சாதாரணமாக  , வயதான பெண்மணியிடம் இருக்கக்கூடிய மனப்போக்கு அல்லாமல் எவ்வாறெல்லாம் மாற்றி யோசிக்கிறார் என்று ரங்கநாயகி மீது அம்முனியம்மாள் வைத்திருக்கக்கூடிய அக்கறையின் வழியாக இந்த நாவல் பல செய்திகளை நமக்கு சொல்கிறது

 அக்ரஹாரம் முதல் பம்பாய் வரை கதாபாத்திரங்களின் வழியாக கதைக் களத்தை   வளர்த்துவிட்டு  எதிர்பார்க்காத திருப்பங்களைத் தருகிறார் கதாசிரியர் .

 ஸ்ரீகாந்தின் கதாபாத்திரமும் நமக்கு பரந்து பட்ட செய்தியைக் கொடுத்து , சமூகத்தில் ஒரு குழந்தை வளரும் போது , சூழலும்  மனிதர்களும் அக்குழந்தையின் மனப்பான்மைகளில் எவ்வாறு உளவியல் ரீதியாக மாற்றங்கள் அடையக் காரணமாக அமைந்து விடுகின்றனர் என்பதை  நாவல் ஸ்ரீகாந்த்தின் நடத்தைகளின் வழியே 
சுட்டிக் காட்டுகிறது. 

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் வரப் போராடிய நமது முத்துலட்சுமி அம்மையாரை நினைவுபடுத்துகிறார்   ரங்கநாயகி .ஆம் பம்பாயில்  ஆயிரக்கணக்கான பெண்களை வைத்து ,பாலியல் தொழில் நடத்தும் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தின் தாயான பாண்டாவை , தனது முயற்சியால் எப்படி மாற்றுகிறார்  என்பதும் , அதன் விளைவாக அத்தொழிலை விட்டு விடுதலை அடையும் பெண்களும்    அவர்களுக்கு பொருளாதார விடுதலையை சமூகத்தில் ஏற்படுத்திக் கொடுக்கும் ரங்கநாயகி கதாபாத்திரம் நம்மை நெகிழ வைக்கிறது. 

இன்றும்  கூட நாம் செய்திகளில் பார்க்கக்கூடிய பெண் குழந்தைகளின் மீதான பாலியல் அத்துமீறல் பலதாரமணம் ஏமாற்றுவேலை இணையங்களில் பெண்களுக்கான அச்சுறுத்தல்களை தருதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் சில பத்தாண்டுகளுக்கு முன்பும் வேறு வடிவில் இங்கு இருந்துள்ளது, இன்று இருக்கக்கூடிய பிரச்சனைகளை  இந்த நாவலில் இருக்கக்கூடிய நிகழ்வுகளோடு நம்மால் மிகச்சரியாக  பொருத்திப் பார்க்க  முடிகிறது என்றால் காலம் மாறினாலும் நூற்றாண்டுகள் மாறினாலும் பெண்களுக்கான பிரச்சினைகள் குறையாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன  என்பதற்கு இந்த படைப்பு  ஒரு உதாரணம்.

அதே சமயம் அப்பிரச்சனைகளால் முடங்கிப் போகக் கூடாது என்பதைக் கூறுவதற்கும் இந்நாவலை மிகச் சிறந்த உதாரணமாகப் பார்க்கலாம். 

கதையின்  போக்கிலேயே பெண்களுக்கான பிரச்சனைகளை மிக அழகாக வடிவமைத்து இருக்கிறார் நூல் ஆசிரியர் குடும்பத்தில் இருக்கக்கூடிய வாழ்வாதார பிரச்சனை முதல் அவர்களுக்கான மானப் பிரச்சனை காமம் குறித்த பிரச்சனை திருமணம் குறித்த பிரச்சனை ஏன் அவர்கள் இந்த சமூகத்தில் வேசி என்று தங்களை மாற்றிக் கொள்கின்றனர் என்பதற்கான காரணங்கள்   திருநங்கைகளுக்கான ஒரு பகுதி அவர்களின் முக்கியத்துவம் உளவியல் சார்ந்து எவ்வாறு மனிதர்களை அணுகுவது பிரச்சனைக்குரிய ஆண்களை மனைவி என்ற இடத்தில் இருக்கக்கூடிய பெண் எவ்வாறு அணுக வேண்டும் என்றெல்லாம் ஏராளமான விஷயங்களை இந்த புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது .

 எல்லாவற்றையும் தாண்டி பெண்கள் வாழ்வதற்காக தான் பிறந்திருக்கிறோம் என்ற கருத்தை சில பெண்கள் இறந்து விட்டதன் கதை கூறியும்  ரங்கநாயகியின் வழியாகவும் அறிந்து கொள்ள , இந்தக் கதை துணை செய்கிறது ஒரு ஆணால் ஏமாற்றப் பட்டாலோ அல்லது தவறு நிகழ்ந்தாலும் , தான் தான் அதற்கு காரணம் என்றும் தான் இந்த சமூகத்தில் வாழத் தகுதியற்ற ஒரு நபர் என்றும் பெண்கள் முடிவு செய்து தற்கொலை செய்துகொள்வது இன்றும் நடக்கிறது அவற்றையெல்லாம் செய்யக்கூடாது தவறு என்ற அறிவுரை சொல்லாமல் நிகழ்வுகளின் வழியாக கதைகளின் வழியாக கதாபாத்திரங்களின் வழியாக பெண்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது இந்த நூல்.

தமிழ் எழுத்துலகில் என் பெயர் ரங்கநாயகி என்ற இந்த படைப்பை மிக முக்கியமானதாகப் பார்க்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

குரல் வடிவில் தந்தவர் ஒவ்வொரு கதாபாத்தித்திற்கும் குரலை மாற்றி நம்மை கதையோடு ஒன்றிவிட வைப்பது ஆச்சர்யம். 
வித்யாசமான அனுபவமும் கூட

அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின நல்வாழ்த்துகள் 









Saturday 9 April 2022

பூப்பு -மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும்


 பூப்பு -மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும் 

பதிப்பகம் : வாலறிவன்
விலை = ரூ 50
பக்கங்கள் : 48
ஆசிரியர் : ரேணுகாதேவி 

இதை ஒரு  விழிப்புணர்வு நூலாகப் பார்க்க முடிகிறது . இந்த உலகம் சரிபாதி பெண்களால் ஆனது எல்லா பெண்களுமே எப்போதும் பலவழிகளில் ஒடுக்கப்படுகிறார்கள்.
தொடர்ந்து எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு பல கோணங்களிலிருந்து பிரச்சனைகள்    உருவாகிக்கொண்டே
இருப்பதனை நாம் காலம் காலமாக வரலாற்றைப் படித்தாலும்  அறிந்துகொள்ளலாம் . நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை கவனித்தாலும் புரிந்து கொள்ளலாம். 

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு விடுபட்டு
மீண்டும் பாதிக்கப்பட்டு   விடுபட்டு
வளர்ந்து கொண்டே இருக்கின்றனர் பெண்கள் . .அப்படிப்பட்ட பெண்களுக்கு உடல் ரீதியாக இயற்கையாகவே அமையப் பெற்றது தான் இந்த மாதவிடாய் என்ற செயல். ஆனால் அது பெரும்பாலான பெண்களுக்கு வலியாகவும் வேதனையாகவும் சொல்ல முடியாத பிரச்சினைகளைத் தருவதாகவும்  தொடர்கிறது .அது போலான நேரங்களில் பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உடல் நலத்துடனும் தங்களை கவனித்து பாதுகாத்துக்   கொள்ள வேண்டும் என்று விரிவாகப் பேசுகிறது இந்த நூல் .

பதின்பருவ குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பெண்கள் வாசித்து தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் உள்ளன. ஆண்களும் வாசித்து தங்கள் வீட்டுக்  குழந்தைகள் , சகோதரிகள் , இணையர் , தோழிகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் வழிகாட்டலாம். 

 பொதுவாகவே மாதவிடாய் சமயங்களில் பெண் குழந்தைகளை அவரவர்  வீடுகளிலேயே பல காரணங்களைச் சொல்லி அவர்களை ஒதுங்கி இருக்க வைத்தல் , தனிமைப்படுத்துதல்  போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன .அம்மாக்களுக்கும் குழந்தைகளிடம் இது போன்ற சமயங்களில் எவ்வாறு அவர்களை வழிகாட்டுவது என்று தெரிவதில்லை .அக்காக்கள் பக்கத்து வீடு என்று வயதில் பெரியவர்கள் அவர்களை விடக்  குறைந்த வயதில் இருப்பவர்களை வழிகாட்ட தேவைப்படும் அத்தனை செய்திகளும் இதில் அடங்கியுள்ளன.

 இந்த மாதவிடாய் என்பதை , நாம் ஒரு பெரிய விஷயமாகவே பார்க்காமல் அது குறித்து பேசவும் விவாதிக்கவும் உரையாடவும் தயங்குகிறோம். மிக முக்கியமான ஒன்று , ஆனால் அலட்சியப்படுத்துகிறோம் 
இப்படியான சூழலில் மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயல்பாகவே இயற்கையாக மாதம்தோறும் நடைபெறக் கூடிய செயல் தான் , ஏன் ஏற்படுகிறது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன, அதிலிருந்து நாம் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நம் உடலையும் மனதையும் காத்துக் கொள்ளலாம், உடல் நலமும் மனநலமும் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது எப்படி அதற்கான உபகரணங்களை பயன்படுத்துவது இதற்கான விழிப்புணர்வை எங்கிருந்து எடுத்துச் செல்வது போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய நூல் தான் ரேணுகா தேவி அவர்கள் எழுதிய பூப்பூ என்ற இந்த மிகச் சிறிய புத்தகம்.

 ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாக 16800 நாப்கின்களை பயன்படுத்த வேண்டியுள்ளது இதனால்தான் இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன என்ற பொருளாதாரம் சார்ந்த விவரம் குறிப்பையும் தருகிறார் பருவ குழந்தைகள் குறிப்பாக பள்ளி குழந்தைகளிடம் சென்று சேர வேண்டிய அருமையான புத்தகம் .

யாரும் பேசத் தயங்கும் யாரும்  பேசாத விஷயங்களைப் பேசுகிறது ஒரு கோணத்தில் அறிவியல் கையேடு போல இருந்தாலும் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருப்பதனால் இதனை ஒரு விழிப்புணர்வு புத்தகமாக எடுத்துக்கொள்ளலாம் பள்ளி ஆசிரியர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் பயிலக்கூடிய பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளின் அம்மாக்கள்  என அனைவரும் புத்தகத்தை வாங்கி  வாசித்து புரிதலை ஏற்படுத்த வழிவகை செய்யலாம் தொடர்ந்து இது போன்ற குழந்தைகளுக்கான  அவசியமான புத்தகங்களை எழுத   ரேணுகா தேவி ஆசிரியருக்கு  வாழ்த்துக்கள் மா.

(நேற்று எனது மாணவிகள் 50 பேருக்கு முதல் முயற்சியாக பூப்பு புத்தகத்தை வாங்கி பரிசளித்துள்ளேன். )

உமா 

Friday 4 February 2022

டுஜக் டுஜக்


டுஜக்..
டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி

ஆசிரியர் : தேனி சுந்தர்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ 100
பக்கங்கள் : 112

அதென்ன தலைப்பு இப்படி இருக்கே என்று தான் யோசித்தேன் , பக்கம் 76 இல் தான் இந்த டுஜக். டுஜக் .... இருந்தது. 

ஒரு தந்தை தனது குழந்தைகளின் உரையாடல்களை , அவர்களது மொழியிலேயே பதிவு செய்த ஒரு அழகான இலக்கியம் இது. பெரியவர்கள் வாசிக்க வேண்டிய மிகச் சிறந்த குழந்தை இலக்கியமும் இது. ஏன் பெரியவர்கள் வாசிக்க வேண்டும் எனக் கூறுகிறேன் என்றால் , குழந்தைகள் குழந்தமையுடையுடன்  தங்களை உயிர்ப்பாக வைத்துக் கொண்டு  தான் வாழ்கின்றனர். ஆனால் வளர்ந்த பெரியவர்களோ தங்களிடம் இருக்கும் குழந்தமையை இழந்து அல்லது மறந்து உலக இயல்புகளுடன்  தங்கள் வாழ்க்கையைப் பொருத்திப் பார்ப்பவர்களாகி மாறி விடுகின்றனர். இறுகிப் போன வளர்ந்தவர்களின் மனதை, எண்ணங்களை ஆசுவாசப் படுத்தி மகிழ்விக்கிறது பாப்பாவின் உரையாடல்கள் . வாசிக்கும் போது நம்மை அறியாமல் குழந்தைகளாகவே மாறி விட முடிகிறது. வாய் விட்டு சிரித்து அனுபவித்து ரசித்து இந்த வரிகளில் மழலைகளின் மொழிக்குள் ஒரு உயிர்ப்பைக் கண்டடைய முடிகிறது. 

நமக்கு நன்றாகவே புரிகிறது அடுத்தடுத்த வரிகள் இப்படித்தான் வரும் என ஆனாலும் ரசித்து வாசிக்க முடிந்தது. நான் வீட்டில் இதை வாசித்து ஒவ்வொரு பதிவின் முடிவின் போது என்னையறியாமல் சிரிக்க , எனது இணையர் , என்ன தனியாக சிரிக்கறே ..அப்படி என்னத்த படிச்ச எனக் கேட்க , திரும்ப ஒவ்வொன்றையும் வாய் விட்டு பாப்பா போலவே நான் வாசித்துக் காட்ட அங்கேயும் இதே ரசா வாதம் நிகழ்ந்து முகமலர்ச்சியுடன் சிரிப்பதைக் கண்டு இறுதியில் இருவரும் சேர்ந்து சேர்ந்து சிரித்து மகிழ்ந்து கிடந்தோம் .

இதெல்லாம் 
என்னன்ன கலர்னு
பாப்பாவுக்கு
 சொல்லவே தெரியாது ..

ம்ம்..
எனக்குத் தெரியும்.

எங்க சொல்லுங்க
பாக்கலாம் .

மஞ்சள் ..
யெல்லோ ..
ஒல்லோ ..
குல்லோ ..
புல்லோ ...
தல்லோ ..

அய் ..
சூப்பரு பாப்பா .. 

இனத வாசிக்கும் போது நம்மால் ரசிக்காமல் சிரிக்காமல் இருக்க முடியுமா சொல்லுங்கள் ...

 இந்தக் கொரானா உரையாடல் பாப்பாவையும் விட்டு வைக்க வில்லை. 
அந்த தோட்டத்துக்குள்ள தான்
கொரானா ஒளிஞ்சிருக்கும் .
நம்ம வெளாடுறப்ப
அப்படியே வந்து
பைக்குன்னு 
கடிச்சு வச்சுப்புடும் ...

இதை நாம் வெறுமனே வாசித்தால் அர்த்தப்படுமா ?  அர்த்தங்களைத் தேடினால் டுஜக்.. டுஜக் சந்தோஷத்தைத் தராது. அர்த்தமற்ற பொக்கிஷம் இது. 

போப்பா லூசுப் பா ...
நானு இன்னும்
பெரிய பிள்ளயே ஆகல ...
நானு பாப்பா ....

என்கிற போது வாய்விட்டு சிரிக்காமல் இருக்க முடியுமா ?

என்னய பாருப்பா ...
எப்புடி சிந்தாம
சாப்பிடுறேன் ..

என்னய பாருப்பா ...
எப்புடி 
குளிக்குறேன்னு பாருப்பா ..

ம் ..

எப்புடி
தவ்வுறேன்னு பாருப்பா
எப்புடி
ஊஞ்சல் ஆடுறேன்னு பாருப்பா
போப்பா ...
பாக்கவே மாட்ற ....

பாக்குறேன்ல  பாப்பா
பாத்துக்கிட்டே இருக்கணும் ....

சூரியனப் புடிச்சு
என்னா பாப்பா
செய்யப் போற ...

ம்ம் ...
தொட்டியில
படுக்கப் போட்டு
தூங்க வைக்கப் போறேன் ...
ஹா ஹா ஹா .....

என்னப்பா
ரெண்டு அடுப்புல 
ரெண்டு பால்சட்டி

போப்பா ...
அந்தப் பக்கத்தான்
பழைய பாலு ...
இது புதுப் பாலு ...
நீ தப்புத் தப்பா சொல்லுற ...

ரெண்டு மலப்பாம்பு
வந்துச்சுப்பா ....

செடிக்கெல்லாம் எப்புடி
மாஸ்க் போடுவாங்கப்பா ? 

குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிறைந்தது என்பதை நாம் எல்லோருமே அறிவோம் .ஆனால் உணர்கிறோமா என்பது தான் இந்தப் புத்தகம் நமக்கு தரும் செய்தி . 

உங்கள் வீட்டிலும் எனது வீட்டிலும் நாம் இந்த மழலைகளின் உரையாடல்களைக் கடந்து தான் வந்திருப்போம். அந்தத் தருணங்களை மீட்டெடுக்கிறார் சுந்தர். அதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும். ஒவ்வொரு சொல்லும்  ஒவ்வொரு பவுனு தான் போங்க. 

அசை போட்டு அசை போட்டு சந்தோஷப்பட   டுஜக் டுஜக் ... இல் ஏராளமான குட்டிக் குட்டிக் கதைகள் இருக்கின்றன .

நீங்களும் வாசித்துப் பாருங்கள் டுஜக்  
டுஜக் .... குழந்தைகள் குறித்த ஒரு மழலை இலக்கியம் என்பது புரியும். 

இந்தப் புத்தகத்தின் கடைசி பக்கம் தான் மிகவும் கனமானது. ஆமாம் ...

நம்ம பாப்பா
ஸ்கூல்ல விட்ட பிறகும்
இதே மாரி ...
இம்புட்டு பேச்சு பேசுமாங்க ...?
அப்ப தான் தெரியும்
நம்ம பாப்பாவோட
ரியாலிட்டி ...

இல்ல இல்ல ..

அப்ப தெரியுறது
பள்ளிக்கூடங்களோட
ரியாலிட்டி ..

வரும் புத்தகத் திருவிழாவில் நிறைய பெரியவர்களைச் சென்றடைய வாழ்த்துகள்....

அன்புடன்
உமா