Sunday 31 May 2020

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஒரு மனிதன் 

     ஒரு வீடு 

ஒரு உலகம் 

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் 

விலை : ரூ325

பக்கங்கள் : 319

ஆசிரியர் குறிப்பு :

இந்நாவலின் ஆசிரியர் ஜெயகாந்தன் , 1934 இல் தென்னார்க்காடு மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர் .தொடக்கப் பள்ளிக் கல்வியைக் கூட முடிக்காத இவர் , சுயமாகக் கற்று 1950 முதல் சிறுகதைகள் , குறுநாவல்கள் , நாவல்கள் , கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் , திரைக்கதை வசனங்கள் ,நேர் காணல்கள் என எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார் .கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகளும் நாவல்களும் பல இந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாளிதழ் , இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். 

ஞானபீட விருது , சாகித்ய அகாதமி விருது , ராஜராஜன் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் இயக்கிய உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது 1964 இல் பெற்றது. 5 வருடங்களுக்கு முன்பு 2015 இல் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி சென்னையில் காலமானார். தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ள நாவல் இந்த ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். 

நாவலைப் பற்றி..

நவீனத் தமிழ் கிளாசிக் நாவல்  வரிசையின் மிக முக்கியமான நாவலாகப் பார்க்கப்படும்  

இந்த நாவல் அதை வாசித்த அனைவராலும் மனதார நெகிழ வைத்ததைப்  , பாராட்டிச் சொல்லி வரும் பகிர்வுகளைத் தொடர்ந்து பார்க்கிறோம். 

எந்த ஊர் , பெற்றோர் யார் , என்ன இனம் , என்ன சாதி என்று ஏதும் தெரியாத , அது பற்றிக் கவலைக் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனைகிறது நாவல். அதில் வெற்றியும் பெறுகிறது. 

1973 இல் எழுதப்பட்டு முதல் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல்,  ஏறத்தாழ 50 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டுள்ள சூழலில் 

இன்றும் வாசிக்கும் அனைவருக்கும் மிகப் பிடித்தமான நாவலாகவும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. 

இந்த நாவலின் முன்னுரையில் ஆசிரியர் ஜெயகாந்தன் தனது கதையைக் குறித்தும் தானே தனது கதைகளைக் குறித்து எழுதும் பழக்கத்திற்கான காரணங்கள் , கருத்துகள் குறித்து பகிர்கிறார். 

ஆசிரியர் , மாணவன் , நண்பன் ஆகிய மூன்று கோணங்களிலிருந்தும் இந்த முன்னுரைகளைத் தான் எழுதுவதாகக் கூறியுள்ளார் ஜெயகாந்தன்.

இந்த முன்னுரையே ரொம்ப வருடலாக இதமாக ஒரு வித நேசத்துடன் நாவலுக்குள் நாம் பயணிக்க உதவுகிறது .நாவலின் எந்த ஒரு இடத்திலும்  நம்மை எந்த சலிப்புக்கும் உட்படுத்தாமல் தேம்பி அழ வைக்காமல் , ஆஹா என துள்ளிக் குதிக்க வைக்காமல் தெளிந்த நீரோடையாக மனிதர்களையும் நிகழ்வுகளையும் உள்வாங்க வைத்து அவர்கள் போக்கில் அவர்களுடன் வாழ வைக்கும் ஒரு சிறந்த படைப்பாக அமைந்துள்ளது.

நாவலின் ஆரம்பத்திலிருந்தே நம்மை ஒரு வித நெகிழும் மனநிலைக்கு அழைத்துச் செல்கின்றன பக்கங்கள். அந்த ஊரும் , மக்களும் , நாவலில் சொல்லப்படும் கதாபாத்திரங்களும் , சின்னச் சின்னக் காட்சிகளும் கூட படிக்கப் படிக்க காட்சிகளாக நம்முடன் இன்னொரு பக்கம் பயணித்ததன் அனுபவத்தை, வாசித்து  ஒரு வாரம் ஆகியும் இன்னும் மறக்க முடியவில்லை. எல்லோருடனும் நாமும் வாழ்ந்த அனுபவத்தைத் தருகிறது. 

யாராலும் மறக்க முடியாத கதாபாத்திரம் ஹென்றி , இப்படியான மனிதர்கள் அபூர்வம் என்றாலும் நம் எல்லோருக்குள்ளும் குறிப்பிட்ட சிறு  சதவீதமாவது ஹென்றி பாத்திரம் இயல்பாகவே வாழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் மனிதர்கள் வெளி உலகுக்கு போடும் முகமூடிகளில் அவன் வெளிப்படாமலிருப்பான். பள்ளிக்கூடமே போகாத ஹென்றியின் வாழ்வியல் அணுகுமுறைகள் மனிதம் நிறைந்த அறிவுசார் நிகழ்வுகளை ஒவ்வொரு பக்கத்திலும் வெளிவருவதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது மனிதன் மனிதனாக வாழ பள்ளிக்கூடங்கள் அவசியமில்லை என்பதே. அதே போல அவனது பப்பா , மம்மா பெற்றோர் பாத்திரம் ஒரு இடத்திலும் ஹென்றியை எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை. குழந்தை உளவியல் , மனித உளவியல் , அணுகுமுறை என எல்லாவற்றையும் கூட இந்நாவல் நமக்குக் கற்றுத் தருகிறது. ஹென்றி பேசும் குறைவான தமிழும் அதிகமான ஆங்கிலமும் நாவல் முழுக்க வாசிக்க வாசிக்க அதுவும் ஒரு இனிமையான உணர்வைத் தருகிறது. 

32 வருடமாகப் பூட்டிக்கிடக்கும்  வீடும் , வயல் வரப்பு , மாடு கண்ணுகள் , நெல் மூட்டை அடுக்குவது, சந்தை , கிழங்கு விற்கும் பெண் , தர்மகர்த்தா , மணியக்காரர் , கிளியாம்பாள்  என நிகழ்வுகளும் உயிரற்ற பொருட்களும் உயிருள்ள மனிதர்களும் நம்முடன் இருப்பதாக நாம் அவர்களுடன் அந்த கிருஷ்ணராஜபுரத்தில் இருப்பதாக ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. 

கிராமத்து ஆசிரியரான தேவராஜன் ஹென்றியுடன் நட்பாவதும் , ஹென்றிக்கும் தேவராஜனுக்கு மிடையே நடக்கும் உரையாடல் தரும் உணர்வுகளும்  அக்கம்மாவின் இருப்பும் , அவளது வாழ்க்கையும் ,மண்ணாங்கட்டியின் வீட்டுச் சூழல் , அக்கம்மா வீட்டுக்கு அவனது ஒத்தாசை இதற்குள் சில மானுட சித்தாந்தங்களை வாழ விடுகிறார் ஜெயகாந்தன். 

துரைக்கண்ணுவின் வாழ்க்கை , அவனது ஹென்றியின் மீதான பாசம் , குழந்தைகளுடனான உறவு , பேபியின் மீதான தாய்மைத் தவிப்பு  , பாண்டுவின் மீதுள்ள உரிமை , அண்ணன் வீட்டின் மீதிருந்த அபார நேசம் இப்படி எளிய மனிதர்களின் மனதை நாவல் முழுவதும் எதார்த்தமாக இழையோட விட்டிருப்பது கூட நம்மை இந்த நாவலை விரும்ப வைக்கிறது.

பஞ்சாயத்து நிகழ்வுகளும் துரைக்கண்ணுவின் எதிர்பார்க்காத மனதும் ஹென்றியின் மறுமொழியும் அட , இப்படிக் கூட மனிதர்கள் இந்தக் காலத்தில் வாழ்கிறார்களா என்று நம்மை எண்ண வைக்கிறது. 

இறுதியாக அந்த வீட்டின் புதுமனை விழா வரை நடக்கும் எல்லாமே நமக்குள் அமைதியான மகிழ்ச்சியை உருவாக்குகிறது. ஹென்றி தான் இந்த நாவலின் முக்கிய மையக் கதாபாத்திரம். எந்த ஆடம்பரமும் இல்லாமல் எல்லோருக்குள்ளும் பாதிப்பை உருவாக்கி இப்படி ஒரு மனிதனை நாம் வாழ்வில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் விதைக்கும் கதாபாத்திரம். 

35 வருடம் முன்பு நான் வாழ்ந்த கிராமம் , கிராமத்து சூழல் , அங்கிருந்த மக்கள் அவர்களின் இயல்புகள் என பலவற்றை இந்த நாவலுக்குள் பொருத்திப் பார்க்க முடிந்தது. 

ஒன்றை நிச்சயமாகச் சொல்லலாம் , இந்த நாவல் முழுவதும் மனிதத்தை நேர்மை நியாயத்தை பதிவு செய்திருக்கிறார் ஜெயகாந்தன் . இப்படி மனிதர்கள் வாழ்ந்த காலகட்டமும்  இருந்தது என்னவோ நிஜம் தான். ஆனால் இன்று அதே நிலை இல்லை என்பது தான் எதார்த்தம். 

ஹென்றியின் நினைவுகளுடனே இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.  


Tuesday 19 May 2020

மனிதர்கள் விழிப்படையும் போது

மனிதர்கள் விழிப்படையும் போது 

ஆதிவாசிகளின் எழுச்சி:

 வார்லி பழங்குடியினரின் போராட்டக்கதை . 

சாகித்ய அகாதமி பரிசு பெற்றது . சவுத் விஷன்

வெளியிட்டுள்ளது. விலை ரூ 125 , பக்கம் 374

கோதாவரி பாருலேக்கர்  மராத்திய மொழியில்எழுதிய நூலை ஏற்கனவே  தமிழில் 1987 இல் ஜானகி ராமச்சந்திரன் மொழி பெயர்த்துள்ளார். மறுபடியும் செறிவூட்டப்பட்டு 2008 இல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு 

கமலாலயன் மொழிபெயர்த்துள்ளார்.

இது புத்தகம் அல்ல இது ஒரு வரலாறு, கோதாவரி பாருலேகரும் அவரது கணவர் ஷாம்ராவ் பாருலேகரும் இணைந்து மகாராஷ்டிரத்தில் உள்ள தாணா மாவட்டப் பகுதியில் வார்லி இன ஆதிவாசிகளின் எழுச்சிக்கு எவ்வாறு காரணமாக அமைந்தனர் என்பதற்கான ஆவணப் புத்தகம் இது. மனம் உருக்கும்  கதையை வாசித்தாலே உறக்கம் வராது. ஆனால் புழுவாக அதை விட அற்பமாக வாழ்ந்த ஆதிவாசிகளை , தங்கள் தொடர்ச்சியான செயல்பாடுகளால் மனிதர்களாக உருவாக்கி எழுச்சி பெற்ற சமுதாயமாக மாற்றிய நிஜக் கதை தான் இந்த நூலின் பக்கங்கள். இதைத் தொடர்ந்து படிக்க முடியாமலும் , படித்து முடித்த  பிறகும் பல நாட்களாக அந்த ஆதிவாசிகளின் வாழ்க்கைத் துயரங்கள் பற்றிய ஆழமான பாதிப்புடனும் எனது மனநிலை மாறி விட்டது . 

இன்றும் பழங்குடியின ஆதிவாசிகளுக்காகக் களத்தில் செயல்பட்டு வரும் பலரையும் குறித்து பார்த்து அறிந்து கொண்டு வந்தாலும் , இவர்களுக்கெல்லாம்  முன்னோடியாக வாழ்ந்த கோதாவரி பாருலேகர் தம்பதியினரின் அர்ப்பணிப்பும் அதற்கு ஈடாக, தங்களை அறியாமை வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்து 

 புரட்சிப் பாதையில் வளர்த்துக் கொள்ள  வார்லி இன மக்கள் தங்களை எவ்வாறெல்லாம் ஒப்புக் கொடுத்தார்கள்  என்ற விவரங்களும் பக்கத்திற்குப் பக்கம் நம்மை உறைய வைக்கிறது. 

இந்த நூலின் உள்ளடக்கம் 14 தலைப்புகளில் தரப்பட்டுள்ளது . காடுகளிலும் மலைகளின் பள்ளத்தாக்குகளில் வார்லி மக்களின் வாழ்க்கையைப் படிக்கப் படிக்க இத்தனை துன்பம் நிறைந்தவர்களை , துன்பப்படுத்தும் நிலப்பிரபுக்களின் அட்டகாசங்களை கற்பனை செய்ய முடியவில்லை. வார்லி மக்களின் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டு , அவர்களை அந்த நிலத்தில் கட்டாய கூலியில்லாத உழைப்பு செய்ய அடித்து , சித்ரவதை செய்வதும் , வார்லிக்கள் தங்கள் திருமணத்திற்காக 50 ரூபாய் கூட சம்பாதனை இல்லாமல் தாங்கள் வேலை செய்யும் நிலப்பிரபுக்களிடம்  கடனாகப் பெற அதற்கு பல வருடக் கடனாளிகளாக மாற்றி வார்லிக்களை சுரண்டும் நிலப்பிரபுக்களின் கீழ்த்தரமான மனநிலையும் அப்பப்பா ... கொடுமையிலும் கொடுமை .

கட்டாய உழைப்பு , குத்தகைக்கடன் , வார்லி மக்களில் பெண்களை எப்போது வேண்டுமானாலும் தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்தி வதைப்பது , ஆபாசப் பேச்சு என எதைச் சொல்ல , எதை விட ..?

அது மட்டுமா ? வார்லி மக்களுக்கு  ஒரு வேலை உணவு கூட கிடையாது. அதிகாலை எழுந்து வெறும் வயிற்றில் வேலைக்குச் சென்று மத்யானம் வரை நிலத்திலும் வீடுகளிலும் வேலை செய்து விட்டு , முதலாளிகள் தரும் குருணைகளைக் கொண்டு வந்து , சுத்தப்படுத்தி கஞ்சியாக்கி கால் வயிறு மட்டுமே உட்கொள்ளும் வார்லிக்களும் அவர்களது குழந்தைகளும் படும் துன்பம் அடுத்தடுத்து பரிதாபமாக .உடையின்றி அரை நிர்வாணமான வாழ்க்கை , இலைகளையும் வேர்களையும் வருடத்தின் பல மாதங்கள் உணவாக உட்கொண்டு,  படிப்பறிவில்லாமல் அதற்கு வாய்ப்பே இல்லாமல் , காலம் காலமாக அடிமைகளாக வாழும் வார்லி மக்களின் வாழ்க்கை முறை , தமிழ்த் திரைப்படமான பரதேசியை அடிக்கடி நினைவூட்டுகிறது. 

எரியும் சூளையில் கரியின் பதம் தப்பியதால் வேலை செய்த மனிதனை சூளைக்குள் போட்டு எரிக்கும் கொடூரக்காரர்களாக வாழும்  நிலப்பிரபுக்கள் , இவர்களுக்குத் துணை நிற்கும் காவல் துறை , வட்டிக்காரன் கும்பல் என வார்லி மக்களை அணு அணுவாகக் கொல்லும் ஆதிக்க வர்க்கங்கள் ஒருபுறம் .

இப்படி பயந்து புழுக்களாக வாழ்ந்த வார்லி மக்கள் 20 வருடங்களில் தங்களை சுய மரியாதை உடையவர்களாக உருவாக்கிக் கொள்ள புடம் போடப்படும் போராட்ட வரலாறு சுவாரஸ்யம். ஒரு கப் தேநீர் கூட கிடைக்காத சூழலில் ஆதிவாசிகளின் குடில்களிலேயே கஞ்சியைக் குடித்து , அங்கேயே படுத்துறங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்து 

உணவுக்கும் தங்குமிடத்துக்கும் உயிருக்கும் உத்தரவாதம் ஏதுமில்லாமல்  மாறு வேடங்களில் அடர்ந்த காட்டுத் தடங்களில் தங்கி இரவோடு இரவாக மக்களை அரசியல் படுத்தி , நிமிர்ந்த நன்னடை ,நேர் கொண்ட பார்வையாளராக , கேள்வி கேட்டு தங்கள் உரிமையைப் பெறும் நிலைக்கு வார்லி மக்களை உருவாக்கிய  கோதாவரி பாரு லேகர் சொல்லும் சரித்திரம் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. 

செங்கொடியின் வலிமை தான் இவர்களை மாற்றியது என பல இடங்களில் குறிப்பிட்டாலும் அதை மனிதர்களுக்குள் நிகழ்த்திய வழிகள் இதில் ஈடுபட்ட மனிதர்களையேச் சாரும் . 

கோபால கிருஷ்ணகோகலே குடும்பத்தில் தோன்றிய கோதாவரி பாருலேகர் , வரலாற்றுச் சிறப்பு மிக்க வார்லி ஆதிவாசிகளின் எழுச்சிக்குத் தலைமை தாங்கிய போராளியாக , மகாராஷ்டிர மாநில விவசாயிகளின் சங்கத்தை உருவாக்கியவராக , அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் வரலாற்றில் , அதன் ஒரே பெண் தலைவராகவும் , மகாராஷ்டிராவில் சட்டப்படிப்பு படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாக சிறந்த சமூக சேவகியாக சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் வார்லி மக்களின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு அவர்களின் விடுதலைக்காக கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்துள்ளதை இந்நூலில் அறிய முடிகிறது .

இந்த பழங்குடியின வார்லி மக்கள் எப்படி மாறினார்கள் ? கல்வியறிவில்லாத எளியவர்கள்,  சாமர்த்தியமில்லாத இவர்கள் எப்படிக் குறுகிய காலத்திற்குள் மாற்றமடைந்தனர் ?விழிப்புற்றனர் ?தங்களைச் சுரண்டக் கூடியவர்களுக்கு எதிராக வீரமிக்க போராட்டத்தை எப்படி நடத்தினார்கள் ? எங்கிருந்து அந்த சக்தி வந்தது ?

இந்த வரலாற்றையும் தன் அனுபவங்களையும் எளிமையான நடையில் மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறார் கோதாவரி பாரு லேக்கர் . 

அனைவரும் வாசித்து உள்வாங்கி நம்மை நாமே எழுச்சி பெற துணை செய்யும் மொழிபெயர்ப்பு நூலான மனிதர்கள் விழிப்படையும் போது சிறந்த நூல். 

சதுரங்க

சதுரங்க (புதினம் )

இரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய இந்த நாவல் ஆங்கில மொழியில்  அசோக் மித்ர - வால் மொழியாக்கம் செய்யப்பட்டது . அதனைத் தொடர்ந்து தமிழில்   இராம. திருநாவுக்கரசு மொழி பெயர்த்த இந்த சதுரங்க என்ற பெயருடைய புதினம் சாகித்திய அகாதமி 2004 இல் வெளியிட்டுள்ளது. 

இந்த நாவல் நான்கு அத்யாயங்களைக் கொண்ட 102 பக்கங்கள் அடங்கிய குறு நாவல் .

ஆரம்பத்தில் தரப்பட்டுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் குறிப்புரையில் இந்நூல் குறித்து பல தகவல்கள் உள்ளன. 

வங்க மொழியில் நான்கு வரிக் கவிதை ''சந்தால் ட்ரம் " என்ற ஒரு ஓசை ஒழுங்குக்கு உட்பட்டது. நான்கு அங்கமாக நடைபெறும் இந்த இசை விருந்தின் மீது தாகூருக்கு எல்லையில்லாத ஈடுபாடு உண்டு , உலகின் மிகப் பெரிய இலக்கியப் படைப்பாளியான தாகூர் தனது பல கதைகளையும் புதினங்களையும் நான்கு பகுதிகளைக் கொண்டனவாகவேப்  படைத்துள்ளார் .அதன் அடிப்படையிலேயே இந்த சதுரங்க புதினத்தையும் படைத்துள்ளாராம் .தாகூரின் 50 வயதுகளில் (1914 - 1915 ) இப்புதினத்தைப் படைத்துள்ளார். தாகூரின் பிறந்த நூற்றாண்டு விழா ஆண்டாகிய 1961 இல் தான் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. அதன் பிறகு 50 ஆண்டு கழித்தே தமிழில் மொழி மாற்றம் செய்யப் பட்டுள்ளது. 

அமைதியான உரையாடல்கள் அரைமனதான தனி மொழிகள் ,ஆசிரியரின் ஆழமான அக உலகக் கருத்தோட்டங்கள் இவற்றையெல்லாம்  கொண்டு இந்தப் புதினம் வங்கத்தின் அரை நூற்றாண்டு வாழ்க்கையை விவரிக்கிறது.

இதில் பெரியப்பா , சச்சிஸ் , டாமினி , ஸ்ரீபிலாஸ் என்ற 4 அத்யாயங்கள் நமக்குள் ஒரு பெரிய தாக்குதலை உருவாக்குகிறது. முதல் அத்யாயம் - ஈஸ்வர சந்திர வித்யாசாகரையும் அவருடைய இயக்கங்களையும் , இந்த நூற்றாண்டில் அவருடைய ஆன்மிக இயக்கம் ஏற்படுத்திய தாக்கங்களையும் காட்டுவனவாக உள்ளது. விதவை மறுமணம் புரிந்து கொள்வதற்கான அங்கீகாரம் ஆகியனவும் , விவேகானந்தர் இந்தியாவில் உருவாக்கியவை , நிவேதிதா இவர்கள் செயல்பாடுகளை டாமினியும் குகைப் படிமமும் நினைவூட்டுகின்றன . டாமினியை வங்காளத்தைத் தவிர வேறு எந்தப் பகுதியிலும் காண முடியாது போலும். ஸ்ரீ பிலாஸ் தன்னிரக்கக் குணம் பெற்றவன் அதிலிருந்து விடுபட விரும்புபவன். இவர்கள் அனைவருமே தாகூரின் முதல் ஐம்பதாண்டு கால வாழ்வின்  பிரதிநிதிகள் என்கிறார் அசோக் மித்ர. 

இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டுள்ள இப் புதினம் மாறி மாறி நம்மை வேறு வேறு மனநிலைக்கு அழைத்துச் செல்கிறது. ஒரே குடும்பத்தில் முரண்பட்ட எதிரெதிர் மனநிலையில் சகோதரர்கள். கம்யூனிஸத்தையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் சச்சிஸ்ஸின் பெரியப்பா ஜக்மோகனிடம் வளரும் சச்சிஸ் தானும் அவரையே உள்வாங்கி வளருதலும் இவர்களை எதிர்த்து இன்றைய சொல்லாடலில் நாம் பார்க்கும் சங்கிகளாக ஜக்மோகனின் தம்பி குடும்பமான ஹரி மோகன் சார்ந்த உறவுகள் செய்யும் அத்தனை குழி வெட்டும் காட்சிகளும் இன்றைய சமூக அரசியலை அப்படியே கண் முன்னால் வரவைக்கின்றன. 

ஜக்மோகன் தன் வீட்டில் இரவு வகுப்புகள் வைத்து அங்கு வாழும் அடித்தட்டு மக்களுக்கு உதவுதல் முதல் பல செயல்பாடுகளைப் பார்த்து , படித்து வளரும் சச்சிஸ்  புரட்சியின் வடிவமாக உருமாறுகிறான். ஆனால் இவற்றை ஏற்காத இவனது சொந்தத் தந்தையும் குடும்பமும் இவனையும் பெரியப்பாவையும் பிரிக்க செய்யும் சதி , தன் அண்ணன் கை விட்டு குழந்தையைத் தந்த நானி பாலாவிற்கு வாழ்க்கைத்  தர சச்சிஸ் முடிவெடுப்பது கண்டு , சச்சிஸைத் தோழனாக வளர்த்த ஜக்மோகன் பெருமிதம் கொள்வதும் ஆனால் அதை ஏற்க முடியாத நானி பாலா தற்கொலை செய்து கொள்வதும் சமூகத்தின் அன்றைய பல அடுக்குகளை நமக்குப் புரிய வைக்கிறது. 

தற்போதைய கொரோனா போல அன்று கொள்ளை நோயாக வந்த பிளேக் நோய்க்கு தன் வீட்டையே நோயாளிகளுக்கான  மருத்துவமனையாக மாற்றி சேவை செய்யும் ஜக்மோகன் , ேநாய்த் தீவிரத்தால் இறந்து சச்சிஸ் என்ற மனிதனை மீளாத் துயரத்துக்கு ஆளாக்கிவிடும் காட்சிகள் நம்மை வருத்துகின்றன. 

ஆனால் கொஞ்சமும் நாம் எதிர்பார்க்காமல் அடுத்தடுத்த அத்யாயங்களில் சச்சிஸ் தனது பெரியப்பாவின் இழப்பை ஏற்க முடியாமல் லீலானந்த சுவாமியைத் தேடுவதும் ஆன்மிகத்தில் மட்டும் தன்னைக் கரைத்துக் கொள்வதும் ஒட்டு மொத்தமாக நம்மை வேறு மனநிலைக்கு எடுத்துச் செல்கிறது.

நம்மைப் போலவே ஃபியூலஸ் கூட சச்சிஸ்ஸின் இந்த மாற்றத்தைக் கண்டு வெடவெடத்துப் போகிறான். சிங்கமாட்டம் வளர்ந்த பெரியப்பா வளர்த்த சச்சிஸ் லீலானந்த சுவாமிக்கு காலை அமுக்கி விட்டுப்  பணிவிடை செய்வதை அவனால் ஏற்கவே முடியாத போதும் ஏதோ ஒன்றால் தன்னிலை மாறி அவனும் லீலானந்தரின் முக்கியமான இரு சீடர்களில் ஒருவனாகி, (மற்றொருவன் சச்சிஸ் ) அவர்களோடேயே தங்கி விடுதல் என காட்சிகள் மாறி மாறி நம்மை தாகூரின் மனதுடன் உரையாட வைக்கின்றன.

இவர்களுடன் வாழும் விதவை தான் டாமினி , அவளின் கணவர் இந்த வீலானந்தரின் சீடர்களில் ஒருவராக ... பஜனைப் பாடும் ஒரு நாளில் இறந்து விட , டாமினியும், அவளது  கணவர் விட்டுப் போன சொத்துகள் உட்பட சாமியின் ஆளுகைக்கு உட்பட்டு தொடர் மன அழுத்தங்களுக்கு ஆளாகும் டாமினி இறுதியில் ஃபியூலஸ்க்கு வாழ்க்கைத் துணையாகிட .. ஆங்கிலத்தில் புலமை மிக்க ஃபியூலஸ் க்கு ஏற்கனவே ப்ரேம்சந்த் ராய் சந்த் ஆங்கில இலக்கிய விருது பெற்றிருந்ததால் பேராசிரியர் பணி எளிதில் கிடைக்க டாமினியுடன் வாழ்க்கையைத் துவங்கும் நாளில் கல்கத்தாவில்  ஜக்மோகன் பெரியப்பா சச்சிஸ் பெயரில் எழுதி வைத்த வீட்டை தம்பதிக்கு பரிசாகத் தந்க விடுகிறான் சச்சிஸ் ... இது ஒரு வித்யாசமான மனநிலையைத் தரும் சதுரங்க நிகழ்வுகளை மனதில் பதிய வைத்து விட்டது. 

உமா