Wednesday 17 March 2021

அடிமையின் காதல்

அடிமையின் காதல் 


நூலாசிரியர் : ரா.கி.ரங்கராஜன்


சென்னை கார்ப்பரேஷனின் மூன்றாவது நூற்றாண்டையொட்டி ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஒரு கட்டுரையில் சென்னை நகரில் அடிமை வியாபாரம் நடந்ததாக படித்த ஆசிரியர், அதை  அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது தான் இந்த அடிமையின் காதல் என்பதாக முன்னுரையில் பகிர்கிறார்.



வரலாற்றைப் பின்னணியாக வைத்துப் பல கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதியவர் தி.நா சுப்பிரமணியம். ஒரு முறை அவரிடம் சரித்திரக் கதைகள் எழுத வேண்டும் என ரா.கி. ரங்கராஜன் கேட்ட போது , வெள்ளைக்காரன்  சென்னையில் குடியேறிய காலம் ரொம்ப சுவாரஸ்யமானது. அதற்கான தகவல்களும் வண்டி வண்டியாகக் கன்னிமாரா நூலகத்தில் கிடைக்கும் , அதை வைத்து எழுது என்றாராம் .அதன் விளைவாகவே வரலாற்று நாவலான அடிமையின் காதல் பிறந்துள்ளது. 


கமலஹாசன் அவர்கள் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார். மோகினி என்ற புனைபெயரில் ரா.கி.ரங்கராஜன் எழுதி வந்துள்ளது இவரது வாழ்த்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தனது மகாநதி திரைப்படத்தை அற்புதமாக செதுக்க இந்த நூலாசிரியர் தான் காரணம் எனப் பதிவு செய்துள்ளார். அதே போல இந்த அடிமையின் காதல் தனக்குள்  எவ்வாறு அழுத்தமான பதிவை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் பகிர்ந்துள்ளார். 


கதைக்கு வருவோம் . கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை உற்சாகத்துடன் நாவலுடன் பயணிக்க வைக்கும் பாத்திரம் காஞ்சிபுரத்தான். வீட்டை விட்டுக் கோபித்துக் கொண்டு புறப்பட்டு அடிமை வியாபாரங்கள் நடக்கும் இடத்தில் தாமரைக் காப்பாற்றுவதில் ஆரம்பித்து தமிழகத்தில் வெள்ளையர் ஆட்சிக்குள் புகுந்து பயணித்து கோட்டை வாசலில் காஞ்சிபுரத்தினை சேர்க்கிறார் ஆசிரியர்.


சென்னைக்குள் இப்படி எல்லாம் நடந்துள்ளதா என்பது போல நம்மை ஆச்சரியமும் சிந்திக்கவும் வைக்கும் வரலாற்றுத் தகவல்கள். முழுக்க முழுக்க உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதி, துணைக்கு சில சுவாரஸ்யமான பகுதிகளை இணைத்து நாவலை நமக்குக் கொடுத்துள்ளார் ஆசிரியர் . 


வீரமும் விவேகமும் வேகமும் ஒருங்கே பெற்ற நாயகன் தான் காஞ்சிபுரத் தானாக படைக்கப்பட்டிருக்கும் பாத்திரம். பெரிய பெத்து அடிமை வியாபாரி.  ஒருபுறம் வெள்ளைக்காரர்களையும்  ,கும்பினிக்காரர்களையும் அனுசரித்து இங்குள்ள மக்களைக் காட்டிக் கொடுத்து அடிமைகளை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்து பணம் கொழிக்கும் பாத்திரம். தாமரை சிங்காவரம் கோட்டைக்கு இளவரசியாக வேண்டியவளை குழந்தையாக இருக்கும் போதே ராஜாக்களின் கதைகளில் வருவது போல கொலை செய்யப் போக , வேலையாட்கள் பரிதாபம் பார்த்து விட அடிமை வியாபாரியின் கையில் சிக்கி அடிமையாக வளர்கிறாள். ஏதேச்சையாக அடிமைகள் கொடுமைப்படுத்தும்  கோட்டைக்குள் காஞ்சிபுரத்தான் புகுந்து விட கசையடி வாங்கும் பெண் அடிமையான தாமரையைக் காப்பாற்றுகிறான். அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் , சிங்காவரக் கோட்டையின் இளவரசியாக தாமரை எப்படி மாறுகிறாள் , பெரிய பெத்து தனது மகளை தாமரைக்கு பதிலாக சிம்மாசனத்தில்  அமர வைக்க செய்யும் சதிகள் என நாவல் விறுவிறுப்பாகச் செல்கிறது. சிங்காவரத்தின் ராஜ குடும்பத்தில் இருக்கும்  சதிகார ரகுநாதரின் திட்டங்கள் , பெரிய பெத்து வின் சதிகள் அவற்றை முறியடிக்கும் தளபதியான காஞ்சிபுரத்தான் என முழுமையான வரலாற்று நாவலாக நம்மை ஆக்ரமித்து ஆர்வத்துடன் பக்கங்களைப் புரட்ட வைக்கிறது. 


வெள்ளையர்கள் ஆட்சி சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் எவ்வாறு கோலோச்சுகிறது என்பதையும் , தோளில் வளர்ப்பு  ஓணானுடன் வாக்கிங் செல்லும் பாதிரியார் போல சில நல்ல உள்ளங்கள் அவர்களுக்குள் இருந்தார்கள் என்பதும் வரலாற்றுத் தகவலாக நாவலிலிருந்து பெற முடிகிறது. 


நாவல் வாசிக்க வாசிக்க அந்த கால கட்ட மக்கள் , அரண்மனை , மன்னர் , ஊர் , அகழி , முதலை , போர் , ரகசிய வழிகள் என கண்களுள் அப்படியே காட்சிகளை வரவழைக்கின்றன எழுத்துகள் , 500 பக்கங்களைக் கொண்ட ஒரு சரித்திர நாவல் இது. இதை வாசிப்பவர்கள் தொடர்ந்து சரித்திர நாவல்களைத் தேடி வாசிப்பர் என்பதில் ஐயமில்லை. அடிமையின் காதல் மனதில் நிற்கிறது.



No comments:

Post a Comment