Wednesday, 17 March 2021

பெண் கல்வி என்பது ...

பெண் கல்வி 

.

ஆண்களும் கல்வியும் என்று இதுவரை நாம் எங்கும் படித்தோ பார்த்திருக்கவோ  மாட்டோம். ஆனால் பெண்களும் கல்வியும் என்றும் , பெண் கல்வி என்றும் நாம் கல்வியை பெண்களோடு தொடர்பு படுத்தும் தலைப்புகளைப் பார்த்திருப்போம். அவை தொடர்பான செய்திகளை வாசித்திருப்போம் .இவையெல்லாம் ஏன் என சிந்திக்கும் போது தான் புரியும் இவற்றின் மறுபக்கம் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த, பெண்களுக்கான கல்வி மாறுக்கப்பட்டிருந்தது என்ற மிக முக்கியமான  செய்தி. இவற்றைக் காட்டிலும் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும்  அநீதிகளின்  வரலாறும்   தொடர்கிறது . இவற்றுக்கும் பெண்களின் கல்விக்கும் தொடர்பு இருக்கிறதா என்றால் ஆம் இருக்கிறது. பெண்கள் கல்வி பெற்று வளர்ந்த ஒவ்வொரு நிலையும் அவர்களது சமூகக் கொடுமைகளின் சிறைக் கதவுகளைத் தகர்த்து எறியும் ஆயுதங்களாக மாறத் தொடங்கின .


இந்தியக் கல்வியின் வரலாற்றில்  பெண்களின் நிலை குறித்து பின்னோக்கிப் பார்த்தால் வெகுதூரம் பயணிக்கத் தேவையில்லை. 18 ஆம் நூற்றாண்டு வரை சென்றாலே போதும் .உடன்கட்டை ஏறிய விதவைகள் , இளம் வயதிலேமே விதவையாகி விபச்சாரத்தில் விலை போன குடும்ப பெண் குழந்தைகள் , பலதார திருமணம் , குழந்தைத் திருமணம் , கொடிய சதிச் சட்டங்களில்  பெண்களுக்கான அநீதிகள் ,  பெண்களின் மீது மதங்களின் காட்டு தர்பார் என நம்மை நடுங்க வைக்கும் இந்திய  சமூக அவலங்களிலிருந்து பெண்களை விடுதலை செய்ய வைத்த வலிமையான ஆயுதம் பெண்களுக்கான கல்வி என்பதே .குருகுலக் கல்வியாகட்டும் , இஸ்லாமிய மதரஸாக்களின்  கல்வியாகட்டும் அங்கே பெண்களுக்கு துளியும் இடமில்லை. ஆனால் இன்றைய சமூகத்தில் பெண் கல்வி குறித்து கணிசமான வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் அதற்கான ஏராளமான சமூகப் போராளிகள் ரத்தம் சிந்திய வரலாறுகளும் நமக்குண்டு. 


பெண்கல்வியின் வரலாற்றுக்கு தரவுகளைத் தேடினால் , ஆங்கிலேயர்களின் கல்வி நமது இந்தியாவில் தொடங்கிய 1813 க்குப் பிறகு , 1822 இல் சர் தாமஸ்மன்றோ கல்வி குறித்த கணக்கெடுப்பை நிகழ்த்தி இருக்கிறார் .12 ,498 பள்ளிக்கூடங்கள் அன்று பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் இருந்தன .அதே போல 1829 இல் பாம்பே மாகாண கவர்னர் மவன்ஸ்டார்ட் எல்ஃபின்ஸ்டோன் , 1831 இல் பாதிரியார் வில்லியம் ஆடம்ஸ் ஆகியோரும் கல்வி குறித்த கணக்கெ டுப்பை நடத்தியுள்ளனர் . வங்காளம் , பீகார் , மதராஸ் ஆகிய மாகாணங்களை சேர்த்து பெண்டிங் பிரபு 1835 இல் நடத்திய புள்ளி விபரச் சேகரிப்பு என மேற்கண்ட எந்தக் கணக்கெடுப்பிலும் ஒரு பெண் குழந்தை கூட பள்ளிக்குச் சென்றதாக இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும் .இவற்றையெல்லாம் தூள் தூளாக்கி முதன் முதலில் தான் கல்வி கற்றதோடு பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கியவர் சாவித்ரி பாய் பூலே . இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர் என்பதை நாம் நினைவு கூரலாம் .மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் , 1848 இல் பூனாவிற்கு அருகில் பைத்வாடா என்ற இடத்தில் தனது கணவர் ஜோதிராவ் பூலேவுடன் இணைந்து ,பெண் குழந்தைகளுக்கான பள்ளியைத் துவங்கியவர் சாவித்திரி பாய் பூலே. அதிகாலையிலேயே அப்பள்ளிக்கு நடந்து செல்லும் போது இவரின் மீது  சேற்றையும் மலத்தையும் வீசியடித்த வர்களைக் கடந்து தான் , கல்வி கற்றதோடு பெண் குழந்தைகளுக்கும் கல்வி புகட்டியுள்ளார். பெண்கள் கல்வி கற்பதை ஏற்றுக் கொள்ள இயலாமல் தானே அவரை மலத்தால் அடித்த அராஜகம் எல்லாம் நடந்துள்ளது ,எனில் இன்றைய பெண் கல்வியின் வளர்ச்சிக்கு வித்திட்டவருள்  மிக முக்கியமான போராளியாக இவரைக் கருதலாமல்லவா ? நான் ஒரு பெண்ணாக இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன் , நீங்கள் ஒரு பெண்ணாக இக்கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நாம் அனைவரும் சாவித்ரி பாய் பூலேவிற்குக் கடமைப்பட்டவர்கள் எனலாம் .


அதே போல 1800 களின் இறுதியில் 

பரோடா சமஸ்தானத்தின்  அரசராக இருந்த சாயாஜி ராவ் கெய்க்வாட் தனது மனைவிக்கு கல்வி கொடுத்து பெண் கல்வியை தனது இல்லத்திலிருந்தே தொடங்கி சமூகத்தில் பெண் கல்வியை மலரச் செய்துள்ளார் என்பது கூட பெண் கல்வியின் வரலாற்று வரிகளே .


இன்றென்னவோ பெண்கள் எல்லாத் துறைகளிலும் கால் பதித்து வருவதாகப் பெருமை கொள்கிறோம. ஆனால் இந்த இடம் பெண்களாகிய நமக்கு எளிதில் வந்து விடவில்லை என்பது தான் திரும்பத் திரும்ப சொல்வப்படும்  உண்மை வரலாறு .


அவரவர் வீடுகளிலேயே இதற்கான தரவுகள் உண்டு. நாம் படித்து பட்டம் பெற்று வேலையில் இருக்கலாம். நமது அம்மா , அவர்களது அம்மா என ஒரு நான்கு தலைமுறை முன்னோக்கிச் சென்றால் கல்வி பெறாத,  பள்ளியே செல்லாத,  பெண்களின் வரலாறு ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் எழுதப்பட்டிருக்கும். 


இந்த நிலை மாறி இன்று நமது இந்தியாவின் பெண் கல்வி சதவீதம் உயர்ந்து  உலகளவிலான சராசரி சதவீதமான 62 சதவீதத்தை விடக் கூடுதலான அளவில் வந்துள்ளதிற்குக் காரணம் பண்டித ரமாபாய் சரஸ்வதி எனலாம். 1882 இல்  , இந்தியா வந்திருந்த கல்விக் குழுவான ஹண்டர் கமிஷன் முன்னால் ஆஜராகி பெண் கல்வி குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தனது ஒன்றரை மணி நேர அற்புத உரையை நிகழ்த்தியிருக்கிறார்., பண்டித ரமாபாய். ஆனால்  இவர் அந்தக் கூட்டத்திற்குச் சென்று பேசினால் உயிரோடு எரித்துக் கொல்வதாக மிரட்டப்பட்டதெல்லாம் எப்படிப்பட்ட  பயங்கரமான தருணங்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும் .குழந்தைத் திருமணங்களால் 10 வயதுக்கு முன்பே விதவையாகிவிட்ட  பெண் குழந்தைகளுக்குப் பள்ளி தொடங்கியவரும் இவரே.ரிப்பன் பிரபுவின் கல்விக் கமிஷன் முன்பு சென்று , பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சி வழங்க வேண்டும் , பெண்கள் மருத்துவம் கற்க அனுமதி வேண்டும் என்று போராடிப் பெற்றவர் இவர். அதன் மூலம் மருத்துவராகி இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷி , இவரது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ரமாபாய் அமெரிக்கா அழைக்கப்பட்டிருந்தார். பெண்கல்விக்காக  இன்னும் ஏராளமான பணிகளை இவர் முன்னெடுத்துள்ளார்  .


அதே போல இன்றைய இந்தியப் பள்ளி ஆசிரியர்களில் 60% பெண்கள் என ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. ஆனால் இதற்காகவும் கடுமையான போராட்டம் நிகழ்ந்துள்ளது. நமது நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் பெண்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையை மாற்றி கடும் போராட்டத்தின் இடையே ஆசிரியர் பயிற்சியில் பெண்களையும் இணைத்தவர்தான் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேஷவ் கார்வே. பெண்களுக்கு கல்வி ; பெண்களே ஆசிரியர் எனும் முழக்கத்தை முன்வைத்து பயிற்சிப் பள்ளியையும் அமைத்தவர் இவர். இந்தியாவின் பெண்கள் கல்வி பெற தனி நிதி வேண்டி 12 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளார். அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் 1929இல் இவரை நேரில் சந்தித்து இந்தியப் பெண்ககுக் கான முதல் பல்கலைக் கழகத்திற்கு 400 டாலர்களை  தனது நோபல் பரிசு நிதியிலிருந்து வழங்கியதை இங்குக் குறிப்பிட வேண்டும் .


மற்றொரு மராத்திய வீராங்கனை ரமாபாய் ராணடே பெண் கல்வியின் ஜான்சி ராணி என அழைக்கப்படுகிறார். ஆம் , பெண்களை மீனவப் பெண் , தோட்டிச்சி, வேடுவப் பெண் , இடைச்சிப் பெண் இப்படி அழைத்தவர்களை இவர் ஆசிரியை , வங்கி அதிகாரி , டாக்டரம்மா என்று அழைக்க மாற்றிய பெருமை ரமாபாய் ராணடேவையே சாரும்.

பெண்களின் கல்வி வேலை வாய்ப்பில் இடம் எனப் போராடியவர் இவரே .இந்தியப் பெண்கள் கல்விக் கழகம் எனும் தனி அமைப்பை உருவாக்கி 1893 இலேயே ஊர் ஊராகச் சென்று கல்வி கற்க விரும்பும் பெண்கள் பற்றிய கணக்கெடுப்பைத் துவக்கியவர் இவர். ஏராளமான முன்னெடுப்புகளை பெண் கல்விக்காக செய்தவர் ரமாபாய் .


இப்படி ஏராளமான கல்விப் போராளிகளின் வாழ்க்கையில் தான் இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் பெண் கல்வியின் வளர்ச்சி தலைநிமிர்ந்து அரியாசனத்தில் அமர்ந்துள்ளது என்றால் மிகையாகாது. இன்றும் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படும் சூழல் பல குடும்பங்களில் காணப்படுகிறது. அதே போல பெண் கல்வியின் முக்கியத்துவமும் ஒரு புறம் வலுவாக முன்னெடுக்கப்படுகிறது. 


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் வரிகள் நடைமுறைக்கு வந்து சில காலம் ஆகிவிட்டது நமக்கெல்லாம் பெருமையே ..




வாசிப்பு –காந்தி ஓர் இதழியலாளர்

காந்தி ஓர் இதழியலாளர் 


வெளியீடு : காந்தி நினைவு அருங்காட்சியகம் , மதுரை 

விலை : ரூ 50

பக்கங்கள் : 72

பதிப்பு : முதல் பதிப்பு : 2015 

ஆசிரியர் : ப.திருமலை 


ஆசிரியர் குறிப்பு : 40 ஆண்டுகளாக தினமலர் , தினமணி , குமுதம் , புதிய தரிசனம் ஆகிய இதழ்களில் பணியாற்றிய நாடறிந்த இதழியலாளர் .தற்போது நமது இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். சமூக, பொருளாதார , அரசியல் , சுற்றுச்சூழல் தொடர்பாக ஏராளமான கட்டுரைகள் எழுதி வருவதுடன் ,கொத்தடிமைகள் , காந்தி தேசம் , புதிய தேசம் , கச்சத் தீவைத் திரும்பப் பெற முடியும் , மனித நேயத்துக்கு நூறு வயது, கொரோனா உலகம் , மண்மூடிப் போகும் மாண்புகள் , இப்படிக்கு இவள் .. போன்ற பல பயனுள்ள நூல்களை எழுதியுள்ளார்  .இவரது தனித்துவம் என்பது நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிச் சிந்திப்பது , துணிச்சலாக அவை பற்றி எழுதுவது , தீர்வு காண முயல்வது , சொல்லுகின்ற கருத்தைத் தெளிவாக துணிவாகப் பதிவு செய்வது ஆகியன என புத்தகம் குறிப்பிடுகிறது. 


நூல் குறித்து …


'தமிழ்நாட்டில் காந்தி ' நூலின் மூலம் புகழ் பெற்ற திரு அ.இராமசாமியின் பெயரில்  மதுரை காந்தி மியூசியத்தில்

  அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தியுள்ளனர். ஆண்டுதோறும் காந்தி குறித்த  சொற்பொழிவு நிகழ்கிறது .அங்கு சொற்பொழிவாற்ற இந்த நூலின் ஆசிரியர் ப.திருமலை அழைக்கப்பட்டு , அந்த சொற்பொழிவின் தொகுப்பே காந்தி ஒரு இதழியலாளர் என்ற நூலாக மாறியிருக்கிறது .


காந்தி ஓர் இதழியலாளர் …


             காந்தியைப்  பொதுவாக சுதந்திரத்தின் வரலாற்றுடன் மட்டுமே நினைவு படுத்திப் பார்க்கும் நமக்கு அவரது இதழியல் துறை சார்ந்த பரந்த அனுபவம் பிரமிப்பைத் தருகிறது. இன்றைக்கு சமூகம் எதிர்கொள்ளும் அனைத்துச் சிக்கல்கள் பற்றியும் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே பேசியுள்ளர் ,விவாதித்துள்ளார்,திறந்த மனத்துடன் தீர்க்கமான முடிவுகளுடன் பிரச்சினைகளை அணுகியிருக்கார் என்பதை இந்த நூல் நமக்கு விவரிக்கிறது. மக்கள் நலம் மட்டுமே அவர் மனதில் நிறைந்திருந்தது என்பதும் புரிகிறது. இவற்றிற்கெல்லாம் காரணம்  காந்தியடிகள் பத்திரிகைகளில் அவர் பதிவு செய்திருந்ததாலேயே நமக்கு சாத்தியமாயிற்று. 


சுமார் 25 க்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோள் நூல்களைக் காட்டி காந்தியின் இதழியல் பயணத்தை  ஒரு ஆய்வு நூலாக இதை நமக்கு அளித்துள்ளார் ஆசிரியர் திருமலை . 


இந்த நூலை வாசிக்க வாசிக்க , இதனுடன் இன்றைய கால இதழ்கள் , ஊடகங்களை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை நம்மால் . முழுக்க முழுக்க மக்களின் நலன் சார்ந்து இயங்கும் இதழ்கள் இன்றுள்ளனவா என்பது நமக்கு கேள்வியாகவே உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரா காந்திஜி இயங்கும் முன்பே ஏறக்குறைய 20 ஆண்டுகள் இதழியல் துறை அனுபவம் பெற்றவராக இருக்கிறார் என்பதை நூலாசிரியர் மிகவும் தெளிவுபடுத்தியுள்ளார். 


இதழியல் மீதான விருப்பத்தின் காரணமாக காந்திஜி இதழியாளர் ஆனார் என நம்மால் சொல்ல இயலாது .ஏனெனில் 1925 ஜூலை 2 இல் யங் இந்தியாவில் காந்தி கீழ் வருமாறு  குறிப்பிட்டுள்ளார். " பத்திரிகைத் தொழிலின் மீதான விருப்பத்தின் காரணமாக நான் அதில் ஈடுபடவில்லை , வாழ்க்கையில் நான் கொண்டுள்ள லட்சியத்திற்கு உதவியாக இருப்பதற்காக மாத்திரமே இந்தத் தொழிலில் நான் ஈடுபட்டிருக்கிறேன் , என் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்ட குறிக்கோளைப்  பரப்பும் ஒரு கருவியாக மட்டும் இதனை எடுத்துக் கொண்டேன் " - காந்தி. 


இந்தியன் ஒப்பீனியன் , யங் இந்தியா ,ஹரிஜன் என மூன்று ஆங்கில வார இதழ்களின் ஆசிரியராக காந்தியின் அனுபவத்தை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு மொழி பெயர்ப்பாளராக , வெளியீட்டாளராக , தொகுப்பாளராக , ஆசிரியராக என இவரது இதழியல் பயணம் மிக மிக வலிமையான அரணாக , பக்கபலமாக சுதந்திரப் போராட்ட திட்டமிடல்களுக்கு விதையாக இருந்ததை நம்மால் உணர முடிகிறது. மக்களாட்சியைப் பணி செய்ய வைப்பதற்கு தேவைப்படுவது உண்மைகளைப் பற்றிய அறிவல்ல , சரியான கல்வியே. இதழியலின் உண்மையான பணி மக்கள் மனதிற்குக் கல்வியளிப்பதே , என்கிறார் காந்தியடிகள் . எவ்வளவு உண்மையான வாசகங்கள் இவை. யங் இந்தியா உள்ளிட்ட பல இதழ்களில் எழுதியதன் மறுபக்கம் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார் என்பதையும் நாம் அறிய முடிகிறது .ஏராளமான தகவல்களைத் தருவதோடு காத்திஜியின் இதழியல் துறை குறித்த ஒரு தெளிவான பார்வையை நமக்குக் காட்டுகிறது புத்தகம் . காந்திஜியின் இரும்பு போன்ற மன வலிமையையும் நுண் அறிவுத் திறன் , செயலூக்கம் , மனோதிடம் , சமூகப் பிரச்சனைகளை மக்களிடம் பரப்பிய வழிமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு சமூகப் போராளிக்கும் அவசியமான வழிகாட்டல்கள் என்றால் மிகையாகாது.


கடந்த வாரம் புதன் கிழமையன்று  இப்புத்தக அறிமுகத்தை Wednesday Book Review முகநூல் தளத்தில் அறிந்து கொண்டேன் .அதோடு இந்நூலாசிரியர் திருமலை அவர்கள் நடத்தி வரும் நமது மண் வாசம் இதழில் கடந்த இரு வருடங்களாக எனது கட்டுரைகளை பிரசுரிக்கிறார். ஆகவே இப்புத்தகம் குறித்து அவரைத் தொடர்பு கொண்ட உடன் அனுப்பி வைத்தார். வாசிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் என்று கூறலாம் .



வாசிப்பு –என் ஆடையென்பது யாருடைய குருதி ?

என் ஆடையென்பது யாருடைய குருதி ?


ஆசிரியர் : சிவகுருநாதன் 

வெளியீடு : தன்னறம் நூல் வெளி ,குக்கூ காட்டுப்பள்ளி .r

முதல் பதிப்பு : 2021

விலை : ரூ 40

பக்கங்கள்: 56


எல்லாம் எந்திரமயமாகிப் போய் விட்ட காலத்தில் காந்தியத்தை மீட்டு எடுக்கும் பணியாக ராட்டையில் நூலிழையை செலுத்தி நெசவு செய்யும் அற்புதமான உடலுழைப்புப் பணியை வெற்றிகரமாக நடத்தி நூற்பு என்ற பெயரை நம் எல்லோருடைய மனதிலும் நிலைக்கச் செய்யும் வளர்ந்து வரும்  இளம் தொழிலதிபர் தான் இந்த நூலின் ஆசிரியர் . ஈரோடு என்றாலே துணி உருவாக்கத்திற்குப் பெயர் போனது. அங்கு சென்னிமலை என்ற ஊரில்  கைத்தறி நெசவு நூற்புப் பட்டறையை நிறுவியுள்ள சிவகுருநாதன் அங்குள்ள மக்களின் இன்றைய வாழ்வை அடிப்படையாக வைத்து இந்நூலை நமக்காக உருவாக்கியது சிறப்பு. அவரது முதல் நூல் இது. 


இந்தப் புத்தகம் பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருக்கலாம். ஆனால் மனித குலத்தின் அடிப்படைத் தத்துவங்களை உள்ளடக்கி பல்வேறு கோணங்களில் வாசிப்போரின் உள்ளத்தைத் தட்டியெழுப்புகிறது.காந்தியத்தை மீட்டெடுக்கும் அனுபவங்களை உருவாக்கும் பொருளடக்கம் நிறைந்து கிடக்கிறது இந்த நூல் முழுக்க . மார்க்சியத்தையும் ஒவ்வொரு வரிகளிலும் உணர முடிகிறது.  உழைப்புச் சுரண்டல் எல்லா வகையான தொழில்களிலும் இருந்தாலும் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உடையின் தயாரிப்புகளில் நெடுங்காலமாக இருந்து வரும் உழைப்புச்  சுரண்டல் , பெண்களின் உழைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் சிக்கலான முடிச்சுகள் இவற்றைக் குறித்து மிகப் பெரிய ஆய்வுகளைத் கந்து  ஆனால் சுருக்கமான தரவுகளின் அடிப்படையில் நம் முன் பட்டியலிடும் சிவகுருநாதன் தான் வாழும் 1010 காலணி மக்களின் வாழ்வியலை அதன் இயல்பு மாறாமல் பதிவு செய்வது மனதைக் கிளறுகிறது. நானும் அடிப்படையில் நெசவு சார்ந்த குடும்பம் என்பதால் இப்புத்தகம் என்னை வெகுவாக பாதித்து விட்டது - திருப்பூரின் நெசவாலை மக்களை, ஈரோட்டின் நெசவாளர்களின் கதைகளை மனதில் நிறுத்தும் ஆய்வுக் கட்டுரைகளாக  நிரம்பிய இப்புத்தகத்தை அனைவரும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும் .




 

பூம்புகாருக்குப் போவோம்

பூம்புகாருக்கு போவோம் வாருங்கள் 

இந்த நூல் புஷ்பா அசோக்குமார் அவர்களால் எழுதப்பட்டு முதற் பதிப்பு 1987 இல் விலை 4 ரூபாயாக முகில் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு 

உள்ளது . 

 பூம்புகார் என்று சொன்னால் நமக்கு  ஒருபுறம் சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் இவர்களெல்லாம் மனதுக்குள் வந்து போவார்கள் .இன்றைய தலைமுறைக்கு பூம்புகார் என்பது , நகர வாழ் மக்கள் அனைவருக்கும் அது ஒரு பொருள் விற்கும் கடை, பூம்புகார் என்று தலைப்பிட்டு உள்ளே விலை உயர்ந்த முத்து பவளம் போன்ற ஆபரணங்களும்  பித்தளை, செம்பு போன்ற உலோகப் பொருட்கள், சிலைகள் விற்கும் கடையாகவேத் தெரியும் .பூம்புகார் என்றதும் நினைவுக்கு வர வேண்டிய சிலப்பதிகாரம் என்பது கூட இன்று மாணவர்களுக்கு வெறும் மதிப்பெண்கள் சார்ந்த வினாவாக விடையாக மாறிவிட்டது ஒருபுறம் அவலம் . 

காவிரிப் பூம்பட்டினம் , கரிகாலன் கட்டிய கல்லணை இது போன்ற தகவல்களும் அங்கு இருக்கக்கூடிய கண்ணகி சிலை இதுபோன்ற சின்ன குறிப்புகள் மட்டுமே இன்றைய தலைமுறையினர் அறிந்து வைத்திருப்பார்கள் எனக் கருதுகிறேன். 

அங்கே சுற்றுலா செல்லும் பொழுது, மன்றங்கள் இருக்கும் , சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் சிலையாக நிற்பார், பாவை மன்றம் இருக்கும் ,இலஞ்சி மன்றம் இருக்கும் நெடுங்கல் நின்ற மன்றமும் இருக்கும் காவிரி அணையும் சிலை வடிவாக இருக்கும் இதைத்தவிர அழகுக்காக சிப்பி வீடுகள் இருக்கும்.ஆனால் எதனையும் இதெல்லாம் எதற்காக அமைக்கப்பட்டது என்ற வரலாறு குறிப்பு எங்கும் இருக்காது என்று நான் கருதுகிறேன் 

ஆனால் பூம்புகார் என்பதற்கு என்ன வரலாறு என்பது சென்ற தலைமுறையினருக்கு  சிலப்பதிகாரம் வாசித்து வளர்ந்தவர்களுக்கும் நன்றாக தெரியும் .பூம்புகார் எப்படி எல்லாம் வளங்களால் நிறைந்த ஒரு அற்புத நகரமாக இருந்திருக்கிறது என்பதை வலுப்படுத்தவே இந்தச்  சிறுநூல் நமக்கு சொல்கிறது. பழைய பூம்புகாரின் இலக்கிய வரலாறுகளில் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதாக இந்த நூல் அமைந்துள்ளது. பூம்புகாரை பற்றி அறியாமல் சென்றால் அது ஒரு கேளிக்கை உல்லாசம் சுற்றுலாத்தலம் அவ்வளவுதான் ஆனால் பூம்புகாருக்கு பின்னால் உள்ள வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது

 இந்த நூல்  பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்துள்ளது .அதாவது பூம்புகாருக்கு போவோம் வாருங்கள் …..என்று ஆரம்பித்து பூம்புகார் எப்படிப் பெயர் காரணம் வந்திருக்கும் என்று வரலாற்று ரீதியாகவும் இலக்கியமும் புராணமும் எவ்வாறு விளக்குகின்றன என்ற முறையிலும்  அணுகி இருக்கிறார் ஆசிரியர்.

காவிரிப்பூம்பட்டினம் என்று எப்படி பெயர் வந்திருக்கலாம் ஒரு காலத்தில் பூம்புகார் என்றாலும் காவிரிப்பூம்பட்டினம் என்றாலும் என்று இலக்கியம் சார்ந்தும் புராணம் சார்ந்தும் வரலாறு சார்ந்தும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார் .

அங்கே அகத்திய முனிவர் வருகிறார் சிவபெருமான் வருகிறார் பூதங்கள் வருகின்றன அதற்கப்புறம் அரக்கர்கள் ,ஆறு ,அகத்தியரின் கமண்டலத்தை கீழே தள்ளிவிட்டு அதிலுள்ள நீர் ஆறாக பெருகி இப்படியான பல கதைகள்  இருக்கின்றன . விநாயகர் வருகிறார்,

முனிவர்கள் தவம் இருப்பது இதுபோல் காட்சிகள் வழியே இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள சில பதிவுகளை வைத்து பெயர்க்காரணம் வந்திருக்கலாம் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்ற தகவலை நூலாசிரியர் கூறுகிறார்.

 மணிமேகலையில் கூறும் பெயர் வரலாறு பற்றியும் குறிப்பிட்டுள்ளார் சேக்கிழார் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார் அக்னி புராணம் கூறும் பெயர் வரலாற்றின் கூறுகிறார் அங்கு மகா விஷ்ணு வருகிறார் .தவிர முனிவர், பெண், நதி இப்படி  பல தகவல்கள் வருகிறது

ஆகவே பெயர் வரலாறு குறித்த பல்வேறு அபிப்பிராயங்களை நூலாசிரியர் இங்கு பதிவு செய்கிறார்.

 ஆற்றின் முகத்தில் புகுந்து பெரிய கப்பல் என்று விளக்குகிறது புறநானூறு. புகார் என்னும் பெயரில் உண்மையாக ஆராய்ச்சி செய்தால்…. அங்கு வாழ்பவர்கள் எவரும் எந்த பொருளையும் விரும்பி பிற ஊர்களில் போக மாட்டார்கள் என்பதை மற்றவர்க்கு தெரிவிக்க புகார் என்றும் குறித்தனர் என்றும் சொல்லி இருக்கின்றனர். அதேபோல் இந்த ஊருக்குள் படையெடுக்கும் வேற்று மன்னர்கள் அஞ்சிப் ,   'புகார்' என்றும் அழகான நகரம் இது ஆகையினால் பூம்புகார் என்றும் சொல்லப்படுவதுண்டு என்றும் பலவாறு இதற்கான பெயர் காரணம் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய பூம்புகாரின் அமைப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு இருந்தது என்று சிலப்பதிகாரம் கூறும்  தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் அறுபதினாயிரம் குடிமக்கள் என்று குறிப்பிடுகின்றனர் அப்போது கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் அதுமட்டுமல்ல . பூம்புகாரில் வாழ்ந்த அத்தனை மக்களும் பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றனர்.

 அதற்காக சிலப்பதிகாரம் அழகான ஒரு பாடலைத் தருவதை இங்கு உங்களுக்காகத் தருகிறேன் . 

திருவின் செல்வியோடு   பெருநில மடந்தையை

 ஒருதனி யாண்ட செருவடு    திண்டோள்

 கரிகாற் பெரும்பெயர்த்  திருமா வளவனைப் பாலை பாடிய பரிசிலன்   றெடுத்த

மாலைத் தாகி யவளங்கெழு செல்வத்து 

ஆறைந் திரட்டியும் ஆயிரம் கொடிகளும் 

வீறுசால் ஞாலத்து வியல் அணியாகி உயர்ந்தோர் உலகில் பயந்தரு தான் மும் 

இல்லது    மிரப்பு நல்லோர் குழுவும் 

தெய்வத் தானமும் திருந்திய பூமியும் 

ஐயர் உறையுளும் அறவோர் பள்ளியும் விண்ணவர் உலகின் நண்ணிடு  நகரமொடு எண்ணுவரம் பறியா இசையொடு சிறந்த 

என்று அன்றைய பூம்புகார் பற்றி  இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல , வெளிநாட்டார் குறிப்புகளும் இதை நமக்கு உண்மையாக்குகிறது. 

கிபி முதலாம் நூற்றாண்டில் மேல் நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்த யவன ஆசிரியர் தாலமி என்பவரும் , மேல் நாட்டு வரலாற்று ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட பெரிப்ளூஸ் என்ற நூலிலும் பூம்புகாரின் வளமை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு விரிந்து கிடக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றனர்.

பூம்புகாரை ஆண்ட புகழ்வாய்ந்த மன்னன் பற்றி கூறும் பொழுது நமக்கு கரிகால் பெருவளத்தான் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. கரிகாலன் பெருமையை பல்வேறுபட்ட இலக்கிய நூல்களும் புகழ்ந்து பேசுவதையும் இங்கு  குறிப்பிட்டுள்ளனர் .சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கரிகாலன் குறித்து நிறைய சிறப்புகளை கூறியுள்ளார் .

நாம் இங்கு கவனிக்கவேண்டியது அந்த மன்னன் தன்னுடைய ஆட்சியில் நாடு என்றென்றும் பஞ்சத்தினால் பரிதவிக்க கூடாது என்ற விரிந்த நோக்கும் தொலைநோக்குப் பார்வையும்  இருந்ததனால் என்னவெல்லாம் செய்தார், என்று குறிப்புகள் உள்ளன.

 இந்த மன்னனின் ஆட்சியை நாம் படிக்கும் பொழுது இன்றைய நமது சமூகத்தின் அரசியல் நமது நாட்டின் ஆட்சி இவையெல்லாம் நம் கண்முன்னே வந்து போகின்றன அதுவும் குறிப்பாக இன்று இந்த வைரஸ் தொற்றால் நாம் அனைவரும் அவதியுற்று வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதற்கு இன்றைய சூழலையும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழகத்தில் பூம்புகார் என்ற பகுதியில் ஒரு மன்னன் எந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளையும்   பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்களுக்காக எடுத்துள்ளான் என்பதையும் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது.

 கரிகாலன் பொருட்டு பல பெருமையான விஷயங்கள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.  கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் குறிப்பிட்டுள்ள பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஜெயங்கொண்டார் தம்முடைய கலிங்கத்துப்பரணியில் கரிகாலன் பற்றித் தந்துள்ள  குறிப்புகளும் , ஒட்டக்கூத்தர் பிள்ளைத்தமிழில் கரிகால்வளவன் கொடைச் சிறப்பை எவ்வாறு பாராட்டியுள்ளார் என்பதற்கான தரவுகள் அனைத்தும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பட்டினப்பாக்கம் என்பது என்ன என்பதற்காகவே ஒரு தலைப்பில் சில பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .அந்த பட்டினபாக்கம்  பிரம்மாண்டமான ஒரு நகரமாக இருந்திருக்கிறது .இங்கு அமைச்சர்களுக்கான வீடுகள், படைத்தலைவர்க்கான மாளிகைகள், அரசாங்கத்தை பணிபுரிபவருக்கான  இருப்பிடங்கள் ,பெரிய வர்த்தக துறையில் அங்கம் வகித்தவர்களுக்கு வீடுகள் உழவுத் தொழிலை வளப்படுத்தும் வேளாளர் பெருமக்கள் இல்லங்கள் , அரண்மனை, அரண்மனையைச் சூழ்ந்துள்ள ராஜபாட்டை, அங்கங்கே ஆலயங்கள், பரந்தாமன் கோவில், சூரபதுமனுக்கான  தனிக்கோயில், ஈஸ்வரன் கோவில் இப்படி பலவகையான கட்டமைப்புக்கள் உடன் பெற்ற நகரமாக பட்டினப்பாக்கம் இருந்திருப்பதை சிலப்பதிகாரம் அழகான பாடல் வழியே வெளிப்படுத்துகிறது .

 பூம்புகார் நகரம்  இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது ஒன்று பட்டினபாக்கம் மற்றொன்று மருவூர்ப்பாக்கம்.  ஏற்கனவே கூறிய நகரமைப்பு பட்டினப்பாக்கத்தில் உள்ளதோடு மறுபக்கத்தில் கடலில் சென்று மீன் பிடிக்கும் பரதவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் மற்றவர்கள் கலந்துரையாட தக்க வகையில் கடற்கரையை ஒட்டிய கிழக்கு பகுதி மருவூர்ப்பாக்கம் என்று அழகாக பிரித்துள்ளனர்.

நாளங்காடி என்பது பற்றி அழகாக விளக்கம் கொடுத்துள்ளனர்.இதை பற்றியும் அழகாக விளக்குகிறது சிலப்பதிகாரம் . பட்டின பாக்கத்திலும் மருவூர்ப் பாக்கத்திலும் வாழ்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டும் பொருட்களை  வாங்கிக்கொள்ளும் பொருட்டு பகல் நேரத்தில் செயல்படக்கூடிய கடைகள் இருந்திருக்கின்றன .அவற்றிற்குப் பெயர்தான் நாளங்காடிகள் என்று அழகாகக் கூறியிருக்கின்றனர் .

ஒவ்வொன்றிற்கும் பொருள்பட இந்த நூலில் விளக்கம் கொடுத்துள்ளனர் பூம்புகாரில் ஐந்து வனங்கள் இருப்பதாகவும் அவை ஒவ்வொன்றும் எதற்காக பயன்பட்டன என்ற குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் வாசிக்கும் பொழுது சற்று பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது. இங்கு  குறிப்பிடப்பட்டவை பெரும்பாலும் உண்மையை தகவல்களாகவே இருக்குமென நம்புகிறேன் .

சற்றே.. கூடக் குறைய இருந்தாலும் இவ்வளவு வளம் பொருந்திய  நாட்டை கொண்ட பகுதி எல்லாம் அந்த காலத்தில் இருந்திருக்கிறது என்பது வியப்பே .

 பூம்புகார் ஐவகை மன்றங்கள் குறித்தும் ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க .வெள்ளிடை மன்றம் , இலஞ்சி மன்றம் , நெடுங்கல் நின்ற மன்றமும் , பூத சதுக்கம்,  பாவை மன்றம் என்று இன்று நம்மூர்களில் நாம் பார்க்கும் பூம்புகார் கடைகளில் இருக்கின்றன அல்லவா அந்த அமைப்பில் இருக்கக் கூடியவை தான், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களும் உள்நாட்டு வியாபாரம் செய்யக்கூடிய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடம் தான் வெள்ளிடை  மன்றம் என்று குறிப்புகள் உள்ளன ரொம்ப அழகாக இருக்கிறது ஒவ்வொரு விஷயமும்.

யாருக்குப் பயன் தருகிறதோ இல்லையோ தமிழ் குறித்தும் வரலாறு குறித்தும் ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நூல் உதவியாக இருக்கும். அதே போல நமது வரலாறுகளையும் இலக்கியங்களையும் படிப்பதற்கு ஆர்வமாக இருப்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

பல வருடங்களுக்கு முன்பு சிலப்பதிகாரம் குறித்தெல்லாம் நான் படித்ததினால் தமிழ் பாடமும் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர் பயிற்சி என்று அந்த காலகட்டங்களில் முடிந்து விட்டதனால் இந்த புத்தகத்தை நான் விரும்பித்தான் படித்தேன் ரொம்ப அழகான புத்தகம்.

உமா

யூமா வாசுகி - தன்னறம் விருது நிகழ்வு

யூமா வாசுகி - தன்னறம் விருது நிகழ்வு 


அன்றைய பொழுதின் காலை 10-12  மணி என்பது இனியொரு தடவை வேறெப்போதும் கிடைத்தற்கரிய அழகியல் நிறைந்த அற்புத தருணம் . மனதின் விருப்பம் சார்ந்த சந்திப்பாக அனைவருக்கும் இருந்ததைத் தான் சரணின் படங்கள் நமக்கு உணர்த்துகின்றன. 


யூமா வாசுகி என்ற எளிய மனிதருக்குள்  இத்தனை ஆழமான ஆளுமைத் திறன் இருப்பதை உணரவும் அதெப்போதும் அதிகாரமாக தன்னை வெளிக்காட்டிக் கொள்வதே இல்லை என்பதை நேரில் காணவும் வாய்ப்பாக அமைந்தது. 


சிவராஜ் பதிவுகளின் வழியாக மட்டுமே இவரை அறிவேன். பிறகு தூய கண்ணீரை எனது வகுப்பு குழந்தைகள் வாசித்து அனுப்பிய கருத்துகளுக்குப்  பிறகு தான் முகநூலில் யூமா வாசுகி என்ற நூலாசிரியரைத் தொடர்ந்தேன் .அவ்வப்போது சில நாளிதழ்களில்  இவரது குழந்தைகளுக்கான எழுத்துகளை வாசித்தது மட்டுமே இவரைப் பற்றி எனக்குத் தெரிந்தது .ஆனால் குருகுலக் கல்லூரியில் மிக அழகிய இயற்கை சூழலில் இவருடன் தோழி லதா , கார்த்திக் நேத்தா சிவக்குமார் ஐயா என படிகளில் அமர்ந்திருந்த போது கூட விழா இவ்வளவு பொருண்மையும் அடர்த்தியும் கொண்டிருக்கும்  என நான் நினைக்கவில்லை. ஆனால் தம்பி சிவராஜின் அடுத்தடுத்த அறிமுகப் பகிர்வுகளும் யூமா வாசுகியினுடன் அமர்ந்திருந்த மூவரும் பேசிய போது தான் புரிந்தது. ஒரு வேளை வராமல் போயிருந்தால் வரலாற்று நிகழ்வைத் தவற விட்டிருப்போம் என்று. 


ஆமாம் கார்த்திக் நேத்தா என்ற வாழும்மனிதரை உருவாக்கியதில் யூமா வாசுகி அவர்களது பங்கு குறித்து அறியும் போது , யூமா வாசுகி என்ற மனிதர்  ஒரு மிகச் சிறந்த ஆசிரியர் தோழமையாகவும்  ஒரு கோணத்தில் தாய் தந்தையின் இடத்தில் நின்று வழிகாட்டியதையும் அவரது பகிர்வு சொல்லியது. 


பேராசிரியரும் எழுத்தாளருமான ஐயா சிவகுமார் அவர்கள் பேசும் போது , யூமா வாசுகியின்  எழுத்து வாழ்வின் பரிமாணங்கள் குறித்த அற்புதமாகப் புரிதல் நிகழ்ந்தது.  


நைஜீரியாவிலிருந்து தாய் நாட்டிற்கு  திரும்பிய பிறகு தான், நிறைய வாசிக்க ஆரம்பித்தேன் என்று கூறிய எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான லதா அருணாச்சலம், தான்  ஆற்றிய உரையின் வழியே  யூமா வாசுகியினை மேலும் மனதிற்குள் நெருங்க வைத்தார்.. ஒருவரின்  எழுத்து  வாசகரைப் பண்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும். அப்படியான மாற்றத்தை யூமா வாசுகியின் எழுத்து தனது வாழ்வில் . பாதித்த சம்பவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டது இன்னும் மறக்கவில்லை. யூமாவின் எழுத்தை தரிசிக்க இவரின் பகிர்வு ஆர்வமூட்டும் செயல்பாடாக இருந்ததை உணர்கிறேன். 


யூமா வாசுகியின் ஏற்புரையில் குழந்தைகள் உலகம் , கல்வி முறையுடன் இணைந்த மாற்றம்  என ஒரு புறம் உரையாடியும் தனது எளிமையான பண்பால் மிக எளிதாக அனைவரது மனதில் பசை போல ஒட்டிக் கொண்டதும் நிகழ்ந்தது .


நிகழ்விடத்தைச் சுற்றியும் மனதின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட அன்பு மனிதர்கள் நிறைந்து நம்மை புதிய உலகத்துக்கு அழைத்துச் சென்றதும் மரங்களின் கிளைகளெல்லாம் எங்கேயோ வாழும் குழந்தைகளின் பிஞ்சு விரல்களினால் மடிக்கப்பட்டக் கொக்குகளின் தோரணமும், மேடையலங்காரமாக கட்டப்பட்டிருந்த துணியில் வரையப்பட்டிருந்த வண்ணப் பென்சில்களின் ஒவியங்களும்   ரம்மியமான சூழலை நமக்குத் தந்ததில் குக்கூ மனிதர்களின் எளிமையும் தூய்மையும் உழைப்பும் பறைசாற்றின. 


நிகழ்வில் தம்பி சிவராஜ் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களது உழைப்பையும் அனுபவத்தையும் அவரவர் அன்பையும் தனக்கே உரிய இயல்பில் கண்கலங்கி அறிமுகம் செய்யும் போது என்னையறியாமல்  என் கண்களும் கசிந்து கசிந்து மனமும் சேர்ந்து கசிந்தது . எத்தனை இளைய குழந்தைகளின் நம்பிக்கைக் கரமாக வாழுகிறான் இந்த அற்புத மனிதன் .அங்கிருந்த மொத்த மனிதர்களும் நோக்கி கரமும் மனமும் குவிக்கும் காந்தியத்தின் ஒற்றைப் புள்ளி இந்த சிவராஜ் என்றால் அதுவே உண்மை. 


விடாமல் படம் எடுக்கும் சரண் உள்ளிட்ட ஒரு நிழற்படக் குழு , அகர்மா கெளசிக்  குடும்பம் , வினோத் , குமரன் ,சிவகுருநாதன் குடும்பம் , சுயம்பு , கார்த்தி ,  பாரதி , மது மஞ்சரி, குமார் சண்முகம் , முத்து , திருமலை குடும்பம் ,ராஜாராமன் , தியாகு , பிரகாஷ் , கோகுல் ராஜ் , வினோத் , மைவிழி , மீரா , ஷில்பா ஜான் சுந்தர் , ஸ்டாலின் சரவணன் , சித்ரா மா, விஷ்ணுபுரம் சரவணன் , கவிதா டீச்சர் குடும்பம் , பாலபாரதி , கலைச்செல்வி  உட்பட இன்னும் பெயர் தெரியாத முகங்களையெல்லாம் சந்தித்ததை நினைத்து நினைத்து மகிழ்ச்சியான மனநிலையே .


 நீர் தந்த மண் பானைகள் சூழ ஒரு பக்கம் கடலை மிட்டாய் , பச்சைப் பயிறு , எள்ளுருண்டை உட்பட கருப்பட்டிக் காப்பி , இன்னொரு பக்கம் தும்பி தன்னறம் வெளியீடுகள் …. மனமெங்கும் மகிழ்ச்சி மத்தாப்பூ …




பள்ளிக்கு இயற்பியல் ஆய்வகம்

Great Day 


எல்லாம் செயல் கூடும் ….

முகநூல் வழியாக என்ன செய்யலாம் ? 

எதை வேண்டுமானாலும் செய்யலாம் ..


வாழ்வின் மிக மறக்க முடியாத  நாட்களில் ஒன்றாக அமைந்தது இந்த நாள். சர்வதேச மகளிர்  தினமான மார்ச் 8-2021 .ஆமாம் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது அன்றைய மொழி  ... கடலெல்லாம் தேடி ஓடாமல் களத்தில் பணியாற்றினால்  தேவைகள் பூர்த்தியாகும் என்பது இன்றைய மொழி 


ஆம் ... கடந்த சில மாதங்களாக எனது பள்ளிக்காக உதவிகள் தேடி வருவது குறித்து அனைவரும் அறிவீர்கள். 


மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு மகளிர் பள்ளியின் மேல் நிலை வகுப்பு அறிவியல் பாடப் பிரிவுக் குழந்தைகளுக்காக இயற்பியல் ஆய்வகப் பொருட்களின்  உதவி சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் இன்று பள்ளியில் நிர்மாணிக்கப்பட்டது. 


கற்கை நன்றே கற்கை நன்றே …

 பிச்சை புகினும் கற்கை நன்றே ….அல்லவா .ஆமாம் எங்கெல்லாம் இரந்து எனது பள்ளிக் குழந்தைகளுக்காக கல்வி உதவி கேட்க முடியுமோ அங்கெல்லாம் கையேந்தி வருகிறேன். 


அதன் ஒரு மிக நல்ல  விளைவு தான் இன்றைய இயற்பியல் ஆய்வகம். சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர்  வாசுகி கல்வி அறக்கட்டளையின் சார்பில் அதன் பொறுப்பாளர்களால் இன்று வழங்கப்பட்டது. 


ஓய்வு பெற்ற ONGC நிறுவன ஊழியரான திரு வாசு ஐயா அவர்களும் , சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான திரு தியாகராஜன் அவர்களும் தன்னார்வ  கல்வி செயல்பாட்டாளரான திருமதி மகேஸ்வரி அவர்களும் இன்று மாலை பள்ளிக்கு வருகை புரிந்து எமது மாணவியருக்கு அறக்கட்டளை சார்பாக இப்பரிசினை கல்விக் கொடையாக வழங்கியது மறக்க இயலாத தருணம். 


இனி வரும் காலங்களில் பல தலைமுறைக் குழந்தைகளின் கல்வி கற்றலுக்கு இவ்வுதவி பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 


திருவள்ளுவர் – வாசுகி கல்வி அறக்கட்டளை குறித்தான பணிகளைப் பற்றியும் , தற்போது குறிப்பிட்ட நமது பள்ளியை வந்து சேர்ந்து உதவிய அனுபவம் குறித்தும் மகிழ்வும் உற்சாகமுமாக நம்முடன் உரையாற்றிய வாசு ஐயாவை வணங்குகிறேன். 

ஏகலைவன் திறமை குறித்தும் அர்ஜுனனின் குறி பார்க்கும் தன்மையைப் பற்றியும் மாணவர்களுடன் உரை நிகழ்த்தினார் வழக்கறிஞர் தியாகராஜன் .அவருக்கும் எனது அன்பு வணக்கம் . கேரியர் கைடன்ஸ் பற்றியும் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் திறன் குறித்தும் நேர்மறையாகப் பேசிய தோழிமகேஸ்வரி அவர்கள் சிறப்பாக இயங்கி வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்தும் பகிர்ந்தது சிறப்பு. அவருக்கு எனது பேரன்பு. 


எமது பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவி , உதவித் தலைமை ஆசிரியர் வரை நன்றி பாராட்டிட விழா மகிழ்வுடன் முடிந்தது. 

புத்தகத் திருவிழா - 2021

YMCA புத்தகத் திருவிழாவில் …


தமிழர் தேசியக் கண்ணோட்டம் அரங்கு எண் 83 , Thumbi அரங்கு எண் 22 , கோதைப் பதிப்பகம் அரங்கு எண் 161 , ஆகிய 3 அரங்குகளிலும் –கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி என்ற எனது புத்தகங்கள்  வைக்கப்பட்டிருந்தன. மூன்று அரங்குகளிலும் தேடி வந்து நண்பர்கள் , ஆர்வலர்கள் வாங்கிச் சென்றதாகப் பதிவு செய்தனர். மிக்க மகிழ்ச்சி , அனைவருக்கும் பேரன்பு ♥️♥️♥️


இந்து தமிழ் நாளிதழில் திசைகாட்டி பகுதியில் இப்புத்தக அறிமுகம் வந்ததை சுட்டிக் காட்டி பலரும் வாங்கிச் சென்றதாக அரங்குகளில் கூறியது மகிழ்ச்சி. இந்து தமிழ் நாளிதழுக்கு நன்றி .


வெளியூர்களிலிருந்து தொடர்ந்து பதிப்பகத்திற்கு அழைப்புகள் வருவதும் அவர்கள் அனுப்பிய விவரங்களும் குறித்து அப்டேட் செய்கிறார் பன்மை வெளி பதிப்பகத்தார் .அவர்களுக்கும்  எனது அன்பு. 


இலங்கையிலிருந்து இரண்டு பேராசிரியர்கள் தொடர்பு கொண்டு புத்தகத்தை வாசிக்க ஆவலாக இருப்பதைத் தெரிவித்து அவர்களுக்கு அனுப்ப தயாராக உள்ளன. ஏற்பாடுகளை கவனிப்பதாக பதிப்பகப் பொறுப்பாளர் வெற்றி கூநியுள்ளார். இலங்கை வாழ் மக்களுக்கும் பேரன்பும் 


ஈரோடு ,சென்னை , நாமக்கல் ,நாகை , கோவை .முதலான ஊர்களிலிருந்து ஆசிரிய நட்புகள் தபால் வழியே புத்தகம் பெற்ற படங்களை அனுப்பி மகிழ்கின்றனர் . அசத்தும் அரசுப் பள்ளி 

ஆசிரியர்கள் குழுவினர் பலரும் இவர்களில் அடங்குவர் .அனைவருக்கும் பேரன்பு ♥️♥️♥️.


உடுமலையிலிருந்து தமிழ்ப் பாவை அம்மா நூலைப் பெற்றுக் கொண்டேன் உமா எனக் கூறி மகிழ்ந்தார். அதே போல கரூரிலிருந்து தம்பி லெவன் போஸ் , நூலை வாங்கி , படிக்க ஆரம்பித்து விட்டதை செய்தியாக அனுப்பி இருந்தார். புத்தகத் திருவிழாவில் நண்பர் செல்வம் ராமசாமி எனது கையெழுத்துப் பெற்று புத்தகத்தை தும்பி அரங்கிலிருந்து வாங்கிக் கொண்டார். அனைத்திந்தியக் கல்விப் பாதுகாப்ப இயக்க நண்பர் யோகராஜன் , ஸ்ரீ பத்மநாபன் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பிரபு ஆகியோரும் பணம் அனுப்பி வைத்து நூலுக்காகக் காத்துக் கொண்டுள்ளனர்.  


தோழி பரமு வழியாக வெளியிட்ட அன்றே புத்தகத் திருவிழா மையத்தில் ,கவிஞர் இளம்பிறை அவர்களிடமும் நூல் அளிக்கப்பட்டது. எனது ஆசிரியர் திருமதி வள்ளியம்மை அவர்களுக்கும் புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


பள்ளித் தலைமை ஆசிரியர் , நட்புத் தலைமை ஆசிரியர்களும் நூலைப் பெற்றுக் கொண்டனர். குரோம்பேட்டை மருத்துவமனையில் பணியாற்றும் மருந்தாளுனர் தான் வாங்கியது மட்டுமின்றி , தனது நண்பர்களுக்கு பரிசு தரவும் எனது வழியே மூன்று நூல்களைப் பெற்றுக் கொண்டார். 

எனது பள்ளி ஆசிரியர்கள் சிலரும் மல்லிகா , புவனா , மலர் விழி , மீரா, விஜயலட்சுமி ஆகியோரும் பணம் செலுத்தி இப்புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர் .பயணம் நீள்கிறது. 


அனைவருக்கும் பேரன்பு .