Wednesday 17 March 2021

ஊர் சுற்றிப் புராணம்

ஊர் சுற்றிப்  புராணம் 


ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்யாயன் 

தமிழில் : ஏ.ஜி.எத்திராஜுலு 


வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 

விலை : 130


மனிதன் பயணத்தால் தான் இன்று இத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள்ளான் என்பதை நமது வரலாற்றை திரும்பிப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். கற்காலம் என்பது மாறி நாகரிகம் உருவானது மனிதர்கள் பயணித்ததால் தான். டார்வின் பயணம் தான் உயிரியல் கோட்பாடுகளை உருவாக்கியது.  யுவான் சுவாங் , பாஹியான் பயணக் குறிப்புகள் இன்றும் வரலாற்றில் பேசப்படும் முக்கிய ஆவணங்கள். பயணம் செய்ய விரும்பாதவர் யாராவது இருப்பாரா எனத் தெரியவில்லை .


இந்தியப் பயண உலகின் தந்தை எனப் போற்றப்படும் ராகுல்ஜி தன் பயண அனுபவங்களால் எதிர்கொண்ட சவால்களையும் கண்டடைந்த சாதனைகளையும் வெவ்வேறு ரசனைகளுடன் கலாபூர்வமாகவும் ஆச்சரியங்களோடும் அதிசயங்களோடும்  அதே சமயத்தில் மிக மிக எளிமையாகவும் காட்சிப் படுத்துகிறது இந்நூல். 


உலகத்திலுள்ள தலைசிறந்த பொருள் ஊர் சுற்றுவது தான் என்பது தனது தாழ்மையான கருத்தாகும் என அறிவித்துக் கொண்ட ராகுல்ஜி பல உலக நாடுகளுக்கும் பயணித்த தனது அனுபவச் செழுமையால் எழுதியுள்ள இந்நூல் , புதிதாக ஊர் சுற்றப் புறப்படுவர்களுக்கான மிகச்சிறந்த வழிகாட்டும் கையேடாகும் .


பயணத்தின் வழியே பலவற்றையும் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறர் கல்வி , தன்னிறைவு குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் புரிந்து கொள்ள முடிகிறது. சிற்பமும் கலையும் ரசனை ,பழங்குடிகள் பற்றிய அறிவும் சில கட்டுரைகளின் வழியே பெற முடிகிறது. காதலையும் மரணத்தையும் அழகாகப் புரிய வைக்கும் பயணங்கள் , பெண் ஊர் சுற்றிகள் , மதத்திற்கும் ஊர் சுற்று தலுக்கு மான தொடர்பு , சாதாரண பட்டறிவு , நாட்டறிவு இப்படி நிறைய விஷயங்கள் நம்மை படிக்கப் படிக்க தேர்ந்த ஊர் சுற்றிகளாக மாற்றும் வல்லமை கொண்ட புத்தகம் இது. 


பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் 150 அல்லது 200 பயண நூல்களைப் படித்து விட வேண்டும் என்கிறார் ராகுல்ஜி . செல்வந்தர்களானவர் ஊர் சுற்றிகளாக விரும்பினால் முதலில் செல்வத்துடனான தொடர்பை அறுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். ஒவ்வொரு ஊர் சுற்றிக்கும்  முதலுதவி சிகிச்சைத் தெரிந்திருக்க வேண்டும் என தெளிவாக விளக்குகிறார். கோரக்பூரில் 1939 இல் இடையர் நடனம் பார்த்தது Uற்றி பதிவு செய்கிறார். கிழக்கு திபேத்தில் கம் பிரதேசத்திற்குச் சென்றது அங்கு வாழும் மக்களைப் பற்றி , பழக்க வழக்கங்கள் குறித்து , நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து பதிவு செய்கிறார். மங்கோலியா குறித்து ஒரு சம்பவத்தைப் பதிவு செய்கிறார்  .

No comments:

Post a Comment