Thursday 18 March 2021

என் மாயாஜாலப் பள்ளி

என் மாயாஜாலப் பள்ளி


தன்னறம் நூல் வெளி குக்கூ காட்டுப் பள்ளி வெளியிட்டுள்ள மிகச் சிறிய புத்தகம் இது. ஆனால் மிகப் பெரிய அழியாத தத்துவத்தைக் கற்பிக்கிறது. இது ஒரு மொழி பெயர்ப்பு நூல். தமிழில் ராகுல் நகுலன் மொழி பெயர்த்துள்ளார்.


இப்புத்தகத்தை  எழுதியவர் அபய் பங். இவர் தலை சிறந்த இந்திய மருத்துவர். சமூக ஆர்வலராகவும் இயங்கி வருகிறார் . மஹாராஷ்டிர மாநிலத்தில் கட்சி ரேலி பகுதியைச் சேர்ந்த, பின்தங்கிய பூர்வீக மக்களுடன் இணைந்து பணியாற்றி, அங்கு  பழங்குடி மக்களுக்கான மருத்துவமனையை நிறுவியுள்ளார். இவரது மனைவி ராணி பங் , கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பிறந்தவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் செவிலித் தாய்கள் பணியை தம்பதியர் இருவரும் உருவாக்கியுள்ளனர். இவரது SEARCH மருத்துவ இயக்கம் 60க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. 


இவர் தனது சிறு வயது பள்ளி அனுபவத்தைத் தான் இங்கு நமக்காக  எழுதியுள்ளார். சேவா கிராமத்தில் 1950 இல் பிறந்த இவர் தனது அம்மா முதல்வராகப்  பணியாற்றிய பள்ளியில் சில ஆண்டுகள் கல்வி பயின்றுள்ளார்  .அது  காந்தி அமைத்த நயிதாலிம் பள்ளியாகும். அங்கு தனது குழந்தைப் பருவத்தைப் பற்றிய நினைவுகளை அனுபவங்களைக் குறித்துப் பகிர்ந்துள்ள புத்தகம் தான்  இந்த என் மாயாஜாலப் பள்ளி .


நயிதாலிம் என்ற இந்தி சொல்லுக்கு புதிய கல்வி என்று பொருள் கொள்ளலாம். காந்தி தந்த புதிய கல்வி குறித்த புரிதலுக்கும் இன்றைய புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்த புரிதலுக்கும் உள்ள மிக நீண்ட இடைவெளியை இந்தப் புத்தகம் நமக்குத் தருகிறது .


ஒரு குழந்தையின் மனதை மேம்படுத்த , வாழ்வியல் கல்வியைக் கற்பிக்க இயற்கையோடு இணைந்த கல்வி குறித்த அனுபவங்களைத் தருவதே காந்தியின் கல்வியாக இருந்துள்ளதை இப்புத்தகம் வழியே அறிய முடிகிறது.


கல்வி என்பது நான்கு சுவர்களுக்குள் பயில்வதல்ல என்பதைத் திடமாக நாம் நம்ப ஏராளமான திறப்புகள் இப்புத்தகத்தில் உள்ளன. 


இந்தக் கல்வி முறையை நடைமுறைப் படுத்த நல்ல பாடத்திட்டத்தை அமைக்க காந்திஜிக்கு உதவ , ரபீந்திரநாத் தாகூர் இரு ஆசிரியர்களை சேவாகிரமத்திற்கு அனுப்பியிருந்தாராம். இலங்கையிலிருந்து திரு. அரிய நாயகம்  மற்றும் பெங்காலிலிருந்து திருமதி ஆஷாதேவி ஆகிய இருவரும் தான் தாகூர் காந்திக்கு உதவ அனுப்பியவர்கள். 


விலங்குகளின் அறிமுகம் , துறவிகளின் திருவிழா , தாவரவியல் கற்றவிதம் , வாழ்வில் பயன்படுத்தும் கணக்குப் பாடம் , சமையலின் வழி பயில்தல் , விவசாயப் பரிசோதனைகள் , வாழ்க்கைக்கான கல்வி  , புது வழிமுறைகள் , அந்தப் பள்ளி எங்கே போனது ? ஆகிய தலைப்புகளில்  பேசப்பட்டுள்ள புத்தகம் இது .


ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் அபய் பங்கின் அனுபவம் ஒரு ஆசிரியராக பெற்றோராக கல்வி செயல்பாட்டாளராக என்னை ஏங்க வைக்கிறது என்பது தான் உண்மை. எளிமையான இப்படிப்பட்ட கல்வி தானே இங்கும் அரை நூற்றாண்டு முன்பு வரை இருந்து வந்தது. இன்று ஏன் இப்படி பிரம்மாண்டத்தைப் புகுத்தி கல்வி என்பது வெறும் சான்றிதழ்க மாற்றி விட்டனர். இயற்கையுடன் ஓடியாடி உடலுழைப்புடன் கூடிய வாழ்வியலை அனுவித்து பெற்ற கல்வியை இன்று எட்டாக் கனியாக்கி அதையும் சுவைக்க முடியாததாக மாற்றி வெறுக்க வைத்த சோகம் என்ன ?


எங்கோ தடம் மாறினோம் ?எப்படி முகமூடிக் கல்விக்குள் உண்மை முகத்தைப் புதைத்துக் கொண்டோம் .ஏன் இங்கு நமது கண்களும் மனதும் மெய்யை உணர மறுத்துப் பிடிவாதம் பிடிக்கிறது என யோசிக்க வைக்கிறது. 

ரயில் பெட்டி வகுப்பறைகளைக் கொண்ட

டோடோசான் புத்தகத்தை வாசிக்கும் போதும் , குதிரைக் கொட்டகை வகுப்பறைகளை நடத்திய தூய்ஷேன் இடம்பெற்ற  முதல் ஆசிரியர் புத்தகத்தை வாசிக்கும் போதும் ஏற்பட்ட மனநிலையை விட கூடுதல் நிறைவைத் தருகிறது என்றால் மிகையாகாது. அதற்கான காரணம் நம்முடன் வாழும் சமகால மனிதர் அபய் பங் அவர்கள். ஆம் .. இத்தகு கனவுப் பள்ளியில் பயின்று மருத்துவத் துறையில் உலகளவில் சிறந்த சாதனை ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுகிற இவரின் பள்ளிக் காலம் இன்றைய பெற்றோருக்கு நல்ல வழிகாட்டி .

மாற்றுக் கல்வி சார்ந்த உரையாடல்களும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தருணத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் . 

எழுத்தும் ஒவியமும் நம்மை ஈர்த்து நம் மனதை உழுகிறது. இந்த மாயாஜாலப் பள்ளி அனுபவங்களை நாம் விதைத்தால் எதிர்காலம் உள்ளபடியே காந்திய சிந்தனையை அறுவடை செய்யும் பொற்காலமாக மாறும் என்பது திண்ணம் .


உமா 



.


No comments:

Post a Comment