Sunday 22 May 2022

பனி விழும் மலர்வனம்

பனி விழும் மலர்வனம்
ஆசிரியர் : பால குமாரன்
குரல் : கீர்த்தனா
நேரம் : 2 மணி 18 நிமிடங்கள்

இரு தோழிகள் , எதிரெதிர் குடும்ப சூழலில் இருந்து வந்து ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர். புனிதா , நாகலட்சுமி இருவர் தான் அந்த கதாபாத்திரங்கள். கவிதை எழுதும் திறன் பெற்றவள் புனிதா . மென் உணர்வுடன் பெண் என்ற சமூகத்தின் கற்பிதங்களை நம்பும் , சராசரி குடும்பத்திலிருந்து வருபவள் . கிராமம் சார்ந்து வளர்ந்தவளாக வளைய வருகிறாள். நகரத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாகலட்சுமி  , பகுத்தறிவு , தைரியம் என்று தன்னை  சிந்தனையால் கட்டமைத்து எங்கும் தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்யத் தயங்காதவள். சமூகத்தின்  கற்பிதங்கள் மீது எதிர்க் கருத்து கொண்டு வீட்டிலும் வெளியிலும் அலுவலகத்திலும் சுதந்திரமாக இயங்குபவள். புனிதாவை ஒரு முறை நாகு இலக்கியக் கூட்டம் ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு ஹைக்கூ கவிதையைப் பகிர்ந்து விவாவதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகும் சந்திரமெளலியை சந்திக்கின்றனர். கவிதைகள் பற்றி பேசப் பேச கவிதை எழுதும் இருவருமான புனிதாவும் சந்திரமௌலியும் காதல் உணர்வால் இனணய ஆரம்பிக்கின்றனர்.  இந்த சூழலில்,நாகுவிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்து நிச்சயிக்கப்படுகிறது. மூவரும் ஒரு நாள் திரைப்படத்திற்கு செல்ல , திரையரங்கில் நாகுவையும் சந்திர மௌலியையும் அருகருகே பார்க்கும் நாகுவின் மாப்பிள்ளைக் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்தி விட, திருப்பங்கள் உருவாகி குழப்பங்கள் உருவாகுவதும் ,இறுதியில் நாகுவிற்கும் சந்திர மௌலிக்கும் திருமணம் நடப்பதும் அந்த சூழ்நிலைகளை சமாளிக்க இயலாமல் இருவரும் கடந்து புனிதாவிற்கு வாழ்க்கை அமைவது என கதை நகர்கிறது .  

இன்றைய கால கட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் , பெண்களின் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களில் தான் எத்தனை தடங்கல்கள் ? ஒரு நண்பனுடன் தான் திரைப்படம் சென்றேன் ,தோழியின் காதலன் அவன் என எத்தனை கூறியும் பல கட்டுப்பாடுகளை வைத்து அச்சுறுத்தி தோழியின் காதலனைத் திருமணம் செய்யப் பிடிவாதம் பிடிக்கும்  நாகுவின் அண்ணன் , இறுதியில் அவனே வெல்கிறான். ஆண்களுக்குத் தான் எத்தனை அகங்காரங்கள் ? தைரியமாக எதிர்க்கும் பெண்ணாக இருந்தாலும் , தோழியின் குடும்பத்தைக் குழப்பத்திற்கு ஆட்படுத்தி அவளது வாழ்வை சிதைத்து விடுவதாகக் கூறும் செய்யத் துணியும் காட்டு மிராண்டித் தனமான தனது அண்ணனை மீற முடியாமல் சூழ்நிலைக் கைதியாக மாறும் பெண்ணாகிப் போகிறாள் நாகு . முதல் தலைமுறை கல்வி பெற்றவளாக சமாளித்து இந்த இடத்திற்கு நகர்ந்துள்ளாள் என நாகு ஓரிடத்தில் புனிதா குறித்து பேசும் போது பெண்களின் கல்விப் பயணத்தின் வலியை உணர முடிகிறது. 

பாலகுமாரன் கதைகளில் எப்போதும் போல அலுவலக நடைமுறைகள் , ஹாஸ்யமான உரையாடல்கள் , எதார்த்த சூழ்நிலைகள் , அறிமுகமான கதாபாத்திரங்கள் என பனி விழும் மலர்வனம் இனிமையானதொரு கதையே. பெண்களுக்கான சிந்திக்க வேண்டிய உரையாடல்களும் இருக்கின்றது. 


No comments:

Post a Comment