Friday, 4 February 2022

டுஜக் டுஜக்


டுஜக்..
டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி

ஆசிரியர் : தேனி சுந்தர்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ 100
பக்கங்கள் : 112

அதென்ன தலைப்பு இப்படி இருக்கே என்று தான் யோசித்தேன் , பக்கம் 76 இல் தான் இந்த டுஜக். டுஜக் .... இருந்தது. 

ஒரு தந்தை தனது குழந்தைகளின் உரையாடல்களை , அவர்களது மொழியிலேயே பதிவு செய்த ஒரு அழகான இலக்கியம் இது. பெரியவர்கள் வாசிக்க வேண்டிய மிகச் சிறந்த குழந்தை இலக்கியமும் இது. ஏன் பெரியவர்கள் வாசிக்க வேண்டும் எனக் கூறுகிறேன் என்றால் , குழந்தைகள் குழந்தமையுடையுடன்  தங்களை உயிர்ப்பாக வைத்துக் கொண்டு  தான் வாழ்கின்றனர். ஆனால் வளர்ந்த பெரியவர்களோ தங்களிடம் இருக்கும் குழந்தமையை இழந்து அல்லது மறந்து உலக இயல்புகளுடன்  தங்கள் வாழ்க்கையைப் பொருத்திப் பார்ப்பவர்களாகி மாறி விடுகின்றனர். இறுகிப் போன வளர்ந்தவர்களின் மனதை, எண்ணங்களை ஆசுவாசப் படுத்தி மகிழ்விக்கிறது பாப்பாவின் உரையாடல்கள் . வாசிக்கும் போது நம்மை அறியாமல் குழந்தைகளாகவே மாறி விட முடிகிறது. வாய் விட்டு சிரித்து அனுபவித்து ரசித்து இந்த வரிகளில் மழலைகளின் மொழிக்குள் ஒரு உயிர்ப்பைக் கண்டடைய முடிகிறது. 

நமக்கு நன்றாகவே புரிகிறது அடுத்தடுத்த வரிகள் இப்படித்தான் வரும் என ஆனாலும் ரசித்து வாசிக்க முடிந்தது. நான் வீட்டில் இதை வாசித்து ஒவ்வொரு பதிவின் முடிவின் போது என்னையறியாமல் சிரிக்க , எனது இணையர் , என்ன தனியாக சிரிக்கறே ..அப்படி என்னத்த படிச்ச எனக் கேட்க , திரும்ப ஒவ்வொன்றையும் வாய் விட்டு பாப்பா போலவே நான் வாசித்துக் காட்ட அங்கேயும் இதே ரசா வாதம் நிகழ்ந்து முகமலர்ச்சியுடன் சிரிப்பதைக் கண்டு இறுதியில் இருவரும் சேர்ந்து சேர்ந்து சிரித்து மகிழ்ந்து கிடந்தோம் .

இதெல்லாம் 
என்னன்ன கலர்னு
பாப்பாவுக்கு
 சொல்லவே தெரியாது ..

ம்ம்..
எனக்குத் தெரியும்.

எங்க சொல்லுங்க
பாக்கலாம் .

மஞ்சள் ..
யெல்லோ ..
ஒல்லோ ..
குல்லோ ..
புல்லோ ...
தல்லோ ..

அய் ..
சூப்பரு பாப்பா .. 

இனத வாசிக்கும் போது நம்மால் ரசிக்காமல் சிரிக்காமல் இருக்க முடியுமா சொல்லுங்கள் ...

 இந்தக் கொரானா உரையாடல் பாப்பாவையும் விட்டு வைக்க வில்லை. 
அந்த தோட்டத்துக்குள்ள தான்
கொரானா ஒளிஞ்சிருக்கும் .
நம்ம வெளாடுறப்ப
அப்படியே வந்து
பைக்குன்னு 
கடிச்சு வச்சுப்புடும் ...

இதை நாம் வெறுமனே வாசித்தால் அர்த்தப்படுமா ?  அர்த்தங்களைத் தேடினால் டுஜக்.. டுஜக் சந்தோஷத்தைத் தராது. அர்த்தமற்ற பொக்கிஷம் இது. 

போப்பா லூசுப் பா ...
நானு இன்னும்
பெரிய பிள்ளயே ஆகல ...
நானு பாப்பா ....

என்கிற போது வாய்விட்டு சிரிக்காமல் இருக்க முடியுமா ?

என்னய பாருப்பா ...
எப்புடி சிந்தாம
சாப்பிடுறேன் ..

என்னய பாருப்பா ...
எப்புடி 
குளிக்குறேன்னு பாருப்பா ..

ம் ..

எப்புடி
தவ்வுறேன்னு பாருப்பா
எப்புடி
ஊஞ்சல் ஆடுறேன்னு பாருப்பா
போப்பா ...
பாக்கவே மாட்ற ....

பாக்குறேன்ல  பாப்பா
பாத்துக்கிட்டே இருக்கணும் ....

சூரியனப் புடிச்சு
என்னா பாப்பா
செய்யப் போற ...

ம்ம் ...
தொட்டியில
படுக்கப் போட்டு
தூங்க வைக்கப் போறேன் ...
ஹா ஹா ஹா .....

என்னப்பா
ரெண்டு அடுப்புல 
ரெண்டு பால்சட்டி

போப்பா ...
அந்தப் பக்கத்தான்
பழைய பாலு ...
இது புதுப் பாலு ...
நீ தப்புத் தப்பா சொல்லுற ...

ரெண்டு மலப்பாம்பு
வந்துச்சுப்பா ....

செடிக்கெல்லாம் எப்புடி
மாஸ்க் போடுவாங்கப்பா ? 

குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிறைந்தது என்பதை நாம் எல்லோருமே அறிவோம் .ஆனால் உணர்கிறோமா என்பது தான் இந்தப் புத்தகம் நமக்கு தரும் செய்தி . 

உங்கள் வீட்டிலும் எனது வீட்டிலும் நாம் இந்த மழலைகளின் உரையாடல்களைக் கடந்து தான் வந்திருப்போம். அந்தத் தருணங்களை மீட்டெடுக்கிறார் சுந்தர். அதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும். ஒவ்வொரு சொல்லும்  ஒவ்வொரு பவுனு தான் போங்க. 

அசை போட்டு அசை போட்டு சந்தோஷப்பட   டுஜக் டுஜக் ... இல் ஏராளமான குட்டிக் குட்டிக் கதைகள் இருக்கின்றன .

நீங்களும் வாசித்துப் பாருங்கள் டுஜக்  
டுஜக் .... குழந்தைகள் குறித்த ஒரு மழலை இலக்கியம் என்பது புரியும். 

இந்தப் புத்தகத்தின் கடைசி பக்கம் தான் மிகவும் கனமானது. ஆமாம் ...

நம்ம பாப்பா
ஸ்கூல்ல விட்ட பிறகும்
இதே மாரி ...
இம்புட்டு பேச்சு பேசுமாங்க ...?
அப்ப தான் தெரியும்
நம்ம பாப்பாவோட
ரியாலிட்டி ...

இல்ல இல்ல ..

அப்ப தெரியுறது
பள்ளிக்கூடங்களோட
ரியாலிட்டி ..

வரும் புத்தகத் திருவிழாவில் நிறைய பெரியவர்களைச் சென்றடைய வாழ்த்துகள்....

அன்புடன்
உமா







Friday, 5 November 2021

ஜெய் பீம் :

ஜெய் பீம் :

திரைப்படமாக நினைக்க முடியாமல் நகரும் உண்மைச் சம்பவம். பாராட்டுவதாக ஆரம்பித்தால் .... சின்னச் சின்ன பாத்திரத்தில் வரும் நடிகர்கள் முதல் திரைக்கதை , இயக்குநர் , துணை இயக்குநர்கள் இப்படி யாரையும் விட்டு விடாமல் பாராட்ட வேண்டும் . வழக்கறிஞராக தன்னைப் பொருத்திக் கொண்டு  படம் முழுவதும்  இயங்கும் சந்துரு இப்படத்தின் மிகப் பெரிய பலம் என்றால் மற்றொரு பலம் செங்கனி .  திரைப்படத்தைப் பார்த்து விட்டு எவராலும் குறைந்தது இரண்டு நாட்களாவது அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாதுதான். 

திரைக்கதையில் மிகையே இல்லாமல் உண்மைச் சம்பவங்களைக் கோர்த்து மிக அழகியலாகத் தந்திருக்கும் இயக்குநர் Gnana Vel  தா.செ. ஞானவேல் ,தனது  #அருஞ்சொல் பேட்டியில் இப்படம் உருவான வரலாற்றைக் குறித்துப் பதிவு செய்துள்ளார். மூன்று வருட உழைப்பால் உருவான இத்திரைப்படத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக. அம்மக்களுடன்  , தான் பெற்றிருந்த கள  அனுபவத்தையும் சேர்த்து தான் பார்க்கவேண்டும் என்கிறார்.  திரைப்படத்தை ஆழமாக கவனித்தால் இது நமக்கு நன்கு புலப்படும். 

காவல் நிலையத்தில் பயங்கர சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்ட ராஜாக் கண்ணுவின் கண்ணுக்குள் மிளகாய்ப் பொடித் தூவிப் பார்த்து உயிர் இருக்கிறதா ? இல்லை இறந்து விட்டாரா எனப் பார்க்கும் காவல் துறை நண்பர்களது செயல்  காட்சியாக இடம் பெற்றிருக்கும் . படம் பார்ப்பவர்கள் இது திரைப்படத்திற்கான புனைவாக இருக்கலாம் என்று எண்ணக் கூடும். ஆனால் உண்மையாகவே பத்து பைசாவுக்கு மிளகாய்ப் பொடி வாங்கி வந்து கண்ணில் விட்டுப் பார்த்த காவலர்கள் பற்றி நீதியரசர் சந்துரு தனது அருஞ்சொல் நேர்காணலில் கூறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இச்சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட  இனமான இருளர் மக்கள் , வீடு வாசல் , பட்டா , ஓட்டு , சாதிச் சான்றிதழ் எதுவும் இல்லாததால் , கேட்பதற்கு நாதியற்று இருப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகார பலமிக்க பதவியில் இருக்கும் ஒரு பிரிவினரால் நடத்தப்படும் வன்கொடுமைகளை இதைவிடக் காட்சிப் பதிவு செய்திட முடியாது தான். ஆனாலும் இது ஒரு சின்ன மாதிரி (Sample) தான். இதைப் போல ஆயிரம் மடங்கு கொடுமைகள் காவல் நிலையங்களில் அதிகார மையங்களில் நடக்கின்றன , நமது கவனத்திற்கு வருவதில்லை என்கிறார் நீதியரசர் சந்துரு .

எந்த வித கதாநாயக  பிம்பமும் இல்லாமல் நியாயத்தின் பக்கம் நின்று இறுதி வரைப் போராடும் சூர்யாவின் மீதான மதிப்பு கூடுகிறது. மற்றொரு கோணத்தில் இத்தகு சமூகப் பிரச்சனையைக் கதையாக அவரிடம் இயக்குநர் பகிர்ந்த போது தயாரிப்புக்காகத் தான் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் வழக்கறிஞராக  வரும் சந்துரு ரோலை நானே செய்கிறேன் என முன் வந்திருப்பதும் அவரது நடிப்பு அனுபவத்தில் ஒரு மைல்கல் ..நாயகியும் காதல் காட்சிகளும் இல்லாமலேயே படம் இத்தனை அளவுக்கு மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறது என்றால் படத்தின் மொத்தக் கதையும், களமும் உண்மையைப் பிரதிபலிப்பது தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. 

திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்து சிலாகித்து , நெகிழ்வது மட்டும் தானா ?
உண்மையாகவே படத்தின் வெற்றி என்பது குறித்தும் பேசுகிறார் இயக்குநர். திரைப்படத்தைப்  பார்க்கும் ஒவ்வொருவரும் குற்ற உணர்வை உணர்வது  என்கிறார். 

இதோடு சேர்ந்து நாம் உணர்வது , குற்ற உணர்வு தோன்றுவது மட்டுமல்ல எங்கெல்லாம் இப்படியான அநீதிகள் நிகழ்கிறதோ அங்கு குரல் எழுப்பவும் , அந்த மக்களுக்காகத் துணை நிற்கும் தைரியமும் தான் பொதுச் சமூகத்திற்கு வர வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறது சந்துரு பாத்திரம். 

லட்சக்கணக்கில் பணம் தந்து சமரசம் பேச வரும் அதிகாரியை துட்சமாகப் புறந்தள்ளி நீதி வேண்டும் என்கிற செங்கனியின் பாத்திரத்தை உள் வாங்கி மனப்பான்மையில் மாற்றம் வர தங்களைத் தயார்படுத்திக் கொள்வது இன்றைய நமது சமூகத்தின் பிரஜைகளுக்கு  மிக அவசியமான பாடமாகிறது. 

இப்படியான பெயரளவில் இயங்கும்  ஜனநாயக சமூக அமைப்பில் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டாலும் காவல்துறையினரது மூளையிலிருந்து அதைத் துடைத்து எறிதல் இயலாத காரியமாக இருக்கிறது என்கிறார் நீதியரசர் .  ஆகவே தான் எந்தக் குற்றங்கள் நடந்தாலும் இவர்களைக் குறி வைக்கிறது அராஜக அதிகாரம் . 

விளிம்பு நிலை மக்கள் , அடித்தட்டு மக்கள் என்று நாம் அடிக்கடி நாம் பேசுகிறோம். ஆனால் அவர்களைக் கடந்து திக்கற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பிரிவினரும் இருக்கின்றனர் என்பதை பொதுச் சமூகத்திற்கு இடித்துரைக்கும் திரைப்படமாக ஜெய் பீம் ❤️❤️

இந்த  நிகழ்கால வரலாற்று ஆவணத்தில் பணிபுரிந்துள்ள அத்தனை பேருக்கும் பாராட்டுகளை நாம் தெரிவித்துக் கொள்வதோடு தம்பி செந்தில் ஜெகநாதனுக்கு  Senthil Jagannathan  .... திரையில் உனது பெயரைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி கண்ணு❤️. .

பிரபா கல்விமணி ஐயாவின் களப்பணியும் இங்கு  இணையாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. 

கீழே த.செ. ஞானவேல் , நீதியரசர் சந்துரு இருவரும்  அருஞ்சொல் இணையத்தில் இப்படம் குறித்து அளித்துள்ள நேர்காணல்களை இணைக்கிறேன். அவசியம் பாருங்கள் . அவை இப்படத்தை வேறொரு வகையில் புரிந்து கொள்ள உதவும்.

(கூடுதலாக ....
இருளர்கள் மட்டுமல்ல , தாழ்த்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து தரப்பிலும் சாதிச் சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் மக்களையும் இங்கு நாம் பதிவு செய்கிறோம். பள்ளிக் குழந்தைகள் வழியாக அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள் என்ற நினைப்பை ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் )

உமா❤️

https://www.arunchol.com/director-gnanavel-interview-04-11-2021-arunchol-jaibhim

அநீதிக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும்: சந்துரு பேட்டி https://www.arunchol.com/justice-chandru-interview-on-suriya-jai-bhim-arunchol


Monday, 11 October 2021

இடைவெளியில் உடையும் பூ

 இடைவெளியில் உடையும் பூ 

 கவிதைப் புத்தகம் 
ஆசிரியர் :அன்புத்தோழி ஜெயஸ்ரீ 
வெளியீடு : இடையன் இடைச்சி நூலகம் 
பக்கங்கள்: 112
விலை : ரூ 150

 புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்க்கும் பொழுது ஒரு பூ உடைந்து கீழே சிதறுவது போல  தோன்றுகிறது. .  

 ஜெயஸ்ரீ:  இவர் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோவையில் வசித்து வருகிறார் அவருடைய வானொலி நிகழ்ச்சித்  தொகுப்பின் பெயர்தான் அன்புத்தோழி . ஆகவே தன்னை "அன்புத்தோழி ஜெயஸ்ரீ " என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார் அடையாளம் மட்டுமல்ல அவர் உண்மையாகவே அன்புத் தோழியாக திகழ்கிறார் என்பது தான் இந்த கவிதைகளிலிருந்து  புரிந்து கொள்ளக் கூடிய ஒரு கருத்தாகும் . .

 வலியைக் கலை செய்யும் வார்த்தைகள் என்று தலைப்பிட்ட ஒரு வாழ்த்துரையை அல்லது அணிந்துரையை கவிஞர் வைரமுத்து அளித்துள்ளார் .மௌனத்தை திறக்கும் கவிதைகள் என்று மற்றொரு  கவிஞர் அம்சப்ரியா என்பவர் பாராட்டியுள்ளார் .

அதனைத் தொடர்ந்து பூக்களைத் திருடிய சிறுமியின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற தலைப்பில் மிக அழகாக தன்னுரை தந்துள்ளார் எழுத்தாளர் .

 அவர் சொல்வதில் மிகவும் குறிப்பிடத்தக்கது, என்னோடு நீங்கள் பயணிக்க வேண்டுமாயின் இயந்திரங்களோடு அல்லாது இதயங்களோடு பழகி இருத்தல் அவசியம் ஏனெனில் இவள் ஒரு இலக்கியவாதி என்பதைவிட இலக்கு உள்ள வியாதி என்பதே சரி என்று குறிப்பிடுகின்றார் அதாவது அவருடைய  கவிதை மொழியானது முழுக்க முழுக்க அன்பைத் தோய்த்து தொடர்ந்து வெவ்வேறு பரிமாணங்களில் கவிதை வரிகளாக நமக்கு கொடுக்கின்றது. 

நம் அன்றாடக் காட்சிகளிலிருந்து ஒரு கவிதையாக இதைப் பார்க்கிறேன். 

 தோளில் ஒரு பையோடு 
கைபேசியில் கண்வைத்து
 குதிகால் செருப்பு பட்டென இடறித் தடுமாறி 
விழப் போகும் எவளையுமினி அலைபேசிப் பைத்தியமான தீர்ப்பிட்டு சபித்து விடாதீர்கள் ......

தனிமையை கட்டிக் கொண்ட காதல் காரியின் கடைசி தேடலின் வழிகளை வார்த்தைகள் உரைக்கவியலாது வேண்டுமெனும்  போதெல்லாம் 
உடனே கையை பிடித்துக் கொள்ளும் அத்தனிமை  போன்றதொரு 
சிறந்த துணை வேறொன்றும் இல்லை என்று 
வேண்டுமானால் சொல்லிப் போங்கள்......

 வேருக்கு நீர் ஊற்ற நேரமில்லை எங்களுக்கே தாகம் தீர்த்த நீர் போதவில்லை முற்றியதே கலி .... 

அவளுக்கு அஞ்சலி என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதையின் வரிகள் இதோ

ஆண்மகன் உனக்கவள் பண்டமாகப்  பிறந்தவள் 
மறைமுகப் பாடஞ் சொன்ன 
சமூக அவலங்களைக் கொளுத்துங்கள் 
பால்விழைவு வெறியாகியினியும் வேட்டைகள் தொடராமல் இருக்க வெட்டியே போடுங்கள் 

  வன்கொடுமை செய்தால் வாலிப முருக்கை 
முடங்கிப் போகச் செய்தல் வேண்டும் செய்வீர்களா ?
தீர்ப்பு இலகுவானால்  தீக்காமம் இன்னும் இரையாக்கி 
எத்தனை சிதைகளை மூட்டுமோ .....

என்று சமூகத்தின் பால் இருக்கும் கோபத்தைக் கக்குவது சில இடங்களில் தெரிகிறது .

இன்னும் சில வரிகள் .....

 நண்பா
 தேவதை என்றழைக்கும் வரையே தேவதைகள் தேவதைகள் 

பறவை மொழி .....என்ற தலைப்பில் ஒரு கவிதை ...

மனிதர்களின் அளவுகோல் கொண்டு இப்பறவைகளை அளக்காதீர்கள் அவற்றின் மொழி உங்களுக்கு
அறவே  தெரிவதில்லை 

எப்போதும் அப்பறவையின் காதல் பழங்களின் மீது அல்ல
 வேர்களில் இருப்பதினாலே
 விதைத்துப் போகிறது
தன் எச்சத்தால் 
பல்லாயிரம் பழமரம்

 ஒரு பறவையின் இருப்பானது 
பறத்தலன்றி பலவும் உண்டு 

பிஞ்சு நடையின்னும் பயிலா 
கொஞ்சு மழலையின் அரையாடையென அநியாய விலையோடு அடித் தொடையில் 
படுகின்ற சிவந்த கோடுகளைப் பதித்த நாப்கின் எனும் நவீனம் 
தாய்மை தொலைந்த புது யுகத்தைக் காணும்  
எம் கண்கள் வலிக்கையில்.....

 காலமெல்லாம் புதைந்து காத்திருக்கும் சிறு குளங்கள் உடையோடு ஒட்டி உறவாடி வைரமாக வைராக்கியம் கொண்டு ....என்று தொடங்கும் ஒரு கவிதை இறுதியில் ..... இப்படி முடிகிறது 

எந்த இலக்கும் இன்றி வந்து கலக்கும் ஒரு  வான்துளியில்
வாழ்வின் நீளம் உணர்கிறது 
தன் ஆழ்கடல் இலக்கின் 
எல்லைகள் வெளிச்சம் பெற இத்துனையும் கடந்தாகத்தான் வேண்டுமென 
கனத்த மனதோடு விடைபெற்று விரைந்தோடி 
அவ்வோடை நதியாகி நகர்கின்றது ...

  ஹைக்கூ கவிதை போல ஏராளமான கவிதைகளை தொடர்ந்து பல பக்கங்களில்  தருகிறார் ....

 இல்லப்  பா சொல்லு  டா 
ஓரெழுத்து கவியில் தான் 
வழுக்கி விழுகிறோம்.....

 உன் பெயர் சொல்லி 
நான் வளர்த்த ரோஜா செடி 
உன்னை போலவேதான் சிரிக்கின்றது ஒவ்வொரு பூக்களிலும் 
உனக்கு முட்கள் தவிர 
வேறொன்றும் தெரிவதில்லை.....

ஓர் ஈர நாளில்
தின்னக் கிடைத்த
சுடு சோளத்திடம்
எங்கே விளைந்தாய்
உன்னைச் சுட்டது யார்
என்றெல்லாம் நான் 
கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் 
நீங்கள் ?

நம்மை அறியாமல் உதடுகளைப் பிரித்து 
ரசித்து சிரிக்க வைத்த வரிகள் ....

கவிஞர் தன் மனதில் உள்ளன யாவற்றையும் கவிதை வரிகளாக வெளிக் கொண்டு வர முயற்சித்து வெற்றியும் பெற்றுள்ளார்.தமிழின் மீது ஆர்வமும் சொற்களின் மீது காதலும் கொண்ட கவிஞராகத் தெரிகிறார். இயல்பான உணர்வுகளை அவை வெளிப்படும் போதே  கவிதைகளாகப் படைத்து விட்டு நகர்கிறார். பறவைகள் , மாமரம் , பெண்கள் , ஆண்கள் , அன்பு , ஏக்கம் , காதல் , காமம் , அலைபேசி என இவரது கவிதைகளின் கருப் பொருட்கள் அன்றாடங்களின் பேசு பொருளாகவே இருப்பதால் நம்மால் லயித்து வாசிக்க முடிகிறது . இன்னும் வரும் காலங்களில்  கூடுதல் மெருகேறிய  கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள் அன்புத் தோழி ஜெயஸ்ரீ .


வாசிப்பை நேசிப்போம் குழுவிற்கு நன்றி 

இந்தப் புத்தகம் என்னை வந்தடைந்தது ஒரு சுவாரசியமான  அனுபவம் என்று சொல்லலாம் .இது என் கைகளில் கிடைத்து  மூன்று மாதங்கள் முடிவடைந்துவிட்டன. எப்போதுமே ஒரு புத்தகத்தை   நம் மீது அன்பு வைத்து அனுப்பினார்கள் என்றால் நான் உடனே வாசித்து அது குறித்து எழுதுவது வழக்கம் ஆனால் என்னுடைய சூழல் இந்த புத்தகத்தை நான் தொடர்ந்து வாசிக்க இயலாமல் காலம் தாழ்த்திக் கொண்டே போனேன் ஒரு காலகட்டத்தில் இந்த புத்தகத்தை நான் வேறு ஒரு ஊரில் விட்டு வந்து தொலைத்து விட்டதாக எண்ணி  திரும்பவும் தகவல் கிடைத்து   தபாலில் அனுப்பக்  கூறி அதன் பிறகு வாசித்தேன். 

எதற்காக சொல்கிறேன் என்றால் மிகவும் சுவாரசியமான அனுபவம் இந்த புத்தகத்தை நான் வாசித்து எழுதுவது என்பது .அவருடைய அன்பு கலந்த ஒரு பரிசாக இதை எனக்கு அவராகவே என்னை தேடி எனது விலாசம்  கேட்டு எனக்கு அனுப்பி வைத்தார்  ஜெயஸ்ரீ.
வாசிப்பை நேசிப்போம் குழுவில் என்னை அறிந்ததாகக் கூறி   முகவரி கேட்டாங்க ....ரொம்ப அழகான ஒரு கடிதமும் எனக்கு இதோடு வைத்து அனுப்பியிருந்தார்  


Sunday, 10 October 2021

நூல் :கோபல்ல கிராமம் -

நூல் :கோபல்ல கிராமம் - 

ஆசிரியர் 
கி.ராஜநாராயணன்

 மக்களின் மொழியில் கரிசல் இலக்கியம் தந்தவர் என எல்லோராலும்  பாராட்டுக்குரியவராக இருப்பதை இந்த நூலை வாசிக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஒரு தரிசான காட்டு நிலம் ..... பசு மாடுகள் நிறைந்த , வளமான கிராமமாக 
மாறிய ஒரு கதையை பூட்டியின் வழியாக காட்சிகளைக் கண் முன் நிறுத்தும்  ஒரு சுவையான பகுதியைக் கடந்து ,  மக்கள் இந்த பூமியை தாங்கள் வாழக்கூடிய  ஒரு
வசிப்பிடமாக உருவாக்கிய வரலாற்றைத் தாங்கி படைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.   . 

ஒரு கிராமத்தின் தோற்றம் , அங்கு வாழும் மக்களின் இயல்பு , உயிரினங்களின் அசைவு , அவர்கள் செய்யும் தொழிலின் நேர்த்தி , குடும்ப வாழ்க்கை முறை என மிகவும் இயல்பாக வரிக்கு வரி அங்கே நம்மையே வசித்த அனுபவத்தைக் கொடுத்து நகர்ந்து செல்கிறது நாவல் 

கதைகளுக்குள் கதை என்று ஒரு பொது மையத்திலிருந்து அதைச் சுற்றிச் சுற்றி கதைகள் உருவாகியும் கதைகளுக்குள் எந்த நெருடலோ முரணோ இல்லாமல் இணைப்பும் கொடுத்து ஒரு நாவல் உருவாகி அதை அந்த மக்களின் மொழியிலேயே நமக்கு அளித்துள்ளார் கி.ரா. 

ஒரு பெண்ணைக் காப்பதற்காக தங்கள் இருப்பிடத்தை விட்டு கூட்டமாக வெளியேறி தப்பித்து வேறொரு நிலத்தில் தங்கள் வாழ்க்கையை உருவாக்கி பல தலைமுறைகளுக்குப் பிறகு செழிப்பான ஊரின் வரலாற்றைக் கதையாகச் சொல்லி ஆங்காங்கே சுவை கூட்ட கதை மாந்தர்களைப் புதிது புதிதாகப் படைத்து அவர்களது செயல்பாட்டின் வழியே பயணிக்க வைத்து கோபல்ல கிராமத்தை படைத்திருக்கும் நேர்த்தி நம் மனதில் ஆழமாக ஊடுருவுகிறது.

வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஆங்கிலேயரின் ஆட்சி , கும்பினிகளின் மேற்பார்வை இவர்களின் துன்பங்களிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளக் கையாளும் வழிவகைகள் இப்படி ஒன்றோடு ஒன்று பிணைந்து புனைவின் வடிவத்தில் அபுனைவு படைப்பாக அறிய வைத்தது .

உமா

என்னுயிர் நீயன்றோ

என்னுயிர் நீயன்றோ 

பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
விலை : ரூ .150

கவிதை நூலின் ஆசிரியர் : 
 அன்புடன் ஆனந்தி. . Anbudan Ananthi 

தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க வாழ் கவிஞர் . இவரது தமிழ் ஆர்வம் அளப்பரியது என்பதை இவரது நூலுக்கு அணிந்துரை வழங்கிய அனைவரும்  வேறு வேறு கோணத்தில் பதிவு செய்துள்ளதிலிருந்து அறிந்து கொள்ளலாம். . தாய் நாட்டை விட்டு வெகுதூரத்தில் வாழ்ந்து வந்தாலும் தமிழ் மொழியை இவர் நேசிக்கும் பாங்கை இந்நூல் ஆழமாக உணர்த்துகிறது. இவர் வெளிநாடு வாழ் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்பித்து வரும் பணியை பல வருடங்களாக செய்து வருகிறார்.  உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இணைந்து இலக்கியம் வளர்க்கும்  தமிழால் இணைவோம்  உலகத் தமிழ்க் களத்தின் அமெரிக்க  ஒருங்கிணைப்பாளராக  ஊக்கமுடன் செயல்பட்டு வரும் ஆனந்தி இயல் , இசை , நாடகம் என முத்தமிழையும் குழந்தைகளிடமும் பெரியோர்களிடமும் கொண்டு சேர்க்கும் தமிழ்ப் பணிகளை செய்து வருகிறார். சமீபமாக அந்தாதிகளை தன் முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். 
இணையம் முழுக்க இவரது எழுத்துகள் மெல்லிய  மழைத் தூறல் போல விடாமல் சாரலுடன் பரவிக் கிடக்கிறது .

கவிதை நூலான என்னுயிர் நீயன்றோ - இவரது முதல் தொகுப்பு , ஆனால் பதினைந்து ஆண்டுகளாக, தான் எழுதி வந்த கவிதைகளை மிக அழகாகக் கோர்த்து நூலாக மாற்றியுள்ளார். 100 கவிதைகளிலும் சொற்களின் திரட்சிகர்ஜனை செய்கிறது. நேசத்தை காணும் இடமெல்லாம்  விதைத்து அதன் மனத்தைப் பரப்புகிறார். காதலை எல்லா இடங்களிலும் கொண்டாடும் இவர் பெரும்பாலான இடங்களில்
இயற்கையின் மீது படர விட்டு பனித்துளிகளைச் சேகரிக்கும் புல்வெளியின் ஈரம்  போல  குளிரூட்டுகிறார். 

சர்வமும் நீ .... என்ற தலைப்பில் 

நெருஞ்சி முள்ளாய் 
நிறைத்த பாரம்
நீ நெருங்கிய நொடி
உடனே தீரும் .... என்று மிக அழகாகப் பாடியுள்ளார் .

பொங்கல் குறித்தான கவிதைகள் , பெற்றோர் , நட்பு , இயற்கை , உணர்வுகள் , மனிதப் பண்புகள், நாட்டுப் பற்று , பெண்ணியம் , மரபு ,  என ஒவ்வொரு கவிதையும் உருப் பெற்று உணர்வுகளைக் கிளறி அனுபவிக்க வைத்துள்ளார். வார்த்தைகளின் கிறக்கங்களில் சுகமான நினைவுகளைத் தருகிறார் .

தேன் உண்டு களிக்கக் கண்டேன்
திறம் கண்டு கிறங்கி நின்றேன் ...

மனிதர்கள் பல விதம் என்ற தலைப்பில் ....

ஊழியம் செய்தபடி
உரிமை இழந்த படி
உறவுக்காய் ஏங்கியபடி
உண்மையாய் இருப்பர் சில பேர் ....

இவை போன்ற வரிகள் எதார்த்தத்தைப் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம்.

மனதின் வலிகள் என்ற தலைப்பிலான கவிதையிலும் அதே எதார்த்தம் .... 
அவை ....

இருந்தும் இல்லாததும் 
புரிந்தும் புரியாததும்
அறிந்தும் அறியாததும் போல்
அமைதியாய் நகர்கிறேன் ...

மனிதர்கள் மீதான நேசத்தை மையப் படுத்தி இவர் படைத்துள்ள கவிதைகளை வாசிக்கும் போது , வேறொரு உலகிற்கு நம்மை அவை அழைத்துச் சென்று விடுகின்றன. ஆனால் அதே உலகிற்குள் சஞ்சரிக்க ஆசை கொண்டாலும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி மீள்கிறோம். ஆனால் ஆனந்தி எப்படி எல்லாக் கவிதைகளிலும் நேசத்தின் சாயலை மிச்சம் வைக்காமல் வெளிப்படுத்தி இருக்கிறார் என்ற வினா நமக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது தான் நிஜம். 

இவரது எல்லாக் கவிதைகளிலும் சொற்களின் தொடுத்தல் வரிசையில் ஒரு ஒழுங்கு இருப்பதையும் , சொற் களஞ்சியப் பெருக்கம் தாராளமாகப் பயன்படுத்தப்படுதலையும் கவனிக்க முடிகிறது. எதுகை , மோனை இல்லாத கவிதைகளே இல்லை எனலாம் .. ஒரு ஒழுங்கு வரிசை இலக்கண விதிகளுக்குட்பட்டு சொற்களை அடுக்கியிருப்பதையும் துல்லியமாக கவனிக்க இயலுகிறது. மிக முக்கியமாக  கவனிக்கும் மற்றொரு விடயம் , கவிதைகள் நேரடியான பொருளைத் தருவதால் புரிந்து கொள்வதில் கடினம் இல்லை. 

 அன்புடன் 
உமா

யாத்ரீகனின் பாதை

#பயணங்கள்

யாத்ரீகனின் பாதை 
ஒளிப்பட பயணக் கதைகள் 

பதிப்பு : முதல் பதிப்பு 2020
வெளியிடு : தன்னறம் நூல் வெளி
விலை: ரூ 500 

ஆசிரியர் : வினோத் பாலுச்சாமி 

இவர் மதுரை காரியாபட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். தனது கல்வியை முடித்து பலவிதமான நகரங்கள் வேறுபட்ட நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார். தற்போது " யா" என்ற ஸ்டூடியோ வைத்து குழந்தைகளுக்கான ஊசித் துளை கேமிரா பயில் முகாம்களை நடத்தி வருகிறார். ஒரு புகைப்படக் கலைஞராக பயணியாக வாழ்கிறார். 

யாத்ரீகனின் பாதை 

ஒவ்வொரு புத்தகமும் நம்முடன் ஒவ்வொரு விதமாக உரையாடும். ஆனால் இந்த புத்தகமோ நெடுந்தூரம் பயணிக்க வைத்து  நம் மெளனத்தை ஆழமாக்குகிறது. 

 தன்னை ஒரு  தேர்ந்த பயணியாக்கி சமூகத்தின்  தொலைவுகளை  ஒளிப்படங்களாக மாற்றி அப்பயணத்தை உயிரோட்டமாக சிறந்த தொகுப்பாக வழங்கி இருக்கிறார் நூலாசிரியர் .

இப்புத்தகம்  ஒரு மனிதரின் வாழ்க்கைப் பயணத்தையும் பயணத்தின் மைல்கல்களையும் எழுத்துகளாலும் ஒளிப்படங்களாலும் நிறைத்து நம் கைகளில் கிடைத்திருக்கிறது. நூலாசிரியர் தனது கனவுகளைப் பயணங்களின் வழியே சாத்தியமாக்கி நமக்கு பல பரிமாணங்களை தனது எழுத்தின் வழியே தந்துள்ளது சிறப்பான செயல். 

புத்தகத்தின் அட்டைப் படமும் வடிவமைப்பும்   மனதை நெகிழ வைக்கும் வண்ணங்களும் நம்மை மெதுவாகப் பக்கங்களைப் புரட்ட வைக்கின்றன.  ஒரு யாத்ரீகனாக இந்த சமூகத்தை அங்கு வாழும் எளிய மனிதர்களை அவர்களது வாழ்வியலை , அன்றாடம் அவர்கள் சந்திக்கும்  பிரச்சனைகளை நமக்கு அடையாளப்படுத்தியிருப்பது தான்  மிகச் சிறப்பாக  அமைந்துள்ளது எனலாம்.

தனது இளமைக் காலம் , படிப்பு , வேலைகள் என நினைவுபடுத்திய பிறகு தனது கனவுகளை நிஜமாக்க எவ்வாறு பயணித்தார் என்பதே இங்கு நாம் அறிந்து கொள்ளும் செய்தி ஒவ்வொரு சூழலையும் கடந்து தனது பயணத்தை எங்ஙனம் சுய தேடலுக்கான ஆதாரமாகத் தருவித்துக் கொண்டு பல்வேறு அனுபவங்களைப் பெற்று அதை மிக அழகிய புத்தகமாக மாற்றியுள்ளார் என்பதை நாம் கூர்நோக்குதல் இன்றியமையாதது. 

நண்பன் திரைப் Uடத்தில் தனது பிடித்தமான பணி புகைப்படங்கள் எடுப்பது என ஸ்ரீகாந்த் தனது ஆசையை வெளிப்படுத்த நண்பன் விஜய் அது வளர்ந்து மலர்வதற்கு துணை நிற்பது பார்த்து இதெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம் என நாம் எண்ணும் போது , இல்லை இல்லை நிஜ வாழ்க்கையில் இப்படியான வெற்றியாளர்கள் உள்ளனர் என்பதை  வினோத் அவர்களை புகைப்படங்கள் எடுக்க ஊக்கப்படுத்திய நண்பர்கள் , சூழல்களை அறிமுகப்படுத்துகின்றது சில பக்கங்களில் இப்புத்தகம் . 

கடல்களில் கரையோரம் ஒதுங்கும் ஆமைகளின் வாழ்க்கை முதல் 
மலைவாழ் மக்களின் பிரச்சனைகள் வாழ்க்கை முறை வரை பயணித்து அவற்றை ஒளிப்படமாக்கி , எல்லாவற்றையும் தொகுத்து புத்தகமாக்கியிருப்பது வரவேற்கத் தக்கது. 

பயணங்களால், தான் பெற்ற நல் மனிதர்கள் , நட்புகள் , உடல் நலக் குறைபாடுகள் மீட்டெடுத்த உறவுகள் என ஒரு மனிதரின் வாழ்க்கைச் சுழற்சியையும் பயணமாக , படங்களாக , அற்புதமான நினைவுகளாகப் பகிர்ந்துள்ளார் வினோத் .

அவரது பாதை விரிந்து பயணம் மலை உச்சியை அடைவது போல மிகப் பெரிய புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்ட அனுபவங்கள் , அங்கு வாழ்நாள் நண்பர்களாக மாறிப் போன சக படைப்பாளர்கள் என நிறைய பயண அனுபவங்களைச் சித்தரிக்கிறது புத்தகம் . இப்படியான வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை . வினோத் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. என்றால் அது அவரது பேறு .இறுதிப் பகுதியில் நமது கதை சொல்லி குமார் ஷாவும் வருகிறார் .இவரது வாழ்வும் இப்படித் தான் ... பேறு பெற்றவர்கள். 

நீலாங்கரை கடற்கரை இரவுகளையும் ஒரிசா கடற்கரை இரவுகளையும் ஆமைகளுடனான பயணத்தில் ஒளிப்படமாக்கி நம்மை ரசிக்க வைக்கிறார். ரயில் பயணத்தில் மனிதர்களைப் படம் பிடிப்பதோடு அவர்களது மனதையும் படித்து படமாக்கி எழுத்தாக்கியிருப்பது என நம்மை புத்தகம் முழுக்க நெகிழ வைப்பது இங்கு சொல்லப் பட வேண்டிய ஒன்று. 

அதே போல ஒவ்வொரு அத்யாயங்களின் தலைப்புகளும் கூட நம்மை சற்று நிதானித்து நம்மை அறியாமல் புன்னகையுடன் முறுவலிக்கச் செய்த பிறகு தான் வாசிக்கவும் வைக்கின்றன. 

ஏழு வருடங்கள் இடைவெளியில் ஆதிவாசி மக்களை  இரு முறைகள் சந்திக்கச் சென்றது ,அப்போது அவர்களுக்கும் தனக்குமான நட்புறவு  எவ்வகையில் பரிணமித்தது என்று பயணமாக விளக்கி படங்களுடன் தந்திருப்பது என நாம் வாசிக்க வாசிக்க இனிக்கிறது. 

தாய்லாந்தின் அனுபவம் அங்கோர் வாட் புகைப்படப் பயிற்சிப் பட்டறையில் பெற்ற அனுபவங்கள் என ஆசிரியர் தனது பயண நூலை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பொறுமையாகவும் பொருளுள்ளதாகவும் நமக்காக அளித்திருக்கிறார். 

ஒவ்வொரு சொல்லும் நம்முடன் கவனமாக உரையாடுகின்றன . புனைவுகளை விட உண்மைகளுக்கு ஒரு ஆற்றலும் பிரகாசமும் சற்று கூடுதலாக இருக்கும் என்பதை இப்புத்தகம் உண்மையாக்குகிறது. புத்தகத்தின் பயணக் கதையில் இடம் பெற்றுள்ள  ஒவ்வொரு புகைப்படமும் நம்மை ஏதோ செய்து விடுகிறது.  மீண்டும் சொல்கிறேன். எல்லோருக்கும் இப்படியான வாழ்க்கைக் கிடைத்து விடுவதில்லை. வாழ்க்கையின் சில அரிய சுவாரஸ்யங்களை நுகர விரும்பும் எல்லோரும்  கட்டாயமாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

சுதந்திரப் பறவையாக வாழும் வினோத் தனது எதிர் வரும் பயணங்களையும் மற்றவர்க்கு தரும் படியும் ஆவணங்களாக மாற்றிட அன்பு வாழ்த்துகள் 

உமா .

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள்

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள் 

ஆசிரியர் : சுந்தரபுத்தன் 
வெளியீடு : பரிதி பதிப்பகம் -
முதல் பதிப்பு : 2018
பக்கங்கள் : 474
விலை : ரூ 500

ஆசிரியர் குறிப்பு :
சுந்தரபுத்தன்  திருவாரூர் மாவட்டத்தில் கண்கொடுத்தவனிதம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது 24 ஆம் வயது வரை சொந்த ஊரில் வாழ்ந்த இவர் அதன் பிறகு சென்னையில் இடம் பெயர்ந்து ,   பத்திரிக்கைத் துறையில் 
தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் அரசி , புதிய பார்வை ,குமுதம் , விண் நாயகன், புதிய தலைமுறை கல்வி உள்ளிட்ட பல பத்திரிகைகளில்  பொறுப்பு வகித்துள்ளார். தற்போது Open Horizon இணைய இதழில் பணியாாற்றுகிறார். வண்ணங்களின் வாழ்க்கை , ஒரு கிராமமும் சில மனிதர்களும் , கிராமத்து  ஆட்டோகிராப் என பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இவருக்கு பயணங்களில் தனியாத ஆர்வம் என்பதை இந்நூல் நமக்கு அறிவிக்கிறது.

கூடுதல் தகவல் ,இவரது தந்தை ஒளிச்செங்கோ என்ற நடராஜன் மாலைமுரசு இதழில்  பணியாற்றிய புகழ் பெற்ற நிருபர் . 

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள் 

 ஆசிரியர் வெவ்வேறு தருணங்களில் எழுதிய நான்கு புத்தகங்களின் தொகுப்பு தான் இது என பதிப்பாசிரியர் இளம்பரிதி குறிப்பிட்டுள்ளார். கற்பனை கடிதங்கள், மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு ,அழகின் வரைபடம், யானை பார்த்த சிறுவன் இவை நான்கும் இணைந்துதான் இந்த புதிய புத்தகம் உருவாகியுள்ளது.

 சுந்தரபுத்தன் தான் ரசித்ததை, பார்த்ததை , படித்ததை , உணர்ந்ததை கடிதங்களாக எழுதியுள்ளார். சொற் சித்திரங்களாக எழுதியுள்ளார் ,பதிவுகளாக குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் இணைந்து நம்மோடு ஒரு உயிர்ப்பான தருணங்களை பக்கம் தோறும் வழங்கி வருகின்றன . கடிதங்கள் என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள ஒவ்வொரு கடிதமும் மிகவும் மனதிற்கு நெருக்கமான உணர்வுகளை கொடுக்கின்றன .

எல்லோருக்கும் கடிதம் எழுதியுள்ளார் அவருடைய கிராமத்திற்கு நலந்தானா என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார் நெல்சன் மண்டேலாவுக்கு எழுதியுள்ளார் அவருடைய பால்ய காலத்திற்கு எழுதியுள்ளார் அவருடைய ஆங்கில ஆசிரியருக்கு  , பில் கேட்சுக்கு , வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு , அம்மாவுக்கு ,அப்பாவுக்கு, உறவினருக்கு ,விவேகானந்தருக்கு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நிலவுக்குக் கூட ஒரு கடிதம் எழுதி இருக்கிறார், தைப் பொங்கல் கொண்டாடக் கூடிய தருணங்களுக்கு கூட கடிதம் எழுதி நமது பால்யகால உணர்வுகளை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நம்மைத் தூண்டி இருக்கிறார்.

மகாத்மா காந்தியடிகளுக்கும் ஜென்னி மார்க்ஸ் ,பெரியார், காமராசர் என்று இவரது கடிதம் பட்டியல்கள் ஏராளம் ஒவ்வொரு கடிதமும் இரண்டு பக்கங்கள் மட்டுமே கொண்டிருக்கின்றன .படிப்பதற்கு சுவாரஸ்யமாக மிகவும் ரசனையாக வெவ்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் பாலுமகேந்திரா பாரதிராஜா என்று திரைத்துறைப் பிரபலங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை 

ஒவ்வொரு கடிதத்திலும் அவரது ஆழ்ந்த ஞானம் புறப்படுகிறது ஒவ்வொரு ஆளுமைகளையும் அவர் உள்வாங்கி முழுமையாக வாசித்துள்ளார் அவர் குறித்த செய்திகளை பல ஆண்டுகளாக சேகரித்து அதை சுருக்கமாக ரத்தினச் சுருக்கம் என்று சொல்வார்களே அதைப் போன்று நமக்கு ஓரிரு வார்த்தைகளில் செறிவாகக்  கொடுத்த செல்கின்றார். நாம் படிக்காத எத்தனையோ விஷயங்களை இந்த சிறுசிறு கடிதங்களின் வழியாக ஏராளமாக  சுந்தரபுத்தன் நமக்கு கொடுத்து இருப்பது  மிகவும் சிறப்பு .

அதேபோல கடிதங்களில் ஒவ்வொரு ஆளுமைகளிடமும் அவர்கள்  குறித்த விமர்சனங்களையும்  வைத்துள்ளார் மக்களின் பார்வையில் இயல்பாகவே இருக்கும் கேள்விகள் அவற்றையும் கடிதங்களில் சந்தேகம் கேட்பது போல் எழுதியவருக்கு வைத்துள்ளார்.

இயல்பாகவே இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் விளைவாக மறைந்து போயிருக்கும் கடிதம் எழுதுதல் என்ற தகவல் தொடர்பு பழக்கத்தையும் எழுதிக் கடத்திய  அந்த உணர்வுகளைம் படிப்போருக்கு ஏக்கமாகவே உருவாக்கக்கூடிய ஒரு அழகான கடிதத் தொகுப்பை இந்த நூல் நமக்கு அளிக்கின்றது.

அடுத்தபடியாக பதிவுகள் - இந்த தலைப்பில் மகிழம் பூக்கள் பூத்துக் கிடந்த வாசல் ,காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழல் ஆச்சு, செக்கும் இல்லை செட்டியாரும் இல்லை இப்படி நிறைய பதிவுகளை நமக்காகக்  கொடுத்துள்ளார். இதில் ஷோபா என்றொரு தேவதை என்ற தலைப்பில் பாலுமகேந்திரா அவர்களுடனான எழுத்தை நமக்கு அப்படியே கொடுத்துள்ளார் .அதற்கான சந்திப்பு இருவருக்கும் ஏற்பட்ட உரையாடல்கள் சோபாவை குறித்து பாலு மகேந்திராவின் வெளிப்பாடு என்று எத்தனையோ சுவாரசியமான பதிவுகளாளைப்  பார்க்கலாம்  .

இவர் சந்தித்த நபர்கள், சென்ற பயணங்கள், அந்த இடங்கள் குறித்து இவருக்கு உண்டான அனுபவங்கள், பெரும்பாலும் பயணங்கள் குறித்து இந்த பதிவுகளில் வெளிப்படுகிறது. அதேபோல தன்னைச் சுற்றி இருக்கக்கூடிய மனிதர்கள், நண்பர்கள் , பத்திரிகை துறையில் திரைத்துறையில் இவரோடு பயணித்தவர்கள் இவரோடு ஒரே அறையில் சென்னை வந்த புதிதில் தங்கியவர்கள் என்று பல வாரியாக  இன்று வளர்ந்துள்ள  ஆளுமைகளை போகிற போக்கில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களில் பலரும் நமக்கு முகநூல் தளத்தில் அல்லது நேரடி தொடர்பில் பழக்கம் உடையவர்களாகக் கூட இருக்கிறார்கள். ரவி சுப்பிரமணியம் ,யுகபாரதி முத்துக்குமார் என்று அவர்களுடனான அந்த தருணங்கள்,  இவருக்கும் அவர்களுக்குமான நட்பு ,இவர் கடந்து வந்த பாதை, சென்னையில் சந்தித்த இடங்கள் ஒவ்வொரு பத்திரிகைத் துறையிலும் இவர் பயணிக்கும் பொழுது நடந்த அனுபவங்கள் என நீள்கின்றன 

 இவர் பயன்படுத்திய சைக்கிள் குறித்து கூட எழுதியுள்ளார். இவரது  கிராமம் சார்ந்த நிகழ்வுகள் சினிமா எப்படி இன்று நம் கைக்குள்ளாக  இருக்கிறது ஆனால் சினிமாவைத் தேடி மக்கள் சென்றார்கள் என்று அழகாகப் பதிவு செய்துள்ளார் .அதேபோல முதல் வாழ்த்து முதல் பூங்கொத்து என்று இவருடைய வாழ்க்கையில் , இவரை உயிர்ப்புடன் வைத்துள்ள அத்தனை நினைவுகளையும் பெரும்பாலும் நாம் வாசிக்கும் பொழுது நமக்கு அந்த உணர்வு ஏற்படும் வகையில் எழுதியது தான் நாம் ரசித்து வாசிப்பதற்குக் காரணம். 

உதாரணமாக ,இவர் கிராமம் குறித்து ப்ளஸ்ஸர் வந்த தேர்தல் காலம் என்று ஒரு கட்டுரையை குறிப்பிட்டுள்ளார் நாமும் நம்முடைய பழைய காலத்திற்கு சென்று விடுகிறோம் அல்லது இப்போது இருக்கக்கூடிய தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நமக்கு ஞாபகத்தில் வந்து போகிறது .இவ்வாறு  ஒவ்வொரு பதிவுகளை வாசிக்கும் பொழுதும் நம்முடன் தொடர்பில்  இருக்கக்கூடிய இந்த வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பார்க்கும் படி ஒரு சின்ன சந்தோஷம் உணர்ச்சி மகிழ்ச்சி நாமும் நமது நினைவலைகளில் சற்று நேரம் பின்னோக்கி செல்லுதல் இப்படியான உணர்வுகளை தொடர்ந்து இவருடைய பதிவுகள் தருகின்றன. 

 இறுதியாக சொற் சித்திரங்கள் இந்த தலைப்பில் இவர் உலகப் புகழ்பெற்ற பல படங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கான செய்திகளையும் கொடுக்கின்றார். சில முக்கியமான படங்கள் உலக புகழ் பெற்ற படங்கள் இல்லை என்றாலும்  அவற்றைப் பதிவு செய்துள்ளார் .உதாரணமாக ,யூரோ –அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருக்கக்கூடிய இந்த கலைஞர் தண்ணீரிலிருந்து பெண்கள் எழுந்து வருவது போன்ற ஓவியங்களை வரைவதில் சகலகலா வல்லவர் என்று  அவர் பற்றிய குறிப்பும் அவர் வரைந்துள்ள ஓவியம் குறித்தும் தருகிறார் .

இப்படியான பதிவுகள் ஒரே ஒரு பக்கத்திலும் , மிகச் சில பதிவுகளே இரண்டு பக்கங்களையும் நிரப்புகின்றன.  மலாலா,  தலைவர்கள், புகைப்பட தினம், போர்ச்சுக்கல் படம் ,கடும் பஞ்சம் 1876 இல் இந்தியாவில் இருந்த பஞ்சத்தினால் மக்கள் எவ்வாறு பாதிப்படைந்து எலும்பும் தோலுமாக இருக்கக்கூடிய ஒரு படம் இவற்றையெல்லாம் நாம் காணும் பொழுது  நெகிழ்வாகவே உணர முடிகிறது. 

 முக்கியமான படங்கள் குறித்தும் அவற்றுக்கான செய்திகள் குறித்தும் வெறும் செய்தியாக இல்லாமல் அவை நமது மனதைத் தொடும் படி மிகவும் ரசித்து உள்வாங்கும்படி சொற் சித்திரங்கள் என்ற பகுதியில் தொகுத்துள்ளார் .தெருவென்று எதனைச் சொல்வீர் - என்ற ஒரு தலைப்பில் குழந்தைகளின் உலகமாக இருந்தது தெரு தான் , முதன்முதலில் உலகம் தெருவாகத்தான் குழந்தைகளுக்கு தெரிய வந்தது என்று ஒரு ஒரு பதிவு இருக்கின்றது. இப்படி மிகக் குறிப்பிட்ட ஒருசில படங்களுக்கான பதிவுகள் நம்மை சற்று நிதானித்து ஆழ வாசிக்க வைக்கின்றன. இதில் ஒரு இனம்புரியாத சுவாரசியத்தை தருகிறார் என்று சொல்லலாம். ஜோமல்லூரி குறித்து ஒரு பதிவு அவருடைய படத்துடன் அவருடனான நட்பு குறித்து எழுதி இருக்கின்றார் இப்படி ஒவ்வொரு சொற் சித்திரங்கள் தலைப்பிலும் வேறு வேறு தலைப்புகளில் பன்முகத்தன்மையான பதிவுகளை கொடுத்துள்ளார்.

 சமூக ஊடகங்களின் பெருக்கம் கண்டது கேட்டது பார்த்தது என அனைத்தையும் யாரும் எழுதும் வாய்ப்பை திறந்துவிட்டிருக்கிறது அதில் சிலர் எழுதுவதைத் தான் நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறது ரசிக்கவும் முடிகிறது இயற்கையை பற்றிய சமூக நிகழ்வுகளைப் பற்றிய அந்த நபரை பற்றிய எதுவாக இருந்தாலும் அதற்குள் அவர்கள் கரைந்து நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சுந்தரபுத்தன் என்று  வ.மணிமாறன் ஊடகவியலாளர் தனது கருத்தை இங்கு பதிவு செய்கிறார். அதை நாமும் ஏற்போம் .

பல துறை வல்லுனர்களைக் குறித்து நிறைய செய்திகளை அவை   வெறும் செய்தியாக அல்லாமல் ஒரு  அற்புதமான உணர்வுடன் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு தொகுப்பாக இந்த கடிதங்கள் பதிவுகள் சொற் சித்திரங்கள் அமைந்திருக்கின்றது பாராட்டுக்கள் சுந்தரபுத்தன் அவர்களுக்கு .இனிவரும் காலங்களிலும் இதே போல அவருடைய ஆழ்மனதில் இருந்து உணர்வுகளுடன் கற்பனை வளத்துடன் , மனிதர்களை வாசிப்பதன் நோக்கத்துடன் கூடிய பதிவுகளை தொடர்ந்து தருமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். சிறப்பான நூல். 

உமா