Thursday 18 March 2021

தோழி நர்த்தகி நடராஜ்

இன்றைய குக்கூ உரையாடலில் 


தோழி நர்த்தகி நடராஜ் 


வார்த்தைகளற்ற நீண்ட மெளன உணர்வை உங்கள் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் கடத்திய தருணங்கள் ஒரு  புதிய அனுபவம் .


யாருக்கெல்லாம் சொல்ல வேண்டும் உங்கள் வாழ்க்கையை , நிச்சயமாக என் மாணவிர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு ஆழமான அனுபவத்தைத் தர பள்ளி திறப்பு நாளை எதிர்நோக்குகிறேன். 


கட்டற்ற கனவுகளால் காலத்தை வென்ற அழியா நிலையை அடைந்த உங்கள் அனுபவம் உங்கள் பகிர்வில் , தமிழ் மொழியின் அழகிய சொற்களால் குற்றமில்லா உச்சரிப்பால் ஒருங்கே மனத்தாலும் அறிவாலும் உணர வைத்த நிமிடங்கள் அற்புதம். 


ஒவ்வொரு நாளும் வீட்டின் கதவைத் திறக்கும் போதும் வசவுகள் , கேலிப் பேச்சுகள் , புறக்கணிப்புகள் என எல்லாவற்றுக்கும்  தான் தயாராக இருப்பேன், எதிர்பார்ப்பேன் என்ற இடத்திலிருந்து உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுகள் ஆரம்பிப்பதாக உணர்கிறேன். 


பின்புலமில்லாத , உண்மையான உழைப்பும் எண்ணங்களும் அவரவர்க்கான இடத்தைக் கொடுத்து  நடுவில் நிற்க வைத்து  ஆராதிக்கும் என்ற உங்கள் சொற்கள் தான் எத்தனை ஆழமான உண்மை.


ஆடும் போது பறக்கும் மனநிலையை உங்கள் பாதங்கள் தரைபடாத உயரத்தில் நர்த்தனமிடுவதிலிருந்து அறிந்து கொள்கிறோம். ... உங்கள் ஒவ்வொரு சொல்லும் எங்களுக்குள் ஆழமாக ஒரு ரசாவாதம் செய்தது என்னவோ உண்மை. 


கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை , உருவாக்க முடியாது, உள்ளிருந்து உருவாகி தங்களை நிரூபித்துக் கொள்வர்  என்பதற்கு குழந்தைகளுடனான சில உரையாடல் உதாரணங்கள் வழியே உணர்த்தியதை இங்குள்ள பெற்றோர்கள் உணர வேண்டும் .


இந்த சமூகத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கையேந்தி நிற்பதைக் காட்டிலும் ஒரு சமூகத்தையே உருவாக்குவதான் சிறந்த  செயல் என்று உருவாக்கி வைத்திருக்கும் உங்கள் தேடல்களின் களம் வருங்கால இளைய தலைமுறைக்கு நீங்கள் காட்டும் சாட்சி. 


புலம் பெயர்ந்து வரும் மக்களைக் காக்க,  குழந்தைகள் உங்களைத் தேடுவதும்  , அவர்களுக்கு ..உங்களிடமுள்ள கலையைக் கற்றுத் தருவது போராடுவதை விட மேலானது என்ற உங்கள்  பதிவும் புரட்சியின் வேறு வடிவங்களாகப் பார்க்கிறேன். 


கனவுகள் காணுங்கள் , கடவுளின் வரமாகி எல்லாம் செயல் கூடும் என்பதையே எல்லோருக்குமான பகிர்வாக எடுத்துக் கொள்கிறேன். 


பத்மஸ்ரீ நர்த்தகி என்ற முகமூடியை நீங்கள் அணியாத காரணத்தால் தான் எங்களைப் போன்ற எளிய வெகு ஜனம் உங்களை நெருங்க முடிகிறது என்பதை நீங்கள் சொல்லாமலே புரிந்து கொண்டோம். 


இறுதியாக , தாய்மொழி குறித்து உங்கள் செய்தியாக அனைவருக்கும்  தந்தது மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன். தாய் மொழியைக் கண்டடையும் போது ஒவ்வொருவரும் அவரவரைக் கண்டடைவீர்கள் என்பது இன்றைய சமூக அமைப்பு பள்ளிக் கல்விக்கும்  நீங்கள் தந்த செய்தியாகப் பார்க்கிறேன். 


இன்றைய நாளை  உங்களுடன் சாத்தியப்படுத்திய தோழி பரமு, குக்கூ உறவுகள் அனைவருக்கும் பேரன்பு💚💚💚

No comments:

Post a Comment