Saturday 4 August 2018

வாசிப்பை நேசிப்போம் - 10

நூல் விமர்சனம்

சிறகசைப்பில் மிளிரும் வெயில்

முகநூல் நண்பரான  கோவை சசிகுமார் எழுதிய இப்புத்தகம் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ள ஒரு கவிதை நூல் .
அழகானதொரு அட்டைப்படம் ... மெதுவாக உள்நுழைந்தால் ..

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் அம்சப்ரியா தந்துள்ள, கவிதையென்னும் அன்புப் பாதை என்ற தலைப்பிட்ட வாழ்த்துரையில், கவிதை படைக்கும் சூழல்  , கவிதைப் படைப்போர் எத்தகைய வரம் பெற்றவர்கள், என்றெல்லாம் சொற்களால் அணிகலனாக்கி அழகுபடுத்தியுள்ளார்.

தொடர்ந்து , குவிந்து கிடக்கும் சொற்களினிடையில் ஒளிந்திருக்கும் கவிதை - என்று மதிப்புரை தந்துள்ள பூபாலனது வரிகளில் ... பத்திரப்படுத்தப்பட்ட  சொற்கள்  தாம் பின்னாட்களில் கவிதைகளாகி விடுகின்றன என்ற கருத்துகள் மனம் புன்னகைக்க வழிகாட்டுகிறது.

விவசாயக் குடும்பத்தில் இருந்து, அறிவியல் படித்து ஆய்வக மேலாளராகப் பணியாற்றினாலும்  இயற்கையோடு வாழ்ந்து வரும் சசிகுமார் கவிதை படைப்பது வியப்புக்குரியது அல்ல , ஆனால் ஒரு மனிதனை உயிரோடு அறிமுகப்படுத்தவும் இறந்த பின்பு வாழவைக்க உதவுவதும்  படைப்புகள் தான் என விளக்கம் கொடுத்துள்ளது சிறப்பு.

முதல் கவிதையின் வரிகளே நம்மை சுருக் என தைக்கிறது. ஆம் ... மெளன வலியறியாத எழுத்துகள் .... முட்களின் கூர்மையில் பிரசவிக்கிறது .. என முடிக்கிறார்.

93 பக்கங்களும் கவிதை வரிகள் தவழ்ந்து, ஓடி ஆர்ப்பரிக்கின்றன. எந்த ஒரு கவிதைக்கும் தனியானதொரு தலைப்பில்லை.'

உனக்கான என் கற்பனைகள் மயிலிறகாய் பத்திரப்படுத்துகிறேன் ஏதோ ஒரு ரூபத்தில் .... வரிகள் நம்மையும் மனதை ஆழ உழ வைக்கிறது , எல்லோருக்குமான  கவிதையாக இதைப் பார்க்கிறேன்

ஏறத்தாழ 80 கவிதைகள் சிறகசைப்பில் வெயிலாக மிளிர்கின்றன. அவற்றுள் 5 வார்த்தைகள் கொண்ட கவிதையும் உண்டு... 20 வரிகளுக்கும் மேலான கவிதைகளும்  உண்டு.

தாய்மையைத் தேடும் கவிதை ,
சாதிகளின் வன்மம் பேசும்கவிதை ,
அனுபவங்களுக்கான கவிதை , பிரியமானவரின் நினைவுக்கான கவிதை , தவிப்பு , படைப்பாளிகளுக்கான கவிதை , வெட்டப்படாத மரங்களின் கவிதை ,
நிழலுக்கான கவிதை , ' இரவோடு ஒரு போராட்டக் கவிதை , துணிவு பற்றிய கவிதை ,தேடலின் முற்றுப்புள்ளிக் கவிதை , தவிப்பின் தருணங்கள் பேசப்படும் கவிதை , மெளனம் கலைந்து சிரித்த கவிதை , ஏமாற்றம் வென்ற போதான கவிதை , ரசனை மரணிக்காத கவிதை , பணமிழந்த வயோதிகக் கவிதை , ஞாபகங்களுக்கான கவிதை , கடைசி சந்திப்பின் கவிதை ,
கவிஞனின் கற்பனைக், கவிதை , காற்றின் வன்மத்தில் நிரப்பிக் கொண்டிருந்தன சருகுகள் கவிதை , ..உணர்வுகளின் ஊமை வலிகளின்  கவிதை , மயானக் காடு , நடுகற்கள் , எப்போதாவது நிழலாடும் கதவிடுக்குகள் , பிறழ்ந்து போன குரோம சோம்களால் திரித்து விடப்பட்ட பாலினக் கவிதை , இறந்த கால வசந்தங்கள் , காயம் பட்ட சுவடுகள் , பூசாரியின் கண்ணீர்த் துளி , நெடுஞ்சாலையின் கதை ,மலர் விரியும் மெளனச் சப்தங்கள்  , இசை , மண் சட்டி சோறு , விரக்தி என ஒவ்வொன்றும் இயல்பாக நம்மை விரல் பிடித்து அழைத்துச் செல்லும் கவிதைகளாக இருக்கின்றன.

தலைப்பின் பெயரே நம்மை ரசிக்க வைக்கும் மயக்கத்தின் ஆரம்பமாக இருக்கிறது. சிறகு அசையும் போது ஒளிரும் வெயில் எப்படி மிதமாய் , இனிமையாய் நம் உடலை வருடிச் செல்லுமோ அது போலவே உள்ளிருக்கும் கவிதை வரிகளும் உணர்வுகளை வருடிச் செல்வதாக அமைந்துள்ளது.

வார்த்தைகள் அருவியாய் கொட்டி அழகாய் அதனதன் இடத்தில் நிரம்பி படிப்பதற்கு இதமாகவும் தெளிவாகவும் கருத்துச் செறிவின் மொத்தத் தேடலாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அற்புதமான கவிதைப் புத்தகம்

அன்பும் நன்றியும்
உமா

No comments:

Post a Comment