Monday 26 February 2018

Crea

அனைவருக்கும் வணக்கம் ....

Crea பதிப்பகத்துடன் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் (A3) பயணம் என்ற பதிவு கடந்த செப்டம்பர் 16,  பதிவு செய்திருந்தேன்.

வாய்ப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் சமூக மாற்றத்தின் பொருட்டு – இதுவே எப்போதும் எனது நோக்கம். திறன் மிக்க மாணவர்களுக்குப் பரிசாய் வழங்க இருந்த புத்தகங்களை , பரவலாக்கும் பொருட்டு , திறனும் ஆர்வமும் மிக்க ஆசிரியர் கைகளுக்குச் சென்றால் ஓராயிரம் மாணவர் பயனடைவர் எனக் கூறிய வேண்டுகோளை ஏற்று  பரிசீலித்துப் பெறப்பட்ட அனுமதியின் பேரில் இந்த 55 நாட்களில் 56 பள்ளிகளுக்கு தலா  ரூ 1800 மதிப்புள்ள க்ரியா புத்தகங்கள் மற்றும் அகராதி அனுப்பப்பட்டு விட்டது.

போற்றுதலுக்காக செயல்களைச் செய்யாமல்  , தாம் செய்யும் செயல்களால் போற்றப்படுதல் சான்றோர்க்கழகு. சமீபத்தில் அப்படிப்பட்ட மனிதராக திரு ராமகிருஷ்ணன் ஐயா அவர்களைக் காண்பது எனக்கு மிகப் பெரும் நம்பிக்கையைத் தந்தது.

என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விருப்பமில்லை. ஆனால் எங்கள் நோக்கம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது. அதற்கு உதவுங்கள் என்று தான் என்னிடம் கலந்துரையாடலைத் தொடங்கினார் ,இதோ  அவரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப,

A3 - க்ரியா பப்ளிஷர்ஸ் என்ற வாட்ஸ் அப் குழு உருவாக்கி 4-5 நாட்களில் , தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்திப் பரிமாற்றம் நிகழ்த்தி ,

முதற் கட்டமாக 17 மாவட்டங்களில் 26 ஆசிரியர்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டு மாணவர் பயன்பாட்டிற்காக  , இரண்டாம் கட்டமாக 15 ஆசிரியர்களுக்கும் , மூன்றாம் கட்டமாக 10 ஆசிரியர்களுக்கும் க்ரியா தனது பரிசை தந்துள்ளது. மொத்தம் இதுவரை 62 ஆசிரியர்களுக்கு ....

தொடர்ந்து இந்த நற்செயல் பரவ ஆவலாக உள்ளோம்.

விபரங்கள் பின்வருமாறு
################
1. காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் பரமேசுவரி திருநாவுக்கரசுு, 2.Shanthi  ஆலந்தூர் பள்ளி , 3.  B Yuvarani Yuvarajj பள்ளி ,
4_ மதுரை மாவட்ட ஆசிரியர்  கலகலவகுப்பறை சிவா  5. நாமக்கல்  மாவட்ட ஆசிரியர்  Chandrasekaran Venkatachalam
6. தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் Tamil Arasan, 7. Govindaraji Vadivel8 .Shankar Shrijan 9. திருவாரூர்  மாவட்ட ஆசிரியர் Magdalene Premalatha
10. கோவை மாவட்ட ஆசிரியர் Chandru RJ 11. சிவகங்கை மாவட்ட Senthil Selvan 12. சேலம் மாவட்ட ஆசிரியர்கள் Periyasamy Nagarajan
13. Chandra Sekar சங்ககிரி பள்ளி, 14. விழுப்புரம்  மாவட்ட ஆசிரியர் Prakash Victory 15. கரூர் மாவட்ட ஆசிரியர் சரவணன் வே 16 . தஞ்சாவூர்  மாவட்ட ஆசிரியர்கள் Ezhuthalar Yegambaram 17. Senthil Kumar 18 .கடலூர் மாவட்ட ஆசிரியர் Sathya Seelan 19. திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர் Vanithalakshmi Chinnusamy 20. வேலூர் மாவட்ட ஆசிரியர் Guna R 21. Visali தலைமை ஆசிரியர் திருவண்ணாமலை மாவட்டம் 22. திருப்பூர்  மாவட்ட ஆசிரியர் Vishalakshi Muthuvelu Tirupur 23. திருச்சி மாவட்ட ஆசிரியர் Uma Maheswari 24. ஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் Immanuel Goldthangam , 25. Uma Maheswari Gopal 26. கரிகாலன். 27. காஞ்சிக் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி , ஈரோடு மாவட்டம் Malathy Malatthi Packiaraj ,  28. தரணி பாய் Pums Muppadhuvetti Arcot , 30. Karikalan Sugam தர்மபுரி ஆசிரியர் , 31. அருணாச்சலம் திருவண்ணாமலை மாவட்டப் பள்ளி , 32. Anbazagan Arumugam தர்மபுரி பள்ளி 33. Kalaivani கிருஷ்ணகிரி 34. Ganesh Anbu திருவாரூர் , 35. Selvam Chidambaram திருவாரூர் 36. A Sivakumar காஞ்சிபுரம் ,37.கணேஷ் கபிலன் கடலூர் 38.  Bindu Kalanithi 39. Rathina Pugazhendi விருத்தாச்சலம் 40. இராமு தாதகுட்டி வேலூர் மாவட்டம்  41. Sathiya Kumar திருவண்ணாமலை 42. Bergin G Kadayal சாயல்குடி ராமநாதபுரம் 43. Maragathavalli Palaniappan தலைமை ஆசிரியர் 44. Manimozhi இராமநாதபுரம் மாவட்டம் 45 .Kanimozhi. ஊத்துக்குளி மகளிர் மேல்நிலைப் பள்ளி 46. விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி கலைச்செல்வி 47. Pushpa Jagadeesan நீலகிரி மாவட்டம் 48. Saravanan S கள்ள சமுத்திரம்  49. பாலமுருகன் திருவள்ளூர் மாவட்டம் 50. கனவு பள்ளி பிரதீப் 51. Satheesh Kumar திருச்சி 52. Saravanan ஆம்பூர் , வேலூர் 53. Udhyalakshmi திருவண்ணாமலை மாவட்டம் 55. செந்தாமரைச் செல்வி மதுரை , 56. சித்ரா திண்டுக்கல் மாவட்டம் 57. Tamil Selvi தலைமை ஆசிரியர் குப்பம்பட்டி சேலம் மாவட்டம் 58 .கிருஷ்ணகுமார் தலைமை ஆசிரியர் ,சென்னை 59. Nattuthurai Muthusamy தாராபுரம் மாதிரிப் பள்ளி , 60. Somasundaram திருவாரூர் 61. Thirese Antony திருநெல்வேலி 62. விஜயகுமார்
விழுப்புரம் மாவட்டம்
தொடரும் இச் சமூகப்பணி உங்களோடு

அன்பும் நன்றியும் வாழ்த்தும் மகிழ்வும் ......திரு ராமகிருஷ்ணன் ஐயா மற்றும் துணைபுரியும் செல்வி பிரசன்னா உள்ளிட்ட குழு ஆகியோருக்கு

S. உமாமகேஸ்வரி
ஆசிரியர் மற்றும்
ஒருங்கிணைப்பாளர்
A3 அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு

https://m.facebook.com/story.php?story_fbid=786693104847078&id=100005191869415

Sunday 25 February 2018

கல்வி

கல்வி

கல்வி ஒரு பல பரிமாணம்...
கல்வியின் பல முகங்கள்
கடந்து போக உதவும்
காலத்தை .....

சிலருக்கு சரஸ்வதி
பலருக்கு வட்சுமி
சிலருக்கு வாழ்க்கை
பலருக்கு விடியல்
சிலருக்கு சிந்தனை
பலருக்கு பகுத்தறிவு
சிலருக்கு ஒளிக்கீற்று
பலருக்கு இருள் வானம்
சிலருக்கு சான்றாண்மை
பலருக்கு சான்றிதழ்
சிலருக்கு மழைச்சாரல்
பலருக்கு அமில மழை
சிலருக்கு பரந்த வானம்
பலருக்கு சிலபஸ்
சிலருக்கு அனுபவம்
பலருக்கு பள்ளி
சிலருக்கு ஞானம்
பலருக்கு வேலை
சிலருக்கு உழைப்பு
பலருக்கு சோம்பல் ....

கல்வியின் முகங்கள்
விரிகின்றன உலகில் .....

Wednesday 21 February 2018

வாசிப்பை நேசிப்போம் ....2

கதை சொல்லும் கலை .....

இதை  ஒரு விழிப்புணர்வு தரும் கருத்துச் செறிவு மிக்க நூலாகக் கருதுகிறேன். ச.முருகபூபதி அவர்கள் எழுதிய இந்நூல் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து புக்ஸ் ஃபார் சில்ரன்  வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 2007 இல் வெளிவந்துள்ளது. விலை ரூ 10 மட்டுமே . மொத்த பக்கங்கள் 24 , ஆனால் 200 பக்கங்களில் சொல்லக் கூடிய அளவு கருத்துகள் நம்மை ஆட்கொள்கின்றன.

கதை இன்று நேற்று பிறந்ததல்ல , அது காலத்தின் தொல் படிவம், மனிதர்களை உயிருள்ள ஜூவன்களாக பல நேரங்களில் இந்தக் கதைகள் வாழ வைக்கின்றன, ஆதிகாலத்தில் கல் ஏடுகளில் பதிக்கப்பட்ட உருவங்கள், பூர்வக் காடுகளில் மரித்துப் போன டைனோசர்கள், முதாதையர்கள் என இந்த உலகம் கதைக்களாலேயே வாழ்கிறது என்றால் மிகையாகாது ,

மாற்றுக் கல்வி குறித்து ஒரு பன்முகப் பட்ட பார்வையைத் தருவதாகக் கூட இந் நூலைக் கடக்கலாம்.

கதை சொல்லுதல் என்பது போதனையல்ல , அது ஒரு கலை , குழந்தைகளின் கற்பித்தல் முறையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்ற கருத்தை பெற்றோர்களும் ஆசிரியரும் உணர வேண்டும் என்பதை இந்நூல் மறைமுகமாக அறிவுறுத்துகிறது.

கதைகள் எழுதி வாழும் பித்தனும் , அவனது மூட்டை மூட்டையான கதைகளும் , பனையோலைக் கதைகளும் , பித்தனின் கதைகள் உலக மொழிகளில் எல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற அவனது அவாவும் ,ராஜாவின் சந்திப்பும் , கதைகள் எரிக்கப்படுவதும் அவ்வாறு எரிக்கப்படும் போது உருவாகும் கதையின்  வாசனை வனமெங்கும் பரவுவதும் , எரிந்த கதைகள் போக எஞ்சிய கதைகளே இன்று நமக்குப் படிக்கக் கிடைத்து இருக்கின்றன என்பதும் மிகப் பெரிய உயிர்ப்பை நம்முள் உலவ விட்டு வாழ வைக்கின்றன.

பள்ளி மாணவர்கள் எவ்வாறு கதை உலகத்தில் தங்களை லயித்துக் கொள்ள விரும்புகின்றனர் என்பதை அவர்களேக் கூறும் கதைகளைக் கொண்டு புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் வாழ்வில் கதைகள்  தங்கள் கதவுகளைத் திறந்து , விதைப்பு , அறுவடைக் காலங்களில் பயணம் செய்யும் காட்சிகளையும் நம் கண் முன்னே கொண்டு வருகிறது. சமூகத்தின்  ஒவ்வொரு அங்கமும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து சடங்குகளிலும் கதைகளே ஒளிந்து கொண்டு மனிதர்களை இயக்க வைப்பதாக நம்மை உணர வைக்கிறது.

குழந்தைகள் தங்களின் உலகை , கதை வழியே சுமந்த பாடல்களால் அறிந்து கொள்கின்றனர் என்பதும் , கதை வெளிதான் தங்களுக்கான வாழ்விடம் என்பதையும் நம்பிக் கொண்டுள்ளதை அவர்களின் ஆசை பொம்மைகளையும் , விளையாட்டு சாமான்களையும் கொண்டு உணரலாம் என்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது. கதையில்லாதவற்றைத் தங்களிடம் வைத்திருக்க விரும்புவதேயில்லை என்பதும் எல்லாக் கதைகளையும் அடுத்தடுத்த நபர்களுக்கு பயணிக்கச் செய்கின்றனர் என்பதும் அழகான வரிகள்.

கதைகளின் கற்பனையை பூதாகரமாக்கி சிறு அணுவாக விவரிக்கிறது இந்நூல்.கதைகள் நம்மோடு வாழ்பவை ,நிஜக்கதை , கற்பனைக் கதை , திகில் கதை என அடுக்கிக் கொண்டே போகலாம். என்பதை மிக அழகாக வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை இயம்புகிறது இந்நூல் .

இப்புத்தகம் குழந்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் கதைக்குமான தொடர்பை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது , கதைகளின் தாயகமே இந்தியா தான் இங்கிருந்த கதை சொல்லல் கலையை பாரசீகர்கள் கற்று அராபியர்களிடையே பரப்பி பூமி முழுக்க முளைத்ததாகக் கூட ஒரு கதை உண்டு.
கதைகள் சிலந்தி போல உதடுகளால் பின்னப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன, அவை ஓயாது முடிவுறா நூற்கப்படும் கம்பளமாக விரிந்து கொண்டே செல்கின்றன என்பன போன்ற வரிகள் மனதை விட்டு அகல மறுக்கின்றன .

பண்பாடு ,புராணம் , மரபு என ஒவ்வொன்றிலும் பல நூறு கதைகள் மறைந்து வாழ்ந்து வருகின்றன என்பதையும் இந்நூல் நினைவூட்டுகிறது.
பல நேரம் மறை எண்ணங்களைத் தரும் இந்நூல், கதைகள் சொல்லும் பழக்கங்கள் தொலைக்காட்சிப் பெட்டியால்  அழிந்து சுயமாகக் கதைகளை சிந்தனை செய்யும் படைப்பாக்கம் காணாமல் போய் விட்ட  எதிர்மறை விளைவுகளையும் கடுமையாக விமர்சிக்கின்றது.

இப்பழக்கத்தை குழந்தைகளிடம் எவ்வாறு மீட்டெடுக்கலாம் எனவும் செயல்பாடுகளைப் பட்டியலிடுகிறது இந்நூல் ,
ஆகச் சிறந்த பொருண்மையுள்ள நல்ல நூல் ...

Day: 2

வாசிப்பை நேசிப்போம் .... 4


நாள் : 2

லாலி பாலே - கதைக் கம்பளம்

லாலி பாலே ஒரு சிறுவர்களுக்கான கதைப் புத்தகமாக இருந்தாலும் பெரியவரும் விரும்பி படிக்கலாம் , நூலாசிரியர் பெரும்பாலோருக்குப் பிடித்த எஸ்.ராமகிருஷ்ணன் , இந்தப் புத்தகத்தின் எண்ணம் அவரின் மகன்ஆர்.ஆகாஷின் உரிமை. நாலாவது படிக்கும் அச்சிறுவன து எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் தந்ததாகக் குறிப்பிடுகிறார். விலை ரூ 25 ,பக்கங்கள் 48 மட்டுமே

நூலாசிரியரின் கதைக் கம்பளம்  7 சிறுவர் புத்தகங்களை உள்ளடக்கியது. அதில் லாலி பாலே அம்  ஒன்று , 2007-இல் முதல் பதிப்பில் வந்த இப்புத்தகம் புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியிட்ட ஒரு அழகான நூல். இதன் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடும் கருத்துகள் மிக மிக அழகாக இருக்கின்றது. உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன ? எனக் கேட்கிறார்.உலகில் வாழும்  மொத்த மனிதர்களை விடவும் , கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கைக் கூடுதலாக இருக்கும் , கொலம்பலை விட ,யுவான் சுவாங்கை விட அதிகமாக உலகம் சுற்றிய பயணி கதையே

கதை எப்போதும் சுவாரஸ்யமானது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது சிறு வயதில் பள்ளிகளில் சிலேட்டுகளில் பென்சிலால் கதைக்கான உருவங்களை வரைந்து நண்பர்களிடம்  கதை சொன்னது தான் என் மனமெங்கும் ஓடியது. , ஏழுமலை தாண்டி , ஏழு கடல் தாண்டி ஒரு ராணி . கிளி வீடு , அதற்குள் ஒரு குகை ... இப்படி ஒவ்வொரு மனிதருக்கும் பால்ய கால கதைக்கான கதைகள் உண்டு ...

இந்தப் புத்தகம் அந்த நினைவுகளை மீட்டு வருகிறது. இதில் மொத்தம் 6 கதைகள் , அவை
1. லாலி பாலே
2. கியா மியா
3 படித்த எறும்பு
4. காதில்லாத அரசன்
5 .அதிர்ஷ்டம்
6. எலியரசன் லீலீ என்பன .

முதல் கதையைப் பற்றிக் கூற வேண்டுமெனில் ஒரு மண்புழு பாலே நடனம் கற்றுக் கொண்டு மாஸ்கோ செல்கிறது , அங்கும் விடாமுயற்சி, செய்து வெற்றி பெற்று அது வசிக்கும் தும்பா மலைக்குப் பெருமை சேர்க்கிறது , இதை ஒரு சிறிய கதையாக வாசிக்க , கண்களை நகர்த்த முடியவில்லை , இதன் காட்சிகள் நம் கண் முன்னே விரிகின்றன. இந்தக் கதை நிறைய பொருள்களைப் படைத்து இன்னும் ஆழமாகக் காட்டுகிறது. ,

பாலே நடனம் , அதன் பிறப்பிடம் என்ன , செடியில் காற்றுக்கு அசையும் இலை - உடல், இலை உதிர்வது போல நடனம் , பிரான்ஸ் நாட்டில் பாலே நடனம் எவ்வாறு பரவத் தொடங்கியது ? எந்த நூற்றாண்டில் இது வந்தது ? அது எவ்வாறெல்லாம் விதவிதமாக ஆடப்படுகிறது என அழகாக ஒரு செய்தியை இக்கதை போகின்ற போக்கில் தந்து செல்கிறது.
கதாபாத்திரங்களாக வரும் வரிக்குதிரை அண்ணா , நூலகர் எவ்வாறு அந்த ஊர் குழந்தையான லாலியை ஊக்கப்படுத்தி , வழிகாட்டி பாலே கற்றுக் கொள்ள வைத்து அயல் நாட்டுப் போட்டியில் பங்கு பெற வைக்கத் துணை நின்றது என படிக்கும் போது நம்மை சிந்திக்க வைக்கிறது.

கியா மியா

நகரமயமாக்கலில், நீர் நிலைகள்   எவ்வாறு அழிக்கப்படுகின்றன என்ற அரசியலை மறைமுகமாக தொட்டுச் செல்கிறது கியா மியா .அதோடு மட்டுமில்லாமல் பல்லுயிர்ப் பெருக்கத்தின் அழிவும் , இயற்கை சிதைக்கப்படுதலையும் எடுத்துக் காட்டுகிறது. தவளைகளே இல்லாத நகரமாக அரசால் பாராட்டப்பட்டு பரிசு வழங்கும் பரிதாப நிலை , இது இன்றைய அரசின் போக்கை சித்தரிக்கிறது.உலகில் தண்ணீரைப் பூட்டி வைக்கிறவர்கள் மனிதர்கள் தான் என்ற வரிகள் நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

படித்த எறும்பு :

புத்தத் துறவியின் வீண் பிடிவாதமும் எறும்பின் விடா முயற்சியும் எவ்வாறெல்லாம் கதையை அறிமுகப்படுத்துகிறது  என்பதே படித்த எறும்பு , ஒரு எறும்பையாவது விருப்பப் படிவளர்த்து துறவியாக்க விரும்பும் புத்தத்துறவி எவ்வாறு தோல்வியுறுகிறார் என்பதே இக்கதை. இறுதியில் எறும்புகள் மனிதர்களை விட மேலானவை. , மாற்ற நினைப்பது முட்டாள் தனம் , தன்னியல்பில் சுதந்திரமாக வாழ்வது தான் வாழ்க்கையின் முக்கியத்துவம் என்பது இக்கதையின் மூலம் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது.

இதே போல் காதில்லாத அரசன் அதிர்ஷ்டம் , எலியரசன் லீலீ என ஒவ்வொரு கதையிலும் பாப்போரைக் கற்பனைக் காட்டுக்குள் மேய விடுகிறது நூல் , பள்ளிக் குழந்தைகளும் , வீட்டுக் குழந்தைகளும் படிக்க வேண்டியது லாலி பாலே .. அட்டைப்படமும் அழகாக இருக்கின்றது.... சிறுவர் நூலகத்தில் இருக்க வேண்டிய நூல் ...

அன்புடன்
உமா
.

வாசிப்பை நேசிப்போம் ....... 3

நூல் விமர்சனம் : பள்ளிக் கூடத் தேர்தல்
##########################

நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் ....

தேர்தல் என்றாலே நமக்குள் ஒரு பரபரப்பு வரும் , அதன் இறுதியில் ஒரு சலிப்பும் வரும் ... ஆனால் இந்த நூல் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு பரபரப்பையே நமக்குள் ஏற்படுத்தி சிந்திக்க வைக்கிறது.

நூலாசிரியர் பேரா. நா.மணி அவர்கள் ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்கம் உயிர்ப்புடன் இயங்குவதற்கு மிகப் பெரிய காரணமானவருள் ஒருவர் எனது நண்பரும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

இந்நூல் பாரதி புத்தகாலயத்  2010 இல்  வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களைப் பற்றிய நல்ல புத்தகங்களைத் தேடி....  என்ற கருத்துக்கு பொருந்தும் வகையில் எழுதப்பட்ட இந்நூலின் விலை ரூபாய் 20 மட்டுமே. .. மொத்தப் பக்கங்கள் 48 மட்டுமெனில் பாருங்களேன் ...
இனி நூலின் உள்ளே ....

இன்றைக்கு அரசாங்கம் தருகின்ற நல்லாசிரியர் விருது , எத்தனை நல்லாசிரியர்களைச்  சென்றடைகிறது ?உண்மையில் நல்லாசிரியரைச் சென்றடைகிறதா ? நல்ல ஆசிரியரைத் தேர்வு செய்யும் தார்மீக உரிமை பெற்றவர் யார்? அரசாங்கமா ?மாணவரர ? என்ற கேள்விகளுக்குரிய கருத்துகளை முன் வைக்கிறது இந்த நூல் ....

கல்வியாளரும் இன்றைய பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் செயலருமான திரு ஜே.கே என்ற கிருஷ்ணமூர்த்தி  அவர்கள் இந்நூலுக்கு மிகப் பெரும் அணிந்துரை வழங்கியுள்ளார் என்பது அதனினும் சிறப்பு ....

இந்தப் புத்தகம் 5 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஆசிரியர்களை அக்கு வேர் , ஆணிவேராகப் பிரித்துக்  காட்டியுள்ளார் நூலாசிரியர். கல்லூரி ஆசிரியராக இருக்கும் தன்னையே சுய மதிப்பீடு செய்வதற்காகத் தான் இப்பரீட்சார்த்த முயற்சியை சிந்திக்கிறார். இது எல்லோருக்கும் பொருந்தும் , நம்மில் பலர் மாணவனுக்குப் பிடித்த ஆசிரியராக இருப்பதற்குக் காரணம் , மாணவரின் நம்மைப் பற்றிய மதிப்பீட்டை தொடர்ந்து அறிந்து அதன் வழியே நம்மை மாற்றிக் கொள்வோம்.

ஆசிரியரே முதல் அத்தியாயத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள " எனது குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன் , நீங்களே என்னைப் பற்றி தீர்ப்பெழுத சரியான நடுவர்கள் " என்று ஒரே ஒரு ஆசிரியர் வகுப்பறையில் சொல்லத் துணிந்தால் இந்நூல் பெரு வெற்றி பெற்றதாகக் கொள்வேன் .... ஆயிரம் ஆசிரியர்கள் இன்று இருக்கிறார்கள் ... கவலை வேண்டாம் , நானே அதற்கு ஒரு உதாரணம் .

சரி ,இனி இரண்டாவது அத்தியாயத்தில் ...... அந்த கருத்துக் கணிப்பை பொதுமைப் படுத்தி கல்லூரியில் தன் வகுப்பில் படிக்கும் மாணவரிடம் இதுவரை நீங்கள் படித்த பள்ளியில் உங்களுக்குப் பிடித்த நல்லாசிரியர் யார் என எழுதித் தாருங்கள் என்று குறிப்பிட , வந்ததே பதில்கள் ....ஆச்சர்யமூட்டும் வகைகளில் ...

ஆம் , அடிக்கக் கூடாது என்று சட்ட மிருந்தாலும் எங்கள் ஆசிரியர் அடிப்பார் , அவரைத் தான் என மிகப் பிடிக்கும் என்கிறார் ஒரு மாணவர் ,
புவி வெப்பமடைதலில் இருந்து பூமியைக் காக்கப் புறப்பட்ட ஒரு ஆசிரியரை நல்ல ஆசிரியராகத் தேர்வு செய்த மாணவி , பொதுத் தேர்வின் போது 3.30 மணிக்கு எழுந்து எங்களுக்காக வீட்டிலிருந்தே யே காபி போட்டு எடுத்து வந்து மாணவர்களை எழுப்பி அவர்களுக்குத் , தரும் ஆசிரியர் மாணவர் மனதில் இடம் பிடித்துள்ளாரே , எங்கள் வகுப்புக்கே வராத ஆசிரியர் ஆனால் எனக்கு மிகப் பிடிக்கும் , என் வகுப்பிற்கு வரமாட்டாரா என ஏங்குவோம் என்று எழுதிக் கொடுத்த மாணவர்கள் , அரசாங்கப் பணியே இல்லாமல் பெற்றோர் ஆசிரியக் கழகத்தின் மிகக் குறைந்த  சம்பளத்தைப் பெற்ற போதும் மாணவர் மனதைக் கொள்ளையடித்த ஆசிரியர் .

நண்பராகப் பழகும் ஆசிரியர் , சிறந்த மாணவனுக்கு சொந்த செலவில் பரிசு தந்த ஆசிரியரைப் பிடிக்கும் , சரிசமமாக அனைவரையும் நடத்திய ஆசிரியரே என்னை மிக பாதித்த நல்லாசிரியர் என்கிறான் ஒரு மாணவன் , பாடத்தில் ஒன்ற வைத்து மனதைப் புரிந்து பாடம் நடத்துவார் என்று ஒரு மாணவன் , மாணவரைத் தயார் படுத்தி அவர்களையே பாடம் நடத்த வாய்ப்பு தரும் ஆசிரியரையே எனக்குப் பிடிக்கும் என்கிறார் ஒரு மாணவர் , என் ஆசான் தாய்க்கு நிகராக அன்பு செலுத்தியதால்  அவரையே பிடிக்கும் என்கிறார் ஒரு மாணவர் .

எங்கள் ஆசிரியர் தந்த உத்வேகத்தால் எந்த சோகத்தையும் என்னால்  தாங்கிக்  கொள்ள முடிந்தது என்ற மாணவன் கூட உண்டு. லீவு எடுக்க மாணவரிடம் அனுமதி கேட்ட ஆசிரியர், சமூகம் சார்ந்த போர்க்குணம் மிக்க ஆசிரியர் , நாட்டு நடப்பைப் பேசும் ஆசிரியர் , கட்டிப்புடி வைத்தியம் செய்யும் ஆசிரியர் , பண விஷயத்தில் கட்டணம் வசூலிக்கும் போது  ஒரு ரூபாயைக் கூட தேவையின்றி அவரும் தரமாட்டார் , எங்களிடமும் வாங்க மாட்டார் கறார் ஆசிரியர் என்று வசூல் ராஜா வாத்தியாரை மிகப் பிடிக்கும் என ஒரு மாணவர் குறிப்பிட ....

மூன்றாம் அத்தியாயத்தில் இந்த மாணவரை அவர்கள் விரும்பிய நல்லாசிரியர்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு , அதில் ஏற்படும் சவால்களை சந்தித்து ஒரு வழியாக அந்த ஆசிரியர்களைத் தங்கள் பெருமை உணரச் செய்துள்ளார் நூலாசிரியர் .அதைப் படிக்கும் போது உடல் , மனம் இரண்டும் சிலிர்க்கிறது.

இறுதி அத்தியாயம் வாசிப்பும் வழிகாட்டலும் என்று தலைப்பிட்ட பகுதியில் ஆசிரியர்கள் தங்களை அறிவியல் பூர்வமாக அல்லாமல் நீதி நெறிமுறைகளை மையமாக வைத்தே என்று தனது கருத்தைப் பதிவு செய்கிறார். 

ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்க அலுவலர்களுக்கு கேரளாவில் பயிற்சி முகாம் ஒன்று 2008 இல் நடத்தப்பட்டது. அதில் நானும் கலந்து கொண்டிருந்தேன். அங்கு இயக்க செயல்பாடுகளுக்காக புத்தக விற்பனையின் கழிவே பணமாகக் கிடைக்கிறது என ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பயிற்சி மையப் பதிவாளர் கூறினார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் புத்தக விற்பனையைத் துவங்க முதலில் தலைமை ஆசிரியர் கூட்டத்தில் வெறும் 54 ரூபாய்க்கு விற்ற அனுபவத்தையும் , வாரச் சந்தையில் 3 மணி நேரத்தில் 4600 ரூபாய்க்கு விற்ற அனுபவத்தையும் பதிவு செய்து ,
புத்தகம் வாங்குவதற்கும் வாசிப்பிற்கும் நேரடியாகத் தொடர்புடைய ஆசிரியர்களின் புத்தகம் வாங்கும் ஆர்வம் எவ்வாறு என்பதை  மேற்குறிப்பிடப்பட்ட கருத்தினை நமக்கு வெளிப்படுத்தும் . நல்லாசிரியர்கள் என்று மாணவர்களால் குறிப்பிடப்பட்டவர்கள் நல்ல புத்தகங்கள் வாசிக்க வழிகாட்டினரா என்ற நமது ஐயத்தை சரி செய்கிறது இந்த அத்தியாயம் .

அதோடு , ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்கம் மாற்றுக் கல்வியை மனதில் கொண்டு முன்னெடுத்த முதல் மூன்று வாசிப்பு முகாம்களைப் பற்றிய அனுபவமும் பகிரப்பட்டு .நம்மை இன்னும் வலுப்படுத்துகிறது. இரண்டாவது வாசிப்பு முகாம் பற்றிய அழகிய நினைவும் அற்புதமான அனுபவ அறிவும் எனக்குண்டு , நானும் அதில் முதலாசிரியர் , பகல் கனவு வாசித்தேன்...

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை JK அவர்களால் எடுத்துரைத்த விதமும் , வீரப்பன் தேடப்பட்டு கண்காணிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான கெத்தேசால் பற்றியும் , அங்கு வாழும் மக்கள் , பழங்குடிப் பள்ளி என அனைத்தும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் இந்த நான்காவது அத்தியாயத்தில் ....

இறுதியாக ஐந்தாவது அத்தியாயத்தில் ஆசிரியரின்  அறிவுரைகளும் ஆழமும் என  ஒரு அலசல் செய்யப்பட்டு  , அதில் மாணவர்களை விழிப்புணர்வு அடையச் செய்யும் கருத்துக்களையும் சமூகம் சார்ந்த கருத்துக்களையும் விதைத்த ஆசிரியர்களின் எண்ணிக்கைக் குறைவு எனப் பதிவு செய்கிறார் ...
இந்த நூல் முழுவதும் வரிக்கு வரி , வார்த்தைக்கு வார்த்தை  மாணவர்கள் எப்படிப் பட்ட ஆசிரியராக எதிர்பார்க்கிறார்கள், ஆசிரியர்கள் எவ்வாறு தங்களை உருமாற்றம் செய்து மாணவருடன் வாழ வேண்டும் என நமக்கு அறிவுறுத்துகிறது.

இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு  ஆசிரியரும் தன் மாணவர்களால் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றப்படும் ஒரு நல்ல ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று துடிப்பார்கள் எனவும்  இந்தக் கல்விச் சூழலில்  மாற்றத்தைக்  கொண்டு வர விரும்பும் அனைத்து வகைக் கல்வியாளர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது எனவும் தோழர் இரா .நடராசன்  குறிப்பிடுகிறார்.

8 வருடங்களுக்கு முன் நான் இப்புத்தகத்தை வாசித்திருந்தேன். அப்போது இப்புத்தகம் என்னை  எனக்கு 60 சதவீதம் நல்லாசிரியர் என அடையாளம் காட்டியது ,இந்த 4 தினங்களுக்கு முன்பு மறுவாசிப்புக்கு உட்படுத்தியதால் இதை எழுத முனைந்தேன். என்னுள்ளே அது 90 சதமாக உயர்ந்துள்ளது. நானும் எனது மாணவர் மனதை கொள்ளை கொள்ள 100% எட்டும் பயணத்தில் உங்களோடு ....

மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது என்பார்களே ... அதைப் போல மிகச் சிறிய நூலாக இருந்தாலும்  நூற்றாண்டு கால சமூக மாற்றத்தைத் தரும் ஒரு நல்ல நூல்

அன்புடன்
உமா