Wednesday 17 March 2021

கல்விச் சிக்கல்கள் - தீர்வை நோக்கி முன்னுரை

கல்வி



கல்வியே அறிவாயுதம் 


கல்வியே பேராயுதம் 


கல்வியில் சீர்திருத்தம் 


பள்ளிக் கல்வியின் யதார்த்தம் 


கல்வியே சமூக மாற்றத்திற்கான  கருவி 


பள்ளிக் கல்வியின் பரிமாணங்கள் 


தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் நிலை 


நமது கல்வி 


நமது கல்வி நமது பிரச்சனை 


முன்னுரை 


ஒவ்வொரு நூலுக்கும் ஒரு பின்னணி இருக்கும். ஆனால் இன்று உங்கள் கைகளை வந்தடைந்த இப்புத்தகத்திற்கு எந்தப் பின்னணியும் கிடையாது. ஒரு ஆசிரியராக எனது இருபதாண்டு காலத்தில் , தொடர்ந்து கல்வி தளத்தில் இயங்கிக் கொண்டு இருப்பதால்பள்ளி அமைப்பில்   கல்வி முறையில்   அன்றாடம் நான் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறித்து, 3 ஆண்டுகளுக்கு முன்பு  முகநூல் தளத்தில் எழுத ஆரம்பித்திருந்தேன்.


ஒரு முறை இந்து காமதேனு இதழின் பொறுப்பாசிரியர்  குள சண்முகசுந்தரம் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார் , அப்போது  கல்விச் சூழலில் எனது ஆதங்கங்களை அவரிடம் கொட்டித் தீர்க்க , அவர் இந்து - காமதேனு இதழுக்கு ஒரு கட்டுரை அனுப்புங்களேன் என்றார். ஏற்கனவே 4 வருடங்கள் முன்பு ,தமிழ் - இந்துவில் வெற்றிக் கொடி பகுதியில்  சிறந்த அரசுப் பள்ளிகள் குறித்து அறிமுகம் செய்வதில் அவருடன் பயணித்திருப்பதால் , அவர் கூறிய உடன்,  குறி வைக்கப்படும் அரசுப் பள்ளிகள் என்ற தலைப்பில் 2019 ஆகஸ்ட் மாதம் ஒரு கட்டுரையை அவருக்கு அனுப்பினேன். நல்ல வரவேற்பைப் பெற்றது கட்டுரை . அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் கல்வி குறித்த சமகாலப் பிரச்சனைகளைக் குறித்த கட்டுரைகளை  காமதேனுவிற்காக அவர் கேட்க ஆரம்பித்து பிப்ரவரி  மாதம் வரை தொடர்ந்து  28 வாரங்கள் எனது கட்டுரைகளைப் பிரசுரம் செய்தனர். கட்டுரைகள் எழுதும் போது வாசகர் விரும்பும் வகையில் எளிமையாக எழுத வேண்டும் என பல முறை தொடர்பு கொண்டு பயிற்றுவித்தவர் காமதேனு இதழின்  தொகுப்பாசிரியரான   

வெ. சந்திரமோகன்  அவர்கள். இப்படித் தான் இந்தக் கட்டுரைகள் உருவாகின . எனவே முதல் முதலில் என்னை எழுத வைத்த அவ்விருவருக்கும்  நன்றி கூறுகிறேன். 


என்னைச் சுற்றி வாழும் சமூகம் வியாபாரமாக மாறிப் போன கல்வியை நாடி தோற்றுப் போவதைக் காணச் சகியாமல் தான் பேச , எழுத ஆரம்பித்தேன். ஒரு புறம் கல்விக்காக இயங்கும் மனிதர்கள் அரசுப் பள்ளிகளின் எதார்த்தத்தைப்  புரிந்து கொள்ளாமலேயே கல்விக் கொள்கைகளை , அரசை  குற்றவாளிகளாக சுட்டி வரும் போக்கையும் கவனித்தேன். ஆனால் கல்விக் கூடங்களின்  கள யதார்த்தத்திலும் இவர்கள் கவனம் கொண்டால் தான் சரியான தீர்வை நோக்கி நகர முடியும் என்பதற்காகவே தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். அதன் பிறகு புதிய ஆசிரியன் இதழில் 2 வருடங்களாக எழுதி வருகிறேன்  , நமது மண்வாசம் , குங்குமம் , மகளிர் எழுச்சி , 

காப்பிடல் , நக்கீரன் ,குமுதம் ரிப்போர்ட்டர் என தொடர்ந்து பல மாத இதழ்கள் , வார இதழ்கள் என அனைத்தும் அவர்களாகவே கேட்டு கல்வி குறித்த எனது கட்டுரைகளைப் பிரசுரம் செய்தனர். அந்த வகையில் சுவடு மின்னிதழில் 8 மாத காலமாகவும்  தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் கடந்த 6 மாதங்களாகவும்  எழுதி வருகிறேன். இங்கு நீங்கள் அனைவரும் கவனிக்க வேண்டியது நான் எழுத்தாளர் அல்ல. ஆனால் சமூக மாற்றத்திற்கான கல்வியை மட்டுமாவது நாம் சரியாகக் கையாள அனைவருக்கும் அது குறித்த புரிதல் வேண்டும் என்பதால் வேறு வழியின்றி எழுதி வருகிறேன். எனது  ஆசிரியர் நட்பு வட்டம் மிகப் பெரியது. ஒவ்வொரு கட்டுரையைப் படிப்பவரும் எங்கள் மனதில் இருப்பதை கூறி விட்டீர்கள் எனச் சொல்லி ஊக்கப்படுத்தி வருகின்றனர். நான் சந்தித்த பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் , கற்பித்தல் தாண்டிய பல்வேறு கல்வி சார்ந்த பணிகள் , லட்டச்கணக்கான மாணவர்கள் , அப்பாவி பெற்றோர்கள் என இந்த சமூகம் தான் நான் எழுதுவதற்கான இடத்தையும் பொருண்மையையும் கொடுத்திருக்கின்றனர். 


எழுதும் போது ஏராளமான சவால்களையும் தான் சந்திக்க வேண்டி இருக்கின்றது. உதாரணமாக ஒரு சம்பவம் , ஒரு குறிப்பிட்ட கட்டுரையை எழுதும் போது எதார்த்தத்தை  எழுதியதன் விளைவு, எந்தத் தளத்தில் இயங்கி ஒரு இயக்கத்தை கல்விக்காக தமிழகம் முழுக்க எடுத்துச் சென்றேனோ அங்கு எதிர்ப்பு வந்தது. ஆனால் என்னால் எழுதுவதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்பதே உண்மை. ஆகவே இயக்கத்தை விட்டே வெளியேறினேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 


தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும் அந்த அமைப்பின் தலைவருமான ஐயா கி.வெங்கட்ராமன் அவர்கள் 20 நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு , காமதேனுவில், தமிழ்த் தேசியக் கண்ணோட்டத்தில்  வெளியான உங்கள் கட்டுரைகளையும் , தமிழர் கண்ணோட்டம் இதழிலும் வெளியான கட்டுரைகளையும்  தொகுத்து  இந்த வருடம் வரும் புத்தகத் திருவிழாவில் நூலாக வெளியிடலாம் என்றிருக்கிறோம் என எனது சம்மதத்தைக் கேட்க ,

 நான் குள.சண்முக சுந்தரம் அவர்களிடம் மட்டும் ஒப்புதல் கேட்டேன். ஏனெனில் இந்து வெளியிட்ட வாரப் பத்திரிக்கையில் அவை  வெளியிடப்பட்டிருந்ததால் . அவரும் தாராளமாக வெளியிடட்டும் என்றார். இப்படி  புத்தகமாக்கி அடையாளப் படுத்தியது சூழல். ஐயா கி.  வெங்கட்ராமன் அவர்களுக்கும் வெளியிடும் பன்மை வெளிக்கும் அன்புடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயணத்தில் என்னுடன் இணைந்த அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் , கல்வித்துறை , மாணவர்கள் , பெற்றோர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கொள்கிறேன். நேர்மறையாக என்னை ஊக்குவித்த நண்பர்கள் , எதிர்மறையாக எனது எழுத்தை விமர்சித்த நண்பர்கள் என அனைவருக்கும் அன்பு .


சமூகத்தில் எழுத்தின் வழி போராட்டத்திற்கு  அடிப்படை தைரியம் வீட்டில் என்னை அதற்கு  தயார் செய்த சூழல் தான். அப்படியான சூழலைத் தந்த எனது குடும்பத்திற்கும், எனது கணவர் கோபால கிருஷ்ணன் , மகள் யாழினி , மகன் கனிஷ்கர் ஆகிய அனைவருக்கும்  எனது அன்பு. 


இந்தப் புத்தகம் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைத் தர வேண்டும் என்று தேடல் உள்ள  அனைத்து பெற்றோர்களுக்கும் , கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்தி வரும் ஆசிரியர்களுக்கும் , எதிர்காலத்தில் ஆசிரியர்களாக வகுப்பறைக்குள் கோலோச்சப் போகும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும்  , அவர்களை உருவாக்கும் கல்விக் கூடங்களுக்கும் சென்று சேர வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து மாநில முதன்மைப் பிரிவு அலுவலகம் வரை சமூகப் பணிகளில் தங்களை இணைத்து பணிபுரியும் அதிகாரத்தில் இருப்பவர்களும் , சமூக மாற்றத்திற்காக பல தளங்களில்  இயங்கும்

  கள செயல்பாட்டாளர்களும் , வாசிக்க வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன். அப்போதுதான் கல்விக்குள் சீர்திருத்தம் உருவாக்க சூழலை அமைக்க இயலும்.மெக்காலே கல்வி முறையைப் பற்றிக் குறைகள் கூறும் நாம் அதை மாற்றுவதற்கான உத்திகளை நோக்கிப் பயணிக்கவும் தயாராக வேண்டும் . வாசித்து விட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள் .


உமா

9976986098

uma2015scert@gmail.com








 

No comments:

Post a Comment