Thursday 18 March 2021

டாக்டர் ஜீவா ..குக்கூ உரையாடலில்

டாக்டர் ஜீவா .. 

நேற்றைய குக்கூ உரையாடலில் 


காஞ்சிக் கோவிலில் நான் வசிக்கும் போது என்னைச் சுற்றி வாழும் மக்கள், அதிகமாக  நாடும் மருத்துவமனை ஈரோடு டிரஸ்ட் ஹாஸ்பிடல் என்பதே. ஆனால் அது மட்டுமல்ல அது போன்று புற்றுநோய் மருத்துவமனை

களையும் பல மாநிலங்களில் உருவாக்கி அவற்றை மக்கள் நலனுக்காக அமைத்தவர் தான் டாக்டர் ஜீவா என்பதை சிவராஜ் வழியாக 

அறிந்த போது அவரது உரையாடலைக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 


75 வயதாகும் இவர் கல்வி , பொருளாதாரம் , மருத்துவம் , அரசியல் , சுற்றுச்சூழல் அனைத்தையும் காந்தியத்தின் மையமாகப் பார்ப்பதோடு பார்வையாளருக்குப் புரியும்படி 

தனது வாழ்க்கையின் வழியே எப்படி இது சாத்தியப்பட்டது என்பதை தனது செயல்பாடுகள் வழியே விளக்கம் தந்தார். "புகழ் பெற்றவர்கள் எல்லோரும் செயல்களை செய்து வெற்றி பெற்றவர் எனக் கொள்ள முடியாது , செயல்பாட்டாளர் அனைவரும் புகழ் பெற்று விடுவதில்லை " என்று பதிவு செய்கிறார் 


 காந்திய வழிகளைப் பின்பற்றி தான் மருத்துமனைகளை உருவாக்கியுள்ளார். அதற்கு முன் கல்விக் கூடங்களையும் , கல்லூரிகளையும் 

காந்திய வழியில் உருவாக்கிய அனுபவம் குறித்தும் பகிர்ந்தார். 


இரண்டு மணி நேரம் முழுவதும் அவர் பேசிய ஒவ்வொன்றிலும் காந்தியத்தை இணைத்துக் காட்டினார். காந்தியும் மார்க்ஸ்சும் இணையும் புள்ளியில் தான் இந்தியாவில் மாற்றங்கள் நிகழத் தொடங்குமிடம் என்று தான் நம்புவதாகக் குறிப்பிடுகிறார். 


ஒருவர் புகழ் பெறுவதற்கு முன்பேயே  மனிதர்களைத்  தேடிச் செல்வது  தன் வாழ்நாளில் தொடர் வழக்கம் என்று பல உதாரணங்களை முன் வைக்கிறார். உலகத் தலைவர்கள் வரிசையில் நேருவும் இந்திராவும் தவிர்க்க முடியாத பெருமை வாய்ந்தவர்கள் என்பதை இன்று மறந்த கதையை நினைவூட்டுகிறார். காந்தி கூறிய தன்னிறைவு பெற்ற  கிராமங்கள் தான் மாற்றங்களுக்கு வழி என்பதுடன் ,


அதற்கான மாற்றங்களைக் கொண்டு வரும் இளைஞர்கள் தற்போது உருவாகி வருவதையும் மகிழ்ச்சியாக உணர்வதாகக் கூறுகிறார். பல்வேறு நூல்களை மொழிபெயர்த்தது குறித்தும் ,ஏன் காந்தியின் சத்திய சோதனையைக் காட்டிலும் காந்தியின் சுயராஜ் புத்தகம் தனக்கு மிகப் பிடிக்கும் எனவும் தெளிவாக்கினார்.  காந்திய வழி புரட்சியும் போராட்டமும் மீண்டும் இங்கு தேவை , குட்டி குட்டி காந்திகளாக ஏராளமானோர் உருவாகி வருவதைப் பார்க்க முடிகிறது என்று அவர் பதிவு செய்த கருத்து மிக முக்கியமானதாகப்  பார்க்கிறேன். 


அதே போல் குக்கூ வின் இளைய தலைமுறை செயல்பாட்டாளர்களை மனதாரப் பாராட்டினார் . சின்னச் சின்ன மனிதர்கள் குக்கூ வின் மனிதர்கள் , அவர்களால் உலகை மாற்ற முடியும் என்றார். 


சிவராஜ் குறித்து பேசும் போது இந்தக் கல்வி முறையின் அபத்தத்தை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். ஆம் , 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்ற முத்திரையை சிவராஜ் க்கு இந்தக் கல்வி முறை வழங்கியிருந்தாலும் இன்று மிகப் பெரிய நம்பிக்கையுடன் சமூக மாற்றத்தைக் கையிலெடுக்கும் சின்னச் சின்ன மனிதர்களை இணைத்து மிகப் பெரிய மாற்றத்திற்கான ரசா வாதம் செய்ய  சிவராஜால் சாத்தியமாயிருக்கிறது. கல்லூரி மாணவர்களிடம் உரையாட ஒரு முறை சிவராஜ் தயங்கிய போது டாக்டர் ஜீவா சிவராஜைத் திட்டி , உன்னால் தான் இவ்வளவும் செய்ய முடிகிறது. M.phil முதலான பல பட்டங்களையும் பெற்று அரங்கத்துக்குள் அமர்ந்திருக்கும் இவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆகவே வந்து பேசு என சிவராஜின் தயக்கத்தை உடைத்திருக்கிறார். 


இவரது பேச்சு கேட்கும் அனைவரையும் காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டு அடுத்த அடியை பலமாக பாலமாக எடுத்து வைப்பர் என்பது நிதர்சனம். 



No comments:

Post a Comment