Thursday 18 March 2021

சிட்டுகளின் மெட்டுகள்


சிறுவர் இலக்கியம் - பாடல் நூல். 

பதிப்பகம் : ஆரோ பதிப்பகம் 

விலை : ரூ 200 

முதல் பதிப்பு 2019 .


எழுதியவர் : இ.குழந்தைசாமி -


ஆசிரியர் குறிப்பு : நூலாசிரியர் குழந்தைசாமி தஞ்சாவூரின் அரசு உதவி பெறும் பள்ளியான தூய அந்தோணியர் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கல்விப் பணி , சமூகப் பணி , தொல்லியல் ஆய்வு , நாணய சேகரிப்புப் பணி என பல்திறன்களில் வல்லவரான இவர் , எழுத்தாளராகவும் திகழ்கிறார். கவிதை , சிறு கதைகளுக்கான நூல்களை ஏற்கனவே எழுதியுள்ளார். தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கான சிட்டுகளின் மெட்டுகள் என்ற பாடல் புத்தகத்தை எழுதியுள்ளார். 


குழந்தை இலக்கியங்கள் கடந்த 30 ஆண்டுகளாகப் பெரிய அளவில் உருவாகவில்லை என்பது தான் யதார்த்தம். குழந்தைகளுக்கான நூல்கள் குறித்து  சமீப ஆண்டுகளாக  தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறார்க் கதைப் புத்தகங்கள்,சிறாருக்கான  மாத இதழ்கள் என தொடர் படைப்புகள் குழந்தைகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் குழந்தைகள் பாடல்களுக்காக அழ .வள்ளியப்பாவைத் தான் எப்போதும் நினைவு கொள்கிறோம். அந்த வரிசையில் ஒரு புதிய நம்பிக்கையாக இந்து  நூலைப் படைத்துள்ள இ. குழந்தைசாமி  நம்மை மகிழ வைக்கிறார் .


நூலைப் பற்றி ….


சிறுவர் பாடல்கள் இயற்றுதல் என்பது பஞ்சு மிட்டாய் சாப்பிடுவது போல அவ்வளவு எளிதானதல்ல , அது சவ்வு மிட்டாய் சாப்பிடுவது போல சற்று கடினமானது என்று உணர்கிறேன் என்கிறார் நூலாசிரியர் .


புத்தகத்தில் 130 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இன்று பள்ளியில் கூட பாடநூல்களில் , குழந்தைகளுக்கு மனப்பாடப் பாடல்களாக செய்யுள் பாட்டுகள் , திருக்குறள் இவை போன்ற பகுதிகள் மட்டுமே தரப்படுகின்றன . பொதுவான கருத்துகள் உள்ள குழந்தைப் பாடல்களுக்கு வறட்சிதான் என்றால் அது மிகையாகாது. ஆனால் இங்கு குழந்தைகளுக்கான உலகமாக எல்லாப் பாடல்களும் அவர்கள் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன என்பது தான் சிறப்பு. 


பறவைகள் , விலங்குகள் , மரங்கள் , குளங்கள் , வானவில் , மழைக் காலப் பாதுகாப்பு , சாலைப் பாதுகாப்பு , விவசாயம் , கடல் , நிலவு , கோள்கள் , காந்திஜி , நேரு , அன்னை , அப்பா என மிக அழகாகத் தலைப்புகளை சேகரித்துள்ளது சிறப்பு .


மொழி வளமும் , அறிவியல் , வரலாறு என எல்லாத் துறைகளுக்கும்  இணைப்புப் பாலமாக புத்தகத்தை வடிவமைத்துள்ளது பாராட்டுதலுக்குரியது. 


உணவை வீணாக்கலாமா ? என்ற தலைப்பில் குழந்தைகளை உண்ணும் உணவு குறித்து சிந்திக்க வைக்கிறார்.


 பாடல்களின் கருத்துகள் குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் எதுகை , மோனை இலக்கண நயங்கள் அமைந்து சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. 


உதாரணம் :


தொடர்வண்டி - 43 வது பாடல் 


அட்டை போல ஊர்ந்து போகும் 

அழகான தொடர்வண்டி

அனகோண்டா பாம்பு போல

அசைந்து போகும் தொடர்வண்டி 


ஊரு விட்டு ஊரு போகும் 

ஊதா நிற தொடர்வண்டி

ஊதல் ஒலி எழுப்பிப் போகும் 

உற்சாகமாய் விரைந்து போகும் 


சிக்கு புக்கு என்று போகும்

சிவப்பு நிற தொடர்வண்டி

சீக்கிரமா வந்து ஏறு

சீமைக்குத்தான் போய் வரலாம் .


பாடல்களுக்குள்ளேயே கதைகள் அமைவது போலவும் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. 


உதாரணம் : 113


காகம் ஒன்று தாகம் கொண்டு

தண்ணீர் தேடி வந்ததாம் 

தேகம் வருந்த தேடி அலைந்து 

திரும்பி கூடு சென்றதாம் …


சோகம் கொண்டு கூட்டில் அன்று 

சோர்வாய் அது நின்றதாம் 

மேகம் ஒன்று அங்கு வந்து மென்மையாகக் கேட்டதாம் 


காகம் சொன்ன கதையைக் கேட்டு 

கண்ணீர் விட்டு அழுததாம் 

மேகம் தந்த நீரில் காகம் 

தாகம் தீர்த்து கொண்டதாம் ….


இப்படியான பாடல்களால் நிரம்பியுள்ள இப்புத்தகம் உடனடியாக நம் குழந்தைகளின் கைகளை சென்றடைந்தால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவர். அது மட்டுமல்ல , அவர்களது சிந்திக்கும் ஆற்றல் கூடும்  ,

சொற்களஞ்சியம் பெருகும்  என்பதில் ஐயமில்லை. இந்தப் பாடல்களைப் படித்துப் பொருளுணரும் போது நடத்தை மாற்றங்களும் நிகழும் என்பது கண்கூடு. இயற்கையை , பூமியை , சமூகத்தை நேசிக்க ஆரம்பிப்பர். 


ஆகவே பெற்றோர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் , ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கும்  உடனடியாக இப்புத்தகத்தை வாங்கித் தர வேண்டுமென குழந்தைகள் தினமான இன்று உங்களுடன் வேண்டுகோள் வைக்கிறேன். 


உமா 


No comments:

Post a Comment