Thursday 18 March 2021

கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது



நூலாசிரியர் :ஆதவன் தீட்சண்யா


2016 இல் நூல் வனம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுப்பு நூல் இது.18 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. 


சமூகத்தின் அரசியல் பார்வை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படையாகத் தெரிகிறது. அது ஆணவக் கொலையாகட்டும் , கார்ப்பரேட் நிறுவன சுரண்டலாகட்டும் தெள்ளத் தெளிவாகப் பேசப்பட்டுள்ளது.   சாதி மதங்களின் பெயரின் நிகழும் ஒடுக்குமுறைகள் , தலித் மக்களின் பேசப் படாத உழைப்பு, சமூகத்தில் அவர்களது தொடர்ந்த போராட்டம் , இலங்கை மக்கள் என நூலாசிரியர் தனது சொந்த அனுபவங்களைப் பற்றிக் கொண்டும் பல கட்டுரைகளில் பேசியுள்ளார் . பயணங்களின் மேடை அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். அம்பேத்கர் குறித்தான கட்டுரையும் , சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் கட்டுரையும் ஆய்வுகளாக உணர்த்தும் கருத்துகள் ஏராளம்.  


கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது என்ற  தலைப்புள்ள கட்டுரையில் மனிதர்களது பகுத்தறிவு குறித்து விரிவாக விவாதிக்கிறார். இதில்  வேதங்களின் பங்கு என்ன என்பதும் பேசப்படுகிறது. சமகாலத் தமிழ்ச் சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் அரசியல் பின்னணியும் கேள்விக்குள்ளாக்கப்பட்டும் பகடி செய்யப்பட்டும் ஏசியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைத் தொகுப்பு  நூல் இது. வெகு ஜனத்திடையே பகுத்தறிவை விதைக்கவும் , அவர்களுக்கான கடமை குறித்தும் எளிய மொழியில் தொடர்ந்து பேசப்பட்டுள்ளது. இறுதியில் ஒரு கட்டுரையில் நம் முன்னே கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன கடுகளவேனும் செய்து கொண்டிருக்கிறோமா ? என்ற கேள்வியை முன்வைத்து முடித்துள்ளார். 

சில இடங்களில் குறிப்பாக கல்விப் பிரச்சனை குறித்து அவர் எழுதியுள்ள இடங்களில் எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன . சமூக சீர்திருத்தம் என பல கோணங்களில் நாம் பார்க்கப்படும் பிரச்சனைகள் முளைக்கும் இடமாக மறைந்து இருந்து உணர்த்துவது கல்வி மட்டுமே.அரசுப் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் குறித்த கருத்துகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன . ஆனால் சமூக மாற்றத்தினை உருவாக்க நினைக்கும் அமைப்புகளில் உள்ள மனிதர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை என்ற கேள்வியுடன் அதிர வருவதோர் நோய் என்ற கட்டுரையைப் படித்து முடித்தேன். 


உமா

No comments:

Post a Comment