Wednesday 17 March 2021

ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் வெளியீடு

ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் 

வெளியீடு : அகநாழிகை பதிப்பகம் 

விலை : ரூ 70


ஆசிரியர் :உமா மோகன் - புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளர் . டார்வின் படிக்காத குருவி என்ற கவிதைத் தொகுப்பும் வெயில் புராணம் என்ற பயண அனுபவத் தொகுப்பும் இவரது நூல்கள் வெளியாகியுள்ளன. குரல் , புள்ளிக் கோலம் ஆகிய வலைப்பூக்கள்  வழியும்  பகிர்வது  உண்டு.உமா மோகன் அவர்கள் எனக்கு முகநூல் நண்பராக அறிமுகமானவரும் கூட .


 புத்தகம் முழுக்க எதார்த்த வலிகளும் வாழ்க்கையும் காட்சிப் படுத்தப்பட்டு கவிதைகளாகத் தந்துள்ளார் ஆசிரியர் . குறியீடுகளாக நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது. பெண்கவிஞர்களின் தனிச் சிறப்பே அவர்கள் கிளுகிளுப்புக் கவிதைகளையோ அற்பமான ஜோக்குகளையோ கவிதைப் படுத்தவில்லை என்பது தான். எல்லாமே மனம் திறப்புத் தான் ,ஆணறியாஆழங்கள் , இருட்டுகள் , சிக்கல்கள் ... என்று கவிஞர் புவியரசு வாழ்த்துரையில் கூறிய வரிகள் மிகவும் கச்சிதமாக இப்புத்தகத்திற்குப் பொருந்தியுள்ளன.


பயணம் என்ற தலைப்பில் ...


ஜன்னல் இருக்கை

எப்போதும் விருப்பம்தான்

கதவடைத்து திரை போட்டு

இருளில் நழுவும்

குளிரூட்டிய பேருந்தோ 

தொடர் வண்டியோ 

……..

போயே தீர வேண்டிய 

பயணத்தில் 

விருப்பம் என்ன ….


என்ற வரிகளுக்குள் இருக்கும் யதார்த்தம் , இறுதி வரியில் தொக்கி நிற்கும் விரக்தி ….அந்த உணர்வைத் தருவது தான் கவிதையின் வலிமையோ?


நெஞ்சு இரண்டாக..


ஆடை குலைக்கும் கைகள் 

அப்படியே துண்டாக

நெறிகெட்ட நினைப்பு வந்த

நெஞ்சு இரண்டாக

தொட்டதும் தலை வெடிக்க

தொடருமுன்

தொடை கிழிக்க

அவளுக்குப் பலம் தரவோ

அடுக்காக வரம் தரவோ 

ஆரு சாமி இருக்கிங்க


குழந்தைப் பருவத்திலேயே

குறுவாள் கொடுத்திட வா

தவழும் போதே

தற்காப்புக் கலை சொல்ல வா 


பேன் சிரங்கு பெருமையோட

பழஞ்சட்டை வாசத்தோட

காயும் வயித் தோட

கண்ட வழியோடும் 

வறுமைக்குப் பொறந்த மக்கா 

இத்தனையும் தாண்டி 

இத்துப் போன உன் உடம்பு

என்ன தருமுன்னு வந்தான்

வந்த வழி மறந்த நாயி…..


இந்த ஒரு கவிதை போதும் , இன்றைய சமூகத்தில்  பெண் குழந்தைகளின் / பெண்களின் நிலையை உணர ….


இப்படியாக 


அதிகாரத்தின் குரல் ,

 கிணற்றடியில் கிடந்த தவலை

கணணா மூச்சி 

உரையாடலின் பின்னே

அம்மாவின் வேலை நேரம் 

தவிப்பின் குரல் 

துளிகளாலான வாழ்க்கை 

லதாம்மாவின் மரணம்

எனக்குத் தெரிந்தவன்

பிட்சாந்தேஹி , 

கமல்ஹாசனின் ரசிகைகள் 

பங்கு 

எனக்குத் தெரிந்தவன் 

கனம் 

பூ

அன்புடை நெஞ்சம் 


 என  நிறைய கவிதைகள் மிகவும் ஈர்க்கின்றன. 



No comments:

Post a Comment