Saturday, 4 August 2018

வாசிப்பை நேசிப்போம் - 10

நூல் விமர்சனம்

சிறகசைப்பில் மிளிரும் வெயில்

முகநூல் நண்பரான  கோவை சசிகுமார் எழுதிய இப்புத்தகம் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ள ஒரு கவிதை நூல் .
அழகானதொரு அட்டைப்படம் ... மெதுவாக உள்நுழைந்தால் ..

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் அம்சப்ரியா தந்துள்ள, கவிதையென்னும் அன்புப் பாதை என்ற தலைப்பிட்ட வாழ்த்துரையில், கவிதை படைக்கும் சூழல்  , கவிதைப் படைப்போர் எத்தகைய வரம் பெற்றவர்கள், என்றெல்லாம் சொற்களால் அணிகலனாக்கி அழகுபடுத்தியுள்ளார்.

தொடர்ந்து , குவிந்து கிடக்கும் சொற்களினிடையில் ஒளிந்திருக்கும் கவிதை - என்று மதிப்புரை தந்துள்ள பூபாலனது வரிகளில் ... பத்திரப்படுத்தப்பட்ட  சொற்கள்  தாம் பின்னாட்களில் கவிதைகளாகி விடுகின்றன என்ற கருத்துகள் மனம் புன்னகைக்க வழிகாட்டுகிறது.

விவசாயக் குடும்பத்தில் இருந்து, அறிவியல் படித்து ஆய்வக மேலாளராகப் பணியாற்றினாலும்  இயற்கையோடு வாழ்ந்து வரும் சசிகுமார் கவிதை படைப்பது வியப்புக்குரியது அல்ல , ஆனால் ஒரு மனிதனை உயிரோடு அறிமுகப்படுத்தவும் இறந்த பின்பு வாழவைக்க உதவுவதும்  படைப்புகள் தான் என விளக்கம் கொடுத்துள்ளது சிறப்பு.

முதல் கவிதையின் வரிகளே நம்மை சுருக் என தைக்கிறது. ஆம் ... மெளன வலியறியாத எழுத்துகள் .... முட்களின் கூர்மையில் பிரசவிக்கிறது .. என முடிக்கிறார்.

93 பக்கங்களும் கவிதை வரிகள் தவழ்ந்து, ஓடி ஆர்ப்பரிக்கின்றன. எந்த ஒரு கவிதைக்கும் தனியானதொரு தலைப்பில்லை.'

உனக்கான என் கற்பனைகள் மயிலிறகாய் பத்திரப்படுத்துகிறேன் ஏதோ ஒரு ரூபத்தில் .... வரிகள் நம்மையும் மனதை ஆழ உழ வைக்கிறது , எல்லோருக்குமான  கவிதையாக இதைப் பார்க்கிறேன்

ஏறத்தாழ 80 கவிதைகள் சிறகசைப்பில் வெயிலாக மிளிர்கின்றன. அவற்றுள் 5 வார்த்தைகள் கொண்ட கவிதையும் உண்டு... 20 வரிகளுக்கும் மேலான கவிதைகளும்  உண்டு.

தாய்மையைத் தேடும் கவிதை ,
சாதிகளின் வன்மம் பேசும்கவிதை ,
அனுபவங்களுக்கான கவிதை , பிரியமானவரின் நினைவுக்கான கவிதை , தவிப்பு , படைப்பாளிகளுக்கான கவிதை , வெட்டப்படாத மரங்களின் கவிதை ,
நிழலுக்கான கவிதை , ' இரவோடு ஒரு போராட்டக் கவிதை , துணிவு பற்றிய கவிதை ,தேடலின் முற்றுப்புள்ளிக் கவிதை , தவிப்பின் தருணங்கள் பேசப்படும் கவிதை , மெளனம் கலைந்து சிரித்த கவிதை , ஏமாற்றம் வென்ற போதான கவிதை , ரசனை மரணிக்காத கவிதை , பணமிழந்த வயோதிகக் கவிதை , ஞாபகங்களுக்கான கவிதை , கடைசி சந்திப்பின் கவிதை ,
கவிஞனின் கற்பனைக், கவிதை , காற்றின் வன்மத்தில் நிரப்பிக் கொண்டிருந்தன சருகுகள் கவிதை , ..உணர்வுகளின் ஊமை வலிகளின்  கவிதை , மயானக் காடு , நடுகற்கள் , எப்போதாவது நிழலாடும் கதவிடுக்குகள் , பிறழ்ந்து போன குரோம சோம்களால் திரித்து விடப்பட்ட பாலினக் கவிதை , இறந்த கால வசந்தங்கள் , காயம் பட்ட சுவடுகள் , பூசாரியின் கண்ணீர்த் துளி , நெடுஞ்சாலையின் கதை ,மலர் விரியும் மெளனச் சப்தங்கள்  , இசை , மண் சட்டி சோறு , விரக்தி என ஒவ்வொன்றும் இயல்பாக நம்மை விரல் பிடித்து அழைத்துச் செல்லும் கவிதைகளாக இருக்கின்றன.

தலைப்பின் பெயரே நம்மை ரசிக்க வைக்கும் மயக்கத்தின் ஆரம்பமாக இருக்கிறது. சிறகு அசையும் போது ஒளிரும் வெயில் எப்படி மிதமாய் , இனிமையாய் நம் உடலை வருடிச் செல்லுமோ அது போலவே உள்ளிருக்கும் கவிதை வரிகளும் உணர்வுகளை வருடிச் செல்வதாக அமைந்துள்ளது.

வார்த்தைகள் அருவியாய் கொட்டி அழகாய் அதனதன் இடத்தில் நிரம்பி படிப்பதற்கு இதமாகவும் தெளிவாகவும் கருத்துச் செறிவின் மொத்தத் தேடலாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அற்புதமான கவிதைப் புத்தகம்

அன்பும் நன்றியும்
உமா

பெண்கள் பிரபஞ்சத்தின் கண்கள்

பெண்கள் பிரபஞ்சத்தின்  கண்கள் :

8 வயது முதல் 70 வயதுள்ள ஆண்கள் உள்ளடங்கிய குழுவினருடன் பெண்களின் நிலை , ஆண் எவ்வாறு ஒவ்வொரு பெண்ணையும்  பார்க்க வேண்டும் , அவரவர் நிலைப்பாட்டில்  என்ன நினைக்கின்றனர் என ஒரு கலந்துரையாடல் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நிகழ்ந்தது.

குழந்தைகள் பெரியவராகிப் போன சூழல் ... நீங்கள் எதை வேண்டுமானாலும்  பேசலாம்  , இது வகுப்பறை அல்ல , உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் என்றதும் ஒவ்வொரு குழந்தையும் மனதைத் திறந்தனர்.

பெண்கள் என்றாலே அடிக்கணும்னு தோணுது ... ஒரு 13 வயது சிறுவன்.

பெண்கள் என்றால் ஏளனம் செய்யக் கூடாது என்றான் ஒரு 8 வயது சிறுவன் , ஏளனம்னா என்ன என்றேன். இகழ்ச்சி என்றானே பார்க்கலாம். அருமை .. சென்னைக் குழந்தைகளுக்கு தமிழ் சொற்கள் பயன்படுத்தி பேசத் தெரிந்து இருப்பது கண்டு மகிழ்ந்தேன்.

பெண்கள் என்றாலே காதலிக்கத் தோணுது , சீன் போடறாங்க என்று எதார்த்தமான
உண்மைகளைக் கூறிய ஒரு நாகல்கேணி அரசுப் பள்ளி மாணவன் அவனது ஒவ்வொரு கருத்து வெளியீட்டிலும் அவன் வாழும் சூழலை  தெளிவாக அடையாளம் காட்டினான் .இது பெரும்பான்மை யோருக்கான  நிலை.

மற்றொரு 13 வயது சிறுவன் ... girls என்றாலே பார்ஷியாலிட்டி பாக்குறாங்க என்றான். உதாரணம் சொல்லு கண்ணு என்றதற்கு பள்ளிகளில் நடக்கும் சம்பவங்களைக் கூறி ஆதங்கப்பட்டான்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி குரோம்பேட்டில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவன் காதலிக்கத் தோணுது என்றான்.

மற்றும் சில குட்டிகள் , பெண்கள் என்றால் மதிக்கனும் , சகோதரியா பாக்கணும் , அம்மாவா நினைக்கனும் என ஒவ்வொருவரும் அவரவர் நிலைப்பாட்டில் ..

ஒருவன் சொல்கிறான் , பெண்களை அடிமையாக நடத்தக் கூடாது , வேலைக்காரர்கள் போல நடத்துகிறது கூடாது. எப்போப் பாரு வெறுப்பேத்தராங்க ..

சீன் போடுதல் என்றால் என்ன என விளக்குங்கள் என்றேன். ஒருவன் கூறுகிறான் , நான் சைக்கிள் நேரா ஓட்டிட்டுப் போறேன்னா , ஒரு பொண்ணு சீன் போட்டான்னு வச்சுக்க , நான் வளைஞ்சு வளைஞ்சு ஒட்டுவேன் என்று கூறி எனக்கு விளக்குகிறான் .

இப்படி எல்லாக் குழந்தைகளும்  துரு ஏறிய சிந்தனையுடன் இருப்பதற்கு வழிவகுத்து விட்டதே என வேதனையாக இருந்தது.

அவர்களது அப்பாக்களைக் கலந்துரையாடலுக்கு உட்படுத்தும் போது பெண்களை  சமமாக நடத்த வேண்டும் என்ற ஒரு கருத்தை மையமாக வைத்தே பதிலளித்தது சிறிது மகிழ்வாக இருந்தது.

உடல் உறுப்புகளால் அமைப்பால் மட்டுமே வேறுபட்ட வர்கள்  ஆண்களை விடப் பெண்கள் , பசி , தாகம் , வலி , வேதனை , உணர்வுகள் என எல்லாமும் இருவருக்கும் சமம் , வீட்டில் சகோதரிகளை , அம்மாவை மதிக்கக் கற்றுக் கொள்ளப் பழகினால், தோழமையுடன் புரிந்து கொண்டால்  சமுதாயத்தில் பார்க்கும் எல்லாப் பெண்களையும் அவ்வாறு நடத்தத் துவங்கி விடுவோம் என அவர்களுக்கு அவர்களின் பதில்களாலேயே புரிய வைக்கப்பட்டது.

ஒரே நாளில் மாற்றிட இயலாது , மறுபடியும் சந்திப்போம் எனக் கூறி இன்றைய ஞாயிறின் காலைப் பொழுது மாற்றத்தின் பொழுதாக்க வாய்ப்பு தந்த Roberto George க்கு நன்றி கூறினாலும் என்னுள் கனன்று கொண்டு இருப்பது இந்தப் பிஞ்சு மனங்களை சரிப்படுத்துவது எவ்வாறு என்பதே ...

அன்புடன்
உமா

குக்கூ

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் அரங்கம்
குக்கூ காட்டுப்பள்ளிக் குழுவுடன் (04.08.18)

வாழ்வின் பெருங்குரலெடுத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கத்த வேண்டும் போல் தோன்றிய நேரம் இன்று காலை 11 முதல் 2 வரை ..

ஆம் . கோயில் அரங்கத்தின் வளாகத்தில்  ஆயிரம் பேருக்கும் மேலே  .. சிறு குழந்தைகளாய் , பள்ளி மாணவர்களாய் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , தன்னார்வலர் , ஊர்க்காரர்கள் என ஆரவாரமான ஒரு பெருங் கூட்டமாக குழுமியிருக்க , அகவொளி மனோகர் தேவதாஸ் தனது வயதினினும் பெரும் அனுபவத்தைப் பெற்றது பற்றி மகிழ்வோடு பகிர ,

சுற்றிலும் குழந்தைகள் வரைந்து இருந்த ஓவியங்கள் அவர்களது கனவுகளாக காட்சிப் படுத்தப்பட்டிருக்க  ....

சரவணன் வேலு .. அட என்ன ஒரு அட்டகாச நாடகம் ..கடலுக்குள் பூதம் ... இந்த வண்ணமயமான வழமையான கம்பீரக்  குரலின் தெளிவும்...ஹே...... ஓ.... உம் இன்னும் காதில் ஒலிக்கிறது. பூதத்தின் , அம்மாவின் , கோமாளியின்  வெளிப்பாடுகள் அத்தனையும் ஆயிரம் தங்கக் காசுகளுக்கும் மேலே பொற்கிழி பெறும் தரமானவை.

இது மட்டுமா ..... ஈரோட்டிலிருந்து வந்திருந்த கலைத் தாய் குழுவின் பறை முதலான பல கலைப் பொக்கிஷ இளைஞர் கூட்டம் .... ஆரவாரம் , சந்தோஷம் , ஆர்ப்பரிப்பு ,.. உலகமே அப்போது எங்கள் காலடியில் .....

பரிசளிப்பு , பகிர்வு எல்லாம் முடிந்து .... பிரார்த்தனை .....

குக்கூ காட்டுப்பள்ளி
சிவராஜ் .... எங்கிருந்து பெற்றாயடா இவ்வளவு தெளிவை .... அரச்சலூரில் இருந்த வந்தவனுக்குள் இவ்வளவு பிரம்மாண்டங்கள் ஒளிந்துள்ளதே ....
எப்படி ஒரு எளிமை !!!!!!
எல்லாவற்றிலும் ஒரு உண்மை ஒளிந்திருக்கும்  ....

பிரம்மாண்டமான கோபுரங்களை மட்டுமே பார்க்கிறோம். காலுக்கடியில் மிதிபடும் மண்ணின் அடியில் ஆயிரக்கணக்கான ரத்தமும் சதையும் புதையுண்டவரையும்  நாம் எண்ண வேண்டும் என உலகத்துக்கான ஒரு நீதியைக் கூறி மனதை உரசிச் சென்ற நீயும் , உன் அந்தகாசச் சிரிப்பும் என்னுள் ஒரு ஞானியை சந்தித்த அனுபவத்தைத் தந்த தடா கண்ணா ..... தேடி வந்து அக்கா என நீ கண்டு கொண்ட தருணம் ... இவ்வளவு நாள் குக்கூ வராதது தவறோ எனத் தோன்றியது .

தாமரை : கண்ணம்மா .... உன் மென் குரலெடுத்து ஆதிரைக்கான பாடலாக ... தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...... என்ற பாடலின் வரிகளை எல்லோருக்குமான பாடலாகத் தந்ததை மனம் கொண்டாடி உன்னை வாழ்த்துகிறதடி  சின்னப் பெண்ணே ...

ஆதிரை .... நீ எப்படி இப்படி மென்மையாக ... மற்றொரு நாள் உன்னையும் மற்ற உறவுகளையும் சந்திக்க ஆவலாக ...

அழகான உறவுகள் , எதார்த்தமான கற்பனைகள்

ஜனனத்தின் பயனாக இந்த நாள். சிவனை வழிபட மறந்து இவர்களை எண்ணி இன்னும் தூங்காமல் ...

உமா

Friday, 27 July 2018

நூலகம்

எதைத் தேடுகிறோமோ அதை வந்தடைவோம்  எப்படியோ  ......

நூல்கள் மேல் எனக்கு மிகப் பெரும் காதல் உண்டு , தவிர நூலகங்களை எப்போதும் நேசிக்கும் இயல்பும் உண்டு , உங்களில் நிறைய பேருக்கு இருக்கலாம் ....

என் வாழ்நாள் சாதனையாக சில விஷயங்களை எண்ணுகிறேன் என்றால் , அதில் ஒன்று  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15000 க்கும் (பதினைந்தாயிரம் ) மேற்பட்ட  புத்தகங்களை 5 மாணவர்களின் உதவி கொண்டு வகைபடுத்தி பாதுகாத்து பராமரித்து ஒப்படைத்தது.

தொடர்ந்து நூலகங்களின் மீதான ஈர்ப்பு அதிகமானதில் வியப்பில்லை , இன்று மிக அரிதான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எனக்கும் சென்னையின் மிகப் பெரிய நூலகங்கள் எனது கல்விப் பணிக்கு எவ்வாறு ஒத்துழைப்பு தந்தது எனப் பகிர்ந்து கொண்டேன் .

பிரம்மாண்டங்களைப் பராமரிக்கும் பொறுப்பாளர்கள் ஒரே மேடையில் .... பின்னொரு நாளில் ஒவ்வொரு நூலகத்தைப் பற்றியும் விரிவாக எழுதுகிறேன்.

“சென்னை நூலகங்கள் கலந்துரையாடல்”

*திரு. பூ. மீனாட்சி சுந்தரம்,
(நூலகர், கன்னிமாரா பொது நூலகம், )

*திருமதி. செ. காமாட்சி,
(நூலகர், அண்ணா நூற்றாண்டு நூலகம்,)

*திரு. இளங்கோ சந்திரகுமார்,
(மாவட்ட நூலக அலுவலர் சென்னை),

*திரு. கோ. உத்திராடம்,
(உ. வே. சாமிநாதையர் நூலகம்,)

*திரு. ஷிண்டே,
(நூலகர், பிரம்மஞான சபை நூலகம்,)

*திரு. ஜெகன் பார்த்திபன்,
(நூலகர், தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகம்,)

*திரு. க.சுந்தர், (இயக்குநர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்,)

*திரு. இரா. சந்திரமோகன், (நூலகர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், )

*திரு. ரெ. முருகன், (இணை நூலகர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்,)

*திரு. இரா. பெருமாள்சாமி,
(நூலகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், )

*திருமதி. அபர்ணா,
(நூலகர், பிரிட்டிஷ் கவுன்சில்,)

*திரு. சீனிவாசன் பிரேம்குமார்,
(நூலகர், அமெரிக்க தூதரகம்,)

*திருமதி. ஹேமா, (நூலகர், ஜெ கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நூலகம்,)

*திருமதி. கீதா அருண்,
(நூலகர், கலாச்சேத்ரா நூலகம், )

*திருமதி. இந்து, (நூலகர், தக்ஷிணசித்ரா அருங்காட்சியகம் நூலகம்.)

~ மீள்

Friday, 29 June 2018

திருக்குறள் - 3

எனக்குப் பிடித்த திருக்குறள் - 3
______________________________

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்
                                                  தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை "

பொறையுடைமை என்ற அதிகாரத்தில் முதல் குறள் இது.

இதற்கானப் புரிதல் எனக்கு 20 வயதிலே தான் வந்தது. நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சனைகள் கோபத்தாலும் மற்றவர் உடனான கருத்து முரண்பாடுகளாலுமே அதகமாக ஆரம்பித்து பின் அது பகையாக மாறி சூழலை விரும்பத்தகாத ஒன்றாக மாற்றி நம் ஆற்றலை வடித்து விடுகிறது.

ஆகவே பொறுமை என்ற ஒரு பண்பு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு படிப்பினை செய்யும் குறளாக இதைப் பார்க்கிறேன் நான்.

இந்த பூமியானது தன்னை என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறது. கடப்பாரையால்  பிளந்தாலும் , மம்முட்டியால் வெட்டித் தோண்டினாலும் , தன்னை அணு அணுவாகச் சித்ரவதை செய்தாலும்  தன்னை என்ன செய்தாலும் எந்த வித எதிர்வினைகளையும் காட்டாமல் பொறுத்துக் கொள்ளும் இயல்பைப் பெற்றிருப்பது சிறப்பு , அது போல் ....

சிறு வயது முதல் இன்று வரை எத்தனையோ மனிதர்களால் இகழ்ந்து பேசப்பட்டிருப்போம் , புறக்கணிக்கப்பட்டு இருப்போம் , கொடுஞ் சொற்களால் புண்படுத்தப்பட்டு இருப்போம் , மாறுபட்ட கோணங்களில் விமர்சிக்கப்பட்டிருப்போம். இப்படி எது நடந்தாலும் அந்த நேரத்தைக் கடப்பதற்கானப் பொறுமையும் , மனிதர்களை பொறுத்துக் கொள்ளவும் இயல்பையும் பண்பையும் நமக்குத் தந்திருப்பது குறிப்பாக எனக்குத் தந்திருக்கிறது இக்குறள் .

நேற்று இரவு வரை இந்தக் குறளின் பொருள் என்னை வழிநடத்தியுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் .

எப்போதும் வகுப்பறைக்குள் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு மாணவர் எதிர்வினையாற்றி சரியில்லாத  நிலைகளைத் தோற்றுவிக்கும் போதும் இக்குறளையே அவர்கள் முன் வைக்கின்றேன். ஆதலால் எல்லோரும் உடனே புரிந்து கொள்ளவில்லை என்றாலும் என்னைப் போல் 20 வயதிலாவது புரிந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்வார்கள் என்பது எனது மனநிலை .

வீட்டிலும் சமூகத்திலும் இதையே பின்பற்றுவதால் மனித உறவுகள் நம்மை ஏற்றுக் கொண்டு ஒரு கட்டத்தில் புரிந்து கொள்கிறார்கள் .

உறவுகள் வலுப்பட , மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ , சிக்கல்களைக் கடந்து வர, நல்ல சூழலை உருவாக்க .......

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்
                                                  தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை "

..... பின்பற்றுவோம் .

அன்புடன்
உமா

ஓர் மழை நாளில்

ஓர் மழை நாளில் ...

உன் வாசனை நுகர
ஒரு நொடி' ம் ' போதும்
உன் ஒற்றைச் சொல்லில்
என் ஜீவன் வாழும் ...

கடலளவின் உன் அன்புணர
உன்னோடு கதைத்தலே போதுமென இந்த
உள்ளமது மகிழ்ந்திருக்க

உயிர் வரைத் தித்திக்கும்
உருவமிலா உன் அன்பில்
உடனுறைய  வழி காட்டும்
சிந்தனைகள் ஜீவனோடே 
பயணித்திருக்க ....

நீளும் வாழ்வு இதன் நீட்சி
நீயிருக்கும் நாள் வரை
நினைவுகளோடே அசை போட ....
நிழலாகத் தொடர் வாய் என் கண்ணே ...

உமா

Friday, 22 June 2018

நட்பு வட்டம் -1

நானும் காந்தாவும்
-----------------------------

ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 3 பள்ளிகளில் தொடக்கப் பள்ளி , உயர்நிலைப் பள்ளி , மேல்நிலைப் பள்ளி என அனைத்திலும் ஒன்றாகப் படித்தோம். சில வகுப்புகளில் பிரிவு மாறி வேறு வகுப்பறையில் இருப்போம். 1981 - 1993 வரை அநேகமாக பல வருடங்கள் ஒன்றாக இருந்தோம்.

அவள் பெயர் காந்த லட்சுமி , 5 ஆம் வகுப்பு வரை படித்த பள்ளியில் பின்புறம் ஒரு சறுக்கல் பாதை இருக்கும். அதன் வழியே ஏறி காந்தா வீட்டுக்குப் போய் விடலாம் .. தினமும் காலை மாலை இன்ட்ர வல் நேரம் அவங்க வீட்டுக்குத் தான் கழிவறை பயன்படுத்த செல்வேன். ( அரசுப் பள்ளியில் அப்போது இருந்தே திறந்த வெளிக் கழிப்பறை தான். )

நியூட்ரின் சாக்லேட் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு .....காந்தா தான்  5 ஸ்டார் சாக்லேட் அறிமுகம் செய்து வச்சா , அவங்க பெரியம்மா கோயம்புத்தூரில் அவினாசிலிங்கம் கல்லூரியில் பேராசிரியராக இருந்தாங்க. அவங்க வரும் போதெல்லாம் 5 Star சாக்லேட் கொண்டு வருவாங்க , அதை எடுத்துட்டு ஸ்கூலுக்கு வந்துடுவா , பக்கத்துல 2 பேருக்கு ஒன்னு ஒன்னு  தருவா , எனக்கு மட்டும்  2 ,3 தருவா.
(அவ்ளோ பாசம் )

ஒரு ப்ரெளன் ஒயர்ப்பை சின்னதா வச்சு இருப்பா அதில் ஒரே புத்தகம் , நோட்டு போட்டு ட்யூஷன் வருவா , காலை 5.45க்கு எல்லாம் அவங்க வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பி விடுவேன் பெரும்பாலான நாட்களில் நான் தான் அவளை எழுப்புவேன் தூக்கத்திலிருந்து .. 8ஆம் வகுப்பில் அவளோட சேர்ந்து வள்ளியம்மா டீச்சர் கிட்ட டியூசன் போவேன் ...6 மணிக்கு நாங்க முதல் ஆளா இருப்போம் .

ரொம்ப நல்லா படிப்பா , எனக்கு ஆங்கிலம் பெரும் பிரச்சனையா இருக்கும் , பொறுமையா தான் மனப்பாடம் பண்ணுவேன். ஆனா காந்தா சீக்கிரம் மனப்பாடம் செய்துடுவா , ஆனா Pair Study என்னோட தான் செய்வா , பொறுமையா Handle பண்ணுவா , எப்பவாச்சும் கோபம் வந்தா  உமா .....ன்னு ,......கத்துவா ....

ரொம்ப கேஷ்வலா படிப்பா , கஷ்டப்பட்டுக்கவே மாட்டா , சிரிச்சுட்டு தான் இருப்பா , அதனாலயே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரே ஒரு விஷயம் எனக்குப் பிடிக்காதது .....அடிக்கடி நான் அவ பக்கத்துல பேசிட்டு , படிச்சுட்டு  இருக்கும் போது , சுத்தி இருக்கவங்க கிட்ட கன்னடத்துல பேசப் போயிடுவா ... நான் ...காந்து .... தமிழ்ல  பேசு ன்னு சொல்லித் திட்டுவேன்.

அவன் சட்டைப் பாக்கெட்டில் எப்பவும் பட்டாணி வச்சிருப்பா , அதப் பார்த்து நானும் 5 பைசாக்கு பட்டாணி வாங்கி சட்டை ஜோப்பில் போட்டுக்குவேன். அப்புறம் அது 20 பைசா வரைக்கும் 7 ,8 வருஷத்தில் விலை ஏறுச்சு. எங்க கூட மருதுன்னு ஒரு பையன் படிச்சான் , அவங்க அப்பா பொரி கடைல தான் வாங்குவேன்.

எங்க இரண்டு பேருக்குமே  சுருட்டை முடி .. அது கூட சில நேரம் ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. அவ தமிழ் , இங்கிலீஷ் 2 கையெழுத்தும் அழகா எழுதுவா .

ஒல்லியா நெடுநெடுன்னு வளர்ந்து இருந்ததால பெரிய க்ளாஸ் போக போக என்னை விட்டு அடுத்தடுத்த பின்னாடி பெஞ்சுக்குத் தள்ளப்பட்டாள். .ஆனாலும் எப்பவுமே நாங்க ஃபிரண்ட்ஸ் தான். அவள மாதிரியே அவங்க அப்பா , அம்மா இரண்டு பேரும் என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க ,

+2 முடிச்சுட்டு இரண்டு பேருமே கோயம்புத்தூர் ல தான் படிச்சோம் , ஆனா அவ அவினாசிலிங்கம் கல்லூரியிலும் நான் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் படித்தோம் . விடியற்காலை ஜலகையிலிருந்து கிளம்பும் பழனி செல்லும் பேருந்தில் ஈரோடு வரை செல்லும் போது எப்போதாவது பார்த்துக் கொள்வோம். அதுவும் கொஞ்ச காலத்தில் நின்று விட்டது.

அவள் BSC படித்து முடித்த உடனேயே திருமணம் செய்து விட , கடைசியா அவள கல்யாண மேடையில் தான் பார்த்தது ... அது முடிஞ்சு சரியா 23 வருஷம் ஆச்சு , மனசு எப்போதும் ஜலகை போனா , கடவீதிப் பக்கம்  போனா  காந்தாவை நினைக்கும் , அது ஒரு கனாக் காலம். 

அந்த ஒரு நெகிழ்வான தோழி காந்தலட்சுமிய தான் நேத்து ஜலகையில் சந்திக்க ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.
லவ்யூ காந்து❤️..... அப்போதெல்லாம் இப்படிப் பேசத் தெரியாது. இந்த மகிழ்ச்சி இன்னும் பல வருஷம் என்னுடன் இருக்கும் .

தொடரும்
அன்புடன்
உமா