Friday 5 April 2019

வாசிப்பை நேசிப்போம் -பெண்மை ஒரு கற்பிதம்

#பெண்மை #என்றொரு #கற்பிதம்

நூல் பற்றிய எனது பார்வை ....

பெண் சமத்துவம் குறித்து மேடைகளில் ,விழா நாட்களில் , மகளிர் தின கொண்டாட்ட நேரங்களில் மட்டுமே குரல்கள் உரக்கக் கேட்கின்றன, அதனால் மாற்றங்கள் சாத்தியமா என்றால், கேள்விக் குறி தான்.

அப்படியல்ல , குடும்பம் , சமூகம் , பள்ளி , ஊடகம் என எல்லா இடங்களிலும் இந்தக் குரல்கள் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் , ஓயாமல் அலை அடிப்பது போது பெண்களின் விடுதலை பற்றியும் பெண் சமத்துவம் குறித்தும் பெண்ணிய சிந்தனைகளை முன் வைத்தும் உரையாடல்களும் விவாதங்களும் உருவாகி மாற்றத்திற்கானப் பாதையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படை செய்தியை இந்த நூலின் வழியாக , 64 பக்கங்களிலும், 360° பாகையில் நம்மை சுழன்று பார்க்கும்படி தருகிறார் ஆசிரியர் தமிழ்ச்செல்வன்  Tamil Selvan.

இந்தக் கட்டுரைத் தொகுப்பு நூல்  செம்மலர் இலக்கிய இதழில் 14 பகுதிகளாக எழுதப்பட்டு இருக்கின்றது.
முதல் அத்யாயத்தில் தொடங்கி இறுதி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வே நம்மை  வலியுறுத்துகிறது நூலாசிரியரின் கேள்விகளும் ஆதங்கமும்.

பெண்மையின் அர்த்தம் காலந்தோறும்  மாறி வருகிறது என்ற பொருளை விளக்கும்  முதல் கட்டுரை, ஆண்மை, பெண்மை என்றால் என்ன ? என்ற வினாக்களை முன் வைத்து , அதே சமயம்
பெண் விடுதலை , பெண்சமத்துவம் என்பதெல்லாம் இந்த மாறி வரும் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் தான் சாத்தியம் என்கிறது. சொற்களே பாலினப் பாகுபாடு கொண்டிருக்கின்ற சூழலில் என்ன செய்வது ?

கருப்பையும் மார்பகமும் தான் பெண் என்று கூறும் மனிதர்களை என்னவென்று சொல்வது ? மறு உற்பத்திக்கு தேவை பெண் என்ற ஒரு சாரரின் பார்வையை அறிவியல் நோக்கித் திருப்புகிறார்அமீபா முதல் பல்வேறு உயிரினங்களின்  இன உற்பத்தியில் பெண்கள் (அ) ஆண்கள் இருப்பதில்லையே  , ஆண் , பெண் பேதம் இயற்கையின் படைப்பு அல்ல என்பதை அழுத்தமாகக் கூறுகிறார்.

ஒரு ராஜலட்சுமியின் வீட்டு சம்பவத்திலிருந்து , ஒரு ஆணின் வெளிநடப்பு  அந்த வீட்டின் சூழலை
எவ்வாறு கட்டுக்குள் வைக்கின்றது என்பதை விளக்கும் போது சமூக எதார்த்தம் நம்மை கோபம் கொள்ள வைக்கிறது.

பெண் என்றால் அழகு என்பதே இந்த சமூகத்தால் திரும்பத் திரும்பக் கட்டமைக்கப்படுவது குறித்தும் ,இனப்பெருக்கத்தோடு பெண்ணை இறுக்கமாக இணைக்கும் பார்வை குறித்தும் பேசுகிறது இரண்டாம் அத்யாயம். ஆண் பெண் சமத்துவம் குறித்து சொத்தமாகச் சொல்வதற்கு கருத்தே இல்லாதிருந்த தொழிலாளிகள் கண்டு மிகுந்த அச்சமுற்றேன் எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர் .

அறிவியல் என்ன சொல்கிறது .... அமீபா , பிளாஸ்மோடியா உள்ளிட்ட அனைத்து உயிரிகளிலும் ஆண் - பெண் பாகுபாடு இல்லாமலேயே இனப்பெருக்கம் நடப்பதையும் , தவளை , நத்தை , மான்இவற்றின் இனப்பெருக்க வழிமுறைகளைக் கூறி, கருச் செல்கள் சந்திப்பதை உறுதி செய்ய ஆண் , பெண் உயிர்கள் நெருக்கமாக இருப்பதையே புணர்ச்சி என்கிறோம்  , அது ஒரு தற்செயல் நிகழ்வே , இயற்கை தான்
மற்றபடி ஒன்றுமில்லை என்பதைப் புரிய வைக்க எழுதியதைப் படிக்கும் போது
இதில் புனிதம் என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை , திருந்துங்கள் சமூகமே என்பதாகத்தான் தோன்றுகிறது.

இனப்பெருக்கம்  என்பது ஆண் பெண் பால் உறவு கொண்டும் நடக்கிறது , இல்லாமலும் நடக்கிறது என்பது தானே இயற்கை , குழந்தை பெறத்தான் பெண்கள் படைக்கப்பபட்டார்கள் எனக் கூறி விட முடியுமா ? தலை எழுத்து என்று தள்ளிவிட முடியுமா எனக் கேட்கிறார் .அதோடு இந்த செய்தியை விளக்க கிருத்திகாவின் கதையை அடுத்தடுத்த அத்யாயங்களில் புரிய வைக்க முயன்றிருக்கிறார்.

இடையறாத தற்செயல் நிகழ்வுகளுக்கு ஊடாக இயக்க விதிகள் செயல்படுகின்றன என்ற ஏங்கல்ஸ் ஸின் வரிகளை மனித வாழ்வின் இணையும் நிகழ்வுடன் ஒப்பிட்டு கருப்பையின் அர்த்தமே பெண்ணாகப் பிறந்ததால் பிள்ளை கொடுக்கத்தான் என ஆணி அடிக்க முடியாது என்கிறார். விலங்குகளில் ஆண் விலங்குகள் பெண் விலங்குகளை சைட் அடிப்பதில்லை .. ஆனால் மனிதரில் மட்டும் இந்தக் கொடுமை என்கிறார். பெரியார், பெண்கள் தங்கள் கருப்பைகளை வெட்டி எறிய வேண்டும் " என்று ஆவேசத்துடன் கூறியதை இத்தகைய பண்பாட்டுத் தளத்தில் வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு தாய்மை தான் பெண்மை என்று சுருக்குகிற பார்வை சரியல்ல என்று கூறுகிறார்.

குட்டி ரேவதியின் முலைகள் பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பிக்கின்றது 4 ஆம் பாகம்.
ஒருநிறை வேறாத காதலில்
துடைத்த கற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன .. என்று பெண் தன் உடல் உறுப்புகள் பற்றித் தமிழ் எழுத்துலகம் இதுவரை வாசித்தறியாத படிமங்களுடன் வலியுடன் கவிதைகளும் கதைகளும் தரும் படைப்பாளிகள் பெண்களே என, உடலுக்குள் பூட்டி வைக்கப்பட்ட மனுஷி எனப்
பதிவு செய்திருத்தல் மிக முக்கியமானப் பதிவாகப் பார்க்கிறேன். ஆண்களின் பார்வையில் பெண்கள் பற்றிய எழுத்து எவ்வாறு மாற வேண்டும் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம்.

பெண் உடல் அழகிப் போட்டிகளால் எவ்வாறு சுருங்கி கற்பிதமாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இந்தப் பக்கங்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. இந்தப் பக்கத்தின்  கடைசியில்  ஆதவன் தீட்சண்யா எழுதிய மழை என்ற தலைப்பிலான கவிதையையும் முதலில் சொன்ன முலைகள் பற்றிய கவிதையையும் ஒப்புமைப் படுத்துகிறார். அதோடு போர்னோகிராபி சேனல்கள் பெண்களது உடலை அங்கம் அங்கமாகச் சிதைத்து விற்று வருவது உள்ளிட்ட பல விஷயங்களை அலசுகிறார் , தன் உடலைத் தாண்டி வெளிவர முடியாத நிலையில் பெண்ணை இருத்தி வைத்து அவளுடைய சிந்தனை , அறிவாற்றல் , படைப்பாற்றல்  , அரசியல் மதிநுட்பம் ஆளுமை என எல்லாவற்றையும் அழித்து ஒழித்து விடுகிறோமே , பெண் தன் உடலைத் தாண்டுவது எப்படி? என்ற அழுத்தமான கேள்வியை இந்த சமூகத்தின் முன் வைக்கிறார். நாமும் அதற்காகவே காத்து நிற்கிறோம் , பெண்ணை இந்த ஆண்கள் உடலைத் தாண்டி சக மனுஷியாக நடத்தும் நாள் என்று தான் வருமோ ?

அடுத்த அத்யாயம் நம் மனதோடு பேசுவது என்னவோ மிக அவசியமாக இருக்கின்றது. பெண்களின் அழகிற்கு
புதிய அர்த்தங்கள் சொல்லப்படும் அத்யாயமாக இருக்கின்றது.
ஆண் - பெண் குழந்தைகளின் தலையில் அவர்களின் உடல் பற்றி ,அழகு பற்றி ஒரு கருத்து வலுவாகக் கட்டமைக்கப்பட்டு வருவதும், அழகு குறைந்த பெண்களின் மன உணர்வுகள் பற்றிப் போதிய அளவுக்கு நம் சமூக மனம் கவலை
கொள்ளாததும் பற்றி நிறையப் பேசுகிறார். அப்படியான கருத்தை மாற்ற செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதாக நமக்கு உணர்த்துகிறது அடுத்தடுத்த வரிகள்.

அழகின் புதிய அர்த்தங்கள் முடிவுக்கு வரும் பொழுது  பேரா.ஆர்  .சந்திரா அவர்களின் கடிதம் தாய்மை தத்தெடுத்தல் சில மாயைகளும் உண்மைகளும் என்ற தலைப்பில்  இணைக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான கருத்து இந்தியாவில் ஒரு பெண் பிறவி எடுத்தால் 25 மதிப்பெண் + பூப்படைதல் 25 மதிப்பெண் + திருமணம்  என்றால்  25 மதிப்பெண் + தாய்மை 25 மதிப்பெண் , ஆக மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கும் சமுதாயம் என்கிறார் .. அதைத் தொடர்ந்து பல அவசியமான கருத்துகளையும் முன் வைப்பது எதார்த்தம் வலிக்கச் செய்கிறது.

புத்தகத்தின் 6வது அத்யாயம் ஆணாதிக்க சிந்தனை சட்ட வடிவம் பெறும் அளவிற்கு டிரஸ் கோடு பற்றிய விளக்கங்களை  பரிணாம வளர்ச்சியின் போக்கில் விளக்குகிறார். பெண்ணின்  பாலுறவு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்  கற்பு என்ற ஆயுதத்தை அதன் இயல்புகள் பற்றி ஆராய வைக்கும் எழுத்தாளர் பெண் உடை என்பது வீரம் , அறிவு போன்ற அம்சங்களோடு பொருந்தாது என்கிற மரபுக் கருத்தைப் பற்றியும் அதை உடைத்த ஒரு செயலாக சீனாவில் மாசேதுங் ஆண் - பெண் பேதம் தவிர்க்கச் செய்த ஒரு கலாச்சாரப் புரட்சி பற்றியும் விளக்கம்  தருவதோடு பெண்களின் ஆடை இந்து முஸ்லீம்களுக்கு எதிர் தரப்பு பெண்களை
நிர்வாணப்படுத்தி  சபையில் அணிவகுத்து நடக்கச் செய்த கொடுமைகள் முதல் கொண்டு பேசும் இவர் , பெண்களின் கண்ணைப் பார்த்துப் பேசப் பழகாத ஆண் மனம் தான் திருத்தப் பட வேண்டுமே ஒழிய அதற்கும் பெண்ணையே பொறுப்பாக்கி டிரெஸ் கோட் கொண்டு வருவது ஆணாதிக்க  சிந்தனைகளுக்கு சட்ட வடிவம் கொடுப்பதே என்று அவர் கூறுவதே மிகச் சரி என்பதாக நமக்கும் படுகிறது.

சில கவிதைகள் சில பாடல்கள் வழியே தொல்காப்பியம் முதற்கொண்டு எம்.ஜி.ஆர் பாடல் வரை பெண்கள் பற்றி எப்படி இருக்க வேண்டும் என காலம் காலமாக ஆண் சமூகம் சொல்லிக் கொண்டு வருவது பற்றி எடுத்துக் கூறுவது வேறொரு பார்வை.

பெண் உடம்பின் ஒவ்வொரு அங்கம் குறித்தும் எவ்விதம் வர்ணிக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் எழுதுகிற அளவுக்கு கேடு கெட்ட பண்பாட்டை நாம் கொண்டிருப்பது உண்மையில் கேவலமே .

பெண்களை மென்மையாகச் சொல்லிச் சொல்லியே சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய சினிமாப் பாடல்கள் வரை கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கிய வரலாறு , பிரிட்டிஷ் காரனும் வெண்டைக் காய்க்கு லேடீஸ்பிங்கர் (பெண் விரல்) எனப் பெயரிடும் அவலம் , உழைக்கும் பெண்கள் பற்றிய சிறு பேச்சும் இல்லாத சூழல் இவை பற்றி நம்மை சிந்திக்க வைப்பது எட்டாவது அத்யாயம் .

பெண்களை எவன் சொன்னது வீக்கர் செக்ஸ் என நம்மை கேள்வி கேட்கவும் தூண்டும் பொருள் பொதிந்த  பக்கங்கள் நமக்குள் கனலாகின்றன. பெண் மீது சுமத்தப்படும் குணங்களாக 2 விதமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது , ஒன்று உயிரியல் ரீதியானது அது தான் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதும்  பாலூட்டலும் , இதை நிச்சயமாகக் கேள்விக்குள்ளாக்க வாய்ப்பில்லை.

அது தவிர தாய்மை , பெண்மை , மென்மை போன்ற 'மை'கள் எல்லாம் யாரு வச்ச மை ? என்பதற்கான விளக்கங்கள் சம்மட்டி அடி .

அடுத்த 9 ஆவது அத்யாயம் ஆண்மை பெண்மையை மார்க்சிய சிந்தனைப் புள்ளிகளின் வழியாக விவரிக்கும் பணியில் ஆரம்பிக்கின்றது. சமூக முழுமையின் ஒரு பகுதியாகப் பார்க்கக் கற்றுக் கொடுக்கிறது , மனித குலம் உற்பத்தி , மறு உற்பத்தி என்ற 2 வித பொருளியல் நடவடிக்கை , சமூகமயமாக்கும்  ஆளும் வர்க்கத் தேவை வெளியிலிருந்து அல்ல , வீட்டுக்குள்ளிருந்தே பெண்கள் மூலமாக நிறைவேற்றப்படுவதை  முன்வைத்து , அக்ரி கல்ச்சர் - கல்ச்சர்  விளக்கமும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது  .

பத்தாவது பாகம் பெண் கல்வி குறித்து அலசல் , பள்ளிகள் ஆண் பெண் குழந்தைகளுக்கான தண்டனைகளை எவ்வாறு உடல் சார்ந்து தந்தன ? என்பதின் தொடக்கமாக , ஏலாதியின் ஒரு பாடலோடு சமூக மனதில் பொதுப்புத்தியில் இருப்பதை ஏன் கேள்விக்குள்ளாக்கவில்லை என்பதாக நம்மை இடித்துரைப்பதும் , குறுந்தொதொகையின் வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல் மனை யுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்பதைக் கூறும் போது , இன்னுமே அப்படித்தான் நம்புகிறது என்பதற்கு சாட்சி கடந்த வாரம் நடந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தமிழ் முதல் தாளில் வந்த 5 மதிப்பெண் வினா வே உதாரணம்.

கல்விப் பிரிவுகள், கணினித் துறை முதல் எல்லாவற்றிலும் பெண் கல்விக்குத் தடை,
  பெண் சமத்துவ உணர்வு எங்கும் இருப்பதில்லை. வரலாற்றைப் பயிற்று விக்கும் போது அதில் நிகழ்ந்துள்ள பெண் புறக்கணிப்புப்  பற்றிச் சொல்ல வேண்டும் , அறிவியலில் மறைந்துள்ள ஆணாதிக்கப் பார்வையை அடையாளம் காட்ட வேண்டிய கல்வி தான் நமக்குத் தேவை என்பதிலிருந்து தொடங்குகிறது நமது அடுத்த வேலை.

கல்விச் சாலையை அடுத்த பண்பாட்டுத் தொழிற்சாலையாகக் குடும்பத்தை அறிமுகப் படுத்தும் நேரம் மருமகள் வாக்கு என்ற சிறுகதைப் பற்றி கூறி, காலம் காலமாகப் பெண் எவ்வாறு வசங்குகிறாள் , தர்மங்களையும் நம்பிக்கைகளையும் சுமக்க வசக்கப்படுகிறாள் என்பதை ஆய்வு செய்கிறது இந்த அத்தியாயம் .

மனித மனங்களைப் பண்படுத்தும் தொழிலை நுட்பமான, பரந்துபட்ட அளவில் செய்யும்பண்பாட்டு நிறுவனம் ஊடகங்கள் எனவும்  , பெண்கள் பற்றிய செய்திகளை எவ்வாறு காட்டுகின்றன என்பதையும் கூறும் பக்கங்கள்  நமது அன்றாட வாழ்வியலில் பெண்களுக்கான புரிதல்களை பரிசீலிக்க அழைக்கின்றது.

இறுதி அத்யாயம் நிறைய சொல்கிறது , ஆண் குற்ற உணர்வு கொள்ள வேண்டும் , ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப்  பெண்களை அடிமை கொண்ட பாவத்தின் கறை படிந்த நம் கரங்களை , இதயங்களை , பெண் விடுதலைக்காகப் போராடும் செயல்களால் கழுவ வேண்டும் என்கிறார் .....
இப்படியாக ஒரு புத்தகம் நம்மை தூங்க விடாமல் செய்கிறது, படிப்பதோடு இல்லாமல் செயல்களில் இறங்க விரல் பிடித்து அழைக்கும் ஒரு கள ஆய்வு நூலாக இதைப் பார்க்கிறேன்.

வாசிப்பை நேசிப்போம் ...#கல்வி_ஒருவர்க்கு_....

#கல்வி_ஒருவர்க்கு_....

நூல் பற்றி ..

இது ஒரு தொகுப்பு நூல் , கல்வி குறித்து பலரும் எழுதியுள்ள கட்டுரைகளை , தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்று  , கிராமப்புற மாணவர்களின் கல்விக்காகவேர்கள் அமைப்பை நடத்தி வரும் விரிவுரையாளர்
ச .பாலகிருஷ்ணன் என்பவர் தொகுத்தளிக்க
, 2013இல் புலம்பதிப்பகம்வெளியிட்டுள்ளது, பக்கங்கள் 216 ஐக் கொண்டுள்ள இந்நூல் ,கல்வித் துறை சார்ந்து கல்விச் சமத்துவத்தை எதிர்நோக்கித் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுமைகள் பலரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு .

கல்வியின் நோக்கமே விடுபட்டவர்களை சேர்த்துக் கொள்வது , ஆனால் ஏதாவது காரணம் காட்டி கிராமப்புற மாணவர்களைப்  புறந்தள்ளும்  போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது என்பதை இங்குப் பதிவு செய்வது கவனம் எடுக்க வேண்டிய ஒன்றாக நாம் பார்க்க வேண்டும். 

மொத்தம் 22 கட்டுரைகள் உள்ளன  , மெக்காலே கல்வி முறை பற்றிய முதல் கட்டுரையில்  , முனைவர் தவி. வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டுள்ள தகவல்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றது. கல்வி மறுக்கப்பட்ட சமூகம் கல்வி கிடைக்கும் வாய்ப்பாக அமைந்ததாக
அதைப் பார்க்க வைக்கின்றது. நவீனக் கல்வி தான் மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் அறிவியல் முறைக்  கல்வியாக மெக்காலேவால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவிற்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாக எண்ணுகிறேன்.

அடுத்ததாக என்னைக் கவர்ந்தது, பாகுபடுத்தும் கல்வியைக் கட்டமைத்தல் என்ற முனைவர் வசந்தி தேவி Vasanthi Devi அவர்கள் எழுதிய கட்டுரை . … எப்போதும் போல காட்டமாக தன் பாணியில் நம் நாட்டுக் கல்வியின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதோடு , உயர் கல்வியிலிருந்து தொடக்கக் கல்வி வரை பரவியுள்ள நோயை மாற்றுவது எப்போது?  என்கிறார் . மேலும் பல இடங்களில் பெற்றோரின் பேராசை , பாடத்திட்ட சுமையின் அழுத்தம் இப்படி பல வித காரணங்களின் வழியே எப்படி கல்வி ஏமாற்றப்படுகிறது  என்பதை வஞ்சப் புகழ்ச்சி அணியில் எள்ளி நகையாடுவதும் சில பகுதிகளில் இவரது கட்டுரையில் காண முடிகிறது.

தொடர்ந்து முனைவர் சு .இரவிக்குமார் காரல் மார்க்ஸின் வரிகளான , ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதின் அடிப்படையில் வர்க்க சமுதாயத்தில் கல்வியும் வர்க்கநலன்களைச் சார்ந்தே வடிவமைக்கப்படுவதாக தனது  கொள் வினை கொடுப்பினை , பொதுக் கல்வியும் ஊடகங்களும் என்றகட்டுரைையில் தந்துள்ளார்.

ஊடகங்கள் மக்களிடம் பரப்பும் உளவியல்களே அரசுப் பள்ளிகள் குறைந்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெருக்கத்திற்குக் காரணம் என வலுவான கருத்தை முன்வைத்து இக்கட்டுரையாளர் வாதம் செய்வது வரவேற்கத் தக்கது.

காலத் தேவையான கலாச்சார மாற்றங்கள் என்ற பெயரில் சி. என். மாதவன் Madhavan Narasimhachari N தந்துள்ள எழுத்துகள் அருகாமைப் பள்ளி , பொதுப் பள்ளி குறித்த கவலைகளையும் தனியார் பள்ளிகளை பிராண்ட் படுத்தும் நிலையையும் தொடர்பு படுத்தி விவாதித்துள்ளார்.

மொ. பாண்டியராஜன்  தந்துள்ள சமச்சீர் கல்வி பிறப்பும் - இறப்பும் என்ற பகுதியில் 1975 இல் உருவான 10 ஆண்டுக் கல்வித்திட்டம் முதல் இன்றைய நடைமுறையில்  இருக்கும்  சமச்சீர்  வரை பேசப்பட்டு இருக்கிறது.  தமிழக அரசு சமச்சீர்க் கல்வியை செயல்படுத்துவதில் செய்த தவறுகள் , ABL முறை , பேரா முத்துக்குமரன் கமிட்டி அறிக்கை என நிறைய தெளிவான வரலாறுகள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத் தக்கது.

நல்ல ஆசிரியர் எவ்வாறு நல்ல நாடகக் காரராக இருக்கிறார் என்பதை முன்வைத்து , நாடகம் உருவாக்குவதென்பது  கற்றல் - கற்பித்தல் இணைந்த ஒரு கல்விப் பணி என்று பொழுது போக்க மட்டுமே  அல்ல கலை , மாறாக பொழுதை அறிவு வயப்படுத்துவதும் அது , வகுப்பறைக் கல்வியான நிகழ்த்து முறைக் கல்விக்கான ஆசிரியர் ஒரு நல்ல நடிகராக இருப்பார் என வாதிடுகிறார் மு.இராமசாமி , இங்கு பிரளயன்  Pralayan Shanmugasundaram Chandrasekaran
அவர்கள் கண் முன் வருகிறார் , அவரது படைப்பான கல்வியியல் நாடகமும் நம்மை இந்தக் கட்டுரையோடு பிரயாணம் செய்கிறது. அதே போல் அனைவரும் அறிந்த அரசுப் பள்ளி ஆசிரியர் தெரு விளக்கு கோபிநாத்  Street Light Gopinath
போன்ற நாடகக் கற்பித்தல் முறையை அன்றாட வகுப்பறைகளில்  பயன்படுத்துவோரும் நம் நினைவில் வருகின்றனர்.

வகுப்பறை ஜனநாயகம் பற்றி பேசுகிறது கே. எஸ் கனகராஜின் கட்டுரை , உயர் கல்வி , கல்லூரி குறித்து பேசுகிறது கல்விக்கு ஏது வேலி ? என்கிற இரா. முரளியின் கட்டுரை .

மதுக்கூர் இராமலிங்கம் எழுதிய கானல் நீராகுமோ கல்வி ?என்ற கட்டுரை , சமூகத்தின் கல்வித் தாகம் அதிகரித்திருந்தாலும் கானல் நீராகத் தான் கல்வி இருந்து வருகிறது என்பதைப் பதிவு செய்துள்ளது.

ரமணன் தந்துள்ள பாடறியேன் ..படிப் பறியேன் , பள்ளிக் கூடம் தானறியேன் என்ற கட்டுரை ஆய்வுகளுடன் புள்ளி விபரங்களின் வழியே கல்வி நிதி நகர , கிராமங்களில் எவ்வாறு ? மாநில அரசும் மத்திய அரசும் எவ்வளவு கல்விக்காக செலவழிக்கிறது ? தனியாரின் செலவு எவ்வளவு ?பாலினப் பிரிப்பு என விவரங்களுடன் தருகிறது.

ஒளிபடைத்த கண் என்ற தலைப்பில் அமர்த்தியா சென் தந்துள்ள கட்டுரை வேறு மாதிரியான சிந்தனையை நமக்குக் கொடுக்கிறது. நம் இந்தியக் குழந்தைகளது சாப்பாடு குறைவு , ஊட்டக் குறைவு பிரச்சனைகளைக் கூறி , இந்தியாவில் தான் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் அதிகம் என்கிறார். நாம் தரமான பள்ளிகளை இன்னும் அதிகம் திறக்க வேண்டும்.  பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் பெற்றோரின் நிலையும் அரசின் நிலையும் என்ன என்பதை PROBE (PUBLIC REPORT of BASIC EDUCATION) அறிக்கை கொண்டு  விளக்குகிறார். கழிப்பறை வசதிகள் இல்லாதது தான் முதல் குறையாக உள்ளது.

டியூஷன் வகுப்புகள் பள்ளிக் கல்வியின் செயல்திறன் (efficience) எவ்வளவு மோசமாகி வருவதற்கும் பொருளாதாரக்கோணத்தின் ஒரு பார்வையில் விளக்கும் இவர் , பள்ளிக் கல்வி எதற்காக ? என்ற கேள்விக்கான பல விஷயங்களை அடையாளம் காட்டுகிறார்.
சமூக வாய்ப்பை உருவாக்கித் தரும் பள்ளியின் அனுபவத்தை மிக அழகாகத் தரும் இக்கட்டுரை  2004 இல் எழுதப்பட்டு அருணா ரத்தினம் Aruna Rathnam மொழி பெயர்த்து இருப்பது சிறப்பு , ஆனால் இங்கு பேசப்படும் பிரச்சனைகள் 15 வருடங்கள் கடந்தும் முடிவுக்கு வராமல் இருப்பது கண்டு அரசின் மீது
சீற்றம் கொள்ள வழி வகுக்கிறது.

பொன்னுராஜ்.வி என்பவர் ஆசிரியர்களுக்கான சமூக அங்கீகாரம் பற்றி சில அலசல்களையும் முதலாளித்துவ சமூகத்தின் கல்வி , என்று இன்னும் சில உபதலைப்புகளில்  வரலாற்றுப் பார்வையைத் தருகிறார்.

சாலை செல்வம் தந்துள்ள பெண் கல்வி என்ற தலைப்பிலான கட்டுரையில்  பிரச்சனையின் வடிவங்களில் வித்தியாசங்களைக் காட்டுகிறார். தலித் பெண் குழந்தையாயிருந்தால் , மாற்றுத் திறனுள்ள பெண் குழந்தை , பொருளாதாரத்தில்  பின் தங்கிய விட்டுப் பெண் குழந்தை , இப்படி பலவற்றிலும் பாகுபாடு உள்ளது. முற்போக்கான சிந்தனை முறையைக் கொண்ட பள்ளிகளும் கல்வி முறையும் வீடுகளும் அரிதாகவே உள்ளன  என்ற அவரது கருத்து நாம் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது .

தொடர்ந்து கல்வி உரிமைச் சட்டம் வரமா ? சாபமா? மார்க்ஸ் .அ தந்துள்ளதும் , நூலகம் பற்றிய ஐ.ராமமூர்த்தி கட்டுரையும் , தனியார் கல்வி தரமானது அல்ல என்ற பேராசிரியர் கல்யாணியின் நேர்காணல் கட்டுரையும் கூட வேறு வேறு தளத்திற்கு நம்மை அழைத்துச்  செல்கின்றன.

ஆசிரியர்கள் வாசிப்புப் பழக்கமற்றிருப்பதால்  என்ன நிலை , உலகளவில் ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய சில புத்தகங்கள் என்ற விதத்தில் ஆசிரியர்களை விரல் நீட்டி விமர்சிப்பதை இன்றைய தமிழக ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

ஆரோக்கிய மற்ற அரசுப் பள்ளிகளின் அவலத்தை கழிப்பறை காணாத கல்விக் கூடங்கள் என்ற தலைப்பில்  சாடுகிறார் பரமேசுவரி , இன்றைய நிலைகளும் அதுவாகவே இருப்பது அவமானம் ,

எழுத்துலகில் பெரிய முரணை உருவாக்கியவராக  சூழலை எதிர் கொண்ட பெருமாள் முருகன் சமச்சீர் கல்வி நீடிக்குமா என்ற தலைப்பில் தந்த கட்டுரை அடித்தட்டு பிரிவிலிருந்து கல்வி கற்க வரும் குழந்தைகளை மனதில் வைக்கக் கூறுவதோடு கல்விக்க ட்டணங்கள் பற்றி ஒரு பெரிய விவாதம் வைக்கிறார் .

இறுதியாக கல்விப் போராட்டம் என்பதைக் கருத்தியல் போராகப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் போராட்டத்தின் ஒரு அங்கமாகக் கல்வியையும் … இணைத்து அணுக வேண்டும் , கல்வி ஜனநாயக உரிமை என தனது கட்டுரையை முடிக்கிறார் , தொகுப்பாளர் ச.பாலகிருஷ்ணன்.

கல்வித் தளம் சார்ந்து பணிபுரியும் யாரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நல்ல புத்தகம் இது.கல்வி  வரலாற்றை அறிய  சுருக்கமான நூலாகவும் இதைக் கொள்ளலாம்.

பெருமூச்சு வாங்கி , உடனடியாக நம்மை அடுத்த பணிகளை  நோக்கி முடுக்குகிறது இந்த நூல்.

வாசிப்பு தொடரும்
உமா