Thursday 18 March 2021

அடித்தள மக்கள் வரலாறு

அடித்தள மக்கள் வரலாறு 


நூலாசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் நன்கு அறியப்பட்ட மார்க்சியக் கருத்து நிலையாளர், செயல்பாட்டாளர் , ஆய்வாளர் , தமிழகத்தின் மிகச் சிறந்த , புகழ் பெற்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் - என பன்முகத் திறன் பெற்ற  மனிதர். இந்நூலில் எளியோர் வாழ்க்கையைப் புதிய சிந்தனை வழியே பதிவு செய்துள்ளார்.


சமூக வரலாறு என்பது புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக இந்தியாவில் உள்ளது என்பர். அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் , இந்த நூலில்  மாற்று வரலாறாகவே இங்கு அடித்தள மக்கள் வரலாற்றைப் பார்க்க முடிகிறது.


நம்மைச் சுற்றி வாழும் மக்களில் 80% அடித்தள மக்கள் தான் , அவர்களது வாழ்க்கை எங்கெல்லாம் புறக்கணிக்கப்படுகிறது  , எங்கு அவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது , ஏன் பல சடங்குகள் அவர்களை ஒரு வட்டத்திற்குள் தள்ளி அரண் போலத் தோன்றி  சிறைப்படுத்தியிருக்கிறது  இந்த சமூகம் என நமக்கு தெளிவாக இப்புத்தகம் சொல்கிறது. 


தஞ்சை பெரிய கோயில் ராஜ ராஜ சோழனைப் பற்றி பெருமிதமாக நாம் பேசும் போது , கோயிலைக் கட்டிய சாதரண கட்டிடத் தொழிலாளர்கள் நம் மனதில் கேள்விகளாகத் தேடப்படுவார்கள் .


சீனப் பெருஞ்சுவர் ,தாஜ்மகால் என எல்லா பிரம்மாண்டங்களிலும் காணாமல் போன சாதாரண மக்களின் வாழ்க்கை என்ன ?


இந்த நோயச்ச கொரோனா காலத்தில் துப்புரவுப் பணியாளர்கள் , மருத்துவ மனைகளில் உயிர்க்கு பாதுகாப்பற்ற ஏற்பாடுகளற்ற முறையில் பணியாற்றும் எத்தனையோ எளிய மனிதர்கள் குறித்து நாம் நினைத்திருப்போம். இவர்கள் அனைவரைப் பற்றியும் பேசுகிறது இப்புத்தகம் .


ஆங்கிலேயரின் வரவால் இந்தியப் பொருளாதாரத்தில்  ஏற்பட்ட முக்கிய மாற்றம் இந்திய விவசாயி , தான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழந்தது தான். இதை மிக எளிதாக நாட்டார் பாடல் ..


ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி 

காகிதம் போட்டான் வெள்ளைக்காரன் ... என்று குறிப்பிடுவது எதை ? அடித்தள மக்களிடம் நிலவிய வெள்ளையர் எதிர்ப்புணர்வை என்பன போன்ற உற்று நோக்குதலை விரிவாகப் பதிவு செய்கிறது இப்புத்தகம் . 


இந்திய வரலாற்றில் வாய்மொழி  வரலாறுகளின் வழியே அடித்தள மக்களின் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களை வெகுவாக நமக்குத் தருவதோடு பழ மரபுக் கதைகளும் வரலாறும் என பரவலான ஒரு அறிவையும் புரிதலையும் தருகிறது. 


ஒவ்வொரு வரலாற்றின் பின்னும் மறைந்துள்ள வரலாறுகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர் . தாழ்த்தப்பட்ட ,பின் தங்கிய சாதியைச் சேர்ந்தவர்கள் ஆதிக்க சக்திகளுக்கும் அவர்கள் உருவாக்கிய சமூக மரபுகளுக்கும் எதிராகச் செயல்பட்ட வரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


ஒடுக்கப்பட்டோருக்கான வாழ்வியலை இயல்பாகப் பதிவு செய்வதோடு பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் எவ்வாறு அடித்தள மக்கள் வாழ்க்கையை இழிவுபடுத்த உருவாக்கப்பட்டன என்பது மிக ஆழமாகப் பேசப்பட்டுள்ளது .


அரசியல் ஆதிக்கம் , பொருளியல் ஆதிக்கம் , பண்பாட்டு ஆதிக்கம் இவற்றில் வேரூன்றியுள்ள ஒடுக்குமுறைகள் காரணங்கள் , மேட்டிமைக்கும் ஒடுக்கு முறைக்குமான தொடர்பு என நம்மை வெகு ஆழமாக வேறு தளத்திற்கு அழைத்துச் சென்று  சிந்தனை செய்ய வைக்கிறது இந்நூல் .


பஞ்ச காலத்தில்  மக்களின் வாழ்க்கை  , மறைந்து வரும் தானியங்கள் , சாமியாடும் மனைவி என எல்லாத் தலைப்புகளும் அடித்தள மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் படி விரிவாகப் பேசப்பட்டுள்ளது


கட்டுரைகளுக்கு இணையான படங்கள் இணைக்கப்பட்டு வெகு நேர்த்தியான ஒரு அட்டைப் படத்துடன் 300 பக்கங்களில் அற்புதமான ஒரு புத்தகம் .


துணை நூற்பட்டியலே 8 பக்கங்களுக்குத்  தரப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment