Thursday, 18 March 2021

காட்டாறு

காட்டாறு 

இது ஒரு சிறுகதைத் தொகுப்பு , நூலாசிரியர் ஜே.ஷாஜஹான் .


வெளியீடு : வம்சி புக்ஸ்

விலை : ரூ 80


அட்டைப்படமே நம்மை ஊன்றி கவனிக்க வைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பு 2005 லும் இரண்டாம் பதிப்பு 2016 ஆம் ஆண்டும்  வெளிவந்துள்ளது. 


செம்மலர் , சுபமங்களா , புதிய பார்வை , புதுவிசை , ஆனந்த விகடன் முதலான பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்து காட்டாறு உருவாகியுள்ளது.


செதுக்கிய சொற்களாக ஆழமான முன்னுரை தந்துள்ளார்  ச.தமிழ்ச்செல்வன் .. அந்த நான்கு பக்கங்களைப் படிக்கும் போதே இந்தப் புத்தகத்தின் அடர்த்தி புரிந்து விடுகிறது. 


நீர் நிறைந்த குளத்தில்

மேற்பகுதியிலுள்ள நீர் தூய்மையாக  சுவையுடனும் இருந்தாலும் ,  இரு கைகளாலும் தண்ணீரைத் தள்ளி விட்டு , கீழுள்ள நீரை மொண்டு மொண்டு குடிப்பது .போல , முன்னுரையை நகர்த்திய பிறகு நம்மைத் தாகத்தோடு அருந்த வைக்கும் நீர் நிலையாக இருக்கின்றது காட்டாறு .


மிகவும் உருக்கமான கதைகள் , உண்மை நிகழ்வுகள் போலவே பக்கத்திற்குப் பக்கம் நகர்கிறது . 

வாசிக்கும் போது நமது நெருக்கமான உணர்வுகளுடன் ஒன்று கலந்து மனதைப் பிசையும் கதாபாத்திரங்கள் , கதைகள் என மொத்தப் புத்தகமும் தொகுக்கப்பட்டுள்ளது. 


மொத்தம் 11 சிறுகதைகள் , 103 பக்கங்கள் , கடைசி சிறுகதையின் பெயரான காட்டாறு என்பது  தான் புத்தகத்திற்குத் தலைப்பாக  வழங்கப்பட்டுள்ளது.


பாரதிராஜா படங்களில் வரும் அடித்தட்டு மக்களின்  வாழ்க்கையும் , பெண் பாத்திரங்களின் உணர்வுகளையும் பல கதைகளில் காண முடிகிறது. சாதி குறித்த கருவும் ஆங்காங்கே இழையோடுகிறது.  ஒவ்வொரு கதையை வாசித்து முடித்த பிறகும் நம்மை அறியாமல் பெருமூச்சு விடுகிறோம். மிகவும் சாதாரணமாக எந்த அழுத்தமும் அலங்காரமுமில்லாமல் கதை எழுதப்பட்டுள்ளது. ஆனால் மொத்தமாக சமூகத்தின் அழுத்தங்கள் தான் ஆழமாகப் பேசப்படுகிறது. எழுத்து நடை நம்மை அப்படியே கட்டிப் போடுகிறது. பக்கத்து வீடு , பக்கத்து தெரு , பார்க்கும் மனிதர்கள் குறித்த கதைகள் தான் . மனசும் கண்களும் ஒரு சேரக் கலங்கும் கதைகளாகவே அனைத்தும் உள்ளன. 


இப்படியான மனிதர்களின் வாழ்க்கை இன்னும் இருக்கிறதா என்றால் நிறைய இருக்கின்றன என்றே எனது அனுபவத்தில் கூற முடிகிறது. 


கருவேல மரங்கள் என்ற கதை ஊரின் வறட்சி , மக்களின் வறுமை , மனிதர்களின் சோகம் இவற்றுடன் ஒரு குடும்பத்தில் மனைவி எப்படி இவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு காலம் தள்ளுகிறாள் என்பதைப் பதிவு செய்கிறது. வெளியூருக்கு வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் பிரிவின் வலி வறுமையின் முன்பு கானல் நீராய்ப் போய்விடுகிறது என்ற எதார்த்தத்தைப் பதிவு செய்கிறார் ஷாஜஹான் .

கண்ணில் தெரிகிற வானம் என்ற கதை சாதாரணமாக , பெண்களின் காதல் - கல்யாண வாழ்க்கையின்  கையறு நிலையைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. பெண்களே சிலுவையைத் தாங்கும் யேசுக்களாகக் காட்சி தருகின்றனர். 


ஈன்ற பொழுது என்ற கதையைப் போல ஊருக்கு 4 குடும்பங்களை நாம் அன்றாடம் கடந்திருப்போம் . கணவனின் குடி,அடியால் தனது 2 குழந்தைகளையும் விட்டு விட்டு , வேறொருவருடன் மண வாழ்க்கையைத் தேடிக் கொள்ளும் தாய். அவள்  மீது இருக்கும் நியாயத்தைப் புரிந்து கொள்ளும் பெண்குழந்தை 

என கதையின் தன்மை நம்மைத் தேம்ப வைக்கிறது. 


இதே போல கடந்த காற்று , ஊமைக் காயம் , ஆகாயப்பந்தல் , வெவ்வேறு கோணங்களில் , காகிதத் தீவுகள் , செக்குப் பாதைகள் , மானாவரி , காட்டாறு என வரிசையாகக் கதைகள் நமக்குத் திரும்பத் திரும்ப நம் சமூக எதார்த்தத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.


காகிதத் தீவுகள் கதையின் களம் இறுதியில் நம் கண்களில் நீர் வரவழைக்கும் அளவிற்கு எழுதப்பட்டுள்ளது. வறுமையால் வீட்டுக் குழந்தையை வெளியூருக்கு ஹோட்டல் வேலைக்கு அனுப்புவதும் அந்த சிறுவனுக்கு அங்கு கிடைக்கும் ஏமாற்றமும் கொடுமையானது. பசி என்ற ஒற்றை உணர்வால் மனிதர்கள் படும் துன்பம் அது. 


காட்டாறு என்ற  தலைப்புக்கு ஏற்ப இந்த சமூகத்தில் எப்போதும் மாறாத சாதிப்பற்று தான் கதையின் கரு . குழந்தைகளுக்குள் எதுவுமே தெரியாத போதும் பெரியவர்களால் சாதி என்னும்  விஷ விதைகள் ஊன்றப்படுவதையே

இக்கதை விவரிக்கிறது. 


இப்படி ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சமூகத்தின் லட்சக்கணக்கானக்  கதைகளில் 11 கதைகளை நமக்குத் தந்திருக்கும் எழுத்தாளர் ஷாஜஹானின் காட்டாறு அனைவரும் வாசிக்கத் தகுந்த புத்தகம் . 

No comments:

Post a Comment