Wednesday 28 March 2018

மாணவியும் ஆசிரியரும்

மாணவியும் ஆசிரியரும்
*************************
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் யாராவது ஒரு இன்ஸ்ஃபிரேஷன்  அமைவார்கள்  , அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர் பெரும்பாலோர் வாழ்வில் அந்த இடம் ஆசிரியருக்குக் கிடைத்து விடுகிறது. அப்படி மாணவப் பருவத்தில் என்னுள் நுழைந்த பலருள் குறிப்பிடத்தக்கவர் எனது உயர்நிலைப் பள்ளி  ஆசிரியர் திருமதி வள்ளியம்மை அவர்கள் .பள்ளிப் படிப்பு முடிந்து 25 வருடங்கள் நிறைவுற்றாலும் என்றும் என் மனதில் நேற்று போல் நெருக்கமானவர் இவர்.

ஒரு குறிப்பிட்ட வருடங்கள் இடைவெளிக்குப்  பிறகு கடந்த வருடம் அவரது மகன் வழியே முகநூல் வழியாகத் தொடர்பு கொண்டதால் டீச்சரிடம் அலைபேசியில் பேச முடிந்தது. என்றாவது ஒரு நாள் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். நேற்று முன்தினம் Sharan Gurunathan அண்ணாவிடமிருந்து குறுஞ்செய்தி , வரும் 20 நவம்பர் அம்மாவின் பிறந்த நாள் , ஆகவே 19 ஞாயிறு மாலை சந்திக்க வாய்ப்பு இருக்குமா என ....

இதைவிட வேறு பேறு என்னவோ ? கண்டிப்பாக என்று கூறி , ஒரு அறக்கட்டளை சிறந்த சமூக சேவகர் என்ற விருதை அளிக்க அழைத்திருக்கிறார் அதைப் பெற்றுக் கொண்டு வருகிறேன் என்று  கூறஅவருக்கும் மகிழ்ச்சி ,விழா முடிந்து அவர்களை சந்திக்க செல்கிறேன் ....

அண்ணா கூறுகிறார் , அம்மாவிற்கு நீங்கள் வருவது தெரியாது சர்ப்ரைஸ் ....வீட்டிற்குள் நுழைந்து  அவர்களது அறையில் அண்ணா .

"அம்மா , உங்களை யாரோப் பார்க்க வந்து இருக்காங்க ,
அப்படியா ? தோ வரேன் என வெளியே வர ....

டீச்சர்..... உமா வந்திருக்கேன் எனக் கூறி தடாலடியாக அவரது கால் தொட்டுப் பணிய எனது கண்களும் அவரது கண்களும் மகிழ்ச்சி வெள்ளம் ,
என்னைக் கட்டிக் கொண்டார் , உடனே கையில் அந்த அவார்டைக் கொடுத்து சால்வையையும் போர்த்தி விட்டேன். சிரிப்பும் அழுகையும் என அவரது கண்களில் ....

என்னத் தவம் செய்தோமோ என அவர் நினைக்கும் படியான ஒரு மாணவியாக என்னை வடிவமைத்த சூழல்களுக்கு ஆயிரம் நன்றிகள் ...
அவரது குடும்பமும் மகிழ்ச்சியில் கலந்து கொள்ள , இருவரும் அமர்ந்து சற்று நேரம் பலப் பழங்கதைகளை நினைவு கூற இடையிடையே அண்ணாவும் இணைந்து டியூஷன் பசங்க , ஜலகண்டபுரம் , இன்றைய கல்வி முறை எல்லாவற்றையும் பேசினோம்.

தொடர்ந்து இரவு உணவுக்கு ஒரு வட இந்திய உணவு வகை தயாராகும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் அண்ணா . அங்கு எனது மகனும் கணவரும் வந்து விட எனது ஆசிரியருடன் இரு குடும்பமும் ஒன்றாக நிறைய பேசிக் கொண்டே உணவருந்தினோம். அண்ணர கேட்டார் , கனிஷ்கர் என ஏன் வரலாறு பேர் வச்சீங்க ? அதுக்கும் டீச்சர் தான் அண்ணா காரணம் , அந்தளவிற்கு வரலாறு நடத்துவாங்க அதனால் நான் 7ஆம் வகுப்பில் வரலாற்றில் கனிஷ்கப் பேரரசு பற்றி படிச்சதால தான் என் மகனுக்கு கனிஷ்கர் எனப் பெயர் வைத்தேன் என்று கூறியதை எண்ணி அவர் சிரித்தார்.

எல்லோரும் அந்த மாலைப் பொழுதை பழைய நினைவுகளுடன் பேசிக் கொண்டு, மிக அருமையான உணவுடன்  மிக மிக அன்புடன் உண்டு கழித்தோம். எனது நினைவுகள் ஜலகண்டபுரம் , பள்ளி , எனது தோழர் , தோழிகள் ,பள்ளியில் டீச்சருடன் இணைந்து எனக்குக் கற்றுத் தந்த மற்ற ஆசிரியர்கள் என நீண்ட நேரம் பேசிப் பேசி மகிழ்ந்தோம்.

எனது கணவரையும் Sgopalakrishnan Subramaniam டீச்சர் பாராட்டினார் ஏற்கனவே இருவருக்கும் அறிமுகம்  உண்டு , உமா இது போல செயல்பாடுகள் செய்ய நீங்கள் ஒத்துழைப்பு தருவது ரொம்ப சந்தோஷம் என்றார். பேத்திகள் அதித்தி ,அனு , மருமகள் வினோதா என மகிழ்ச்சி சூழ் உலகில் எனது ஆசிரியர் வாழ்வது எனக்குப் பெருமையாக இருந்தது. காலத்திற்கு ஏற்றார் போல் நம்மை நாம் மாற்றிக் கொண்டு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் உமா என அவர்கள் தனது அனுபவத்தை எனக்குப் பாடமாகத் தந்து வழியனுப்பினார்.

எத்துணை ஆயிரம் பேர்  டீச்சரின்   மாணவர்கள் இருந்தாலும்இது போல யாருக்கும் ஒரு வாய்ப்பு கிட்டியிருக்காது என எண்ணி .... நிரம்பிய வயிறும் நிறைந்த  மனதும்  உடன் பயணிக்க வீடு வந்தோம். எனது டீச்சர் 100 ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ... சரண் அண்ணாவிற்கும் வினோதா அண்ணிக்கும்  எங்கள் அனைவரின் நன்றிகள் .

Tuesday 27 March 2018

கலைப்பயண விழா குறித்த கலந்துரையாடல்

கலைப்பயண விழா குறித்த கலந்துரையாடல்

மார்ச் 10 அன்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக  நாம் முன்னெடுத்துள்ள கலைப் பயணம் சார்ந்த பயிற்சியின் திட்டமிடல் முனைவர் காளீஸ்வரன் ஐயா அவர்களுடன் இன்று சென்னை லயோலா கல்லூரியில் நடந்தது .

1986 முதல் அரசு சார்ந்து தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய இவர் ,சிவகங்கை மாவட்டம் , இராமநாதபுரம் மாவட்டங்களில் தேர்ந்த கலைக் குழுக்களை உருவாக்கி இன்று வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நமது கிராமியக் கலைகளை உயிர்ப்பித்து வருகிறார்.அறிவொளி இயக்க செயல்பாடுகளில்
மக்களிடையே விழிப்புணர்வைத் தந்த பெருமை இவரது கலைக்குழுக்களுக்கு உண்டு.

லயோலா கல்லூரி 7 ஆண்டுகள் அரசுக்கு இவரை மாற்றுப் பணிக்கு தாரை வார்த்துள்ளது கல்விப் பணிக்காக ...

மனித வள மேம்பாட்டுத்துறையுடன் இணைந்து உலக இலக்கியங்களை நம் பள்ளிக் குழந்தைகளுக்காக தனது மாணவர் சமூகத்துடன் இணைந்து உருவாக்கியஅனுபவத்தை நினைவு கூரும் இவர் , தனது 25 வருட உழைப்பைக் கொண்டு தமிழகம் முழுக்க 25 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கலைஞர்களை உருவாக்கி உள்ளார் .

2012 வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் இவரைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் சுமார் 40,000 இடைநிற்றல் குழந்தைகளைக் கண்டறிய இவருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு மான பயணம் நெடுந்தூர அனுபவமிக்கது.

அரசுப் பள்ளிகளுக்காகவே பல்வேறு முயற்சிகளைத் தனது கலை விழாக்களின் வழியே செய்து வரும் முனைவர் காளீஸ்வரன் வீதி தோறும் ,சந்தைகள் தோறும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தந்து கொண்டு உள்ளார்.

நமது அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பற்றி அறிந்துள்ள இவர் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி தர தன்னால் இயன்ற அளவு வழிகாட்டி மாவட்டக்குழுக்களை ஆங்காங்கே வழிகாட்ட உதவுவதாகக் கூறினார் .

வாசிப்பிற்கான தளத்தையும் உருவாக்கி வரும் இவர் தனது நாட்டுப் புறக் கலைகளின் வழியே வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர் மத்தியில் எடுத்துச் செல்லும் பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அமைதி வாசிப்பு , உரத்த வாசிப்பு , காட்சி வாசிப்பு என மாணவருக்கு விரிகிறது இவரது சிந்தனை.

பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் பற்றி பேசுகையில்ச. மாடசாமி   ஐயாவையும் JK    அவர்களையும் வெகுவாக நினைவு கூர்ந்த இவர் , தான் அடுத்து வரும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறினார் .

செயல்பாடுகள் வெவ்வேறாக இருப்பினும் நோக்கம் ஒன்றே ஆதலால் அரசுப் பள்ளிக்காக நம்மோடு கரம் கோர்க்கும் முனைவர் காளீஸ்வரன் ஐயா அவர்களோடு இன்றைய கல்வி முறை , மாணவர் சார்ந்த அணுகுமுறை என சுமார் ஒன்றரை மணி நேர உரையாடல் மகிழ்வாக இருந்ததோடு உத்வேகத்தைத் தந்தது.

இன்னும் நிறைய இருக்கின்றது எழுதுவதற்கு .... இப்போது இது மட்டும் ..

அன்பும் நன்றியும் விஜய் மற்றும் ஆண்டனி சாமி

நமது அடுத்த சந்திப்பு வரும் மார்ச் 10
சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மீனம்பாக்கம்  சிவில் ஏவியேஷன் நடுநிலைப் பள்ளியில்  ....

அன்புடன் உமா

Sunday 18 March 2018

வாசிப்பை நேசிப்போம் ..... 6

நூல் விமர்சனம் - சர்வதேச பெண்கள் தினத்திற்கானது ..

தாய் - இரண்டெழுத்து சொல் என்றாலும் 2 கோடிக்கும் மேற்பட்ட வாசகர்களால் உள்வாங்கப்பட்ட மிகப் பெருமை வாய்ந்த நாவல் இது. நூலாசிரியர் மேக்சீம் கார்க்கி உலகப் புகழ் பெற்ற இலக்கியப் படைப்பாளர்கள் வரிசையில் முன் நிற்பவர் . அந்த ருஷ்ய மொழியின் நூலை , ரகுநாதன் அவர்கள் தமிழாக்கம் செய்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டு இருக்கிறது . மொத்த பக்கங்கள் 560 , இரண்டு பாகங்களாகவும் , ஒவ்வொரு பாகத்திற்கும் 29 அத்யாயங்களாக மொத்தம் 58 அத்தியாயங்களாக ஒரு நெடுங்கதையாக நம்முள் பயணிக்கிறாள் தாய் .

முதல் பதிப்பு 1904 இல் வெளிவந்திருந்தாலும் ஒரு நூற்றாண்டைக் கடந்தும் வாசகரை தன் பக்கம் உயிர்ப்புடன் ஈர்த்து வைத்துள்ள சக்தி இந்த மாபெரும் நூலுக்கு இருப்பது எனக்கு வியப்பாக இருந்தது.

சங்க இலக்கியங்களிலும் சொல்லப்படாத நீதியை ,திரைப்படங்கள் தொடாத புரட்சி வாழ்க்கையை இந்தத் தாய் நமக்குக் கூறுகிறாள். சுரண்டலுக்கான  பொருளும்  தொழிலாளி  முதலாளி பேதங்களும் பக்கத்துக்குப்  பக்கம் கதையைக் கட்டமைக்கிறது.

ஒன்றுமே அறியாமல் செக்கு மாடுகளாய் சுழன்று வேலை செய்யும் தொழிலாளி வர்க்கத்தின் சிந்தனைகள் எவ்வாறு கனல் மூட்டப்படுகிறது ,புரட்சியாளர்கள், எவ்வாறு உருவாகின்றனர்  என்பதை   மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் கார்க்கி .

உழைக்கும் வர்க்கம் எவ்வாறு தங்கள் உடல்  வலிகளைப் போக்க ஓட்கா மதுவைப் பருகுவதும் , தத்தமது வீடுகளிலும் வசிப்பிடப் பகுதிகளிலும் கிளர்ச்சிகளை உருவாக்கி, சண்டையிட்டுக் கொள்வதும் , வீடுகளில் மனைவியை அடித்துத் துன்புறுத்துவதும் என நாள்தோறும்  நடப்பதைப் பதிவு செய்யும் தாயின் பக்கங்கள் இன்றைய நமது தமிழ்ச் சமூகத்தின் சீரழிவை நமக்கு நினைவுபடுத்துகிறது.

உண்மைக்கும் நேர்மைக்கும் உழைப்பிற்கும் வழி காட்டும் பாடமாகவும் பொறாமை , சுரண்டல் , பேராசை இவற்றை  அடியோடு ஒழிக்கும் அணுகுமுறையும் கதையினூடே கருக் கொண்டு , புரட்சிப் பாதைக்கு வித்திடும் அடிப்படைப் பாடமாக அமைகிறது தாய் .

தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிப்பதால் தன் ஒரே மகனுக்கு ஆபத்து வருமோ என , தாய் பயப்படுவதும் ,பயம்தான் நம்மை அழிக்கிறது , நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியம் சாதிக்கிறார்கள் , பயப்படாதே என மகன் பாவெல் தேற்றுவதும் எல்லா மக்களுக்கும் பொதுவான நீதியல்லவா ...

படிப்பறிவை வாழ்க்கைத் துன்பத்தில் மறந்து விட்ட தாய் , படிப்படியாக புத்தகம் வாசிக்கக் கற்றுக் கொள்வதும் , தனது மகனும் அவனது தோழர்களும் செல்லும் புரட்சிப் பாதையை மனமுவந்து பின்பற்றுவதும், தொழிலாளர் கூட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் சென்று , மெதுவாகத் தானும் புரட்சியாளராக உருமாறுவதும் தாய்க்  கதையின் மிக அழகிய இடங்கள் .

மகனைப் பற்றியும் அவனது சகாக்கள் பற்றியும் மனதிற்குள்  கவலைப்படும் இடங்களில் தாயின் பாசம் நெகிழ வைக்கிறது. ஆனால்  இறுதியில் அவர்களை சைபீரியாவிற்கு நாடு கடத்தும் தீர்ப்பை நீதிபதிகள் வழங்கிய போது கூட, மனம் கலங்காமல், புரட்சிகரமாக ,பாவப்பட்ட மக்களிடையே மகனின் பேச்சிற்கான பிரசுரங்களை விநியோகம் செய்யும் இடங்களில்அந்தத் தாயின் செயல் , கம்பீரமான புரட்சிக் காட்சியை நம் மனக்கண் முன்னே கொண்டு வருகிறார் கார்க்கி.

தோழர்களாக ஒருவர் மனம் ஒருவர் கவர்ந்து தங்கள் நோக்கம் சிதையாமல் கை கொடுக்கும் உறவுகள் 560 பக்கங்களிலும் நம்மோடு பிரயாணிக்கின்றனர் முஜீக்குகளின்  இயல்புகள் தொடர்ந்து அந்த சமூகத்தின் மக்கள் வழியே காட்சிப்படுத்தப்பட்டதும் , கடவுள் நம்பிக்கை புரட்சியாளராக மாற்றம் பெற எந்தத் தடையும் போடாது என்பதை தாயின் கடவுள் நம்பிக்கை வழியே உறுதிப்படுத்தி இருப்பதும் சிறப்பு .

நாவல் முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தொழிலாளிகளின் வாழ்க்கை நம்மை மரண வேதனையை அனுபவிக்க வைக்கிறது. ஆண், பெண் கதா பாத்திரங்களை சமமாக, புரட்சிப் பாதையில் பயணிக்க வைத்திருப்பதும் , பெண் புரட்சியாளர்களை மிக அதிக தைரியமிக்கவர்களாக வாழ வைத்திருப்பதும் எனக்கு மிகப் பிடித்திருந்தது.

நாவலின் ஆரம்பம் முதல் இறுதி வரை நம் மனதையும் அறிவையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் வகையில் ஒரு அற்புதமான முழு நீளத் திரைப்படக் காட்சியாக நம்மை லயிக்க வைக்கிறது தாய் , மனிதனை மானுடப் படுத்தி புதிய சமூகத்தை நிர்ணயிப்பதில் இலக்கியம் வகிக்கின்ற மகத்தான பாத்திரத்தை , ஒரு மாபெரும் புரட்சியில் பெண்கள் செய்யும் தியாகங்கள் , அவர்களது இன்றியமையாத பங்கு இவற்றை ஒரு அற்புதமான நடையில் பதிவு செய்திருக்கிறார் கார்க்கி .

சோஷலிஸ்ட்கள் பற்றிய புரிதலை கடைசி அத்யாயத்தில் பாவெல் தனது வழக்கின் கருத்துகளாக நீதிபதிகளின் முன் வைப்பது ஒட்டு மொத்தக் கதையின் கருப்பொருளாக இருக்கின்றது. மே தினத்தன்று நடக்கும் உரிமைப் போராட்டமே கதையின் திருப்புமுனையாக அமைகிறது. அதற்காக அவர்கள்  பாடும்
"துயில் கலைந்து அணியில் சேர விரைந்து வாரும் தோழர்காள் " என்ற பாடல் வரிகளும் , ஜார் அரசனுக்கு எதிராக அவர்கள் செங்கொடி ஏற்றுவதும் நம்முள் புரட்சி மனப்பான்மையை ஊன்றுகிறது.

தாயாக வரும் பெலகேயா  நீலவ்னா , மகனாக வரும் பாவெல் , அவனது காதலியாக வரும் ஷாஷா , தோழர்களாக வரும் .....ஹஹோலாக கதை முழுக்க வரும் அந்திரேய் நஹோத்கா, பியோ தர் மாசின் , நதா ஷா , நிகலாய் இவான விச் ,மிகயீல் இவானவிச், கொல்லுப்பட்டறைத் தொழிலாளி  ரீபின் , மாறுவேடம் போடுவதில்  வல்லமை கொண்ட புரட்சிப் பெண்ணாக வரும் நிகலாயின் சகோதரி  சோபியா , எபீம் , சிஸோவ் , புகின் ,பியோ தர் , சமோய் லவ் , அச்சுப் பிரதி தயாரிக்கும் லுத்மீலா , செர்கேய் என்று தேர்ந்த பாத்திரங்களை  கதை முழுவதும் கச்சிதமாக அறிமுகப்படுத்திய கார்க்கி இவர்களோடு நம்மை எல்லா அத்யாயங்களிலும்  வாழ வைக்கிறார்.

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சாட்சியாக எழுதப்பட்டு தாயின் குரலாகப் பதிவு செய்துள்ளதே இதன் மாபெரும் வெற்றிக்குக் காரணம் எனலாம்.
பைபிளுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பதிப்பிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்களால் வாசிக்கப்பட்ட நூல் தாய் என பதிப்புரையில் குறிப்பிட்டதற்கு இணங்க , நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் , பெரியாரையும் , அம்பேத்கரையும் உள் வாங்கியிருக்கும் இதை ஒவ்வொரு மனிதனும் வாசித்தல் அறமுடைய அரணுடைய சமுதாயம் உருவாக வழிகாட்டும் , உலக இலக்கிய வரிசையில்  பெண்ணை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இது புரட்சிக் காப்பியம் என்று கூட சொல்லலாம்.

இப்புத்தகத்தை வாசிக்க வாசிக்க தாய்மையும் , பெண்மையும் மட்டுமல்ல பெண்களுக்கான  வாழ்க்கை , புரட்சிக்கும் வித்திட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வேரூன்றியது, தாயாக வரும் நீலவ்னா பெலகோயாவினுள் நான் என்னைக் காண விழைகிறேன்  . மறுமலர்ச்சி சமுதாயத்தைக் காண வேண்டுமெனில் இது அனைத்து மாணவரும் ஆசிரியரும் படிக்க வேண்டிய புத்தகம் .சமீபத்தில் கல்வித் துறை செயலர் திரு உதயச்சந்திரன் அவர்கள் கூட தன்னை ஈர்த்த முதல் ஐந்து புத்தகங்களுள் ஒன்றாக இப்புத்தகத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு இருந்தது தமிழ் இந்து நாளிதழ் ...

இன்று காலை தோழர் JK அவர்களுடன் பேசுகையில் அவர் ,.. ஒரு முறை புதுச்சேரியில் இப்புத்தகத்தைப் பற்றி கலந்துரையாடிய போது
ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு சொக்கலிங்கம் "மேக்சிம் கார்க்கி .... உன்னால் மட்டும் எப்படி ஒரு தாயைப் பெற்றெடுக்க முடிந்தது ?"  என ஒரு கவிதையைக் கூறியதாகப் பகிர்ந்து கொண்டார். எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள் !!!!!

இப்புத்தகத்தை எனக்கு அன்புப் பரிசாகத் தந்த தோழி Visali தலைமையாசிரியருக்கு  அன்பும் நன்றியும் ...

பத்து வருடங்களுக்கு முன்னரே வாசிக்க எண்ணிய இந் நூலை , தற்போது தான் வாசிக்க முடிந்தது . இந்த சர்வதேச மகளிர் தினத்தில் இந்நூலைப் பற்றி எழுதுவதைப் பெருமையாகக் கருதுவதோடு அனைத்துப் பெண்களுக்கும்  உழைக்கும் வர்க்கத்தின் சார்பாக சமர்ப்பிக்கிறேன்  .

அன்புடன்
உமா

2018 மகளிர் தின விருது

விருதல்ல .....வீர வணக்கம் !!!!
*****************************
கடந்த ஒரு மாத காலம் முன்பு அலைபேசி ஒலிக்க , வணக்கம் ... நான் தமிழ் மணவாளன்  பேசுகிறேன் , பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் 10 அன்று ஒரு சிறிய விழா , அதில் கவியரங்கம் , கருத்தரங்கம் நடக்கிறது. தங்களது துறைகளில் சிறந்த சில பெண்களை அன்று பாராட்ட இருக்கோம். கல்வித்துறையில்  உங்களைத் தெரிவு செய்திருக்கோம் , வந்துடுங்க என்றார் , கண்டிப்பா வந்து விடுகிறேன் தோழர் என்று கூற , இதோ ஹேமா பேசறாங்க என்றார். ஹேமாவிடம் சில வார்த்தைகள் பேசி அன்றோடு அது மறந்து விட்டது.

ஆனால் தமிழ் மணவாளன் அவர்கள் இரு வாரங்கள் முன்பு அந்த விழா விவரங்களைத் தனது முகநூல் முகப்புப் படமாக வைக்க , திரும்ப நினைவுக்கு வந்தது.

மார்ச் 10 மாலை ....

இன்று காலை கலைப்பயணம் என்ற பயிற்சி ஒரு களப்பயணமே ... அதில் ஒருங்கிணைப்பும் பங்கேற்பும் முடிந்து சரியாக மாலை 5.45க்கு மின்சார ரயிலில் எழும்பூரை அடைந்து ICSA வின் வாயிலில் நின்றேன். அங்கு  அப்போதுதான்  விளக்கப் படத்தைக்  (Banner) கட்டிக் கொண்டு இருந்தனர் விழா ஏற்பாட்டாளர்கள் .
மெதுவாக 6.30 மணிக்கு  வரவேற்புரையைத் தோழி ரேகா அவர்கள் தர , எத்திராஜ் கல்லூரியின் பேரா அரங்க மல்லிகா தலைமையுரையாக சிலவற்றைப் பகிர்ந்தார். பெண்கள் தினம் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றையும் , பெண்கள் சர்வதேச தினமாகக் கொண்டாட்டத்திற்கான  காரணம் , இன்றுள்ள நிலை என தனது பாணியில் ஒரு பேராசிரியராகவே விளக்கினார். தான் இவ்வாறு ஒரு முனைவரானதற்குப் பின்னால் தனது தாயின் உழைப்பு இருப்பதாகவும் கூறினார். பெரியாரின் சிலை உடைப்பு வரையிலும் பெண்ணியம் பற்றியும் சற்று விளக்கமாகவேப் பேசினார்.

தொடர்ந்து தோழர் தமிழ் மணவாளன் அவர்களது தொடக்க உரை ரத்தினச் சுருக்கமாக இருந்தது. இந்த விழாப் பகிர்வு அழைப்பிதழில் கூட ஆண்களது பெயர் வரக்கூடாது என கவனமாக இருந்தேன். ஆனால் தொடக்க உரை ஆற்றவேண்டுமாய் இங்கிருக்கிறேன்  எனக் கூறி , நடிகை ரோஹினி அவர்கள் கலந்து சிறப்பித்தது மகிழ்ச்சி எனக் கூறி , மிக முக்கியக் கருத்து ஒன்றைப்  பதிவு செய்தார்.

நாங்கள் உலக உழைக்கும் தினம் என்ற இந்த நவீனக் கலை இலக்கியப் பரிமாற்ற நிகழ்வுப் பகிர்வில் பெண்களுக்கு விருதுகள் வழங்கவில்லை , அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தவே அழைத்தோம்  அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். மிக மகிழ்வாக இருந்தது.

தொடர்ந்து ரோஹினி அவர்கள் , மிக இயல்பாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். ஒவ்வொரு பெண்ணும் போற்றப்பட வேண்டியவரே , ஒவ்வொரு நாளும் பெண்கள் தினமே இன்று ஒரு நாள் மட்டுமல்ல ... ஒவ்வொரு பெண்ணும் சுயமரியாதையை வாழ்க்கையில் பெற போராடித் தான் வெற்றி பெறுகின்றனர். என் வீட்டூக் கருகே காய்கறி விற்கும் அம்மாவிடம் நான் அதைப் பார்க்கிறேன்.. ஒவ்வொரு பெண்ணும் , தாயாக , நல்ல மனைவியாக வாழ்ந்து பெண்களுக்கே உரிய சுயமரியாதையை அடைகின்றனர் எனக் கூறி சில நடைமுறை உதாரணங்களைப் பகிர்ந்தார். மேலும் இன்று பெருமைப் படுத்த அழைத்திருக்கும் பெண்களை ஏன் மேடையில் அமர வைக்கவில்லை ... எனக் கேட்டு செய்து இருக்க வேண்டும் என்றார்.

மீன் விற்பவர் , வீட்டு வேலை செய்பவர் , பூ வியாபாரி , ஆட்டோ ஓட்டுநர் , திருநங்கைகளுக்காகக்  களப்பணியாற்றுபவர், ஆசிரியராக இருந்து கல்வித்துறையில் களப்பணி செய்பவர்  , அரசியல் துறை தொகுதி கவுன்சிலராக இருந்து களப்பணி செய்பவர் , விவசாயத்தில் விதைகளை சேகரித்து தாவரப் பல்லுயிர்ப் பெருக்கம் செய்து வரும் ஒரு பள்ளி மாணவி இவர்களையே இந்த மேடை பெருமைப்படுத்தி வீர வணக்கம் செலுத்தியது. ஒவ்வொருவருக்கும் ரோஹினி அவர்கள் நினைவுப் பரிசை வழங்கி வாழ்த்துகள் கூறி அந்தத் தருணத்தை நெகிழ்வாக்கினார் .

தொடர்ந்து கவியரங்கம் ... பெண்களைப் பற்றி ,பெண்ணியம் பற்றி, பெண்களின் வாழ்வு , விளிம்பு நிலைப் பெண்கள் இப்படித் தொடர்ந்தது , தென்றல் , காயத்ரி , பாலைவன லாந்தர் என கவிதாயினிகள் வரிசையாக தத்தமது பாணியில் வாசித்து கைதட்டுகள் பாராட்டுகளாய் விழ ,

சற்று நேரத்திற்கெல்லாம்  சொற்ப மனிதரே அரங்கத்தை அலங்கரிங்க , கருத்தரங்கம் ஆரம்பமானது. பாவையர் மலர் வான்மதி இதை நன்றாகவே கண்டித்து , விழா முடிவு வரை இருக்கப் பழகுங்கள் என சற்று கோபம் காட்டியது நியாயமே ...

கருத்தரங்கு ஆரம்பம் ஷாலினி சமூக ஆர்வலர் இயல்பாகப் பெண்கள் இந்த சமூகத்தில் , வீடுகளில் , வேலை பார்க்கும் இடங்களில் சக மனிதர்களால் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள் என உணர்வு பொங்க எடுத்துரைத்தார். பெரிய பெரிய பெண்கள் தினக் கொண்டாட்ட  விழாக்களுக்கு சென்ற போது இல்லாத மகிழ்ச்சி இந்த பகிர்வு விழாவில் இருப்பதாகக் கூறினார் , காரணம் அங்கெல்லாம் பெரிய துறைகளில் தனது தாய் தந்தையால் வாழ்வில் முன்னேறி வந்தவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள்  , ஆனால் இங்கு அப்படி அல்ல ... வாழ்வின் விளிம்பு நிலையிலிருக்கும் சுயமாக உழைத்து  வெற்றி பெற்றவருக்கு பெருமை தரும் விழா என்றார். உள்ளபடியே மகிழ்ச்சி ஷாலினி ...

தொடர்ந்து வான்மதி பேசுகையில்  , தனது வாழ்க்கை அனுபவங்களையே முன் வைத்தார். பெண்களுக்கான சுதந்திரத்தை ஆண்கள் தருவது என்பதெல்லாம் ஒன்றுமில்லை. நம் சுதந்திரம் நமது கையில் தான்  , அடுத்தவரிடம் பெண்களுக்கான சுதந்திரத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்றார். மிக இயல்பாகப் பகிர்ந்தார் .
அடுத்ததாக  பெண்ணியம் சார்ந்து பேச வந்தார் , உலக உழைக்கும் பெண்கள் தினமா ? எந்தப் பெண் உழைக்காமல் இருக்கிறார் ? எனக் கேட்டு ஆரம்பித்தார். ஆம் ... ஆணியம் என்று ஒன்று எப்படி பேசப்படுவதில்லையோ அவ்வாறு பெண்ணியம் என்று பேச இல்லாமல்  போகும் நாள் ஒன்று வந்தால் அன்று தான் பெண்கள் தினம் கொண்டாட்டமாக இருக்கும் என்று தனது கருத்துகளை முன் வைத்தார்.

அறிவிற் சிறந்த சமூகம் பெண்ணியம் சார்ந்த மிக நல்லதொரு கருத்தரங்கம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தோழி ஹேமாவதி திரெளபதி நாடகத்தை ஒரு குட்டி தேவதையை வைத்து நடத்தினார். மிக அழகான வேடம் , நடிப்பு , வசனங்கள் என அனைவரையும் ஈர்த்தது .

நன்றி நவிழ இரவு 8.30 க்கு விழா சில புகைப்பட நினைவுகளுடன் நிறைவுற்றது. மகிழ்வும் அன்பும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு ....
அன்புடன்
உமா

.