Monday 13 August 2018

AID INDIA -Sudar Amaipu-Lions

இன்றைய நாளின் சிறப்பு (12.08.18):
----------------------------------------------------------

நேற்று காலை முகநூலில் தோழர் சுடர்நடராஜன் பதிவு , பழங்குடிக் குழந்தைகளுடன் சென்னைப் பயணம் நண்பர்களின்  தகவலுக்காக எனக் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் வாட்ஸ் அப்பில் பயணத் திட்டத்தை அனுப்பி , உங்களை எப்போது சந்திக்கலாம் எனக் கேட்டிருந்தார்.

அதற்கு முன்பே தோழர்  Krishnamoorthy Jayaraman , உமா நடராஜனிடம் பேசுங்கள் , குழந்தைகளுடன் சென்னை வருகிறார் என்றார்.

சனிக்கிழமை , நேற்று மாலை தான் நடராஜனிடம் பேசி இன்று சந்திப்பதாகக் கூறினேன். மனதின் ஓரம் ஒரு சின்ன நெருடல் , குழந்தைகளை சும்மா போய்ப் பார்க்கத் தோணல ,

அரிமா தலைவர் நண்பர்  Sathyanarayanaraj Balaguru விடம் இதைக் கூறி , குழந்தைகளுக்கு உதவி கேட்க , உடனே .. நல்லது ... நிச்சயமாக செய்யலாம் , அவர்களது தேவை என்ன என்று கேளுங்க உமா என்றார். நானும் இதை நடராஜனிடம் கேட்க , சரி ... குழந்தைகளுடன் பேசிவிட்டுக் கூறுகிறேன் என்றார்.

அதே போல மாலை 6.30 மணியளவில் , 30 குழந்தைகள் .... அவர்களுக்கு  பள்ளி செல்ல பைகளும் , அதனுள் பேனா , பென்சில் , ரப்பர் , கூர்ப்பி இவை இருந்தால் நல்லது எனத் தெரிவித்தார். (6 - 8 வகுப்புக் குழந்தைகள்)

உடனே சத்யாவிடம் தெரிவிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. Sgopalakrishnan Subramaniam இவரது உதவியுடன் அனைத்துப் பொருட்களும் வாங்கி  , பள்ளி செல்லப்  பைகள்  (School Bag) ஆர்டர் செய்து , 3 மணி நேரம் கழித்து திரும்ப சென்று குரோம்பேட் ரயில் நிலையத்தில்  அதைப் பெற்று , இரவு 12.30 வரை பேக்கிங் செய்தோம்.

இன்று காலை எய்டு இந்தியா நிறுவனத்தில் Vasanthi Devi அம்மா , சுடர் அமைப்புக் குழந்தைகள் அனைவரையும் சந்தித்து , அவர்களுடன் சற்று உரையாடிவிட்டு , சென்னை விஷன் 101 லயன்ஸ் சார்பாக தலைவர் சத்யாவும் , அவரது தந்தையும் வஸந்தி தேவி அம்மா முன்னிலையில்  குழந்தைகளுக்கான பரிசாக பைகளையும் பொருட்களையும் வழங்க அனைவரது முகமும் மலர்ந்தன மனமும் தான்.

கொங்காடை கிராமத்தின் இளம் விஞ்ஞானி சின்னக் கண்ணன் தன் அனுபவத்தைப் பகிர , செயல் வீரர்களை உருவாக்கும் சுடர் அமைப்பை எண்ணி பெருமை கொள்ள முடிகிறது.

தொடர்ந்து கடந்த மாதத்தில் மிகப் பிரபலமான நடுப்பாளையம் பள்ளிக் குழந்தைகளுக்காக  ஆசிரியர் தேன்மொழி அவர்களிடம்  ( நடுப்பாளையம் பள்ளி பற்றி தகவல் வேண்டுவோர்  பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் பார்க்க )
காகிதப் பாவைகள் புத்தகம் 4 எண்ணிக்கையில் Crea வின் பரிசாக  வழங்கப்பட்டது.

தொடர்ந்து குழந்தைகள் ஒரு செயல் வழிக் கற்றல் செயல்பாட்டில் ஒன்றிவிட , வஸந்திதேவி அம்மா , நான் , நடராஜன் , கோபாலகிருஷ்னன்  , லயன்ஸ் சத்யா , அவரது தந்தை பாலகுரு ஆகியோர் இயக்க செயல்பாட்டு திட்டங்களில்  மூழ்கிவிட்டோம்.

தோழர் நடராஜன் தனது சத்தியமங்கல வனப் பகுதிப் பழங்குடியினப் பள்ளிகளில் 3 பஞ்சாயத்துகளில் 20 பள்ளிகளை இணைத்து எவ்வாறு பள்ளி மேலாண்மைக் குழுக்களைப் பலப்படுத்தியுள்ளார் என்பதை விரிவாக விளக்கினார் ,

ஆகஸ்டு 15 கிராம சபைக் கூட்டத்தை நோக்கி எவ்வாறு அதன் நகர்வு  உள்ளது. வெற்றிக்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன என்று மிக அழகாக நம்முடன் பகிர்ந்தார். இதையே நாம் ஒரு மாதிரியாகக் கொண்டு மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லலாம் என தலைவர் வஸந்தி அம்மா கூற , அதற்கான திட்டமிடலும் ஆரம்பித்துள்ளது. இது பற்றிய விளக்கமான பதிவு பின்னர் எழுதுகிறேன்.

இப்படியாக இன்றைய நாள் மலைவாழ் குழந்தைகளின் அன்போடு முடிவுக்கு வந்தது. கேட்டவுடன்  சுமார் பதினைந்து ஆயிரம் (ரூ15000) செலவு  செய்து உதவிய லயன்ஸ் சத்யாவிற்கு பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும் , அசத்தும் அரசுப் பள்ளி A3 ஆசிரியர்கள் குழுவும் நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.

அன்புடன்
உமா

Wednesday 8 August 2018

எனது வாழ்வில் கலைஞர்

கலைஞர்

சிறு வயதிலிருந்தே வீட்டில் அப்பா உதய சூரியன் சின்னத்தை வீட்டில் வைத்திருந்து , கட்சியைப் பற்றிப் பேசிப் பார்த்தவள் நான். தேர்தல் வந்தால் 20 நாட்களுக்கு முன்னரே ஒரு குழுவுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கும் நிகழ்வுகளைப் பார்த்துள்ளேன்.

பக்கத்து வீடு , எதிர்த்த வீடு , தூரத்து வீடுகள் என நிறைய பேர் வீடுகளில் கலைஞர் பற்றிய ஆரவாரம் இருக்கும்.

கொஞ்சம் பெரியவளான பிறகு அண்ணா பற்றி படிக்கையில் கலைஞர் பற்றி அறிந்தது சொற்பம்.

அம்மாவும் ஆசிரியர் என்பதால் அடிக்கடி வீட்டில் கலைஞர் பற்றிய பகிர்வு தேர்தல் சமயங்களில் பாட்டியுடனும் சேர்ந்து நடக்கும்

1996 இல் PTA இல் பள்ளியில் வேலை செய்யும் போது வந்த தேர்தலில்  பணி புரிய எனக்கு வாய்ப்பு வந்தது. எனது ஆசிரியர்  வள்ளியம்மை அவர்கள் தான் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி அழைத்துச் சென்றார்.  அப்போது DMK பெரும் வெற்றி பெற்றது. அப்போதுதான் சற்று அரசியல் பற்றி புரிய ஆரம்பித்த வயது.

திருமணத்திற்குப் பிறகு அங்கும் இதே போல கலைஞருக்குத்தான்  வீட்டில் மரியாதை ... இரண்டு முறை எனது கணவர் சென்னை வந்து கலைஞரை நேரில் சந்தித்து இருக்கிறார்  , ரொம்ப எளிமையாகப் பேசியதாகக் கூறினார் .

ஏதோ பாசம் உள்ளே இருந்து கொண்டே இருக்கும்  அரசியல் தாண்டி அந்தக் கலைஞனிடம் ....

சரி ... இப்போது எனது வாழ்வின் மாற்றங்கள் இவரால் நிகழ்ந்தவை பற்றி  ...

வாழ்வாதாரமான ஆசிரியப் பணி அவரால் தான் கையெழுத்தானது... வாழ்வென்னும் பெருங்கனவு  என்று என்னைப் பற்றி  ஒரு இதழில் கட்டுரை சமீபத்தில் வெளிவந்தது, ஆனால் அன்று எனது ஒரே கனவு அரசு வேலை தான்.

1997 இல் திருமணத்திற்குப்  பிறகு , வறுமையின் நிறம் சிவப்பாகத் தான் இருந்தது, அன்றாடத் தேவைகளுக்காக ஒயர் கூடை பின்னும் வேலை செய்து வாழ்ந்திருக்கிறேன். காஞ்சிக் கோவில் பள்ளியில் அப்போது இருந்த தலைமை ஆசிரியர் யாராவது ஒரு ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லையெனில் 9 மணிக்குப் பிறகு உதவியாளரை அனுப்பி என்னை வந்து பாடம் எடுக்கச் சொல்லுவார் , அப்படி ஒரு நாள் சென்றால் தான் ரூ 25 ரூபாய் சம்பளம் , யாராவது லீவு போட மாட்டாங்களா எனக் காத்துக் கொண்டு இருப்பேன். எனது கணவரின்  2000 ரூபாய் சம்பளத்தில், அவரது பெற்றோரிடம் 1000 கொடுத்து விட்டு மீதமுள்ள 1000 த்தில் குடும்பம் நடத்த அவ்வளவு சிரமப்படுவோம்  ...

ஆகவே அரசுப் பள்ளியில் வேலைக்காக 4 ஆண்டுகள் காத்திருந்த தே எனது அன்னாளின் மிகப் பெரும் கனவாக இருந்தது.

அந்த முதல் கனவும் கலைஞரால் தான் நனவாகியது. நீங்கள் கேட்கலாம் , படிச்சா அரசு வேலை தரப் போவது , அவர் என்ன செய்தார் என ? இல்லை அப்போது படித்தவர் கூட இன்னும் ஆசிரியர் பணி கிடைக்காத சூழல் அடுத்த ஆட்சியால் இன்னும் இருக்கிறார்கள் வேலை கிடைக்காமல் .

2001 மே மாதம் தேர்வாகி வரிசைப் பட்டியலில் வந்தாலும் , அடுத்த ஆட்சி மாற்றத்தில் ஆகஸ்ட்டில்  தான் ஆணை கைக்கு வந்தது.

இவரது தலையீட்டால் தான், அவரது கைகளால் ஆணை பெறப்பட்டதால் GPF க்குள் வர முடிந்தது.

எத்தனையோ நன்மைகள் , வெறும் பொருளாதாரம் என்கிறோம். அதுதானே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது.

வெறும் 5 ஆயிரத்திற்குள்  சம்பளம் பெற்ற நான் 6வது ஊதியக் குழுவை கலைஞர் வந்ததால் பல மடங்கு பெருகி இன்று 70 ஆயிரத்தைத் தொட்டிருக்கிறேன் என்றால் கலைஞர் மிகப் பெரும் காரணம் என்றால் மிகையாகாது. (இது என்னைப் போன்ற எல்லா ஆசிரியருக்கும்   , அரசு ஊழியருக்கும் பொருந்தும்...)

தூரத்தில் நின்று ஒரு புடவையை, ஒரு புத்தகத்தைக் கண்களால் மட்டுமே ரசிக்க முயன்ற என்னைப் போன்ற வாழ்வின் அடித்தட்டு சூழலில் இருந்து வந்தவர்களுக்குத் தெரியும் இன்றைய எங்களது பொருளாதாரம் எங்களை எவ்வளவு தலை நிமிர வைத்துள்ளது என்று.

அதுவும் பெரியார் மண்ணில் வாழ்ந்து பெண்ணுரிமைச் சிந்தனையை அறிந்தும்  அதை செயல்படுத்த என்னைப் போன்ற பெண் களுக்கு ஒரு பொருளாதார சுதந்திரம் தேவைப்படுகிறது.  அதைக் குறையில்லாமல் எனக்குத் தந்த வழி என்னவோ கலைஞர் தான்.

இந்த வேலை இல்லை என்றால் என்னவாகி இருக்கும் ?  அன்றாடம் ஏதாவது வயிற்றுப் பிழைப்புக்குப் பொருள்  தேடும் மானுடமாய் போயிருப்பேன். அல்லாமல் எனக்காக ஒரு பாதை , நோக்கம் , பயணம் எனக் கற்றுக் கொடுத்துள்ளது கலைஞரின் ஒரு ஆணை .

ஒழுகும் அரை நூற்றாண்டு  கடந்த எங்கள் மண் வீடு இந்த வேலையால் தான் இறுமாப்புடன் உயர்ந்து நிற்கிறது.

அவ்வப்போது பிள்ளைகளிடம் கடைசி காலத்தில் உங்கள கஷ்டப்படுத்த மாட்டேன்டா , சாகும் வரை பென்ஷன் வரும் , நான் செத்தாலும் அப்பாவுக்குப் போதும் , நீங்க உங்க வாழ்க்கைக்கு கஷ்டப்படுங்கன்னு சொல்றேன்னா அதுக்கும் இந்த வேலை தான் காரணம் .

அன்றாடம் உணவுக்கும் , குடும்ப செலவுக்கும் , வீட்டு வாடகைக்கும் துன்பப்படும் எத்தனையோ மனிதர்களை தினம் சந்திக்கிறேன்.

அவர்களைப்  பார்க்கையில் நாம் எவ்வளவு கருணை பெற்றவர்கள் என்பதை உணர்வேன் , இந்தக் கருணைக்கு ஒரு கையெழுத்துப் போட்டது கலைஞர் தான் .

சமச்சீர் கல்வி புத்தகத் தயாரிப்பின் போது கோவையில் அவர் நடத்திய செம்மொழி மாநாட்டுப் படங்களை எனது 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தின் முதல் பாடமான மூவேந்தரில் பயன்படுத்தினேன் , ஆனால் அந்த பச்சை ஸ்டிக்கர் ஒட்ட சொன்ன போது ரொம்ப பயந்தேன். ஆனா எதிர்க்கட்சிக் காரங்க கண்ணில் அது படவில்லை போலும் , அது எதுவும் மாறாம குழந்தைகள் படிக்க அப்படியே கிடச்சது.

மறுபடியும் இந்த சம்பளத்தப் பத்தி சொல்லணும்னா வட இந்திய மாநிலங்களுக்குப் பயிற்சிக்குப் போகும்  போது சட்டீஸ்கர் ,பீஹார் ,ஒரிஸா இன்னும் முக்கால் வாசி மாநிலங்களில் ,ஏன் கேரளாவில் கூட ஆசிரியர்களுக்கு இந்த சம்பளம் தரவில்லை அரசு .

சென்னை வந்த பிறகு நிறைய முறை கோபாலபுரம் பக்கம் சென்றுள்ளேன். அவரது வீட்டு வழியாகக் கூட 5 வருடம் முன்பு சென்றேன்.இன்றிருக்கும் மனோ நிலை அன்று இருந்திருந்தால் நிச்சயம் சந்தித்து இருப்பேன் .என்னவோ அதை செய்யவில்லை .. தற்போது வருத்தமாக உள்ளது.

சென்னையில் திரும்பிய இடமெல்லாம் வானுயர்ந்து வீற்றிருக்கும் வரலாற்றுச் சின்னங்களை நிறுவியது கலைஞரே என அறியும் போது அந்தப் பக்கம் பேருந்தில் , ரயிலில் செல்லும் போது பார்க்கையில் ஒவ்வொரு முறையும் பிரம்மிப்பேன்.
அவற்றுள் முக்கியமானது ACL அண்ணா நூற்றாண்டு நூலகம் ... எத்தனாயிரம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்று கணக்கிட்டால் அறிவோம்  பெருமையினை ...

அரசியலில் எவ்வளவோ நிறை குறைகள் இருந்தாலும் , ஆனால்

"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்கக் கொளல் "
..என்பதாக நான் கலைஞரைப் பார்க்கிறேன்.

இப்படி என்னை எழுத வைக்க ஒரு தகுதியையும் இந்தப் பணியே எனக்குத் தந்துள்ளது என்றால் அதுவே உண்மை , அங்கும் கலைஞர் நிற்கிறார்.

இவ்வாறு நம் ஒவ்வொரு வர் வாழ்விலும் நேரடியாக மறைமுகமாக வாழும் பெருந்தலைவர் கலைஞர் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.

பெரியாரின் விரல் பிடித்து நடக்க ஆசைப்படும் என்னைப் போன்ற பெண்களின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக கலைஞர் அவர்கள் வழி காட்டுகிறார்.

சொலன் வல்லன்  சோர்விலான்
அஞ்சான் அவனை
இகழ் வெல்லல் யாருக்கும் அரிது .. என்ற
வள்ளுவனின் சொல்படி மெரினாவை அடைந்த கலைஞரைத் தவிர  பெருந்தலைவர் எனத் தமிழகத்தில் வாழும் மனிதர்கள் எவருமில்லையே என இனி என் பள்ளிக் குழந்தைகளிடம்  சொல்ல வேண்டி இருக்கிறதே என்ற வேதனையுடன்

உமா

Saturday 4 August 2018

வாசிப்பை நேசிப்போம் - 10

நூல் விமர்சனம்

சிறகசைப்பில் மிளிரும் வெயில்

முகநூல் நண்பரான  கோவை சசிகுமார் எழுதிய இப்புத்தகம் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ள ஒரு கவிதை நூல் .
அழகானதொரு அட்டைப்படம் ... மெதுவாக உள்நுழைந்தால் ..

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் அம்சப்ரியா தந்துள்ள, கவிதையென்னும் அன்புப் பாதை என்ற தலைப்பிட்ட வாழ்த்துரையில், கவிதை படைக்கும் சூழல்  , கவிதைப் படைப்போர் எத்தகைய வரம் பெற்றவர்கள், என்றெல்லாம் சொற்களால் அணிகலனாக்கி அழகுபடுத்தியுள்ளார்.

தொடர்ந்து , குவிந்து கிடக்கும் சொற்களினிடையில் ஒளிந்திருக்கும் கவிதை - என்று மதிப்புரை தந்துள்ள பூபாலனது வரிகளில் ... பத்திரப்படுத்தப்பட்ட  சொற்கள்  தாம் பின்னாட்களில் கவிதைகளாகி விடுகின்றன என்ற கருத்துகள் மனம் புன்னகைக்க வழிகாட்டுகிறது.

விவசாயக் குடும்பத்தில் இருந்து, அறிவியல் படித்து ஆய்வக மேலாளராகப் பணியாற்றினாலும்  இயற்கையோடு வாழ்ந்து வரும் சசிகுமார் கவிதை படைப்பது வியப்புக்குரியது அல்ல , ஆனால் ஒரு மனிதனை உயிரோடு அறிமுகப்படுத்தவும் இறந்த பின்பு வாழவைக்க உதவுவதும்  படைப்புகள் தான் என விளக்கம் கொடுத்துள்ளது சிறப்பு.

முதல் கவிதையின் வரிகளே நம்மை சுருக் என தைக்கிறது. ஆம் ... மெளன வலியறியாத எழுத்துகள் .... முட்களின் கூர்மையில் பிரசவிக்கிறது .. என முடிக்கிறார்.

93 பக்கங்களும் கவிதை வரிகள் தவழ்ந்து, ஓடி ஆர்ப்பரிக்கின்றன. எந்த ஒரு கவிதைக்கும் தனியானதொரு தலைப்பில்லை.'

உனக்கான என் கற்பனைகள் மயிலிறகாய் பத்திரப்படுத்துகிறேன் ஏதோ ஒரு ரூபத்தில் .... வரிகள் நம்மையும் மனதை ஆழ உழ வைக்கிறது , எல்லோருக்குமான  கவிதையாக இதைப் பார்க்கிறேன்

ஏறத்தாழ 80 கவிதைகள் சிறகசைப்பில் வெயிலாக மிளிர்கின்றன. அவற்றுள் 5 வார்த்தைகள் கொண்ட கவிதையும் உண்டு... 20 வரிகளுக்கும் மேலான கவிதைகளும்  உண்டு.

தாய்மையைத் தேடும் கவிதை ,
சாதிகளின் வன்மம் பேசும்கவிதை ,
அனுபவங்களுக்கான கவிதை , பிரியமானவரின் நினைவுக்கான கவிதை , தவிப்பு , படைப்பாளிகளுக்கான கவிதை , வெட்டப்படாத மரங்களின் கவிதை ,
நிழலுக்கான கவிதை , ' இரவோடு ஒரு போராட்டக் கவிதை , துணிவு பற்றிய கவிதை ,தேடலின் முற்றுப்புள்ளிக் கவிதை , தவிப்பின் தருணங்கள் பேசப்படும் கவிதை , மெளனம் கலைந்து சிரித்த கவிதை , ஏமாற்றம் வென்ற போதான கவிதை , ரசனை மரணிக்காத கவிதை , பணமிழந்த வயோதிகக் கவிதை , ஞாபகங்களுக்கான கவிதை , கடைசி சந்திப்பின் கவிதை ,
கவிஞனின் கற்பனைக், கவிதை , காற்றின் வன்மத்தில் நிரப்பிக் கொண்டிருந்தன சருகுகள் கவிதை , ..உணர்வுகளின் ஊமை வலிகளின்  கவிதை , மயானக் காடு , நடுகற்கள் , எப்போதாவது நிழலாடும் கதவிடுக்குகள் , பிறழ்ந்து போன குரோம சோம்களால் திரித்து விடப்பட்ட பாலினக் கவிதை , இறந்த கால வசந்தங்கள் , காயம் பட்ட சுவடுகள் , பூசாரியின் கண்ணீர்த் துளி , நெடுஞ்சாலையின் கதை ,மலர் விரியும் மெளனச் சப்தங்கள்  , இசை , மண் சட்டி சோறு , விரக்தி என ஒவ்வொன்றும் இயல்பாக நம்மை விரல் பிடித்து அழைத்துச் செல்லும் கவிதைகளாக இருக்கின்றன.

தலைப்பின் பெயரே நம்மை ரசிக்க வைக்கும் மயக்கத்தின் ஆரம்பமாக இருக்கிறது. சிறகு அசையும் போது ஒளிரும் வெயில் எப்படி மிதமாய் , இனிமையாய் நம் உடலை வருடிச் செல்லுமோ அது போலவே உள்ளிருக்கும் கவிதை வரிகளும் உணர்வுகளை வருடிச் செல்வதாக அமைந்துள்ளது.

வார்த்தைகள் அருவியாய் கொட்டி அழகாய் அதனதன் இடத்தில் நிரம்பி படிப்பதற்கு இதமாகவும் தெளிவாகவும் கருத்துச் செறிவின் மொத்தத் தேடலாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அற்புதமான கவிதைப் புத்தகம்

அன்பும் நன்றியும்
உமா

பெண்கள் பிரபஞ்சத்தின் கண்கள்

பெண்கள் பிரபஞ்சத்தின்  கண்கள் :

8 வயது முதல் 70 வயதுள்ள ஆண்கள் உள்ளடங்கிய குழுவினருடன் பெண்களின் நிலை , ஆண் எவ்வாறு ஒவ்வொரு பெண்ணையும்  பார்க்க வேண்டும் , அவரவர் நிலைப்பாட்டில்  என்ன நினைக்கின்றனர் என ஒரு கலந்துரையாடல் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நிகழ்ந்தது.

குழந்தைகள் பெரியவராகிப் போன சூழல் ... நீங்கள் எதை வேண்டுமானாலும்  பேசலாம்  , இது வகுப்பறை அல்ல , உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் என்றதும் ஒவ்வொரு குழந்தையும் மனதைத் திறந்தனர்.

பெண்கள் என்றாலே அடிக்கணும்னு தோணுது ... ஒரு 13 வயது சிறுவன்.

பெண்கள் என்றால் ஏளனம் செய்யக் கூடாது என்றான் ஒரு 8 வயது சிறுவன் , ஏளனம்னா என்ன என்றேன். இகழ்ச்சி என்றானே பார்க்கலாம். அருமை .. சென்னைக் குழந்தைகளுக்கு தமிழ் சொற்கள் பயன்படுத்தி பேசத் தெரிந்து இருப்பது கண்டு மகிழ்ந்தேன்.

பெண்கள் என்றாலே காதலிக்கத் தோணுது , சீன் போடறாங்க என்று எதார்த்தமான
உண்மைகளைக் கூறிய ஒரு நாகல்கேணி அரசுப் பள்ளி மாணவன் அவனது ஒவ்வொரு கருத்து வெளியீட்டிலும் அவன் வாழும் சூழலை  தெளிவாக அடையாளம் காட்டினான் .இது பெரும்பான்மை யோருக்கான  நிலை.

மற்றொரு 13 வயது சிறுவன் ... girls என்றாலே பார்ஷியாலிட்டி பாக்குறாங்க என்றான். உதாரணம் சொல்லு கண்ணு என்றதற்கு பள்ளிகளில் நடக்கும் சம்பவங்களைக் கூறி ஆதங்கப்பட்டான்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி குரோம்பேட்டில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவன் காதலிக்கத் தோணுது என்றான்.

மற்றும் சில குட்டிகள் , பெண்கள் என்றால் மதிக்கனும் , சகோதரியா பாக்கணும் , அம்மாவா நினைக்கனும் என ஒவ்வொருவரும் அவரவர் நிலைப்பாட்டில் ..

ஒருவன் சொல்கிறான் , பெண்களை அடிமையாக நடத்தக் கூடாது , வேலைக்காரர்கள் போல நடத்துகிறது கூடாது. எப்போப் பாரு வெறுப்பேத்தராங்க ..

சீன் போடுதல் என்றால் என்ன என விளக்குங்கள் என்றேன். ஒருவன் கூறுகிறான் , நான் சைக்கிள் நேரா ஓட்டிட்டுப் போறேன்னா , ஒரு பொண்ணு சீன் போட்டான்னு வச்சுக்க , நான் வளைஞ்சு வளைஞ்சு ஒட்டுவேன் என்று கூறி எனக்கு விளக்குகிறான் .

இப்படி எல்லாக் குழந்தைகளும்  துரு ஏறிய சிந்தனையுடன் இருப்பதற்கு வழிவகுத்து விட்டதே என வேதனையாக இருந்தது.

அவர்களது அப்பாக்களைக் கலந்துரையாடலுக்கு உட்படுத்தும் போது பெண்களை  சமமாக நடத்த வேண்டும் என்ற ஒரு கருத்தை மையமாக வைத்தே பதிலளித்தது சிறிது மகிழ்வாக இருந்தது.

உடல் உறுப்புகளால் அமைப்பால் மட்டுமே வேறுபட்ட வர்கள்  ஆண்களை விடப் பெண்கள் , பசி , தாகம் , வலி , வேதனை , உணர்வுகள் என எல்லாமும் இருவருக்கும் சமம் , வீட்டில் சகோதரிகளை , அம்மாவை மதிக்கக் கற்றுக் கொள்ளப் பழகினால், தோழமையுடன் புரிந்து கொண்டால்  சமுதாயத்தில் பார்க்கும் எல்லாப் பெண்களையும் அவ்வாறு நடத்தத் துவங்கி விடுவோம் என அவர்களுக்கு அவர்களின் பதில்களாலேயே புரிய வைக்கப்பட்டது.

ஒரே நாளில் மாற்றிட இயலாது , மறுபடியும் சந்திப்போம் எனக் கூறி இன்றைய ஞாயிறின் காலைப் பொழுது மாற்றத்தின் பொழுதாக்க வாய்ப்பு தந்த Roberto George க்கு நன்றி கூறினாலும் என்னுள் கனன்று கொண்டு இருப்பது இந்தப் பிஞ்சு மனங்களை சரிப்படுத்துவது எவ்வாறு என்பதே ...

அன்புடன்
உமா

குக்கூ

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் அரங்கம்
குக்கூ காட்டுப்பள்ளிக் குழுவுடன் (04.08.18)

வாழ்வின் பெருங்குரலெடுத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கத்த வேண்டும் போல் தோன்றிய நேரம் இன்று காலை 11 முதல் 2 வரை ..

ஆம் . கோயில் அரங்கத்தின் வளாகத்தில்  ஆயிரம் பேருக்கும் மேலே  .. சிறு குழந்தைகளாய் , பள்ளி மாணவர்களாய் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , தன்னார்வலர் , ஊர்க்காரர்கள் என ஆரவாரமான ஒரு பெருங் கூட்டமாக குழுமியிருக்க , அகவொளி மனோகர் தேவதாஸ் தனது வயதினினும் பெரும் அனுபவத்தைப் பெற்றது பற்றி மகிழ்வோடு பகிர ,

சுற்றிலும் குழந்தைகள் வரைந்து இருந்த ஓவியங்கள் அவர்களது கனவுகளாக காட்சிப் படுத்தப்பட்டிருக்க  ....

சரவணன் வேலு .. அட என்ன ஒரு அட்டகாச நாடகம் ..கடலுக்குள் பூதம் ... இந்த வண்ணமயமான வழமையான கம்பீரக்  குரலின் தெளிவும்...ஹே...... ஓ.... உம் இன்னும் காதில் ஒலிக்கிறது. பூதத்தின் , அம்மாவின் , கோமாளியின்  வெளிப்பாடுகள் அத்தனையும் ஆயிரம் தங்கக் காசுகளுக்கும் மேலே பொற்கிழி பெறும் தரமானவை.

இது மட்டுமா ..... ஈரோட்டிலிருந்து வந்திருந்த கலைத் தாய் குழுவின் பறை முதலான பல கலைப் பொக்கிஷ இளைஞர் கூட்டம் .... ஆரவாரம் , சந்தோஷம் , ஆர்ப்பரிப்பு ,.. உலகமே அப்போது எங்கள் காலடியில் .....

பரிசளிப்பு , பகிர்வு எல்லாம் முடிந்து .... பிரார்த்தனை .....

குக்கூ காட்டுப்பள்ளி
சிவராஜ் .... எங்கிருந்து பெற்றாயடா இவ்வளவு தெளிவை .... அரச்சலூரில் இருந்த வந்தவனுக்குள் இவ்வளவு பிரம்மாண்டங்கள் ஒளிந்துள்ளதே ....
எப்படி ஒரு எளிமை !!!!!!
எல்லாவற்றிலும் ஒரு உண்மை ஒளிந்திருக்கும்  ....

பிரம்மாண்டமான கோபுரங்களை மட்டுமே பார்க்கிறோம். காலுக்கடியில் மிதிபடும் மண்ணின் அடியில் ஆயிரக்கணக்கான ரத்தமும் சதையும் புதையுண்டவரையும்  நாம் எண்ண வேண்டும் என உலகத்துக்கான ஒரு நீதியைக் கூறி மனதை உரசிச் சென்ற நீயும் , உன் அந்தகாசச் சிரிப்பும் என்னுள் ஒரு ஞானியை சந்தித்த அனுபவத்தைத் தந்த தடா கண்ணா ..... தேடி வந்து அக்கா என நீ கண்டு கொண்ட தருணம் ... இவ்வளவு நாள் குக்கூ வராதது தவறோ எனத் தோன்றியது .

தாமரை : கண்ணம்மா .... உன் மென் குரலெடுத்து ஆதிரைக்கான பாடலாக ... தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...... என்ற பாடலின் வரிகளை எல்லோருக்குமான பாடலாகத் தந்ததை மனம் கொண்டாடி உன்னை வாழ்த்துகிறதடி  சின்னப் பெண்ணே ...

ஆதிரை .... நீ எப்படி இப்படி மென்மையாக ... மற்றொரு நாள் உன்னையும் மற்ற உறவுகளையும் சந்திக்க ஆவலாக ...

அழகான உறவுகள் , எதார்த்தமான கற்பனைகள்

ஜனனத்தின் பயனாக இந்த நாள். சிவனை வழிபட மறந்து இவர்களை எண்ணி இன்னும் தூங்காமல் ...

உமா