Monday 31 March 2014

சுயம் இழந்தவனின் புலம்பல்

                     சுயம் இழந்தவன் புலம்பல்        (4/4/2008)      



மண்ணின் வாசனையை மெல்ல மறக்கும் மனிதர்களே !
பொன்னின் தேவையை வேகமாய் தேடுவது ஏனோ?
விண்ணின் பரிசை வழிமறித்து எங்குமே
வீண் செய்யும் விபரீதம் எதற்கு ? சொல்லுங்கள்
பசுமைக்குக் குரல் கொடுக்கக் கூட்டம்  கூட்டிவிட்டு
பட்டி தொட்டிகளில்  கூட  ''தேநீர்  கோப்பை'' மலை !
விரசங்கள் வேண்டாமென்று வியாக்கியானம் பேசி
ரசனைகள் என்று நாசூக்காய் வெளியீடுகள்  ஏன்?
வீடும் ,பாடும் (உழைப்பு)  வியாபாரமாய் போக -நமது
காடும் கழனியும்  கட்டிடமாய்  உயர -அங்கே
ஆடும் மாடும் சிந்தும் கண்ணீர்க் கதைகள்
( யா )ஆர் காதுகளுக்கும் எட்டவில்லையோ ?
இவை ..........
இயற்கையின் இயலாமையா ? அல்லது
நமக்கு நாமே தோண்டும் சவக்குழிகளா ?-சொல்லுங்கள்
பணத்தின்  மதிப்பைப் பன்மடங்காக்க  மனித
மனத்தின் சுயத்தை  அடகு வைக்கலாமா ?
பாலைவனத்தில் சோலைகளை உருவாக்க எண்ணி
சோலைவனத்தைக் கொள்ளையடிப்பது சரியா ?
ஆகாயத்தில் பறக்க  ஆசைப்பட்டு துரத்தினால்
சிட்டுக்  குருவியால் என்ன செய்ய முடியும்?
கருவறைக்குள் ஓய்வெடுக்கும்  பிஞ்சுகளை வெளிக்
கண்டவுடனே உழைக்கச் சொல்வது  நியாயமா ?
சரியான வழிகளுக்கு சவக்குழிகள் வெட்டி விட்டு
சாதனைப்  பாதைகளை   வீணாக்குவது  உத்தமமா ?
வானம் -பூமி எல்லைகளென்றால் ......
வரைமுறைகள்  மீறப்படுவது  எந்த எல்லை வரை ?
வாழ்க்கை முழுவதும் கோணலாகிப் போன நாணல்
வளர்ந்த பின் கோணல் மரமாவது  இயல்பே  .....
வான் முகடு  வரை உயரும்  மொட்டை மாடிகள் 
வானத்தை ரசிக்க  இன்று பயன்படாதது பாவம்....
பெண்ணியமும் கண்ணியமும்   தங்களைக் காத்துக்கொள்ள
பெரும் போராட்டம்நடத்த வேண்டியுள்ளது  எங்குமே....
மலர்களின்  நறுமணங்களை  நுகரக்  கூட  இங்கே .....
மனமில்லை  மனிதர்களின் கால ஓட்டங்களுக்கு......
 ஆம் .....இவை எல்லாம்  இங்கே ..
சுயம் இழந்தவனின் புலம்பல்கள்.....