Saturday 4 August 2018

பெண்கள் பிரபஞ்சத்தின் கண்கள்

பெண்கள் பிரபஞ்சத்தின்  கண்கள் :

8 வயது முதல் 70 வயதுள்ள ஆண்கள் உள்ளடங்கிய குழுவினருடன் பெண்களின் நிலை , ஆண் எவ்வாறு ஒவ்வொரு பெண்ணையும்  பார்க்க வேண்டும் , அவரவர் நிலைப்பாட்டில்  என்ன நினைக்கின்றனர் என ஒரு கலந்துரையாடல் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நிகழ்ந்தது.

குழந்தைகள் பெரியவராகிப் போன சூழல் ... நீங்கள் எதை வேண்டுமானாலும்  பேசலாம்  , இது வகுப்பறை அல்ல , உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் என்றதும் ஒவ்வொரு குழந்தையும் மனதைத் திறந்தனர்.

பெண்கள் என்றாலே அடிக்கணும்னு தோணுது ... ஒரு 13 வயது சிறுவன்.

பெண்கள் என்றால் ஏளனம் செய்யக் கூடாது என்றான் ஒரு 8 வயது சிறுவன் , ஏளனம்னா என்ன என்றேன். இகழ்ச்சி என்றானே பார்க்கலாம். அருமை .. சென்னைக் குழந்தைகளுக்கு தமிழ் சொற்கள் பயன்படுத்தி பேசத் தெரிந்து இருப்பது கண்டு மகிழ்ந்தேன்.

பெண்கள் என்றாலே காதலிக்கத் தோணுது , சீன் போடறாங்க என்று எதார்த்தமான
உண்மைகளைக் கூறிய ஒரு நாகல்கேணி அரசுப் பள்ளி மாணவன் அவனது ஒவ்வொரு கருத்து வெளியீட்டிலும் அவன் வாழும் சூழலை  தெளிவாக அடையாளம் காட்டினான் .இது பெரும்பான்மை யோருக்கான  நிலை.

மற்றொரு 13 வயது சிறுவன் ... girls என்றாலே பார்ஷியாலிட்டி பாக்குறாங்க என்றான். உதாரணம் சொல்லு கண்ணு என்றதற்கு பள்ளிகளில் நடக்கும் சம்பவங்களைக் கூறி ஆதங்கப்பட்டான்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி குரோம்பேட்டில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவன் காதலிக்கத் தோணுது என்றான்.

மற்றும் சில குட்டிகள் , பெண்கள் என்றால் மதிக்கனும் , சகோதரியா பாக்கணும் , அம்மாவா நினைக்கனும் என ஒவ்வொருவரும் அவரவர் நிலைப்பாட்டில் ..

ஒருவன் சொல்கிறான் , பெண்களை அடிமையாக நடத்தக் கூடாது , வேலைக்காரர்கள் போல நடத்துகிறது கூடாது. எப்போப் பாரு வெறுப்பேத்தராங்க ..

சீன் போடுதல் என்றால் என்ன என விளக்குங்கள் என்றேன். ஒருவன் கூறுகிறான் , நான் சைக்கிள் நேரா ஓட்டிட்டுப் போறேன்னா , ஒரு பொண்ணு சீன் போட்டான்னு வச்சுக்க , நான் வளைஞ்சு வளைஞ்சு ஒட்டுவேன் என்று கூறி எனக்கு விளக்குகிறான் .

இப்படி எல்லாக் குழந்தைகளும்  துரு ஏறிய சிந்தனையுடன் இருப்பதற்கு வழிவகுத்து விட்டதே என வேதனையாக இருந்தது.

அவர்களது அப்பாக்களைக் கலந்துரையாடலுக்கு உட்படுத்தும் போது பெண்களை  சமமாக நடத்த வேண்டும் என்ற ஒரு கருத்தை மையமாக வைத்தே பதிலளித்தது சிறிது மகிழ்வாக இருந்தது.

உடல் உறுப்புகளால் அமைப்பால் மட்டுமே வேறுபட்ட வர்கள்  ஆண்களை விடப் பெண்கள் , பசி , தாகம் , வலி , வேதனை , உணர்வுகள் என எல்லாமும் இருவருக்கும் சமம் , வீட்டில் சகோதரிகளை , அம்மாவை மதிக்கக் கற்றுக் கொள்ளப் பழகினால், தோழமையுடன் புரிந்து கொண்டால்  சமுதாயத்தில் பார்க்கும் எல்லாப் பெண்களையும் அவ்வாறு நடத்தத் துவங்கி விடுவோம் என அவர்களுக்கு அவர்களின் பதில்களாலேயே புரிய வைக்கப்பட்டது.

ஒரே நாளில் மாற்றிட இயலாது , மறுபடியும் சந்திப்போம் எனக் கூறி இன்றைய ஞாயிறின் காலைப் பொழுது மாற்றத்தின் பொழுதாக்க வாய்ப்பு தந்த Roberto George க்கு நன்றி கூறினாலும் என்னுள் கனன்று கொண்டு இருப்பது இந்தப் பிஞ்சு மனங்களை சரிப்படுத்துவது எவ்வாறு என்பதே ...

அன்புடன்
உமா

No comments:

Post a Comment