Wednesday 17 March 2021

வாசிப்பு - ரப்பர் வளையல்கள்

ரப்பர் வளையல்கள் 


ஆசிரியர் : சிவஷங்கர் ஜெகதீசன்


முதல் பதிப்பு : 2021

விலை : ரூ 160

பக்கம் : 120

வெளியீடு :  சிவசங்கர் ஜெகதீசன் 

முன் அட்டைப் படம் : ஷ்யாம் 


எழுத்தாளர் பாஸ்கர் சக்திமிக அழகான அணிந்துரை தந்துள்ளார். 


இது ஒரு சிறுகதைத் தொகுப்பு . நூலாசிரியர் சிவஷங்கர் ஜெகதீசன் முகநூல் தளத்தில் எனது  நட்பில் இருக்கிறார். அவராகவே என்னைத் தொடர்பு கொண்டு முகவரி பெற்று புத்தகத்தை வீட்டிற்கு அனுப்பினார், அவருக்கு பாராட்டுகள். ஏனெனில் ஒரு எழுத்தாளர் தனது படைப்பைப் பரவலாக்குவதற்காக அவராகவே பலருக்கும் புத்தகங்களை அனுப்பியதோடு அவர்கள் அனைவரையும் இணைக்க , வாட்ஸ் அப் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.  


ஆசிரியர் பற்றி  : நூலாசிரியரது முதல் புத்தகம் , அவரே வெளியிட்டுள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த இவர் , ஒரு தனியார் ஐ.டி  நிறுவனத்தில் முதன்மை மேலாளராகவும் , தக வெளிமை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். பின் அட்டை மற்றும் புத்தகத்தில் உள்ள ஓவியங்களை இவரே எடிட் செய்து வெளியிட்டுள்ளார். காபிரைட் இல்லாத ஓவியங்களாகவும் கதைக்கேற்ற ஓவியங்களாகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளது சிறப்பு.


நூல் குறித்து :


ரப்பர் வளையல்கள் என்ற பெயரைப் பார்த்தே எனக்குள் நிறைய பழைய நினைவுகள். பிறந்த வளர்ந்த கிராமப் பகுதியில் சந்தையில் தான் ரப்பர் வளையல்கள் அறிமுகம் . நான் கூறுவது ஒரு 40 வருடங்களுக்கு  முன்பிருந்த கதை . எனது 25 வருடங்கள் வரை பார்த்திருக்கிறேன். நானும் பள்ளி நாட்களில் கைகளில் அவற்றைத் தான் போட்டுக் கொண்டு வாழ்ந்தேன். நாகரிகம் வளர வளர இன்று நான் வளையல்கார வியாபாரிகளிடம் கூட ரப்பர் வளையல்களைப் பார்ப்பதில்லை . ரொம்ப அழகா , கைக்கு கச்சிதமா , நுணுக்கமான டிசைன்கள் , பல வண்ணங்கள் என கொஞ்ச நேரம் நின்னு பார்க்க வைக்கும் , மற்றொன்று லேசில்  உடைந்து போகாது என ரப்பர் வளையல்கள் குறித்து சொல்லிட்டே போகலாம். 


இப்படியான நேசம் என் மனதில் ஏற்கனவே இருப்பதால் இந்தப் புத்தகத்தின் மீது ஒரு ஈர்ப்பு . அட்டைப்படம் வடிவமைப்பு வித்யாசமா இருக்கு. எனக்கு இன்னும் அந்தக் கருத்துரு புரியவே இல்லை என்பது தான் உண்மை. பெண்ணின் உடலிலிருந்து கை நீள்கிறது போன்ற ஒவியம் , ஆனால் நல்லாயிருக்கு .


இப்புத்தகம்  19 கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. முதல் கதையின் பெயர் தான் ரப்பர் வளையல்கள் . 


1.ரப்பர் வளையல்கள்  

2. மாற்றுக் கொலை

3. செம்மலர் 

4. உணர்வுகள்

5. வெண்ணி

6. பண மதிப்பிழப்பு 

7 .கொடுக்காப்புளி

8. அலங்கரிக்கப்பட்ட பொய்கள் 

9. தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் 

10. எச்சில்

11. மேய்ப்பர் 

12. அட்ரஸ் பாலாஜி 

13. லாக்டவுன்சமையல்

14. பெருமூச்சு

15. இ.யெம்.ஐ 

16. ஆன்லைன் ரம்மி

17 . கிணத்துக் கடவு

18. பற்றாக்குறை 

19 .தாரா 


இவையெல்லாமே படிக்கும் போது எங்கேயோ பார்த்த நிகழ்வு , கேட்ட நிகழ்வு என ஒரு சாயல் அனைத்துக் கதைகளிலுமே இருக்கு. மற்றொன்று கடகடவென்று வாசிக்க முடிகிறது. கதைக்களங்கள் எல்லாமே நாம் சந்திக்கும் , அன்றாட வாழ்வில் கடந்து வரும் பெயர்கள் - அதே போல ஒவ்வொரு கதையிலும் வேறு வேறு ஊர்களைத் தேர்வு செய்திருக்கிறார். சென்னையின் பல பகுதிகள், தெருக்கள்  ஒவ்வொரு இடத்திலும் காட்டப் படுவது போல ஈரோடு , கோவை , ஊட்டி , கொமாரபாளையம் என நிறைய இடங்கள் கதைகளுக்குள் பயணிக்கின்றன . புத்தகம் முழுவதுமே நிறைய ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளதாக உணர்கிறேன். ஒவ்வொரு கதையும் சாதாரணமாகக் கடந்து போக முடியாத உறவு சார்ந்தோ சமூகத்தின் போக்கு சார்ந்தோ மனித உணர்வுகள் சார்ந்தோ தான் இருக்கு. ஆனால் நடையின் எளிமையோ அல்லது வேறு எதுவோ ஆழமாக பாதிக்காது சாதாரணமாக படித்து விட்டு நகர முடிகிறது. இதன் சிறப்பாக  நான் எண்ணுவது பெரும்பாலான கதைகள் வாசிக்கும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நினைத்துப் பார்க்க தொடர்புடைய உயிரோட்டமான கதைகளே . ஆசிரியர் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.



No comments:

Post a Comment