Monday 11 October 2021

இடைவெளியில் உடையும் பூ

 இடைவெளியில் உடையும் பூ 

 கவிதைப் புத்தகம் 
ஆசிரியர் :அன்புத்தோழி ஜெயஸ்ரீ 
வெளியீடு : இடையன் இடைச்சி நூலகம் 
பக்கங்கள்: 112
விலை : ரூ 150

 புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்க்கும் பொழுது ஒரு பூ உடைந்து கீழே சிதறுவது போல  தோன்றுகிறது. .  

 ஜெயஸ்ரீ:  இவர் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோவையில் வசித்து வருகிறார் அவருடைய வானொலி நிகழ்ச்சித்  தொகுப்பின் பெயர்தான் அன்புத்தோழி . ஆகவே தன்னை "அன்புத்தோழி ஜெயஸ்ரீ " என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார் அடையாளம் மட்டுமல்ல அவர் உண்மையாகவே அன்புத் தோழியாக திகழ்கிறார் என்பது தான் இந்த கவிதைகளிலிருந்து  புரிந்து கொள்ளக் கூடிய ஒரு கருத்தாகும் . .

 வலியைக் கலை செய்யும் வார்த்தைகள் என்று தலைப்பிட்ட ஒரு வாழ்த்துரையை அல்லது அணிந்துரையை கவிஞர் வைரமுத்து அளித்துள்ளார் .மௌனத்தை திறக்கும் கவிதைகள் என்று மற்றொரு  கவிஞர் அம்சப்ரியா என்பவர் பாராட்டியுள்ளார் .

அதனைத் தொடர்ந்து பூக்களைத் திருடிய சிறுமியின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற தலைப்பில் மிக அழகாக தன்னுரை தந்துள்ளார் எழுத்தாளர் .

 அவர் சொல்வதில் மிகவும் குறிப்பிடத்தக்கது, என்னோடு நீங்கள் பயணிக்க வேண்டுமாயின் இயந்திரங்களோடு அல்லாது இதயங்களோடு பழகி இருத்தல் அவசியம் ஏனெனில் இவள் ஒரு இலக்கியவாதி என்பதைவிட இலக்கு உள்ள வியாதி என்பதே சரி என்று குறிப்பிடுகின்றார் அதாவது அவருடைய  கவிதை மொழியானது முழுக்க முழுக்க அன்பைத் தோய்த்து தொடர்ந்து வெவ்வேறு பரிமாணங்களில் கவிதை வரிகளாக நமக்கு கொடுக்கின்றது. 

நம் அன்றாடக் காட்சிகளிலிருந்து ஒரு கவிதையாக இதைப் பார்க்கிறேன். 

 தோளில் ஒரு பையோடு 
கைபேசியில் கண்வைத்து
 குதிகால் செருப்பு பட்டென இடறித் தடுமாறி 
விழப் போகும் எவளையுமினி அலைபேசிப் பைத்தியமான தீர்ப்பிட்டு சபித்து விடாதீர்கள் ......

தனிமையை கட்டிக் கொண்ட காதல் காரியின் கடைசி தேடலின் வழிகளை வார்த்தைகள் உரைக்கவியலாது வேண்டுமெனும்  போதெல்லாம் 
உடனே கையை பிடித்துக் கொள்ளும் அத்தனிமை  போன்றதொரு 
சிறந்த துணை வேறொன்றும் இல்லை என்று 
வேண்டுமானால் சொல்லிப் போங்கள்......

 வேருக்கு நீர் ஊற்ற நேரமில்லை எங்களுக்கே தாகம் தீர்த்த நீர் போதவில்லை முற்றியதே கலி .... 

அவளுக்கு அஞ்சலி என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதையின் வரிகள் இதோ

ஆண்மகன் உனக்கவள் பண்டமாகப்  பிறந்தவள் 
மறைமுகப் பாடஞ் சொன்ன 
சமூக அவலங்களைக் கொளுத்துங்கள் 
பால்விழைவு வெறியாகியினியும் வேட்டைகள் தொடராமல் இருக்க வெட்டியே போடுங்கள் 

  வன்கொடுமை செய்தால் வாலிப முருக்கை 
முடங்கிப் போகச் செய்தல் வேண்டும் செய்வீர்களா ?
தீர்ப்பு இலகுவானால்  தீக்காமம் இன்னும் இரையாக்கி 
எத்தனை சிதைகளை மூட்டுமோ .....

என்று சமூகத்தின் பால் இருக்கும் கோபத்தைக் கக்குவது சில இடங்களில் தெரிகிறது .

இன்னும் சில வரிகள் .....

 நண்பா
 தேவதை என்றழைக்கும் வரையே தேவதைகள் தேவதைகள் 

பறவை மொழி .....என்ற தலைப்பில் ஒரு கவிதை ...

மனிதர்களின் அளவுகோல் கொண்டு இப்பறவைகளை அளக்காதீர்கள் அவற்றின் மொழி உங்களுக்கு
அறவே  தெரிவதில்லை 

எப்போதும் அப்பறவையின் காதல் பழங்களின் மீது அல்ல
 வேர்களில் இருப்பதினாலே
 விதைத்துப் போகிறது
தன் எச்சத்தால் 
பல்லாயிரம் பழமரம்

 ஒரு பறவையின் இருப்பானது 
பறத்தலன்றி பலவும் உண்டு 

பிஞ்சு நடையின்னும் பயிலா 
கொஞ்சு மழலையின் அரையாடையென அநியாய விலையோடு அடித் தொடையில் 
படுகின்ற சிவந்த கோடுகளைப் பதித்த நாப்கின் எனும் நவீனம் 
தாய்மை தொலைந்த புது யுகத்தைக் காணும்  
எம் கண்கள் வலிக்கையில்.....

 காலமெல்லாம் புதைந்து காத்திருக்கும் சிறு குளங்கள் உடையோடு ஒட்டி உறவாடி வைரமாக வைராக்கியம் கொண்டு ....என்று தொடங்கும் ஒரு கவிதை இறுதியில் ..... இப்படி முடிகிறது 

எந்த இலக்கும் இன்றி வந்து கலக்கும் ஒரு  வான்துளியில்
வாழ்வின் நீளம் உணர்கிறது 
தன் ஆழ்கடல் இலக்கின் 
எல்லைகள் வெளிச்சம் பெற இத்துனையும் கடந்தாகத்தான் வேண்டுமென 
கனத்த மனதோடு விடைபெற்று விரைந்தோடி 
அவ்வோடை நதியாகி நகர்கின்றது ...

  ஹைக்கூ கவிதை போல ஏராளமான கவிதைகளை தொடர்ந்து பல பக்கங்களில்  தருகிறார் ....

 இல்லப்  பா சொல்லு  டா 
ஓரெழுத்து கவியில் தான் 
வழுக்கி விழுகிறோம்.....

 உன் பெயர் சொல்லி 
நான் வளர்த்த ரோஜா செடி 
உன்னை போலவேதான் சிரிக்கின்றது ஒவ்வொரு பூக்களிலும் 
உனக்கு முட்கள் தவிர 
வேறொன்றும் தெரிவதில்லை.....

ஓர் ஈர நாளில்
தின்னக் கிடைத்த
சுடு சோளத்திடம்
எங்கே விளைந்தாய்
உன்னைச் சுட்டது யார்
என்றெல்லாம் நான் 
கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் 
நீங்கள் ?

நம்மை அறியாமல் உதடுகளைப் பிரித்து 
ரசித்து சிரிக்க வைத்த வரிகள் ....

கவிஞர் தன் மனதில் உள்ளன யாவற்றையும் கவிதை வரிகளாக வெளிக் கொண்டு வர முயற்சித்து வெற்றியும் பெற்றுள்ளார்.தமிழின் மீது ஆர்வமும் சொற்களின் மீது காதலும் கொண்ட கவிஞராகத் தெரிகிறார். இயல்பான உணர்வுகளை அவை வெளிப்படும் போதே  கவிதைகளாகப் படைத்து விட்டு நகர்கிறார். பறவைகள் , மாமரம் , பெண்கள் , ஆண்கள் , அன்பு , ஏக்கம் , காதல் , காமம் , அலைபேசி என இவரது கவிதைகளின் கருப் பொருட்கள் அன்றாடங்களின் பேசு பொருளாகவே இருப்பதால் நம்மால் லயித்து வாசிக்க முடிகிறது . இன்னும் வரும் காலங்களில்  கூடுதல் மெருகேறிய  கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள் அன்புத் தோழி ஜெயஸ்ரீ .


வாசிப்பை நேசிப்போம் குழுவிற்கு நன்றி 

இந்தப் புத்தகம் என்னை வந்தடைந்தது ஒரு சுவாரசியமான  அனுபவம் என்று சொல்லலாம் .இது என் கைகளில் கிடைத்து  மூன்று மாதங்கள் முடிவடைந்துவிட்டன. எப்போதுமே ஒரு புத்தகத்தை   நம் மீது அன்பு வைத்து அனுப்பினார்கள் என்றால் நான் உடனே வாசித்து அது குறித்து எழுதுவது வழக்கம் ஆனால் என்னுடைய சூழல் இந்த புத்தகத்தை நான் தொடர்ந்து வாசிக்க இயலாமல் காலம் தாழ்த்திக் கொண்டே போனேன் ஒரு காலகட்டத்தில் இந்த புத்தகத்தை நான் வேறு ஒரு ஊரில் விட்டு வந்து தொலைத்து விட்டதாக எண்ணி  திரும்பவும் தகவல் கிடைத்து   தபாலில் அனுப்பக்  கூறி அதன் பிறகு வாசித்தேன். 

எதற்காக சொல்கிறேன் என்றால் மிகவும் சுவாரசியமான அனுபவம் இந்த புத்தகத்தை நான் வாசித்து எழுதுவது என்பது .அவருடைய அன்பு கலந்த ஒரு பரிசாக இதை எனக்கு அவராகவே என்னை தேடி எனது விலாசம்  கேட்டு எனக்கு அனுப்பி வைத்தார்  ஜெயஸ்ரீ.
வாசிப்பை நேசிப்போம் குழுவில் என்னை அறிந்ததாகக் கூறி   முகவரி கேட்டாங்க ....ரொம்ப அழகான ஒரு கடிதமும் எனக்கு இதோடு வைத்து அனுப்பியிருந்தார்  


Sunday 10 October 2021

நூல் :கோபல்ல கிராமம் -

நூல் :கோபல்ல கிராமம் - 

ஆசிரியர் 
கி.ராஜநாராயணன்

 மக்களின் மொழியில் கரிசல் இலக்கியம் தந்தவர் என எல்லோராலும்  பாராட்டுக்குரியவராக இருப்பதை இந்த நூலை வாசிக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஒரு தரிசான காட்டு நிலம் ..... பசு மாடுகள் நிறைந்த , வளமான கிராமமாக 
மாறிய ஒரு கதையை பூட்டியின் வழியாக காட்சிகளைக் கண் முன் நிறுத்தும்  ஒரு சுவையான பகுதியைக் கடந்து ,  மக்கள் இந்த பூமியை தாங்கள் வாழக்கூடிய  ஒரு
வசிப்பிடமாக உருவாக்கிய வரலாற்றைத் தாங்கி படைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.   . 

ஒரு கிராமத்தின் தோற்றம் , அங்கு வாழும் மக்களின் இயல்பு , உயிரினங்களின் அசைவு , அவர்கள் செய்யும் தொழிலின் நேர்த்தி , குடும்ப வாழ்க்கை முறை என மிகவும் இயல்பாக வரிக்கு வரி அங்கே நம்மையே வசித்த அனுபவத்தைக் கொடுத்து நகர்ந்து செல்கிறது நாவல் 

கதைகளுக்குள் கதை என்று ஒரு பொது மையத்திலிருந்து அதைச் சுற்றிச் சுற்றி கதைகள் உருவாகியும் கதைகளுக்குள் எந்த நெருடலோ முரணோ இல்லாமல் இணைப்பும் கொடுத்து ஒரு நாவல் உருவாகி அதை அந்த மக்களின் மொழியிலேயே நமக்கு அளித்துள்ளார் கி.ரா. 

ஒரு பெண்ணைக் காப்பதற்காக தங்கள் இருப்பிடத்தை விட்டு கூட்டமாக வெளியேறி தப்பித்து வேறொரு நிலத்தில் தங்கள் வாழ்க்கையை உருவாக்கி பல தலைமுறைகளுக்குப் பிறகு செழிப்பான ஊரின் வரலாற்றைக் கதையாகச் சொல்லி ஆங்காங்கே சுவை கூட்ட கதை மாந்தர்களைப் புதிது புதிதாகப் படைத்து அவர்களது செயல்பாட்டின் வழியே பயணிக்க வைத்து கோபல்ல கிராமத்தை படைத்திருக்கும் நேர்த்தி நம் மனதில் ஆழமாக ஊடுருவுகிறது.

வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஆங்கிலேயரின் ஆட்சி , கும்பினிகளின் மேற்பார்வை இவர்களின் துன்பங்களிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளக் கையாளும் வழிவகைகள் இப்படி ஒன்றோடு ஒன்று பிணைந்து புனைவின் வடிவத்தில் அபுனைவு படைப்பாக அறிய வைத்தது .

உமா

என்னுயிர் நீயன்றோ

என்னுயிர் நீயன்றோ 

பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
விலை : ரூ .150

கவிதை நூலின் ஆசிரியர் : 
 அன்புடன் ஆனந்தி. . Anbudan Ananthi 

தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க வாழ் கவிஞர் . இவரது தமிழ் ஆர்வம் அளப்பரியது என்பதை இவரது நூலுக்கு அணிந்துரை வழங்கிய அனைவரும்  வேறு வேறு கோணத்தில் பதிவு செய்துள்ளதிலிருந்து அறிந்து கொள்ளலாம். . தாய் நாட்டை விட்டு வெகுதூரத்தில் வாழ்ந்து வந்தாலும் தமிழ் மொழியை இவர் நேசிக்கும் பாங்கை இந்நூல் ஆழமாக உணர்த்துகிறது. இவர் வெளிநாடு வாழ் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்பித்து வரும் பணியை பல வருடங்களாக செய்து வருகிறார்.  உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இணைந்து இலக்கியம் வளர்க்கும்  தமிழால் இணைவோம்  உலகத் தமிழ்க் களத்தின் அமெரிக்க  ஒருங்கிணைப்பாளராக  ஊக்கமுடன் செயல்பட்டு வரும் ஆனந்தி இயல் , இசை , நாடகம் என முத்தமிழையும் குழந்தைகளிடமும் பெரியோர்களிடமும் கொண்டு சேர்க்கும் தமிழ்ப் பணிகளை செய்து வருகிறார். சமீபமாக அந்தாதிகளை தன் முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். 
இணையம் முழுக்க இவரது எழுத்துகள் மெல்லிய  மழைத் தூறல் போல விடாமல் சாரலுடன் பரவிக் கிடக்கிறது .

கவிதை நூலான என்னுயிர் நீயன்றோ - இவரது முதல் தொகுப்பு , ஆனால் பதினைந்து ஆண்டுகளாக, தான் எழுதி வந்த கவிதைகளை மிக அழகாகக் கோர்த்து நூலாக மாற்றியுள்ளார். 100 கவிதைகளிலும் சொற்களின் திரட்சிகர்ஜனை செய்கிறது. நேசத்தை காணும் இடமெல்லாம்  விதைத்து அதன் மனத்தைப் பரப்புகிறார். காதலை எல்லா இடங்களிலும் கொண்டாடும் இவர் பெரும்பாலான இடங்களில்
இயற்கையின் மீது படர விட்டு பனித்துளிகளைச் சேகரிக்கும் புல்வெளியின் ஈரம்  போல  குளிரூட்டுகிறார். 

சர்வமும் நீ .... என்ற தலைப்பில் 

நெருஞ்சி முள்ளாய் 
நிறைத்த பாரம்
நீ நெருங்கிய நொடி
உடனே தீரும் .... என்று மிக அழகாகப் பாடியுள்ளார் .

பொங்கல் குறித்தான கவிதைகள் , பெற்றோர் , நட்பு , இயற்கை , உணர்வுகள் , மனிதப் பண்புகள், நாட்டுப் பற்று , பெண்ணியம் , மரபு ,  என ஒவ்வொரு கவிதையும் உருப் பெற்று உணர்வுகளைக் கிளறி அனுபவிக்க வைத்துள்ளார். வார்த்தைகளின் கிறக்கங்களில் சுகமான நினைவுகளைத் தருகிறார் .

தேன் உண்டு களிக்கக் கண்டேன்
திறம் கண்டு கிறங்கி நின்றேன் ...

மனிதர்கள் பல விதம் என்ற தலைப்பில் ....

ஊழியம் செய்தபடி
உரிமை இழந்த படி
உறவுக்காய் ஏங்கியபடி
உண்மையாய் இருப்பர் சில பேர் ....

இவை போன்ற வரிகள் எதார்த்தத்தைப் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம்.

மனதின் வலிகள் என்ற தலைப்பிலான கவிதையிலும் அதே எதார்த்தம் .... 
அவை ....

இருந்தும் இல்லாததும் 
புரிந்தும் புரியாததும்
அறிந்தும் அறியாததும் போல்
அமைதியாய் நகர்கிறேன் ...

மனிதர்கள் மீதான நேசத்தை மையப் படுத்தி இவர் படைத்துள்ள கவிதைகளை வாசிக்கும் போது , வேறொரு உலகிற்கு நம்மை அவை அழைத்துச் சென்று விடுகின்றன. ஆனால் அதே உலகிற்குள் சஞ்சரிக்க ஆசை கொண்டாலும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி மீள்கிறோம். ஆனால் ஆனந்தி எப்படி எல்லாக் கவிதைகளிலும் நேசத்தின் சாயலை மிச்சம் வைக்காமல் வெளிப்படுத்தி இருக்கிறார் என்ற வினா நமக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது தான் நிஜம். 

இவரது எல்லாக் கவிதைகளிலும் சொற்களின் தொடுத்தல் வரிசையில் ஒரு ஒழுங்கு இருப்பதையும் , சொற் களஞ்சியப் பெருக்கம் தாராளமாகப் பயன்படுத்தப்படுதலையும் கவனிக்க முடிகிறது. எதுகை , மோனை இல்லாத கவிதைகளே இல்லை எனலாம் .. ஒரு ஒழுங்கு வரிசை இலக்கண விதிகளுக்குட்பட்டு சொற்களை அடுக்கியிருப்பதையும் துல்லியமாக கவனிக்க இயலுகிறது. மிக முக்கியமாக  கவனிக்கும் மற்றொரு விடயம் , கவிதைகள் நேரடியான பொருளைத் தருவதால் புரிந்து கொள்வதில் கடினம் இல்லை. 

 அன்புடன் 
உமா

யாத்ரீகனின் பாதை

#பயணங்கள்

யாத்ரீகனின் பாதை 
ஒளிப்பட பயணக் கதைகள் 

பதிப்பு : முதல் பதிப்பு 2020
வெளியிடு : தன்னறம் நூல் வெளி
விலை: ரூ 500 

ஆசிரியர் : வினோத் பாலுச்சாமி 

இவர் மதுரை காரியாபட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். தனது கல்வியை முடித்து பலவிதமான நகரங்கள் வேறுபட்ட நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார். தற்போது " யா" என்ற ஸ்டூடியோ வைத்து குழந்தைகளுக்கான ஊசித் துளை கேமிரா பயில் முகாம்களை நடத்தி வருகிறார். ஒரு புகைப்படக் கலைஞராக பயணியாக வாழ்கிறார். 

யாத்ரீகனின் பாதை 

ஒவ்வொரு புத்தகமும் நம்முடன் ஒவ்வொரு விதமாக உரையாடும். ஆனால் இந்த புத்தகமோ நெடுந்தூரம் பயணிக்க வைத்து  நம் மெளனத்தை ஆழமாக்குகிறது. 

 தன்னை ஒரு  தேர்ந்த பயணியாக்கி சமூகத்தின்  தொலைவுகளை  ஒளிப்படங்களாக மாற்றி அப்பயணத்தை உயிரோட்டமாக சிறந்த தொகுப்பாக வழங்கி இருக்கிறார் நூலாசிரியர் .

இப்புத்தகம்  ஒரு மனிதரின் வாழ்க்கைப் பயணத்தையும் பயணத்தின் மைல்கல்களையும் எழுத்துகளாலும் ஒளிப்படங்களாலும் நிறைத்து நம் கைகளில் கிடைத்திருக்கிறது. நூலாசிரியர் தனது கனவுகளைப் பயணங்களின் வழியே சாத்தியமாக்கி நமக்கு பல பரிமாணங்களை தனது எழுத்தின் வழியே தந்துள்ளது சிறப்பான செயல். 

புத்தகத்தின் அட்டைப் படமும் வடிவமைப்பும்   மனதை நெகிழ வைக்கும் வண்ணங்களும் நம்மை மெதுவாகப் பக்கங்களைப் புரட்ட வைக்கின்றன.  ஒரு யாத்ரீகனாக இந்த சமூகத்தை அங்கு வாழும் எளிய மனிதர்களை அவர்களது வாழ்வியலை , அன்றாடம் அவர்கள் சந்திக்கும்  பிரச்சனைகளை நமக்கு அடையாளப்படுத்தியிருப்பது தான்  மிகச் சிறப்பாக  அமைந்துள்ளது எனலாம்.

தனது இளமைக் காலம் , படிப்பு , வேலைகள் என நினைவுபடுத்திய பிறகு தனது கனவுகளை நிஜமாக்க எவ்வாறு பயணித்தார் என்பதே இங்கு நாம் அறிந்து கொள்ளும் செய்தி ஒவ்வொரு சூழலையும் கடந்து தனது பயணத்தை எங்ஙனம் சுய தேடலுக்கான ஆதாரமாகத் தருவித்துக் கொண்டு பல்வேறு அனுபவங்களைப் பெற்று அதை மிக அழகிய புத்தகமாக மாற்றியுள்ளார் என்பதை நாம் கூர்நோக்குதல் இன்றியமையாதது. 

நண்பன் திரைப் Uடத்தில் தனது பிடித்தமான பணி புகைப்படங்கள் எடுப்பது என ஸ்ரீகாந்த் தனது ஆசையை வெளிப்படுத்த நண்பன் விஜய் அது வளர்ந்து மலர்வதற்கு துணை நிற்பது பார்த்து இதெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம் என நாம் எண்ணும் போது , இல்லை இல்லை நிஜ வாழ்க்கையில் இப்படியான வெற்றியாளர்கள் உள்ளனர் என்பதை  வினோத் அவர்களை புகைப்படங்கள் எடுக்க ஊக்கப்படுத்திய நண்பர்கள் , சூழல்களை அறிமுகப்படுத்துகின்றது சில பக்கங்களில் இப்புத்தகம் . 

கடல்களில் கரையோரம் ஒதுங்கும் ஆமைகளின் வாழ்க்கை முதல் 
மலைவாழ் மக்களின் பிரச்சனைகள் வாழ்க்கை முறை வரை பயணித்து அவற்றை ஒளிப்படமாக்கி , எல்லாவற்றையும் தொகுத்து புத்தகமாக்கியிருப்பது வரவேற்கத் தக்கது. 

பயணங்களால், தான் பெற்ற நல் மனிதர்கள் , நட்புகள் , உடல் நலக் குறைபாடுகள் மீட்டெடுத்த உறவுகள் என ஒரு மனிதரின் வாழ்க்கைச் சுழற்சியையும் பயணமாக , படங்களாக , அற்புதமான நினைவுகளாகப் பகிர்ந்துள்ளார் வினோத் .

அவரது பாதை விரிந்து பயணம் மலை உச்சியை அடைவது போல மிகப் பெரிய புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்ட அனுபவங்கள் , அங்கு வாழ்நாள் நண்பர்களாக மாறிப் போன சக படைப்பாளர்கள் என நிறைய பயண அனுபவங்களைச் சித்தரிக்கிறது புத்தகம் . இப்படியான வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை . வினோத் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. என்றால் அது அவரது பேறு .இறுதிப் பகுதியில் நமது கதை சொல்லி குமார் ஷாவும் வருகிறார் .இவரது வாழ்வும் இப்படித் தான் ... பேறு பெற்றவர்கள். 

நீலாங்கரை கடற்கரை இரவுகளையும் ஒரிசா கடற்கரை இரவுகளையும் ஆமைகளுடனான பயணத்தில் ஒளிப்படமாக்கி நம்மை ரசிக்க வைக்கிறார். ரயில் பயணத்தில் மனிதர்களைப் படம் பிடிப்பதோடு அவர்களது மனதையும் படித்து படமாக்கி எழுத்தாக்கியிருப்பது என நம்மை புத்தகம் முழுக்க நெகிழ வைப்பது இங்கு சொல்லப் பட வேண்டிய ஒன்று. 

அதே போல ஒவ்வொரு அத்யாயங்களின் தலைப்புகளும் கூட நம்மை சற்று நிதானித்து நம்மை அறியாமல் புன்னகையுடன் முறுவலிக்கச் செய்த பிறகு தான் வாசிக்கவும் வைக்கின்றன. 

ஏழு வருடங்கள் இடைவெளியில் ஆதிவாசி மக்களை  இரு முறைகள் சந்திக்கச் சென்றது ,அப்போது அவர்களுக்கும் தனக்குமான நட்புறவு  எவ்வகையில் பரிணமித்தது என்று பயணமாக விளக்கி படங்களுடன் தந்திருப்பது என நாம் வாசிக்க வாசிக்க இனிக்கிறது. 

தாய்லாந்தின் அனுபவம் அங்கோர் வாட் புகைப்படப் பயிற்சிப் பட்டறையில் பெற்ற அனுபவங்கள் என ஆசிரியர் தனது பயண நூலை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பொறுமையாகவும் பொருளுள்ளதாகவும் நமக்காக அளித்திருக்கிறார். 

ஒவ்வொரு சொல்லும் நம்முடன் கவனமாக உரையாடுகின்றன . புனைவுகளை விட உண்மைகளுக்கு ஒரு ஆற்றலும் பிரகாசமும் சற்று கூடுதலாக இருக்கும் என்பதை இப்புத்தகம் உண்மையாக்குகிறது. புத்தகத்தின் பயணக் கதையில் இடம் பெற்றுள்ள  ஒவ்வொரு புகைப்படமும் நம்மை ஏதோ செய்து விடுகிறது.  மீண்டும் சொல்கிறேன். எல்லோருக்கும் இப்படியான வாழ்க்கைக் கிடைத்து விடுவதில்லை. வாழ்க்கையின் சில அரிய சுவாரஸ்யங்களை நுகர விரும்பும் எல்லோரும்  கட்டாயமாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

சுதந்திரப் பறவையாக வாழும் வினோத் தனது எதிர் வரும் பயணங்களையும் மற்றவர்க்கு தரும் படியும் ஆவணங்களாக மாற்றிட அன்பு வாழ்த்துகள் 

உமா .

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள்

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள் 

ஆசிரியர் : சுந்தரபுத்தன் 
வெளியீடு : பரிதி பதிப்பகம் -
முதல் பதிப்பு : 2018
பக்கங்கள் : 474
விலை : ரூ 500

ஆசிரியர் குறிப்பு :
சுந்தரபுத்தன்  திருவாரூர் மாவட்டத்தில் கண்கொடுத்தவனிதம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது 24 ஆம் வயது வரை சொந்த ஊரில் வாழ்ந்த இவர் அதன் பிறகு சென்னையில் இடம் பெயர்ந்து ,   பத்திரிக்கைத் துறையில் 
தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் அரசி , புதிய பார்வை ,குமுதம் , விண் நாயகன், புதிய தலைமுறை கல்வி உள்ளிட்ட பல பத்திரிகைகளில்  பொறுப்பு வகித்துள்ளார். தற்போது Open Horizon இணைய இதழில் பணியாாற்றுகிறார். வண்ணங்களின் வாழ்க்கை , ஒரு கிராமமும் சில மனிதர்களும் , கிராமத்து  ஆட்டோகிராப் என பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இவருக்கு பயணங்களில் தனியாத ஆர்வம் என்பதை இந்நூல் நமக்கு அறிவிக்கிறது.

கூடுதல் தகவல் ,இவரது தந்தை ஒளிச்செங்கோ என்ற நடராஜன் மாலைமுரசு இதழில்  பணியாற்றிய புகழ் பெற்ற நிருபர் . 

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள் 

 ஆசிரியர் வெவ்வேறு தருணங்களில் எழுதிய நான்கு புத்தகங்களின் தொகுப்பு தான் இது என பதிப்பாசிரியர் இளம்பரிதி குறிப்பிட்டுள்ளார். கற்பனை கடிதங்கள், மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு ,அழகின் வரைபடம், யானை பார்த்த சிறுவன் இவை நான்கும் இணைந்துதான் இந்த புதிய புத்தகம் உருவாகியுள்ளது.

 சுந்தரபுத்தன் தான் ரசித்ததை, பார்த்ததை , படித்ததை , உணர்ந்ததை கடிதங்களாக எழுதியுள்ளார். சொற் சித்திரங்களாக எழுதியுள்ளார் ,பதிவுகளாக குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் இணைந்து நம்மோடு ஒரு உயிர்ப்பான தருணங்களை பக்கம் தோறும் வழங்கி வருகின்றன . கடிதங்கள் என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள ஒவ்வொரு கடிதமும் மிகவும் மனதிற்கு நெருக்கமான உணர்வுகளை கொடுக்கின்றன .

எல்லோருக்கும் கடிதம் எழுதியுள்ளார் அவருடைய கிராமத்திற்கு நலந்தானா என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார் நெல்சன் மண்டேலாவுக்கு எழுதியுள்ளார் அவருடைய பால்ய காலத்திற்கு எழுதியுள்ளார் அவருடைய ஆங்கில ஆசிரியருக்கு  , பில் கேட்சுக்கு , வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு , அம்மாவுக்கு ,அப்பாவுக்கு, உறவினருக்கு ,விவேகானந்தருக்கு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நிலவுக்குக் கூட ஒரு கடிதம் எழுதி இருக்கிறார், தைப் பொங்கல் கொண்டாடக் கூடிய தருணங்களுக்கு கூட கடிதம் எழுதி நமது பால்யகால உணர்வுகளை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நம்மைத் தூண்டி இருக்கிறார்.

மகாத்மா காந்தியடிகளுக்கும் ஜென்னி மார்க்ஸ் ,பெரியார், காமராசர் என்று இவரது கடிதம் பட்டியல்கள் ஏராளம் ஒவ்வொரு கடிதமும் இரண்டு பக்கங்கள் மட்டுமே கொண்டிருக்கின்றன .படிப்பதற்கு சுவாரஸ்யமாக மிகவும் ரசனையாக வெவ்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் பாலுமகேந்திரா பாரதிராஜா என்று திரைத்துறைப் பிரபலங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை 

ஒவ்வொரு கடிதத்திலும் அவரது ஆழ்ந்த ஞானம் புறப்படுகிறது ஒவ்வொரு ஆளுமைகளையும் அவர் உள்வாங்கி முழுமையாக வாசித்துள்ளார் அவர் குறித்த செய்திகளை பல ஆண்டுகளாக சேகரித்து அதை சுருக்கமாக ரத்தினச் சுருக்கம் என்று சொல்வார்களே அதைப் போன்று நமக்கு ஓரிரு வார்த்தைகளில் செறிவாகக்  கொடுத்த செல்கின்றார். நாம் படிக்காத எத்தனையோ விஷயங்களை இந்த சிறுசிறு கடிதங்களின் வழியாக ஏராளமாக  சுந்தரபுத்தன் நமக்கு கொடுத்து இருப்பது  மிகவும் சிறப்பு .

அதேபோல கடிதங்களில் ஒவ்வொரு ஆளுமைகளிடமும் அவர்கள்  குறித்த விமர்சனங்களையும்  வைத்துள்ளார் மக்களின் பார்வையில் இயல்பாகவே இருக்கும் கேள்விகள் அவற்றையும் கடிதங்களில் சந்தேகம் கேட்பது போல் எழுதியவருக்கு வைத்துள்ளார்.

இயல்பாகவே இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் விளைவாக மறைந்து போயிருக்கும் கடிதம் எழுதுதல் என்ற தகவல் தொடர்பு பழக்கத்தையும் எழுதிக் கடத்திய  அந்த உணர்வுகளைம் படிப்போருக்கு ஏக்கமாகவே உருவாக்கக்கூடிய ஒரு அழகான கடிதத் தொகுப்பை இந்த நூல் நமக்கு அளிக்கின்றது.

அடுத்தபடியாக பதிவுகள் - இந்த தலைப்பில் மகிழம் பூக்கள் பூத்துக் கிடந்த வாசல் ,காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழல் ஆச்சு, செக்கும் இல்லை செட்டியாரும் இல்லை இப்படி நிறைய பதிவுகளை நமக்காகக்  கொடுத்துள்ளார். இதில் ஷோபா என்றொரு தேவதை என்ற தலைப்பில் பாலுமகேந்திரா அவர்களுடனான எழுத்தை நமக்கு அப்படியே கொடுத்துள்ளார் .அதற்கான சந்திப்பு இருவருக்கும் ஏற்பட்ட உரையாடல்கள் சோபாவை குறித்து பாலு மகேந்திராவின் வெளிப்பாடு என்று எத்தனையோ சுவாரசியமான பதிவுகளாளைப்  பார்க்கலாம்  .

இவர் சந்தித்த நபர்கள், சென்ற பயணங்கள், அந்த இடங்கள் குறித்து இவருக்கு உண்டான அனுபவங்கள், பெரும்பாலும் பயணங்கள் குறித்து இந்த பதிவுகளில் வெளிப்படுகிறது. அதேபோல தன்னைச் சுற்றி இருக்கக்கூடிய மனிதர்கள், நண்பர்கள் , பத்திரிகை துறையில் திரைத்துறையில் இவரோடு பயணித்தவர்கள் இவரோடு ஒரே அறையில் சென்னை வந்த புதிதில் தங்கியவர்கள் என்று பல வாரியாக  இன்று வளர்ந்துள்ள  ஆளுமைகளை போகிற போக்கில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களில் பலரும் நமக்கு முகநூல் தளத்தில் அல்லது நேரடி தொடர்பில் பழக்கம் உடையவர்களாகக் கூட இருக்கிறார்கள். ரவி சுப்பிரமணியம் ,யுகபாரதி முத்துக்குமார் என்று அவர்களுடனான அந்த தருணங்கள்,  இவருக்கும் அவர்களுக்குமான நட்பு ,இவர் கடந்து வந்த பாதை, சென்னையில் சந்தித்த இடங்கள் ஒவ்வொரு பத்திரிகைத் துறையிலும் இவர் பயணிக்கும் பொழுது நடந்த அனுபவங்கள் என நீள்கின்றன 

 இவர் பயன்படுத்திய சைக்கிள் குறித்து கூட எழுதியுள்ளார். இவரது  கிராமம் சார்ந்த நிகழ்வுகள் சினிமா எப்படி இன்று நம் கைக்குள்ளாக  இருக்கிறது ஆனால் சினிமாவைத் தேடி மக்கள் சென்றார்கள் என்று அழகாகப் பதிவு செய்துள்ளார் .அதேபோல முதல் வாழ்த்து முதல் பூங்கொத்து என்று இவருடைய வாழ்க்கையில் , இவரை உயிர்ப்புடன் வைத்துள்ள அத்தனை நினைவுகளையும் பெரும்பாலும் நாம் வாசிக்கும் பொழுது நமக்கு அந்த உணர்வு ஏற்படும் வகையில் எழுதியது தான் நாம் ரசித்து வாசிப்பதற்குக் காரணம். 

உதாரணமாக ,இவர் கிராமம் குறித்து ப்ளஸ்ஸர் வந்த தேர்தல் காலம் என்று ஒரு கட்டுரையை குறிப்பிட்டுள்ளார் நாமும் நம்முடைய பழைய காலத்திற்கு சென்று விடுகிறோம் அல்லது இப்போது இருக்கக்கூடிய தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நமக்கு ஞாபகத்தில் வந்து போகிறது .இவ்வாறு  ஒவ்வொரு பதிவுகளை வாசிக்கும் பொழுதும் நம்முடன் தொடர்பில்  இருக்கக்கூடிய இந்த வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பார்க்கும் படி ஒரு சின்ன சந்தோஷம் உணர்ச்சி மகிழ்ச்சி நாமும் நமது நினைவலைகளில் சற்று நேரம் பின்னோக்கி செல்லுதல் இப்படியான உணர்வுகளை தொடர்ந்து இவருடைய பதிவுகள் தருகின்றன. 

 இறுதியாக சொற் சித்திரங்கள் இந்த தலைப்பில் இவர் உலகப் புகழ்பெற்ற பல படங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கான செய்திகளையும் கொடுக்கின்றார். சில முக்கியமான படங்கள் உலக புகழ் பெற்ற படங்கள் இல்லை என்றாலும்  அவற்றைப் பதிவு செய்துள்ளார் .உதாரணமாக ,யூரோ –அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருக்கக்கூடிய இந்த கலைஞர் தண்ணீரிலிருந்து பெண்கள் எழுந்து வருவது போன்ற ஓவியங்களை வரைவதில் சகலகலா வல்லவர் என்று  அவர் பற்றிய குறிப்பும் அவர் வரைந்துள்ள ஓவியம் குறித்தும் தருகிறார் .

இப்படியான பதிவுகள் ஒரே ஒரு பக்கத்திலும் , மிகச் சில பதிவுகளே இரண்டு பக்கங்களையும் நிரப்புகின்றன.  மலாலா,  தலைவர்கள், புகைப்பட தினம், போர்ச்சுக்கல் படம் ,கடும் பஞ்சம் 1876 இல் இந்தியாவில் இருந்த பஞ்சத்தினால் மக்கள் எவ்வாறு பாதிப்படைந்து எலும்பும் தோலுமாக இருக்கக்கூடிய ஒரு படம் இவற்றையெல்லாம் நாம் காணும் பொழுது  நெகிழ்வாகவே உணர முடிகிறது. 

 முக்கியமான படங்கள் குறித்தும் அவற்றுக்கான செய்திகள் குறித்தும் வெறும் செய்தியாக இல்லாமல் அவை நமது மனதைத் தொடும் படி மிகவும் ரசித்து உள்வாங்கும்படி சொற் சித்திரங்கள் என்ற பகுதியில் தொகுத்துள்ளார் .தெருவென்று எதனைச் சொல்வீர் - என்ற ஒரு தலைப்பில் குழந்தைகளின் உலகமாக இருந்தது தெரு தான் , முதன்முதலில் உலகம் தெருவாகத்தான் குழந்தைகளுக்கு தெரிய வந்தது என்று ஒரு ஒரு பதிவு இருக்கின்றது. இப்படி மிகக் குறிப்பிட்ட ஒருசில படங்களுக்கான பதிவுகள் நம்மை சற்று நிதானித்து ஆழ வாசிக்க வைக்கின்றன. இதில் ஒரு இனம்புரியாத சுவாரசியத்தை தருகிறார் என்று சொல்லலாம். ஜோமல்லூரி குறித்து ஒரு பதிவு அவருடைய படத்துடன் அவருடனான நட்பு குறித்து எழுதி இருக்கின்றார் இப்படி ஒவ்வொரு சொற் சித்திரங்கள் தலைப்பிலும் வேறு வேறு தலைப்புகளில் பன்முகத்தன்மையான பதிவுகளை கொடுத்துள்ளார்.

 சமூக ஊடகங்களின் பெருக்கம் கண்டது கேட்டது பார்த்தது என அனைத்தையும் யாரும் எழுதும் வாய்ப்பை திறந்துவிட்டிருக்கிறது அதில் சிலர் எழுதுவதைத் தான் நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறது ரசிக்கவும் முடிகிறது இயற்கையை பற்றிய சமூக நிகழ்வுகளைப் பற்றிய அந்த நபரை பற்றிய எதுவாக இருந்தாலும் அதற்குள் அவர்கள் கரைந்து நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சுந்தரபுத்தன் என்று  வ.மணிமாறன் ஊடகவியலாளர் தனது கருத்தை இங்கு பதிவு செய்கிறார். அதை நாமும் ஏற்போம் .

பல துறை வல்லுனர்களைக் குறித்து நிறைய செய்திகளை அவை   வெறும் செய்தியாக அல்லாமல் ஒரு  அற்புதமான உணர்வுடன் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு தொகுப்பாக இந்த கடிதங்கள் பதிவுகள் சொற் சித்திரங்கள் அமைந்திருக்கின்றது பாராட்டுக்கள் சுந்தரபுத்தன் அவர்களுக்கு .இனிவரும் காலங்களிலும் இதே போல அவருடைய ஆழ்மனதில் இருந்து உணர்வுகளுடன் கற்பனை வளத்துடன் , மனிதர்களை வாசிப்பதன் நோக்கத்துடன் கூடிய பதிவுகளை தொடர்ந்து தருமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். சிறப்பான நூல். 

உமா

குழந்தைகளைக் கொண்டாடுவோம்

நூல் : குழந்தைகளைக் கொண்டாடுவோம்
ஆசிரியர் : ஷ. அமனஷ்வீலி
தமிழில் : டாக்டர் இரா . பாஸ்கரன்
பதிப்பகம் . பாரதி புத்தகாலயம் 
விலை : ரூ 120
பக்கங்கள்: 158

குழந்தைகளை கொண்டாடுவோம் கல்விச் சிந்தனைகளைத் தரக்கூடிய இந்த புத்தகம், ஆசிரியர்களுக்கான மிகச் சிறந்த ஒரு கையேடு என்று கூறலாம் . ஆசிரியர்கள், பெற்றோர்கள் ,கல்வியாளர்கள் . கல்வி அதிகாரிகள் என்று பலரும் வாசிக்கக் கூடிய ஒரு புத்தகம் . முக்கியமாக தலைமையாசிரியர்கள் இதனை வாசிக்க வேண்டும் .அப்போதுதான் அனைத்து ஆசிரியர்களையும் கற்பித்தலின் பரிமாணங்கள் குறித்து மிகச் சிறப்பாக வழிநடத்த இயலும் .

பகல் கனவு நூலை நாம் அனைவரும் வாசித்த்திருப்போம் அதே போன்று, ஆனால் அதைவிட சற்று கூடுதலான மேம்படுத்தலுடன்  எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகம் ஒரு ஆசிரியரின் வகுப்பறை அனுபவங்களின் நாட்குறிப்பைப் போல மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது என்பேன். ஏனெனில் பகல் கனவு நூல் நான்காம் வகுப்பு குழந்தைகளை மையப்படுத்தியது , இதுவோ 6 வயது குழந்தைகளுக்குத் தரப்படும் கல்வி குறித்தானது. 

 ஆறுவயது குழந்தைகளுக்கு எவ்வாறெல்லாம் கற்பித்தலை எடுத்துச் செல்வது என்று ஷா .அமனஷ்வீலி என்ற சோவியத் நாட்டின் கல்வியியல் அறிஞர் நமக்கு அழகாகத் தொகுத்துக்  கொடுத்துள்ளார் . 6 வயது குழந்தைகளுக்கு , பள்ளிக்கு வரும்  முன்பே அல்லது பள்ளிக்குள் அவர்கள் வந்தபிறகு எவ்வாறெல்லாம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம் .

இவர் குழந்தை வளர்ப்பு கல்வி இயலில் தனக்கான 15 ஆண்டுகள் கல்வி அனுபவப் பின்புலத்துடன் , ஓராண்டு காலத்தில் பதிவுசெய்து 800 பக்கங்கள் கொண்ட நாட்குறிப்பின் அடிப்படையில் முன் தயாரிப்பு வகுப்புகளைத் திட்டமிடுகிறார் .அவற்றில் 5 முக்கிய நாட்களில் அவர் செய்த  செயல்பாடுகளின் பதிவுகளை நம்மோடு  பகிர்ந்து கொள்வது தான் குழந்தைகளைக் கொண்டாடுவோம் புத்தகம் .

 முதல் நாள் , 20-ஆம் நாள் , 84 ஆம்  நாள் 122-வது நாள் கடைசியாக 170 ஆவது நாள் இப்படியான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை தொகுத்து இந்த புத்தகத்தில் நமக்கு கொடுத்துள்ளார் அமனஷ்வீலி. இந்த ஐந்து நாட்களின் அனுபவங்களே  நமக்கு ஓர் ஆண்டு காலக் கல்வியை , குழந்தைகள் பெறும் முறைகளைக்  கண்முன் கொண்டு வருகின்றது .

 ஆரம்பப்பள்ளியில் தயாரிப்பு வகுப்பில் உள்ள 6 வயது குழந்தைகளுடன் ஆசிரியர் எப்படிக் கலந்து பழக வேண்டும் என்பதற்கான  உதாரண நூல் தான் இது. நவீன வாழ்க்கை மற்றும் சமுதாய வளர்ச்சி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ஆரம்பப்பள்ளியில் உள்ளடக்கத்தையும் முறையும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கருத்து உருவாக வேண்டும் என்பதை இந்த நூலாசிரியர் முன்வைக்கிறார். 

 இந்த புத்தகத்தில் , ஆசிரியர்கள்
கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளமாக இருக்கின்றன , அதோடு அந்த செய்திகளைத் தங்கள் அனுபவங்களாக மாற்றியமைக்கக்கூடிய ஒரு முயற்சியும் தேவைப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் .

இப்புத்தகத்தை  வாசிக்கும் போது 
 இன்றைய காலச் சூழலில்  ஒரு பெற்றோரோ அல்லது ஆசிரியரோ வியப்புக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளக் கூடும் .ஏனென்றால் இந்த புத்தகத்தில் , இன்றைய தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளிச் சூழலும் கல்விச் சூழலும் ஒரு இடத்தில் கூட இடம் பெறவில்லை என்றால்  பார்த்துக் கொள்ளுங்களேன் .ஆமாம் இங்கு தான் ஆசிரியர் பணி அதிகாரிகளுக்கான ஆணைகளுக்கான பணியாக மாறிவிட்டதே. 

ஆசிரியர் பணி என்ன என்பதனை  அழகாக   ஆசிரியரியலாக மிகவும் அற்புதமாக கொடுக்கப்பட்டுள்ள ஒரு புத்தகம் .  நமக்குத் தெரியாத எந்த விஷயமும் இந்த புத்தகத்தில் இல்லை . நமக்குத் தெரிந்தவை என்றாலும் நாம் பின்பற்றாத வகுப்பறைகள்  குறித்து தான் இங்கு பேசப்பட்டுள்ளது.

 நம்முடைய வகுப்பறையை எப்படி இயல்பாகக் கட்டமைப்பது இயல்பாகத் திட்டமிடுவது, குழந்தைகளுக்கான வகுப்பறையாக எப்படி மாற்றுவது என்ற 
அழுத்தமான புரிதலை  ஆசிரியர்களுக்
குத் தருகிறது இந்நூல் .

ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான அணுகுமுறையும் உறவு முறையும் கற்பித்தல் முறையும்  இங்கு மனம் திறந்து  பேசப்படுகின்றன.
குழந்தைகள் தான் என் ஆசிரியர்கள் என்று கூறுகிறார் இந்த நூலாசிரியர், குழந்தைகளை முதல் நாள் பள்ளிக்கு வரும் பொழுது எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக சில இரவுகள் தூங்காமல் அவர் தயாரிக்கும் முன் தயாரிப்பு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது எல்லா குழந்தைகளுக்கும் கடிதம் எழுதி அனுப்புகிறார் . அந்த கடிதத்தைப் படிக்கக் கூடிய குழந்தைகள் இந்த ஆசிரியரைப்பற்றி மிகப்பெரிய கனவுகளுடன் இருக்கிறார்கள். முதல் நாள் பள்ளிக்கு வரும் பொழுது ஒவ்வொரு குழந்தையையும் 
( அவர்களது  படங்களை ஏற்கனவே சேகரித்து  வைத்திருந்ததனால்) பெயர் சொல்லி அழைக்கிறார் ஆசிரியர்.  ஒவ்வொரு குழந்தையும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் .அதிசயக்கின்றனர் பெற்றோர்கள் , இப்படியான ஒரு ஆசிரியரா என்று. இவையெல்லாம் நடைமுறை யதார்த்தங்களைத் தாண்டி இருந்தாலும் இப்படி நடக்குமானால் அந்தக் கல்விமுறையில்  கற்றல் கற்பித்தல் வெகு சிறப்பாக இருக்கும் என்பதே இங்கு நமக்கு சொல்லும் செய்தியாக எடுத்துக் கொள்ளலாம்.

 குழந்தைகளிடையே , அவர்களது  உணர்வுபூர்வமான வாழ்க்கையில் மென்மை ,இரக்கம் ,கவனம் ,அனுதாபம் ,அன்பு, இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றை வளர்க்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த தளம் பள்ளியின் வகுப்பறைகளே , குறிப்பாக , தொடக்கப் பள்ளிகள் .  அச்செயலில் ஈடுபட்டு பணியாற்றும் மிக  முக்கியக்  கருவி ஆசிரியர் தான் என்பதை மையமாகக் கொண்டு  உரையாடுகிறார் இந்த நூலாசிரியர் பல்வேறு உதாரணங்களுடன் .

மதிப்பெண்கள் என்பவை  கால் உடைந்த போதனா முறையின் ஊன்றுகோல் ,ஆசிரியரின் அதிகாரத்தை நிலைநாட்டும் தடி., தடியையும் மதிப்பெண்களையும் விட்டுப் பிரிவது ஆசிரியர்களுக்கு எளிதல்ல ஏனெனில் எந்த ஒரு கல்வி போதனை மற்றும் குழந்தை வளர்ப்பு முறைக்கு ஆசிரியர் மிகவும் பழக்கப்பட்ட விட்டாரோ அந்தக் கல்வி முறையை மாற்றி அமைப்பது எளிதல்ல .ஆசிரியர் தன்னையும் தன் கண்ணோட்டங்களையும் கருத்துக்களையும் தன் அனுபவத்தையும்  மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் பொருள் . 

குடும்பத்திலும் பள்ளியிலும் குழந்தை வளர்ப்புத் தன்மைகள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கக்கூடாது குழந்தை வளர்ப்பிலும் அவர்களுக்கு கல்வி போதிப்பதில் பள்ளிதான் மையமாக விளங்கவேண்டும் குடும்ப வளர்ப்பின் விஷயத்தில் குறிப்பிட்ட கோரிக்கைகளை பெற்றோர்கள் முன்வைக்க பள்ளிக்கு உரிமையுண்டு என்று பெற்றோர் கூட்டத்தில் வெளிப்படுத்துகிறார் அமனஷ்வீலி.

 கல்வி கற்பிப்பது என்பது எளிய நிகழ்ச்சிப் போக்கல்ல , குழந்தையின் சக்தியையும் திறனையும் வளர்க்கும் பொருட்டு கடினமாகத் தான் இருக்க வேண்டும், புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்டு குழந்தை அஞ்சாவிட்டாலும் , பல காரணங்களினால் முக்கியமாக தனது கடமையைச் செய்யும்படி அக்குழந்தையை நிர்ப்பந்திப்பதன் காரணத்தினால்   அவர்களிடம் ஏற்படும் படிக்கும் ஆர்வம் மறைகிறது . குன்றாத கல்வி ஆர்வத்தை குழந்தையிடம் எப்படி ஊக்குவிப்பது எப்படி வளர்ப்பது சுய கல்வி பாதையில், அக்குழந்தை நடைபோட உதவ நாம் உதவலாம்  என்பதனை வரிக்குவரி மிக அழகாக இந்த நூலில் ஆசிரியர் விரிவாக ஆய்வை போல தொகுத்துக் கூறியுள்ளார்

 குழந்தையின் மீது மனிதாபிமான உறவைக் கொள்ள வேண்டுமெனில் ஒவ்வொரு குழந்தையின் எல்லையற்ற உள்ளாற்றலை நம்பவேண்டும். ஒரு ஆசிரியருக்கு உரித்தான பெரும் பொறுமை வேண்டும் குழந்தை மீது இரக்கம் காட்ட வேண்டும் குழந்தையின் மனதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் இவற்றையெல்லாம் நாம் சிந்தித்தால்,  இன்றைய கல்வி முறையில் இவை இருக்கின்றதா என்பதை நாம் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றினால் அதுவே இப்புத்தகத்தின் சாதனையாகக் கூடும்.

 குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்ற இந்த நூலை எந்த ஒரு வரியையும் விட்டு விடாமல் மிகக் கவனமாக நாம் வாசிக்க வேண்டிய புத்தகமாகப் பார்க்க முடிகிறது .ஒவ்வொரு மனிதருக்கும் பைபிளை போல திருக்குர்ஆனை போல பகவத்கீதையை போல மிக முக்கியமாக ஆசிரியர்களின் வேத நூலாகக் கூட இதை கருதலாம் . ஏனென்றால்  ஆசிரியர் எவ்வாறு குழந்தைகளை அணுகுவது கற்பிப்பது அவர்களை சமூகத்தின் மிகச் சிறந்த மனிதர்களாக உருவாக்குவது என்று பண்பட்ட ஒரு கல்வி முறையை நமக்கு மிகவும் அற்புதமாக வழங்கியுள்ளது இந்த நூல் ஆகவேதான். இவ்வாறு நான் கூறுகிறேன் மிக முக்கியமான புத்தகம்

1982 ஆம் ஆண்டில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தில்  தமிழ் மொழிபெயர்ப்பாக - குழந்தைகள் வாழ்க என்ற பெயரில் வெளிவந்த இந்த நூலை , இப்போது இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து பாரதி புத்தகாலயம் குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது .

செயல்வழி கணிதம் வியக்கவைக்கும் -கதைகளும் செயல்பாடுகளும்

செயல்வழி கணிதம் வியக்கவைக்கும் -
கதைகளும் செயல்பாடுகளும் 

 நூலாசிரியர் :அரவிந்த் குப்தா  
வரைகலை :ரேஷ்மா பார்வா
தமிழில் : மோகனப்பிரியா 
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு : ஏப்ரல் 2021
பக்கங்கள் :58
விலை : ரூ 70

 இந்தப் புத்தகத்தைக் பார்க்கும் பொழுது உங்களுக்கு மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். கணிதம் என்று பார்த்த உடனேயே இது குழந்தைகளுக்கானது , பள்ளியுடன் மட்டும் சம்மந்தப்பட்டது  என்று நினைக்கத் தேவையில்லை .
அவற்றைத் தாண்டி பெரியவர்கள் வரை  தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள சிந்திக்க வைக்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளன

 அரவிந்த் குப்தா: 1975 ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்ப கழகம் கான்பூரில் மின் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். அறிவியல் செயல்பாடுகள் குறித்து இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் 150 புத்தகங்களை இந்தி மொழியில் மொழிபெயர்த்துள்ளார் மேலும் தூர்தர்ஷனில் அறிவியல் செயல்பாடுகள் பற்றி 125 குறும்படங்களை வழங்கியுள்ளார். இவரின் முதல் புத்தகமான மேட்ச் ஸ்டிக் மாடல்ஸ் அண்ட்  அதர் சயின்ஸ்  எக்ஸ்பெரிமெண்ட்ஸ்  என்ற புத்தகம் 12 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு 50 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இவர் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையால் வழங்கப்பட்ட குழந்தைகளிடையே அறிவியலை பிரபலப்படுத்த தேசிய விருது 1988-ல் பெற்றுள்ளார் . இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் புகழ் பெற்ற மாணவர் விருது 2000 ஆண்டிலும் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது 2018 ஆண்டிலும் . பெற்றுள்ளார் இவர் தற்போது பூனாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான வானியல் வானியற்பியல் மையத்தில் பணிபுரிகிறார். பொம்மைகள் செய்வதிலும் அறிவியல் நூல்களை எழுதுவதிலும் ஈடுபாடு கொண்ட இவர் தனது படைப்புகளை  http:// arvindguptatoys.com
என்ற வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார்.

 ரேஷ்மா பார்வா: பூனாவிலுள்ள அபினவ் கலா மகாவித்யாலயா வில் வணிக கலை பயின்றவர் பகுதிநேர வரைகலை மற்றும் வடிவமைப்பாளரான இவர் குழந்தைகளுக்கான புத்தகங்கள் பலவற்றிற்கு விளக்கப் படங்களை வரைந்துள்ளார்

புத்தகத்தைக் குறித்து .....

 கார்ட்டூன் படங்களுடன் கூடிய கதைகளாகவும் புதிர்களாகவும் நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்புடைய  கணக்குப் புரிதல்களுடன் பல்வேறு செய்திகளையும் நமக்குத் தருகிறது இந்தப் புத்தகம். செயல்வழிக் கணிதம் என்று பெயருக்கு ஏற்பவே வாழ்க்கையில் செயல்களை அடிப்படையாகக் கொண்டு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நிகழ்விலும் கணக்கை சம்பந்தப்படுத்தி ஆங்கங்கே புதிர்களையும் கொடுத்து அதற்கான விடைகளும் கொடுத்திருக்கிறார்கள் புதிர்கள் என்பவை மிகச்சிலவே மற்றபடி காந்தியில்  ஆரம்பித்து ராமானுஜம் பாஸ்கரச்சாரியார், லீலாவதி என்று வரிசையாக கணக்கு சம்பந்தப்பட்ட மனிதர்களையும் அறிமுகப்படுத்தி வரலாறுகளையும் அறிமுகப்படுத்தி நிறைய செய்திகளை கொடுக்கின்றது இப்புத்தகத்தின் உள்ளடக்கம் .

 அரவிந்த் குப்தா ,பல்வேறு தலைப்புகளில் நம்மை பன்முக  சிந்தனைக்கு அழைத்துச் செல்கிறார்  , அவரது அறிவுக்கூர்மையும் குழந்தைகள் பால் இருக்கக்கூடிய அக்கறையும் கணக்கை எளிமையாக கற்றுக் கொடுக்க என்னவெல்லாம் ஆர்வமூட்ட செய்யலாம் என்ற சிந்தனையும் நாம் இங்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பொருளாக இருக்கின்றது.

ஏராளமான தலைப்புகளில் ஒவ்வொன்றையும் படங்களுடன் தந்துள்ளது வரவேற்கத்தக்கது . அட்டை வடிவமைப்பு மிகவும் பிரமாதமாக இருக்கிறது அந்த வண்ணங்களும் அட்டையில் போட்டு இருக்கக்கூடிய
வரைகலையும் நம்மை கணக்கின் பால் ஈர்க்கிறது. 

 உதாரணமாக , சதவீதம் என்று எழுதினால் அந்த தாவை  சதவீதக் குறியீடு வருவதுபோல் சிந்தித்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் பொழுது என்னுடைய ஆசிரியர் பயிற்சி தின நாட்கள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது அப்போது ஒப்படைப்புகள் தயார் செய்யும் பொழுது கணக்கு குறித்து நான் இவ்வாறு தான் செய்வேன் படங்களை கணக்குகளுடன் தொடர்புபடுத்தி கார்ட்டூன் படங்களை போல வரைதல் படைப்புகளின் அட்டைகளை  வடிவமைப்பு என  அவற்றை எனக்கு நினைவு படுத்துகின்றன.

 லீலாவதி செய்யுள் வடிவ கணிதம் குறித்து அறிமுகம் செய்கிறார்கள் அதேபோல கணிதமேதை ராமானுஜம் குறித்தும் .....6174 என்ற எண்  குறித்து நமக்கு செய்திகள் .... தமிழகத்தைச் சேர்ந்த கணிதத்தின் தூதுவராக பிகே ஸ்ரீனிவாசன் அவரை குறித்தான குறிப்புகள் இருக்கின்றன.

 காகித மடிப்புகளை குறித்து ஏராளமான பகுதிகள் இங்கு அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளன அவற்றை அடிப்படையாகக்கொண்டு கணக்கின் அடிப்படையில் செயல்பாடுகள் ,வடிவக் கணிதம் ,கோணங்கள் இவற்றை குறித்து குழந்தைகளுக்கும் அறிமுகம் செய்யலாம் பெரியவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் சிந்திக்கவும், புதியன படைக்கவும் செய்யக் கூடிய ஆற்றலை ஒரு நம்பிக்கையை கொடுக்கக்கூடிய புத்தகமாக பல்வேறு தலைப்புகளுடன் தரப்பட்டுள்ளது. 

 இவற்றை நாம் வெறும் புதிர்களாக கணக்குப் புதிர்கள் கொண்ட ஒரு புத்தகமாக பார்க்காமல் கணக்கை சிந்திக்க என்ன கணக்கின்பால் ஆர்வம் கொள்ள ,  கணக்கைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு புத்தகம் . முதலில் கணக்கு என்பது நம் வாழ்க்கையோடு இணைந்த ஒரு மொழியியல் . கூடுதல் சிறப்பு பக்கத்திற்கு பக்கம் படங்கள் தலைப்புக்கு ஏற்ற படங்கள் இணைத்து இருப்பதுதான் மிகவும் சுவாரசியமான ஒரு புத்தகம் . அத்தனை எளிமையாக இருக்கின்றது பக்கம் குறைவாக இருந்தாலும் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருக்கிறது இது ஒரு சின்ன சிக்கல் இன்னும் சற்று கூடுதலான அளவில் எழுத்துக்களை பெரிதாக கொடுத்திருக்கலாம் மற்றபடி ஒரு நல்ல புத்தகம் நன்றி

உமா