Wednesday 17 March 2021

பள்ளிக்கு இயற்பியல் ஆய்வகம்

Great Day 


எல்லாம் செயல் கூடும் ….

முகநூல் வழியாக என்ன செய்யலாம் ? 

எதை வேண்டுமானாலும் செய்யலாம் ..


வாழ்வின் மிக மறக்க முடியாத  நாட்களில் ஒன்றாக அமைந்தது இந்த நாள். சர்வதேச மகளிர்  தினமான மார்ச் 8-2021 .ஆமாம் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது அன்றைய மொழி  ... கடலெல்லாம் தேடி ஓடாமல் களத்தில் பணியாற்றினால்  தேவைகள் பூர்த்தியாகும் என்பது இன்றைய மொழி 


ஆம் ... கடந்த சில மாதங்களாக எனது பள்ளிக்காக உதவிகள் தேடி வருவது குறித்து அனைவரும் அறிவீர்கள். 


மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு மகளிர் பள்ளியின் மேல் நிலை வகுப்பு அறிவியல் பாடப் பிரிவுக் குழந்தைகளுக்காக இயற்பியல் ஆய்வகப் பொருட்களின்  உதவி சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் இன்று பள்ளியில் நிர்மாணிக்கப்பட்டது. 


கற்கை நன்றே கற்கை நன்றே …

 பிச்சை புகினும் கற்கை நன்றே ….அல்லவா .ஆமாம் எங்கெல்லாம் இரந்து எனது பள்ளிக் குழந்தைகளுக்காக கல்வி உதவி கேட்க முடியுமோ அங்கெல்லாம் கையேந்தி வருகிறேன். 


அதன் ஒரு மிக நல்ல  விளைவு தான் இன்றைய இயற்பியல் ஆய்வகம். சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர்  வாசுகி கல்வி அறக்கட்டளையின் சார்பில் அதன் பொறுப்பாளர்களால் இன்று வழங்கப்பட்டது. 


ஓய்வு பெற்ற ONGC நிறுவன ஊழியரான திரு வாசு ஐயா அவர்களும் , சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான திரு தியாகராஜன் அவர்களும் தன்னார்வ  கல்வி செயல்பாட்டாளரான திருமதி மகேஸ்வரி அவர்களும் இன்று மாலை பள்ளிக்கு வருகை புரிந்து எமது மாணவியருக்கு அறக்கட்டளை சார்பாக இப்பரிசினை கல்விக் கொடையாக வழங்கியது மறக்க இயலாத தருணம். 


இனி வரும் காலங்களில் பல தலைமுறைக் குழந்தைகளின் கல்வி கற்றலுக்கு இவ்வுதவி பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 


திருவள்ளுவர் – வாசுகி கல்வி அறக்கட்டளை குறித்தான பணிகளைப் பற்றியும் , தற்போது குறிப்பிட்ட நமது பள்ளியை வந்து சேர்ந்து உதவிய அனுபவம் குறித்தும் மகிழ்வும் உற்சாகமுமாக நம்முடன் உரையாற்றிய வாசு ஐயாவை வணங்குகிறேன். 

ஏகலைவன் திறமை குறித்தும் அர்ஜுனனின் குறி பார்க்கும் தன்மையைப் பற்றியும் மாணவர்களுடன் உரை நிகழ்த்தினார் வழக்கறிஞர் தியாகராஜன் .அவருக்கும் எனது அன்பு வணக்கம் . கேரியர் கைடன்ஸ் பற்றியும் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் திறன் குறித்தும் நேர்மறையாகப் பேசிய தோழிமகேஸ்வரி அவர்கள் சிறப்பாக இயங்கி வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்தும் பகிர்ந்தது சிறப்பு. அவருக்கு எனது பேரன்பு. 


எமது பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவி , உதவித் தலைமை ஆசிரியர் வரை நன்றி பாராட்டிட விழா மகிழ்வுடன் முடிந்தது. 

No comments:

Post a Comment