Wednesday 17 March 2021

பூம்புகாருக்குப் போவோம்

பூம்புகாருக்கு போவோம் வாருங்கள் 

இந்த நூல் புஷ்பா அசோக்குமார் அவர்களால் எழுதப்பட்டு முதற் பதிப்பு 1987 இல் விலை 4 ரூபாயாக முகில் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு 

உள்ளது . 

 பூம்புகார் என்று சொன்னால் நமக்கு  ஒருபுறம் சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் இவர்களெல்லாம் மனதுக்குள் வந்து போவார்கள் .இன்றைய தலைமுறைக்கு பூம்புகார் என்பது , நகர வாழ் மக்கள் அனைவருக்கும் அது ஒரு பொருள் விற்கும் கடை, பூம்புகார் என்று தலைப்பிட்டு உள்ளே விலை உயர்ந்த முத்து பவளம் போன்ற ஆபரணங்களும்  பித்தளை, செம்பு போன்ற உலோகப் பொருட்கள், சிலைகள் விற்கும் கடையாகவேத் தெரியும் .பூம்புகார் என்றதும் நினைவுக்கு வர வேண்டிய சிலப்பதிகாரம் என்பது கூட இன்று மாணவர்களுக்கு வெறும் மதிப்பெண்கள் சார்ந்த வினாவாக விடையாக மாறிவிட்டது ஒருபுறம் அவலம் . 

காவிரிப் பூம்பட்டினம் , கரிகாலன் கட்டிய கல்லணை இது போன்ற தகவல்களும் அங்கு இருக்கக்கூடிய கண்ணகி சிலை இதுபோன்ற சின்ன குறிப்புகள் மட்டுமே இன்றைய தலைமுறையினர் அறிந்து வைத்திருப்பார்கள் எனக் கருதுகிறேன். 

அங்கே சுற்றுலா செல்லும் பொழுது, மன்றங்கள் இருக்கும் , சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் சிலையாக நிற்பார், பாவை மன்றம் இருக்கும் ,இலஞ்சி மன்றம் இருக்கும் நெடுங்கல் நின்ற மன்றமும் இருக்கும் காவிரி அணையும் சிலை வடிவாக இருக்கும் இதைத்தவிர அழகுக்காக சிப்பி வீடுகள் இருக்கும்.ஆனால் எதனையும் இதெல்லாம் எதற்காக அமைக்கப்பட்டது என்ற வரலாறு குறிப்பு எங்கும் இருக்காது என்று நான் கருதுகிறேன் 

ஆனால் பூம்புகார் என்பதற்கு என்ன வரலாறு என்பது சென்ற தலைமுறையினருக்கு  சிலப்பதிகாரம் வாசித்து வளர்ந்தவர்களுக்கும் நன்றாக தெரியும் .பூம்புகார் எப்படி எல்லாம் வளங்களால் நிறைந்த ஒரு அற்புத நகரமாக இருந்திருக்கிறது என்பதை வலுப்படுத்தவே இந்தச்  சிறுநூல் நமக்கு சொல்கிறது. பழைய பூம்புகாரின் இலக்கிய வரலாறுகளில் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதாக இந்த நூல் அமைந்துள்ளது. பூம்புகாரை பற்றி அறியாமல் சென்றால் அது ஒரு கேளிக்கை உல்லாசம் சுற்றுலாத்தலம் அவ்வளவுதான் ஆனால் பூம்புகாருக்கு பின்னால் உள்ள வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது

 இந்த நூல்  பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்துள்ளது .அதாவது பூம்புகாருக்கு போவோம் வாருங்கள் …..என்று ஆரம்பித்து பூம்புகார் எப்படிப் பெயர் காரணம் வந்திருக்கும் என்று வரலாற்று ரீதியாகவும் இலக்கியமும் புராணமும் எவ்வாறு விளக்குகின்றன என்ற முறையிலும்  அணுகி இருக்கிறார் ஆசிரியர்.

காவிரிப்பூம்பட்டினம் என்று எப்படி பெயர் வந்திருக்கலாம் ஒரு காலத்தில் பூம்புகார் என்றாலும் காவிரிப்பூம்பட்டினம் என்றாலும் என்று இலக்கியம் சார்ந்தும் புராணம் சார்ந்தும் வரலாறு சார்ந்தும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார் .

அங்கே அகத்திய முனிவர் வருகிறார் சிவபெருமான் வருகிறார் பூதங்கள் வருகின்றன அதற்கப்புறம் அரக்கர்கள் ,ஆறு ,அகத்தியரின் கமண்டலத்தை கீழே தள்ளிவிட்டு அதிலுள்ள நீர் ஆறாக பெருகி இப்படியான பல கதைகள்  இருக்கின்றன . விநாயகர் வருகிறார்,

முனிவர்கள் தவம் இருப்பது இதுபோல் காட்சிகள் வழியே இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள சில பதிவுகளை வைத்து பெயர்க்காரணம் வந்திருக்கலாம் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்ற தகவலை நூலாசிரியர் கூறுகிறார்.

 மணிமேகலையில் கூறும் பெயர் வரலாறு பற்றியும் குறிப்பிட்டுள்ளார் சேக்கிழார் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார் அக்னி புராணம் கூறும் பெயர் வரலாற்றின் கூறுகிறார் அங்கு மகா விஷ்ணு வருகிறார் .தவிர முனிவர், பெண், நதி இப்படி  பல தகவல்கள் வருகிறது

ஆகவே பெயர் வரலாறு குறித்த பல்வேறு அபிப்பிராயங்களை நூலாசிரியர் இங்கு பதிவு செய்கிறார்.

 ஆற்றின் முகத்தில் புகுந்து பெரிய கப்பல் என்று விளக்குகிறது புறநானூறு. புகார் என்னும் பெயரில் உண்மையாக ஆராய்ச்சி செய்தால்…. அங்கு வாழ்பவர்கள் எவரும் எந்த பொருளையும் விரும்பி பிற ஊர்களில் போக மாட்டார்கள் என்பதை மற்றவர்க்கு தெரிவிக்க புகார் என்றும் குறித்தனர் என்றும் சொல்லி இருக்கின்றனர். அதேபோல் இந்த ஊருக்குள் படையெடுக்கும் வேற்று மன்னர்கள் அஞ்சிப் ,   'புகார்' என்றும் அழகான நகரம் இது ஆகையினால் பூம்புகார் என்றும் சொல்லப்படுவதுண்டு என்றும் பலவாறு இதற்கான பெயர் காரணம் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய பூம்புகாரின் அமைப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு இருந்தது என்று சிலப்பதிகாரம் கூறும்  தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் அறுபதினாயிரம் குடிமக்கள் என்று குறிப்பிடுகின்றனர் அப்போது கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் அதுமட்டுமல்ல . பூம்புகாரில் வாழ்ந்த அத்தனை மக்களும் பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றனர்.

 அதற்காக சிலப்பதிகாரம் அழகான ஒரு பாடலைத் தருவதை இங்கு உங்களுக்காகத் தருகிறேன் . 

திருவின் செல்வியோடு   பெருநில மடந்தையை

 ஒருதனி யாண்ட செருவடு    திண்டோள்

 கரிகாற் பெரும்பெயர்த்  திருமா வளவனைப் பாலை பாடிய பரிசிலன்   றெடுத்த

மாலைத் தாகி யவளங்கெழு செல்வத்து 

ஆறைந் திரட்டியும் ஆயிரம் கொடிகளும் 

வீறுசால் ஞாலத்து வியல் அணியாகி உயர்ந்தோர் உலகில் பயந்தரு தான் மும் 

இல்லது    மிரப்பு நல்லோர் குழுவும் 

தெய்வத் தானமும் திருந்திய பூமியும் 

ஐயர் உறையுளும் அறவோர் பள்ளியும் விண்ணவர் உலகின் நண்ணிடு  நகரமொடு எண்ணுவரம் பறியா இசையொடு சிறந்த 

என்று அன்றைய பூம்புகார் பற்றி  இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல , வெளிநாட்டார் குறிப்புகளும் இதை நமக்கு உண்மையாக்குகிறது. 

கிபி முதலாம் நூற்றாண்டில் மேல் நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்த யவன ஆசிரியர் தாலமி என்பவரும் , மேல் நாட்டு வரலாற்று ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட பெரிப்ளூஸ் என்ற நூலிலும் பூம்புகாரின் வளமை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு விரிந்து கிடக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றனர்.

பூம்புகாரை ஆண்ட புகழ்வாய்ந்த மன்னன் பற்றி கூறும் பொழுது நமக்கு கரிகால் பெருவளத்தான் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. கரிகாலன் பெருமையை பல்வேறுபட்ட இலக்கிய நூல்களும் புகழ்ந்து பேசுவதையும் இங்கு  குறிப்பிட்டுள்ளனர் .சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கரிகாலன் குறித்து நிறைய சிறப்புகளை கூறியுள்ளார் .

நாம் இங்கு கவனிக்கவேண்டியது அந்த மன்னன் தன்னுடைய ஆட்சியில் நாடு என்றென்றும் பஞ்சத்தினால் பரிதவிக்க கூடாது என்ற விரிந்த நோக்கும் தொலைநோக்குப் பார்வையும்  இருந்ததனால் என்னவெல்லாம் செய்தார், என்று குறிப்புகள் உள்ளன.

 இந்த மன்னனின் ஆட்சியை நாம் படிக்கும் பொழுது இன்றைய நமது சமூகத்தின் அரசியல் நமது நாட்டின் ஆட்சி இவையெல்லாம் நம் கண்முன்னே வந்து போகின்றன அதுவும் குறிப்பாக இன்று இந்த வைரஸ் தொற்றால் நாம் அனைவரும் அவதியுற்று வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதற்கு இன்றைய சூழலையும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழகத்தில் பூம்புகார் என்ற பகுதியில் ஒரு மன்னன் எந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளையும்   பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்களுக்காக எடுத்துள்ளான் என்பதையும் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது.

 கரிகாலன் பொருட்டு பல பெருமையான விஷயங்கள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.  கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் குறிப்பிட்டுள்ள பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஜெயங்கொண்டார் தம்முடைய கலிங்கத்துப்பரணியில் கரிகாலன் பற்றித் தந்துள்ள  குறிப்புகளும் , ஒட்டக்கூத்தர் பிள்ளைத்தமிழில் கரிகால்வளவன் கொடைச் சிறப்பை எவ்வாறு பாராட்டியுள்ளார் என்பதற்கான தரவுகள் அனைத்தும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பட்டினப்பாக்கம் என்பது என்ன என்பதற்காகவே ஒரு தலைப்பில் சில பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .அந்த பட்டினபாக்கம்  பிரம்மாண்டமான ஒரு நகரமாக இருந்திருக்கிறது .இங்கு அமைச்சர்களுக்கான வீடுகள், படைத்தலைவர்க்கான மாளிகைகள், அரசாங்கத்தை பணிபுரிபவருக்கான  இருப்பிடங்கள் ,பெரிய வர்த்தக துறையில் அங்கம் வகித்தவர்களுக்கு வீடுகள் உழவுத் தொழிலை வளப்படுத்தும் வேளாளர் பெருமக்கள் இல்லங்கள் , அரண்மனை, அரண்மனையைச் சூழ்ந்துள்ள ராஜபாட்டை, அங்கங்கே ஆலயங்கள், பரந்தாமன் கோவில், சூரபதுமனுக்கான  தனிக்கோயில், ஈஸ்வரன் கோவில் இப்படி பலவகையான கட்டமைப்புக்கள் உடன் பெற்ற நகரமாக பட்டினப்பாக்கம் இருந்திருப்பதை சிலப்பதிகாரம் அழகான பாடல் வழியே வெளிப்படுத்துகிறது .

 பூம்புகார் நகரம்  இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது ஒன்று பட்டினபாக்கம் மற்றொன்று மருவூர்ப்பாக்கம்.  ஏற்கனவே கூறிய நகரமைப்பு பட்டினப்பாக்கத்தில் உள்ளதோடு மறுபக்கத்தில் கடலில் சென்று மீன் பிடிக்கும் பரதவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் மற்றவர்கள் கலந்துரையாட தக்க வகையில் கடற்கரையை ஒட்டிய கிழக்கு பகுதி மருவூர்ப்பாக்கம் என்று அழகாக பிரித்துள்ளனர்.

நாளங்காடி என்பது பற்றி அழகாக விளக்கம் கொடுத்துள்ளனர்.இதை பற்றியும் அழகாக விளக்குகிறது சிலப்பதிகாரம் . பட்டின பாக்கத்திலும் மருவூர்ப் பாக்கத்திலும் வாழ்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டும் பொருட்களை  வாங்கிக்கொள்ளும் பொருட்டு பகல் நேரத்தில் செயல்படக்கூடிய கடைகள் இருந்திருக்கின்றன .அவற்றிற்குப் பெயர்தான் நாளங்காடிகள் என்று அழகாகக் கூறியிருக்கின்றனர் .

ஒவ்வொன்றிற்கும் பொருள்பட இந்த நூலில் விளக்கம் கொடுத்துள்ளனர் பூம்புகாரில் ஐந்து வனங்கள் இருப்பதாகவும் அவை ஒவ்வொன்றும் எதற்காக பயன்பட்டன என்ற குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் வாசிக்கும் பொழுது சற்று பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது. இங்கு  குறிப்பிடப்பட்டவை பெரும்பாலும் உண்மையை தகவல்களாகவே இருக்குமென நம்புகிறேன் .

சற்றே.. கூடக் குறைய இருந்தாலும் இவ்வளவு வளம் பொருந்திய  நாட்டை கொண்ட பகுதி எல்லாம் அந்த காலத்தில் இருந்திருக்கிறது என்பது வியப்பே .

 பூம்புகார் ஐவகை மன்றங்கள் குறித்தும் ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க .வெள்ளிடை மன்றம் , இலஞ்சி மன்றம் , நெடுங்கல் நின்ற மன்றமும் , பூத சதுக்கம்,  பாவை மன்றம் என்று இன்று நம்மூர்களில் நாம் பார்க்கும் பூம்புகார் கடைகளில் இருக்கின்றன அல்லவா அந்த அமைப்பில் இருக்கக் கூடியவை தான், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களும் உள்நாட்டு வியாபாரம் செய்யக்கூடிய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடம் தான் வெள்ளிடை  மன்றம் என்று குறிப்புகள் உள்ளன ரொம்ப அழகாக இருக்கிறது ஒவ்வொரு விஷயமும்.

யாருக்குப் பயன் தருகிறதோ இல்லையோ தமிழ் குறித்தும் வரலாறு குறித்தும் ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நூல் உதவியாக இருக்கும். அதே போல நமது வரலாறுகளையும் இலக்கியங்களையும் படிப்பதற்கு ஆர்வமாக இருப்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

பல வருடங்களுக்கு முன்பு சிலப்பதிகாரம் குறித்தெல்லாம் நான் படித்ததினால் தமிழ் பாடமும் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர் பயிற்சி என்று அந்த காலகட்டங்களில் முடிந்து விட்டதனால் இந்த புத்தகத்தை நான் விரும்பித்தான் படித்தேன் ரொம்ப அழகான புத்தகம்.

உமா

No comments:

Post a Comment