Wednesday 17 March 2021

வாசிப்பு - தன் மீட்சி

தன் மீட்சி 

வெளியீடு : தன்னறம் குக்கூ காட்டுப் பள்ளி 

எழுத்தாளர் : ஜெயமோகன், இவர் பிறந்தது 1962 , பள்ளிக் காலத்தில் ரத்ன பாலா என்ற சிறுவர் இதழில் தனது முதல் கதையை எழுதினார். 1987 இல் கணையாழியில் எழுதிய நதி சிறுகதை பரவலாகக் கவனம் பெற்றது. 1988 இல் எழுதப்பட்ட ரப்பர் நாவல் அகிலன் நினைவுப் போட்டியின் பரிசைப் பெற்றது . மேலும் கதா விருதும் , சம்ஸ்கிருதி சம்மான் தேசிய விருதையும் பெற்றுள்ளார். 


இவர் எழுதிய விஷ்ணுபுரம் நாவல் தமிழிலக்கிய உலகில் மிகுந்த கவனத்தைப் பெற்றதோடு விவாதத்தையும் உண்டாக்கியது. இவருடைய படைப்புகள் தொடர்ந்து நவீனத் தமிழிலக்கிய உலகில் அதிர்வலைகளையும் மாறுபட்ட கோணங்களையும் புதுப்புது சாத்தியங்களையும் ஏற்படுத்திய வண்ணமே உள்ளன. அவ்வரிசையில் , முழு மகாபாரதத்தையும் மறு ஆக்கம் செய்யும் இவருடைய வெண் முரசு சமகால படைப்பாக்கங்களில் தனியுச்சம்.


இது மட்டுமல்லாது ,தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படத் துறையிலும் இவரின் பங்களிப்பு நீள்கிறது. பயணங்கள் வழியாகவும் அது சார்ந்த அனுபவப் பகிர்தல்கள் வழியாகவும்  , ஆழ்த்துணர்ந்த வரலாற்றுப் பிரக்ஞையாலும் தமிழ்ச் சமூகத்தின் அறிவுப் புலத்தில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார் .ww,w.jeyamohan.in என்ற இவருடைய இணைய தளம் இன்றைய இளைய தலைமுறைகளின் வாசிப்பு நுட்பத்தைக் கூர்மைப்படுத்தி , அன்றாடத்தின் சராசரி நிலையிலிருந்து ஒரு படி உயர்த்துகிறது. 


நூல் குறித்து ..


இப்புத்தகத்தைப் புரிந்து கொள்ள அட்டைப்படத்தையும் நாம் உற்று நோக்க வேண்டும் .அங்கிருந்தே ஆரம்பிக்கிறது தன் மீட்சி. 


ஒரு சொல் மலர்தல் .. என்ற தலைப்பில் கிருஷ்ணம்மாள்  ஜெகன்னாதன் அவர்கள் கூறிய பூமி தான இயக்கத் தந்தை வினோபா குறித்த வரலாற்றுச் சம்பவத்தைப் பதிவு செய்ததோடு , இந்த நூல் குறித்த அறிமுகத்தை தன்னறம் நூல் வெளியிலிருந்து சிவராஜ் பதிவு செய்துள்ளார். 


உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தில் , உலகத்தில் நீங்கள் செய்யக் கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடையுங்கள் .அதுவே தன்னறம் . அதைச் செய்யும் போதே நீங்கள் விடுதலை பெறுவீர்கள் என்ற அட்டைப்பட வாசகங்கள் மிகவும் உண்மையானவை.


உள்ளடக்கத்தில் 23 தலைப்புகள் ….வாசிக்க வாசிக்க பல பக்கங்களில் நம்மையே காண முடிகிறது. ஜிபு குறியீடுகள் என்ற குறியீடுகளுடன் ஒவ்வொரு கடிதமும் துவங்குகிறது. 


மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள்  வாழ்க்கையின் பெரும்பாலான நேரங்களில் பல்வேறு வகையான சிக்கல்களை சந்திப்பதும் அவற்றிலிருந்து மீண்டு வருவதும் எதார்த்தம் .இந்தத் தத்துவத்தை நம்முடன் உரையாடல் வழியாக விளக்குகிறது தன் மீட் சி.  மனிதர்களின் எண்ணத்தில் பல்வேறு சூழல்களிலிருந்து உருவாகும் கேள்விகள் ஐயங்கள் இவற்றுக்கு பதிலாகக் கடிதங்களின் வழியே நல்ல ஆலோசனைகளை வழங்கும்  பக்கங்களாக தன் மீட்சி நூல் நமது கைகளில் வந்தடைந்துள்ளது. 


ஜெயமோகன் அவர்கள் குறித்த பல எதிர்மறைக் கருத்துகளை முகநூல் தளத்தில் நான் கண்டிருக்கிறேன். பல நேரங்களில் ஏன் சண்டை போட்டுத் திட்டிக் கொள்கின்றனர் என்று நினைத்திருக்கிறேன். அவரது புத்தகங்களை நான் வாசித்ததுமில்லை .ஆனால் இந்த புத்தகத்தைப் பொறுத்தவரை எங்கெல்லாம் மனிதர்கள் நம்பிக்கை இழக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களைக் கூடுதல் நம்பிக்கை பெற வழிகாட்டியுள்ளார். 


எங்கெல்லாம் குழப்பங்களை, சந்தேகங்களை  வாசகர்கள் முன் வைக்கின்றனரோ அங்கெல்லாம் 

காரணங்களை விளக்கிக் கூறி தன்னறத்தின் எல்லைகளை உணர வைத்துள்ளார் . 


உண்மையில் எதையாவது செய்ய ஆரம்பித்து , அதன் சவால்களைச் சந்தித்து , அச்சவால்களைத் தாண்டுவது போல சிறந்த கல்வி ஏதுமில்லை. அது மிக மிகக் கூர்மையான கல்வி . அது செயல் முறைக் கல்வி , வெற்றுத் தகவல் சேகரிப்பாக ஒரு போதும் அது நின்று விடாது. உங்கள் ஆளுமை எதைக் கோருகிறதோ அதை மட்டுமே நீங்கள் கற்பீர்கள் என்பதனால் ஒரு துளி கூட வீணாகாது . ஆனால் அதற்குத் தேவை மறுகரை வரை விடாப்பிடியாக நீந்தும் மனநிலை. (பக்கம் 45)


 சம காலத்தில் அனைவருக்கும் உரிய பொதுப் பிரச்சனைகளை முன்வைத்து ஆலோசனைகள் , வழிகாட்டல்களைத் துடன் நின்றுவிடவில்லை. ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட ரசனை , தேடல் , அறிவுத் திறன் , வாழ்க்கைச் சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடைய வேண்டியவற்றைப் பற்றியும் தீவிரமாக தன் மீட்சி பேசுகிறது.


ஒருவர் பணி புரியும் இடத்தில் ஏற்படும் சுணக்க மனநிலை , தன்னிரக்கம் , வெறுப்பு மனநிலை , சலிப்பு , மற்றவர்களால் பரிகசித்தல் என எல்லா வித சூழலிலிருந்தும் மீள தன் மீட்சி கைகாட்டி மரமாகத் திகழ்கிறது. மனிதர்கள் தாங்கள் வாழும் அறிவு சூழலிலிருந்து அடுத்த கட்ட நகர்வை நோக்கி பயணிக்க நிச்சயமாக தன் மீட்சி உதவும். விருப்பமுடன் அசை போட்டு வாசித்து உணர்ந்து கொள்ள உடனே குக்கூ காட்டுப் பள்ளியை அணுகுங்கள். அட்டைப்பட ஓவியங்கள்   , புத்தக வடிவமைப்பு என அனைத்தும் உங்களுக்குப் பிடிக்கும். 


முதல் பதிப்பு : 2018

விலை : ரூ 200

வெளியீடு : தன்னறம் நூல் வெளி 

No comments:

Post a Comment