Sunday 15 May 2022

சில நேரங்களில் சில மனிதர்கள்



ஒலி வடிவ நூல் :
 சில நேரங்களில் சில மனிதர்கள் 
ஆசிரியர் : ஜெயகாந்தன்
குரல் : சுமதி ராஜா 
நேரம் : 8 மணி 58 நிமிடம்

இந்த நாவலை அல்லது இந்த திரைப்படத்தை வாசிக்காதவர்கள் அல்லது பார்க்காதவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இருப்பார்கள் தமிழகத்தில். 

ஜெயகாந்தன் அவர்கள்  எழுதிய  தேர்ந்த கதைகள் பலவற்றுள் மிக முக்கியமான நாவல் இது. பெண்களின் மீதான கற்பு , ஒழுக்கம் , திருமண உறவு இவற்றின் மீதான சமூகத்தின் பார்வையும் , குடும்ப உறுப்பினர்களின் அணுகுமுறையும்   அதை உடைத்தெறியும் பெண்ணின் மனத் திடமும் எல்லாவற்றுக்கும் கல்வி அடிப்படையாக இருப்பதும் மிக அழகாக கோர்க்கப்பட்ட மாலையாக கவனத்தை ஈர்க்கிறது.

 கங்காவும் பிரபுவும் , மஞ்சு , ஆர்.கே , கங்காவின் அம்மா , மாமா , பத்மா இந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் செதுக்கப் பட்டு மிகச் சிறந்த படைப்பாக இருப்பதால் தான் 50 ஆண்டுகள் கடந்தும்  சில நேரங்களில் சில மனிதர்கள் நம் மனதில் நிற்கிறது.

 பல இடங்களில் வாழ்க்கையின்  தத்துவங்களும்  கதையின் போக்கில் கொடுத்துச் செல்கிறார் ஜெயகாந்தன் . இன்றைய கால கட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கங்காவின் போக்கு போல பெண்கள் சிந்திப்பதில் ஏற்பும் மறுப்பும்  மாறி மாறி ஏற்படுகிறது. ஆனால் 1970 இல் இப்படியான ஒரு நாவல் என்பது நம்மால் நினைத்து பார்க்க பிரமிக்க வைக்கிறது ,காரணம் பெண்களின் மீது கட்டி அமைக்கப்பட்ட விதிகளைக் கேள்விக்குள்ளாக்கி கங்கா வழியாக சமூகத்தின் பிணிகள் சிலவற்றை வெளிப்படையாகப் பேசி இருப்பது அட்டகாசம். 

இன்றைய குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கான பங்கு குறித்தும் மிக அழகாக அங்கங்கே வெளிப்படுகிறது. 

நாவலின் முடிவில் . பிரபுவின் மாற்றம் விரும்பத் தக்கதாக இருக்கிறது. ஆனால் 
கங்காவின் வீழ்ச்சி   நம்மை வேதனைப்படுத்துகிறது 

. ஆண்களின் வன்மத்தை , பாலியல் தொல்லை தரும் போக்கை மீ டூ விவகாரங்களை 1970களில் Uதிவு செய்கிறது நாவல். உளவியல் சார்ந்த ஒரு நாவல் இது. பெண்கள் கண்டிப்பாக வாசித்தால் பல செய்திகளைப் பெற முடியும் கங்காவின் வழியாக . மனக்கண் முன் பாத்திரங்கள் உயிருடன் உலவுவது போல் ஒரு அற்புதப் படைப்பு .

No comments:

Post a Comment