Wednesday 17 March 2021

யூமா வாசுகி - தன்னறம் விருது நிகழ்வு

யூமா வாசுகி - தன்னறம் விருது நிகழ்வு 


அன்றைய பொழுதின் காலை 10-12  மணி என்பது இனியொரு தடவை வேறெப்போதும் கிடைத்தற்கரிய அழகியல் நிறைந்த அற்புத தருணம் . மனதின் விருப்பம் சார்ந்த சந்திப்பாக அனைவருக்கும் இருந்ததைத் தான் சரணின் படங்கள் நமக்கு உணர்த்துகின்றன. 


யூமா வாசுகி என்ற எளிய மனிதருக்குள்  இத்தனை ஆழமான ஆளுமைத் திறன் இருப்பதை உணரவும் அதெப்போதும் அதிகாரமாக தன்னை வெளிக்காட்டிக் கொள்வதே இல்லை என்பதை நேரில் காணவும் வாய்ப்பாக அமைந்தது. 


சிவராஜ் பதிவுகளின் வழியாக மட்டுமே இவரை அறிவேன். பிறகு தூய கண்ணீரை எனது வகுப்பு குழந்தைகள் வாசித்து அனுப்பிய கருத்துகளுக்குப்  பிறகு தான் முகநூலில் யூமா வாசுகி என்ற நூலாசிரியரைத் தொடர்ந்தேன் .அவ்வப்போது சில நாளிதழ்களில்  இவரது குழந்தைகளுக்கான எழுத்துகளை வாசித்தது மட்டுமே இவரைப் பற்றி எனக்குத் தெரிந்தது .ஆனால் குருகுலக் கல்லூரியில் மிக அழகிய இயற்கை சூழலில் இவருடன் தோழி லதா , கார்த்திக் நேத்தா சிவக்குமார் ஐயா என படிகளில் அமர்ந்திருந்த போது கூட விழா இவ்வளவு பொருண்மையும் அடர்த்தியும் கொண்டிருக்கும்  என நான் நினைக்கவில்லை. ஆனால் தம்பி சிவராஜின் அடுத்தடுத்த அறிமுகப் பகிர்வுகளும் யூமா வாசுகியினுடன் அமர்ந்திருந்த மூவரும் பேசிய போது தான் புரிந்தது. ஒரு வேளை வராமல் போயிருந்தால் வரலாற்று நிகழ்வைத் தவற விட்டிருப்போம் என்று. 


ஆமாம் கார்த்திக் நேத்தா என்ற வாழும்மனிதரை உருவாக்கியதில் யூமா வாசுகி அவர்களது பங்கு குறித்து அறியும் போது , யூமா வாசுகி என்ற மனிதர்  ஒரு மிகச் சிறந்த ஆசிரியர் தோழமையாகவும்  ஒரு கோணத்தில் தாய் தந்தையின் இடத்தில் நின்று வழிகாட்டியதையும் அவரது பகிர்வு சொல்லியது. 


பேராசிரியரும் எழுத்தாளருமான ஐயா சிவகுமார் அவர்கள் பேசும் போது , யூமா வாசுகியின்  எழுத்து வாழ்வின் பரிமாணங்கள் குறித்த அற்புதமாகப் புரிதல் நிகழ்ந்தது.  


நைஜீரியாவிலிருந்து தாய் நாட்டிற்கு  திரும்பிய பிறகு தான், நிறைய வாசிக்க ஆரம்பித்தேன் என்று கூறிய எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான லதா அருணாச்சலம், தான்  ஆற்றிய உரையின் வழியே  யூமா வாசுகியினை மேலும் மனதிற்குள் நெருங்க வைத்தார்.. ஒருவரின்  எழுத்து  வாசகரைப் பண்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும். அப்படியான மாற்றத்தை யூமா வாசுகியின் எழுத்து தனது வாழ்வில் . பாதித்த சம்பவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டது இன்னும் மறக்கவில்லை. யூமாவின் எழுத்தை தரிசிக்க இவரின் பகிர்வு ஆர்வமூட்டும் செயல்பாடாக இருந்ததை உணர்கிறேன். 


யூமா வாசுகியின் ஏற்புரையில் குழந்தைகள் உலகம் , கல்வி முறையுடன் இணைந்த மாற்றம்  என ஒரு புறம் உரையாடியும் தனது எளிமையான பண்பால் மிக எளிதாக அனைவரது மனதில் பசை போல ஒட்டிக் கொண்டதும் நிகழ்ந்தது .


நிகழ்விடத்தைச் சுற்றியும் மனதின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட அன்பு மனிதர்கள் நிறைந்து நம்மை புதிய உலகத்துக்கு அழைத்துச் சென்றதும் மரங்களின் கிளைகளெல்லாம் எங்கேயோ வாழும் குழந்தைகளின் பிஞ்சு விரல்களினால் மடிக்கப்பட்டக் கொக்குகளின் தோரணமும், மேடையலங்காரமாக கட்டப்பட்டிருந்த துணியில் வரையப்பட்டிருந்த வண்ணப் பென்சில்களின் ஒவியங்களும்   ரம்மியமான சூழலை நமக்குத் தந்ததில் குக்கூ மனிதர்களின் எளிமையும் தூய்மையும் உழைப்பும் பறைசாற்றின. 


நிகழ்வில் தம்பி சிவராஜ் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களது உழைப்பையும் அனுபவத்தையும் அவரவர் அன்பையும் தனக்கே உரிய இயல்பில் கண்கலங்கி அறிமுகம் செய்யும் போது என்னையறியாமல்  என் கண்களும் கசிந்து கசிந்து மனமும் சேர்ந்து கசிந்தது . எத்தனை இளைய குழந்தைகளின் நம்பிக்கைக் கரமாக வாழுகிறான் இந்த அற்புத மனிதன் .அங்கிருந்த மொத்த மனிதர்களும் நோக்கி கரமும் மனமும் குவிக்கும் காந்தியத்தின் ஒற்றைப் புள்ளி இந்த சிவராஜ் என்றால் அதுவே உண்மை. 


விடாமல் படம் எடுக்கும் சரண் உள்ளிட்ட ஒரு நிழற்படக் குழு , அகர்மா கெளசிக்  குடும்பம் , வினோத் , குமரன் ,சிவகுருநாதன் குடும்பம் , சுயம்பு , கார்த்தி ,  பாரதி , மது மஞ்சரி, குமார் சண்முகம் , முத்து , திருமலை குடும்பம் ,ராஜாராமன் , தியாகு , பிரகாஷ் , கோகுல் ராஜ் , வினோத் , மைவிழி , மீரா , ஷில்பா ஜான் சுந்தர் , ஸ்டாலின் சரவணன் , சித்ரா மா, விஷ்ணுபுரம் சரவணன் , கவிதா டீச்சர் குடும்பம் , பாலபாரதி , கலைச்செல்வி  உட்பட இன்னும் பெயர் தெரியாத முகங்களையெல்லாம் சந்தித்ததை நினைத்து நினைத்து மகிழ்ச்சியான மனநிலையே .


 நீர் தந்த மண் பானைகள் சூழ ஒரு பக்கம் கடலை மிட்டாய் , பச்சைப் பயிறு , எள்ளுருண்டை உட்பட கருப்பட்டிக் காப்பி , இன்னொரு பக்கம் தும்பி தன்னறம் வெளியீடுகள் …. மனமெங்கும் மகிழ்ச்சி மத்தாப்பூ …




No comments:

Post a Comment