Thursday 26 December 2019

வாசிப்பு -சுதந்திரத்தின் நிறம்

சுதந்திரத்தின் நிறம் 

இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் . குக்கூ காட்டுப் பள்ளியின் தன்னறம் நூல்வெளி, கடந்த அக்டோபர் மாதம் தான் இந்நூலை வெளியிட்டுள்ளது . 2019 ,அக்டோபர் 18 அன்று வெளியிடப்பட்ட இப்புத்தகம் இந்த சமூகத்திற்கு ஒரு மிகச் சிறந்த சாட்சியாக அமைந்துள்ளது.  இந்த நூலின் இறுதி வரை நம்மோடு

சாட்சிகளாகப் பிரயாணம் செய்பவர்கள்  கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் . இருவரோடும் பல நாட்கள் தங்கி , உரையாடி அவர்கள் இருவரின் வாழ்க்கை அனுபவங்களை ஆங்கிலத்தில் பதிவு செய்து , முதன் முதலில்  இத்தாலி மொழில் நூலாக்கியவர் லாரா கோப்பாதான். காந்தியச் சிந்தனை குறித்து ஆய்வு செய்து வரும் இத்தாலிக்காரர் இவர்.

அதை ஆங்கிலத்தில்  மொழியாக்கம் செய்தவர் டேவிட் ஹெச். ஆல்பர்ட் , வாஷிங்டனில் வசித்து வருபவர். 

இவர்களைப் பற்றிய அறிமுகத்தைக் கடந்து நூலின் அணிந்துரை வழங்கிய சுற்றுச்சூழல் ஆர்வலரும் சிப்கோ இயக்கத்தின் தலைவருமான சுந்தர்லால் பகுகுணா , இவர்களின் சமூக செயல்பாடுகளை செயல் நோன்பு எனக் குறிப்பிடுகிறார். அதோடு வாழ்க்கையை நேர்மறையாகவும் நேர்மையாகவும் அணுகும் வலிமையைத் தரும் இப்புத்தகம் , கல்விப் புத்தகமாக எதிர்காலத்தில் வரலாம் என்கிறார்.இந்த ஆங்கிலப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் B. R .மகாதேவன் .

காந்தியக் கரங்களின் தொண்டூழியம் என்ற அணிந்துரையில் , தன் வாழ்வில் சிறு வயதிலிருந்து சந்தித்த  மூன்று மனிதர்களுக்குள் அடிப்படை ஒற்றுமை காந்தீய வழியே என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் குக்கூ தம்பி சிவராஜ் .அதே ஒற்றுமையுடன் கூடிய இரு பெரும் ஆளுமைகளான கிருஷ்ணம்மாள் , ஜெகந்நாதன் தம்பதி குறித்தும் மிக ஆழமானக் கருத்துடன்  நம்மை அணுகி சிந்திக்க வைக்கிறார் சிவராஜ் .

அதைத் தொடர்ந்து இந்நூலினை ஆங்கில மொழி பெயர்த்த டேவிட் ஹெச். ஆல்பர்ட் எழுதியுள்ள அணிந்துரை இடம் பெற்றுள்ளது.

அதை வாசிக்கும் போதே புத்தகம் குறித்த ஆழ்ந்த எதிர்பார்ப்பு நம்மைத் துரத்துகிறது. அப்படி என்னதான்  செய்தனர் இவர்களிருவரும் என வாசிக்க ஆரம்பித்தால் நம்மை முழுமையாக ஆட்கொள்கிறது இந்த அற நூல் .

இருபது தலைப்புகளை உள்ளடக்கமாகக் கொண்ட இந்நூலில் கிருஷ்ணம்மாள் , ஜெகந்நாதன் இருவருடைய இளமைக் காலத்தில் ஆரம்பிக்கிறது.  அவர்களது சமூக வாழ்வு எவ்வாறு தொடங்குகிறது என்பதை வாசிக்கும் போது ஏதோ ஒரு இனம் தெரியாத பற்று அவர்கள் மீது நமக்கு ஏற்படுகிறது. இருவருக்குமான திருமணம் இந்த சமூகத்தில் வாழும் லட்சக்கணக்கான சமூக செயல்பாட்டாளர்கள்  தங்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பகுதி. 

 வினோபா பாவே யின் பூமிதான இயக்கம் தமிழகத்தில் வேரூன்றவும் இவர்களே காரணமாக இருந்திருக்கின்றனர் என்பது தான் இவர்களது வாழ்வின் அசைக்க முடியாத வேர்களின் முக்கியமான தருணம். அதன் நீட்சியாக பூமிதானப் போர் தொடர்ந்து இவர்கள் இருவரும் இந்தியா முழுவதும் வட , தென் திசைகளில் இலட்சக்கணக்கான மைல்களுக்கு தங்கள் பாதங்களைப் பதித்து விரிவாக்குகின்றனர். 

இருவரும் மாறி மாறி தலித்துகளுக்காகவும் அடித்தட்டு மக்களுக்காகவும் காந்திய வழியில் போராடுவதை நூலின் ஒவ்வொரு பக்க வரிகளும் நமக்கு விவரிக்கின்றன. வத்தல குண்டு போராட்டத்தில் நடக்கும் மேல்சாதியிரைின் வக்கிர உணர்வும் காவல்துறையின் அதீத உதாசீனமும் ஏழை மக்களின் மனிதாபிமானத்தால் எவ்வாறு சுக்கு நூறாக உடைகிறது , அதற்கு கிருஷ்ணம்மாள் அவர்களது அயராத சகிப்புத்தன்மை , காந்திய சிந்தனை இவை இன்றைய காலத்தின் தேவையாகவும் இருக்கிறது. 

தாழ்த்தப்பட்டவர் மத்தியில் மட்டும் பணியாற்றிடாமல் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பயனாகப் பணியாற்ற வேண்டுமென இவர்கள் உருவாக்கிய கிராமசபை தான், இராமநாதபுரம் அமைதி முயற்சி என்ற அத்யாயத்தின் சாரம். (ASSEFA ) அசோசியேஷன் ஆஃப் சர்வோதயா ஃபார்ம்ஸ்  அப்போது தான் உருவாக்கப்பட்டுள்

ளது. இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய அரசு சாரா நிறுவனமாக வளர்ந்துள்ளது எனில் அதற்கு இவர்கள் இருவரும் தான் முக்கியக் காரணமாக இருந்திருக்கின்றனர். ஜெகந்நாதன் 1993 வரை அதன் தலைவராக இருந்ததும் அதன் பலன் கிராம வளர்ச்சிக்குமானதாக மாற்றியதெல்லாம்  மிகப் பெரிய வரலாறாகப் பார்க்க வேண்டும். 

1968 இல் கீழ் வெண்மணி படுகொலைக்குக் காரணமான அரைப் படி நெல் . நம்மை நடுங்க வைக்கும் சம்பவம் , 44 பெண்களும் சிறுவர்களும் உயிரோடு எரிக்கப்பட்டது என விரிகிறது. ஆனால் மக்களை ஆற்றுப்படுத்தி , காந்திய போதனைகளை ஒரு வருட காலம் மக்களிடம் பிரச்சாரம் செய்து  நக்சலைட்டாக இருந்த ஒருவனை காந்தியவாதியாக மாற்றியதும் , மூன்றே வருடங்களில் உயிரிழந்த 74 குடும்பங்களுக்கு 74 ஏக்கரை அகிம்சை முறையில் வாங்கிக் கொடுத்த சம்பவங்கள் தான் இவர்கள் மீது மேலும் மேலும் நம்மை அன்பும் நம்பிக்கையும் கொள்ள வைக்கிறது. இதே வெண்மணியில் இவர்களைத் தூற்றிய கம்யூனிஸ்டுகள் குறித்தும்,  அவர்களது செயல்பாடுகளில் , கொன்றவர்களைப் பழிவாங்கும் மனோபாவமும் பதிவு செய்யப்பட்டுள்ளது கீழ் வெண்மணி படுகொலை என்ற அத்தியாயத்தில் . 

டிசம்பர் 24 இரவு தான் இந்தப் படுகொலை நடந்துள்ளது. 51 ஆண்டுகள் முடிவடைந்த இந்திலையில் இது குறித்து சற்று விளக்கமாக அறிந்து கொள்ள வைக்கின்றன  இவற்றின் பக்கங்கள். அரைப் படி நெல் அதிகம் கேட்டவர்களுக்கு இன்று அந்த நிலம் சொந்தம் .இன்று அவர்களது குழந்தைகள் பள்ளிக்குப் போகின்றனர். மேல்சாதியினரோடு சமமாக அமர்ந்து கோவிலில் பூஜைகள் செய்கின்றனர். பொருளாதார நிலையில் சமூக நிலையில் பெரும் மாற்றம் உருவாகி இருக்கிறது. என்றால் அதற்கு அடிப்படைக் காரணமாக கிருஷ்ணம்மாள் மற்றும்  ஜெகந்நாதனே இருந்திருக்கின்றனர் என்பது நமக்கான வாழ்க்கைப் பாடம். வெற்றுக் கோஷமல்ல , மக்களோடு மக்களாக நின்று மக்களுக்காக அஹிம்சை வழியில் தங்கள் போராட்டத்தைத் திரும்பத் திரும்ப பதிவு செய்கின்றனர். 

அடுத்த போராட்டமாக வலிவலம் சத்தியாகிரகமும் மடாலயங்களிலிருந்து  ஏழை கிராமங்கள் காப்பாற்றப்பட்டு மக்கள் தங்களுக்கான நிலங்களைப் பெற இவர்கள் இருவரும் எவ்வாறு முன்னின்றனர் என்பது நமக்கான வழிகாட்டல்கள். 

ஒரு சதுர அடி நிலத்துக்கு அடிதடித் தகராறு ஏற்பட்டு பிரச்சனைகள் உருவாகும் இதே மண்ணில் ,உழுபவர்க்கே நிலம் என்ற அமைப்பை உருவாக்கி  (Land for Tillers - LAFTI), பத்தாயிரம் ஏக்கர் நிலம் பிரித்துக் கொடுத்ததெல்லாம் எப்படி

சாத்தியமாகியிருக்கும் என்று நம்மால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் அனைத்திற்கும் சாட்சிகள் இருக்கின்றனவே இந்த லாப்டி அத்தியாயத்தில்  .

இவர்களைப் போலவே ஏழைகளுக்காக சட்டத்தைக் கையில் எடுத்த வழக்கறிஞர் மாரியப்பன். இறால் பண்ணைகள் போராட்டத்திற்காக இவர்களுக்கு உதவிய வழிகளும் இறால் பண்ணைகள் மண்ணை விஷமாக்கி வரும் வேதனைகளும் அடுத்தடுத்த அத்யாயங்களில் எழுதப்பட்டுள்ளன. நமக்கு இந்த நாட்டின் பொருளாதாரம் புரையோடிய அரசியல் , வெளிநாட்டு செலாவணிக்காக இங்கு இறக்க வைக்கும் நிலங்கள் என பலவற்றையும் உணர்த்துகிறது. 

இறுதி அத்யாயங்களில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியின் மகன் பூமி குமாரும் மகள் சத்யாவும் தங்கள் பெற்றோர் எப்படிப்பட்ட வாழ்க்கையை தங்களுக்காகக் கொடுத்துள்ளனர்  என்பதை உணர்வு பூர்வ சாட்சியமாக நம்மோடு பகிர்கின்றனர். பூமிதான இயக்கத்தில் பிறந்த இவர்களது மகனுக்கு வினோபா வைத்த பெயர் தான் பூமி குமார்.

தொட்டில் கட்டும் குழந்தைகளாக இருக்கும் போதே அம்மாவுடன் போராட்டங்களில் இணைந்து கொண்டு தங்கள் குழந்தைப் பருவத்தையும் மக்களுக்காக வாழ்ந்துள்ளனர் என்கிற போதே நாம் புரிந்து கொள்ள வேண்டும். பூமி கல்வி கற்றது எல்லாமே பள்ளிகளில் அல்ல , போராட்டக் களங்களிலும் பேரணி , நடை பயணங்களிலும் தான். கிருஷ்ணம்மாள் தான் ஆசிரியராக பூமிக்கு கற்பித்திருக்கிறார்  . 

தற்போது இருவருமே மருத்துவராகப் பணியாற்றுகின்றனர். தங்களது தாய் தந்தை குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் மீதும்  , சமூக வாழ்க்கையில் மக்களின் மீதும் அன்பு செலுத்தி சீரானதொரு வாழ்க்கையை வாழ்ந்ததைப் பதிவு செய்துள்ளனர்.

இவர்களது வாழ்க்கை வரலாறு நமக்குக் கற்றுத் தருவது அனைத்தும் காந்திய வழி ,மன உறுதி , அசையா நம்பிக்கை , செயல்பாடு , வெற்றி , சமூக மாற்றம் .ஒவ்வொரு ஊரிலும் மாற்றம் நிகழ்கிறது. காந்தியை ஜெகந்நாதன் சந்தித்த தருணம் , டாக்டர் சவுந்தரம் அம்மாளிடம்

 பழகிய ,காந்திக்கு மருத்துவராக வந்தவருடன் உதவியாளராக தமிழகம் முழுக்க பயணித்த கிருஷ்ணம்மாள் அனுபவம் இவை ஒரு வேளை ஆரம்பப் புள்ளியாக இருக்கலாம் இவர்களது அகிம்சை வழிக்கு. ஆனால் கெய்தான் உடனான சேவை தான் ஜெகந்நாதனுக்கு ஆரம்பமாக நான் கருதுகிறேன். 

இன்றுள்ள எத்தனையோ குடிகாரக் கணவர்களது அபலை மனைவிகளைப் போலத்தான் கிருஷ்ணம்மாள் அவரது அம்மாவின் வாழ்வும் இருந்தது . 32 வயதில் விதவையாக மாறியவரின் துன்பங்களைக் கண்ட இவர் தன் வாழ்க்கையை 

அவல நிலையில் அல்லல்படும் பெண்களை மீட்டெடுக்கவே அர்ப்பணிக்கிறார். 70 ஆண்டுகள் அதாவது முக்கால்  நூற்றாண்டுக்கு முன்னரே கலப்புத் திருமணம் செய்த புரட்சிப் பெண்மணி எனலாம்.தமிழகத்தின் முதல் ஹரிஜனப் பட்டதாரியாக இருக்கும் கிருஷ்ணம்மாள்

ஆசிரியர் பயிற்சி முடித்தும் அந்தப் பணி வேண்டாம் என முடிவெடுக்கிறார் , காரணம் இவ்வளவு மக்கள் துன்பத்தில் உழல்கின்றனர் , அவர்களுக்கு சமூகப் பணி செய்வதே என் கடமை என உறுதி எடுப்பதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும்.  

திருமணம் ஆகி இரண்டே நாளில் சமூக அக்கறையால் பிரிவது ,காந்தி அமைதி மையங்களை ஆரம்பித்து , மக்களிடம் செல்வது பேசுவது , தனது 3 மாதக் குழந்தையைப் பாத யாத்திரையில் கலந்து கொள்ள வைப்பது என இவர்களின் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுப்பது ஏராளம். 

குமரப்பா ,கெய்தான் , ஜெயப்பிரகாஷ் , காமராசர் , வினோபா , நேரு என நாட்டின் மிகப் பெரும் ஆளுமைகள் அனைவரது நம்பிக்கைக்கும் பாத்திரமாகியுள்ளனர். காந்தீய சிந்தனைகளை தமிழகத்தில் மட்டுமல்லாமல் பீஹார் , உத்திரப்பிரதேசம் , இமயமலை என இந்தியா முழுவதும் எடுத்துச் சென்ற இவர்களது பயணம் நமக்கு  நம்பிக்கை அளிக்கும் நிகழ்வுகள் . லட்சக்கணக்கான தூரம் பாதயாத்திரை செய்தே லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்குப் பெற்றுத் தந்துள்ளனர். 

வினோபாவுக்கும்  ஜெகந்நாதனுக்கும் இடையில் போராடுவதிலும் நிலத்தைப் பிரித்துக் கொடுப்பதிலும் முரண்பாடுகள்  இருந்திருக்கின்றன . விஞ்ஞானப் பார்வையோடு அணுகிய குமரப்பா பிரித்துக் கொடுக்கும் நிலத்தை நீர்ப்பாசன  வசதி செய்து தர வலியுறுத்துகிறார். ஆனால் ஒத்துழைக்காத வினோபா மீது குமரப்பாவிற்கும் அதிருப்தி . இத்தகைய முரண்பாடுகளால் குமரப்பா இவர்களை விட்டுப் பிரிகிறார். இந்த நிகழ்வுகள் எல்லாம் நமக்குப் பாடமாகின்றன. ஆம் வினோபாவின் ஆன்மிக பலமும் குமரப்பாவின் நடைமுறை சார்ந்த  விஞ்ஞான அறிவும் இணைந்திருந்தால் இவ்வியக்கம் மிகப் பெரும் வெற்றியாக அமைந்திருக்கும் . வினோபா இடத்தில் காந்தி இருந்திருந்தால் குமரப்பாவின் யோசனையை ஏற்றிருப்பார். இந்நிகழ்வுகளைக் காணும் போது , எப்பேர்ப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் பொது நோக்கம் சார்ந்து பயணிக்காமல் விட்டால் இயக்கங்கள் வலுப்பெறாது என்பதே புரிகிறது. 

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இருவரும்  வருடக் கணக்கில் சிறையில் இருந்து அனுபவித்த இன்னல்கள் , நம்மை என்னவோ செய்கிறது. விடுதலைப் போராட்டம் சிறை சென்றவர் குறித்து வரலாற்றில் படித்திருப்போம். ஆனால் நம்முடன் வாழும் ஒருவர் இப்படியான அனுபவங்களைப் பெற்று இந்த சமூக விடுதலைக்குக் காரணமாக இருக்கிறார் என்பது தான் நமக்கு வியப்பாக இருப்பதுடன் நம்மையும் இயங்க வைக்க ஊக்கம் தருகிறது.

 அவசர நிலைப் பிரகடனத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் சிறை நடவடிக்கைகள் நம்மை அதிர்ச்சியூட்டுகின்றன . ஜெகந்நாதன்

ஜெயப்பிரகாஷ் நாராயணன் இருவருக்கு  சிறையில் நடந்த கொடுமைகள் கண்களில் நீரை வரவழைக்கின்றன. 

காந்தி ஆஸ்ரமங்களை நிறுவி ,

பூமி தான இயக்கத்தை கிராமிய சுயராஜ்யமாக மாற்றி தொழில் முனைவோராக கிராம மக்களை மாற்றி,  அரசின் நிலச் சீர்திருத்த முறைகளை மக்களின் கைகளில் கொண்டு சேர்த்த இவர்களின் உழைப்பு மகத்தானது. நாமெல்லாம் சிறு வயதில் அழுக்கு சோப்பு கூட காந்தி பார் என்றுதான் பார்த்திருப்போம் , ஆனால் இந்த 30 வருடங்களில் இவையெல்லாம் எங்கு போயின என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது. 

மனம் பதைக்கிறது. இவர்களது உழைப்பும் அஹிம்சை வழிப் போராட்டமும் இன்று தமிழக மக்களுக்கு ஏன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியாமல் போயிற்று ?  பூமி குமார் கூறுவது போல இன்று ஏனோ ஒரு சிறு கல் ஏற்படுத்தும் எண்ணற்ற அலையைப் போல் வன்முறை வட்டம் பெருகிக் கொண்டே போகிறது .

இதை எனக்கான நூலாகப் பார்க்கிறேன் , சரியான நேரத்தில் எனது கையில் கிடைத்த இந்நூல் எனக்குள் பல புரிதல்களைக் கொடுத்துள்ளது. எது இயக்கம் , எது ஊழியம் , எது செயல் , எது நோக்கம் ,எது சமூக மாற்றம் , அதற்கான பாதை எது என எனக்குள் ஒரு ஒட்டுமொத்த புரிதலைத் தருகிறது. 

இந் நூலை  தன்னை சமூகத்துக்கு ஒப்புக் கொடுக்கும் அனைவரும் ஆழமாக வாசிக்க வேண்டும். 

கிருஷ்ணம்மாள் அவர்கள் கையெழுத்திட்ட முதல் புத்தகம் வெளியீட்டிற்கு ஒரு வாரம் முன்பே எனது வீட்டிற்கு வந்து சிவராஜ் தம்பி வழங்கியது எனது பெரும் பாக்கியம். அம்மாவை விரைவில் சந்திக்க வேண்டும் .

உமா




வாசிப்பு - தூயகண்ணீர்

தூய கண்ணீர் 

சிறார் கதைப் புத்தகம்  , யூமா வாசுகி எழுதிய இப்புத்தகத்தை தன்னறம் நூல் வெளி தனது முதல் பதிப்பாக  2019 இல் வெளியிட்டுள்ளது. 10 நாட்கள் முன்பாக வீடு தேடி வந்த இந்தப் புத்தகத்தை நம்மிடம் வழங்கிய சிவ ராஜ் தம்பிக்கு எனது பள்ளிக் குழந்தைகள் சார்பாக முதலில் பேரன்பு .

நான் இந்தப் புத்தகத்தை வாசித்த போது , இன்றைய ஆசிரியர்களது பலரின் கூட்டு செயல்பாடுகளை இணைத்து ஒரு ஆசிரியரைப் படைத்ததாக முனியய்யா என்ற  பாத்திரம் இப்புத்தகத்தில் வாழ்கிறதை உணர முடிகிறது. 

ஒரு ஆசிரியர் எப்படியெல்லாம் பள்ளிக்குள் மாணவர் மனதில் மிக இடம் பிடிப்பவராக  வாழ்கிறார் எனக் காட்டும் அதே சமயத்தில் , சமூகப் பிரச்சனைக்காகவும் குரல் கொடுத்து தனது உயிரையே தியாகம் செய்து தன்னை நிரூபித்து ... இறந்த பின்னும் ஊர் மக்களுடைய மனதில் வாழ்ந்து நிலைக்கிறார் என்பதை ஆசிரியர்களுக்கும் சமுதாயத்திற்கும் உணர்த்துகிறது இக் கதை. 

 மாணவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவுவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வெற்றி கண்டு அன்பு செலுத்துகிறார்கள்  என்பதை மாணவர் மனதிலும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ள இந்தப் புத்தகம் அனைவரும் வாசிக்க வேண்டியது. 

தூய கண்ணீர் என்ற இந்தக்  கதை முழுவதும் அன்பை மையப்படுத்தியே பின்னப்பட்டிருக்கும்  அழகான சிலந்தி வலை போல ... ஆசிரியர் மாணவர் மீதும் சமூகத்தின் மீதும் வைத்துள்ள அன்பு  , மாணவர்கள் அந்த ஆசிரியர் மீது வைத்துள்ள அன்பும் நம்பிக்கையும் , பெற்றோர்கள் மீது ஆசிரியருக்கான அன்பு  , மாணவர்களுக்குள் நட்பால் பலம் பெறும் அன்பு , ஊர் மக்களுக்கு ஆசிரியர் மீது ஏற்படும் அன்பு, அதன் நீட்சியாக நடக்கும் அத்துணை நிகழ்வுகளும்   நமக்குள்ளும் தூய கண்ணீர் வரவழைக்கும் படைப்பு .

இதனை எம் பள்ளி மாணவியரிடம் ஒப்படைத்ததன் பலன் …. பல குழந்தைகள் அழகான பின்னூட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். அதையும் உங்களுக்குப் பகிர்கிறேன். 

உமா



Friday 5 April 2019

வாசிப்பை நேசிப்போம் -பெண்மை ஒரு கற்பிதம்

#பெண்மை #என்றொரு #கற்பிதம்

நூல் பற்றிய எனது பார்வை ....

பெண் சமத்துவம் குறித்து மேடைகளில் ,விழா நாட்களில் , மகளிர் தின கொண்டாட்ட நேரங்களில் மட்டுமே குரல்கள் உரக்கக் கேட்கின்றன, அதனால் மாற்றங்கள் சாத்தியமா என்றால், கேள்விக் குறி தான்.

அப்படியல்ல , குடும்பம் , சமூகம் , பள்ளி , ஊடகம் என எல்லா இடங்களிலும் இந்தக் குரல்கள் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் , ஓயாமல் அலை அடிப்பது போது பெண்களின் விடுதலை பற்றியும் பெண் சமத்துவம் குறித்தும் பெண்ணிய சிந்தனைகளை முன் வைத்தும் உரையாடல்களும் விவாதங்களும் உருவாகி மாற்றத்திற்கானப் பாதையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படை செய்தியை இந்த நூலின் வழியாக , 64 பக்கங்களிலும், 360° பாகையில் நம்மை சுழன்று பார்க்கும்படி தருகிறார் ஆசிரியர் தமிழ்ச்செல்வன்  Tamil Selvan.

இந்தக் கட்டுரைத் தொகுப்பு நூல்  செம்மலர் இலக்கிய இதழில் 14 பகுதிகளாக எழுதப்பட்டு இருக்கின்றது.
முதல் அத்யாயத்தில் தொடங்கி இறுதி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வே நம்மை  வலியுறுத்துகிறது நூலாசிரியரின் கேள்விகளும் ஆதங்கமும்.

பெண்மையின் அர்த்தம் காலந்தோறும்  மாறி வருகிறது என்ற பொருளை விளக்கும்  முதல் கட்டுரை, ஆண்மை, பெண்மை என்றால் என்ன ? என்ற வினாக்களை முன் வைத்து , அதே சமயம்
பெண் விடுதலை , பெண்சமத்துவம் என்பதெல்லாம் இந்த மாறி வரும் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் தான் சாத்தியம் என்கிறது. சொற்களே பாலினப் பாகுபாடு கொண்டிருக்கின்ற சூழலில் என்ன செய்வது ?

கருப்பையும் மார்பகமும் தான் பெண் என்று கூறும் மனிதர்களை என்னவென்று சொல்வது ? மறு உற்பத்திக்கு தேவை பெண் என்ற ஒரு சாரரின் பார்வையை அறிவியல் நோக்கித் திருப்புகிறார்அமீபா முதல் பல்வேறு உயிரினங்களின்  இன உற்பத்தியில் பெண்கள் (அ) ஆண்கள் இருப்பதில்லையே  , ஆண் , பெண் பேதம் இயற்கையின் படைப்பு அல்ல என்பதை அழுத்தமாகக் கூறுகிறார்.

ஒரு ராஜலட்சுமியின் வீட்டு சம்பவத்திலிருந்து , ஒரு ஆணின் வெளிநடப்பு  அந்த வீட்டின் சூழலை
எவ்வாறு கட்டுக்குள் வைக்கின்றது என்பதை விளக்கும் போது சமூக எதார்த்தம் நம்மை கோபம் கொள்ள வைக்கிறது.

பெண் என்றால் அழகு என்பதே இந்த சமூகத்தால் திரும்பத் திரும்பக் கட்டமைக்கப்படுவது குறித்தும் ,இனப்பெருக்கத்தோடு பெண்ணை இறுக்கமாக இணைக்கும் பார்வை குறித்தும் பேசுகிறது இரண்டாம் அத்யாயம். ஆண் பெண் சமத்துவம் குறித்து சொத்தமாகச் சொல்வதற்கு கருத்தே இல்லாதிருந்த தொழிலாளிகள் கண்டு மிகுந்த அச்சமுற்றேன் எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர் .

அறிவியல் என்ன சொல்கிறது .... அமீபா , பிளாஸ்மோடியா உள்ளிட்ட அனைத்து உயிரிகளிலும் ஆண் - பெண் பாகுபாடு இல்லாமலேயே இனப்பெருக்கம் நடப்பதையும் , தவளை , நத்தை , மான்இவற்றின் இனப்பெருக்க வழிமுறைகளைக் கூறி, கருச் செல்கள் சந்திப்பதை உறுதி செய்ய ஆண் , பெண் உயிர்கள் நெருக்கமாக இருப்பதையே புணர்ச்சி என்கிறோம்  , அது ஒரு தற்செயல் நிகழ்வே , இயற்கை தான்
மற்றபடி ஒன்றுமில்லை என்பதைப் புரிய வைக்க எழுதியதைப் படிக்கும் போது
இதில் புனிதம் என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை , திருந்துங்கள் சமூகமே என்பதாகத்தான் தோன்றுகிறது.

இனப்பெருக்கம்  என்பது ஆண் பெண் பால் உறவு கொண்டும் நடக்கிறது , இல்லாமலும் நடக்கிறது என்பது தானே இயற்கை , குழந்தை பெறத்தான் பெண்கள் படைக்கப்பபட்டார்கள் எனக் கூறி விட முடியுமா ? தலை எழுத்து என்று தள்ளிவிட முடியுமா எனக் கேட்கிறார் .அதோடு இந்த செய்தியை விளக்க கிருத்திகாவின் கதையை அடுத்தடுத்த அத்யாயங்களில் புரிய வைக்க முயன்றிருக்கிறார்.

இடையறாத தற்செயல் நிகழ்வுகளுக்கு ஊடாக இயக்க விதிகள் செயல்படுகின்றன என்ற ஏங்கல்ஸ் ஸின் வரிகளை மனித வாழ்வின் இணையும் நிகழ்வுடன் ஒப்பிட்டு கருப்பையின் அர்த்தமே பெண்ணாகப் பிறந்ததால் பிள்ளை கொடுக்கத்தான் என ஆணி அடிக்க முடியாது என்கிறார். விலங்குகளில் ஆண் விலங்குகள் பெண் விலங்குகளை சைட் அடிப்பதில்லை .. ஆனால் மனிதரில் மட்டும் இந்தக் கொடுமை என்கிறார். பெரியார், பெண்கள் தங்கள் கருப்பைகளை வெட்டி எறிய வேண்டும் " என்று ஆவேசத்துடன் கூறியதை இத்தகைய பண்பாட்டுத் தளத்தில் வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு தாய்மை தான் பெண்மை என்று சுருக்குகிற பார்வை சரியல்ல என்று கூறுகிறார்.

குட்டி ரேவதியின் முலைகள் பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பிக்கின்றது 4 ஆம் பாகம்.
ஒருநிறை வேறாத காதலில்
துடைத்த கற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன .. என்று பெண் தன் உடல் உறுப்புகள் பற்றித் தமிழ் எழுத்துலகம் இதுவரை வாசித்தறியாத படிமங்களுடன் வலியுடன் கவிதைகளும் கதைகளும் தரும் படைப்பாளிகள் பெண்களே என, உடலுக்குள் பூட்டி வைக்கப்பட்ட மனுஷி எனப்
பதிவு செய்திருத்தல் மிக முக்கியமானப் பதிவாகப் பார்க்கிறேன். ஆண்களின் பார்வையில் பெண்கள் பற்றிய எழுத்து எவ்வாறு மாற வேண்டும் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம்.

பெண் உடல் அழகிப் போட்டிகளால் எவ்வாறு சுருங்கி கற்பிதமாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இந்தப் பக்கங்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. இந்தப் பக்கத்தின்  கடைசியில்  ஆதவன் தீட்சண்யா எழுதிய மழை என்ற தலைப்பிலான கவிதையையும் முதலில் சொன்ன முலைகள் பற்றிய கவிதையையும் ஒப்புமைப் படுத்துகிறார். அதோடு போர்னோகிராபி சேனல்கள் பெண்களது உடலை அங்கம் அங்கமாகச் சிதைத்து விற்று வருவது உள்ளிட்ட பல விஷயங்களை அலசுகிறார் , தன் உடலைத் தாண்டி வெளிவர முடியாத நிலையில் பெண்ணை இருத்தி வைத்து அவளுடைய சிந்தனை , அறிவாற்றல் , படைப்பாற்றல்  , அரசியல் மதிநுட்பம் ஆளுமை என எல்லாவற்றையும் அழித்து ஒழித்து விடுகிறோமே , பெண் தன் உடலைத் தாண்டுவது எப்படி? என்ற அழுத்தமான கேள்வியை இந்த சமூகத்தின் முன் வைக்கிறார். நாமும் அதற்காகவே காத்து நிற்கிறோம் , பெண்ணை இந்த ஆண்கள் உடலைத் தாண்டி சக மனுஷியாக நடத்தும் நாள் என்று தான் வருமோ ?

அடுத்த அத்யாயம் நம் மனதோடு பேசுவது என்னவோ மிக அவசியமாக இருக்கின்றது. பெண்களின் அழகிற்கு
புதிய அர்த்தங்கள் சொல்லப்படும் அத்யாயமாக இருக்கின்றது.
ஆண் - பெண் குழந்தைகளின் தலையில் அவர்களின் உடல் பற்றி ,அழகு பற்றி ஒரு கருத்து வலுவாகக் கட்டமைக்கப்பட்டு வருவதும், அழகு குறைந்த பெண்களின் மன உணர்வுகள் பற்றிப் போதிய அளவுக்கு நம் சமூக மனம் கவலை
கொள்ளாததும் பற்றி நிறையப் பேசுகிறார். அப்படியான கருத்தை மாற்ற செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதாக நமக்கு உணர்த்துகிறது அடுத்தடுத்த வரிகள்.

அழகின் புதிய அர்த்தங்கள் முடிவுக்கு வரும் பொழுது  பேரா.ஆர்  .சந்திரா அவர்களின் கடிதம் தாய்மை தத்தெடுத்தல் சில மாயைகளும் உண்மைகளும் என்ற தலைப்பில்  இணைக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான கருத்து இந்தியாவில் ஒரு பெண் பிறவி எடுத்தால் 25 மதிப்பெண் + பூப்படைதல் 25 மதிப்பெண் + திருமணம்  என்றால்  25 மதிப்பெண் + தாய்மை 25 மதிப்பெண் , ஆக மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கும் சமுதாயம் என்கிறார் .. அதைத் தொடர்ந்து பல அவசியமான கருத்துகளையும் முன் வைப்பது எதார்த்தம் வலிக்கச் செய்கிறது.

புத்தகத்தின் 6வது அத்யாயம் ஆணாதிக்க சிந்தனை சட்ட வடிவம் பெறும் அளவிற்கு டிரஸ் கோடு பற்றிய விளக்கங்களை  பரிணாம வளர்ச்சியின் போக்கில் விளக்குகிறார். பெண்ணின்  பாலுறவு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்  கற்பு என்ற ஆயுதத்தை அதன் இயல்புகள் பற்றி ஆராய வைக்கும் எழுத்தாளர் பெண் உடை என்பது வீரம் , அறிவு போன்ற அம்சங்களோடு பொருந்தாது என்கிற மரபுக் கருத்தைப் பற்றியும் அதை உடைத்த ஒரு செயலாக சீனாவில் மாசேதுங் ஆண் - பெண் பேதம் தவிர்க்கச் செய்த ஒரு கலாச்சாரப் புரட்சி பற்றியும் விளக்கம்  தருவதோடு பெண்களின் ஆடை இந்து முஸ்லீம்களுக்கு எதிர் தரப்பு பெண்களை
நிர்வாணப்படுத்தி  சபையில் அணிவகுத்து நடக்கச் செய்த கொடுமைகள் முதல் கொண்டு பேசும் இவர் , பெண்களின் கண்ணைப் பார்த்துப் பேசப் பழகாத ஆண் மனம் தான் திருத்தப் பட வேண்டுமே ஒழிய அதற்கும் பெண்ணையே பொறுப்பாக்கி டிரெஸ் கோட் கொண்டு வருவது ஆணாதிக்க  சிந்தனைகளுக்கு சட்ட வடிவம் கொடுப்பதே என்று அவர் கூறுவதே மிகச் சரி என்பதாக நமக்கும் படுகிறது.

சில கவிதைகள் சில பாடல்கள் வழியே தொல்காப்பியம் முதற்கொண்டு எம்.ஜி.ஆர் பாடல் வரை பெண்கள் பற்றி எப்படி இருக்க வேண்டும் என காலம் காலமாக ஆண் சமூகம் சொல்லிக் கொண்டு வருவது பற்றி எடுத்துக் கூறுவது வேறொரு பார்வை.

பெண் உடம்பின் ஒவ்வொரு அங்கம் குறித்தும் எவ்விதம் வர்ணிக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் எழுதுகிற அளவுக்கு கேடு கெட்ட பண்பாட்டை நாம் கொண்டிருப்பது உண்மையில் கேவலமே .

பெண்களை மென்மையாகச் சொல்லிச் சொல்லியே சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய சினிமாப் பாடல்கள் வரை கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கிய வரலாறு , பிரிட்டிஷ் காரனும் வெண்டைக் காய்க்கு லேடீஸ்பிங்கர் (பெண் விரல்) எனப் பெயரிடும் அவலம் , உழைக்கும் பெண்கள் பற்றிய சிறு பேச்சும் இல்லாத சூழல் இவை பற்றி நம்மை சிந்திக்க வைப்பது எட்டாவது அத்யாயம் .

பெண்களை எவன் சொன்னது வீக்கர் செக்ஸ் என நம்மை கேள்வி கேட்கவும் தூண்டும் பொருள் பொதிந்த  பக்கங்கள் நமக்குள் கனலாகின்றன. பெண் மீது சுமத்தப்படும் குணங்களாக 2 விதமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது , ஒன்று உயிரியல் ரீதியானது அது தான் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதும்  பாலூட்டலும் , இதை நிச்சயமாகக் கேள்விக்குள்ளாக்க வாய்ப்பில்லை.

அது தவிர தாய்மை , பெண்மை , மென்மை போன்ற 'மை'கள் எல்லாம் யாரு வச்ச மை ? என்பதற்கான விளக்கங்கள் சம்மட்டி அடி .

அடுத்த 9 ஆவது அத்யாயம் ஆண்மை பெண்மையை மார்க்சிய சிந்தனைப் புள்ளிகளின் வழியாக விவரிக்கும் பணியில் ஆரம்பிக்கின்றது. சமூக முழுமையின் ஒரு பகுதியாகப் பார்க்கக் கற்றுக் கொடுக்கிறது , மனித குலம் உற்பத்தி , மறு உற்பத்தி என்ற 2 வித பொருளியல் நடவடிக்கை , சமூகமயமாக்கும்  ஆளும் வர்க்கத் தேவை வெளியிலிருந்து அல்ல , வீட்டுக்குள்ளிருந்தே பெண்கள் மூலமாக நிறைவேற்றப்படுவதை  முன்வைத்து , அக்ரி கல்ச்சர் - கல்ச்சர்  விளக்கமும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது  .

பத்தாவது பாகம் பெண் கல்வி குறித்து அலசல் , பள்ளிகள் ஆண் பெண் குழந்தைகளுக்கான தண்டனைகளை எவ்வாறு உடல் சார்ந்து தந்தன ? என்பதின் தொடக்கமாக , ஏலாதியின் ஒரு பாடலோடு சமூக மனதில் பொதுப்புத்தியில் இருப்பதை ஏன் கேள்விக்குள்ளாக்கவில்லை என்பதாக நம்மை இடித்துரைப்பதும் , குறுந்தொதொகையின் வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல் மனை யுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்பதைக் கூறும் போது , இன்னுமே அப்படித்தான் நம்புகிறது என்பதற்கு சாட்சி கடந்த வாரம் நடந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தமிழ் முதல் தாளில் வந்த 5 மதிப்பெண் வினா வே உதாரணம்.

கல்விப் பிரிவுகள், கணினித் துறை முதல் எல்லாவற்றிலும் பெண் கல்விக்குத் தடை,
  பெண் சமத்துவ உணர்வு எங்கும் இருப்பதில்லை. வரலாற்றைப் பயிற்று விக்கும் போது அதில் நிகழ்ந்துள்ள பெண் புறக்கணிப்புப்  பற்றிச் சொல்ல வேண்டும் , அறிவியலில் மறைந்துள்ள ஆணாதிக்கப் பார்வையை அடையாளம் காட்ட வேண்டிய கல்வி தான் நமக்குத் தேவை என்பதிலிருந்து தொடங்குகிறது நமது அடுத்த வேலை.

கல்விச் சாலையை அடுத்த பண்பாட்டுத் தொழிற்சாலையாகக் குடும்பத்தை அறிமுகப் படுத்தும் நேரம் மருமகள் வாக்கு என்ற சிறுகதைப் பற்றி கூறி, காலம் காலமாகப் பெண் எவ்வாறு வசங்குகிறாள் , தர்மங்களையும் நம்பிக்கைகளையும் சுமக்க வசக்கப்படுகிறாள் என்பதை ஆய்வு செய்கிறது இந்த அத்தியாயம் .

மனித மனங்களைப் பண்படுத்தும் தொழிலை நுட்பமான, பரந்துபட்ட அளவில் செய்யும்பண்பாட்டு நிறுவனம் ஊடகங்கள் எனவும்  , பெண்கள் பற்றிய செய்திகளை எவ்வாறு காட்டுகின்றன என்பதையும் கூறும் பக்கங்கள்  நமது அன்றாட வாழ்வியலில் பெண்களுக்கான புரிதல்களை பரிசீலிக்க அழைக்கின்றது.

இறுதி அத்யாயம் நிறைய சொல்கிறது , ஆண் குற்ற உணர்வு கொள்ள வேண்டும் , ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப்  பெண்களை அடிமை கொண்ட பாவத்தின் கறை படிந்த நம் கரங்களை , இதயங்களை , பெண் விடுதலைக்காகப் போராடும் செயல்களால் கழுவ வேண்டும் என்கிறார் .....
இப்படியாக ஒரு புத்தகம் நம்மை தூங்க விடாமல் செய்கிறது, படிப்பதோடு இல்லாமல் செயல்களில் இறங்க விரல் பிடித்து அழைக்கும் ஒரு கள ஆய்வு நூலாக இதைப் பார்க்கிறேன்.