Thursday 26 March 2020

துர்லக்

துர்லக் 

இது செக்கோஸ்லாவேக்கியக்  கதை , சர்வதேசக் கதை மலர் 10 என்ற எண் கொண்டு  எட்டணா வைத் தாங்கி 1940களில் வந்த புத்தகம் இது .இது ஒரு  பழைய நூலகத்திலிருந்து ஏலத்தின்  வழியாக நான் பெற்றேன் அதில் வேறு எந்த  பதிப்பித்தத் தகவல்களும்  இல்லை .ஆனால் நூலகர் கையொப்பமிட்டு இருக்கிறார் 21 .4 48 என்று அதாவது 1948ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அப்போது இந்த புத்தகம் அதற்கு முன் வந்ததா என்ன என்று எனக்கு தெரியவில்லை . இதை எழுதியவர் ஹிரண் மய கோஷால் என்பவர், இதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் த. நா குமாரசுவாமி,
என்பவர் .திருவல்லிக்கேணியில் ஜோதி நிலையம் என்ற பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது அச்சுக்கூடத்தின்  பெயர்கூட கபீர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்வதேச கதை மலர் 10 என்று எண்ணிட்டு  இது முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது.

நூலாசிரியர் குறித்து ..

டாக்டர் ஹிரண்ய கோஷால் இவர் நமது இந்திய நாட்டை சேர்ந்தவர் ,போலந்தில் வார்செள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்திருக்கிறார். கல்கத்தாவில்  1908 ஆம் ஆண்டு பிஏ படித்து முடித்து ,மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருக்கிறார். போலந்து பெண்மணியை மனைவியாகப் பெற்றுள்ளார்.  செஹோவைப் பற்றி ஒரு ஆராய்ச்சி நூல் எழுதி இருக்கின்றார். அதற்கு வார்செள கழகத்தார் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளனர் .

நூல் பற்றி ….

இது பிறநாட்டு வாழ்க்கைச் சித்திரத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட
மூலக்கதை. பிரச்சினைகள் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.காடுகளை அழிப்பதும் மரங்களை வெட்டுவதும் அங்குள்ள  வனத்துறையின் பணியாக இருக்கின்றது. ஆனால் வனத்திலேயே வாழ்ந்த மனிதர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை அவர்களில் துர்லக் என்ற  கதாபாத்திரமான ஒருவன் ,  வனத்துறைக்கு அதிகாரியாக வரும்  ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையும் குடும்பத்துடன் அழிக்கும் நிலையில்,  புதிதாக ஒரு குடும்பம் வனத்துறை அதிகாரியாக வருகிறது .

அவர்களுக்கும் துர்லக் என்ற கதாபாத்திரத்திற்கும் இடையேயான போராட்டம்தான்  இந்த கதை.  நாம் இங்கு கவனிக்கவேண்டியது அங்குள்ள  இயற்கை சூழல், மரங்களின் நிறைய வகைகள் , செகோஸ்லாவேகியா வினுடைய மொழி, அங்கு வாழும் மக்கள்  உணவு , மரங்களின் பெயர்கள் இப்படி பலவாறு புதியதாக கொடுக்கப்
பட்டுள்ளது .மேலும் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வந்த புத்தகமாக இருப்பதால் , இன்றைய தமிழ்ச் சொற்களைப் போல் பெரும்பாலும் இல்லாமல் வித்தியாசமான சொற்கள் இடம்பெற்றுள்ளன.

சில இடங்களில் செக்கோஸ்லாவேக்கியா மொழியின் சொற்கள் இடம் பெற்றுள்ளன. மற்றபடி வனத்துறை அதிகாரி உள்ளிட்ட அவரது குடும்பம், பணியாள், பயணி, துர்லக் அனைவரும் பொதுவாக மனிதரின் மன இயல்புகள் உடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர் .

உமா

Wednesday 25 March 2020

தசரத் தேவ் - ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன்

ஆதிவாசிகளின்_ஆதர்ச_நாயகன்_தசரத்_தேவ்

வீ. பா. கணேசன் எழுதி 2016  இல் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை,  வாசிக்க வாசிக்க இந்தியாவின் கிழக்கு மூலையில் ஒரு சின்ன மாநிலமாக இருந்த திரிபுரா ஏன் இன்றளவும் தனித்துவம் பெற்று சிறந்த   மாநிலமாக திகழ்கிறது, என்பதற்கான பதில் கிடைக்கிறது அதோடு ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் என்று கூறப்படும் அளவிற்கு தசரத் தேவ் என்ன செய்தார் என்பதற்கும் வரலாற்றுத் தகவல்கள் நமக்கு நிறைய கிடைக்கின்றன.  .கல்வியில் முதன்மை பெற்ற மாநிலமாக திரிபுரா  இருந்துவரும் நிலைக்கு என்ன காரணம், 1947 இல் நமக்கு சுதந்திரம் கிடைத்தாலும் 1949 இல்தான் திரிபுரா இந்தியாவுடன் இணைந்துள்ளது.
இந்த மலையைச் சுற்றிலும் வாழ்ந்து  வரும்  ஆதிவாசிகளின்  வாழ்வில் மறுமலர்ச்சி உருவாகக் காரணமாக இருந்த தசரத் தேவ் பர்மா எவ்வாறு தசரத் தேவ் என்று மாற்றம் பெற்றார் என்ற வரலாறு இடம்பெற்றுள்ளது  .

நமது இந்தியாவுடன் இணையும் முன்பு ஆதிவாசி இனத்தைச்சேர்ந்த அரசரின் ஆளுகையில் இருந்த இந்த திரிபுரா எத்தகைய அடிமைத்தனத்திலிருந்து அங்கு இருக்கக்கூடிய மக்கள் ஒருவரும் கல்வி கற்பதற்கு அனுமதிக்க படாமலேயே இருந்திருக்கிறார்கள், இந்த நிலையை மாற்றி திரிபுராவை எவ்வாறு கல்வியில் முதன்மை மாநிலமாகக் கொண்டுவந்தார் தசரத் தேவ் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சுருக்கம் என்று கொள்ளலாம் .

ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து வசதியில்லாத பெற்றோரால் காலம் தாழ்ந்து பள்ளியில் சேர்ந்து ஆரம்பப் பள்ளியில் படித்தது கடினப்பட்டு தனது பள்ளிக்கல்வியை முடிக்கிறார் தசரத் தேவ் . திரிபுராவில்  கல்லூரி எதுவும் இல்லாத நிலையில் கிழக்கு வங்காளத்தின் சில்கட் மாவட்டத்தில் ஹபி கன்ச்  பிருந்தாவன் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்து, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க சேர்கிறார் தனது படிப்பை பாதியில் விட்டு எவ்வாறு அவர்  ஆதிவாசிகளின் கல்விக்காக உழைக்கிறார் என்பதை கண் முன்னே களமாடத் தருகிறது புத்தகம் .

கிராமங்களிலும் மலைப் பகுதிகளிலும் வாழும் ஆதிவாசி மக்களுடைய கல்வியை பரப்புவதை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓர் அமைப்பு உருவாகி 1945இல் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இதன் (ஜனசக்தி ) உதவித் தலைவராக தசரத் நியமிக்கப்படுகிறார். முதலில் 11 ஆதிவாசி இளைஞர்கள் மட்டுமே உறுப்பினராக இருக்கின்றனர் பிறகு 400 இடங்களில் பள்ளிகளை மாநிலம் முழுவதும் துவக்குகிறார்கள். ஆதிவாசி மாணவர்களே தான் இந்த பள்ளிகளில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் அங்கிருந்து துவங்குகிறது தசரத் தேவ் வர்மாவின் மக்களுக்கான பயணம் .
400 பள்ளிகளுக்கும் அங்கீகாரம் கேட்டு அப்போதைய  கல்வி அமைச்சராக இருந்த பிரிட்டிஷ்காரர் ப்ரவுனிடம் கோரிக்கை வைக்க , அவரோ நேரடியாக ஆய்வு செய்து 300 பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறார்.

ஆனால் ஆதிவாசிகளின்  அரசராக இருந்தவர் அந்த  மக்களுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்று திட்டமிட்டு வந்து இருந்தபடியால்   அங்கீகாரம் பெற்ற 300 பள்ளிகள் மட்டுமன்றி மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்ட 400 பள்ளிகளையும் ஒழித்துக் கட்டுவதற்காக பல்வேறு அராஜக முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இப்படியான நெருக்கடிகளில் தொடர்ந்து நிகழும் நிறைய போராட்டங்களை சந்தித்து தலைமறைவாக இருக்கிறார் தசரத் தேவ் .இந்த காலகட்டத்தில் தசரத் தேவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுடன் அறிமுகம் கிடைத்து தலைமறைவான  காலத்தில் ஆதிவாசி கிராமங்களில் மக்களுக்கு மார்க்சியம் குறித்த வகுப்புகள் எடுக்கிறார் .

இப்படியாக1948 முதல் 1998 வரை ஆதிவாசி மக்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார் தசரத்  தேவ் . இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இன்றைய சிஏஏ பிரச்சினைகள் குறித்த ஆரம்ப புள்ளிகளும் நமக்கு புரிகிறது .ஆயுதம் தாங்கிய போராட்டம் கொரில்லா படைகள் எல்லாவற்றிற்கும் இவர் தலைவராக இருந்து ஆதிவாசி மக்களின்  வாழ்வாதாரத்திற்காகப் போராடியிருக்கிறார் .1952 ஆம் ஆண்டு முதல் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தசரத் தேவ் தொடர்ந்து 1957 , 1962, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று மக்களவையில் திரிபுரா மாநிலம் சந்தித்து வந்த பல்வேறு பிரச்சினைகளைப் பற்றியும் அந்த மாநிலத்தின் பூர்வகுடி மக்கள் தங்கள் தனித்தன்மையை பாதுகாக்க எதிர்கொண்டுவரும் நிலை பற்றியும் எடுத்துக்கூறி அவர்களுக்குத் துணைநின்று வாழ்ந்திருக்கிறார் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசும் ஆதிவாசிகளின் நிலங்களை சட்டவிரோதமாக கைப்பற்ற வங்காளிகள் தூண்டிவிட்ட கதையும் மற்றும் சில வஞ்சனைகள் குறித்தும் ஆங்காங்கே கோடிட்டு காட்டப்பட்டுள்ளது .
திரிபுராவின் பூர்வக் குடிகளாக இருந்த ஆதிவாசிகள் சிறுபான்மையினராக மாறியதும் வங்காளிகள் பெரும்பான்மையினராக மாறியதும்,  பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கி இருந்த ஆதிவாசிகள் அனைத்து வகையிலும் ஏற்கனவே முன்னேற்றமடைந்த வங்காளிகளுடன் சமநிலையற்ற அவர்கள் போட்டியிடும் சூழல் உருவானது என பல வரலாற்றுத் தகவல்களை இந்த புத்தகம் நமக்கு தருகிறது. தசரத் தேவை கொள்வதற்காக நிறைய முயற்சிகளை மேற்கொள்கிறது அப்போதைய எதிரணியினரின் பகைமை .

1993 இல் தசரத் தேவ் திரிபுரா மாநிலத்தின்  முதல்வராகிறார்.   இன்றும் இந்தியாவின் விடியலை நோக்கி போராடி வரும் எண்ணற்ற உழைப்பாளி மக்களின் மனங்களிலும் தசரத் தேவ்  நிலைத்து நிற்கிறார். வரலாற்று சிறப்புமிக்க ஜன சிக்ஷா இயக்கத்தின் நிறுவனராக ,நிலப்பிரபுத்துவ அரசாட்சியை எதிர்த்துப் போராடும் மனிதராக , அந்த மாநிலத்தில் ஜனநாயக ரீதியான செயல்பாட்டை நிறுவுவதற்காக ஈடு இணையற்ற போராட்டத்தை நடத்திய தலைமை பல பரிமாணங்களில் எல்லோருக்கும் உதாரணமாக திகழும் தசரத் தேவ் குறித்து கண்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்

புத்தகப் பக்கங்கள் : 30 விலை : ரூ 15 . பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் .

Monday 16 March 2020

காம்ரேட் அம்மா

காம்ரேட் அம்மா 

மகளின் பார்வையில் மைதிலி சிவராமன் 

நூலாசிரியர் : கல்பனா கருணாகரன் - இவர் தாயின் அரசியலையேக் கேட்டு , பார்த்து , சுவாசித்து வளர்ந்துள்ளார் , சுதந்திர உணர்வும் ,உரக்கப் பேசும் துணிவும் கொண்டவராக வளர்ந்துள்ளார் . சிறந்த தமிழ் ஆங்கிலப் பேச்சாளர் அதோடு சமூக செயல்பாட்டாளர் பயிற்சியாளர்  , ஐஐடியில் பேராசிரியராகத் திகழ்கிறார். 

தனது அம்மாவைப் பற்றி ஒரு மகள் எழுதிய புத்தகப் பெட்டகம் தான் காம்ரேட் அம்மா . எந்த ஒரு மகளுக்கும் கிடைக்காத அம்மா , அதே போல எந்த அம்மாவாவது இப்படியான மகளைப் பெற்றுள்ளாரா என்பதும் நமக்கு மில்லியன் டாலர் கேள்வி தான் .

முதலில் என்னுரை, அதில் கல்பனா அவர்கள் இப்புத்தகத்தை எப்படி அச்சுக்கு வந்தது என மிகச் சுருக்கமாகப் பகிர்ந்துள்ளார். என் அம்மா ஒரு அசாதாரண மனுசி என்கிறார். எவ்வளவு பெரிய உண்மை என்பது இந்த 64 பக்கம் கொண்ட புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொரு வரிகளிலும் புலப்படுகிறது .

பேராசி வசந்திதேவி , மகளின் நினைவோவியத்திற்கு தோழியின் அணிந்துரை என்ற தலைப்பில் , கனக்கும் மனதுடன் எழுதுகிறேன் என 61 ஆண்டுகளாகத் தனது  தோழியாக உள்ள காம்ரேட் மைதிலி குறித்து எழுதிய பகிர்வு நமது மனத்தையும் கனக்க வைக்கிறது. லட்சியங்களின் சிகரம் அவர் என்கிறார் . சராசரிப் பெண்ணாக , சராசரி மனைவியாக , சராசரித் தாயாக எவ்வாறு இருக்க முடியும் என்று கேட்கிறார் . மைதிலி அவர்களின் வாழ்க்கைப் பரிணாமத்தை தனது கல்லூரி காலத்தில் இருந்தே கவனித்து வந்ததால் மிக அழகாகப் பகுத்துக் கூற முடிகிறது இவரால் . விடுதலை இயக்கங்களின் தாக்குதலால் தன்னைப் போராளியாக மாற்றம் பெற்றிருக்கிறாரா மைதிலி சிவராமன் என்பதையும் நமக்குள் சிந்திக்கக் கொடுத்துள்ளார். காம்ரேட் மைதிலி அரசியலுக்குள் வந்த வரலாறு முதல் அவரது கணவர் கருணாகரன் குறித்தும் மகள் கல்பனா குறித்தும் இந்த உரையில் எழுதியுள்ளார் வசந்தி தேவி. மிகப் பெரிய ஆளுமையான இவரது உரையைப் படிக்கும் போது மைதிலி அவர்கள் பல மடங்கு இவரை விட ஆளுமை மிகுந்து சமூகத்தில் பல நிலைகளில் போராட்டத்   தலைமையாக விளங்கி இருப்பது புரிகிறது. 

தொடரும் கல்பனா கருணாகரன் அவர்களது எழுத்தில் காம்ரெட் அம்மா  நமது மனம் முழுக்க ஆட்கொள்கிறார் . நெகிழ்ந்து நெகிழ்ந்து பக்கங்களைப் புரட்டுகிறேன். .அவ்வளவு அடர்த்தியான வாழ்க்கை, அவரை மாபெரும் பணிகளைக் கையிலெடுக்க வழி அமைத்திருக்கிறது  . 

தனது குழந்தைப் பருவத்தில் துவங்கி இன்று வரை அம்மா எப்படிப் பட்ட காம்ரேட் ஆக நிறைந்து நிற்கிறார் என்பதை முழு உணர்வு பூர்வமாக, படிப்பவர் மனம் முழுவதும் ஆட்கொள்ளும் படி , தெளிவான கருத்துகளாக எளிமையான மொழியில் அழுத்தமாகப் பதிவு செய்கிறார் கல்பனா 

வீட்டில் கடைசிக் குழந்தையான மைதிலி அடிக்கடி உடல் நலமில்லாமல் போனதால் , 9 வயது வரை  வீட்டில் அவரது அம்மாவிடம் பாடம் கற்று நேரடியாக ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இன்றைய எக்மோர் பிரசிடென்சியில தான் பள்ளிப் படிப்பு , எத்திராஜில் இன்டர் மீடியேட் , பிரசிடென்சி கல்லூரியில் BA பொலிடிகல் சயின்ஸ் என காலம் நகர்கிறது . இவரது அக்காவின்  திருமணத்தால் நாட்டியக் கலைஞராக இருந்தும் திறமைகளை வெளிப்படுத்த இயலாமல் வீட்டுடன் இருந்து விட்டதால் இவரைப் படிக்க வைக்க முடிவெடுத்தக் குடும்பத்தை நாம் மிகவும் பாராட்டியே ஆக வேண்டும் .

 டெல்லியில் முதுகலை டிப்லமோ படிக்கும் போது ஜவஹர்லால் நேருவை சந்தித்துள்ளார் ,  நியூயார்க்கில் MA என படிப்புத் தளம் விரிய , அம்மாநில அரசின் நிதிப் பிரிவில் பணியாற்றி , ஐ.நா .சபையின் இந்தியத் தூதரகத்திலும் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி அனுபவங்களால் நிறைந்து இருக்கிறார். 

வியட்நாம் போருக்கு எதிரான போராட்டங்களில்  மாணவர் பங்கு , கறுப்பு இன மக்களின் அடிப்படை உரிமைப் போராட்டம் , மார்ட்டின் லூதர் கிங் ,மால்கம் எக்ஸ் போன்றோரின் பாதிப்பால் 1960 களில் கம்யூனிஸ்ட்டாக மைதிலி சிவராமன் மாறிய காலகட்டம் என்கிறார் .

ஒன்றா இரண்டா ஏகப்பட்ட அனுபவங்களுடன் 1968 இல் இந்தியா திரும்பியவரை ஏன் அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவில்லை எனக் கேட்க , அது பல சிறிய நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதை நேரடியாகப்  பார்த்த காரணத்தைப் பதிவு செய்கிறார். 

இந்தியா வந்த காம்ரேட் மைதிலி , பீஹாரில் வினோபா பாவே ஆசிரமத்திற்குச் சென்று சில வாரங்கள் தங்கியதும் , கீழவெண்மணி கொடுமையில் அதிர்ச்சியுற்று நேரடியாக அங்கு சென்ற போது நமது கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தான் அங்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார் . ஏற்கனவே காந்தி - வினோபா வழித்தடங்களைப் பின்பற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களும் காம்ரேட் மைதிலி அவர்களின் வாழ்வில் சரியான சந்தர்ப்பத்தில் சந்தித்தது குறித்து எனக்கு பெரு மகிழ்ச்சி . சமீபத்தில் தான் அவரது வாழ்க்கை வரலாறான சுதந்திரத்தின் நிறம் படித்தது , சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றிணையும் தருணங்கள் நமக்கு மகிழ்வைத் தானே தருகிறது. 

கீழவெண்மணியின் படுகொலை சம்பவங்கள் தான் இவரை அடிப்படை சமூக - பொருளாதார - அரசியல் மாற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பல மடங்கு உறுதிப்படுத்தியதாகக் கூறியுள்ளார். அதன் பிறகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார் .அதன் தொடர்ச்சியாக தொழிற் சங்க நடவடிக்கைகளிலும் (CITU) , பிறகு மாதர் சங்கத்திலும் தீவிர ஈடுபாடு காட்டியுள்ளார். 

இப்படியான பணிகளுடன் வீட்டில்  காம்ரேட் அம்மா தனது தோழர்களுடன் இரவு வரை விவாதிப்பது , வெளியில் சென்று மக்களிடம் பேசுவது , போராட்டத்தில் ஈடுபடுவது மக்களை அரசியல் படுத்துவது என தொடர் உழைப்புகளை இந்தப் புத்தகத்தின் பல பக்கங்களில்  சிறு சிறு நிகழ்வுகளாகக் காட்சிப்படுத்துகிறார் கல்பனா .

அஜிதா என்பவர் சித்ரா தேவியாக மாறிய பிறகு  கல்பனாவாக பெயர் மாற்றம் பெற்ற வரலாறு கூட சுவாரஸ்யமாகத் தரப்பட்டுள்ளது. 

நிறைய செய்திகள் காம்ரேட் அம்மாவின் வாழ்க்கையில் நமக்காக இருப்பதை உணர முடிகிறது. கல்பனா வளர வளர அவரது அம்மாவின் சமூக வாழ்க்கையின் போக்கை அதிகமாக உள்வாங்குகிற பாங்கை வெகு அழகாகக் கொடுத்துள்ளார் கல்பனா . 

The radical review என்ற பத்திரிகை நடத்திய காம்ரேட் அம்மா , அதன் வழியாக வந்த கருணாகரன் அவர்களை தனது இணையராகத் தேர்வு செய்தது , இருவருக்குமான புரிதல் என நாம் அறிந்து கொண்டு ஆச்சர்யப்படவும் புரிந்து கொள்ளவும் நிறைய கதைகள் தந்துள்ளார் -

காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் , என்.ராம் , காம்ரேட் மைதிலி ஆகியோர் அமெரிக்காவில் ஒரே காலத்தில் கல்லூரி மாணவர்களாகவும் நண்பர்களாகவும் இருந்த தகவல்கள் கூட நம்மை சிந்திக்க வைக்கின்றன. 

எமர்ஜென்சி நாட்களில் கல்பனாவை உறவினர் பாதுகாப்பில் விட்டுச் செல்வதும் எவருக்கும் தெரியாமல் பல ஊர்களில் பதுங்கி வாழ்ந்து இச் சமூகத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுத்த நிகழ்வுகளும் நமக்கு மேலும் அவரைப் பற்றி அறிய ஆர்வம் உண்டாகக் காரணங்களாகின்றன. 

காம்ரேட் அம்மாவின் நெருங்கிய நண்பராக தோழர் வி.பி. சிந்தன் இருந்ததும் அவர் தான் காம்ரேட் மைதிலியை கட்சிக்குள் கொண்டு வர அதிக பங்கெடுத்தவர் என்பதும் 1987 இல் அவர் 

 மாரடைப்பால் இறந்து விடும் சூழலும் இப்புத்தகத்தில் பதிவாகியிள்ளது .

கல்பனா வளர வளர அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போவதும் , மன அழுத்தம் குறித்த அம்மாவின் பிரச்சனைகள் என வாழ்வின் போக்கு மாறிவிடுகிறது. 2002 இல் விருதுநகரில் நடந்த மாதர் சங்க மாநாட்டில் இவர் செயல் தலைவர் பதவியிலிருந்து விலகிய நிலையை கல்பனாவால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகிறது .

காம்ரேட் அம்மா அல்சைமர் நோயால் 2007 க்குப் பிறகு பாதிக்கப்படுகிறார். 2010 இல் காம்ரேட்  அம்மா தனது பாட்டி சுப்புலட்சுமி குறித்து "ஒரு வாழ்க்கையின் துகள் " என்ற புத்தகத்தை எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நிகழ்வும் தரப்பட்டுள்ளது.

அவர் எழுத்தும் பேச்சும் செயலும் நிரம்பிய ஒளி படைத்த வீரப் பெண்ணாக சமூகத்தின் விடுதலைக்காக உழைத்த புடம் போட்ட தங்கமாக வாழ்ந்து வந்த அவர் இன்று படுத்த படுக்கையாக இருப்பது குறித்து தெரியாத நமக்கே தாங்க இயலவில்லை என்றால் நண்பர்கள் , உறவுகள் , மகள் , கணவர் இவர்களின் நிலை என்ன என நமக்குள் உரையாடலாம். 

இறுதி பக்கங்களில் அவர் கட்சி குறித்த செய்திகள் , அவற்றின் ரகசியம் காக்கப்பட்டது இப்படியும் கூறப்பட்டுள்ளது .

குடும்பம் , குழந்தை , இயக்கம் , பொதுவெளி என்பதற்கெல்லாம்  பொதுவாக மனிதர் உருவாக்கும் சுவர்களைத் தகர்த்தெறிந்து வாழ்ந்தவர் காம்ரேட் அம்மா எனக் கூறும்போது நமக்கு ரோல் மாடலாகிறார். 

காம்ரேட் அம்மாவின் முழுமையான வரலாற்றை கல்பனா கருணாகரன் எழுத வேண்டும். இவரது வாழ்க்கை நமது கண்ணுக்குள்ளும் மனசுக்குள்ளும் திரைப்படம் போல ஓடிக் கொண்டே இருக்கிறது . இன்னும் நிறைய சொல்லலாம். 

புத்தகம் முழுக்க ஆங்காங்கே புகைப்படங்களும்  நம்மை சற்றே நெகிழ வைக்கின்றன. இவரை நான் விரைவில் சந்திக்க வேண்டும். தூங்க விட மாட்டேன் என்கிறது இவரின் இப்புத்தகத்தால் விளைந்த நினைவுகள். 

அனைவரும் கட்டாயம் வாசித்து அறிந்து கொள்ள வேண்டிய புத்தகம் . 

தோழமையுடன்

உமா 



Sunday 15 March 2020

தமிழர் திருமணம் அன்று முதல் இன்று வரை 

தமிழர் திருமணம் அன்று முதல் இன்று வரை 

பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் எழுதியுள்ள சிறு நூல் , ஆனால் 43 நூல்களை ரெபரன்ஸ் செய்து எழுதிய குறு ஆய்வு நூல்.  நமது தமிழர் திருமணம் பழங்காலம் தொட்டு இன்று வரை எத்தகைய மாண்புகளை , சடங்குகளை , சம்பிரதாயங்களை அடுக்குகளாகப் பெற்று புதுப் பொலிவுடன் அதே சமயத்தில் பழமைவாதப் போக்குடன் வளர்ந்துள்ளது என்பதை  காட்சிப்படுத்தியுள்ளார் பேரா ச.மாடசாமி .

மேற்கத்திய கோட்டும் , விஸ்கியும் கலந்த அளவுக்கு துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும்  முறையில் திருமணத்தை தனிப்பட்ட சொந்தச் சடங்காக எளிய விருந்துடன் நடத்தும் முறையில் மேற்கத்திய பண்பாடு வந்துக் கலக்கவில்லை என இந்நூலின் வழியாகப் புரிந்து கொள்ளலாம் 

இந்திய இளைஞன் பீட்சாவுக்கும் பர்கருக்கும் பழகி விட்டான். கேளிக்கை விடுதிகளுக்கு கூச்ச உணர்வின்றி செல்கிறான் .ஆனால் திருமணம் என்று வந்து விட்டால் ஜாதி, ஜாதகம் என்றே தொடங்குகிறான். இந்த இரட்டை நிலை புத்திசாலித்தனமா ? சந்தர்ப்பவாதமா ? பாசாங்கா ? என நம் முன் கேள்விகளைத் தொடுக்கிறார். 

அவரவரின் குடும்பம் அவரவருக்குள் ஒண்டிக் கிடக்கிறது என்ற வரி நமக்கு ஆயிரம் அர்த்தங்களை விளக்குகிறது. சிந்தனை , நம்பிக்கை , பண்பாடு பழக்க வழக்கங்கள் அனைத்திலும் 'சமூக மனிதனின் ' ஆதிக்கம் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்படுத்துகிறது என்பதிலிருந்து மனிதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு என்ற குடும்பம் குறித்து ஐ.நா கூறியதாகக் குறிப்பிடும் வரிகள் இன்றைய காலகட்டத்திற்கு நம்ம ஊருக்கே பொருந்துமா என்ற ஐயம் வர வைக்கிறது .

குடும்பம் கூரையோடு மட்டுமில்லை , மறித்து எழுப்பப்பட்ட சுவர்களோடும் , எல்லைகளைக் குறுக்கும் வேலிகளோடும் தான் இன்று மாறிப் போயிருக்கிறது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா ?

பெண்ணுக்கான பாரபட்சமான இடமாகவும் , உளுத்தும் பண்பாட்டுப் பிரச்சனையாகவும் தானே திருமணங்கள் எழுதப்படாத சட்டங்களாக சிலவற்றை உள்ளடக்கியுள்ளது.

கல்யாண மண்டபங்களும்

சட்ட சபைகளும்

இந்த நாட்டின் 

அர்த்தம் இழந்த ஆடம்பரங்கள் …

சடங்குகள்

ஆடைகள் என்று தான் 

அறிமுகமாயின

வெகுவிரைவில்

ஆடைகள்

ரத்தங்குடிக்கக் கற்றுக் கொண்டன …..

இந்த சொல்லப்பட்ட வரிகள் தான் மிகப் பொருத்தமானவையாகத் தோன்றுகின்றது. 

பெண்ணின் உடல் சார்ந்த சடங்குகளை வெறுக்கும் போக்கு தற்காலத்தில் உருவாகினாலும் , வேறு வேறு ரூபங்களில் சடங்குகள் புதுப்பிக்கப்பட்ட சடங்குகளாயின. 

குடும்ப அமைப்பின் அடிப்படையாகத் திகழும் திருமணம் என்பது பாலியல் ஒழுக்கத்தை வரன்முறைப்படுத்தப்பட தேவையாக இருப்பதாகக் கூறப்படும் விளக்கங்களே , திருமணத்தின் அடிப்படை உண்மையாகப் புரிதலை  எனக்குள் தருகிறது.

சங்க காலம் தொடங்கி , தொல்காப்பியம் அகநானூறு , புறநானூறு ,குறுந்தொகை , நற்றிணை , ஐங்குறு நூறு , நெடுநல்வாடை ,சிலப்பதிகாரம் வரை திருமணக் குறிப்புகளைக் கையாண்டு இப்புத்தகத்தை அடர்வு மிக்க பெட்டகமாக மாற்றியுள்ளார். 

பெரியார் அறிமுகப் படுத்திய சுயமரியாதைத் திருமணங்கள் குறித்தும் பேசுகிறது புத்தகம் .ஆனால் அன்று முதல் இன்று வரை தீராக் காயங்களை விதைக்கும் வேர்களாகப் பரவியுள்ள வலிகளைத் தான் ஒவ்வொருவருக்கும் திருமணங்கள் பரிசாக அளிக்கின்றன. பெண் தேடும் படலமும் , வரதட்சணை முறையும் வேறு வேறு உருவம் பெற்றுள்ளன என்பதே எதார்த்தம். பெண் தேடும் புரோக்கர்கள் இன்று மேட்ரிமோனியலாகவும் மாடு பெற்ற மாப்பிள்ளை கார்பெறுபவராகவும் இன்றைய திருமணங்கள் முன்னேறியுள்ளன. 

அதே சாதி வெறுப்பு அழுக்கு , வெறுப்பு , ஆண் மேலாதிக்கம் , மாப்பிள்ளை முறுக்கு , மாமியார் ஜம்பம் , சீர் செணத்தி பிரச்சனை எதிலும் மாற்றங்கள் இல்லை. வீட்டில் எளிமையாக சொந்த பந்த உறவுகளுடன் நடந்த திருமணங்கள் மனிதர்களின் பணப் பாட்டை நிரூபிக்கும் பல்வேறு கூறுகளாகி வீடியோக்களில் மட்டும் செயற்கை மகிழ்வை சுமந்து திரியும் ஞாபகச் சுவடுகளாக மாறி இருக்கும் திருமணங்களையும் நாம் கூர்ந்து அணிக வேண்டும் .

வளர்ச்சி , முன்னேற்றம் , நாகரிகம் , சமூக அந்தஸ்து இவை தமிழர் திருமணத்தை எந்தத் திசையில் வார்த்தெடுத்துக் கொண்டு வரலாற்றுப் பிழைகளாக மாறியுள்ளன என்பதை அவரவர் சொந்தத் திருமணங்கள் சொல்லும் .

தோழமையுடன்

உமா