Sunday 22 May 2022

மோக முள்

22 RM258 , 11/50

நூலின் பெயர் :மோக முள்
எழுதியவர் : தி.ஜானகி ராமன் 
ஒலி : ஜிஜி , ரவிஷங்கர் , பாலாஜி
நேரம் : 21 மணி நேரம் 9 நிமிடம் 

ஆசிரியர் குறிப்பு :

தி.ஜானகிராமன் ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா. என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர். தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர் எனக் குறிப்பிடுகிறது விக்கி .பத்தாண்டு காலங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். 

நூல் பற்றிய கருத்து :

1964 இல் எழுதப்பட்டுள்ள இந்த நாவல் நம்மை அந்த காலகட்டத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறது.  மோகமுள் இந்த நாவலை ஒரு வாழ்க்கையாகவே படைத்திருக்கிறார் ,
தி ஜானகிராமன் அவர்கள் . நாவலை படிப்பதற்கு அல்லது கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாகத் தான் பெரும்பகுதி இருக்கிறது .ஒவ்வொரு குரலும்   நம்மோடு உயிரோட்டமாக உலவுகிறது .இந்த ஒலிப்புத்தகத்தில் .பாபு, யமுனா, பார்வதி ,ரங்கண்ணா, வைத்தி, ராஜன், பாபுவின் அம்மா பாபுவின் அக்கா, வெங்கட்ராமன், சங்கு, பத்மாஷினி என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மையறியாமல் நம்மோடு பயணம் செய்கின்றனர்.   

 கதை நடந்த காலம், கதைக்களம் ,கதை மாந்தர்கள் என எல்லாவற்றையும் மிகவும் அழகாக வடிவமைத்து இருக்கிறார் தி. ஜானகிராமன். கதை பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த கும்பகோணம் பாபநாசம் பகுதிகளை களங்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அங்குள்ள பேச்சு நடை, உரையாடல் வடிவம், வட்டார வழக்குச் சொல் என அனைத்தையும் நம்மால்  உணர முடிகிறது

பாபுவின் குடும்பமும் யமுனாவின் குடும்பமும் ஐம்பதாண்டு காலமாக குடும்ப நண்பர்களாக இருக்கின்றனர். பாபுவின் சிறு வயது வாழ்க்கை முதல் அவன் கல்லூரிக்கு செல்வது, தங்கிப் படிப்பது அவனுடைய பண்புநலன்கள், அவனுடைய தந்தைக்குக் கீழ்ப்படிதல் ,அவனுடைய குரு ரங்கனா பாட்டு சொல்லிக் கொடுப்பவர் அவருக்கு கீழ்ப்படிதல், அவனுக்கு உண்மையான நண்பனாக ராஜன் .இவர்களுக்கு இடையே ஏற்படக்கூடிய சம்பாஷனைகள், அவர்களது குடும்பத்திற்கு மிக நெருக்கமான யமுனாவின் குடும்பம். யமுனாவின் குடும்பத்தில்  அம்மாவும் அவளும் மட்டும்தான். அவரது தந்தை இறந்துவிடுகிறார். மராத்திய வம்சத்தில் வந்தவர்கள் இரண்டாம் திருமணமாக ராஜா காலத்திலிருந்து வந்த வழியில்  திருமணம் செய்துகொண்டது இப்படி கதை நகர்கிறது.

 அழகான அறிவான மிகவும் நிதானமான பெண்ணாக யமுனா என்ற கதாபாத்திரத்தை படைத்திருக்கின்றார் தி.ஜா . அவளுக்கான திருமணம் தள்ளிக்கொண்டே போகின்றது அவரது தந்தை ஐயராகவும் அவரது தாய் மராட்டிய மாகவும் இருப்பதனால், இரண்டாவது மனைவியாகவும் அவருக்கு பிறந்த குழந்தையாக இருப்பதனால், என நிறைய சமூகம் சார்ந்த காரணங்களால் யமுனாவிற்கான திருமணம் தொடர்ந்து தட்டிப் போகிறது. சில வரன்களை  அவளும் மறுக்கிறாள் எனக்கான கணவர் இல்லை, எனக்கு, படித்தவர் வேண்டும் என்று இப்படி நகர்கிறது .இதையெல்லாம் பார்க்கிறான்  பாபு. பாபுவிற்கும் ஜமுனாவிற்கும் 10 வருடங்களுக்கு மேல் வயது இடைவெளி.  யமுனாவின் மீது பாபுவிற்கு வெளிப்படுத்த முடியாத அன்பு அது ஒரு கட்டத்தில் காதலாக மலர்கிறது அதை அவன் வெளிப்படுத்தக்கூடிய காலகட்டத்தில் அவள் இது சரியல்ல சமூகத்தில் நீ கௌரவமாக வாழ முடியாது என்று மறுக்கிறாள். அவளது அம்மாவும் அவளும் தனியாக வசிக்கின்றனர் வாழ்க்கையை ஓட்ட அவர்களுக்கு பணம் இல்லை வருமானம் இல்லை இதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை பாபு பார்க்கிறான்.  அவ்வப்போது அவர்களுக்குதவி செய்தல்  என நாவல் நகர்கிறது .

 பாபுவின் வீட்டில் திருமணத்திற்கு அவனது தாய் அவனை வற்புறுத்துகிறாள் ஆனால் அவன் திருமணமே வேண்டாம் என்று சொல்லி விடுகின்றான் பாபுவின் அக்கா இளமையில் திருமணம் செய்து பட்டு என்று ஒரு குழந்தை பிறந்து , வளர்ந்த பிறகு அது இறந்து, எனக்  கிளைக் கதைகளும்  வளர்கின்றன.

 பாபு படித்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு,   பாட்டு கற்றுக் கொண்டு சாதகம் செய்தல்
 அதிலேயே தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறான். இடையில் தங்கம்மாள் என்றொரு பெண்,  பாபுவை விரும்பும்  சூழல் ஏற்படுகிறது அவள் இரண்டாம் தாரமாக வயதான ஒரு ஆணுக்கு மனைவியாக வந்து பக்கத்து வீட்டில் வசிப்பவள் இப்படியாக பல கிளைக் கதைகளும்  அங்கங்கே இந்த நாவலில் இடம் பெறுகின்றது.

திடீரென ஒரு ஒருநாளில் பாபு சென்னையில், தனக்கான ஒரு வேலையை   பிடித்துக் கொள்கின்றான் .அவனுடைய   சங்கீத ஞானத்தைக் குறித்து அவன் பெரிதாக நினைக்கவில்லை .ஆனால் அவனுடைய இசைஞானம் மிகவும் உயர்ந்ததாகப் படுகிறது , அவனது பாட்டுப் பாடும் திறனைப் பார்ப்போருக்கு , கேட்போருக்கு .அது பற்றிய புரிதல் இருப்போருக்கு . அவனுக்கு பாடல் கற்றுக்கொடுத்த ரங்கண்ணா, மேடை கச்சேரிகளை செய்வது இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்ன ஒரு காரணத்திற்காக மேடைகளை முற்றிலுமாக தவிர்த்து ஒரு பொதுக்காரியதரிசியாக தன்னுடைய பணியை ஏற்கிறான்.

 காலங்கள் ஓடுகின்றனர் யமுனாவும் அவளது அம்மாவும் தஞ்சை மாவட்டத்திலேயே வசித்து வருகின்றனர்.   பாபு எல்லாவற்றையும் மறந்து சென்னையில் தன்னுடைய வேலையை பார்க்கிறான் திடீரென ஒருநாள் யமுனா பாபுவின் அலுவலகத்திற்கு வந்திருப்பதாக அறிந்து விவரம் விசாரித்து அவள் மூன்று மாதமாக பட்டினியாக இருப்பதை உணர்ந்து மிகவும் வேதனை அடைந்து அவளுக்காக ஒரு வேலையை த்தேட ஆரம்பித்து ஒரு ஆசிரமத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றான் அங்கு வரக்கூடிய பத்மானி சமூக சேவையாக மிகவும் புரிதல் உள்ள ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டு இருக்கின்றார்.

 சென்னை வந்தபிறகு பாபுவிற்கு யமுனாவிற்கும் இடையே மீண்டும் அந்த அன்பின் மோகம் இருக்கின்றதா அது எவ்வாறு பயணிக்கிறது இருவருக்குமிடையே நடக்கக்கூடிய சந்திப்புகள் ஒரு கட்டத்தில் எவ்வாறு மாற்றமடைகின்றது அது எல்லோராலும் ஏற்கப்படுகின்றதா? ராஜன் என்ன ஆனான்? யமுனா தன்னை எவ்வாறு மாற்றிக் கொள்கிறாள் அல்லது தன்னை எவ்வாறு உயிர்ப்புடன் வைத்துக் கொள்கின்றாள் ? பத்மாசினிக்கும் - யமுனாவிற்கும் இடையே ஏற்படக்கூடிய உறவு, எட்டு ஆண்டுகளுக்கு ப்பிறகும் பாபுவிற்கு யமுனா மீது அதே காதல் உணர்வு இருக்கின்றதா என்பதை எல்லாம் நாம் இந்த கதையின்  பின்பகுதியில் அறிந்து கொள்ள முடிகிறது.  மிகவும் சிறப்பாக மனதைத் தொடும் அளவிற்கு எழுதப்பட்டுள்ளது இதை வாசித்த பிறகு அல்லது ஒலிப் புத்தகத்தில் கேட்ட பிறகு அந்த நாவலில் இருந்து நம்மால் மீளவே முடியவில்லை என்பதுதான் உண்மை அந்த காலகட்டத்திலேயே இப்படியான ஒரு முரண்பாடான உறவை மையமாக வைத்து ,ஆனால் அதை எவ்விதத்திலும் நெருடல் இல்லாமல் எடுத்துச் செல்கின்றார் தி.ஜானகிராமன் 

நாவலும் கதைகளும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தானே எழுதப்படுகின்றன. அதேபோலத்தான் இந்த கதையை உணரமுடிகிறது எங்கோ நடந்த ஒரு கதையின் முடிச்சை வேராகக் கொண்டு இந்த நாவல் படைக்கப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன் மிகவும் சிறப்பான நாவல் நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

 அதேபோல யமுனாவிற்கான குரலும் பாபுவிற்கான குரலும் மிகவும் நேர்த்தியாக நம் மனதை விட்டு அகலாமல் அப்படியே இறுக்கி பிடித்துக் கொள்கின்றது. வயதானவர்களாக வரக்கூடிய வர்களுக்கு வாசிக்கக்கூடிய குரல்கள் அதேபோல மிகவும் நடுக்கத்துடன் வருகின்றது. எல்லா குரல்களும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment