Thursday 18 March 2021

Good Bye To PKPI ( பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் )



முகநூல் நட்புகள் அனைவருக்கும் வணக்கம் .


நான் அடிப்படையில் ஒரு ஆசிரியர் என்பது நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.  கல்வி குறித்த கள செயல்பாட்டாளராக தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும்  அதிகமாகப்  பள்ளிப் பணியைத் தாண்டி , வேறு வேறு வழிவகைகளில் பல தளங்களில் பணி   செய்து கொண்டுள்ளேன். 


அதன் தொடர்ச்சியாகத் தான் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்  (A3) என்ற அமைப்பை  உருவாக்கினோம் .


இன்று தமிழகமெங்கும்  பணியாற்றி வரும் லட்சக் கணக்கான ஆசிரியர்களில் சிறப்பாக செயல்படும் சில லட்சம் இருக்கலாம். அவர்களுள் சில ஆயிரம் ஆசிரியர்கள் இணைந்து உருவானது தான் A3 அமைப்பு . 4 வருடங்கள் முன்பே 2000 ஆசிரியர்கள் என்னுடன் இணைந்து பல சிறப்பான பணிகளில் தங்களை  இணைத்துக் கொண்டனர்  , ஒட்டு மொத்தமாக இல்லாமல் சில நூறு சில நூறு என சிறு சிறு குழுக்களாக பல தளங்களில்  இணைந்திருந்தனர். தற்போதும் இணைந்துள்ளனர்.


 A3 அமைப்பின் பணி என்பது , ஆசிரியர்களின் பணித் திறனை மேம்படுத்தி,  கற்பித்தல் அனுபவங்களைப் பகிர வைத்தல் , வாய்ப்புகளைப் பரவலாக்குதல் ,  செயல்படும் ஆசிரியருக்கும் செயல்பட விரும்பும் ஆசிரியருக்கும் ஒரு பாலம் அமைப்பது என்றும் கூறலாம். இப்படியான பயணத்தில் ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளுதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


 சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, முதல் சந்திப்பிற்கு 2017 நவம்பர் மாதம் எனக்கும் அழைப்பு விடுத்தனர் .அன்றிலிருந்து நவம்பர் மாதம் 2019 வரை , ( 23.11.2019) PKPl என்று அழைக்கப்பட்ட பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு 200 % உழைப்பையும் தந்தது குறித்து  பெரும்பாலும் அனைவரும் அறிவீர்கள். 


வயதில் மூத்த ஆளுமைகள் இயக்கத்தின் பொறுப்பில் இருப்பதாலும் உடன் இணைந்ததாலும் நான் கூடுதல் நம்பிக்கையுடன் பணியாற்றினேன். இயக்கத்தின் பெயரை மக்களிடம் , ஆசிரியர்களிடம்  எடுத்துச் செல்லும் பொருட்டே இயக்கத்தின் பெயரில் பல இதழ்களிலும் கல்வி குறித்த கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். 


அந்த 2 வருட காலத்தில் எனது முகநூல் பக்கத்தில் இயக்கத்தின் பெயரில் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பதிவாவது PKPI என்று முடித்திருப்பேன். பல்வேறு அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவோருக்குத் தெரியும், ஒரு அமைப்பை வளர்ப்பதில் உள்ள சவால்கள். ஆனால் இணையப் பயன்பாட்டின் வழியே தான் என்னால் பெரும்பாலான மக்களிடம் இயக்கத்தை எடுத்துச் செல்ல முடிந்தது. 


முதல் கூட்டத்தில் நான் ஒரு யோசனையை முன்வைத்தேன்  . வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி இயக்கத்தை வளர்க்கலாம் என்று , ஆனால் மூத்தோர்கள் தயங்கினார்கள் . அது ஒரு தொல்லையாக இருக்கும் என்று கூறி வேண்டாம் என மறுத்து விட்டனர். பிறகு இரண்டாம் சந்திப்புக்குப் பிறகு PKPl STATE TEAM என்ற வாட்ஸ் அப் குழு உருவாக்கத் திட்டமிட்டு ஒப்புக் கொண்டனர். 2018  ஜனவரி 6 ஆம்   தேதியன்று உருவாக்கப்பட்டது. 

6 மாதங்கள் மாநில அளவில் சில கூட்டங்கள் நடந்தன. ஒவ்வொரு நாளும் இயக்கத்துக்காக 24 மணி நேரமும் யோசித்து செயலாற்றி இருக்கிறேன். 


ஜூன் 3 , 2018 அன்று முதல் பத்திரிகையாளர் சந்திப்பு பேரா காளீஸ்வரன் அவர்களது உதவியுடன் பிரம்மாண்டமாக சென்னை லயோலா கல்லூரியில் நடந்தது. நமது A3 குழு ஆசிரியர்கள் பல மாவட்டங்களிலிருந்து இந்நிகழ்வில் வந்து கலந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாகவும் பொறுப்பேற்றனர். 


மாவட்டத்திற்கான குழு PKPI District Team நான் தான் உருவாக்கினேன். மறுபடியும் தொடர்ந்து 2 ஆண்டுகள் பல்வேறு செயல்பாடுகளால் இவ்வியக்கத்தை வலுப்படுத்தி வந்தேன். அதன் வளர்ச்சிக்கான பணியை 4 ஆகப் பிரித்தால் 2 பாகத்திற்கும் அதிகமாக  என்னுடையது. இதை அனைவரும் அறிவர். 32 மாவட்டங்களுக்கும்  மாவட்டக் குழுக்களை உருவாக்கி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து உறுப்பினர் சேர்க்கையில் என தொடர்ந்து பணியாற்றினேன். எங்கு சென்றாலும் இந்த இயக்கம் உயிருடன் கலந்த ஒன்றாக இருந்தது. தொலைக்காட்சி நிகழ்வில் பேச வாய்ப்பு கிடைத்த போதும் இயக்கத்தின் பெயரையே உச்சரித்தேன். இயக்கத்தின் முகநூல் பக்கத்தை சிவா உருவாக்கியதோடு சரி , தினமும் அந்தக் கணக்கை உயிர்ப்பித்து active ஆக வைக்க , வாட்ஸ் அப் குழுக்களை ஆரோக்கியமான முறையில் இயக்க என வெறித்தனமா வேலை செய்துட்டு இருந்தேன். 


இந்த இயக்கத்தில் ஆர்வமான உறுப்பினர்களை முகநூல் பக்க வழியேயும் வேறு வேறு வழிகளிலும் இணைத்து அவர்களிடம் தொடர்ந்து இயக்கம் குறித்த புரிதலை விளக்கி விளக்கி எடுத்துச் சென்றேன். 


ஒவ்வொரு மாநில சந்திப்பு முடிந்த பிறகும்  நிகழ்வைத் தொகுத்து MOM தயாரித்து

அதே நாளில் பெரும்பாலும் தலைவர் , செயலருக்கு அனுப்பி , இயக்க முகநூல் பக்கத்திலும் எனது முகநூல் பக்கத்திலும் போஸ்ட் போட்டு விடுவேன். யாரும் பாராட்ட வேண்டும் என்று இவற்றைச் செய்ததில்லை. அது என்னுடைய வழக்கம் . 


இரண்டாம் வருடம் முடியும் நாளில் 2019 ,நவம்பர் 24 அன்று வரை இயக்கத்தின் மொத்த வரலாறும் எழுதித் தொகுத்து அளித்தேன். அதற்குள்ளாக தனியாகவும் இயக்க செயலருடனும் இணை்து 27 மாவட்டங்களுக்கு இயக்கத்தை வலுப்படுத்த கூட்டம் ஏற்பாடு செய்து சொந்த செலவில் சென்று வந்துள்ளேன். எங்கு சென்றாலும் அங்கு நமது A3 குழு ஆசிரியர்களை வரவழைத்து இயக்கக் கூட்டத்தில் பங்கு பெற வைப்பேன். தமிழகம் முழுக்க தொடர்பிலுள்ள அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (A3) அனைவரையும் இயக்கத்தில் இணைக்க  தொடர் முயற்சியில் ஈடுபட்டேன். பெரும்பாலும் இணைந்தனர்.  


எனது பள்ளி நாட்களின் தற்செயல் விடுப்புகள்  80% இயக்கத்துக்காக மட்டுமே எடுத்தேன். ஏறக்குறைய உடல் , பொருள் , ஆவி அனைத்தையும் இந்த இயக்கப் பணிகளுக்காகவே முழு ஆத்ம திருப்தியுடன் செய்து வந்தேன் . ஒரு கட்டத்தில் PKPI என்பது தமிழகம் முழுக்க வேரூன்றியது. கடந்த செப்டம்பர் மாதம்  அறிவியல் இயக்கத்தை இணைந்து செயல்பட தோழர்  மோகனா அவர்களது இல்லம் பழனி சென்று கோரிக்கை ம்னு தந்துவிட்டு வந்தேன் . கஜா புயல் பணி செய்த போதும் நிவாரணப் பணியை ஒருங்கிணைத்து 15 லட்ச ரூபாய் மதிப்பில் அந்த 4 மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்றேன். தனி ஒருத்தியாகவே பணி செய்தாலும் இயக்கத்தின் பெயரில் செய்தேன். 


இவை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 


எத்தனையோ அமைப்புகள் PKPI இல் இணைந்திருந்தாலும் இந்த இயக்கத்துக்காக எவர் ஒருவரும் முழு மனதுடன் தங்கள் அமைப்பு உறுப்பினர்களை இவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு உதவவில்லை. செயலர் மட்டுமே ஆசிரியர்களை தொடர் பயணத்தில் சென்று சந்தித்து வளர்த்தார் .இணைய வழி , ஊடகவழி , ஆசிரியர்கள் தொடர்பில் நான் இயக்கத்தை வளர்த்தேன். இயக்க வாட்ஸ் அப் குழுவில் இணைந்தவர் அவரவர் தூர நின்று வேடிக்கை பார்ப்பவராக பெரும்பாலான நாட்களில் Passive ஆக இருப்பர். சில ஆசிரியர்களை உள்ளே இணைத்து மாநில அளவில் பொறுப்பு தரும் போது மனதளவில் குறுகி , உரையாடல் அற்று வெளியேறிய பிரச்சனைகளும் நடந்தன. எதிர்மறையான பலரின் கருத்துகளுக்கு என்றுமே நான் வலு சேர்த்ததில்லை. கடந்து போகவும் இயக்கத்துக்காகப் பணியாற்றவும் கற்றிருந்தேன். புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்தும் நிறைய மாவட்ட மேடைகளில் பேசச் சென்ற போதும் எனது A3 இன் பெயரில் செல்லாமல் , PKPI த்தான் அடையாளமாகக் கொண்டு பேசச் செல்வேன்.


இந்து -காமதேனு வார இதழில் சம காலத்தில் பள்ளிக் கல்வியில் உள்ள சிக்கல்களைத் தொடராக எழுத ஆரம்பித்தேன். எனது பெயரில் , பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே எழுத ஆரம்பித்தேன் . அரசின் கல்விக் கொள்கை , பாடத்திட்டம் , ஆசிரியருக்கு வழங்கப்படும் பயிற்சிகள் , QR கோடு ... என்று நடைமுறைப் பிரச்சனைகளைக் குறித்து தமிழக ஆசிரியர்கள் பெரும்பான்மையோரது கருத்துகளை , ஒரு பிரதிநிதியாக இருந்து தான் எழுதி வந்தேன். கல்விப் பிரச்சனைகளில் ஒரு பிரச்சனையாக ஆசிரியர் சங்கங்கள் குறித்து 11வது கட்டுரையாக எழுதினேன். 


அந்த ஒரு கட்டுரை எழுதியது தான் பிரச்சனையாக உருவெடுத்தது. சரியாக இயக்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவு விழாவை முடித்து அடுத்த நாள் நவம்பர் 25 அன்று இந்தக் கட்டுரை அச்சில் வந்தது. எந்தக் கட்டுரை என்றாலும் இயக்க முகநூல் பக்கத்திலும் பதிவிடுவேன். எனது முக நூல் பக்கத்திலும் பதிவிடுவேன். அதே போல இந்தக் கட்டுரையையும் பதிவிட்டு இருந்தேன் . 


இயக்கத்தின் பெயரில் சங்கங்களைப் பற்றி எழுதியிசூக்கக் கூடாது என்ற ஒரு கருத்து தலைவரிடம் வந்துள்ளது. செயலர் வழியே என்னிடம் அது தெரிவிக்கப்பட்டது. ஏதேச்சையாக செயலர் எனது கணவரிடம் இதைக் கூறியிருக்கிறார். எனது கணவர் சாதாரணமாகவே நிறைய கோபமடையும் இயல்பு , செயலர் கூறியதைக் கேட்டு அவரிடம் அமைதியாக இருந்து சரி எனக் கூறி விட்டு என்னிடம் வாதிடுகிறார். இயக்க முக நூல் பக்கத்தில் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் எனது கணவரும் கட்டுரையின் பதிவில் பின்னூட்டங்களில்  பேசிக் கொள்ள , இறுதியாக எனது கணவர் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தை பதுங்கு குழி இயக்கம் என வைத்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட , விளைவு... தலைவர்  PKPI STATE TEAM. வாட்ஸ் அப் குழுவில் அதற்கு கண்டனம் தெரிவிக்கிறார் . செயலர் என்னிடம் முகநூலில் அந்த பதிவையே நீக்கக் கூறி விட்டார். அன்று இரவு 10.30 மணி வரை தலைவரிடம் பேசுகிறேன். அவர் , நீ சொன்னதெல்லாம் சரி உமா , ஆனால் நாம் அவர்களை இணைத்து தான் பணியாற்ற வேண்டும் .ஆகவே இதை சொல்லக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். 


எங்களுக்குள் வீட்டில் மிகப் பெரிய பிரச்சனை . உனக்கென ஒரு அமைப்பு A3 ஏற்கனவே இருக்கும் போது வேறு அமைப்பில் சென்று வேலை செய்ததன் விளைவைப் பார் ...2 வருடமாக வீட்டைக் கூட கவனிக்காமல் இதில் இயங்கினாயே ... இப்போ ஒரு விமர்சனத்தைத் தாங்காமல் பதிவை எடுக்க வைத்து விட்டனர் என்கிறார் . 3 மாதமாக என்னை கடும் மன உளைச்சலுக்கு இந்த நிகழ்வு உட்படுத்தியது. 


அன்றுடன் எனது நிலை மாறி விட்டது என்னுடைய கேள்விகள் ... 


10 கட்டுரைகள் எழுதிய போது எந்த எதிர்வினையும் வரவில்லை. அதுவரை இவர்கள் யாரும் பாதிக்கப் படவில்லை. 11வது கட்டுரையால் இயக்கத்துக்கு ஒரு நெருக்கடி வந்து விட்டதால்  நம்மை இயக்கத்தின் பெயரில் எழுதக் கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது ?


முதல் கட்டுரையிலேயே என்னைத் தடுத்து உங்கள் பெயரில் எழுதுங்க , இயக்கத்தின் பெயரில் எழுதினால் எதிர்காலத்தில் பிரச்சனை வரும் என்று கூறியிருந்தால் எனக்குப் புரிந்திருக்குமே ?


 ஆசிரியர் சங்கங்கள் சரியாக இருந்திருந்தால்  பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்று தேவையே இல்லைதானே ? உண்மையை சொல்லாமல் முகமூடி போட்டு ஒரு இயக்கம் எதற்கு ?


ஏற்கனவே எழுதிய 10 கட்டுரைகளும் பள்ளிக்கல்வித் துறையின் 10 மையமான பிரச்சனைகள். எந்த ஒன்றையும் குழுவில் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆழமாக வாசித்து உரையாடி விவாதம் செய்யவில்லை. ஆனால் இந்த 11 வது கட்டுரை மிகப் பெரிய பிரச்சனையாகப் போய்விட்டது. 


சரி , நான் மின்னஞ்சல் அனுப்பி , சூழல் சரியில்லை எனக்கு ஒரு பிரேக் தேவை என தலைவர் , செயலரிடம் தெரிவித்து இருந்தேன். ஆனால் அதன் பிறகு இன்று 8 மாதங்கள் ஆயிற்று. வெகு சில நட்புகள் அழைத்து ஏன் இயக்கத்தில் காணோம் என விசாரிப்பர் .ஆனால் நாம் 2 ஆண்டுகள் உழைத்ததற்கான எந்த சுவடும் இல்லை. 


2 முறை செயலர் அழைத்து கூட்டங்களில்  கலந்து கொள்ளக் கூறினார் .நானும் எதுவும் கூறவில்லை .ஆனால் இந்த 8 மாதங்களில் மாநில அளவில் இது குறித்து விசாரணையோ , உரையாடலோ நிகழ வில்லை. ஒருவர் ஏதோ ஒரு சூழலால் இயக்கத்திலிருந்து விலகி இருந்தால்  அப்படியே விட்டு விடுவது தான் இயக்க நடைமுறையா எனத் தெரியவில்லை. எப்போவாச்சும்  வந்து சேர்ந்து  இயங்கலாம் என நினைத்து இருந்த தருணத்தில் ….


கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் குழுவில்  (PIKPI STATE TEAM ) என்னை அட்மின் பவரில் இருந்து நீக்கியதாக தகவல் காட்டியது. செயல்படாததால் நீக்க வேண்டும் எனில் கடந்த 2 ஆண்டுகளில் நானும் செயலரைத் தவிர மற்ற அட்மின்களது பவரைத் தூக்கியிருக்க வேண்டும் . 2 நாட்கள் கழித்து செயலரை அழைத்து இது குறித்து கேட்டேன். அவரோ தெரியவில்லை என்றார்.  மேலும் அவர் நீங்கள் என்னிடம் பிரேக் கேட்டிங்க , ரொம்ப நாள் ஆயிடுச்சு , குடும்ப சூழல் அனைத்தையும் கணக்கில் கொண்டு இணைந்து செயல்பட முடியாது எனில் தெரிவித்து விடுங்கள் என்றார். 


அப்போது  தான் எனக்கு ஒன்று புரிந்தது. இயக்கம் நம்மை மறந்து விட்டது போலும் . அட்மின் பவரை எடுக்கறாங்க எனில் இது ஏதோ ஒன்றின் வெளிப்பாடு என உணர்ந்தேன். 


எனது குடும்ப சூழலைக் காரணம் காட்டி இருந்தால் இந்த  இயக்கமே வளர்ந்திருக்காதுங்களே தோழர் என எண்ணினேன். இன்று வரை காத்திருந்தேன். யார் என்னை அட்மின் பவரில் இருந்து நீக்கினார்கள் என செயலரிடமிருந்து தகவலே இல்லை. 8 மாதமாக தலைவர் முறை கூட அழைத்து இயக்கத்தில் நான் செயல்பட வேண்டும் எனக் கேட்கக் கூட இல்லை …

 அடடா …


தோழர்கள் என அழைத்துக் கொள்ளும் அமைப்பிலேயே தோழமை உணர்வு இல்லை. பெண்களின் உழைப்பு கணக்கில் கொள்ளப்படுவதேயில்லை ..


நாம் ஏற்கனவே பள்ளிக் கல்வியை காப்பாற்றும் பல வேலைகளைத் தான் செய்து வருகிறோம் .ஆகவே அதனை நமது A3 அமைப்பின் வழியாகவேத் தொடர்வோம் என்பதால் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்திலிருந்து விலகுகிறேன். 



கீழுள்ள லிங்க் எனது முகநூல் பக்கத்தில் சங்கங்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைப் பதிவு. 

https://m.facebook.com/story.php?story_fbid=1293443860838664&id=100005191869415




 



No comments:

Post a Comment