Wednesday 17 March 2021

பெண் கல்வி என்பது ...

பெண் கல்வி 

.

ஆண்களும் கல்வியும் என்று இதுவரை நாம் எங்கும் படித்தோ பார்த்திருக்கவோ  மாட்டோம். ஆனால் பெண்களும் கல்வியும் என்றும் , பெண் கல்வி என்றும் நாம் கல்வியை பெண்களோடு தொடர்பு படுத்தும் தலைப்புகளைப் பார்த்திருப்போம். அவை தொடர்பான செய்திகளை வாசித்திருப்போம் .இவையெல்லாம் ஏன் என சிந்திக்கும் போது தான் புரியும் இவற்றின் மறுபக்கம் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த, பெண்களுக்கான கல்வி மாறுக்கப்பட்டிருந்தது என்ற மிக முக்கியமான  செய்தி. இவற்றைக் காட்டிலும் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும்  அநீதிகளின்  வரலாறும்   தொடர்கிறது . இவற்றுக்கும் பெண்களின் கல்விக்கும் தொடர்பு இருக்கிறதா என்றால் ஆம் இருக்கிறது. பெண்கள் கல்வி பெற்று வளர்ந்த ஒவ்வொரு நிலையும் அவர்களது சமூகக் கொடுமைகளின் சிறைக் கதவுகளைத் தகர்த்து எறியும் ஆயுதங்களாக மாறத் தொடங்கின .


இந்தியக் கல்வியின் வரலாற்றில்  பெண்களின் நிலை குறித்து பின்னோக்கிப் பார்த்தால் வெகுதூரம் பயணிக்கத் தேவையில்லை. 18 ஆம் நூற்றாண்டு வரை சென்றாலே போதும் .உடன்கட்டை ஏறிய விதவைகள் , இளம் வயதிலேமே விதவையாகி விபச்சாரத்தில் விலை போன குடும்ப பெண் குழந்தைகள் , பலதார திருமணம் , குழந்தைத் திருமணம் , கொடிய சதிச் சட்டங்களில்  பெண்களுக்கான அநீதிகள் ,  பெண்களின் மீது மதங்களின் காட்டு தர்பார் என நம்மை நடுங்க வைக்கும் இந்திய  சமூக அவலங்களிலிருந்து பெண்களை விடுதலை செய்ய வைத்த வலிமையான ஆயுதம் பெண்களுக்கான கல்வி என்பதே .குருகுலக் கல்வியாகட்டும் , இஸ்லாமிய மதரஸாக்களின்  கல்வியாகட்டும் அங்கே பெண்களுக்கு துளியும் இடமில்லை. ஆனால் இன்றைய சமூகத்தில் பெண் கல்வி குறித்து கணிசமான வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் அதற்கான ஏராளமான சமூகப் போராளிகள் ரத்தம் சிந்திய வரலாறுகளும் நமக்குண்டு. 


பெண்கல்வியின் வரலாற்றுக்கு தரவுகளைத் தேடினால் , ஆங்கிலேயர்களின் கல்வி நமது இந்தியாவில் தொடங்கிய 1813 க்குப் பிறகு , 1822 இல் சர் தாமஸ்மன்றோ கல்வி குறித்த கணக்கெடுப்பை நிகழ்த்தி இருக்கிறார் .12 ,498 பள்ளிக்கூடங்கள் அன்று பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் இருந்தன .அதே போல 1829 இல் பாம்பே மாகாண கவர்னர் மவன்ஸ்டார்ட் எல்ஃபின்ஸ்டோன் , 1831 இல் பாதிரியார் வில்லியம் ஆடம்ஸ் ஆகியோரும் கல்வி குறித்த கணக்கெ டுப்பை நடத்தியுள்ளனர் . வங்காளம் , பீகார் , மதராஸ் ஆகிய மாகாணங்களை சேர்த்து பெண்டிங் பிரபு 1835 இல் நடத்திய புள்ளி விபரச் சேகரிப்பு என மேற்கண்ட எந்தக் கணக்கெடுப்பிலும் ஒரு பெண் குழந்தை கூட பள்ளிக்குச் சென்றதாக இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும் .இவற்றையெல்லாம் தூள் தூளாக்கி முதன் முதலில் தான் கல்வி கற்றதோடு பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கியவர் சாவித்ரி பாய் பூலே . இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர் என்பதை நாம் நினைவு கூரலாம் .மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் , 1848 இல் பூனாவிற்கு அருகில் பைத்வாடா என்ற இடத்தில் தனது கணவர் ஜோதிராவ் பூலேவுடன் இணைந்து ,பெண் குழந்தைகளுக்கான பள்ளியைத் துவங்கியவர் சாவித்திரி பாய் பூலே. அதிகாலையிலேயே அப்பள்ளிக்கு நடந்து செல்லும் போது இவரின் மீது  சேற்றையும் மலத்தையும் வீசியடித்த வர்களைக் கடந்து தான் , கல்வி கற்றதோடு பெண் குழந்தைகளுக்கும் கல்வி புகட்டியுள்ளார். பெண்கள் கல்வி கற்பதை ஏற்றுக் கொள்ள இயலாமல் தானே அவரை மலத்தால் அடித்த அராஜகம் எல்லாம் நடந்துள்ளது ,எனில் இன்றைய பெண் கல்வியின் வளர்ச்சிக்கு வித்திட்டவருள்  மிக முக்கியமான போராளியாக இவரைக் கருதலாமல்லவா ? நான் ஒரு பெண்ணாக இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன் , நீங்கள் ஒரு பெண்ணாக இக்கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நாம் அனைவரும் சாவித்ரி பாய் பூலேவிற்குக் கடமைப்பட்டவர்கள் எனலாம் .


அதே போல 1800 களின் இறுதியில் 

பரோடா சமஸ்தானத்தின்  அரசராக இருந்த சாயாஜி ராவ் கெய்க்வாட் தனது மனைவிக்கு கல்வி கொடுத்து பெண் கல்வியை தனது இல்லத்திலிருந்தே தொடங்கி சமூகத்தில் பெண் கல்வியை மலரச் செய்துள்ளார் என்பது கூட பெண் கல்வியின் வரலாற்று வரிகளே .


இன்றென்னவோ பெண்கள் எல்லாத் துறைகளிலும் கால் பதித்து வருவதாகப் பெருமை கொள்கிறோம. ஆனால் இந்த இடம் பெண்களாகிய நமக்கு எளிதில் வந்து விடவில்லை என்பது தான் திரும்பத் திரும்ப சொல்வப்படும்  உண்மை வரலாறு .


அவரவர் வீடுகளிலேயே இதற்கான தரவுகள் உண்டு. நாம் படித்து பட்டம் பெற்று வேலையில் இருக்கலாம். நமது அம்மா , அவர்களது அம்மா என ஒரு நான்கு தலைமுறை முன்னோக்கிச் சென்றால் கல்வி பெறாத,  பள்ளியே செல்லாத,  பெண்களின் வரலாறு ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் எழுதப்பட்டிருக்கும். 


இந்த நிலை மாறி இன்று நமது இந்தியாவின் பெண் கல்வி சதவீதம் உயர்ந்து  உலகளவிலான சராசரி சதவீதமான 62 சதவீதத்தை விடக் கூடுதலான அளவில் வந்துள்ளதிற்குக் காரணம் பண்டித ரமாபாய் சரஸ்வதி எனலாம். 1882 இல்  , இந்தியா வந்திருந்த கல்விக் குழுவான ஹண்டர் கமிஷன் முன்னால் ஆஜராகி பெண் கல்வி குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தனது ஒன்றரை மணி நேர அற்புத உரையை நிகழ்த்தியிருக்கிறார்., பண்டித ரமாபாய். ஆனால்  இவர் அந்தக் கூட்டத்திற்குச் சென்று பேசினால் உயிரோடு எரித்துக் கொல்வதாக மிரட்டப்பட்டதெல்லாம் எப்படிப்பட்ட  பயங்கரமான தருணங்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும் .குழந்தைத் திருமணங்களால் 10 வயதுக்கு முன்பே விதவையாகிவிட்ட  பெண் குழந்தைகளுக்குப் பள்ளி தொடங்கியவரும் இவரே.ரிப்பன் பிரபுவின் கல்விக் கமிஷன் முன்பு சென்று , பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சி வழங்க வேண்டும் , பெண்கள் மருத்துவம் கற்க அனுமதி வேண்டும் என்று போராடிப் பெற்றவர் இவர். அதன் மூலம் மருத்துவராகி இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷி , இவரது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ரமாபாய் அமெரிக்கா அழைக்கப்பட்டிருந்தார். பெண்கல்விக்காக  இன்னும் ஏராளமான பணிகளை இவர் முன்னெடுத்துள்ளார்  .


அதே போல இன்றைய இந்தியப் பள்ளி ஆசிரியர்களில் 60% பெண்கள் என ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. ஆனால் இதற்காகவும் கடுமையான போராட்டம் நிகழ்ந்துள்ளது. நமது நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் பெண்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையை மாற்றி கடும் போராட்டத்தின் இடையே ஆசிரியர் பயிற்சியில் பெண்களையும் இணைத்தவர்தான் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேஷவ் கார்வே. பெண்களுக்கு கல்வி ; பெண்களே ஆசிரியர் எனும் முழக்கத்தை முன்வைத்து பயிற்சிப் பள்ளியையும் அமைத்தவர் இவர். இந்தியாவின் பெண்கள் கல்வி பெற தனி நிதி வேண்டி 12 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளார். அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் 1929இல் இவரை நேரில் சந்தித்து இந்தியப் பெண்ககுக் கான முதல் பல்கலைக் கழகத்திற்கு 400 டாலர்களை  தனது நோபல் பரிசு நிதியிலிருந்து வழங்கியதை இங்குக் குறிப்பிட வேண்டும் .


மற்றொரு மராத்திய வீராங்கனை ரமாபாய் ராணடே பெண் கல்வியின் ஜான்சி ராணி என அழைக்கப்படுகிறார். ஆம் , பெண்களை மீனவப் பெண் , தோட்டிச்சி, வேடுவப் பெண் , இடைச்சிப் பெண் இப்படி அழைத்தவர்களை இவர் ஆசிரியை , வங்கி அதிகாரி , டாக்டரம்மா என்று அழைக்க மாற்றிய பெருமை ரமாபாய் ராணடேவையே சாரும்.

பெண்களின் கல்வி வேலை வாய்ப்பில் இடம் எனப் போராடியவர் இவரே .இந்தியப் பெண்கள் கல்விக் கழகம் எனும் தனி அமைப்பை உருவாக்கி 1893 இலேயே ஊர் ஊராகச் சென்று கல்வி கற்க விரும்பும் பெண்கள் பற்றிய கணக்கெடுப்பைத் துவக்கியவர் இவர். ஏராளமான முன்னெடுப்புகளை பெண் கல்விக்காக செய்தவர் ரமாபாய் .


இப்படி ஏராளமான கல்விப் போராளிகளின் வாழ்க்கையில் தான் இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் பெண் கல்வியின் வளர்ச்சி தலைநிமிர்ந்து அரியாசனத்தில் அமர்ந்துள்ளது என்றால் மிகையாகாது. இன்றும் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படும் சூழல் பல குடும்பங்களில் காணப்படுகிறது. அதே போல பெண் கல்வியின் முக்கியத்துவமும் ஒரு புறம் வலுவாக முன்னெடுக்கப்படுகிறது. 


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் வரிகள் நடைமுறைக்கு வந்து சில காலம் ஆகிவிட்டது நமக்கெல்லாம் பெருமையே ..




No comments:

Post a Comment