Wednesday 17 March 2021

வாசிப்பு –காந்தி ஓர் இதழியலாளர்

காந்தி ஓர் இதழியலாளர் 


வெளியீடு : காந்தி நினைவு அருங்காட்சியகம் , மதுரை 

விலை : ரூ 50

பக்கங்கள் : 72

பதிப்பு : முதல் பதிப்பு : 2015 

ஆசிரியர் : ப.திருமலை 


ஆசிரியர் குறிப்பு : 40 ஆண்டுகளாக தினமலர் , தினமணி , குமுதம் , புதிய தரிசனம் ஆகிய இதழ்களில் பணியாற்றிய நாடறிந்த இதழியலாளர் .தற்போது நமது இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். சமூக, பொருளாதார , அரசியல் , சுற்றுச்சூழல் தொடர்பாக ஏராளமான கட்டுரைகள் எழுதி வருவதுடன் ,கொத்தடிமைகள் , காந்தி தேசம் , புதிய தேசம் , கச்சத் தீவைத் திரும்பப் பெற முடியும் , மனித நேயத்துக்கு நூறு வயது, கொரோனா உலகம் , மண்மூடிப் போகும் மாண்புகள் , இப்படிக்கு இவள் .. போன்ற பல பயனுள்ள நூல்களை எழுதியுள்ளார்  .இவரது தனித்துவம் என்பது நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிச் சிந்திப்பது , துணிச்சலாக அவை பற்றி எழுதுவது , தீர்வு காண முயல்வது , சொல்லுகின்ற கருத்தைத் தெளிவாக துணிவாகப் பதிவு செய்வது ஆகியன என புத்தகம் குறிப்பிடுகிறது. 


நூல் குறித்து …


'தமிழ்நாட்டில் காந்தி ' நூலின் மூலம் புகழ் பெற்ற திரு அ.இராமசாமியின் பெயரில்  மதுரை காந்தி மியூசியத்தில்

  அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தியுள்ளனர். ஆண்டுதோறும் காந்தி குறித்த  சொற்பொழிவு நிகழ்கிறது .அங்கு சொற்பொழிவாற்ற இந்த நூலின் ஆசிரியர் ப.திருமலை அழைக்கப்பட்டு , அந்த சொற்பொழிவின் தொகுப்பே காந்தி ஒரு இதழியலாளர் என்ற நூலாக மாறியிருக்கிறது .


காந்தி ஓர் இதழியலாளர் …


             காந்தியைப்  பொதுவாக சுதந்திரத்தின் வரலாற்றுடன் மட்டுமே நினைவு படுத்திப் பார்க்கும் நமக்கு அவரது இதழியல் துறை சார்ந்த பரந்த அனுபவம் பிரமிப்பைத் தருகிறது. இன்றைக்கு சமூகம் எதிர்கொள்ளும் அனைத்துச் சிக்கல்கள் பற்றியும் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே பேசியுள்ளர் ,விவாதித்துள்ளார்,திறந்த மனத்துடன் தீர்க்கமான முடிவுகளுடன் பிரச்சினைகளை அணுகியிருக்கார் என்பதை இந்த நூல் நமக்கு விவரிக்கிறது. மக்கள் நலம் மட்டுமே அவர் மனதில் நிறைந்திருந்தது என்பதும் புரிகிறது. இவற்றிற்கெல்லாம் காரணம்  காந்தியடிகள் பத்திரிகைகளில் அவர் பதிவு செய்திருந்ததாலேயே நமக்கு சாத்தியமாயிற்று. 


சுமார் 25 க்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோள் நூல்களைக் காட்டி காந்தியின் இதழியல் பயணத்தை  ஒரு ஆய்வு நூலாக இதை நமக்கு அளித்துள்ளார் ஆசிரியர் திருமலை . 


இந்த நூலை வாசிக்க வாசிக்க , இதனுடன் இன்றைய கால இதழ்கள் , ஊடகங்களை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை நம்மால் . முழுக்க முழுக்க மக்களின் நலன் சார்ந்து இயங்கும் இதழ்கள் இன்றுள்ளனவா என்பது நமக்கு கேள்வியாகவே உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரா காந்திஜி இயங்கும் முன்பே ஏறக்குறைய 20 ஆண்டுகள் இதழியல் துறை அனுபவம் பெற்றவராக இருக்கிறார் என்பதை நூலாசிரியர் மிகவும் தெளிவுபடுத்தியுள்ளார். 


இதழியல் மீதான விருப்பத்தின் காரணமாக காந்திஜி இதழியாளர் ஆனார் என நம்மால் சொல்ல இயலாது .ஏனெனில் 1925 ஜூலை 2 இல் யங் இந்தியாவில் காந்தி கீழ் வருமாறு  குறிப்பிட்டுள்ளார். " பத்திரிகைத் தொழிலின் மீதான விருப்பத்தின் காரணமாக நான் அதில் ஈடுபடவில்லை , வாழ்க்கையில் நான் கொண்டுள்ள லட்சியத்திற்கு உதவியாக இருப்பதற்காக மாத்திரமே இந்தத் தொழிலில் நான் ஈடுபட்டிருக்கிறேன் , என் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்ட குறிக்கோளைப்  பரப்பும் ஒரு கருவியாக மட்டும் இதனை எடுத்துக் கொண்டேன் " - காந்தி. 


இந்தியன் ஒப்பீனியன் , யங் இந்தியா ,ஹரிஜன் என மூன்று ஆங்கில வார இதழ்களின் ஆசிரியராக காந்தியின் அனுபவத்தை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு மொழி பெயர்ப்பாளராக , வெளியீட்டாளராக , தொகுப்பாளராக , ஆசிரியராக என இவரது இதழியல் பயணம் மிக மிக வலிமையான அரணாக , பக்கபலமாக சுதந்திரப் போராட்ட திட்டமிடல்களுக்கு விதையாக இருந்ததை நம்மால் உணர முடிகிறது. மக்களாட்சியைப் பணி செய்ய வைப்பதற்கு தேவைப்படுவது உண்மைகளைப் பற்றிய அறிவல்ல , சரியான கல்வியே. இதழியலின் உண்மையான பணி மக்கள் மனதிற்குக் கல்வியளிப்பதே , என்கிறார் காந்தியடிகள் . எவ்வளவு உண்மையான வாசகங்கள் இவை. யங் இந்தியா உள்ளிட்ட பல இதழ்களில் எழுதியதன் மறுபக்கம் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார் என்பதையும் நாம் அறிய முடிகிறது .ஏராளமான தகவல்களைத் தருவதோடு காத்திஜியின் இதழியல் துறை குறித்த ஒரு தெளிவான பார்வையை நமக்குக் காட்டுகிறது புத்தகம் . காந்திஜியின் இரும்பு போன்ற மன வலிமையையும் நுண் அறிவுத் திறன் , செயலூக்கம் , மனோதிடம் , சமூகப் பிரச்சனைகளை மக்களிடம் பரப்பிய வழிமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு சமூகப் போராளிக்கும் அவசியமான வழிகாட்டல்கள் என்றால் மிகையாகாது.


கடந்த வாரம் புதன் கிழமையன்று  இப்புத்தக அறிமுகத்தை Wednesday Book Review முகநூல் தளத்தில் அறிந்து கொண்டேன் .அதோடு இந்நூலாசிரியர் திருமலை அவர்கள் நடத்தி வரும் நமது மண் வாசம் இதழில் கடந்த இரு வருடங்களாக எனது கட்டுரைகளை பிரசுரிக்கிறார். ஆகவே இப்புத்தகம் குறித்து அவரைத் தொடர்பு கொண்ட உடன் அனுப்பி வைத்தார். வாசிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் என்று கூறலாம் .



No comments:

Post a Comment