Wednesday 17 March 2021

புகழோடு தோன்றுக

புகழோடு தோன்றுக ..

வெளியீடு : கலக்கல் ட்ரீம்ஸ்

முதல் பதிப்பு : 2018

விலை ரூ 90


ஆசிரியர் : கதிர் ராத் என்ற நமது குழு நிர்வாகி  கதிரவன் . இவரைப் பற்றிக் கூற வேண்டுமானால் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்.பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இந்திய ஆட்சிப் பணியை இலக்காக வைத்து முயற்சி செய்து வருகிறார்.  முகநூலில் வாசிப்பை நேசிப்போம் என்ற குழுவை கடந்த 3 வருடங்களாக நடத்தி வருபவர். நம்மைப் போல பல ஆயிரக்கணக்கான மனிதர்களை தொடர் வாசிப்பாளராக மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் . 

மிகவும் சமூக பொறுப்புள்ள மனிதர் என்பதை இக்குழுவில் இணைந்திருப்போரால் உணர முடியும். 


புத்தகம் பற்றி …


நமது குழந்தைகளுக்காக கதைகள்  எழுதும் தம்பி விழியன்,  மிக அழகான முன்னுரையாக - புகழோடு வாழ்ந்திடுக  என்ற வாழ்த்துரை வழங்கியுள்ளார். 


இந்தப் புத்தகம் வெளியான போது எனது பள்ளித் தோழர்கள் 25 வருடங்களுக்குப் பிறகு முதன் முதலாக சந்திப்பு நிகழ்ந்தது .அந்த சமயத்தில் 40 பேருக்கும் இதை வரவழைத்து பரிசாகக் கொடுக்கக் காரணம் இப்புத்தகம் எழுதப்பட்டதன் சிறப்பு. ஆமாம். அப்படி என்ன சிறப்பு ?தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி சென்றவர் அனைவரும் திருக்குறளைப் படித்திருப்போம் . 12 ஆம் வகுப்பு முடித்து வெளிவருவதற்குள் ஏறத்தாழ 100 க்கும் அதிகமான திருக்குறள் நமக்கு கற்பிக்கப்பட்டு இருக்கும். சிலர் ஆர்வத்தால் 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து மேடைகளில் ஒப்பித்து பரிசு வாங்குவார்கள். சில ஆசிரியர்கள் வாழ்க்கைக்காகத் திருக்குறளைக் கற்பிப்பர் .பலரோ தேர்வில் மாணவர் பெறும் 2 மதிப்பெண்களுக்காகப் போராடி சொல்லித் தருவார்கள். பள்ளி வழிபாட்டுக் கூட்டம் , இலக்கிய மன்ற மேடைகள் , ஏன் பெரியவர்கள் கலந்து விவாதிக்கும் பட்டி மன்றங்கள் என எல்லா இடங்களிலும் வள்ளுவர் தந்த வாழ்க்கை டிப்ஸ் திருக்குறள் நிறைந்து இருக்கும். நம் நாட்டின் கல்வி முறையின் சாபக்கேடு என்னவோ , எங்கு தேவையோ அங்கு மட்டும்  பேசி , எழுதி திருக்குறளை ஒரு அளவீடாக மட்டுமே புழங்குகின்றனர். அது வாழ்வியல் நெறி என்பதை இன்றைய காலகட்டத்தில் சாதாரண சமூகத்தின் மனிதர்கள் புரிந்து கொள்ள திருக்குறளை கதையாக சொல்லிச் சொல்லி நம்மை அன்றாட வாழ்க்கையின் அங்கமாக திருக்குறளை உணர வைத்துள்ளார் கதிரவன் .


எனது வகுப்பறைக்குள் திருக்குறள் கதை சொல்ல மிகச் சரியான உதவியாக இப்புத்தகம் இருக்கிறது .ஒவ்வொரு கதைக்கும் ஒரு அழகான பெயர் - திருக்குறள் கூறி தொடர்புபடுத்துவது என்பது , இதுவரை அநேகமாக இந்த வகையில் எவரும் செய்து இருக்க மாட்டார் .சில  புத்தகங்கள் திருக்குறள் -கதைகளுக்காக எழுதப்பட்டிருக்கின்றன என்பதை நூலகங்கள் வழியாக. அவை பழைய காலம் , ஆய்வுக் கதைகளாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல அலுவலகத்தில் , வீட்டில் , பள்ளியில் , சமூகத்தில் நிலவும் யதார்த்தங்களை அப்படியே கூறி அவற்றை மிக அழகாக திருக்குறளுடன் தொடர்பு படுத்த , மனப்பாடம் செய்யாமலேயே அப்படியே மனதில் ஒட்டிக் கொள்கின்றன தெய்வப் புலவரின் ஒன்னே முக்கால் அடி குறள்கள்.


உதாரணம் 


பசி என்னும் தீப்பிணி

ஈகை என்ற அதிகாரத்தில் 227 ஆவது குறள் எண்ணில் 


பாத்தூண் மரீஇ யவனைப் பசி என்னும்

தீப்பிணி தீண்டல் அரிது 


என்ற குறளினைப் புரிய வைக்க , சாப்பிட வசதி இல்லாதவங்களுக்கு முடிஞ்சப்ப சாப்பாடு வாங்கித் தரனும் என , மருந்து மாத்திரை சாப்பிட்டு வரும் ஒருவருக்கு ஒரு உரையாடல் வழியாக சொல்லி இருப்பார். இதில் பழைய சாதத்துல நல்லது செய்யும்  பாக்டீரியா இருப்பதையும் இயல்பா சொல்லி புரிய வைத்த விதம் தான் இப்புத்தகத்தின் சிறப்பு. கடைசியில் அந்தக் குறளுக்கான உரையும் தந்துள்ளார். 

உரை :தான் பெற்ற உணவை பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை .


இப்படி புத்தகம் முழுக்க திருக்குறள் கதைகள் , நம் அன்றாட வாழ்க்கையை ஒட்டி அமைந்த அனுபவங்கள். இந்த புத்தகம் வாங்கிய போதே படித்தாலும் ஏற்கனவே ஒரு முறை பரிசாகவும் குழுவிலிருந்து அனுப்பியிருந்தார். ஆனால் தற்போது தான் எழுதியுள்ளேன், மீண்டும் படித்து ... நிறைய நிறைய அழகான கதைகளைக் கொண்டது தான் புகழோடு தோன்றுக  

No comments:

Post a Comment