Friday 29 June 2018

திருக்குறள் - 3

எனக்குப் பிடித்த திருக்குறள் - 3
______________________________

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்
                                                  தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை "

பொறையுடைமை என்ற அதிகாரத்தில் முதல் குறள் இது.

இதற்கானப் புரிதல் எனக்கு 20 வயதிலே தான் வந்தது. நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சனைகள் கோபத்தாலும் மற்றவர் உடனான கருத்து முரண்பாடுகளாலுமே அதகமாக ஆரம்பித்து பின் அது பகையாக மாறி சூழலை விரும்பத்தகாத ஒன்றாக மாற்றி நம் ஆற்றலை வடித்து விடுகிறது.

ஆகவே பொறுமை என்ற ஒரு பண்பு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு படிப்பினை செய்யும் குறளாக இதைப் பார்க்கிறேன் நான்.

இந்த பூமியானது தன்னை என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறது. கடப்பாரையால்  பிளந்தாலும் , மம்முட்டியால் வெட்டித் தோண்டினாலும் , தன்னை அணு அணுவாகச் சித்ரவதை செய்தாலும்  தன்னை என்ன செய்தாலும் எந்த வித எதிர்வினைகளையும் காட்டாமல் பொறுத்துக் கொள்ளும் இயல்பைப் பெற்றிருப்பது சிறப்பு , அது போல் ....

சிறு வயது முதல் இன்று வரை எத்தனையோ மனிதர்களால் இகழ்ந்து பேசப்பட்டிருப்போம் , புறக்கணிக்கப்பட்டு இருப்போம் , கொடுஞ் சொற்களால் புண்படுத்தப்பட்டு இருப்போம் , மாறுபட்ட கோணங்களில் விமர்சிக்கப்பட்டிருப்போம். இப்படி எது நடந்தாலும் அந்த நேரத்தைக் கடப்பதற்கானப் பொறுமையும் , மனிதர்களை பொறுத்துக் கொள்ளவும் இயல்பையும் பண்பையும் நமக்குத் தந்திருப்பது குறிப்பாக எனக்குத் தந்திருக்கிறது இக்குறள் .

நேற்று இரவு வரை இந்தக் குறளின் பொருள் என்னை வழிநடத்தியுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் .

எப்போதும் வகுப்பறைக்குள் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு மாணவர் எதிர்வினையாற்றி சரியில்லாத  நிலைகளைத் தோற்றுவிக்கும் போதும் இக்குறளையே அவர்கள் முன் வைக்கின்றேன். ஆதலால் எல்லோரும் உடனே புரிந்து கொள்ளவில்லை என்றாலும் என்னைப் போல் 20 வயதிலாவது புரிந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்வார்கள் என்பது எனது மனநிலை .

வீட்டிலும் சமூகத்திலும் இதையே பின்பற்றுவதால் மனித உறவுகள் நம்மை ஏற்றுக் கொண்டு ஒரு கட்டத்தில் புரிந்து கொள்கிறார்கள் .

உறவுகள் வலுப்பட , மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ , சிக்கல்களைக் கடந்து வர, நல்ல சூழலை உருவாக்க .......

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்
                                                  தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை "

..... பின்பற்றுவோம் .

அன்புடன்
உமா

No comments:

Post a Comment