Thursday 18 March 2021

நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்

நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள் 


நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள் என்ற நூலின்  ஆசிரியர் திருமதி லைலா தேவி, இவர்  பள்ளியில் இடை விலகியவர் (டிராப் அவுட் )படிப்பை நிறுத்திய 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் முடிந்து பிள்ளைகள் வளர்ந்து கல்லூரிக்கு புறப்பட்டபோது,  திறந்தநிலை பல்கலைக்கழகம் அளித்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் படிப்பைத் தொடங்கி இருக்கிறார். பள்ளியின் இறுதித் தேர்வையே எழுதாதவர்  தமது  எம்ஏ எம்பில் பட்டங்களுடன் ஆய்வு நூலையும் வெளியிட்டது  பாராட்டுக்குரிய செயல் அல்லவா ? அந்த  ஆய்வு தான் இந்நூல்.


 வேடிக்கையான நாட்டுப்புறக் கதைகளின் வழியே பெண்களின் முடிவெடுக்கும் திறனை ஆய்கிறார் லைலா தேவி. நாட்டுப்புற கதைகளில் ததும்பும் சிரிப்புக்கும் பெண் சிறு தெய்வக் கதைகளில் பொங்கும் துயரத்துக்குமான  இடைவெளி குறித்து கேள்வி எழுப்புகிறார் , சங்க இலக்கியத்தின் மீது அளவற்ற ஈடுபாடு கொண்ட இவருக்கு தமது பேரப் பிள்ளைகள் மீது அலாதி பிரியம் எனக் குறிப்பிட்டுள்ளார். 


இந்த  ஆய்வு நூல்,  8 பகுதிகளைக் கொண்டுள்ளது. முன்னுரை, பெண்மைய கதைகள் , சந்தர்ப்பங்களும் முடிவுகளும், மனிதர்களும் உணர்வுகளும் ,சிறுதெய்வ கதைகளில் முடிவுகள், முடிவுரை இந்த ஆறு பகுதிகளில் இந்த தலைப்பை ஒட்டி முழுக்க ஆய்வு செய்கின்றார்.  கடைசி இரண்டு பகுதிகள் பின்னிணைப்பு மற்றும் துணைநூல் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.


நினைத்துப் பார்க்கிறேன் என்ற - நூலாசிரியர் லைலா தேவி குறிப்பிட்ட பகுதியில் அவருடைய பள்ளி இறுதி வகுப்பை முழுமையாகப் படித்து முடிக்காத  வாழ்க்கை குறித்தும் அதற்குப் பிறகு அவர் திருமணம் செய்து பல வருடங்கள் கழித்து   தொலைதூரக்கல்வியில் கல்வி கற்று 

எம் ஃபில் வரை படித்தது அதற்கப்புறம் ஆய்வு செய்த குறித்த செய்திகள்  விரிவாக கூறப்பட்டுள்ளன.


ஆய்வுக்களம் நம்முடைய தமிழக நாட்டுப்புறக் கதைகள் தான், நாட்டுப்புறக் கதைகளில் சிக்கலான நேரத்தில் பெண்கள் எடுக்கும்  முடிவுகள் குறித்து   நாம் பார்க்கும் பொழுது , பெண்ணைச் சுற்றி உலகம் இயங்குவதையும் பெண் தலைமைப் பாத்திரம் எடுப்பதையும் நாட்டுப்புறக் கதைகளில் மட்டுமே காணமுடிகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் எந்தப் பகுதி சார்ந்த கதையாக இருந்தாலும்  இதுபோன்ற ஒரு முடிவுக்குத்தான் வர இயலுகிறது என்கிறார்.பெண்ணின் அறிவாற்றலை நாட்டுப்புறக் கதைகளே உண்மையாகப்  பொருள்பட உணர்த்துகின்றன என்ற நோக்கத்தை முன்வைத்து இந்த நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர்.

 

இந்த நூலை வாசித்த பிறகு இனிமேல் வாசிக்கக் கூடிய நாவல்களை, வாசிக்க கூடிய புத்தகங்களை எவ்வாறு அணுகலாம் என்ற ஒரு சிந்தனை நமக்குள் தோன்றுகிறது.  எப்படி ஒரு நாம் கதையைப் பார்க்க வேண்டும் என்பதற்கான ஒரு விளக்கத்தையும் இந்த நூல் நமக்குத் தருகிறது. பெண்மையக் கதைகளாக , ஒரு பதினைந்து கதைகளை ஆய்வுக்காக  எடுத்துள்ளார்கள் .


அடிப்படையில் நாட்டுப்புறக் கதைகளை மூன்று வகையாக (புராணக்கதை, பழமரபுக் கதை நாட்டுப்புறக் கதை)  பிரிக்கலாம் என்றும் அதை பின்னர் , ஸ்டித் தாம்ஸன்  என்பவர் பன்னிரெண்டு வகையாகப் பிரித்துள்ளார் என்ற வகைப்பாடும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. போக்ஸ்  என்பவர் வீட்டு கதைகளை ஆண்கள் கதைகள் பெண்கள் கதை என்றுதான் அழைப்பாராம்,  கூடுதலாக ஆய்வறிஞர்கள் கொடுத்துள்ள விளக்கங்களையும் தந்துள்ளார்.


இதில் நாம் கவனிக்க வேண்டியது பெண் மையக் கதைகள் , இந்த நாட்டுப்புறக் கதைகளில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளன பெண்மையக் கதைகளுக்கும் பிற கதைகளுக்கும் உள்ள வேறுபாடுகளையும் தான். 


சாதாரணமாகக் கதைகள் பெண்களின் திருமணத்தோடு முடிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஆனால் பெண்மையக் கதைகள் திருமணத்தில் இருந்து தொடங்கும் என்ற கருத்து நமக்கு புதியதாக இருக்கிறது. பிராய்டின் உளவியல் அணுகுமுறையையும்  காட்டுகிறது என்று எடுத்துக் காட்டுகளுடன் குறிப்பிட்டுள்ளார்.


 இந்த புத்தகம்  பல கோணங்களில் நமக்கு பல செய்திகளை கொடுக்கிறது .விருதுநகர் மாவட்ட நாட்டுப்புறக் கதைகள் 15 தான் இவ்வாய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டி

ருக்கின்றன . ஒவ்வொரு கதையும் வாசிக்கும் பொழுதும்  ரசனையுடன் நகைச்சுவையோடு பொருள் பொதிந்து ஆழமாக ஆனால் மிக எளிய முறையில் சிறு பக்கத்தில் முடியக்கூடிய குறுங்கதைகளாக  இருக்கின்றன. 


அண்டாப் பணமும் பணியாரமழையும்  என்ற கதையில் பணியார மழை என்பதெல்லாம் அது ஒரு புதிய உருவகமாக நமக்கு தோன்றுகிறது. திருடர்களை வெற்றி கண்டவள் கதையில் பெண்ணின் முடிவெடுத்தல் திறன் ,முதலையிடமிருந்து கணவனை காப்பாற்றியவள் கதையில் அவளது சாதுர்யம்  ,சுடுகாடு போய் மீண்டு வந்த ஒரு பெண்ணின் கதை எவ்வாறு அங்குள்ள திருடர்களை  எதிர்கொள்கிறாள் என்றும், பாம்புகளிடம் இருந்து கணவனை காப்பாற்றியவள்  என்ற கதை பெண்  எவ்வாறு மிகவும் ஜாக்கிரதையாக உணர்வுடன்  விழிப்புடன் இருக்கிறாள் என்பதை மையப்படுத்தியே குறிப்பிடப்பட்டுள்ளது.

 போலி சன்னியாசி கதையில் அவள் தன் குடும்பத்திற்காக பிரச்சினை வரும் பொழுது எவ்வாறு சமயோசிதமாகத் திட்டமிடுகிறாள் என்று ஒரு முடிவினை கொடுக்கிறது . 


உறவின் இயல்பு அறிந்தவள்  கதையில்  எல்லோர் வீட்டிலும் பிரச்சினை இருக்கிறது அதை எவ்வாறு நாம் கடந்து போக வேண்டும் என்று சொல்லப்படுவதாக அப்பெண் முடிவுக்கு வருவதும் , . வறுமையிலும் விருந்து படைத்தாள் என்ற கதையில் ஒரு மாமியார் , மருமகனுக்கு வறுமையைக் காரணம் காட்டாமல் விருந்தோம்பலை எவ்வாறு ஒரு திட்டமிடலுடன் சமயோசிதமாக யோசித்து விருந்து உபசாரம் செய்கிறாள் என்று அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது , 

காக்கா  இறைச்சியடி..

 கண்ணில் இடும்  வெண்ணையடி..

 ஊர்ப் புழுங்கலடி ..

உங்கம்மா கைத் திறமையடி ..

உண்டேன்டி ..உண்டேன் ..

.. என்று கணவன் அவனது மனைவியிடம் மாமியார் புராணம் பாடுவதாக சொல்லக் கூடிய இடங்கள் நகைச்சுவையோடு கூடிய நல்ல தருணங்களாகத்  தோன்றுகின்றன. சாமியாடி சமாளித்தல் என்ற கதையில் மாங்காய் , மீன் குழம்பு  உணவுக்காக , கணவனை  ஒரு பெண் எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பது விசித்திரம்.


சின்ன சின்ன விஷயத்துக்காக பெண்கள் எப்படி எல்லாம் திட்டமிடுகின்றனர் எப்படி பெண் மையப் பாத்திரமாக இருக்கிறாள் என்று தான் இந்த கதைகள் முழுவதும்  மீண்டும் மீண்டும் சொல்கின்றன. கணவனுக்கு அதேபோல வெற்றியை தேடித் தந்தவள் என்ற கதையில் குருவாக இருக்க கூடிய கணவன் எவ்வாறு பயந்து நடுங்குகிறான் , அதை மாற்ற   சாதுரியமாக  முடிவு எடுக்கக் கூடிய பெண்ணின் கதாபாத்திரத்தை கொண்டுவருகிறார்கள். அதேபோல கவனம் சிதறாத மணமகனைத் தேர்வு செய்த அவள் பேச்சில் கெட்டிக்காரி ...இந்தக் கதைகளும் நமக்கு பெண்கள் எப்படி கூர்ந்து அறிவாற்றலுடன் முடிவெடுக்கும் திறன் பெற்றுள்ளவர்களாக இருக்கின்றனர் 

என்று நம்மை எண்ண வைக்கிறது.

 புத்திசாலி மாப்பிள்ளையைக் கண்டுபிடித்த ஒரு புத்திசாலிப் பெண் நம்மை வியக்க வைக்கிறார். 


 தான் ஆண்ட உலக்கையும்

 தங்கப் பூஞ்சரமும் தலை மருமகளுக்குன்னு சொன்ன கதையால்ல இருக்கு…. என்பது சொலவடை. இந்த சொலவடைப் பிறந்தது என்பதற்கான தப்பு செய்து தப்பித்தவள் கதை..  யதார்த்தம் அறிந்தவள் என்ற கதையில்  வீட்டின் யதார்த்தம் இப்படித்தான் என்று அறிந்து கொள்ளும் பெண்ணின்  கதை ..


இப்படி எல்லாக் கதைகளிலும் பெண் எடுக்கும் வடிவங்கள் …. மகளாக , மனைவியாக, தாயாக ,மாமியாராக என்ற நான்கு நிலைகளில் மையப் பாத்திரமாக அது குறித்து ஒரு ஆய்வை இந்த நூல் நமக்கு தருகிறது.


 இவற்றில் மனைவியாக வரும் கதைகளே மிகுதியாக இருக்கின்றது பெண்மையக் கதைகளில் மனைவியே முக்கிய கதாபாத்திரம் என்று கூறலாம் திருமணத்துக்குப் பின் நடக்கும் கதைகள் என பெண்மையக் கதைகளுக்கு ராமானுஜம் இலக்கணம் வகுத்த வழியில் இங்கு சுட்டிக் காட்டி நூலாசிரியர் நமக்கு விளக்கம் தருகிறார். 


அடுத்ததாக சந்தர்ப்பங்களும் முடிவுகளும் என்ற பகுதியில் முடிவெடுத்தல் குறித்து ஆழமாக விவாதம் நடைபெறுகிறது . ஒவ்வொரு கதையின் முடிவும் அடிப்படை சாதுரியமாக இருக்கிறது உடல்சார்ந்த ஆற்றலை விட சாதுரியம் ஆபத்தில் உதவக்கூடிய தன்மை பெற்றது . திறமை முக்கியமானது ஆனால் சாதுரியம் அவசியமானதே என்கிறார் கதையாசிரியர் .


இறுதியாக மனிதர்களும் உணர்வுகளும் என்ற தலைப்பில் ஆய்வுசெய்து கதையில் உள்ள சிக்கல்களை சந்திக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் மனிதர்களையும் மனிதர்களுக்கு ஏற்றபடி பெண்களிடம் உருவாகும்   உணர்வுகளையும் இந்த இயலில் ஆய்கிறார் .எதிர் கொள்ளும் மனிதர்கள் வீட்டுக்கு வெளியே , வீட்டுக்கு உள்ளே இருக்கக்கூடிய மனிதர்கள் தான்.  தாய் , மகன், மாமியார், உடன்பிறப்புகள் ,மனைவி, கணவன் இப்படிப்பட்ட உறவுகள் தான் குடும்பத்தை சுற்றி சுற்றி மருமகள் மாமியார் என உறவுகள் எதிர்நிலை பாத்திரமாக இந்தப் பகுதியில் ஆய்வு செய்கிறார். குடும்ப உறவுகளில் கணவனோடு வரும் பகை தீரும் பகையாகும் மாமியாரோடு வரும்பகை தீராப்பகையாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். கணவன் கதைகள் இடம் பெற்றுள்ள சமரசப் போக்கு ஆணாதிக்க சிந்தனையின் ஊடுருவல் என்பதையும் இந்த இயல் நமக்கு உணர்த்துகிறது.


அடுத்த பகுதியில் , சிறுதெய்வ கதைகளின் முடிவுகளாக மூன்று கதைகளை விவரித்துள்ளார். கதைகளில் பெண்கள் எடுக்கும் முடிவு குறித்து ஆழமாக விவாதிக்கும்  நோக்கில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக அறியப்பட்ட 3பென் சிறு தெய்வங்களின் கதைகள் கூறப்பட்டுள்ளன .சிறு தெய்வங்கள் அனைவரது கதைகளிலும் அவர்களுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெண்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் அதற்கு ஒரு கதை சொல்லப்படும் அது உண்மையாகவும் இருக்கும். ஆண்கள் முடிவெடுக்கையில் அது கொலையாகும் போக்கும் பெண்கள் முடிவெடுக்கும் போது அது  தற்கொலையாகும் போக்கும் யதார்த்தமாவதை ஆய்வு விளக்குகிறது. 


சமுதாயத்தில் பண்பாடு என்ற பெயரில் பெண்ணுக்கு எதிராக நிலவும் அனைத்து விதமான அடக்குமுறையையே இந்து வரலாறுகள் விளக்குகின்றன என்ற கருத்தை முன்னெடுத்து இந்தப் பகுதியில்  அவர் மூன்று பெண் தெய்வங்களாக நல்லதங்காள் கதை, அதேபோல சீனி அம்மன் கதை, சர்க்கரை அம்மாள் கதை என்ற மூன்று கதையை ஆய்வு செய்கிறார். 


 பெண்கள்  இரண்டில் தற்கொலை செய்துகொள்வதும் ஒரு கதையில் கொல்லப்படுவதும் அதற்கான காரணங்கள் கொடிய வறுமையும்  சாதிப் பிரிவினையும்  என்பதாக இடம்பெறுகின்றன . வாய்ப்புள்ள நிலையிலும் வாழ்க்கையும் பெண்ணிற்கு முடிவுகள் குறித்து இந்த பகுதி ஆய்வு செய்கிறது நல்லதங்காளும் சர்க்கரையம்மாளும்  வறுமையின் காரணமாக மாண்டுபோவதும் சீனியம்மாள் சாதி பாகுபாட்டிற்கு பலியாவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. 


சீனியம்மாளது  முடிவில் குடும்ப வன்முறை இருப்பதையும் இந்த ஆய்வு நமக்கு சொல்கிறது யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் உள்ள இடைவெளிகளில் இரண்டு பேரும் முடிவுகளும் புலப்படுத்துகின்றன பெண் அனுபவிக்கும் துயரங்களையும்  சிறு தெய்வக் கதைகளிலும் பெண்ணுக்கு கிடைக்கக்கூடிய வெற்றியின் சாத்தியத்தை நாட்டுப்புறக் கதைகளும் நமக்குக் காட்டுகின்றதன்  யதார்த்தம் இரண்டுமே பெண்ணின் ஆளுமைக் கூறுகள் தான். இரண்டுமே உண்மைகள் ஆனால் தனித் தனிப் பகுதிகள் என்று நூலாசிரியர் நமக்கு வழிகாட்டுகிறார்.


இந்த நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய அழகான ஆய்வு நூல் . நூலாசிரியரை சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சந்தித்த போது நேரில் வழங்கினார் . ஆனால் தற்போது தான் என் வாசிப்புக்குள் வந்தது. இதை பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுடன் உரையாட நல்லதொரு பொருண்மையாகக் கொள்ளலாம். 


உமா 







No comments:

Post a Comment