Thursday 18 March 2021

மலையாளம்

5 ஆவது வாரம் 

போட்டிக்கான பதிவு 

சுயசரிதை / வாழ்க்கை வரலாறு 


புத்தகம் : என் கதை 

ஆசிரியர் : கமலா தாஸ் - மலையாளம் 

தமிழில் மொழிபெயர்ப்பு : நிர்மாலயா 

வெளியீடு : காலச் சுவடு பதிப்பகம் 

முதல் பதிப்பு : 2016

விலை: ரூபாய் 145


கமலா தாஸ் (1934 -2009)

மலையாளத்தில் புனைகதை எழுத்தாளர் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கவிஞர் கமலா தாஸாகவும் அறியப்பட்டவர். எழுத்தாளர் , கவிஞர் ,பத்திரிக்கையாளர் என்று உலகப் புகழ் பெற்றவர் . இவரது எழுத்துகள் நாவல் , சிறுகதை , சுய சரிதை , பத்தி ஆகியவற்றின் நூல் வடிவங்களாக இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக  வெளியாகியுள்ளன. இவரது சிறுகதைகளை ஆதாரமாக வைத்து திரைப்பபங்களும்  கூட எடுக்கப்பட்டுள்ளன. 

ஆசிய கவிதைப் பரிசு, கென்ட் விருது , ஆசான் கவிதை விருது , கேரள சாகித்திய அகாதெமி விருது , மத்திய சாகித்திய அகாதெமி விருதுகள் , வயலார் விருது , எழுத்தச்சன் விருது ஆகியவற்றைப்  பெற்றவர்  இவர். இவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளார்.


நிர்மால்யா : சிற்றிதழ்களின் மூலம் மொழியாக்கப் பணியைத் தொடங்கியவர் .மலையாளத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 2010 இல் மொழி பெயர்ப்புக்காக சாகித்ய அக்காதெமி விருதைப் பெற்றவர். இந்த நூலைப் பொருத்தவரை அழகானப் புரிதல் , கச்சிதமான தமிழ் நடையில் தமிழில் எழுதப்பட்ட உணர்வுடன் வாசிக்க முடிகிறது. 


என் கதை : 


புத்தகம் கமலா தாஸ் அவர்களின் அக வாழ்க்கையுடன் இணைத்து, அவரது  வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்கிறது. 


ஆரம்பமே ..

உங்களுடையது அல்லாத சுகங்கள் எனக்கு இல்லை

உங்களுக்குத் தெரியாத வேதனைகள் எனக்கு இல்லை 

நானும் 

'நான் ' என்ற பெயரால் அறியப்பாடுகிறேன் என கமலா தாஸ் கூறிய வாக்கியங்களுடன் ஆரம்பிக்கிறது. 


இருபத்தியேழு  உட் தலைப்புகளில் கமலா தாஸ் தனது வாழ்க்கையை , சந்தித்த நபர்களை , சங்கடங்களை , சந்தோஷங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வது நமக்கே ஆறுதலாக உள்ளது. , துயரங்கள் , வெற்றிகள் , நேசம் , காதல் , காமம் இப்படி எல்லாவற்றையும் வெகு சுவாரஸ்யமாகப் பதிவு செய்திருக்கிறார். அவர் மாதவிக் குட்டியாய் மலையாளத்தில் தந்த இந்தத் தொடர்களுடனான சுய சரிதை தன் வரலாற்றை கமலா தாஸாக ஆங்கிலத்திலும் செறிவாகத் தந்துள்ளார் என்பதற்கான தகவலும் அறிய முடிகிறது கையளவு சொற்கள் மூலமே தனது உலகை முழுவதுமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை வாசிக்கும் போது உணர முடிகிறது. 


ஒவ்வொரு அத்யாயத்தை வாசிக்கும் போதும் இந்த 'என் கதை ' நமக்கு பலவற்றையும் கற்றுத் தருகிறது. அதோடு அவரவர் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவும் செய்கிநது. ஒவ்வொரு பெண்ணும் தனக்கான வாழ்வின் எல்லைகளை  முகமூடிப் போட்டு வாழும் சமூகச் சூழலில் தன் ஆசைகள் , விருப்பங்கள் , உளம் சார்ந்த உடல் சார்ந்த ஏக்கங்கள் என எல்லாவற்றையும் வெளிப்படையாகப்  பேசி இருப்பது தான் இப்புத்தகத்தின் வெற்றி எனலாம் .


ஒழுக்க நெறி என்ற பெயரில் நம்மிடையே விவாதிக்கப்படுவதைப் புறக்கணிக்கவும் ஏற்க மறுக்கவும் தீர்மானிக்கும் உறுதியை கமலா தாஸ் வெளிப்படுத்துகிறார் . அழுகிப் போகும் உடலே அடித்தளமாக இருப்பதும் மனிதனின் மனமே உண்மையான ஒழுக்க நெறிக்கு ஆதாரமாக விளங்குவதும் பற்றி பேசுகிறார் .

அவர் பிறந்த வளர்ந்த ஊரின் சூழல்  , அங்கு வாழும் மனிதர்கள் , இவரது திருமண வாழ்வு , புத்தகப் பிரியங்கள் , எழுத்தாளர் பயணம் அனைத்தும் நம்மோடு பிரயாணம் செய்கின்றன. காந்திய வீட்டு சூழல் குறித்தும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். 

மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் , கமலா தாளன் ' என் கதை 'யைத் தவிர்த்து , ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடன் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்கிறார். 





No comments:

Post a Comment