Thursday 18 March 2021

காந்திமதியின் கணவன்

காந்திமதியின் கணவன் 


எழுதியவர் : கலைமாமணி விக்கிரமன்

யாழினி Uதிப்பகம் 

விலை ரூ 90

பக்கம் : 144

முதல் பதிப்பு : 2013


இது ஒரு சமூக நாவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது  . ஒரு 40 வருட காலம் முன்னாடி இருந்த சமூகச் சூழல் தான் நாவல் முழுவதும் பயணம் செய்கிறது. பழைய திரைப்படம் பார்ப்பது போல ஒரு உணர்வு. காந்திமதியும் சீதாவும் பள்ளித் தோழிகள். சீதா பெரும் பணக்காரர் வீட்டுப் பெண் , காந்திமதி வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் வறிய குடும்பத்துப் பெண். ரகு என்ற அவளது அண்ணன் பராமரிப்பில் வாழும் காந்திமதி இயல்பிலேயே அழகும் எளிமையும் நிறைந்தவள். வீணை வாசிப்பு பாடும் திறன் இரண்டும் அவளது வாழ்க்கைப் பாதையில் பல மாற்றங்களை உண்டாக்கியதை நாவலின் ஆரம்பம் முதல் இறுதி வரைக் காணமுடிகிறது. தனது தோழியைப் பெண் பார்க்க வரும் கந்தநாதன் , எவ்வாறு காந்திமதியை மனைவியாக அடைகிறான் . திருமணத்திற்குப் பிறகு அவனது உடல் குறைபாட்டால்  அந்தக் குடும்பத்தில் உருவாகும் விளைவுகள் , காந்திமதி பிறந்த வீட்டுக்குச் சென்று விட்ட பிறகு அவளது தோழி சீதாவின் கணவனால் ஏற்படும் தொல்லைகள் என கதை நகர்கிறது . உடல் குறைபாட்டை  சரிப்படுத்த  ஜப்பான் சென்று விட்ட கந்த நாதன் திரும்பிய விமானம் விபத்துக்குள்ளாகி மகனை இழந்த பெற்றோராகி விடும் காந்திமதியின் புக்ககத்தார் . தனது அண்ணனையும் இழந்த காந்திமதி தனது பாடும் திறமையால் ஆசிரியராகி வாழ்க்கையை செலுத்த,  இறுதியில் எப்படி அவளது வாழ்க்கை மாறுகிறது என்பது தான் கதை. 


பெண்கள் தனித்து வாழ முடியாத சமூக அவலம் , குடும்ப அமைப்புக்குள் பெண்கள் எவற்றை எல்லாம் சரி கட்டிப் போக வேண்டி இருக்கிறது , பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் , ஆண் - பெண் இடையே அவர்கள் திருமணத்திற்குப் பிறகான ஏற்படும் அன்பு - காதல் - காமம் இவற்றின் தேவை என நாவல் ஒரு சராசரியான சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. இறுதியில் கந்த நாதன் மகான் உருவத்திலே திரும்பி வருவதும் காந்திமதியைக் காண்பது இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது வரை நன்றாகவே பயணிக்கிறது. இறுதியில் ஏனோ இருவரையும் கொன்று சமூகத்தின் கரை படியாத மனிதர்களாக நாவலை முடித்திருக்கிறார் ஆசிரியர் . நான் ஏற்கனவே கூறியது போல அறுபதுகளில் வந்த திரைப்படங்களின் சாயலை நாவல் நம்மை சிந்திக்க வைக்கிறது. 


No comments:

Post a Comment