Thursday 18 March 2021

காப்புரிமை கொத்தவால்

மொழிபெயர்ப்பு : பிரளயன்

நாடகச் செயல்பாடுகளில் சிறந்த நடைமுறைகளுக்கான கையேடு என்ற இந்த நூலை இந்தியா தியேட்டர் ஃபாரம் வெளியிட்டுள்ளது. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல்.


இப்புத்தகத்தைத் திறந்த உடன் வழக்கமாகப் பொறிக்கப்படும் © காப்புரிமை இலச்சினைக்குப் பதிலாக திருப்பிப் போடப்பட்ட இலச்சினைக் குறியீடு இருக்கின்றது. இதற்கு  உரிமைகள் காக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு பதிலாக உரிமைகள் விட்டுத் தரப்படுகின்றது என்பதையேப் பொருளாகக்  கொள்ளலாம். 


 காப்புரிமையால்  தடுக்கப்பட்டதல்ல , விநியோகிக்க , பிரதியெடுக்க , மொழிபெயர்க்க , நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள்  என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .


அதே போல இந் நூல் இலவசமாக அளிக்கப்பட்டது. மற்றவருக்கும் இலவசமாக அளிக்கக் கூறப்பட்டுள்ளது. விலையிட்டு விற்பனை செய்ய முடியாது. அப்படிச் செய்பவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க இயலும் என்றும் இவ்வித நிபந்தனைகளோடே தனது உரிமைகளை விட்டுத் தந்திருக்கிறது என்பதையும் பிரளயன் தனது மொழிபெயர்ப்பு குறிப்புப்  பகுதியில்  வெளிப்படுத்தியுள்ளார். 


காப்புரிமை தொடர்பாக நாடகக்காரர்கள்  சந்திக்க நேரும் சிக்கல்களை விளக்கிடும் காப்பிரைட் கோட் வால் எனும் ஆங்கிலப் பிரசுரத்தின் தமிழ் மொழி பெயர்ப்புதான் இந்நூல். 


இந்தியாவின் புகழ் மிக்க நாடகங்களில் ஒன்றான விஜய் டெண்டுல்கரின் , 'காசிராம் கோத்வால் ' எனும் மராத்திய நாடகத்திலிருந்து பெறப்பட்டது தான் இத்தலைப்பு என்று மொழி பெயர்ப்பாளர் குறிப்பில் தரப்பட்டுள்ளது. இந்தியில் புழக்கத்திலுள்ள கோத்வால் எனும் இச்சொல் பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்டது என்று விக்கிபீடியா சொல்கிறது.

இந்த நூலின் மொழிபெயர்ப்பு குறித்து மிகவும் சவாலாக அமைந்தது என்கிறார் பிரளயன் .ஏனெனில் இதன் மூல நூலில் மூன்று விதமான மொழிநடைகள் பின்பற்றப்பட்டுள்ளன . சட்ட விவரங்களை விளக்குவதற்கு நடுநிலையான தேர்ந்த மொழியும் மற்றும் இரண்டு விதமான கொச்சையான பேச்சு மொழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன .


இந்த நூல் முழுக்க முழுக்க காப்புரிமை தொடர்பான விழிப்புணர்வைத்  தருவதற்காக எழுதப்பட்டுள்ளது .இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் உங்கள் எழுத்தோ , உங்கள் நாடகமோ , நாடக நிகழ்வோ , குறும்படமோ, உங்களையறியாமல் இணையத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு இன்னொருவரது காப்புரிமை வளையத்திற்குள் சிக்கிக் கொண்டு விடலாம் .எனவே இவை குறித்த விழிப்பும் கவனமும் நமக்கு வேண்டியிருக்கிறது .அவ்வகையில் இந்த நூல் படைப்பாளர்களுக்கு உதவும். 


ஏழு அத்யாயங்களாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது  .

உதாரணமாக ,

எதற்கெல்லாம் காப்புரிமை பெற முடியும் ? ஒரு படைப்பின் ஆசிரியர் என்பதாலே அவர் காப்புரிமை பெற்றவராகி விட முடியுமா ? தலைப்பைக் காப்பிரைட் பண்ண முடியுமா ? என பல்வேறு தலைப்புகளுக்கு சட்ட விதிகளின் படி கோட்டுப் படங்களுடன் எல்லா அத்யாயங்களும் எழுதப்பட்டுள்ளது.


அத்யாயம் - தலைப்பு -ஒவ்வொன்றிலும் சூழல் , வினாக்களுக்கு சட்ட விளக்கம் , உரையாடல் , இப்போ நாடகத்திற்கு வருவோம் , சிறந்த நடைமுறை எது ? அல்லது சட்டென்று சொல்லுங்கள் பிரச்சினைகளைத் தவிர்ப்பது எப்படி ?

இவற்றின் வரிசையில் எழுதப்பட்டுள்ளன .


ஏழு அத்யாயம் முடிந்த பிறகு காப்புரிமைச் சட்டத் திருத்த மசோதா - 2012 குறித்த ஆய்வில் நிறைய செய்திகள் பகிரப்பட்டுள்ளன . கலைப்படைப்புகள் , திரைப்படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகள் தொடர்பானது.சட்ட ரீதியான உரிமங்கள் , கட்டாய உரிமம் ,வரையறைகள் , நாடகாசிரியர்கள் , மொழிபெயர்ப்பாளர்கள்  , தழுவி எழுதுவோர் ஆகியோ ளுக்கான வழிகாட்டுதல்கள் போன்றவை இணைப்பு பகுதிகளாக செய்திகளாக விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அதோடு காப்புரிமை = சொல்லகராதி இறுதியில் 20 பக்கங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளன. 

|காப்புரிமை கொத்தவால் மிக முக்கியமான ஒரு கையேடு புத்தகம் . சிறு படைப்பாளிகள்  முதல் மிகப் பெரிய படைப்பாளர்கள் எழுத்து - சினிமா - கிளைத் துறைகள் என அனைவருக்கும்  உதவும் ஒரு அற்புதமான நூல். 




No comments:

Post a Comment