Thursday 2 January 2020

வாசிப்பு - களவு போகும் கல்வி

களவு போகும் கல்வி.

இயல்வாகை வெளியீடாக குக்கூ குழந்தைகள் நூலகம் வெளியிட்டுள்ள 30 பக்க சிறு புத்தகம் நம்மை சிதற அடிக்கிறது. அட்டைப் படத்திலேயே இரும்பு வேலி , கல்வி மறுக்கப்படுவதை பூடகமாக உணர்த்துகிறது.

கடந்த ஜூன் மாதம் முதல் நாம் பேசிப் பேசி ஓய்ந்து வரும் தேசியக் கல்விக் கொள்கையாகட்டும் , இரண்டு வருடமாகப் பேசி வரும் கல்வி குறித்த பிரச்சனைகளாகட்டும் எல்லாவற்றுக்கும் காரணமான காட்ஸ் ஒப்பந்தம் கையெழுத்துக்குத் தயாராகும் நேரத்தில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. வரிக்கு வரி நாம் இன்று பேசும் கல்வி விற்பனைப் பண்டமாகி விட்ட கதையை , 4 வருடங்கள் முன்பு கூவிக் கூவி குரல் எழுப்பி இருக்கிறது இப்புத்தகம் .  

நீட் தேர்வாகட்டும் , இன்று வந்துள்ள NTA குறித்து என அனைத்தையும் தீர்க்க தரிசனமாக எச்சரித்துள்ள புத்தகம் . 

இனி உங்கள் குழந்தைகள் கிராக்கி என அழைக்கப்படுவார்கள் என்கிறது இந்நூல் நடந்துள்ளதே. WTO & GATS குறித்து 160 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கல்வி வணிகர்கள் 2015 டிசம்பர் 15 - 18 தேதிகளில் , கென்யா நாட்டின் நைரோபியில் நடக்க இருக்கும் அமைச்சர் நிலை சந்திப்பு கூட்டத்தில் இந்தியா கையெழுத்துப் போடப் போகிறதே என அழுது அரற்றி எழுதப்பட்ட புத்தகம் . இதோ இன்றோடு சரியாக 4 வருடங்கள் முடிந்தது. ஆனால் கையெழுத்து போட்டு உள்ளூர் திருடர்களுடன் வெளி நாட்டுத் திருடர்களையும் அழைத்துக் கொண்டிருக்கின்றனர் அரசியல்வாதிகள். 

சந்தையின் அடிமைகளாகிப் போனோம் ஆசிரியர்களும் பேராசிரியர்களும். அரசு கல்லூரிகள் இல்லாமல் போகும் நிலை வரப் போகிறது.காந்தியும் பகத்சிங்கும் தேசத் துரோகிகள் என பாடங்கள் வரும் என்கிறார் நியாஸ் அகமது. இதோ 2 மாதம் முன்பு பார்த்தோமே காந்தி கொல்லப் படவில்லை என பள்ளிகளில் எழுதப்பட்ட காகித செய்திகள் வட இந்திய மாநிலத்தில் வழங்கப்பட்டதை . 

ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்த நாம்  சுதந்திர நாட்டில் அடிமைகளாக வெளி நாட்டு நிறுவனங்களின் கல்வி வியாபாரத்திற்கு சலாம் போடும் அடிமையாக மாறப் போகிறோம் என்பதை பட்டவர்த்தைமாகக் கூறி எச்சரித்த நூல் தான் இது. ஒப்பந்தத்திற்கு இந்தியா அளித்துள்ள வாக்குறுதிகளைத் திரும்பப் பெறவில்லை என்றால் , இங்கு குறிப்பிட்டுள்ள ஆபத்துகள் எல்லாம் நிஜமாகும் என்று இறுதியில் குறிப்பிட்டுள்ளது 4 வருடம் கடந்து  இன்று நிஜமாகி நம்மை ரணமாக்கியுள்ளது. 

களவு போன கல்வியை நாம் எங்ஙனம் மீட்போம் ?

உமா 

வாசிப்பு -அன்பென்பது ஒரு தந்திரமல்ல 

அன்பென்பது ஒரு தந்திரமல்ல 

புத்தகம் பேசுது , இந்து தமிழ் முதலான 8 வித இதழ்களில் பிரசுரமான பேராசிரியர் ச. மாடசாமி அவர்களது பன்னிரெண்டு கட்டுரைகளைத் தொகுத்தளித்துள்ள சிறிய அழகான பெட்டகம் தான் இந்த நூல் . இந்தப் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ட்ரன்சென்ற மாதம் தான் வெளியிட்டது. 

முதல் கட்டுரையின் தலைப்பு தான் இந்த நூலுக்கே தலைப்பாக அமைந்துள்ளது. அட்டைப்படத்திற்கும்  இந்த முதல் கதைக்கும் தொடர்புள்ளது. இந்தத் தலைப்பை வாசிக்கும் போதே என் மனதிற்குள் இனம்புரியாத கலக்கம் ஏற்படுகிறது. அன்பு என்பது எவ்வளவு உசத்தி என எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்குள்ளும் இத்தனை வித்தைகளா என நமக்குப் புரிய வைக்கிறார். அன்பைத் தந்திரமாக்கிய வித்தையில்  பள்ளிகளுக்கே முதன்மைப் பங்கு என School is Dead , Deschooling Society ஆகிய கல்வி நூல்களின் வழியே விளக்குகிறார். முக்கியமாக, இந்தக் கட்டுரை உரைக்கும் வரியான , முகநூல் தந்திரங்களை உருவாக்கிய இன்னொரு பள்ளிக்கூடம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் . அவரும் நானும் அவ்வளவு நெருக்கம் என்று சொன்னாலே நட்பு வலுவிழக்கும் என்பதைக் கூறிய  வள்ளுவன் 

கூற்றை நாமும்  சிந்திக்க வேண்டி தான் இருக்கிறது. நம் அன்றாட வாழ்வில் நிறைய பேருக்கு நடக்கும் அன்பின் வலிமையும் , பிரிவும் , வலிகளும் நமது மனத்திரையில் கொண்டு வந்து நிறுத்துகிறது கட்டுரை . இந்தக் கட்டுரையின் மைய இழை , எதிர்பார்ப்பும் உள்நோக்கமும் இல்லாத  அன்பைச் சமூகத்துக்குக் காட்ட வேண்டிய கடமை பள்ளிகளுக்கு இருக்கிறது , அந்தத் தகுதியும் இருக்கிறது என்பது தான். அந்த இழையை மிக கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ஒரு ஆசிரியராக , மனுஷியாக இன்று வரை வாழ்வது தான் எனக்கான சமாதானமாகக் கொள்கிறேன்.தந்திரத் தொழிற்சாலையாகிப் போன பள்ளிக்குள் அன்பின் மையங்களை உருவாக்கும் ஆசிரியர்கள் நிரம்ப வேண்டும் அதற்கான முயற்சிகளை கையிலெடுப்பதிலும் நமது பங்கு இருக்கும்.

அப்பாவியா ? முட்டாளா ? என்ற இரண்டாவது கட்டுரை   நமக்குக் கற்றுத் தருவதும் தெளிவு தருவதும் பல கோணங்களில் நம்மை சிந்திக்க வைக்கிறது . சமூகத்தின் அடையாமாகப் போனது  சூழ்ச்சி தானா ? முட்டாள் இவான் கதை வழியே டால்ஸ்டாய் இந்த சமூகத்திற்கு முன் வைக்கும் கேள்வி நமக்கான கேள்வியும் தான். எல்லோரையும் நம்புவரை முட்டாள் என்று தானே இந்த சமூகம் மதிப்பிடுகிறது. இந்த மதிப்பீட்டை மாற்றுவதாக நமது வகுப்பறைகள் இருக்க வேண்டும் , சமூகம் வழங்கும் அடையாளங்கள அநீதிக்கானது , இதை வகுப்பறைகள் வழங்கக் கூடாது

என்பது தான் இக்கட்டுரையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகக் கருதுகிறேன்.

இந்து தமிழ் நாளிதழில் குரு சிஷ்யன் தொடரில் 

தனது கல்லூரி மாணவர் நக்கீரன் கோபால் குறித்தது எழுதிய கட்டுரை தான் அடுத்து இடம்பெற்றுள்ள இலக்கணக் கண்கள் காணாத சித்திரங்கள் .இவரது வகுப்பறையில் படிக்காத போதும் வகுப்பறை சுவர் தாண்டிய உறவில் பலப்பட்ட மாணவராக நக்கீரன் கோபால் இருந்தது குறித்து பேசுகிறார். படிக்கிற காலத்தில்  கூர்ந்து கவனிக்கத் தவறியதைக் குறிப்பிட்டிருக்கும் வரிகள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒவ்வொரு மாணவனும் ஏதாவது ஒரு ஆசிரியரால் கூர்ந்து கவனிக்கப்பட்டால் மாணவர் எவரும் திசை மாறிப் போக வழியில்லை, திறன்களைக் கண்டறியும் கண்களாக மாறிவிடும். மாணவர் கோபால் ஆசிரியரது கட்டுரைகளை தனது நக்கீரன் புத்தகத்தில் தொடர்ந்து பிரசுரம் செய்கிறார். ஒரு ஆசிரியருக்கு இது மிகப் பெருமை தானே .கோபால் என்ற மாணவரது கல்லூரிக் காலத்தில் அவருக்குள் இருந்த கலையைக் காணத் தவறிய இலக்கணக் கண்ணாகத்தான் நாங்கள் இருந்தோம் என்பதாகக் கட்டுரையை முடிக்கிறார் . 

 தேவை - தலைகீழ் வகுப்பறை என்ற கட்டுரை  மிக மிக முக்கியமானது. தகவல் பரிமாற்றம் மட்டுமே நடக்கும் வகுப்பறைகளை சடங்கு வகுப்பறை என்கிறார்.  இதன் மாற்று தான் தலைகீழ் வகுப்பறை . அங்கு தான் குழந்தைகளின் தேவையை ஒரு ஆசிரியரால் கண்டறிய முடியும். 1801 இல் ஸ்காட்லாந்தில் ஆசிரியர் ஜேம்ஸ் பில்லன் கண்டறிந்த கரும்பலகை தான் இன்றும் நமது வகுப்பறை

களின் உயிர்ப்புக்கு கூடுதல் காரணமாகி

யுள்ளது. தொடர்ந்து வந்த சிறு வீடியோக்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டதும் இரண்டு அமெரிக்க ஆசிரியர்கள் தான். புரியாத மாணவர்கள் புரிந்து கொள்ள இந்த வீடியோக்கள் உதவின . அவற்றின் மீது உரையாடல்கள் நிகழ்கின்றன.மாணவர்க்கு

சுயமாய் கல்வியைத் தேடும் பொறுப்புணர்வு வந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து  சமூகம் வகுப்பறைக்குள் வருகிறது . மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கின்றது. 

இதை இன்றுள்ள தமிழகக் கல்விச் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிக இன்றியமையாதது. ஆம் இங்கும் இன்று பள்ளிப் பாடங்கள் என்றாலே அது அறிவியல் , கணிதம் மட்டுமல்ல மொழிப் பாடங்கள் உட்பட அனைத்திற்கும் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு கிடைக்கின்றன. ஆனால் அவையும் சடங்கு வகுப்பறைகளாக மாற்றம் பெற்று நகர்ந்து போவது தான் நம்மை வருத்தம் பட வைக்கிறது. சடங்குகள் சூழ்ந்த வகுப்பறையை தலைகீழ் வகுப்பறையாக மாற்றுவது ஆசிரியர்களது கையில் , அவர்களது எண்ணத்தால் , முயற்சியால் தான் முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

ஒரு புத்தகம் ... ஒரு கொலை .. சிவாஜி யார் ? இன்றைய நாட்களில் வெளிவந்து கொண்டிருக்கும்  குடியுரிமைத் திருத்தச் சட்டத்துடன் தொடர்புடைய கட்டுரையாகக் கூடப் பார்க்கலாம். இந்து - முஸ்லிம் என்ற இரு அளவுகோல்களை வைத்தே விவரிக்கப்பட்டவரலாற்றுத் திரிபுகள் வீர சிவாஜியின் மீது எவ்வாறு கட்டமைக்கப்பட்டன ?அதை எவ்வாறு கோவிந்த் பன்சாரே தனது சிவாஜி யார் ? நூலின் வழியாக தோலுரிக்கிறார் எனப் பதிவு செய்துள்ள கட்டுரை . எல்லோரும் படிக்க வேண்டும் இந்தசிவாஜி யார் ? என்ற நூலை. என்றாலும் பாடநூல் சொல்லும் பொய்களைத் தவிர்த்து மாணவர்களிடம் உண்மை வரலாற்றைக் கொண்டு செல்லும் ஆசிரியர்கள் வாசிக்க வேண்டும் எனப் புரிகிறது  .

அறிவொளி இறக்கி வைத்த சுமையில் குறிப்பிடும் வேல. ராமமூர்த்தி எழுதிய கிறுக்கு சண்முகம் கதை தரும் பிரியத்தில் உகுத்த கண்ணீர் , நல்ல தங்காள் கதையில் சொல்லப்படும் சோகத்தைக் கண்டு கண்ணீர் விடும் பெண்கள் இவையெல்லாம் மனதைப் பிசையும் அசைவுகள் . வாழ்க்கை அனுபவங்கள் எதையுமே தராத வகுப்பறைகள் திருவள்ளுவரை செந்நாப் புலவர் பற்றி தானே பேசுகின்றார் .செந்தாப் புலவர்னா என்ன அர்த்தம் என்று கேட்காத மாணவர்களைத் தானே உருவாக்குகிறது  இந்த கல்வி முறை பற்றியும் இக்கட்டுரை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஒவ்வொருவரும் இறக்கி வைக்க வேண்டிய தலைச் சுமை எது? பார்க்க வேண்டிய உண்மை எது? எனத் துல்லியமாக சிந்திக்க வைத்துள்ளார் ஆசிரியர் . 

மதம் : அதிகாரம் .. மத்திய வர்க்கப் பார்வையின் மொத்த உருவமே புதிய கல்விக் கொள்கை 2019 தான் என்று தலைப்பிலேயே கட்டுரை ஆரம்பிக்கின்றது . தரம் என்பது தான் வகுப்பறைக்குள் நுழைந்த முதல் வன்முறை என்று டால்ஸ்டாய் கூறியதின் உச்சம் இன்றைய தமிழகப் பள்ளிகளுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து ராஜ்யம் நடத்துகிறது. கல்விக் கொள்கை குறித்த அதிருப்தியை நாம் தொடர்ந்து பேசி வந்தாலும் கடினமான ஒரு காலத்தின் முன்னறிவிப்பாக வந்திருக்கும் இதன் இன்னொரு பக்க விளைவுகளை உணர்த்துகிறது இக்கட்டுரை . 

கறுப்பின மக்களைக் குற்றப் பரம்பரையினராக்கிய புண்படுத்திய Freakonomics நூல் குறித்து தமிழருக்கு அறிமுகப்படுத்திய சுஜாதா குறித்த கட்டுரை . இதில் சொல்லப்படும் ஏழை வீட்டுப் பிள்ளைகள் தான் குற்றவாளிகளாக மாறுகிறார்கள் என்ற பொது புத்தி குறித்த கருத்துக்கான விமர்சனமாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.

ஆணுக்கும் பெண்ணுக்கு மான நட்பை உருவாக்காத பாடத்திட்டத்தால் உருவான  ஆசிரியையின் கொலை குறித்த ஆழமான கருத்து விவாதமாக அமைந்துள்ளது .இந்த சென்னை ஆசிரியை உமா மகேஸ்வரி அவரது வகுப்பறையில் மாணவனால் கொலை செய்யப்பட்ட போது எழுதிய  உண்மையான அஞ்சலி என்ற கட்டுரை நமது கல்வி புரிதல்கள் குறித்து நிறைய இடித்துரைக்கின்றது. . இந்தக் கொலை நடந்த பிறகும் ஒரு உளவியல் ஆலோசகர் கூட எந்தப் பள்ளியிலும் முறையாக இல்லாததை இங்கு நாம் பரிசீலிக்க வேண்டும் . ஜன நாயக வகுப்பறைகள் தான் இது போன்ற பாதகங்களுக்கு வழிவகுக்கும். தோற்பதற்குக் கூச்சப்படாத ஆசிரியர்களால் தான் வன்முறையற்ற வகுப்பறைகளையும் உருவாக்க முடியும் என்பதை நமக்குள் பதிய வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான கட்டுரை .

கடைசி மைல்கள் கடினமானவை , இதன் சாரம் கூட நம் எல்லோருக்குமாவை. ஓய்வு கால வயதில் விரக்தி கொள்ளாமல் இது யதார்த்தம் எனப் புரிந்து கொண்டால் நம் நாட்களை இயல்பாகக் கடந்து விடலாம் என்பது புரிகிறது. அதை விட யதார்த்தம் என்னவோ முக்கியத்துவம் இழப்பதை எந்த மனதும் ஏற்பதில்லை என்பது தான். முக்கியத்துவம் இழப்பது வாழ்வின் தவிர்க்க முடியாத பகுதிதான். ஆனால் முதுமை எல்லோருக்கும் பொதுவான நேரம். The Last Mile is always the hardest என்ற பழமொழியை உணரும் போது ஒவ்வொருவருக்கும் சொந்த அனுபவங்களால் நெஞ்சம் விம்மும் .

பாடுபட்டு உழைத்துக் கடைசி நேரத்தில் கோட்டை விடுவோருக்கான எச்சரிக்கை இது என்கிறார் ஆசிரியர் . இது ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு விதமாகப் பொருந்தும். உறவுகளில் வரும் முரண்பாடுகளைக் களைய ஒரு இடைவெளி தேவைப்படுகிறது என்ற வரி ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை , பொது வாழ்க்கை என எல்லா இடங்களுக்கும் மிக அற்புதமாகப் பொருந்தும் .முதுமையின் பயணம் எவ்வாறு அமைந்தால் கடினமாக இருக்காது என வழிகாட்டுகிறார் பலமாக . வளரும் திறமைகளை  அங்கீகரிக்க 'பொறாமையற்ற முதுமையால் ' சுலபமாக முடியும் என்கிறார் பேராசிரியர் .இதை இந்தப் பண்பை இவரிடம் எனது சொந்த அனுபவத்தில் ஒவ்வொரு முறை எழுதும் போதும் காண்கிறேன். 

பள்ளிகள் திறப்பு , வகுப்பறைக்கு மனித முகம் ... இந்தக் கட்டுரை ஜென்னி மார்க்ஸ் ஸின் கடித செய்தியுடன் ஆரம்பமாகிறது. பாடநூல்களில் நூற்றாண்டு காலமாய் படிந்து கிடக்கும் மனோபாவங்களைத் தாண்ட வேண்டும் என்கிற புரிதலை வலியுறுத்துகிறார் . மீண்டும்  வகுப்பறைகள் குறித்த பல செய்திகள் , விவாதங்கள் , எதிர்பார்ப்புகளால் நிறைகிறது இந்தக் கட்டுரை . ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உறைந்து கிடக்கும் உலகங்களும் உயிர் பெற்று வர , வகுப்பறைக்கு ஒரு மனித முகம் தேவை என முடிக்கிறார். அந்த முகங்களாக நம்மை ஒப்பனை செய்து கொள்ளாதவரை கல்வியால் சமுதாய மாற்றம் நிகழ்வதென்பது மிகப் பெரிய சவால் தான். 

இறுதியாக என் பயணம் என்ற தலைப்பில் புதிய தலைமுறை கல்வி இதழில் வெளியான நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. இது மிக முக்கியமான பகுதி . மு.வ.வின் எழுத்துகள் மீதான பைத்தியம்  தான் முதல் திருப்பம் என்கிறார். ஆரம்ப கால கல்லூரி வாழ்க்கை இயற்பியவை மையமாக்க , அடுத்து படித்தது விரும்பிய தமிழை . மாணவர்களோடு அனுபவித்த கூட்டுச் சிறைவாசம் படிப்பதற்கும் எண்ணிப் பார்க்கவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. மூட்டா உருவாக்கம் குறித்து போராட்ட வாழ்க்கை , அறிவொளி அனுபவம் என இவரது வாழ்க்கை முழுவதும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நெளிவுகள் தெளிவாக ஒற்றை வரிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன .இறுதியாக முடித்திருப்பதும் கூட நான் உயிரற்ற வகுப்பறைகளைத்தான் அதிகம் பார்க்கிறேன் என்று தான் …

இந்த புத்தகம் 72 பக்கங்கள் தான் ஆனால் ஒவ்வொரு வரியும் 10 பக்கக் கதைகளை விரிவாகக் கூறுகின்றன. பேரா ச .மாடசாமியின் எழுத்துகளுக்கு எப்போதும் ஒரு வசீகரம் உண்டு. அவை சிந்திக்கவும் அசை போடவும் செயல்படவும் நம்மை அழைத்துச் செல்லும். அது போன்ற ஒரு புரிதலை அன்பென்பது  ஒரு தந்திரமல்ல என்ற இந்த புத்தகம் மிகக் கவனமாக நமக்குள் விதைக்கிறது. 

உமா

வாசிப்பு சொல்லால் அழியும் துயர்

சொல்லால் அழியும் துயர்

நூலாசிரியர் : 

எழுத்தாளர் தி.பரமேசுவரி . இவர்  அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் , கவிதை நூல்களையும் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். நூலாசிரியர் தி .பரமேசுவரி, மேல்நிலைப் பள்ளி  மாணவர்களுக்கு தமிழாசிரியராகப் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அதன் அடிப்படையில் 36 கட்டுரைகளிலும், இன்றைய கல்வி முறை குறித்து மிக விரிவாகப் பேசியுள்ளார். 

நூல்  :

மூன்று வருடங்களாக பாவையர் மலர் மாத இதழில் கல்வி குறித்துஎழுதிய 36 கட்டுரைகளை  பாவை மதி வெளியீடாக வான்மதி வெளியிட்டுள்ளார். 168 பக்கங்களைக் கொண்ட நூல் 2018 டிசம்பரில் முதற்பதிப்பாக வெளிவந்துள்ளது. 

நூல் குறித்து

...

இன்றைய கல்வி முறையின் ஓட்டைகள் , பள்ளிக் கல்வியின்  துயரங்கள் , ஆசிரியரது கடமைகள் அதிலிருந்து விலகிப் போன நிலை. பள்ளிகளின் வகை , பெண் கல்வியின் நிலை , கல்வி மறுக்கப்பட்ட சமூகம் , பொருளாதார ஏற்றத் தாழ்வு சூழ்ந்த சமூக நிலை .அதனடிப்படையில் அமைந்த பள்ளி அமைப்புகள் ,ஆசிரியர் - மாணவர் உறவு முறை , கழிப்பறைகள் காணாத அரசுப் பள்ளிகள் , மதிப்பீட்டு முறைகளின் போதான அனுபவங்கள் அனைத்தும் பேசியிருக்கிறார். பள்ளிகளின்  மொழியின் சிக்கல்கள் , தாய்மொழிவழிக் கல்வி குறித்தான ஆய்வு , ஆசிரியர் - மாணவர் உளவியல் சிக்கல்கள் அனைத்தையும் குறிப்பிட்டுக் கட்டுரைகளை நிறை வாக்கியிருக்கிறார். 

அன்றாட செய்தித்தாளில் ஊடகங்கள் வெளியிடும் பாதிக்கப்பட்ட  பள்ளி மாணவர் , ஆசிரியர் குறித்த செய்திகளை ஆங்காங்கே விளக்கிக் கூறி தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 

ஆங்கிலக் கல்வி முறை, பிறகு உருவாகிய கல்விக் குழுக்கள் , பள்ளிகளில் மாணவர் ஈடுபடும் அமைப்புகள் , வளாகத்திற்குள் நடக்கும் அனைத்து வகையான பிரச்சனைகள் , மக்கள் நிலை என எல்லாவற்றையும் கட்டுரைகள் பேசியுள்ளன. 

அடிப்படையில் எழுத்தாளராகவும்  தமிழாசிரியராகவும் முனைவராகவும் இருப்பதால் நன்னூல் முதலான இலக்கியங்களில் குறிப்பிட்ட ஆசிரியர் மாணவர் ஒப்பீட்டு இலக்கணம் முதற்கொண்டு திருக்குறள் , பாரதியார் கவிதைகள் அனைத்தையும் ஆங்காங்கே துணைக்கழைத்து கட்டுரைகளை செறிவாக்கி இருக்கிறார். 

ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது. பெற்றோர்களும் கல்வி அலுவலர்களும் வாசித்தால் கல்வி சிக்கல்கள் கூடுதலாகாமல் காக்க முடியும். அட்டைப்படம் குழந்தைகளது இயல்பான புன்னகையைப் பதிவு செய்கிறது. 

உமா