Wednesday, 31 March 2021

தீக்கொன்றை மலரும் பருவம்


தீக்கொன்றை மலரும் பருவம் 
சர்வதேச இலக்கிய வரிசை நூல் 

பதிப்பகம் : எழுத்து 
விலை : ரூ 499
பக்கங்கள் : 404
 
எழுதியவர் : அபுபக்கர் ஆடம் இப்ராஹிம்.

இவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் ஆவார். சிறந்த எழுத்துக்கான ஆப்பிரிக்க பிபிசி பரிசு பெற்றவர் இவர். சஹாரா துணைக் கண்ட பிரதேசங்களின் சமகாலத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். உலக அளவில் வெளியிடப்பட்டுள்ள Season of Crimson Blossoms நாவலுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான நைஜீரியாவின் .NNLG இலக்கியத்துக்கான பரிசைப் பெற்றவர். 

தமிழில் மொழிபெயர்த்தவர் :
 லதா அ.ருணாச்சலம் ,

இவர் கவிதை , கட்டுரை , மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆங்கில முதுகலை மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்த இவர் , 14 வருடங்கள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வாழ்ந்தவர். சில காலம் அங்கு ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். கடந்த சில வருடங்களாக சென்னையிலும் நைஜீரியாவிலும் மாறி மாறி வாசம் செய்கிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு 'உடலாடும் நதி ° கடந்த வருடம் வெளியானது . தீக்கொன்றை மலரும் பருவம் இவரது முதல் மொழி பெயர்ப்பு நாவல். 

தீக்கொன்றை மலரும் பருவம் நூலைப் பற்றி ....

இந்த நூலின் தலைப்பும் அட்டைப் படமுமே நம்மை வெகுவாக ஆட்கொள்கின்றன. மொழிபெயர்ப்பு நூலாக எண்ணவே முடியாமல் இருக்கும் படி நமது தமிழ் மொழியில் எழுதப்பட்ட உணர்வுடன் ,நீண்ட நாவலாக நம்முடன் பயணிக்கிறது. நைஜீரியா நாட்டு நாவல் என்றோ உலகின் வேறொரு பகுதியின் மனிதர்கள் என்றோ இதைப் படிக்கும் போது உணர முடியவில்லை.  கதாபாத்திரங்களின் பெயர்கள் வேண்டுமானால் அந்நியமாக இருக்கலாம். ஆனால் கதைக்.களம் , கதைக்கரு , உணர்வுகள்  , கதை மாந்தர்கள் என அனைத்தும் நம்முடன் மிக நெருக்கமாக பயணிக்கின்ற வகையில் மொழிபெயர்த்துள்ளார் லதா அருணாச்சலம் .சுவாரஸ்யம் குறையாமல் ஆனால் மிக ஆழமாகப் பேசப்பட்டுள்ள கதை. மொழியாக்கம் செய்த உத்தி என இரண்டுமே நிறைவான அழகு எனலாம் .
மனிதர்களின் நிழல் வாழ்க்கையாக நாம் உருவகம் செய்யும் பல முடிச்சுகளைப் பிணைத்து புதினம் உருவாகியுள்ளது . போதை மருந்துகள் விற்பனை செய்யும் இளைஞர்களின் தலைவனாக வரும் ரெஸா நாவலின் இறுதி வரை நம்முடன் பயணிக்கிறான். பெண்களின் ஆழ்மனதின் புதையுண்ட விருப்பவெளிப்பாடாகக் காட்டப்பட்டுள்ள  காமம் , பேசப்படாத யாரும் வெளிப்படையாகப்  பேச விரும்பாத, முறையற்ற பாலின ஈர்ப்பு என்ற  பொருண்மை தான் நாவலின் அடிநாதமாக வீற்றிருக்கிறது . ஐம்பந்தைந்து வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கும் அவளது மகன் வயதுள்ள இளைஞனுக்கும் இடையே உருவாகும் காதல் உணர்வு , மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதும்  அதன் நீட்சியாக நடக்கும் நிகழ்வுகளும் தான் இக்கதையின் போக்கு. அதே சமயத்தில் அந்த நாட்டின் சமூகத்தில் நிலவும் அரசியல் சூழல் , பொருளாதாரத்தில் நலிவுற்ற இனத்திற்கு கல்வி மறுக்கப்படும் சூழல், எளியோரைப் பயன்படுத்தி வலியோர் வாழுதல் என அனைத்தும் குறியீடுகளாக
நாவல் முழுவதும் அடையாளம்
காட்டப்படுகிறது. அவற்றைப் பார்க்கும் போது உலகெங்கிலும் நிகழும் குற்றங்களைப் பற்றிய பார்வையை நாம் ஆழமாக செலுத்த முடிகிறது. அதே போல எல்லா நாடுகளிலும் நிகழும் பிரச்சனைகள் , குற்றங்கள் இவற்றைப் பொதுமைப்படுத்தக் கூடியதாகத் தான் தோன்றுகிறது.  அதுவே யதார்த்தம். 
இரண்டு பாகங்களில் 32 அத்யாயங்களாக வளர்ந்துள்ளது கதை . வல்லாஹி ... கதை முழுவதும் பெண்களின் அக உலகத்தின் பயணம்  குறித்து பதிவு செய்வதாக லதா அவர்கள்
தனது முன்னுரையில் கூறியது தான் உண்மை. ஒரு பெண்ணின் நடத்தை மாற்றங்களுக்கான  
உளவியல் கூறுகளை  ஆய்வு செய்யும். பொருட்டும் இந்நூல் வழிகாட்டுகிறது.  சமூகத்தின் பார்வையை தைரியமாக உடைக்கும் விதமாக  ஹஜியா பிந்த்தா பைஜூரு என்ற , பிரதான பெண் பாத்திரத்தை உருவாக்கி வாழ வைத்துள்ள நூலாசிரியரைப் பாராட்டியே தீர வேண்டும்.  எல்லாவற்றைக் காட்டிலும் தமிழில் மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்த தோழி லதா அவர்களுக்கு ஒரு வாசகியாக அன்பு முத்தங்கள் . நிச்சயமாக வாழ்நாள் முழுக்க படிப்போரின் எண்ணங்களில் வாழும் இந்த தீக்கொன்றை மலரும் பருவம் .

இந்தப் புத்தகம் ,  கவிஞரும் எழுத்தாளருமான யூமா வாசுகி அவர்களது  தன்னறம் விருது விழாவில் நூலின்  மொழிபெயர்ப்பாளரான
தோழி லதா அருணாச்சலம் அவர்களது கரங்களாலேயே எனக்கு வழங்கப்பட்டது என்பதையும் மகிழ்வுடன் பதிவு செய்கிறேன். 

உமா

மகாத்மா காந்தியின் நினைவு மாலை

மகாத்மா காந்தியின் நினைவு மாலை

ஆசிரியர் : அம்புஜம்மாள்

ஆசிரியர் பற்றி:

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஸ்ரீனிவாச ஐயங்காரின் மகளான அம்புஜம்மாள் (1899-1993) அவர்கள் 1920 இல் தான் முதன்முதலாக காந்தியை சந்திக்கிறார், ஹரிஜன மக்களின் நலத்தை வேண்டி தனது வைர நகைகளை பட்டுத் துணிகளை நல நிதிக்காக தந்துவிடுகிறார். உப்புச்சத்தியாகிரத்தில் பங்கேற்று சிறை சென்றவர். பள்ளிக்கூட ஆசிரியராகவும், “சாரதா மகளிர் யூனியன்” “சுதேசிய பெண்கள் லீக்” போன்ற மகளிர் அமைப்புகளில் முக்கிய அங்கத்தினராகவும் இருந்தார். இந்தி பிரச்சார சபையின் நிர்வாகக் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார். நவம்பர் 1934-ஜனவரி1935 வரை வார்தா ஆசிரமத்தில் காந்தியடிகளுடன் தங்கியுள்ளார். பாலிய விவாகம், தேவதாசி முறை, பலதார மணம் பொன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நீங்கள் பாடுபட்டார். 1948 இல் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தை தொடங்கி பெண்களின் முன்னேற்றத்திற்கு பல் முன்னெடுப்புகளை எடுத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் (1957-1962), மாநில சமூக நல வாரியத்தின் தலைவராகவும் (1957-1964) இருந்துள்ளார். வினோபா அவர்களின் பூதான இயக்கத்தின் போது தமிழக யாத்திரையில் பங்கேற்றவர்.

நூல் குறித்து 

இந்நூல், 1944-இல் தினமணி வெளியீடாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். நூலாசிரியர், அம்புஜம்மாள் அவர்கள் காந்தியத்தால் தான்   பெற்ற அனுபவங்களைத் தொகுத்துக் கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. மொத்தம் 13 கட்டுரைகள் கொண்ட இந்நூலில், ஒவ்வொன்றும் காந்தி மற்றும் கஸ்தூரிபா ஆகியோருடன் நூலாசிரியர் கழித்த நாட்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய நினைவுகள் குறித்து பேசுகிறார் .இறுதியில் காந்தியடிகள், கஸ்தூரிபா  நூலாசிரியருக்கு எழுதிய கடிதங்கள் சில இணைக்கப்பட்டுள்ளன.

1. முதல் சந்திப்பு  - இக்கட்டுரையில் அம்புஜம்மாள் முதன் முதலாக தனது வீட்டில் மகாத்மா, கஸ்தூரிபா இருவரையும் சந்தித்த அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் . விசித்தரமான விருந்து என்று தனது வீட்டு விருந்தோோம்பல் நிகழ்வில் காந்தியடிகளுக்காகப் படைக்கப்பட்டிருந்தவற்றைப் பட்டியலிடுகிறார்.  வெந்த மணிலாக் கொட்டை, தேங்காய் வழுக்கை , ஆப்பிள், ஆரஞ்சு ,திராட்சை, பேரீச்சை, பாதாம் பருப்பு, நீர் மோர் ,இளநீர் ஆகியவை காந்தியின் உணவுகளாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன

  1893 இல் முதன் முதலில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிற்கு பாரிஸ்டராகவே போனார். இந்திய வியாபாரியின் தொழில்முறை ஆலோசனைக்காக அங்கு சென்றிருந்தார் .ஆனால் கூலி பாரிஸ்டர் ஆகத்தான் கருதப்பட்டார். இந்தியர்களை எல்லாம் கூலிகள் என்று கருதிய வெள்ளையர்கள் அங்கு இருந்ததை கண்டு மிகவும் வேதனைப்பட்டார். பிரிட்டோரியா வழி செல்லும் ரயிலில் இருந்து இறக்கப்பட்டார் முதல் வகுப்புப் பிரயாணம் செய்யகருப்பருக்கு உரிமை இல்லை என்ற நடைமுறை அங்கு இருந்தது அப்பொழுது காந்தியடிகளை ரயிலிலிருந்து கீழே இறக்கி விட்டது பற்றி நாம் வரலாற்றில் படித்திருப்போம். அதேபோல அங்கு ஜகன ஸ்பார்க் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் இந்தியர்கள் தங்குவதற்கு இடம் கிடையாது என்று இவரை தங்க வைக்க மறுத்து விட்டனர் ,அது மட்டுமன்றி பிரிட்டோரியாவில் பேவ் மெண்ட் அதாவது நடைபாதையில் நடந்து போகவும் கூடாது கருப்பர்கள் என்ற கட்டுமானம் இருந்தது .காந்தி அதன் வழியாக நடந்து போனதற்கு ஒரு காவல்காரர் அவரை அடித்து இருக்கிறார். இவற்றையெல்லாம் அனுபவித்த காந்தி ,தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடினார் .காந்தி தம்பதியினர் சிறை சென்றது குறித்த வரலாறுகளை நாம் படித்திருப்போம். அவ்வாறு சிறை சென்று வந்த காந்தியடிகளை இந்திய மக்கள் வரவேற்றனர் தமிழக மக்கள் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர் அப்பொழுது தமிழ்நாட்டில் சென்னையில் அம்புஜம்மாள் அவர்களின்   வீட்டில் , இந்த தம்பதிகளுக்காக விருந்து ஏற்பாடு செய்து இருந்தனர் அப்போது தான் இந்த விசித்திர உணவு குறித்து அம்புஜம்மாள் பதிவிட்டிருக்கிறார்.

 கஸ்தூரிபா காந்தி தூய வெள்ளைப் பாவாடையும் தாவணியும் அணிந்து மெலிந்த உருவத்துடன் உலக அனுபவத்தால் கனிந்த தாயன்பு கொண்ட முகத்துடனும் எளிமையின் வடிவமாக அந்த விருந்து சமயத்தில் தனது வீட்டில் பார்த்ததாக அம்புஜம்மாள் பதிவிடுகிறார். ஒரு ஜோடி இரும்புக் காப்பு மட்டும் அணிந்திருந்தார் .ஆனால் அம்புஜம்மாள் அந்தஸ்து அலங்காரம் படிப்பு இவைகளைப் பற்றிய பெருமிதம் இருந்த தனது பண்பினால் எளிமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என குறிப்பிடுகிறார் .தன் உடல் முழுவதும் வைரம் அணிந்திருந்தது பார்த்து கஸ்தூரிபா புன்முறுவல் செய்ததாகவும் அதை எண்ணி அவற்றை எல்லாம் கழற்றி எறிய வேண்டும் எனவும் அப்போது எண்ணியதாக  அம்புஜம்மாள் குறிப்பிட்டுள்ளார் .

 சென்னை வந்திருந்த பொழுது காந்தியடிகள் ஒரு கூட்டத்தில் பேச அன்று மாலை செல்கிறார் .சென்ட்ரல் முதல் வி.பி. ஹால் வரை எள்ளுப் போட்டால் எள்ளு விழாத அளவிற்கு கூட்டமாக நிறைந்திருந்தது கஸ்தூரிபாய் அவர்களைக் கூட்டத்தில் சிக்க வைத்துவிட்டு காந்தியடிகள் தனியே சென்று உள்ளார். அதைப் பார்த்து அம்புஜம்மாள் மனதால் காந்தியை திட்டி உள்ளார் .தனியாக இப்படி விட்டு விட்டுப் போகிறார்  தனது மனைவியை என்று மிகவும் அவர் மீது கோபப் பட்டதாகவும் ஆனால் பின்னாட்களில் அது புரிய வந்தது ,பெண்கள் தனியாக ச சமாளிப்பதற்காக இவ்வாறு நடந்தது இவற்றையெல்லாம் எங்களுக்கான பயிற்சியாகவே காந்தியடிகள் அன்று செய்துள்ளார் என்று புரிந்து கொண்டதாக குறிப்பிடுகிறார் .1920 ஆம் ஆண்டு இது நிகழ்ந்தது. மற்றொரு சமயம் 1930 ஆம் ஆண்டு கஸ்தூரிபாய் சென்னையில் ஸ்திரீகளுக்கான  சுதேசி சங்கம் உருவாக்கிட அதில் தேச சேவைகள் ,சுதேச பிரச்சாரம் ,அன்னியத் துணி கடை மறியல் இவ்வாறெல்லாம் அம்புஜம்மாள் இறங்கி பணியாற்றி காவல்துறை முன்னிலையில் தைரியமாக பல போராட்டங்களிலும் கலந்து கொள்கின்றார் இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ,அன்று கஸ்தூரிபாவைத் தனியாகக் கூட்டத்தில் காந்தியடிகள் விட்டுச் சென்றதுதான் என்று பின்னால் புரிந்து கொண்டதாக பதிவுசெய்கிறார்.

 2. சென்ற மகா யுத்தத்திற்கு பிறகு என்ற இரண்டாவது கட்டுரையில், காந்தி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தந்துள்ளார் ,அகிம்சாவாதி என்றாலும் போருக்கான ஆட்களையும் பணத்தையும் சேர்த்து உதவியுள்ளார் இதற்கு காரணம்  விரைவாக சுய ஆட்சி வரும் என்று எதிர்பார்த்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கமிட்டி ரவுலட் சட்டம் ஏற்படுத்தப்பட்டது பற்றி நாம் அறிவோம் வரலாற்றில் புரட்சிக்காரர்கள் என பல வாலிபர்களை சிறை வைத்தனர் சாத்வீக முறையில் காந்திஜி ரவுலட் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என முயற்சி செய்தார் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவாக ஒத்துழையாமை இயக்கம் உருவானது அந்த காலகட்டத்தில் காந்தி குல்லாய் கதர் மையம் நாடுகளின் தகனம் இவ்வாறு பல நிகழ்வுகள் நடந்தேறின அந்த காலகட்டத்தில் காந்தி குல்லா மிகவும் அம்புஜம்மாள் குடும்பமும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்ததைப் பதிவு செய்துள்ளார் அம்புஜம். ஆகவே தாங்கள் அணிந்திருந்த வைரங்களை எல்லாம் இரும்புப் பெட்டியில் கழற்றி வைத்து விட்டனர், தங்கள் வீட்டில் டிராயிங்  அறையில் காந்தியடிகளின் பெரிய உருவப்படம் ஒன்று வைத்து வழிபடுகின்றனர், வெள்ளைக் கதர் ஆடை அணிந்து கையில் கீதையுடன் நின்றிருந்த அந்த உருவத்தைக் குறித்து அது எப்படியான ஒரு மாற்றத்தை பார்க்கும் மனிதர்களிடையே உருவாக்கி காந்தியத்தை உள்வாங்க வைத்தது, அமைதியான புரட்சிகரமான சிந்தனைகளை கொடுத்தது என்று மிகவும் நெகிழ்ந்து இந்த கட்டுரையில் அம்புஜம்மாள் பதிவு செய்துள்ளார்.

 3.வைக்கம் சென்றபோது என்ற மூன்றாவது கட்டுரை, 1925 இல் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் வைக்கம் என்ற இடம் இந்திய அளவில் பிரசித்தி பெற்றது ,ஹரிஜன மக்கள் கிருஷ்ணர் கோவிலைச் சுற்றிய ரஸ்தாவில்நடமாடக் கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர், அவர்களும் ரஸ்தாவில் நடக்க வைக்கம் சத்தியாகிரகம் உருவான நிகழ்வுகளை பதிவு செய்கிறது. அப்பொழுது காந்தியடிகள் வைக்கம் செல்லும்போது சென்னையில் வந்து அம்புஜம்மாள் வீட்டில் தங்குகிறார்  அந்த அனுபவங்களைப் பதிவு செய்கிறது இந்த கட்டுரை. முதல் முறை தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தபொழுது சென்னை பல் இவர்கள் வீட்டிற்கு வந்தபோது ஒரு சமூக ஊழியராக தான் தெரிந்தார் காந்தியடிகள் .ஆனால் இந்த முறை அவர் வரும்பொழுது மக்களிடையே தேசபக்தி சமூகப்பற்று இவற்றை விதைத்து ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருந்தார் என்று அம்புஜம்மாள் பதிவு செய்கிறார். இதில் மீராபென் பற்றியும் குறிப்புகள் உள்ளன அப்பொழுது சென்னை நகர சபைத் தலைவராக இருந்த கான்சாஹிப் அவரது தலைமையில் மகாத்மாவிற்கு வரவேற்பு பத்திரம் ஒன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெறுகிறது அதை முடித்துக்கொண்டு அம்புஜம்மாள் வீட்டில் காந்தியடிகள் பார்ப்பதற்காக பொதுமக்கள் நிறையப்பேர் வந்திருந்தனர் அப்பொழுது ஒரு குழந்தையை மகாத்மா மடியில் வைத்துக் கொண்டுள்ள அந்த குழந்தை கைகளில் தங்க வளையல்கள் நிறைய போட்டு இருக்கின்றது அந்த குழந்தைக்கு ஆறு வயது அம்புஜம்மாள் தனது கழுத்தில் முத்தாரம்  போன்ற நகைகளை அணிந்துள்ளார். அந்தக் குழந்தையின் கைகளில் இருக்கக்கூடிய வளையல்களில் எனக்கும் ஒன்றை கொடுப்பாயா கொடுப்பாயா என்று காந்தியடிகள் கேட்டுக்கொண்டிருந்தார் சுற்றியிருப்பவர்கள் விளையாட்டிற்காக தான் கேட்கிறார் என்று நினைத்து  இருந்தனர் ஆனால் அவர் நிஜமாகவே கேட்டிருக்கிறார். குழந்தையின் தந்தை யார் குழந்தையை பார்த்து தாத்தாவிற்கு ஒன்றை கற்றுக் கொடுத்து விடு என்று கூற இதுதான் சாக்கு என்று காந்தியடிகள் வளையலை  இறுக்கமாக கையை பிடித்துக் கழட்ட அது வரவே மாட்டேன் என்கிறது அப்பொழுது கழட்ட முடியவில்லை என்றதும் கத்தரிக்கோலை எடுத்து வாருங்கள் என்று கூறி அதை கத்தரித்து எடுக்கிறார் இந்த நிகழ்வு ஒரு அரை மணி நேரம் நடக்கிறது. இதை பார்த்த நான் பயந்து போய் எனது கழுத்தில் இருந்த முத்து மாலையை வீட்டிற்குள் ஒரு பெட்டியில் வைத்து விட்டு வந்தேன். ஏனெனில் அப்போது  என்னிடம் இதைக் கேட்டு விடுவாரோ என்று நினைத்தேன். ஆனால் பின்னாட்களில் என்னால் உணர முடிந்தது இதுபோன்று கிடைத்த பொருட்களை எல்லாம் மக்களுக்காக மக்கள் நல நிதிக்காக தான் சேர்த்துகிறார் என .இந்தியப்  பெண்களிடையே இருந்த நகை பைத்தியம் ஓரளவாவது குறைந்து இருக்கிறது என்றார் காந்தியடிகள் இதுபோன்ற செய்திகளால் தான் என்று அம்புஜம்மாள் பதிவு செய்திருக்கிறார்.

 மிஸ் காதரின் மேயோ என்ற ஆங்கிலேயப் பெண்மணி தேசத்துரோகிகள் போற்றக்கூடிய இந்திய மாதா என்ற
ஒரு புத்தகத்தை எழுதி இருந்தார். இந்தியர்களின் குற்றம் குறைகளை நாடெங்கும் பரப்ப வெளியிட்ட புத்தகம் தான் அது. இந்தியர்கள் சுயராஜ்யத்திற்கு தகுதியற்றவர்கள் என்பதற்காக பிரச்சாரம் செய்வதற்காகவே அது எழுதப்பட்டிருந்தது. மகாத்மா காந்தியடிகள் அதனை சாக்கடை இன்ஸ்பெக்டரின் யாதல்து என்று ஒற்றை வரியில்  விமர்சித்திருந்தார் அப்போதைய காலகட்டத்தில் இந்தியா முழுக்க மக்களிடையே இந்த புத்தகத்தினால் பெரும் மனக் கசப்பும் வருத்தமும் வேதனையும் உருவாகியிருந்தது இந்தப் புத்தகத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அம்புஜம் காந்தியடிகளிடம் கேட்க நீ முழுவதும் படித்துவிட்டு வா என்று கூறுகிறார் உடனே படித்துவிட்டு வந்திருக்கிறார் அம்புஜம்மாள் அவரிடம் காந்தியடிகள் இந்திய ஸ்திரீகள் குறித்து இந்த புத்தகத்தில் இருந்து நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்கிறார் அதற்கு அம்புஜம்மாள் புத்தகம் முழுக்க நிறைய எதிர்மறையாக இருந்தாலும் சில பகுதிகள் உண்மையை கூறுகின்றனர் இந்திய பெண்களிடையே நாட்டின் மீது பற்றோ சமூகத்திற்காக வேலை செய்யும் நோக்கமும் இல்லாமல் எப்போதும் குடும்பத்திற்காக உழைக்கின்றனர் அவர்கள் படிப்பறிவு இல்லாமல் நிறைய சகோதரிகள் இருக்கின்றனரே என்று வருத்தப்படுகிறார் அதற்கு மகாத்மா சொல்லும் ஆலோசனைகள் நமக்காக நாம் எடுத்துக் கொள்ளலாம் இந்த மாதிரியான சூழலில் ஒரு புத்தகத்தை நாடெங்கும் எதிர்மறையாக பார்க்கும்பொழுது அதிலிருந்து நம்மால் என்ன நன்மைகள் செய்ய முடியும் என்று சிந்திக்க வைக்கிறார் மகாத்மாகாந்தி எனில் அம்புஜம்மாள் பார்த்து அப்போ சமூகம் மேம்பட சமூக சேவை செய்ய இந்த புத்தகம் ஒரு தூண்டுகோலாக அமைவது போல அவரை தூண்டுகிறார் மகாத்மாவின் கேள்விதான் அம்புஜம்மாள் இன்று நாம் ஒரு ரோல் மாடலாக பார்ப்பதற்கு விதையாக இருந்தது என்று கூறலாம் ஆம் அந்த புத்தகத்தில் இருப்பது போல பெண்கள் இந்தியாவில் குடும்பத்தை மட்டும் பார்த்துக்கொண்டு கல்வி கற்காமல் உம் நாட்டிற்காக சேவை செய்யாமல் இருப்பதை மாற்றுவதற்கு உன்னைப் போன்ற பெண்மணிகள் என்ன செய்யப் போகிறீர்கள் அவற்றை முன்னெடுத்துச் செல் என்று வழிகாட்டுகிறார் ஆகவே இந்த புத்தகத்தைத் தான் அம்புஜம்மாள் தனது பின்னாலேயே சமூகப் பணிக்கான முக்கிய ஆதாரமாக இங்கு பதிவு செய்கிறார் மகாத்மா காந்தி அந்த மூன்று தினங்கள் தங்கள் வீட்டில் தங்கியிருந்து போது நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வையும் இங்கு மிக அழகாக பதிவு செய்கிறார் அம்புஜம்மாள்.

 4 .அன்னையை  அறிந்துகொண்டது என்ற நான்காவது கட்டுரை :1927இல் மகாத்மா இலங்கைக்கு பயணமாக செல்லும்பொழுது சென்னை வருகிறார் அப்பொழுது அன்னை கஸ்தூரிபாய் உடன் வருகிறார், அம்புஜம்மாவிற்கு கஸ்தூரிபா அவர்களுடன் நெருங்கிப்
பழகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அன்னை கஸ்தூரிபாய் உடன் இருந்த நாட்களை குறித்த அனுபவித்து பகிர்வாக இக்கட்டுரை அமைந்துள்ளது .
 அன்னையின் குணாதிசயங்கள் குறித்தும் அவரது காந்தியடிகளுக்காக எப்போதும் பணி செய்வது குறித்தும் இக் கட்டுரையில் குறிப்பிட்டு அவரை போன்ற தலைசிறந்த பெண்மணி பாரத நாட்டில் இல்லை என்ற பதிவை இங்கு தந்திருக்கிறார் அம்புஜம்மாள் அவர்கள்.கல்வியறிவு குறைவாக இருந்தாலும் ஆடம்பரமற்ற வாழ்க்கையின் வழியாக  இருதய பண்பாட்டினால் மிகச் சிறந்து விளங்கும் பெண்மணி  கஸ்தூரிபா என்று மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் இக்கட்டுரையில்.

5.  தர்மசங்கடம் என்ற  கட்டுரையில் கல்கத்தாவில் நடந்த ஸ்பெஷல் காங்கிரஸில் அம்புஜம்மாளின் தந்தை விலகி விடுகிறார் அதோடு தேசிய வாழ்விலிருந்து விலகி எவ்வித பணிகளும்  செய்யாமல் இருக்கிறார்.
ஆனால் அப்பொழுது உப்புசத்தியாகிரகம் நாடெங்கும் மிகவும் அழுத்தமாக நடந்துகொண்டிருந்தது கஸ்தூரிபாய் அன்னியத் துணி கடைகளில் மறியல் செய்து சிறை சென்றார் இவற்றையெல்லாம் கண்ணுற்ற அம்புஜம்மாள் தானும் இயக்கத்தில் ஈடுபட விழைகிறார். அவரது தந்தையோ கதர் வேலை ஹரிஜன முன்னேற்றம் இவற்றால் சிவராசன் கிடைத்துவிடுமா இவை எல்லாம் நல்லது தான் நீ செய் ஆனால் சரியான அரசியல் திட்டத்தால் தான் சுயராஜ்யம் கிடைக்கும். அரசியலுக்கு அழுக்கு பிடித்து விளையாட்டு போல மோசமாக இருக்கின்றது. ஆகவே நீ இவற்றில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுரை வழங்குகிறார் இந்த சூழ்நிலையில் தர்மசங்கடமாக தான் நாட்டிற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வருந்தி கட்டுரையை முடித்துள்ளார் அம்புஜம்மாள்.

 6.ஹரிஜன யாத்திரையில் - ஆறாவது கட்டுரையில் ஹரிஜன மக்களுக்காக நாடெங்கும் அவர்களது சமூக மத உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்துகொண்டு தேசம் முழுக்க வரும் பொழுது, மீண்டும் மகாத்மா சென்னைக்கு வருகை புரிகிறார். அப்போது கோடம்பாக்கம் ஹரிஜன கைத்தொழில் கல்விச் சாலையில் தங்கி இருக்கிறார் அவரை அம்புஜம்மாள் சந்தித்து தனது தகப்பனார் காங்கிரஸிலிருந்து விலகியது குறித்து இருவரும் மனம் விட்டுப் பேசுகின்றனர் அப்பொழுது காந்தியடிகள் உனது தகப்பனாரை ஏதாவது உன்னால் செய்ய முடியாதா என்று அம்புஜம்மாளை கேட்கிறார். அவரோ என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூற அப்போது நானே நேரில் வருகிறேன் என்று மகாத்மா அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து உரையாற்றுகிறார் ஆனால் அம்புஜம்மாளின் தந்தையோ பிடிவாதமாக அரசியல் வேண்டாம் என்று கூறிவிட ,இந்த சூழ்நிலையில் காந்தியடிகள் அம்மாவிற்கு போனது தகப்பனாரின் பிடிவாதம் அரசியல் வேண்டாம் என்பதால் நீயும் அரசியலுக்குள் வர வேண்டாம் கதர் துண்டு ஹரிஜன சேவை செய்து வந்தால் போதும் என்று கூறிவிட்டு வருகிறார் அந்த அனுபவத்தை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் அம்புஜம்மாள்.
 7. ..என் ஹிந்தி யாத்திரையில் என்ற ஏழாவது கட்டுரையில் 1934 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி ஹிந்தி யாத்திரைக்காக டெல்லி டேராடூன் ஹரித்துவார் கான்பூர் அலகாபாத் ஆகிய இடங்களுக்கு அம்புஜம்மாள் தனது தோழிகளுடன் செல்கிறார் .அங்கே ஸ்ரீ சமன்லால் பஜன் பங்களாவில் தங்கி இருந்தார் காந்தியடிகளை அங்கு சந்தித்த பிறகு கல்கத்தா செல்ல இருந்தார் அம்புஜம்மாள் .மஹாதேவ தேசாய் மீரா பென்  பன்வாரிலால் பிரபாவதி அனைவரும் உடன்இருக்க ஒரு ரயிலில்  மகாத்மா காந்தியடிகளும்  பிரயாணம்  செய்திருக்க, அதே ரயிலில் அம்புஜம்மாள் அவர்களும் சென்றார். 

 காந்தி , இறங்க வேண்டிய ரயில் நிறுத்தம் இரவு ஒன்றரை மணிக்கு வரும் படி இருந்தது , அந்த ரயில் நிலையத்தில் இவரை எதிர்த்து சனாதனிகள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தனர்.  நள்ளிரவில் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ரயிலை விட்டு குதித்து மறைகிறார் எவ்வளவு வீரமாக வேகமாக செயல்பட வேண்டும் என்பதை காந்தியின் வழி நின்று  இக்கட்டுரையில் மிகவும் தெளிவாக அம்புஜம்மாள் பதிவு செய்துள்ளார்.
பம்பாய் காங்கிரஸ் என்ற இந்த எட்டாவது கட்டுரையில் 1934ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அம்புஜம்மாள் சென்றது குறித்து குறிப்பிட்டுள்ளார் தேச சேவைகளான ஜமால் பாஷ்யம் அய்யங்கார் என் கடைசி மகள் கோதைநாயகி அம்மாள் ஆகியோருடன் அம்புஜம்மாள் கலந்துகொண்டார் எவ்வளவு பெரிய மனிதர்கள் வந்திருந்தாலும் காந்தி காந்தியடிகளின் இருப்பு மிகவும் தேவையாக இருந்தது என்பதனை கட்டுரை முழுக்க தனது சொந்த அனுபவங்களுடன் ஆழமான கருத்துக்களுடன் பதிவு செய்துள்ளார் இக்கட்டுரையில்.

8. பம்பாய் காங்கிரஸ் என்ற இந்த எட்டாவது கட்டுரையில் 1934ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அம்புஜம்மாள் சென்றது குறித்து குறிப்பிட்டுள்ளார் .தேச சேவகிகளான ஜானம்மாள் (பாஷ்யம் அய்யங்கார் என் கடைசி மகள் ) கோதைநாயகி அம்மாள் ஆகியோருடன் அம்புஜம்மாள் கலந்துகொண்டார் எவ்வளவு பெரிய மனிதர்கள் வந்திருந்தாலும் , மாநாட்டிற்கு காந்தியடிகளின் இருப்பு மிகவும் தேவையாக இருந்தது என்பதனை கட்டுரை முழுக்க தனது சொந்த அனுபவங்களுடன் ஆழமான கருத்துக்களுடன் பதிவு செய்துள்ளார் அம்புஜம்மாள்

9 .வர்தா ஆசிரம நினைவுகள் 

பம்பாய் காங்கிரசுக்கு சென்று வந்த பிறகு வீட்டில் முரண்டு பிடித்து வர்தா ஆசிரிமம்  செல்கிறார் அம்புஜம்மாள். . தந்தையே நேரில் வந்து காந்தியடிகளிடம் ஆசிரமத்தில் இவரை விட்டுச் செல்கின்றார். இவரது தந்தை அழுது இவரை ஆசிரமத்தில் விடும்பொழுது காந்தி, கவலை வேண்டாம் , எனது மகளைப் போல பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதே போல மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார். சென்னை வீட்டின் வசதியையும் ஆசரம எளிமையும் ஒப்பிட்டு , ஆனால் உள்ளார்ந்த அன்புடன் ஆசிரமத்தில் வாழ்ந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அங்கு நிலவிய உணவு முறை ,வேலைப் பகிர்வு , பிரார்த்தனை ஏற்பாடு , நூல் நூற்பு , காந்தியின் அரசியல் பணிகள் , கடிதப்பணி , நடைப் பயற்சியிலேயே ஆசிரமத்திற்கு ரோடு போட கல் பொறுக்கியது என தொடர்ந்து பல அழகான அனுபவங்களைத் தொகுத்துள்ளார். 

10. மகாத்மாவின் துணைவி 

இந்தக் கட்டுரையை ஒற்றை வரியில் கூற வேண்டுமெனில் , மகாத்மா என்ற மாபெரும் மனிதர் குறித்து நாம் பேசும் போது கஸ்தூரிபா இல்லையெனில் மகாத்மா நாட்டின் அனைத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வெற்றி கண்டிருக்க முடியுமா என சிந்திக்க வைக்கிறார். 

இதே போல காந்தி பக்தர்களைச் சந்தித்தது , சேவாக் கிரம நினைவுகள் , 74 வயதில் 21 நாள் பட்டினி என தொடர்ந்த அனைத்து கட்டுரைகளிலும் காந்தியுடனான தனது நிறைய அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். 

இன்றைய கால கட்ட சமூகப் போக்கில் மாற்றங்களைத் தந்து பல நல்ல நெறிமுறைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்ல வேண்டுமெனில் காந்தியத்தை நாம் கையில் எடுக்க வேண்டும். அப்படியான புத்தகம் இது. அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கிய நூல். 

உமா 





Thursday, 18 March 2021

தோழி நர்த்தகி நடராஜ்

இன்றைய குக்கூ உரையாடலில் 


தோழி நர்த்தகி நடராஜ் 


வார்த்தைகளற்ற நீண்ட மெளன உணர்வை உங்கள் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் கடத்திய தருணங்கள் ஒரு  புதிய அனுபவம் .


யாருக்கெல்லாம் சொல்ல வேண்டும் உங்கள் வாழ்க்கையை , நிச்சயமாக என் மாணவிர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு ஆழமான அனுபவத்தைத் தர பள்ளி திறப்பு நாளை எதிர்நோக்குகிறேன். 


கட்டற்ற கனவுகளால் காலத்தை வென்ற அழியா நிலையை அடைந்த உங்கள் அனுபவம் உங்கள் பகிர்வில் , தமிழ் மொழியின் அழகிய சொற்களால் குற்றமில்லா உச்சரிப்பால் ஒருங்கே மனத்தாலும் அறிவாலும் உணர வைத்த நிமிடங்கள் அற்புதம். 


ஒவ்வொரு நாளும் வீட்டின் கதவைத் திறக்கும் போதும் வசவுகள் , கேலிப் பேச்சுகள் , புறக்கணிப்புகள் என எல்லாவற்றுக்கும்  தான் தயாராக இருப்பேன், எதிர்பார்ப்பேன் என்ற இடத்திலிருந்து உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுகள் ஆரம்பிப்பதாக உணர்கிறேன். 


பின்புலமில்லாத , உண்மையான உழைப்பும் எண்ணங்களும் அவரவர்க்கான இடத்தைக் கொடுத்து  நடுவில் நிற்க வைத்து  ஆராதிக்கும் என்ற உங்கள் சொற்கள் தான் எத்தனை ஆழமான உண்மை.


ஆடும் போது பறக்கும் மனநிலையை உங்கள் பாதங்கள் தரைபடாத உயரத்தில் நர்த்தனமிடுவதிலிருந்து அறிந்து கொள்கிறோம். ... உங்கள் ஒவ்வொரு சொல்லும் எங்களுக்குள் ஆழமாக ஒரு ரசாவாதம் செய்தது என்னவோ உண்மை. 


கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை , உருவாக்க முடியாது, உள்ளிருந்து உருவாகி தங்களை நிரூபித்துக் கொள்வர்  என்பதற்கு குழந்தைகளுடனான சில உரையாடல் உதாரணங்கள் வழியே உணர்த்தியதை இங்குள்ள பெற்றோர்கள் உணர வேண்டும் .


இந்த சமூகத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கையேந்தி நிற்பதைக் காட்டிலும் ஒரு சமூகத்தையே உருவாக்குவதான் சிறந்த  செயல் என்று உருவாக்கி வைத்திருக்கும் உங்கள் தேடல்களின் களம் வருங்கால இளைய தலைமுறைக்கு நீங்கள் காட்டும் சாட்சி. 


புலம் பெயர்ந்து வரும் மக்களைக் காக்க,  குழந்தைகள் உங்களைத் தேடுவதும்  , அவர்களுக்கு ..உங்களிடமுள்ள கலையைக் கற்றுத் தருவது போராடுவதை விட மேலானது என்ற உங்கள்  பதிவும் புரட்சியின் வேறு வடிவங்களாகப் பார்க்கிறேன். 


கனவுகள் காணுங்கள் , கடவுளின் வரமாகி எல்லாம் செயல் கூடும் என்பதையே எல்லோருக்குமான பகிர்வாக எடுத்துக் கொள்கிறேன். 


பத்மஸ்ரீ நர்த்தகி என்ற முகமூடியை நீங்கள் அணியாத காரணத்தால் தான் எங்களைப் போன்ற எளிய வெகு ஜனம் உங்களை நெருங்க முடிகிறது என்பதை நீங்கள் சொல்லாமலே புரிந்து கொண்டோம். 


இறுதியாக , தாய்மொழி குறித்து உங்கள் செய்தியாக அனைவருக்கும்  தந்தது மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன். தாய் மொழியைக் கண்டடையும் போது ஒவ்வொருவரும் அவரவரைக் கண்டடைவீர்கள் என்பது இன்றைய சமூக அமைப்பு பள்ளிக் கல்விக்கும்  நீங்கள் தந்த செய்தியாகப் பார்க்கிறேன். 


இன்றைய நாளை  உங்களுடன் சாத்தியப்படுத்திய தோழி பரமு, குக்கூ உறவுகள் அனைவருக்கும் பேரன்பு💚💚💚

டாக்டர் ஜீவா ..குக்கூ உரையாடலில்

டாக்டர் ஜீவா .. 

நேற்றைய குக்கூ உரையாடலில் 


காஞ்சிக் கோவிலில் நான் வசிக்கும் போது என்னைச் சுற்றி வாழும் மக்கள், அதிகமாக  நாடும் மருத்துவமனை ஈரோடு டிரஸ்ட் ஹாஸ்பிடல் என்பதே. ஆனால் அது மட்டுமல்ல அது போன்று புற்றுநோய் மருத்துவமனை

களையும் பல மாநிலங்களில் உருவாக்கி அவற்றை மக்கள் நலனுக்காக அமைத்தவர் தான் டாக்டர் ஜீவா என்பதை சிவராஜ் வழியாக 

அறிந்த போது அவரது உரையாடலைக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 


75 வயதாகும் இவர் கல்வி , பொருளாதாரம் , மருத்துவம் , அரசியல் , சுற்றுச்சூழல் அனைத்தையும் காந்தியத்தின் மையமாகப் பார்ப்பதோடு பார்வையாளருக்குப் புரியும்படி 

தனது வாழ்க்கையின் வழியே எப்படி இது சாத்தியப்பட்டது என்பதை தனது செயல்பாடுகள் வழியே விளக்கம் தந்தார். "புகழ் பெற்றவர்கள் எல்லோரும் செயல்களை செய்து வெற்றி பெற்றவர் எனக் கொள்ள முடியாது , செயல்பாட்டாளர் அனைவரும் புகழ் பெற்று விடுவதில்லை " என்று பதிவு செய்கிறார் 


 காந்திய வழிகளைப் பின்பற்றி தான் மருத்துமனைகளை உருவாக்கியுள்ளார். அதற்கு முன் கல்விக் கூடங்களையும் , கல்லூரிகளையும் 

காந்திய வழியில் உருவாக்கிய அனுபவம் குறித்தும் பகிர்ந்தார். 


இரண்டு மணி நேரம் முழுவதும் அவர் பேசிய ஒவ்வொன்றிலும் காந்தியத்தை இணைத்துக் காட்டினார். காந்தியும் மார்க்ஸ்சும் இணையும் புள்ளியில் தான் இந்தியாவில் மாற்றங்கள் நிகழத் தொடங்குமிடம் என்று தான் நம்புவதாகக் குறிப்பிடுகிறார். 


ஒருவர் புகழ் பெறுவதற்கு முன்பேயே  மனிதர்களைத்  தேடிச் செல்வது  தன் வாழ்நாளில் தொடர் வழக்கம் என்று பல உதாரணங்களை முன் வைக்கிறார். உலகத் தலைவர்கள் வரிசையில் நேருவும் இந்திராவும் தவிர்க்க முடியாத பெருமை வாய்ந்தவர்கள் என்பதை இன்று மறந்த கதையை நினைவூட்டுகிறார். காந்தி கூறிய தன்னிறைவு பெற்ற  கிராமங்கள் தான் மாற்றங்களுக்கு வழி என்பதுடன் ,


அதற்கான மாற்றங்களைக் கொண்டு வரும் இளைஞர்கள் தற்போது உருவாகி வருவதையும் மகிழ்ச்சியாக உணர்வதாகக் கூறுகிறார். பல்வேறு நூல்களை மொழிபெயர்த்தது குறித்தும் ,ஏன் காந்தியின் சத்திய சோதனையைக் காட்டிலும் காந்தியின் சுயராஜ் புத்தகம் தனக்கு மிகப் பிடிக்கும் எனவும் தெளிவாக்கினார்.  காந்திய வழி புரட்சியும் போராட்டமும் மீண்டும் இங்கு தேவை , குட்டி குட்டி காந்திகளாக ஏராளமானோர் உருவாகி வருவதைப் பார்க்க முடிகிறது என்று அவர் பதிவு செய்த கருத்து மிக முக்கியமானதாகப்  பார்க்கிறேன். 


அதே போல் குக்கூ வின் இளைய தலைமுறை செயல்பாட்டாளர்களை மனதாரப் பாராட்டினார் . சின்னச் சின்ன மனிதர்கள் குக்கூ வின் மனிதர்கள் , அவர்களால் உலகை மாற்ற முடியும் என்றார். 


சிவராஜ் குறித்து பேசும் போது இந்தக் கல்வி முறையின் அபத்தத்தை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். ஆம் , 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்ற முத்திரையை சிவராஜ் க்கு இந்தக் கல்வி முறை வழங்கியிருந்தாலும் இன்று மிகப் பெரிய நம்பிக்கையுடன் சமூக மாற்றத்தைக் கையிலெடுக்கும் சின்னச் சின்ன மனிதர்களை இணைத்து மிகப் பெரிய மாற்றத்திற்கான ரசா வாதம் செய்ய  சிவராஜால் சாத்தியமாயிருக்கிறது. கல்லூரி மாணவர்களிடம் உரையாட ஒரு முறை சிவராஜ் தயங்கிய போது டாக்டர் ஜீவா சிவராஜைத் திட்டி , உன்னால் தான் இவ்வளவும் செய்ய முடிகிறது. M.phil முதலான பல பட்டங்களையும் பெற்று அரங்கத்துக்குள் அமர்ந்திருக்கும் இவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆகவே வந்து பேசு என சிவராஜின் தயக்கத்தை உடைத்திருக்கிறார். 


இவரது பேச்சு கேட்கும் அனைவரையும் காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டு அடுத்த அடியை பலமாக பாலமாக எடுத்து வைப்பர் என்பது நிதர்சனம். 



வகுப்பறைக்கு உள்ளே ….

வகுப்பறைக்கு உள்ளே ….


வெளியீடு : பாரதி புத்தகாலயம் 

ஆண்டு : 2018

விலை : ரூபாய் 60


நூலாசிரியர் : இரா. தட்சிணாமூர்த்தி . இவர் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் .புதுவையைச் சேர்ந்த இவர் புதுவை அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளராகவும் , ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். சூடேறும் பூமி ,யார் குற்றவாளி உள்ளிட்ட 5 நூல்களை எழுதியுள்ளார். 


வகுப்பறைக்கு உள்ளே என்ற இந்த நூல் முழுவதும் ஆசிரியரின் பணி அனுபவங்கள் தான். எட்டு உட்தலைப்புகளை உள்ளடக்கிய இந்நூலுக்கு சிறப்பானதொரு  அணிந்துரையை

நமது மூத்த கல்வியாளர் முனைவர் ச.சீ.இராஜகோபாலன் அவர்கள் நெஞ்சைத் தொடுமாறு எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து வரும் என்னுரை என்ற பகுதியில் நூலாசிரியர் இந்நூல் உருவானதற்கான தருணங்களைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறார். 


வகுப்பறைச் சிக்கல் , அடியும் ஹார்லிக்சும் , நான் எந்த சாதியும் இல்லே .. , அன்புடன் ரஜினிகாந்த் , லேட்டா வரலாமா சார் ? கல்விச் சுற்றுலா , நல்லாசிரியர் விருது , என்னைப் பெயிலாக்கிடுங்க சார் . இந்த எட்டுக் கட்டுரைகள் தான் நம் மனதோடு நெருங்கி உறவாடுகின்றன. தனது 34 வருட ஆசிரியர்ப் பணியில்  கடந்து வந்த மாணவர்களை , கற்பித்தல் அனுபவங்களை மிக இயல்பாக , யதார்த்த சூழலின் வெளிப்பாடாக ஆசிரியர் படைத்திருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு முன்பு நமது கல்வி முறையில் சிக்கல்கள் இருந்தாலும் ஒரு மாணவரது வாழ்க்கையில் அன்றைய ஆசிரியர் கொண்டிருந்த நேசம் ஒவ்வொரு கட்டுரையிலும் முத்தாய்ப்பாகத் தெரிகிறது. 


ஆசிரியர் மாணவர் உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை , தான் வாழ்ந்த பள்ளி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நமக்குக் கூறியிருக்கிறார். மாணவரது வீட்டு சூழல் , பொருளாதார சூழல் , உளவியல் சூழல் என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு மாணவர்களை அணுகிய அனுபவங்கள் குறித்து வாசிக்கும் போது நெகிழ்கிறது. முதல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வகுப்பறை சிக்கல் இன்று வரை சில பள்ளிகளில்  தொடர்வது தான் நமது சாபக்கேடு . 


கட்டுரைகளின் பல இடங்களில் நான் என்னையே உணர்கிறேன். அன்றாடம் எனது வகுப்பறையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் இந்தப் புத்தகத்தில் தீர்வுகளைக்  காண முடிகிறது. அடியும் ஹார்லிக் சும் கட்டுரையின் முடிவில் மட்டுமல்ல அடுத்தடுத்த மற்ற ஆறு கட்டுரைகளை வாசித்து முடிக்கும் போதும் என்னையறியாமல் கண்கள் கலங்கின . மனம் என்று நாம் நம்பும் உணர்வின் பகுதியில் ஏதோ பிசைந்தது. எனது 19 வருட ஆசிரியர் பணியில் நான் கடந்து வந்த மாணவர்களது கதைகள் என் எல்லா நினைவுகளிலும் ஆக்ரமித்தன. இன்னும் இந்த மாணவனை இப்படி நாம் அணுகியிருக்கலாமோ என்ற ஆய்வை எனக்குள் சுய பரிசோதனை செய்ய இந்தப் புத்தகம் சொல்லிக் கொடுக்கிறது. 


இந்த 72 பக்கங்களில் சத்தமில்லாமல்  ஒரு புரட்சியை செய்துள்ளார் ஆசிரியர் இரா. தட்சணாமூர்த்தி . அரசுப் பள்ளி ஆசிரியர்களில் இன்றும் இவர் போன்ற ஆசிரியர்கள் ஆங்காங்கே வாழ்ந்து வருவது உண்மை தான், ஆனால் அவர்கள் எண்ணிக்கையில்

குறைந்த சதவீதமேஇருக்கின்றனர். இந்தப் புத்தகம் ஆசிரியர் பயிற்சிப் பாடமாக வைக்க வேண்டிய நூல் .ஆம் கல்வி குறித்து ஆய்வு செய்யும் கல்வியாள்களை விட ஒரு ஆசிரியரின் வாழ்வில் உண்மையாக நிகழ்ந்த இந்த அனுபவங்கள் தான் சமூக மாற்றத்தை உருவாக்க வரும் வருங்கால ஆசிரியர்களுக்குப் பாடமாக வைக்கப்பட வேண்டியவை . இன்று பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்கள் பணியில் அர்ப்பணிப்பு சார்ந்து செயல்பட இந்த நூலை வாசிக்க வேண்டும். அற்புதமான புத்தகம் . 


உமா



கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது



நூலாசிரியர் :ஆதவன் தீட்சண்யா


2016 இல் நூல் வனம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுப்பு நூல் இது.18 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. 


சமூகத்தின் அரசியல் பார்வை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படையாகத் தெரிகிறது. அது ஆணவக் கொலையாகட்டும் , கார்ப்பரேட் நிறுவன சுரண்டலாகட்டும் தெள்ளத் தெளிவாகப் பேசப்பட்டுள்ளது.   சாதி மதங்களின் பெயரின் நிகழும் ஒடுக்குமுறைகள் , தலித் மக்களின் பேசப் படாத உழைப்பு, சமூகத்தில் அவர்களது தொடர்ந்த போராட்டம் , இலங்கை மக்கள் என நூலாசிரியர் தனது சொந்த அனுபவங்களைப் பற்றிக் கொண்டும் பல கட்டுரைகளில் பேசியுள்ளார் . பயணங்களின் மேடை அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். அம்பேத்கர் குறித்தான கட்டுரையும் , சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் கட்டுரையும் ஆய்வுகளாக உணர்த்தும் கருத்துகள் ஏராளம்.  


கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது என்ற  தலைப்புள்ள கட்டுரையில் மனிதர்களது பகுத்தறிவு குறித்து விரிவாக விவாதிக்கிறார். இதில்  வேதங்களின் பங்கு என்ன என்பதும் பேசப்படுகிறது. சமகாலத் தமிழ்ச் சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் அரசியல் பின்னணியும் கேள்விக்குள்ளாக்கப்பட்டும் பகடி செய்யப்பட்டும் ஏசியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைத் தொகுப்பு  நூல் இது. வெகு ஜனத்திடையே பகுத்தறிவை விதைக்கவும் , அவர்களுக்கான கடமை குறித்தும் எளிய மொழியில் தொடர்ந்து பேசப்பட்டுள்ளது. இறுதியில் ஒரு கட்டுரையில் நம் முன்னே கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன கடுகளவேனும் செய்து கொண்டிருக்கிறோமா ? என்ற கேள்வியை முன்வைத்து முடித்துள்ளார். 

சில இடங்களில் குறிப்பாக கல்விப் பிரச்சனை குறித்து அவர் எழுதியுள்ள இடங்களில் எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன . சமூக சீர்திருத்தம் என பல கோணங்களில் நாம் பார்க்கப்படும் பிரச்சனைகள் முளைக்கும் இடமாக மறைந்து இருந்து உணர்த்துவது கல்வி மட்டுமே.அரசுப் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் குறித்த கருத்துகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன . ஆனால் சமூக மாற்றத்தினை உருவாக்க நினைக்கும் அமைப்புகளில் உள்ள மனிதர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை என்ற கேள்வியுடன் அதிர வருவதோர் நோய் என்ற கட்டுரையைப் படித்து முடித்தேன். 


உமா

Good Bye To PKPI ( பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் )



முகநூல் நட்புகள் அனைவருக்கும் வணக்கம் .


நான் அடிப்படையில் ஒரு ஆசிரியர் என்பது நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.  கல்வி குறித்த கள செயல்பாட்டாளராக தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும்  அதிகமாகப்  பள்ளிப் பணியைத் தாண்டி , வேறு வேறு வழிவகைகளில் பல தளங்களில் பணி   செய்து கொண்டுள்ளேன். 


அதன் தொடர்ச்சியாகத் தான் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்  (A3) என்ற அமைப்பை  உருவாக்கினோம் .


இன்று தமிழகமெங்கும்  பணியாற்றி வரும் லட்சக் கணக்கான ஆசிரியர்களில் சிறப்பாக செயல்படும் சில லட்சம் இருக்கலாம். அவர்களுள் சில ஆயிரம் ஆசிரியர்கள் இணைந்து உருவானது தான் A3 அமைப்பு . 4 வருடங்கள் முன்பே 2000 ஆசிரியர்கள் என்னுடன் இணைந்து பல சிறப்பான பணிகளில் தங்களை  இணைத்துக் கொண்டனர்  , ஒட்டு மொத்தமாக இல்லாமல் சில நூறு சில நூறு என சிறு சிறு குழுக்களாக பல தளங்களில்  இணைந்திருந்தனர். தற்போதும் இணைந்துள்ளனர்.


 A3 அமைப்பின் பணி என்பது , ஆசிரியர்களின் பணித் திறனை மேம்படுத்தி,  கற்பித்தல் அனுபவங்களைப் பகிர வைத்தல் , வாய்ப்புகளைப் பரவலாக்குதல் ,  செயல்படும் ஆசிரியருக்கும் செயல்பட விரும்பும் ஆசிரியருக்கும் ஒரு பாலம் அமைப்பது என்றும் கூறலாம். இப்படியான பயணத்தில் ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளுதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


 சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, முதல் சந்திப்பிற்கு 2017 நவம்பர் மாதம் எனக்கும் அழைப்பு விடுத்தனர் .அன்றிலிருந்து நவம்பர் மாதம் 2019 வரை , ( 23.11.2019) PKPl என்று அழைக்கப்பட்ட பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு 200 % உழைப்பையும் தந்தது குறித்து  பெரும்பாலும் அனைவரும் அறிவீர்கள். 


வயதில் மூத்த ஆளுமைகள் இயக்கத்தின் பொறுப்பில் இருப்பதாலும் உடன் இணைந்ததாலும் நான் கூடுதல் நம்பிக்கையுடன் பணியாற்றினேன். இயக்கத்தின் பெயரை மக்களிடம் , ஆசிரியர்களிடம்  எடுத்துச் செல்லும் பொருட்டே இயக்கத்தின் பெயரில் பல இதழ்களிலும் கல்வி குறித்த கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். 


அந்த 2 வருட காலத்தில் எனது முகநூல் பக்கத்தில் இயக்கத்தின் பெயரில் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பதிவாவது PKPI என்று முடித்திருப்பேன். பல்வேறு அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவோருக்குத் தெரியும், ஒரு அமைப்பை வளர்ப்பதில் உள்ள சவால்கள். ஆனால் இணையப் பயன்பாட்டின் வழியே தான் என்னால் பெரும்பாலான மக்களிடம் இயக்கத்தை எடுத்துச் செல்ல முடிந்தது. 


முதல் கூட்டத்தில் நான் ஒரு யோசனையை முன்வைத்தேன்  . வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி இயக்கத்தை வளர்க்கலாம் என்று , ஆனால் மூத்தோர்கள் தயங்கினார்கள் . அது ஒரு தொல்லையாக இருக்கும் என்று கூறி வேண்டாம் என மறுத்து விட்டனர். பிறகு இரண்டாம் சந்திப்புக்குப் பிறகு PKPl STATE TEAM என்ற வாட்ஸ் அப் குழு உருவாக்கத் திட்டமிட்டு ஒப்புக் கொண்டனர். 2018  ஜனவரி 6 ஆம்   தேதியன்று உருவாக்கப்பட்டது. 

6 மாதங்கள் மாநில அளவில் சில கூட்டங்கள் நடந்தன. ஒவ்வொரு நாளும் இயக்கத்துக்காக 24 மணி நேரமும் யோசித்து செயலாற்றி இருக்கிறேன். 


ஜூன் 3 , 2018 அன்று முதல் பத்திரிகையாளர் சந்திப்பு பேரா காளீஸ்வரன் அவர்களது உதவியுடன் பிரம்மாண்டமாக சென்னை லயோலா கல்லூரியில் நடந்தது. நமது A3 குழு ஆசிரியர்கள் பல மாவட்டங்களிலிருந்து இந்நிகழ்வில் வந்து கலந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாகவும் பொறுப்பேற்றனர். 


மாவட்டத்திற்கான குழு PKPI District Team நான் தான் உருவாக்கினேன். மறுபடியும் தொடர்ந்து 2 ஆண்டுகள் பல்வேறு செயல்பாடுகளால் இவ்வியக்கத்தை வலுப்படுத்தி வந்தேன். அதன் வளர்ச்சிக்கான பணியை 4 ஆகப் பிரித்தால் 2 பாகத்திற்கும் அதிகமாக  என்னுடையது. இதை அனைவரும் அறிவர். 32 மாவட்டங்களுக்கும்  மாவட்டக் குழுக்களை உருவாக்கி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து உறுப்பினர் சேர்க்கையில் என தொடர்ந்து பணியாற்றினேன். எங்கு சென்றாலும் இந்த இயக்கம் உயிருடன் கலந்த ஒன்றாக இருந்தது. தொலைக்காட்சி நிகழ்வில் பேச வாய்ப்பு கிடைத்த போதும் இயக்கத்தின் பெயரையே உச்சரித்தேன். இயக்கத்தின் முகநூல் பக்கத்தை சிவா உருவாக்கியதோடு சரி , தினமும் அந்தக் கணக்கை உயிர்ப்பித்து active ஆக வைக்க , வாட்ஸ் அப் குழுக்களை ஆரோக்கியமான முறையில் இயக்க என வெறித்தனமா வேலை செய்துட்டு இருந்தேன். 


இந்த இயக்கத்தில் ஆர்வமான உறுப்பினர்களை முகநூல் பக்க வழியேயும் வேறு வேறு வழிகளிலும் இணைத்து அவர்களிடம் தொடர்ந்து இயக்கம் குறித்த புரிதலை விளக்கி விளக்கி எடுத்துச் சென்றேன். 


ஒவ்வொரு மாநில சந்திப்பு முடிந்த பிறகும்  நிகழ்வைத் தொகுத்து MOM தயாரித்து

அதே நாளில் பெரும்பாலும் தலைவர் , செயலருக்கு அனுப்பி , இயக்க முகநூல் பக்கத்திலும் எனது முகநூல் பக்கத்திலும் போஸ்ட் போட்டு விடுவேன். யாரும் பாராட்ட வேண்டும் என்று இவற்றைச் செய்ததில்லை. அது என்னுடைய வழக்கம் . 


இரண்டாம் வருடம் முடியும் நாளில் 2019 ,நவம்பர் 24 அன்று வரை இயக்கத்தின் மொத்த வரலாறும் எழுதித் தொகுத்து அளித்தேன். அதற்குள்ளாக தனியாகவும் இயக்க செயலருடனும் இணை்து 27 மாவட்டங்களுக்கு இயக்கத்தை வலுப்படுத்த கூட்டம் ஏற்பாடு செய்து சொந்த செலவில் சென்று வந்துள்ளேன். எங்கு சென்றாலும் அங்கு நமது A3 குழு ஆசிரியர்களை வரவழைத்து இயக்கக் கூட்டத்தில் பங்கு பெற வைப்பேன். தமிழகம் முழுக்க தொடர்பிலுள்ள அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (A3) அனைவரையும் இயக்கத்தில் இணைக்க  தொடர் முயற்சியில் ஈடுபட்டேன். பெரும்பாலும் இணைந்தனர்.  


எனது பள்ளி நாட்களின் தற்செயல் விடுப்புகள்  80% இயக்கத்துக்காக மட்டுமே எடுத்தேன். ஏறக்குறைய உடல் , பொருள் , ஆவி அனைத்தையும் இந்த இயக்கப் பணிகளுக்காகவே முழு ஆத்ம திருப்தியுடன் செய்து வந்தேன் . ஒரு கட்டத்தில் PKPI என்பது தமிழகம் முழுக்க வேரூன்றியது. கடந்த செப்டம்பர் மாதம்  அறிவியல் இயக்கத்தை இணைந்து செயல்பட தோழர்  மோகனா அவர்களது இல்லம் பழனி சென்று கோரிக்கை ம்னு தந்துவிட்டு வந்தேன் . கஜா புயல் பணி செய்த போதும் நிவாரணப் பணியை ஒருங்கிணைத்து 15 லட்ச ரூபாய் மதிப்பில் அந்த 4 மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்றேன். தனி ஒருத்தியாகவே பணி செய்தாலும் இயக்கத்தின் பெயரில் செய்தேன். 


இவை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 


எத்தனையோ அமைப்புகள் PKPI இல் இணைந்திருந்தாலும் இந்த இயக்கத்துக்காக எவர் ஒருவரும் முழு மனதுடன் தங்கள் அமைப்பு உறுப்பினர்களை இவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு உதவவில்லை. செயலர் மட்டுமே ஆசிரியர்களை தொடர் பயணத்தில் சென்று சந்தித்து வளர்த்தார் .இணைய வழி , ஊடகவழி , ஆசிரியர்கள் தொடர்பில் நான் இயக்கத்தை வளர்த்தேன். இயக்க வாட்ஸ் அப் குழுவில் இணைந்தவர் அவரவர் தூர நின்று வேடிக்கை பார்ப்பவராக பெரும்பாலான நாட்களில் Passive ஆக இருப்பர். சில ஆசிரியர்களை உள்ளே இணைத்து மாநில அளவில் பொறுப்பு தரும் போது மனதளவில் குறுகி , உரையாடல் அற்று வெளியேறிய பிரச்சனைகளும் நடந்தன. எதிர்மறையான பலரின் கருத்துகளுக்கு என்றுமே நான் வலு சேர்த்ததில்லை. கடந்து போகவும் இயக்கத்துக்காகப் பணியாற்றவும் கற்றிருந்தேன். புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்தும் நிறைய மாவட்ட மேடைகளில் பேசச் சென்ற போதும் எனது A3 இன் பெயரில் செல்லாமல் , PKPI த்தான் அடையாளமாகக் கொண்டு பேசச் செல்வேன்.


இந்து -காமதேனு வார இதழில் சம காலத்தில் பள்ளிக் கல்வியில் உள்ள சிக்கல்களைத் தொடராக எழுத ஆரம்பித்தேன். எனது பெயரில் , பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே எழுத ஆரம்பித்தேன் . அரசின் கல்விக் கொள்கை , பாடத்திட்டம் , ஆசிரியருக்கு வழங்கப்படும் பயிற்சிகள் , QR கோடு ... என்று நடைமுறைப் பிரச்சனைகளைக் குறித்து தமிழக ஆசிரியர்கள் பெரும்பான்மையோரது கருத்துகளை , ஒரு பிரதிநிதியாக இருந்து தான் எழுதி வந்தேன். கல்விப் பிரச்சனைகளில் ஒரு பிரச்சனையாக ஆசிரியர் சங்கங்கள் குறித்து 11வது கட்டுரையாக எழுதினேன். 


அந்த ஒரு கட்டுரை எழுதியது தான் பிரச்சனையாக உருவெடுத்தது. சரியாக இயக்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவு விழாவை முடித்து அடுத்த நாள் நவம்பர் 25 அன்று இந்தக் கட்டுரை அச்சில் வந்தது. எந்தக் கட்டுரை என்றாலும் இயக்க முகநூல் பக்கத்திலும் பதிவிடுவேன். எனது முக நூல் பக்கத்திலும் பதிவிடுவேன். அதே போல இந்தக் கட்டுரையையும் பதிவிட்டு இருந்தேன் . 


இயக்கத்தின் பெயரில் சங்கங்களைப் பற்றி எழுதியிசூக்கக் கூடாது என்ற ஒரு கருத்து தலைவரிடம் வந்துள்ளது. செயலர் வழியே என்னிடம் அது தெரிவிக்கப்பட்டது. ஏதேச்சையாக செயலர் எனது கணவரிடம் இதைக் கூறியிருக்கிறார். எனது கணவர் சாதாரணமாகவே நிறைய கோபமடையும் இயல்பு , செயலர் கூறியதைக் கேட்டு அவரிடம் அமைதியாக இருந்து சரி எனக் கூறி விட்டு என்னிடம் வாதிடுகிறார். இயக்க முக நூல் பக்கத்தில் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் எனது கணவரும் கட்டுரையின் பதிவில் பின்னூட்டங்களில்  பேசிக் கொள்ள , இறுதியாக எனது கணவர் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தை பதுங்கு குழி இயக்கம் என வைத்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட , விளைவு... தலைவர்  PKPI STATE TEAM. வாட்ஸ் அப் குழுவில் அதற்கு கண்டனம் தெரிவிக்கிறார் . செயலர் என்னிடம் முகநூலில் அந்த பதிவையே நீக்கக் கூறி விட்டார். அன்று இரவு 10.30 மணி வரை தலைவரிடம் பேசுகிறேன். அவர் , நீ சொன்னதெல்லாம் சரி உமா , ஆனால் நாம் அவர்களை இணைத்து தான் பணியாற்ற வேண்டும் .ஆகவே இதை சொல்லக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். 


எங்களுக்குள் வீட்டில் மிகப் பெரிய பிரச்சனை . உனக்கென ஒரு அமைப்பு A3 ஏற்கனவே இருக்கும் போது வேறு அமைப்பில் சென்று வேலை செய்ததன் விளைவைப் பார் ...2 வருடமாக வீட்டைக் கூட கவனிக்காமல் இதில் இயங்கினாயே ... இப்போ ஒரு விமர்சனத்தைத் தாங்காமல் பதிவை எடுக்க வைத்து விட்டனர் என்கிறார் . 3 மாதமாக என்னை கடும் மன உளைச்சலுக்கு இந்த நிகழ்வு உட்படுத்தியது. 


அன்றுடன் எனது நிலை மாறி விட்டது என்னுடைய கேள்விகள் ... 


10 கட்டுரைகள் எழுதிய போது எந்த எதிர்வினையும் வரவில்லை. அதுவரை இவர்கள் யாரும் பாதிக்கப் படவில்லை. 11வது கட்டுரையால் இயக்கத்துக்கு ஒரு நெருக்கடி வந்து விட்டதால்  நம்மை இயக்கத்தின் பெயரில் எழுதக் கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது ?


முதல் கட்டுரையிலேயே என்னைத் தடுத்து உங்கள் பெயரில் எழுதுங்க , இயக்கத்தின் பெயரில் எழுதினால் எதிர்காலத்தில் பிரச்சனை வரும் என்று கூறியிருந்தால் எனக்குப் புரிந்திருக்குமே ?


 ஆசிரியர் சங்கங்கள் சரியாக இருந்திருந்தால்  பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்று தேவையே இல்லைதானே ? உண்மையை சொல்லாமல் முகமூடி போட்டு ஒரு இயக்கம் எதற்கு ?


ஏற்கனவே எழுதிய 10 கட்டுரைகளும் பள்ளிக்கல்வித் துறையின் 10 மையமான பிரச்சனைகள். எந்த ஒன்றையும் குழுவில் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆழமாக வாசித்து உரையாடி விவாதம் செய்யவில்லை. ஆனால் இந்த 11 வது கட்டுரை மிகப் பெரிய பிரச்சனையாகப் போய்விட்டது. 


சரி , நான் மின்னஞ்சல் அனுப்பி , சூழல் சரியில்லை எனக்கு ஒரு பிரேக் தேவை என தலைவர் , செயலரிடம் தெரிவித்து இருந்தேன். ஆனால் அதன் பிறகு இன்று 8 மாதங்கள் ஆயிற்று. வெகு சில நட்புகள் அழைத்து ஏன் இயக்கத்தில் காணோம் என விசாரிப்பர் .ஆனால் நாம் 2 ஆண்டுகள் உழைத்ததற்கான எந்த சுவடும் இல்லை. 


2 முறை செயலர் அழைத்து கூட்டங்களில்  கலந்து கொள்ளக் கூறினார் .நானும் எதுவும் கூறவில்லை .ஆனால் இந்த 8 மாதங்களில் மாநில அளவில் இது குறித்து விசாரணையோ , உரையாடலோ நிகழ வில்லை. ஒருவர் ஏதோ ஒரு சூழலால் இயக்கத்திலிருந்து விலகி இருந்தால்  அப்படியே விட்டு விடுவது தான் இயக்க நடைமுறையா எனத் தெரியவில்லை. எப்போவாச்சும்  வந்து சேர்ந்து  இயங்கலாம் என நினைத்து இருந்த தருணத்தில் ….


கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் குழுவில்  (PIKPI STATE TEAM ) என்னை அட்மின் பவரில் இருந்து நீக்கியதாக தகவல் காட்டியது. செயல்படாததால் நீக்க வேண்டும் எனில் கடந்த 2 ஆண்டுகளில் நானும் செயலரைத் தவிர மற்ற அட்மின்களது பவரைத் தூக்கியிருக்க வேண்டும் . 2 நாட்கள் கழித்து செயலரை அழைத்து இது குறித்து கேட்டேன். அவரோ தெரியவில்லை என்றார்.  மேலும் அவர் நீங்கள் என்னிடம் பிரேக் கேட்டிங்க , ரொம்ப நாள் ஆயிடுச்சு , குடும்ப சூழல் அனைத்தையும் கணக்கில் கொண்டு இணைந்து செயல்பட முடியாது எனில் தெரிவித்து விடுங்கள் என்றார். 


அப்போது  தான் எனக்கு ஒன்று புரிந்தது. இயக்கம் நம்மை மறந்து விட்டது போலும் . அட்மின் பவரை எடுக்கறாங்க எனில் இது ஏதோ ஒன்றின் வெளிப்பாடு என உணர்ந்தேன். 


எனது குடும்ப சூழலைக் காரணம் காட்டி இருந்தால் இந்த  இயக்கமே வளர்ந்திருக்காதுங்களே தோழர் என எண்ணினேன். இன்று வரை காத்திருந்தேன். யார் என்னை அட்மின் பவரில் இருந்து நீக்கினார்கள் என செயலரிடமிருந்து தகவலே இல்லை. 8 மாதமாக தலைவர் முறை கூட அழைத்து இயக்கத்தில் நான் செயல்பட வேண்டும் எனக் கேட்கக் கூட இல்லை …

 அடடா …


தோழர்கள் என அழைத்துக் கொள்ளும் அமைப்பிலேயே தோழமை உணர்வு இல்லை. பெண்களின் உழைப்பு கணக்கில் கொள்ளப்படுவதேயில்லை ..


நாம் ஏற்கனவே பள்ளிக் கல்வியை காப்பாற்றும் பல வேலைகளைத் தான் செய்து வருகிறோம் .ஆகவே அதனை நமது A3 அமைப்பின் வழியாகவேத் தொடர்வோம் என்பதால் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்திலிருந்து விலகுகிறேன். 



கீழுள்ள லிங்க் எனது முகநூல் பக்கத்தில் சங்கங்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைப் பதிவு. 

https://m.facebook.com/story.php?story_fbid=1293443860838664&id=100005191869415