Tuesday 25 May 2021

சபாஷ் பார்வதி

சபாஷ் பார்வதி ....
ஆசிரியர் : எஸ்.வி.வி. 
கிண்டில் பதிப்பு .

ஆசிரியர் குறிப்பு : இணையத்திலிருந்து 

தமிழில் நல்ல நாவலாசிரியர் வரிசையில் எஸ்.வி.வி. இடம் பெற்றிருக்க வேண்டும் என க.நா.சுப்பிரமணியம் அவர்களும் , தமிழின் பழங்கால நகைச்சுவை எழுத்தாளர் என  ஜெயமோகன் அவர்களும் பாராட்டிய  எஸ்.வி.வி: இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் தமிழுக்கு அணி செய்த பல சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1934-க்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்து கொண்டே ஆங்கிலத்தில் சிறந்த நகைச்சுவைக் கட்டுரைகளையும், ஹாஸ்ய சொற்சித்திரங்களையும் "ஹிந்து' பத்திரிகையில் எழுதி வந்தார். அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த திரு. கல்கி, அதிபர் திரு. வாசன் ஓரிரவு திருவண்ணாமலைக்கே போய் எஸ்.வி.வி.யை சந்தித்து, தமிழிலும் விகடனுக் காக எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். அது முதல் தமிழில் 1933-லிருந்து 1950 வரை எஸ்.வி.வி. மிக உயர்தரமான நகைச்சுவைக் கதைகள், ஹாஸ்ய சித்திரங்கள், நாவல்கள், நெடுங்கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய நகைச்சுவை பல வகையானது. இலேசான புன்னகையை வரவழைக்கக் கூடியவை. Satire என்ற கேலிச்சித்திரங்கள், குபீரென்று வெடிக்கும் ஹாஸ்யம் இப்படி பலவகை. தமிழில் நகைச் சுவை நூல்கள் மிகவும் குறைவு. அந்தக் குறையை நிறைவு செய்ய அவருடைய நூல்கள் பெரிதும் உதவுகின்றன. எஸ்.வி.வி.யின் சிறுகதைகளையோ அல்லது நாவல்களையோ படிக்கையில், நாம் ஒரு கதை படிக்கிறோம் என்ற பிரக்ஞை மறந்து போய் ஒரு நெருங்கிய ஹாஸ்ய உணர்வு நிறைந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்ற வைத்துவிடும். இந்த எழுத்து தற்கால வாசகர்கள் படித்து ரசிக்க வேண்டிய எழுத்து.

நூல் குறித்து 

இதில் 3 நீள் கதைகள் இருக்கின்றன. முதல் கதை தான் சபாஷ் பார்வதி , அடுத்து கைமேல் பலன் , இறுதியாக சரோஜா . 

ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்பிருந்த சமூகச் சூழலில் பெண்களைத் திருமணம் செய்து தருவதில் உள்ள பொருளாதாரச் சிக்கலும் அதன் நீட்சியாக கணவன் வீட்டில் மாமியார் , நாத்தனார் இவர்களின் அதிகாரத் தொனி , வஞ்சகம்  , வீட்டை விட்டு விரட்டுதல் என கதை உள்ளதை உள்ளபடியே படம் பிடிக்கிறது. தங்க வளையல்களுக்காகவும் ஒட்டியானத்துக்காகவும் சாதாரண அரசு குமாஸ்தா வேலையிலிருக்கும் அப்பாவின் வீட்டிற்கு வந்த பார்வதி , தன் கணவன் வீட்டாரால் புறக்கணிக்கப்படுவதும் அதிலிருந்து மீண்டு மருமகளாக தனது உரிமையை நிலைநாட்டுவதும் தான் கதை. கணவனாக வரும் சபேசன் தன் அம்மாவின் நன்மதிப்பைப் பெறுவதன் பொருட்டு , கட்டிக் கொண்டு வந்தவளை வார்த்தைகளால் படுத்தும் பாடு இருக்கிறதே . மாமியாராக வரும் அவயாம்பாள் கணவனை இழந்து உறவுகள் யாரையும் குடும்பத்துடன் சேர்க்காது தனது மகளான அபிதத்தைத் தன்னுடனேயே வைத்து வாழ்ந்து வருபவர்.  ,தன் மானத்தை இழந்த பார்வதி எப்படி ரிவன்ஜ் எடுக்கிறாள் என்பது தான் கதை. வாசித்துப் பார்த்தால் சுவை புரியும். 

அதே போல சரோஜா கதையில் கட்டுப்பாடான தந்தையால் வளர்க்கப்படும்  குழந்தைகள் செய்யும் தவறுகள் , பணம் கடன் வாங்கிய கதை , நட்பின் போர்வையில் பணத்தைக் கடன் கொடுத்து விட்டவன் பொய்ப் புரோநோட் எழுதுதல் இறுதியில் விஷயம் வெளிவருவது ,தந்தையே அப்பிரச்சனையைத் தீர்ப்பது எனக்  கதை முடிகிறது. அம்மா தங்கம் , அப்பா சாரங்கபாணி , சகோதரன் பட்டண்ணா ,  நண்பர்களாக வரும் பூவராகவன் , கண்ணன் ஆகிய  அனைவரது சம்பாஷனைகளும் அந்தக் கால பேச்சு வழக்கில் வாசிக்க நன்றாக இருக்கிறது. 

கை மேல் பலன் , மாமனார் வீட்டில் தங்கி சிகிச்சைப் பெற்று வரும்  உடல் நலமில்லாத மனைவி பாமாவைப் பார்க்க போவதற்காக ராமரத்னம் அலுவலகத்தில்
விடுப்பு கேட்டு , டெப்டி கலெக்டர்  அனுமதி  தராததால் ஏற்படும் மன அழுத்தம் ,விடுப்பு தர மறுத்த அதிகாரியின் மனைவி படுக்கையில் விழ , திருப்பதி வெங்கடாஜலபதி வழியே எப்படித் தீர்கிறது என்பது தான் கதை. 

மூன்று கதைகளுமே சுவாரஸ்யமாக நகருகிறது. சபாஷ் பார்வதி மிகவும் நன்றாக இருக்கி Mது.

வாசித்துப் பாருங்கள்.

Monday 24 May 2021

பின்கட்டு

பின்கட்டு - சிறுகதைத் தொகுப்பு 

ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் 
பதிப்பகம் : க்ரியா (2021)
விலை : ரூ 90
பக்கங்கள் : 70

நூலாசிரியர் : 

கசடதபற - இலக்கிய இதழை நடத்தியவர்களில் ஒருவர் ராமகிருஷ்ணன். க்ரியா பதிப்பகத்தை 1974 இல் துவங்கி கடந்த 47 ஆண்டுகளில் பல துறைகளில் பல புத்தகங்களை நேர்த்தியான தயாரிப்புகளாக வெளியிட்டது. க்ரியா வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கது சமீபத்தில் மூன்றாவது பதிப்பாக வெளிவந்த க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி . மொழி - அமைப்பின் நிறுவனரான ராமகிருஷ்ணனின் கூத்துப்பட்டறைக்கான பங்களிப்பும் குறிப்பிடத் தகுந்தது.

நூல் பற்றி :

1968 ஆம் ஆண்டில் வெளியான கோணல்கள் தொகுப்பில் ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதைகளும் , நடை கசடதபற இதழ்களில் வெளியான அவரது சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதில் வெளியாகியுள்ள "அவளிடம் சொல்லப் போகிறான் ... " என்ற சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Tamil Story : Through the times through the tides என்ற தொகுப்பில் (2016) இடம் பெற்றுள்ளது. 
ஐந்து சிறுகதைகள் - அவளிடம் சொல்லப் போகிறான் , கோணல்கள் ,சங்கரராமின் நாட்குறிப்பு , பின்கட்டு , மழைக்காகக் காத்திருந்தவன் ஆகியன.

1968 இல் வெளிவந்த கோணல்கள் தொகுப்பின்  முன்னுரையில் ஐராவதம் ஆர். சுவாமிநாதன்  , இக்கதைகளைக் குறித்து பேசும் போது ,தமிழ்ப் பத்திரிகைகளின் தரம் அல்லது தரமின்மை என்ற பாதிப்புக்கு உள்ளாகாமல் எழுதப்பட்ட கதைகள் இவை எனக் குறிப்பிடுகிறார். 

இக்கதைகள் ஒவ்வொன்றையும் வாசிக்கும் போது , நாம் அறிந்த இந்த சமூகத்தில் பார்த்த பலரது கதைகளை நினைவுபடுத்துகிறது என்பது தான் உண்மை. பின் கட்டு என்ற கதையில் வரும்  படுக்கையில் பல வருடங்களாக நோய்வாய்ப் பட்டு கிடக்கும்  வயதான அம்மாவின் இறப்பு - அவருக்கு எல்லா சேவையும் செய்து வந்த இராஜம் , அவளது தனிமை இப்படியாக  நகரும் கதை 60 வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தாலும் இன்றும் இப்படியான மனிதர்களை நம்மால் சந்திக்க முடிகிறது. கோணல்கள் கதை மனிதர்களின் அறிவுக் கோணல்களை , மனக் கோணல்களை , சமூகத்தின் கற்பதக் கோணல்களைப் பதிவு செய்கிறது. 

இப்படியாக எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கதையிலும் புரிந்து கொள்ள முடியாத முடிச்சுகளையும் ஆசிரியர் வைத்துள்ளார். அவை வாசகர்களின் கற்பனைக்கானவை . மனிதர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏராளமான மாற்றங்கள் உருவாகியிருந்தாலும் அவர்களது அடிப்படை குணநலன்களிலான மதிப்பீடுகளைப் பற்றிப் பேசுவதால் பின்கட்டு தொகுப்பின் கதைகளை
இக்காலத்திற்கும் ஏற்றவையாகப் பார்க்க முடிகிறது.

Sunday 23 May 2021

எசப்பாட்டு

#எசப்பாட்டு  

ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் 
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
வெளியீடு : 2018
விலை : ரூ 190

      ஆண்களோடு பேசுவோம் என்று அட்டையிலேயே வாசகம் எழுதப்பட்டி
ருக்கும் இப்புத்தகம் , சாதாரணமாகப் படித்து விட்டு கடந்து போகும் வெறும் புத்தகமாக எனக்குத் தெரியவில்லை , பல நூற்றாண்டுகளாக இந்த சமூகத்தில் வேர் விட்டு பரந்து வியாபித்திருக்கும்  ஆண் - பெண் குறித்த கற்பிதங்களை கோடாரியால் வெட்டி எறியத் தூண்டும் வலிமை மிகு ஆயுதமாகவே நாம் பார்க்கலாம் . 

  இந்த சமூகத்தின் உண்மைகள் பலமாக முகத்தில் அறைகின்றன. பக்கத்துக்குப் பக்கம் ,வரிக்கு வரி என் வீடும் , உங்கள் வீடும் பக்கத்து எதிர்த்த வீடுகளும் தான் இருக்கின்றன. நாம் பார்க்கும் சினிமாக்கள் , நாம் பணி புரியும் அலுவலகங்கள் , நாம் கொண்டாடும் விழாக்கள் , திருமணங்கள் , குடும்ப விழா என எல்லாமே தினசரி நாம் வாழும் சமூகத்தின் பகுதியாகவே இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

 இவற்றுள் எவ்வளவு பிழையான உண்மைகள் மெருகேறிய பூச்சு பளபளப்புகளாக மக்களது மனதில் ஆணி போட்டு மாட்டப்பட்ட சான்றிதழ்களாக ஒட்டி பிய்க்க முடியாமல் இருக்கிறது என்பதை தமிழ்ச்செல்வன் கிழி கிழி என்று கிழித்து நம் முகங்களில் விசிறி அடிக்கிறார். 

அத்தனைக்கும் ஒட்டு மொத்த குறியீடாக அட்டைப் படம் , ஹிட்லரின் உருவம் போல , அதுவும் திரும்பி நின்று உங்கள்முகத்தையே பார்க்க மாட்டோம் என்று பிடிவாதமாக மறுக்கும் , எங்கு... உடல் தளர்ந்திருந்தால் சற்று நெகிழ்ந்து போய் திரும்பிப்பார்த்து காது கொடுத்திடுவோமோ என்றெண்ணி, கைகளை விரைப்பாய் பின்னாடி கட்டிக் கொண்டு சற்றும் மனம் திறக்கவோ முகம் காட்டவோ மறுக்கும் இயல்பை   சொல்லாமல் சொல்கிறது அந்த முன் அட்டைப்படம் .

நவம்பர் 2018 இல் வெளியிடப்பட்ட இந் நூல் இந்து தமிழ் திசையின் ஞாயிறு இணைப்பிதழான பெண் - இந்து வில் 52 வாரங்களாக எழுதப்பட்டு இன்று 
எசப்பாட்டு நூலாகி நம் கைகளைப் பிடித்துக் கொண்டு , வாருங்கள் ஆண்களையும் பெண்களையும் யோசிக்க உரையாடுவோம் என்று அழைக்கிறதாகத்  தோன்றுகிறது. 

முன்னுரை போன்ற ஒரு பகுதியில் தோழர் தமிழ்ச் செல்வன் தருவது தான் நம்மைத் தொடர்ந்து வாசிக்க வைக்கிறது . ஆண் மனதோடு நீண்ட உரையாடலை நாம் நடத்த வேண்டி இருக்கிறது என்பதோடு ஆண் மனங்களால்  இந்தியா ததும்பி நிற்கிறது என்கிறார் , அதற்கு நம் வீடுகளே சாட்சி , 

ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து தான் இந்த ஆண்களுக்குச் சாதகமான ஓர் உலகத்தை வரலாற்றின் போக்கில் உருவாக்கியிருக்கிறோம் , இதை ஒரு சமத்துவ உலகமாக , நீதியான உலகமாக மாற்ற இருவரும் சேர்ந்து தான் போராட வேண்டும். நீண்ட காலம் செளகரியமாக வாழ்ந்து அனுபவித்து விட்ட ஆணுக்கு இதில் கூடுதல் பொறுப்பிருக்கிறது என்ற நிலைபாட்டில் நின்று தான் இத்தொடரைக் கொண்டு செலுத்தியிருப்பதாகக் கூறுகிறார்,  அது தான் லகானின் நுனியாகப் பிடித்து இழுத்துக் கட்ட சரியான தொடக்கமாய்  இருக்கிறது நமக்கும்.

தொடர்ந்து அம்மா , அம்மாவின் அம்மா , அப்பாவின் அம்மா , தங்கை , இணையர் , பேத்தி என தனது வீட்டிலிருந்தே இந்த எழுத்துகளுக்கான களத்தைத் தொடங்கி ,தன் தோழமைகள் , அறிவியல் இயக்கப் பெண்கள் தான் களத்தை விரிவாக்கி தனது  இந்த அலசுகிற அறிவைத் தந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளார்.தனது 65 வயது காலத்தில் தன் மனதின் போராட்டமான மேன்மைகளை வளர்ப்பதும் கீழ்மைகளை அகற்றுவதுமான தகுதியின் மீது நின்றே இப்புத்தகத் தொடர்களைப் பேசியிருப்பதாய்க் கூறியிருக்கிறார்  நூலாசிரியர்.

52 அத்யாயங்களும் எசப்பாட்டை சத்தமாகப் பாடியிருக்கிறது , ஆம் எசப்பாட்டை நாம் எதிர்ப்பாட்டாகத் தானே புரிந்து கொள்கிறோம் , இங்கு ஆண் பெண் என்ற எதிர் பாலர் இருவருமே என்னென்ன வகையில் சிந்திக்க , அவரவர் புரிதலில் தங்களை மாற்றிக் கொள்ள ஏதுவான சூழலை நம் சமூகம் உருவாக்க வேண்டும் என்பது தான் நம் முன்வைக்கப்படும் கருத்துகள் .

ஆணுரிமை பேச மாட்டீர்களா ? என ஆரம்பிக்கிறது முதல் அத்யாயம் , இந்தியாவைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பண்பாட்டு நடவடிக்கைகள் அதிகரித்துள்ள இந்த நாட்களில் ,
குடும்பக் கோட்டையை பத்திரமா பாத்துக்க பெண்களையே அடையாளப் படுத்தும் சமூகத்தில் குடும்பம்  அமைதியாகவே இருக்கணுமா என்கிறார் அடுத்த பகுதியில் , ஆமாம் இப்போது தான் பெண்கள் பேச ஆரம்பித்து இருக்கிறோம் .. குழப்பம் வரட்டும் அப்போது தான் சின்ன சிந்தனையாவது ஆண் மனதின் கதவைத் தட்டும். 

குற்றம் புரிந்தவன் .. வாழ்க்கையில் நிம்மதி கொள்கிறான்  , இந்த மூன்றாம் அத்யாயம் எப்போதும் ஆண் மனம் பெண்கள் விஷயத்தில் குற்ற உணர்வை உணர்வதே இல்லை?, என்பதை வலியுறுத்திச் சொல்கிறது. இப்படி ஒவ்வொரு அத்யாயமாகப் பார்ப்பதை விட மொத்த புத்தகம் பேசுவதை யோசித்தால் ...

பெண்கள் குடும்பங்களில் சமூகத்தில் பணிபுரியும் இடத்தில் பேச வேண்டும் , அதற்கு ஆண்கள் தடை போடக் கூடாது என்பதே அடிப்படை .

அறிவியல் துறையில், வரலாற்றின் பக்கங்களில் பெண்களின் உழைப்பு  எப்படி எப்படி எல்லாம் மறைக்கப்பட்டுள்ளது என்பதையும் உலக நாடுகளில் வாழும் எல்லாப் பெண்களுக்குமாகப் பேசுகிறது. 

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பண்பாட்டு சட்டங்களால் எப்படி வெளியேறாமல் இருக்கிறோம் இந்திய நாட்டுப் பெண்கள் ஏன் வெளிவரத் தயங்குகிறோம் என்றும் பேசுகிறது .

ஆண் கண்கள் ஏன் பெண்களை உடலாகவேப் பார்க்கப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறது , அல்லது பழகியிருக்கிறது இது திரும்பத் திரும்ப பேசப்படும் உண்மை , அதை விடுத்து சக மனுஷியாகப் பெண்ணை ஏற்றுக் கொள்ளாத சமூகம் என்ன சமூகம் ?

மனம் அடுத்தடுத்த அத்யாயங்கள் படிக்கும் போது வெம்மை அடைகிறது .இவ்வளவு கற்பிதங்களில் உழன்று கொண்டா வாழ்கிறது நம் இனம் என்று ...

குழந்தைகள் உளவியல் பெண்கள்  உளவியல் எப்படி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இரும்புக் கம்பிக்குள் அடைபட்டு இருக்கு எனவும்  ஆண்கள் உளவியல் எப்படி எல்லாம் கரெப்ட் ஆகி நம்மை சிதைத்து புதை குழிக்குள் தள்ளி உள்ளது எனவும் சிந்திக்க வைக்கிறது. 

பாரதி ,பெரியார் , லெனின், ஆகியோரெல்லாம்  பெண்கள்  விடுதலைப் பற்றி பேசியதையும் ஆனால் இதுவரை பேசப் படாத பெண்விடுதலைக்கான எதார்த்தங்களையும் பற்றி பேசுகிறது இப்புத்தகம் .

சமையலறையில் உள்ள ஒடுக்க அரசியலை நுணுக்கமாகப் பேசும் இப்புத்தகம் அவன் வரைந்த  ஓவியமாகத் தன்னை , அவள்  எவ்வாறு குறுக்கிக் கொண்டு வாழ்ந்து விட இந்த உலகம் நிர்ப்பந்திக்கிறது என்பது பற்றியும் பேசுகிறது .

நாட்டில் 98% பெண்கள் தனக்கான வாழ்க்கை விதிக்கப்பட்டதாக விதியாக வேறு வழியில்லாமல் அப்படியே தான் வாழ்ந்து வருகின்றனர். மீதியுள்ள 2% மட்டுமே இப்புத்தகத்தில் பேசப்பட்டுள்ளது போல் சிந்திக்க ஆரம்பித்து வாழவும் ஆரம்பித்துள்ளனர் இந்த 21 ஆம் நூற்றாண்டில் என்பது தான் உண்மை.

51 ஆவது அத்யாயத்தில் தொடர்ந்து வாசிப்பதற்கான பல புத்தகங்களைக் குறிப்பிட்டுள்ளார் , தமிழில் 56 தலைப்புக்குள்ள புத்தகங்களும் ஆங்கிலத்தில் 43 தலைப்பிலான புத்தகங்களும்  பெயர் பதிப்பகம் உள்ளிட்டு குறிப்பிட்டுள்ளது மிக அற்புதம். 

52 ஆவது அத்யாயம் மிக மிக சாரமாக முக்கியமாக உள்ளது. துணி என்பதை ஒரு குறியீடாகக்கொள்ள வைக்கிறது. பெண்களின் வாயை அடைக்க பல வழிகளிலும்  இந்தத் துணி இருப்பதாகக் கூறுவது நிதர்சனம்  .

பெண் விடுதலை பற்றி வெற்றுக் குரல்களால் கோர்க்கப்பட்ட சொற்களால் திரும்பத் திரும்ப படிக்கும் நமக்கு அப்படின்னா என்ன ? ஏன் தேவை ? எதெல்லாம் அதற்குள் அடங்கும் என எதார்த்தங்களின் உண்மைகள் வழியே கற்றுக் கொடுக்கிறது  இந்த புத்தகம் .இது சமூகத்தை மாற்றும் மிகச் சிறந்த ஆயுதமாக நமது கையில் கிடைத்துள்ளது. 

சரி ,அப்போ பெண்கள் எல்லோரும் அப்பாவிகளா ?ஆண்களும் தானே பல வீடுகளில் இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்ற நினைப்பும் நமக்கு வரலாம். இருவரும் சக மனிதராய் நேசித்து வாழும் வாழ்வுக்கான இடமாக மாற்றவே இருபாலரும் இந்நூலை வாசிக்க வேண்டும்  எனக் கருதுகிறேன். மிகச் சில இடங்களில் சில செய்திகள் திரும்ப வருவது போல இருந்தது எனக்கு. 

மற்றபடி எசப் பாட்டு உறங்க அல்ல , நாம் போராடுவதற்கான உத்வேகப் பாட்டு எனக் கூறி , கிடைக்கும் சந்தர்ப்பங்களில்  இது பற்றிய விவாதத்தை எடுத்துச் செல்ல வேண்டும் .

அதே போன்று 216 பக்கங்களில் ரூ 190 விலையில் ஒரு ஆய்வு நூல் நம் கைகளில் கிடைத்துள்ளதை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என எனது சக ஆண் , பெண் தோழமைகளிடம் நான் கூற விரும்புகிறேன். 

தோழமையுடன்
உமா

Saturday 22 May 2021

வேள் பாரி : 1

வீரயுக நாயகன் வேள்பாரி - பாகம் - 1

2018 டிசம்பரில் முதல் பதிப்பாக வெளிவந்த வரலாற்று நாவல் இது.  2019 இல் நான்காம் பதிப்பு கண்டது வேள்பாரி. ஆனந்த விகடனில் நூறு தொடர்களுக்கும் அதிகமாக வெளிவந்தது பற்றி பலரும் அறிந்திருப்பர் . முதல் தொகுதி 51 அத்யாயங்களைக் கொண்டுள்ளது. 

கடையேழு வள்ளல்களில் ஒருவனாகவே முல்லைக்குத் தேர் கொடுத்த  பாரியைப் பற்றி அறிந்திருந்த எனக்கு இந்த வரலாற்று நாவலை வாசிக்க வாசிக்க பாரியின் மீதும் அவனது பறம்பு மலையின் அதிசயங்கள் மீதும் அளவில்லாக் காதல் தோன்றியது என்று மட்டுமே  வெளிப்படுத்த முடிகிறது. குறுநில மன்னன் பாரி , வேளிர் குலத் தலைவன் ஆனதால் வேள்பாரி ஆகிறான். பறம்பு மலையின் ஆச்சர்யங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் , பாரியின் புகழைக் கண்டு கேட்டு சீரணிக்க முடியாமல் 
மூவேந்தர்களான சேர , சோழ ,பாண்டியர்கள் பாரியை எதிர்த்து  வேறு வேறு காலகட்டங்களில் 
போர் தொடுத்து தோற்று விடுவது சங்கப் பாடல்கள் நமக்குச் சொல்லும் . மீண்டும் மூன்று பேரும் ஒன்றாகச் சேர்ந்து பாரியை சுற்றி வளைத்தும் பயனில்லை. இத்தகைய   பெருமை கொண்ட 
பாரியின் வானளாவிய   சிறப்புகளை , வரலாற்றைப் புனைவு கலந்து நீண்ட நாவலாக மாற்றியுள்ள நமது பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் அவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள். 

 அவரது நேர்காணல் ஒன்றில் இதற்காக பல வருடங்கள் ஆய்வு செய்து எழுதியதாகக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.  சங்க இலக்கியங்களை நாம் ஏன் படிக்க வேண்டும் என்பதற்கான பதிலையும்  இந்நாவல் நமக்குக் கற்பிக்கிறது. 

சங்க இலக்கியத்தின் வழியே  நாம் அறிந்த இரு  முக்கியமான  மனிதர்களை இணைத்து   தமிழ் மண்ணின் விழுமியங்கள் அழியா வண்ணம் பதிவு செய்திருப்பது தான் இன்றைய
 நாளின் வேள்பாரி என்ற நவீன  நாவல். 

 தமிழ்ச் சமூகத்தின்  மூத்த புலவர் கபிலர் என்பதைப் Uதிவு செய்யும்  சங்க இலக்கியங்களில் , பாரியோ கடையெழு வள்ளலாக வருவதாகவே நாம் அறிவோம். ஆனால் நூலாசிரியரோ முதல் வள்ளலே பாரிதான் என அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறார்.  அதன் அடிப்படையில் , கபிலர் எழுதிய கபிலம் என்ற நூல் நமக்குக் கிடைக்கவில்லையாதலால் அது பாரியைக் குறித்துதான் எழுதியிருக்க வேண்டும் என்றும் பின்னால் பல நூற்றாண்டுகளாக மூவேந்தர்கள் ஆட்சி செய்ததால் பேசப்படாமல் போக வாய்ப்பிருக்கலாம் என்கிறார். அதுவாகவே ..

நாவல் நம்மை நிகழ்காலத்தின்   சர்வ உலகத்தையும் மறந்து பறம்பு மலைக்குள்ளே வாழ வைத்து பாரியின் காலத்திற்கே அழைத்துச் செல்வது தான் முதல் வெற்றி . ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும் போதும் ஒவ்வொரு  இனத்தின் வரலாறு நம்மை பிரமிக்க வைக்கிறது. கபிலர் காட்டுக்குள்  பிரவேசித்து பறம்பு மலையை அடையும் பயணத்தில் தான் எத்தனை  செய்திகள் .அவரே அதிசயத் தக்க வகையில் அறிந்து கொள்கிறார். நீலனின் காடு குறித்த அறிவு அவரை ஆச்சர்யப்பட வைப்பது போல நம்மையும் ஆச்சர்யப்பட  வைக்கிறது . முருகன் - வள்ளி காதல் கதைகள் , பாரியும் கபிலரும் சந்தித்து உரையாடுதல் , கபிலருக்கு  பறம்பு நாட்டையும் அங்கு வியாபித்திருக்கும் பச்சை மலைத் தொடரின் ஆழமான உண்மைகளைக் கதைகளாகக் கூறுவதன் வழியே நாமும் எத்தனையோ சிறு சிறு வரலாறுகளை அறிய முடிகிறது. நம்மையும்  அறுபதாம் கோழியின் ஆசை  விட்ட பாடில்லை , மலைகளின் ஆச்சர்யங்கள்  உயர்ந்து கொண்டே போகின்றன. தேவ வாக்கு கூறும் கொற்றவை விழாப் பண்டிகையின் முக்கிய உயிரினங்களான  தேவாங்குகளை கடல் வாணிபத்திற்காகப் பயன்படுத்த பாண்டியர்களால் செய்யப்படும் சதியில் திரையர்களின் இனத்தைப் பயன்படுத்திய கதை தான் பிற்பகுதியின் சாரம். 

காட்டெருமையை அடக்கி வெற்றி இலையைப் பறித்து வரும் வீர மனிதர்கள் கதையை அறியும் போது வெற்றிலையைக் கண்டு பிடித்த ஆதி தமிழன் நம் சிந்தனையில் வருகிறான். ஒவ்வொரு தாவரத்தின் குணமும் மருந்தாக இருக்கிறது .அதைப் பறம்பு நாட்டில் மக்கள் எப்படிப் பயன்படுத்தி வாழும் முறையைப் பின்பற்றியிருக்கின்றனர் என்பதே பிரமிப்பாக உள்ளது. தேக்கன் கதாபாத்திரம் ஒரு பிரமிப்பு ... மாணவர்களைக் காட்டுக்குள் அழைத்துச் செல்ல அவர்களைப் பயிற்றுவிக்க வழி கொள்ளும் முறைகள் ஒவ்வொரு நகர்வும் நம்மை மிரள வைக்கிறது. திரைப்படம் பார்க்கும் போது நுனி சீட்டில் நகர்ந்து பதட்டத்துடன் பார்ப்பது போல ஒரு சில அத்யாயங்கள் நம்மைத் தூங்க விடவேயில்லை .காட்டில் வசிக்கும் மிருகங்கள் , அவற்றின் போர்க் குணங்கள் அத்தனையும் கண் முன்னே நிறுத்தி மீண்டும் மீண்டும் ஆதி தமிழரின் அரும் ஆற்றல்களை மனதில் நிறுத்துகிறது நாவல்.

முதல் பாகமான இதன் 608 பக்கங்களை எழுத்துக்களுக்கு இணையான ஓவியங்களும் நம்முடன்  ஒரு சேர இணைந்தே பயணிக்கின்றன.  சொற் சுவை , பொருட்சுவை , காட்சிச் சுவை என மொழியை அணு அணுவாக தமிழரின் வாழ்வியலுடன் இணைந்து ரசிக்க வைக்கும் நாவலாக நகர்கிறது .  கடல் வாணிகத்திற்கு  தேவாங்கை அனுப்பிய கப்பல்களிலிருந்து மீட்டக் காட்சிகள் தான் இறுதி அத்யாயமாக நம்முள் நிறைகிறது. 

இரண்டாம் பாகம் 
(தொடரும் )

உப்பு வேலி

உப்பு வேலி 

பதிப்பகம் : தன்னறம் நூல்வெளி 
முதல் பதிப்பு : 2020
விலை : ரூ 400
பக்கங்கள் : 240
தொடர்புக்கு : 9843870059

ஆசிரியர் : ராய் மாக்ஸம் 
தமிழில் : சிறில் அலெக்ஸ் 

ராய் மாக்ஸம் :

இவர் மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இங்கிலாந்து நாட்டுக்காரர் .1978 இல் தனது 39 ஆம் வயதில் கேம்பர்வெல் கலை மற்றும் கைவினைக் கல்லூரிக்குப் பணிக்குச் சென்றார். அங்கு நூலகம் மற்றும் காட்பகப் பாதுகாவலராகத் தகுதியுயர்வு அடைந்தார் .பின்னர் கேன்டர் பரி கேதீட்ரல் காப்பகங்களில் பாதுகாவலராக இருந்தார். . பிறகு லண்டன் பல்கலைக் கழகத்தின் செனட் ஹவுஸ் நூலகத்தின் மூத்த பாதுகாவலராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் எழுதிய ஏழு புத்தகங்களும் இந்தியாவைப் பற்றியே பேசுகின்றன. 

உப்பு வேலி ...

உலகின் மிகப் பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம் என அ.ட்டைப் படத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ள இப்புத்தகம் நமக்குச் சொல்லும் கதைகள் நடுங்க வைக்கின்றன. கவலையுறச் செய்கின்றன. கண்ணீரை சில இடங்களில் வர வைக்கின்றன. 

இந்தியாவின் வரலாற்றில் திட்டமிட்டோ எதேச்சையாகவோ மறைக்கப்பட்ட நமக்கு சொல்ல மறுக்கப்பட்ட நமது அரசால் கூட ஆவணம் செய்யாது மறக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பேசும் புத்தகம் இது. இந்திய ஆட்சியில் , அரசுக்கோ துறை சார்ந்த வல்லுநர்க்கோ தோன்றாத எண்ணம் ..... வெளிநாட்டு மனிதர் ஒருவரைத் தட்டி எழுப்பி விடா முயற்சியுடன் மூன்று ஆண்டுகள் தேட வைத்து உலகின் மிகப் பெரிய உயிர் வேலியாகத் திகழும் உப்பு வேலியைக் கண்டடைந்து , தொடர்புடையவற்றையும் இணைத்து ஆவணப் படுத்திய அற்புத வரலாறு தான் உப்பு வேலி .

2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர் வேலியை உருவாக்கிய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி , இந்தியாவையே இரண்டாகப் பிரித்து இமயமலையிலிருந்து ஒரிஸா வரைக்கும் உப்பு வேலியை உருவாக்கியது உலகெங்கிலும் எந்த வரலாற்றிலும் இல்லாத மாபெரும் உழைப்புக்கான செய்தியும் கூட .அதே வேளையில் உப்பு என்பதை மிகச் சாதாரணமாக எண்ணும் நம்மிடையே 1700 களிலிருந்து நம் இந்திய மக்களின் வாழ்க்கையில் உப்பைக் குறித்தான எவ்வகையான அரசியல் நடந்துள்ளது, எத்தனை ஆயிரம் மக்கள் உப்பிற்கு வரி கொடுக்க இயலாமல் மாண்டு போன கதைகள் , ஏழை எளிய மக்களின் ஆண்டு வருமானத்தில் சரி பாதிக்கும் மேல் உப்புக்கு வரியாக , விலையாகக் கொடுத்து துன்பமுறும் அவலம் என வரலாற்றின் பேசாத பேச்சை எடுத்துப் பதிவு செய்கிறார் ராய் மாக்ஸம். 

அதன் தொடர்ச்சியாக இந்தியா என்ற வளமான துணைக் கண்டத்தில் உப்புக் காய்ச்சும் வேலை எப்படி  மாபெரும் தொழிலாக நடந்தது , மக்கள் தங்கள் சொந்த நாட்டின் உப்பைத் தின்னக் கூலியுடன் வரி என்ற ஈ.ரெழுத்து அஸ்த்திரத்தால் படும் துன்பங்கள் , உப்பின் வரியால் அந்தக் காலத்திலேயே கோடி கோடியாக வருமானம் ஈட்டிய பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரிகளின் சொத்து சேர்ந்த விபரங்கள் என ஏராளமான விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

நாட்டு விடுதலைக்குக் காரணமாக அமைந்த உப்புச் சத்யாகிரகம் குறித்தும் , காந்தி ஏன் எளிய மக்களின் பார்வையில் நின்று உப்பை வைத்துப் போராடினார் என்ற நம் கேள்விகளின் விதையாக இந்தப் புத்தகம் நம்மிடம் பேசுகிறது .

எல்லாவற்றையும் கடந்து, ராய் மாக்ஸம்  , ஒரு நூற்றாண்டுக்குள் முற்றிலுமாக மக்கள் மறந்த அந்த வேலியைப் பற்றிய ஒட்டு மொத்த ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார் என்பதும் வரலாறு. 

1997 இல் தான் லண்டனில் ஒரு சிறிய புத்தகக் கடையில் வாங்கிய புத்தகத்தில் இருந்த சில வரி குறிப்பை மட்டும் ஆதாரமாக நம்பி இந்தியாவிற்கு வந்து இறுதி வரை நம்பிக்கை இழக்காது , அப்படி நம்பிக்கை இழக்கும் சூழலில் ஏதோ ஒரு ஆவலைப் பற்றிக் கொண்டு மூன்று வருடங்களாகத் தேடித் தேடி இறுதியில் அந்த உயிர்வேவியைக் கண்டடைகிறார் ராய் மாக்ஸம். 

அப்படி அவர் கண்டுபிடிக்கச் செல்லும் இடங்களுக்கு நம்மையும் பயணக் குறிப்புகளாக அழைத்துச் செல்வதும் சந்திக்கும் மனிதர்களிடம் உருவாகும் உரையாடலில் நாமும் உரையாடுவது போல ஒரு உணர்வைத் தருகிறது இப்புத்தகம் . 

ஒரு அற்புதமான திரைப்பபடத்தைப் பார்ப்பது போல ஒரு உணர்வு கூட உருவானது. நாயகன்  ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொலைந்து போன தனது நாயகியைத் தேடிக் கண்டடையப் படும் மனப் போராட்டங்கள் , நடைமுறைச் சிக்கல்கள் இவற்றைக் கடந்து வருவதும் இறுதியில் திரும்பிப் போய் விடலாம் என எத்தணிக்கையில் எங்கிருந்தோ ஒரு அறிகுறி தென்பட்டு , மீண்டும் அங்கிருந்து தேடத் தொடங்கி இறுதியில் கண்டடைவதின் உச்சம் தான் இறுதிக் கட்ட பக்கங்கள். ராய் போலவே நாமும் மனதால் நெகிழ்ந்து கண்ணீர் சிந்துகிறோம் உப்பு வேலி முழுமையாக மறைந்து போனதை எண்ணி . அற்புதமான உண்மை வரலாற்றின் அழுத்தம் நம்மை வெகுவாக பாதிக்கிறது. 

இதை வாசிக்க வாசிக்க பிரிட்டிஷ் ஆட்சிக் கால நிர்வாக முறை , சுரண்டல் , அதன் விளைவாக உருவான பஞ்சங்கள் இவையெல்லாம் நம் கண் முன்னே விரிகின்றன. சும்மாக் கிடைக்கவில்லை சுதந்திரம், நம் முன்னோர் அடைந்த துன்பங்களின் ஒரு சிறு அத்யாயம் நம்மை வேதனைப் பட வைக்கிறது.

புதர்வேலி ? , உப்பு வரி , வரைபடங்கள் , சுங்க எல்லை , ஆக்ரா , சுங்கப் புதர்வேலி
உப்பு ,நகைப்புக்குரிய வெறி , கலகம் , புளிய மரங்கள் , சம்பல் என இதன் ஒவ்வொரு அத்யாயமும் ஆழமாக நம்மை உணர வைத்து நகர்த்துகின்றன. 

இலண்டனிலுள்ள குயிண்டோ என்ற புத்தகக் கடையில் ,ஸ்லீமனின் புத்தகம் , "மதிப்புக்குரிய " _கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் கடைசி பத்தாண்டுகளில் செய்த பயணங்களின் தொகுப்பில் வந்த ஒரு கட்டுரையின் அடிக்குறிப்பு தான் இப்புத்தகம் உருவான வரலாற்றின் தோற்றுவாயாக உள்ளது.

இமாலயத்தில் துவங்கி ,சிந்து நதியைத் தொடர்ந்து இன்றைய பாகிஸ்தானுக்குள் சென்று , டெல்லியைச் சுற்றிச் சென்ற வேலி இது. ஆக்ரா , ஜான்சி , ஹோஷங்கபாத் , காண்ட்வா , சந்திராப்பூர் , ராய்ப்பூர் எனச் சுற்றி மகாநதி ஆற்றில் இன்றைய ஒரிசா மாநிலத்தில் முடிவடைந்த 2504 மைல் தொலைவுள்ள நீண்ட எல்லையை நிரப்பிய வேலி இது.

பயண நூலாகவும் ஒரு வரலாற்றுப் புத்தகமாகவும் பல ரகசியங்களைக் கண்டறியும் கருவியாகவும் அமைந்து மிக முக்கியப் பங்கு வகிக்கிறது .

வேலி உருவாக்கத்தில்  ஈடுபட்ட, இறந்து போன மனிதர்கள் , காவல் காத்த பதிமூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட சிப்பாய்கள் , வேலியைப் பராமரித்த பணியாளர்கள் , அதிகாரிகள் என ஒரு பிரம்மாண்ட விஷயத்தின் சுவடு கூட அறியாமலிருக்கும் இந்த தலைமுறை குறித்த சிந்தனைகளும் நம்மைத் தூங்க விடவில்லை என்பது தான் உண்மை. 

உப்பைப் போல சாதாரணமாக எண்ணி விட முடியவில்லை , உப்பு வேலி சொல்லும் வரலாற்றை .இதை வாசித்த பிறகு உப்பின் மீதான நமது பார்வை மாறக் கூடும் , வரலாற்றின் மீதான நம் பார்வை மாறக் கூடும் என்கிறார் இதனைத் தமிழில்  மொழி பெயர்த்த சிறில் அலெக்ஸ் . மொழிபெயர்ப்பு நூலாகவே கருத முடியாமல் மிக இயல்பாக ,எளிய தமிழில் அதே வேளையில்  மக்கள் வாழ்வியல் சார்ந்த இலக்கியத்தை நமக்காக மொழி பெயர்த்துள்ள சிறில் அலெக்ஸ் மிகவும் பாராட்டுக்குரியவர். 

இந்நூலை வெளியிடுவதில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே ஆரம்பப் புள்ளியாக இருந்துள்ளார். அவர்  ஆங்கிலத்தில் வாசித்த ராய் மாக்ஸம் அவர்களது 'இந்தியாவின் மிகப் பெரிய வேலி" என்ற நூல் தந்த தாக்கம் , அவர் அது குறித்து தனது இணையத்தில் எழுதியது இவற்றைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் லண்டன் நகரில் ராய் மாக்ஸமை நேரில் சந்தித்து மொழியாக்க உரிமை பெற்றது என தொடர் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன.

அனைவரும் வாசித்து நம் நாட்டின் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த இந்த வரலாற்றை அறிய வேண்டியது மிக அவசியம் எனக் கருதுகிறேன். 

உமா

வெட்கமறியாத ஆசைகள்

வெட்கமறியாத ஆசைகள் 

ஆசிரியர் : சிவஷங்கர் ஜெகதீசன் 

பக்கம்.. 120
விலை ரூ 160
அட்டைப்பட வடிவமைப்பையும் நூலாசிரியரே செய்திருப்பது சிறப்பு. 

எல்லா சாதனைகளின் தொடக்கப் புள்ளியும் ஆசை என்ற நெப்போலியன் ஹில் வரிகளுடன் புத்தகம் ஆரம்பிக்கிறது. 
இது ஒரு சிறுகதைத் தொகுப்பு . மொத்தம் 11 சிறுகதைகள். 

மனிதர்களின் வாழ்க்கை ஆசைகளாலே கட்டமைக்கப்பட்டது என்பதை நன்கு அறிவோம் .அந்த ஒற்றைப் புள்ளியை வைத்து எதார்த்தமான சமூகத்தின் மனிதர்களது வாழ்க்கையில் நிகழும் அன்றாட நிகழ்வுகளை சிறு கதைகளாக மாற்றியுள்ளார் ஆசிரியர் . 

பெரும்பாலும் அனைத்து கதைகளுமே  சற்றேறக்குறைய ஒரு கருத்தை இறுதியில் சொல்வதாக அமைகிறது. அதாவது கதைக்கு ஒரு முடிவு தருவது போல , கதைகள் வாசிப்பவருக்கு ஒரு நீதியை மனதில் நிறுத்துவது போல  முயற்சித்திருக்கிறார். 

அனைத்து சிறுகதைகளும் இன்றைக்கு டிரென்ட் எனக் கூறுவோமே அங்கிருந்து ஆரம்பித்து எழுதப்பட்டுள்ளது. முகநூல் , வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் , டிவிட்டர் என அனைத்தும் பெரும் பங்கு வகிக்கின்றன. மொழியும் பேச்சு வழக்கில் தான் இருக்கிறது. ஆனால் ஆங்கில வார்த்தைகளின் கலப்பு சற்று அடர்த்தியாகவே  பயணிக்கிறது. மற்றபடி சில கதைகளுக்கு தரவுகளைத் தேடி தகவல்களாகக் கொடுக்க முயற்சித்துள்ளார். 

முதல் கதையின் தலைப்பு தான் புத்தகத் தலைப்பான வெட்கமறியாத ஆசைகள் .இதில் வரும் கதாபாத்திரமான ஸ்வேதாவின் ஆசைகள் அவளது வாழ்க்கையை அர்த்தமற்றதாக மாற்றி விடுகிறது. தற்கொலை செய்து கொள்கிறாள். இங்கு ஆசிரியருடன் முரண்படுகிறேன். பெண்களை போகப் பொருளாக சித்தரித்து அவளது ஆசை எதிர்மறை முடிவதைத் தருவதை இயல்பாகவே நான் வரவேற்கவில்லை. 

த்ரில் - இது பைக் ரேஸ் ,எளிய குடும்பத்து பையன் அதிக விலை கொடுத்து இரு சக்கர வாகனம் வாங்கி தனது விபரீத ஆசையால் உயிரிழப்பது. 

நூதனத் திருட்டு - நகரங்களின் பெட்ரோல் பங்குகளின் ஏமாற்று வேலை - இறுதியில் வேலையிழப்பது. 

ஜே.ஃஎப்.சி -KFC இன் சிறு மாற்று. உடல் நலத்திற்கு கேடான உணவுகளைத் தவிர்க்கச் சொல்வது. 

நேரக் கடத்தி : இதுவும் இணைய வழிக் கற்றல் – பெற்றோரை ஏமாற்றி வீடியோ கேம் விளையாடி  பணத்தை இழப்பது.

நிராசை :- தி கிரிக்கெட்டர் திரைப்படத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. . ஆனால் கதையில் நாயகன் தற்கொலை செய்து கொள்கிறான். 

ஏளனம் : உழைப்பால் உயர்ந்து பேராசையால் பெரும்  தவறிழைத்து  வீதிக்கு வந்து விடும் நபரின்  கதை .

சிம்னி அன்ட் ஹாப் : இந்தக் கதை சற்று வித்யாசமாக நேர்மறை முடிவைத் தந்துள்ளது. ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் பொருளாதார அடிப்படை இறுதியில் கணவன் மனைவி விரும்பிய சிம்னியை வாங்கித் தந்து மனைவியின் ஆசை நிறைவேறுகிறது. 

விபரீத ராஜ யோகம் : இதிலும் ஒரு சோம்பேறி , குடித்து ஏமாற்றி வாழ்க்கையில் தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு இறுதியில் மரணத்தைத் தழுவுகிறான் .

ஸ்டைரீன் : கொரோனா செய்திகளால் ஏற்கனவே கடுப்பாகியிருக்கோம். இங்கும் அதே இறப்பு புள்ளி விபரங்கள். ஸ்கூப்பியை இறக்கச் செய்த கதை. 

உப்பரிகை : இதிலும் கொரோனா லாக் டவுன் , ஆனால் மகிழ்ச்சியான முடிவு . இளம் காதலர்கள் ..

மேற்சொன்ன பதினோரு கதைகளும் கடந்த சில மாதங்களில் ஊடகங்களில் செய்திகளாக வந்து  தொலைக் காட்சியில் விவாதங்களாக நிகழ்ந்த நேரடி அனுபவங்களாகப் பதிவாகி சிறுகதைகளாக மாறியிருக்கிறது. என எண்ணுகிறேன்.. ஏனெனில் இவற்றில் வரும் எல்லா கதைகளின் கதாபாத்திரங்களையும் நாம் ஒரு முறையாவது சந்தித்து இருப்போம் . மொத்தத்தில் மனிதர்கள் ஆசையே படக் கூடாதா என்ற சந்தேகத்தை உருவாக்கும் ஆசிரியர் , இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கதைகளைப் போல தரமற்ற ஆசைகளை விலக்க ஒரு விழிப்புணர்வு நூலாக இதைத் தந்துள்ளார் என எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி இனி வரும் காலங்களில் நேர்மறைக் கதைகளைப் படைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.