Wednesday, 13 April 2022

என் பெயர் ரங்கநாயகி"


ஒலி வடிவில், நான் கேட்ட முதல் நூல் இது. ஆசிரியர் இந்திரா செளந்தர்ராஜன் . பரவலாக மக்களிடையே மிகவும் அறியப்பட்ட எழுத்தாளர். 

 "என் பெயர் ரங்கநாயகி" எனும்  இந்த நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது.

 என்  பெயர் ரங்கநாயகி என்கின்ற இந்த நூலை , சாதாரண ஒரு நாவல்  என்று தான் படிக்க ஆரம்பித்தேன் அதாவது கேட்க ஆரம்பித்தேன் .ஆனால் கதை நகர நகர  முக்கியமான புத்தகமாக ,  இதில் வரக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரமும் , குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக படைக்கப்பட்டதாகவும்  ஆழமாக அவர்கள்  பங்காற்றியதாகவும் தோன்றியது.

 பெண்கள் காலம் காலமாக எந்தெந்த வழிகளிலெல்லாம் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் என்றும் சமூகத்தில், திருமணம் என்பதற்கான அடையாளம் என்ன , பெண்கள் எவ்வாறெல்லாம்  திருமணம் என்ற பெயரில் 
ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் மையமாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. 

  பெண்களின் பிரச்சனைகள் குறித்து,  அவள் தோன்றிய பொழுதிலிருந்து இன்று வரை ஏராளமான வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட்டும்  ஆவணப்படுத்தப் படாமலும்  இருக்கின்றன . ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் , தன்னைச் சுற்றி வாழக்கூடிய அக்கா, தங்கை ,, அத்தை, சித்தி, பாட்டி ,  தோழி. என்று ஒவ்வொரு வகையான உறவுப் பெண்களுக்குள்ளும் இதே போன்ற பாதிப்புகளைத் தொடர்ந்து கண்டு வருவது தான் சமூகத்தின்  கள எதார்த்தம். 

  இந்த சமூகம் பெண்களின் மீது வைத்திருக்கக்கூடிய கற்பிதங்களை ஒருபக்கம்  சுட்டிக்காட்டி அவற்றை எப்படி எல்லாம் உடைப்பது என்பதையும் இந்த நூல் கதாபாத்திரங்களின் வழியே தொடர்ந்து
பேசுகிறது. 

 அக்ரஹாரத்துப் பெண்களை மையமாக வைத்து,  அவர்கள் இப்படித்தான்   இருப்பார்கள் என்றும்  பெண் என்பவள் பொதுவாகவே காதல் வசப்படுகிறவள் , அவளது கணவன் பிரச்சனைக்குரியவன் என்றால் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பொதுவாக மக்களிடையே நிலவக்கூடிய பல்வேறு நடைமுறைகளை கற்பனைகளை மக்களின் மனப் போக்குகளை அங்கங்கே உடைத்து இல்லை பெண்கள் என்றால் இப்படியும் இருக்கலாம் ஆனால் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எழுதப்படவில்லை 

 திருமணத்திற்கு இது அர்த்தமல்ல சமூகத்தில் நிலவுகின்ற ஒவ்வொன்றுக்கும்  பயப்பட்டு அர்த்தப்படுத்திக் கொண்டு அதன் போக்கில் நாம் போக வேண்டியது அவசியம் இல்லை என்றெல்லாம் கதையின் மைய நாயகியான ரங்கநாயகியின் வழியாக பெண்களுக்கு நிறைய சொல்கிறது இந்த நாவல் .

அம்முனி அம்மா வயதான பெண்மணி என்றாலும் ஐயர் வீட்டு பெண்மணி என்றாலும் அவரது வெண் உடையையும் மொட்டை அடித்துள்ள உருவத்தையும் வைத்து பிற்போக்குத்தனமாக இருப்பார் என நினைக்கும் வாசகர்களின் மனச் சித்திரத்தை அவரது உரையாடல்களால் உடைக்கிறது இந்த கதை .

அம்முனி அம்மாளின் முற்போக்கு சிந்தனை பெண்கள் குறித்து அவருக்கு இருக்கக்கூடிய எதிர்பார்ப்பு, குறித்து கவனிக்கும் போது ,சாதாரணமாக  , வயதான பெண்மணியிடம் இருக்கக்கூடிய மனப்போக்கு அல்லாமல் எவ்வாறெல்லாம் மாற்றி யோசிக்கிறார் என்று ரங்கநாயகி மீது அம்முனியம்மாள் வைத்திருக்கக்கூடிய அக்கறையின் வழியாக இந்த நாவல் பல செய்திகளை நமக்கு சொல்கிறது

 அக்ரஹாரம் முதல் பம்பாய் வரை கதாபாத்திரங்களின் வழியாக கதைக் களத்தை   வளர்த்துவிட்டு  எதிர்பார்க்காத திருப்பங்களைத் தருகிறார் கதாசிரியர் .

 ஸ்ரீகாந்தின் கதாபாத்திரமும் நமக்கு பரந்து பட்ட செய்தியைக் கொடுத்து , சமூகத்தில் ஒரு குழந்தை வளரும் போது , சூழலும்  மனிதர்களும் அக்குழந்தையின் மனப்பான்மைகளில் எவ்வாறு உளவியல் ரீதியாக மாற்றங்கள் அடையக் காரணமாக அமைந்து விடுகின்றனர் என்பதை  நாவல் ஸ்ரீகாந்த்தின் நடத்தைகளின் வழியே 
சுட்டிக் காட்டுகிறது. 

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் வரப் போராடிய நமது முத்துலட்சுமி அம்மையாரை நினைவுபடுத்துகிறார்   ரங்கநாயகி .ஆம் பம்பாயில்  ஆயிரக்கணக்கான பெண்களை வைத்து ,பாலியல் தொழில் நடத்தும் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தின் தாயான பாண்டாவை , தனது முயற்சியால் எப்படி மாற்றுகிறார்  என்பதும் , அதன் விளைவாக அத்தொழிலை விட்டு விடுதலை அடையும் பெண்களும்    அவர்களுக்கு பொருளாதார விடுதலையை சமூகத்தில் ஏற்படுத்திக் கொடுக்கும் ரங்கநாயகி கதாபாத்திரம் நம்மை நெகிழ வைக்கிறது. 

இன்றும்  கூட நாம் செய்திகளில் பார்க்கக்கூடிய பெண் குழந்தைகளின் மீதான பாலியல் அத்துமீறல் பலதாரமணம் ஏமாற்றுவேலை இணையங்களில் பெண்களுக்கான அச்சுறுத்தல்களை தருதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் சில பத்தாண்டுகளுக்கு முன்பும் வேறு வடிவில் இங்கு இருந்துள்ளது, இன்று இருக்கக்கூடிய பிரச்சனைகளை  இந்த நாவலில் இருக்கக்கூடிய நிகழ்வுகளோடு நம்மால் மிகச்சரியாக  பொருத்திப் பார்க்க  முடிகிறது என்றால் காலம் மாறினாலும் நூற்றாண்டுகள் மாறினாலும் பெண்களுக்கான பிரச்சினைகள் குறையாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன  என்பதற்கு இந்த படைப்பு  ஒரு உதாரணம்.

அதே சமயம் அப்பிரச்சனைகளால் முடங்கிப் போகக் கூடாது என்பதைக் கூறுவதற்கும் இந்நாவலை மிகச் சிறந்த உதாரணமாகப் பார்க்கலாம். 

கதையின்  போக்கிலேயே பெண்களுக்கான பிரச்சனைகளை மிக அழகாக வடிவமைத்து இருக்கிறார் நூல் ஆசிரியர் குடும்பத்தில் இருக்கக்கூடிய வாழ்வாதார பிரச்சனை முதல் அவர்களுக்கான மானப் பிரச்சனை காமம் குறித்த பிரச்சனை திருமணம் குறித்த பிரச்சனை ஏன் அவர்கள் இந்த சமூகத்தில் வேசி என்று தங்களை மாற்றிக் கொள்கின்றனர் என்பதற்கான காரணங்கள்   திருநங்கைகளுக்கான ஒரு பகுதி அவர்களின் முக்கியத்துவம் உளவியல் சார்ந்து எவ்வாறு மனிதர்களை அணுகுவது பிரச்சனைக்குரிய ஆண்களை மனைவி என்ற இடத்தில் இருக்கக்கூடிய பெண் எவ்வாறு அணுக வேண்டும் என்றெல்லாம் ஏராளமான விஷயங்களை இந்த புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது .

 எல்லாவற்றையும் தாண்டி பெண்கள் வாழ்வதற்காக தான் பிறந்திருக்கிறோம் என்ற கருத்தை சில பெண்கள் இறந்து விட்டதன் கதை கூறியும்  ரங்கநாயகியின் வழியாகவும் அறிந்து கொள்ள , இந்தக் கதை துணை செய்கிறது ஒரு ஆணால் ஏமாற்றப் பட்டாலோ அல்லது தவறு நிகழ்ந்தாலும் , தான் தான் அதற்கு காரணம் என்றும் தான் இந்த சமூகத்தில் வாழத் தகுதியற்ற ஒரு நபர் என்றும் பெண்கள் முடிவு செய்து தற்கொலை செய்துகொள்வது இன்றும் நடக்கிறது அவற்றையெல்லாம் செய்யக்கூடாது தவறு என்ற அறிவுரை சொல்லாமல் நிகழ்வுகளின் வழியாக கதைகளின் வழியாக கதாபாத்திரங்களின் வழியாக பெண்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது இந்த நூல்.

தமிழ் எழுத்துலகில் என் பெயர் ரங்கநாயகி என்ற இந்த படைப்பை மிக முக்கியமானதாகப் பார்க்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

குரல் வடிவில் தந்தவர் ஒவ்வொரு கதாபாத்தித்திற்கும் குரலை மாற்றி நம்மை கதையோடு ஒன்றிவிட வைப்பது ஆச்சர்யம். 
வித்யாசமான அனுபவமும் கூட

அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின நல்வாழ்த்துகள் 









Saturday, 9 April 2022

பூப்பு -மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும்


 பூப்பு -மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும் 

பதிப்பகம் : வாலறிவன்
விலை = ரூ 50
பக்கங்கள் : 48
ஆசிரியர் : ரேணுகாதேவி 

இதை ஒரு  விழிப்புணர்வு நூலாகப் பார்க்க முடிகிறது . இந்த உலகம் சரிபாதி பெண்களால் ஆனது எல்லா பெண்களுமே எப்போதும் பலவழிகளில் ஒடுக்கப்படுகிறார்கள்.
தொடர்ந்து எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு பல கோணங்களிலிருந்து பிரச்சனைகள்    உருவாகிக்கொண்டே
இருப்பதனை நாம் காலம் காலமாக வரலாற்றைப் படித்தாலும்  அறிந்துகொள்ளலாம் . நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை கவனித்தாலும் புரிந்து கொள்ளலாம். 

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு விடுபட்டு
மீண்டும் பாதிக்கப்பட்டு   விடுபட்டு
வளர்ந்து கொண்டே இருக்கின்றனர் பெண்கள் . .அப்படிப்பட்ட பெண்களுக்கு உடல் ரீதியாக இயற்கையாகவே அமையப் பெற்றது தான் இந்த மாதவிடாய் என்ற செயல். ஆனால் அது பெரும்பாலான பெண்களுக்கு வலியாகவும் வேதனையாகவும் சொல்ல முடியாத பிரச்சினைகளைத் தருவதாகவும்  தொடர்கிறது .அது போலான நேரங்களில் பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உடல் நலத்துடனும் தங்களை கவனித்து பாதுகாத்துக்   கொள்ள வேண்டும் என்று விரிவாகப் பேசுகிறது இந்த நூல் .

பதின்பருவ குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பெண்கள் வாசித்து தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் உள்ளன. ஆண்களும் வாசித்து தங்கள் வீட்டுக்  குழந்தைகள் , சகோதரிகள் , இணையர் , தோழிகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் வழிகாட்டலாம். 

 பொதுவாகவே மாதவிடாய் சமயங்களில் பெண் குழந்தைகளை அவரவர்  வீடுகளிலேயே பல காரணங்களைச் சொல்லி அவர்களை ஒதுங்கி இருக்க வைத்தல் , தனிமைப்படுத்துதல்  போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன .அம்மாக்களுக்கும் குழந்தைகளிடம் இது போன்ற சமயங்களில் எவ்வாறு அவர்களை வழிகாட்டுவது என்று தெரிவதில்லை .அக்காக்கள் பக்கத்து வீடு என்று வயதில் பெரியவர்கள் அவர்களை விடக்  குறைந்த வயதில் இருப்பவர்களை வழிகாட்ட தேவைப்படும் அத்தனை செய்திகளும் இதில் அடங்கியுள்ளன.

 இந்த மாதவிடாய் என்பதை , நாம் ஒரு பெரிய விஷயமாகவே பார்க்காமல் அது குறித்து பேசவும் விவாதிக்கவும் உரையாடவும் தயங்குகிறோம். மிக முக்கியமான ஒன்று , ஆனால் அலட்சியப்படுத்துகிறோம் 
இப்படியான சூழலில் மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயல்பாகவே இயற்கையாக மாதம்தோறும் நடைபெறக் கூடிய செயல் தான் , ஏன் ஏற்படுகிறது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன, அதிலிருந்து நாம் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நம் உடலையும் மனதையும் காத்துக் கொள்ளலாம், உடல் நலமும் மனநலமும் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது எப்படி அதற்கான உபகரணங்களை பயன்படுத்துவது இதற்கான விழிப்புணர்வை எங்கிருந்து எடுத்துச் செல்வது போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய நூல் தான் ரேணுகா தேவி அவர்கள் எழுதிய பூப்பூ என்ற இந்த மிகச் சிறிய புத்தகம்.

 ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாக 16800 நாப்கின்களை பயன்படுத்த வேண்டியுள்ளது இதனால்தான் இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன என்ற பொருளாதாரம் சார்ந்த விவரம் குறிப்பையும் தருகிறார் பருவ குழந்தைகள் குறிப்பாக பள்ளி குழந்தைகளிடம் சென்று சேர வேண்டிய அருமையான புத்தகம் .

யாரும் பேசத் தயங்கும் யாரும்  பேசாத விஷயங்களைப் பேசுகிறது ஒரு கோணத்தில் அறிவியல் கையேடு போல இருந்தாலும் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருப்பதனால் இதனை ஒரு விழிப்புணர்வு புத்தகமாக எடுத்துக்கொள்ளலாம் பள்ளி ஆசிரியர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் பயிலக்கூடிய பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளின் அம்மாக்கள்  என அனைவரும் புத்தகத்தை வாங்கி  வாசித்து புரிதலை ஏற்படுத்த வழிவகை செய்யலாம் தொடர்ந்து இது போன்ற குழந்தைகளுக்கான  அவசியமான புத்தகங்களை எழுத   ரேணுகா தேவி ஆசிரியருக்கு  வாழ்த்துக்கள் மா.

(நேற்று எனது மாணவிகள் 50 பேருக்கு முதல் முயற்சியாக பூப்பு புத்தகத்தை வாங்கி பரிசளித்துள்ளேன். )

உமா 

Friday, 4 February 2022

டுஜக் டுஜக்


டுஜக்..
டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி

ஆசிரியர் : தேனி சுந்தர்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ 100
பக்கங்கள் : 112

அதென்ன தலைப்பு இப்படி இருக்கே என்று தான் யோசித்தேன் , பக்கம் 76 இல் தான் இந்த டுஜக். டுஜக் .... இருந்தது. 

ஒரு தந்தை தனது குழந்தைகளின் உரையாடல்களை , அவர்களது மொழியிலேயே பதிவு செய்த ஒரு அழகான இலக்கியம் இது. பெரியவர்கள் வாசிக்க வேண்டிய மிகச் சிறந்த குழந்தை இலக்கியமும் இது. ஏன் பெரியவர்கள் வாசிக்க வேண்டும் எனக் கூறுகிறேன் என்றால் , குழந்தைகள் குழந்தமையுடையுடன்  தங்களை உயிர்ப்பாக வைத்துக் கொண்டு  தான் வாழ்கின்றனர். ஆனால் வளர்ந்த பெரியவர்களோ தங்களிடம் இருக்கும் குழந்தமையை இழந்து அல்லது மறந்து உலக இயல்புகளுடன்  தங்கள் வாழ்க்கையைப் பொருத்திப் பார்ப்பவர்களாகி மாறி விடுகின்றனர். இறுகிப் போன வளர்ந்தவர்களின் மனதை, எண்ணங்களை ஆசுவாசப் படுத்தி மகிழ்விக்கிறது பாப்பாவின் உரையாடல்கள் . வாசிக்கும் போது நம்மை அறியாமல் குழந்தைகளாகவே மாறி விட முடிகிறது. வாய் விட்டு சிரித்து அனுபவித்து ரசித்து இந்த வரிகளில் மழலைகளின் மொழிக்குள் ஒரு உயிர்ப்பைக் கண்டடைய முடிகிறது. 

நமக்கு நன்றாகவே புரிகிறது அடுத்தடுத்த வரிகள் இப்படித்தான் வரும் என ஆனாலும் ரசித்து வாசிக்க முடிந்தது. நான் வீட்டில் இதை வாசித்து ஒவ்வொரு பதிவின் முடிவின் போது என்னையறியாமல் சிரிக்க , எனது இணையர் , என்ன தனியாக சிரிக்கறே ..அப்படி என்னத்த படிச்ச எனக் கேட்க , திரும்ப ஒவ்வொன்றையும் வாய் விட்டு பாப்பா போலவே நான் வாசித்துக் காட்ட அங்கேயும் இதே ரசா வாதம் நிகழ்ந்து முகமலர்ச்சியுடன் சிரிப்பதைக் கண்டு இறுதியில் இருவரும் சேர்ந்து சேர்ந்து சிரித்து மகிழ்ந்து கிடந்தோம் .

இதெல்லாம் 
என்னன்ன கலர்னு
பாப்பாவுக்கு
 சொல்லவே தெரியாது ..

ம்ம்..
எனக்குத் தெரியும்.

எங்க சொல்லுங்க
பாக்கலாம் .

மஞ்சள் ..
யெல்லோ ..
ஒல்லோ ..
குல்லோ ..
புல்லோ ...
தல்லோ ..

அய் ..
சூப்பரு பாப்பா .. 

இனத வாசிக்கும் போது நம்மால் ரசிக்காமல் சிரிக்காமல் இருக்க முடியுமா சொல்லுங்கள் ...

 இந்தக் கொரானா உரையாடல் பாப்பாவையும் விட்டு வைக்க வில்லை. 
அந்த தோட்டத்துக்குள்ள தான்
கொரானா ஒளிஞ்சிருக்கும் .
நம்ம வெளாடுறப்ப
அப்படியே வந்து
பைக்குன்னு 
கடிச்சு வச்சுப்புடும் ...

இதை நாம் வெறுமனே வாசித்தால் அர்த்தப்படுமா ?  அர்த்தங்களைத் தேடினால் டுஜக்.. டுஜக் சந்தோஷத்தைத் தராது. அர்த்தமற்ற பொக்கிஷம் இது. 

போப்பா லூசுப் பா ...
நானு இன்னும்
பெரிய பிள்ளயே ஆகல ...
நானு பாப்பா ....

என்கிற போது வாய்விட்டு சிரிக்காமல் இருக்க முடியுமா ?

என்னய பாருப்பா ...
எப்புடி சிந்தாம
சாப்பிடுறேன் ..

என்னய பாருப்பா ...
எப்புடி 
குளிக்குறேன்னு பாருப்பா ..

ம் ..

எப்புடி
தவ்வுறேன்னு பாருப்பா
எப்புடி
ஊஞ்சல் ஆடுறேன்னு பாருப்பா
போப்பா ...
பாக்கவே மாட்ற ....

பாக்குறேன்ல  பாப்பா
பாத்துக்கிட்டே இருக்கணும் ....

சூரியனப் புடிச்சு
என்னா பாப்பா
செய்யப் போற ...

ம்ம் ...
தொட்டியில
படுக்கப் போட்டு
தூங்க வைக்கப் போறேன் ...
ஹா ஹா ஹா .....

என்னப்பா
ரெண்டு அடுப்புல 
ரெண்டு பால்சட்டி

போப்பா ...
அந்தப் பக்கத்தான்
பழைய பாலு ...
இது புதுப் பாலு ...
நீ தப்புத் தப்பா சொல்லுற ...

ரெண்டு மலப்பாம்பு
வந்துச்சுப்பா ....

செடிக்கெல்லாம் எப்புடி
மாஸ்க் போடுவாங்கப்பா ? 

குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிறைந்தது என்பதை நாம் எல்லோருமே அறிவோம் .ஆனால் உணர்கிறோமா என்பது தான் இந்தப் புத்தகம் நமக்கு தரும் செய்தி . 

உங்கள் வீட்டிலும் எனது வீட்டிலும் நாம் இந்த மழலைகளின் உரையாடல்களைக் கடந்து தான் வந்திருப்போம். அந்தத் தருணங்களை மீட்டெடுக்கிறார் சுந்தர். அதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும். ஒவ்வொரு சொல்லும்  ஒவ்வொரு பவுனு தான் போங்க. 

அசை போட்டு அசை போட்டு சந்தோஷப்பட   டுஜக் டுஜக் ... இல் ஏராளமான குட்டிக் குட்டிக் கதைகள் இருக்கின்றன .

நீங்களும் வாசித்துப் பாருங்கள் டுஜக்  
டுஜக் .... குழந்தைகள் குறித்த ஒரு மழலை இலக்கியம் என்பது புரியும். 

இந்தப் புத்தகத்தின் கடைசி பக்கம் தான் மிகவும் கனமானது. ஆமாம் ...

நம்ம பாப்பா
ஸ்கூல்ல விட்ட பிறகும்
இதே மாரி ...
இம்புட்டு பேச்சு பேசுமாங்க ...?
அப்ப தான் தெரியும்
நம்ம பாப்பாவோட
ரியாலிட்டி ...

இல்ல இல்ல ..

அப்ப தெரியுறது
பள்ளிக்கூடங்களோட
ரியாலிட்டி ..

வரும் புத்தகத் திருவிழாவில் நிறைய பெரியவர்களைச் சென்றடைய வாழ்த்துகள்....

அன்புடன்
உமா







Friday, 5 November 2021

ஜெய் பீம் :

ஜெய் பீம் :

திரைப்படமாக நினைக்க முடியாமல் நகரும் உண்மைச் சம்பவம். பாராட்டுவதாக ஆரம்பித்தால் .... சின்னச் சின்ன பாத்திரத்தில் வரும் நடிகர்கள் முதல் திரைக்கதை , இயக்குநர் , துணை இயக்குநர்கள் இப்படி யாரையும் விட்டு விடாமல் பாராட்ட வேண்டும் . வழக்கறிஞராக தன்னைப் பொருத்திக் கொண்டு  படம் முழுவதும்  இயங்கும் சந்துரு இப்படத்தின் மிகப் பெரிய பலம் என்றால் மற்றொரு பலம் செங்கனி .  திரைப்படத்தைப் பார்த்து விட்டு எவராலும் குறைந்தது இரண்டு நாட்களாவது அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாதுதான். 

திரைக்கதையில் மிகையே இல்லாமல் உண்மைச் சம்பவங்களைக் கோர்த்து மிக அழகியலாகத் தந்திருக்கும் இயக்குநர் Gnana Vel  தா.செ. ஞானவேல் ,தனது  #அருஞ்சொல் பேட்டியில் இப்படம் உருவான வரலாற்றைக் குறித்துப் பதிவு செய்துள்ளார். மூன்று வருட உழைப்பால் உருவான இத்திரைப்படத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக. அம்மக்களுடன்  , தான் பெற்றிருந்த கள  அனுபவத்தையும் சேர்த்து தான் பார்க்கவேண்டும் என்கிறார்.  திரைப்படத்தை ஆழமாக கவனித்தால் இது நமக்கு நன்கு புலப்படும். 

காவல் நிலையத்தில் பயங்கர சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்ட ராஜாக் கண்ணுவின் கண்ணுக்குள் மிளகாய்ப் பொடித் தூவிப் பார்த்து உயிர் இருக்கிறதா ? இல்லை இறந்து விட்டாரா எனப் பார்க்கும் காவல் துறை நண்பர்களது செயல்  காட்சியாக இடம் பெற்றிருக்கும் . படம் பார்ப்பவர்கள் இது திரைப்படத்திற்கான புனைவாக இருக்கலாம் என்று எண்ணக் கூடும். ஆனால் உண்மையாகவே பத்து பைசாவுக்கு மிளகாய்ப் பொடி வாங்கி வந்து கண்ணில் விட்டுப் பார்த்த காவலர்கள் பற்றி நீதியரசர் சந்துரு தனது அருஞ்சொல் நேர்காணலில் கூறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இச்சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட  இனமான இருளர் மக்கள் , வீடு வாசல் , பட்டா , ஓட்டு , சாதிச் சான்றிதழ் எதுவும் இல்லாததால் , கேட்பதற்கு நாதியற்று இருப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகார பலமிக்க பதவியில் இருக்கும் ஒரு பிரிவினரால் நடத்தப்படும் வன்கொடுமைகளை இதைவிடக் காட்சிப் பதிவு செய்திட முடியாது தான். ஆனாலும் இது ஒரு சின்ன மாதிரி (Sample) தான். இதைப் போல ஆயிரம் மடங்கு கொடுமைகள் காவல் நிலையங்களில் அதிகார மையங்களில் நடக்கின்றன , நமது கவனத்திற்கு வருவதில்லை என்கிறார் நீதியரசர் சந்துரு .

எந்த வித கதாநாயக  பிம்பமும் இல்லாமல் நியாயத்தின் பக்கம் நின்று இறுதி வரைப் போராடும் சூர்யாவின் மீதான மதிப்பு கூடுகிறது. மற்றொரு கோணத்தில் இத்தகு சமூகப் பிரச்சனையைக் கதையாக அவரிடம் இயக்குநர் பகிர்ந்த போது தயாரிப்புக்காகத் தான் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் வழக்கறிஞராக  வரும் சந்துரு ரோலை நானே செய்கிறேன் என முன் வந்திருப்பதும் அவரது நடிப்பு அனுபவத்தில் ஒரு மைல்கல் ..நாயகியும் காதல் காட்சிகளும் இல்லாமலேயே படம் இத்தனை அளவுக்கு மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறது என்றால் படத்தின் மொத்தக் கதையும், களமும் உண்மையைப் பிரதிபலிப்பது தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. 

திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்து சிலாகித்து , நெகிழ்வது மட்டும் தானா ?
உண்மையாகவே படத்தின் வெற்றி என்பது குறித்தும் பேசுகிறார் இயக்குநர். திரைப்படத்தைப்  பார்க்கும் ஒவ்வொருவரும் குற்ற உணர்வை உணர்வது  என்கிறார். 

இதோடு சேர்ந்து நாம் உணர்வது , குற்ற உணர்வு தோன்றுவது மட்டுமல்ல எங்கெல்லாம் இப்படியான அநீதிகள் நிகழ்கிறதோ அங்கு குரல் எழுப்பவும் , அந்த மக்களுக்காகத் துணை நிற்கும் தைரியமும் தான் பொதுச் சமூகத்திற்கு வர வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறது சந்துரு பாத்திரம். 

லட்சக்கணக்கில் பணம் தந்து சமரசம் பேச வரும் அதிகாரியை துட்சமாகப் புறந்தள்ளி நீதி வேண்டும் என்கிற செங்கனியின் பாத்திரத்தை உள் வாங்கி மனப்பான்மையில் மாற்றம் வர தங்களைத் தயார்படுத்திக் கொள்வது இன்றைய நமது சமூகத்தின் பிரஜைகளுக்கு  மிக அவசியமான பாடமாகிறது. 

இப்படியான பெயரளவில் இயங்கும்  ஜனநாயக சமூக அமைப்பில் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டாலும் காவல்துறையினரது மூளையிலிருந்து அதைத் துடைத்து எறிதல் இயலாத காரியமாக இருக்கிறது என்கிறார் நீதியரசர் .  ஆகவே தான் எந்தக் குற்றங்கள் நடந்தாலும் இவர்களைக் குறி வைக்கிறது அராஜக அதிகாரம் . 

விளிம்பு நிலை மக்கள் , அடித்தட்டு மக்கள் என்று நாம் அடிக்கடி நாம் பேசுகிறோம். ஆனால் அவர்களைக் கடந்து திக்கற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பிரிவினரும் இருக்கின்றனர் என்பதை பொதுச் சமூகத்திற்கு இடித்துரைக்கும் திரைப்படமாக ஜெய் பீம் ❤️❤️

இந்த  நிகழ்கால வரலாற்று ஆவணத்தில் பணிபுரிந்துள்ள அத்தனை பேருக்கும் பாராட்டுகளை நாம் தெரிவித்துக் கொள்வதோடு தம்பி செந்தில் ஜெகநாதனுக்கு  Senthil Jagannathan  .... திரையில் உனது பெயரைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி கண்ணு❤️. .

பிரபா கல்விமணி ஐயாவின் களப்பணியும் இங்கு  இணையாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. 

கீழே த.செ. ஞானவேல் , நீதியரசர் சந்துரு இருவரும்  அருஞ்சொல் இணையத்தில் இப்படம் குறித்து அளித்துள்ள நேர்காணல்களை இணைக்கிறேன். அவசியம் பாருங்கள் . அவை இப்படத்தை வேறொரு வகையில் புரிந்து கொள்ள உதவும்.

(கூடுதலாக ....
இருளர்கள் மட்டுமல்ல , தாழ்த்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து தரப்பிலும் சாதிச் சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் மக்களையும் இங்கு நாம் பதிவு செய்கிறோம். பள்ளிக் குழந்தைகள் வழியாக அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள் என்ற நினைப்பை ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் )

உமா❤️

https://www.arunchol.com/director-gnanavel-interview-04-11-2021-arunchol-jaibhim

அநீதிக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும்: சந்துரு பேட்டி https://www.arunchol.com/justice-chandru-interview-on-suriya-jai-bhim-arunchol


Monday, 11 October 2021

இடைவெளியில் உடையும் பூ

 இடைவெளியில் உடையும் பூ 

 கவிதைப் புத்தகம் 
ஆசிரியர் :அன்புத்தோழி ஜெயஸ்ரீ 
வெளியீடு : இடையன் இடைச்சி நூலகம் 
பக்கங்கள்: 112
விலை : ரூ 150

 புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்க்கும் பொழுது ஒரு பூ உடைந்து கீழே சிதறுவது போல  தோன்றுகிறது. .  

 ஜெயஸ்ரீ:  இவர் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோவையில் வசித்து வருகிறார் அவருடைய வானொலி நிகழ்ச்சித்  தொகுப்பின் பெயர்தான் அன்புத்தோழி . ஆகவே தன்னை "அன்புத்தோழி ஜெயஸ்ரீ " என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார் அடையாளம் மட்டுமல்ல அவர் உண்மையாகவே அன்புத் தோழியாக திகழ்கிறார் என்பது தான் இந்த கவிதைகளிலிருந்து  புரிந்து கொள்ளக் கூடிய ஒரு கருத்தாகும் . .

 வலியைக் கலை செய்யும் வார்த்தைகள் என்று தலைப்பிட்ட ஒரு வாழ்த்துரையை அல்லது அணிந்துரையை கவிஞர் வைரமுத்து அளித்துள்ளார் .மௌனத்தை திறக்கும் கவிதைகள் என்று மற்றொரு  கவிஞர் அம்சப்ரியா என்பவர் பாராட்டியுள்ளார் .

அதனைத் தொடர்ந்து பூக்களைத் திருடிய சிறுமியின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற தலைப்பில் மிக அழகாக தன்னுரை தந்துள்ளார் எழுத்தாளர் .

 அவர் சொல்வதில் மிகவும் குறிப்பிடத்தக்கது, என்னோடு நீங்கள் பயணிக்க வேண்டுமாயின் இயந்திரங்களோடு அல்லாது இதயங்களோடு பழகி இருத்தல் அவசியம் ஏனெனில் இவள் ஒரு இலக்கியவாதி என்பதைவிட இலக்கு உள்ள வியாதி என்பதே சரி என்று குறிப்பிடுகின்றார் அதாவது அவருடைய  கவிதை மொழியானது முழுக்க முழுக்க அன்பைத் தோய்த்து தொடர்ந்து வெவ்வேறு பரிமாணங்களில் கவிதை வரிகளாக நமக்கு கொடுக்கின்றது. 

நம் அன்றாடக் காட்சிகளிலிருந்து ஒரு கவிதையாக இதைப் பார்க்கிறேன். 

 தோளில் ஒரு பையோடு 
கைபேசியில் கண்வைத்து
 குதிகால் செருப்பு பட்டென இடறித் தடுமாறி 
விழப் போகும் எவளையுமினி அலைபேசிப் பைத்தியமான தீர்ப்பிட்டு சபித்து விடாதீர்கள் ......

தனிமையை கட்டிக் கொண்ட காதல் காரியின் கடைசி தேடலின் வழிகளை வார்த்தைகள் உரைக்கவியலாது வேண்டுமெனும்  போதெல்லாம் 
உடனே கையை பிடித்துக் கொள்ளும் அத்தனிமை  போன்றதொரு 
சிறந்த துணை வேறொன்றும் இல்லை என்று 
வேண்டுமானால் சொல்லிப் போங்கள்......

 வேருக்கு நீர் ஊற்ற நேரமில்லை எங்களுக்கே தாகம் தீர்த்த நீர் போதவில்லை முற்றியதே கலி .... 

அவளுக்கு அஞ்சலி என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதையின் வரிகள் இதோ

ஆண்மகன் உனக்கவள் பண்டமாகப்  பிறந்தவள் 
மறைமுகப் பாடஞ் சொன்ன 
சமூக அவலங்களைக் கொளுத்துங்கள் 
பால்விழைவு வெறியாகியினியும் வேட்டைகள் தொடராமல் இருக்க வெட்டியே போடுங்கள் 

  வன்கொடுமை செய்தால் வாலிப முருக்கை 
முடங்கிப் போகச் செய்தல் வேண்டும் செய்வீர்களா ?
தீர்ப்பு இலகுவானால்  தீக்காமம் இன்னும் இரையாக்கி 
எத்தனை சிதைகளை மூட்டுமோ .....

என்று சமூகத்தின் பால் இருக்கும் கோபத்தைக் கக்குவது சில இடங்களில் தெரிகிறது .

இன்னும் சில வரிகள் .....

 நண்பா
 தேவதை என்றழைக்கும் வரையே தேவதைகள் தேவதைகள் 

பறவை மொழி .....என்ற தலைப்பில் ஒரு கவிதை ...

மனிதர்களின் அளவுகோல் கொண்டு இப்பறவைகளை அளக்காதீர்கள் அவற்றின் மொழி உங்களுக்கு
அறவே  தெரிவதில்லை 

எப்போதும் அப்பறவையின் காதல் பழங்களின் மீது அல்ல
 வேர்களில் இருப்பதினாலே
 விதைத்துப் போகிறது
தன் எச்சத்தால் 
பல்லாயிரம் பழமரம்

 ஒரு பறவையின் இருப்பானது 
பறத்தலன்றி பலவும் உண்டு 

பிஞ்சு நடையின்னும் பயிலா 
கொஞ்சு மழலையின் அரையாடையென அநியாய விலையோடு அடித் தொடையில் 
படுகின்ற சிவந்த கோடுகளைப் பதித்த நாப்கின் எனும் நவீனம் 
தாய்மை தொலைந்த புது யுகத்தைக் காணும்  
எம் கண்கள் வலிக்கையில்.....

 காலமெல்லாம் புதைந்து காத்திருக்கும் சிறு குளங்கள் உடையோடு ஒட்டி உறவாடி வைரமாக வைராக்கியம் கொண்டு ....என்று தொடங்கும் ஒரு கவிதை இறுதியில் ..... இப்படி முடிகிறது 

எந்த இலக்கும் இன்றி வந்து கலக்கும் ஒரு  வான்துளியில்
வாழ்வின் நீளம் உணர்கிறது 
தன் ஆழ்கடல் இலக்கின் 
எல்லைகள் வெளிச்சம் பெற இத்துனையும் கடந்தாகத்தான் வேண்டுமென 
கனத்த மனதோடு விடைபெற்று விரைந்தோடி 
அவ்வோடை நதியாகி நகர்கின்றது ...

  ஹைக்கூ கவிதை போல ஏராளமான கவிதைகளை தொடர்ந்து பல பக்கங்களில்  தருகிறார் ....

 இல்லப்  பா சொல்லு  டா 
ஓரெழுத்து கவியில் தான் 
வழுக்கி விழுகிறோம்.....

 உன் பெயர் சொல்லி 
நான் வளர்த்த ரோஜா செடி 
உன்னை போலவேதான் சிரிக்கின்றது ஒவ்வொரு பூக்களிலும் 
உனக்கு முட்கள் தவிர 
வேறொன்றும் தெரிவதில்லை.....

ஓர் ஈர நாளில்
தின்னக் கிடைத்த
சுடு சோளத்திடம்
எங்கே விளைந்தாய்
உன்னைச் சுட்டது யார்
என்றெல்லாம் நான் 
கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் 
நீங்கள் ?

நம்மை அறியாமல் உதடுகளைப் பிரித்து 
ரசித்து சிரிக்க வைத்த வரிகள் ....

கவிஞர் தன் மனதில் உள்ளன யாவற்றையும் கவிதை வரிகளாக வெளிக் கொண்டு வர முயற்சித்து வெற்றியும் பெற்றுள்ளார்.தமிழின் மீது ஆர்வமும் சொற்களின் மீது காதலும் கொண்ட கவிஞராகத் தெரிகிறார். இயல்பான உணர்வுகளை அவை வெளிப்படும் போதே  கவிதைகளாகப் படைத்து விட்டு நகர்கிறார். பறவைகள் , மாமரம் , பெண்கள் , ஆண்கள் , அன்பு , ஏக்கம் , காதல் , காமம் , அலைபேசி என இவரது கவிதைகளின் கருப் பொருட்கள் அன்றாடங்களின் பேசு பொருளாகவே இருப்பதால் நம்மால் லயித்து வாசிக்க முடிகிறது . இன்னும் வரும் காலங்களில்  கூடுதல் மெருகேறிய  கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள் அன்புத் தோழி ஜெயஸ்ரீ .


வாசிப்பை நேசிப்போம் குழுவிற்கு நன்றி 

இந்தப் புத்தகம் என்னை வந்தடைந்தது ஒரு சுவாரசியமான  அனுபவம் என்று சொல்லலாம் .இது என் கைகளில் கிடைத்து  மூன்று மாதங்கள் முடிவடைந்துவிட்டன. எப்போதுமே ஒரு புத்தகத்தை   நம் மீது அன்பு வைத்து அனுப்பினார்கள் என்றால் நான் உடனே வாசித்து அது குறித்து எழுதுவது வழக்கம் ஆனால் என்னுடைய சூழல் இந்த புத்தகத்தை நான் தொடர்ந்து வாசிக்க இயலாமல் காலம் தாழ்த்திக் கொண்டே போனேன் ஒரு காலகட்டத்தில் இந்த புத்தகத்தை நான் வேறு ஒரு ஊரில் விட்டு வந்து தொலைத்து விட்டதாக எண்ணி  திரும்பவும் தகவல் கிடைத்து   தபாலில் அனுப்பக்  கூறி அதன் பிறகு வாசித்தேன். 

எதற்காக சொல்கிறேன் என்றால் மிகவும் சுவாரசியமான அனுபவம் இந்த புத்தகத்தை நான் வாசித்து எழுதுவது என்பது .அவருடைய அன்பு கலந்த ஒரு பரிசாக இதை எனக்கு அவராகவே என்னை தேடி எனது விலாசம்  கேட்டு எனக்கு அனுப்பி வைத்தார்  ஜெயஸ்ரீ.
வாசிப்பை நேசிப்போம் குழுவில் என்னை அறிந்ததாகக் கூறி   முகவரி கேட்டாங்க ....ரொம்ப அழகான ஒரு கடிதமும் எனக்கு இதோடு வைத்து அனுப்பியிருந்தார்  


Sunday, 10 October 2021

நூல் :கோபல்ல கிராமம் -

நூல் :கோபல்ல கிராமம் - 

ஆசிரியர் 
கி.ராஜநாராயணன்

 மக்களின் மொழியில் கரிசல் இலக்கியம் தந்தவர் என எல்லோராலும்  பாராட்டுக்குரியவராக இருப்பதை இந்த நூலை வாசிக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஒரு தரிசான காட்டு நிலம் ..... பசு மாடுகள் நிறைந்த , வளமான கிராமமாக 
மாறிய ஒரு கதையை பூட்டியின் வழியாக காட்சிகளைக் கண் முன் நிறுத்தும்  ஒரு சுவையான பகுதியைக் கடந்து ,  மக்கள் இந்த பூமியை தாங்கள் வாழக்கூடிய  ஒரு
வசிப்பிடமாக உருவாக்கிய வரலாற்றைத் தாங்கி படைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.   . 

ஒரு கிராமத்தின் தோற்றம் , அங்கு வாழும் மக்களின் இயல்பு , உயிரினங்களின் அசைவு , அவர்கள் செய்யும் தொழிலின் நேர்த்தி , குடும்ப வாழ்க்கை முறை என மிகவும் இயல்பாக வரிக்கு வரி அங்கே நம்மையே வசித்த அனுபவத்தைக் கொடுத்து நகர்ந்து செல்கிறது நாவல் 

கதைகளுக்குள் கதை என்று ஒரு பொது மையத்திலிருந்து அதைச் சுற்றிச் சுற்றி கதைகள் உருவாகியும் கதைகளுக்குள் எந்த நெருடலோ முரணோ இல்லாமல் இணைப்பும் கொடுத்து ஒரு நாவல் உருவாகி அதை அந்த மக்களின் மொழியிலேயே நமக்கு அளித்துள்ளார் கி.ரா. 

ஒரு பெண்ணைக் காப்பதற்காக தங்கள் இருப்பிடத்தை விட்டு கூட்டமாக வெளியேறி தப்பித்து வேறொரு நிலத்தில் தங்கள் வாழ்க்கையை உருவாக்கி பல தலைமுறைகளுக்குப் பிறகு செழிப்பான ஊரின் வரலாற்றைக் கதையாகச் சொல்லி ஆங்காங்கே சுவை கூட்ட கதை மாந்தர்களைப் புதிது புதிதாகப் படைத்து அவர்களது செயல்பாட்டின் வழியே பயணிக்க வைத்து கோபல்ல கிராமத்தை படைத்திருக்கும் நேர்த்தி நம் மனதில் ஆழமாக ஊடுருவுகிறது.

வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஆங்கிலேயரின் ஆட்சி , கும்பினிகளின் மேற்பார்வை இவர்களின் துன்பங்களிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளக் கையாளும் வழிவகைகள் இப்படி ஒன்றோடு ஒன்று பிணைந்து புனைவின் வடிவத்தில் அபுனைவு படைப்பாக அறிய வைத்தது .

உமா

என்னுயிர் நீயன்றோ

என்னுயிர் நீயன்றோ 

பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
விலை : ரூ .150

கவிதை நூலின் ஆசிரியர் : 
 அன்புடன் ஆனந்தி. . Anbudan Ananthi 

தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க வாழ் கவிஞர் . இவரது தமிழ் ஆர்வம் அளப்பரியது என்பதை இவரது நூலுக்கு அணிந்துரை வழங்கிய அனைவரும்  வேறு வேறு கோணத்தில் பதிவு செய்துள்ளதிலிருந்து அறிந்து கொள்ளலாம். . தாய் நாட்டை விட்டு வெகுதூரத்தில் வாழ்ந்து வந்தாலும் தமிழ் மொழியை இவர் நேசிக்கும் பாங்கை இந்நூல் ஆழமாக உணர்த்துகிறது. இவர் வெளிநாடு வாழ் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்பித்து வரும் பணியை பல வருடங்களாக செய்து வருகிறார்.  உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இணைந்து இலக்கியம் வளர்க்கும்  தமிழால் இணைவோம்  உலகத் தமிழ்க் களத்தின் அமெரிக்க  ஒருங்கிணைப்பாளராக  ஊக்கமுடன் செயல்பட்டு வரும் ஆனந்தி இயல் , இசை , நாடகம் என முத்தமிழையும் குழந்தைகளிடமும் பெரியோர்களிடமும் கொண்டு சேர்க்கும் தமிழ்ப் பணிகளை செய்து வருகிறார். சமீபமாக அந்தாதிகளை தன் முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். 
இணையம் முழுக்க இவரது எழுத்துகள் மெல்லிய  மழைத் தூறல் போல விடாமல் சாரலுடன் பரவிக் கிடக்கிறது .

கவிதை நூலான என்னுயிர் நீயன்றோ - இவரது முதல் தொகுப்பு , ஆனால் பதினைந்து ஆண்டுகளாக, தான் எழுதி வந்த கவிதைகளை மிக அழகாகக் கோர்த்து நூலாக மாற்றியுள்ளார். 100 கவிதைகளிலும் சொற்களின் திரட்சிகர்ஜனை செய்கிறது. நேசத்தை காணும் இடமெல்லாம்  விதைத்து அதன் மனத்தைப் பரப்புகிறார். காதலை எல்லா இடங்களிலும் கொண்டாடும் இவர் பெரும்பாலான இடங்களில்
இயற்கையின் மீது படர விட்டு பனித்துளிகளைச் சேகரிக்கும் புல்வெளியின் ஈரம்  போல  குளிரூட்டுகிறார். 

சர்வமும் நீ .... என்ற தலைப்பில் 

நெருஞ்சி முள்ளாய் 
நிறைத்த பாரம்
நீ நெருங்கிய நொடி
உடனே தீரும் .... என்று மிக அழகாகப் பாடியுள்ளார் .

பொங்கல் குறித்தான கவிதைகள் , பெற்றோர் , நட்பு , இயற்கை , உணர்வுகள் , மனிதப் பண்புகள், நாட்டுப் பற்று , பெண்ணியம் , மரபு ,  என ஒவ்வொரு கவிதையும் உருப் பெற்று உணர்வுகளைக் கிளறி அனுபவிக்க வைத்துள்ளார். வார்த்தைகளின் கிறக்கங்களில் சுகமான நினைவுகளைத் தருகிறார் .

தேன் உண்டு களிக்கக் கண்டேன்
திறம் கண்டு கிறங்கி நின்றேன் ...

மனிதர்கள் பல விதம் என்ற தலைப்பில் ....

ஊழியம் செய்தபடி
உரிமை இழந்த படி
உறவுக்காய் ஏங்கியபடி
உண்மையாய் இருப்பர் சில பேர் ....

இவை போன்ற வரிகள் எதார்த்தத்தைப் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம்.

மனதின் வலிகள் என்ற தலைப்பிலான கவிதையிலும் அதே எதார்த்தம் .... 
அவை ....

இருந்தும் இல்லாததும் 
புரிந்தும் புரியாததும்
அறிந்தும் அறியாததும் போல்
அமைதியாய் நகர்கிறேன் ...

மனிதர்கள் மீதான நேசத்தை மையப் படுத்தி இவர் படைத்துள்ள கவிதைகளை வாசிக்கும் போது , வேறொரு உலகிற்கு நம்மை அவை அழைத்துச் சென்று விடுகின்றன. ஆனால் அதே உலகிற்குள் சஞ்சரிக்க ஆசை கொண்டாலும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி மீள்கிறோம். ஆனால் ஆனந்தி எப்படி எல்லாக் கவிதைகளிலும் நேசத்தின் சாயலை மிச்சம் வைக்காமல் வெளிப்படுத்தி இருக்கிறார் என்ற வினா நமக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது தான் நிஜம். 

இவரது எல்லாக் கவிதைகளிலும் சொற்களின் தொடுத்தல் வரிசையில் ஒரு ஒழுங்கு இருப்பதையும் , சொற் களஞ்சியப் பெருக்கம் தாராளமாகப் பயன்படுத்தப்படுதலையும் கவனிக்க முடிகிறது. எதுகை , மோனை இல்லாத கவிதைகளே இல்லை எனலாம் .. ஒரு ஒழுங்கு வரிசை இலக்கண விதிகளுக்குட்பட்டு சொற்களை அடுக்கியிருப்பதையும் துல்லியமாக கவனிக்க இயலுகிறது. மிக முக்கியமாக  கவனிக்கும் மற்றொரு விடயம் , கவிதைகள் நேரடியான பொருளைத் தருவதால் புரிந்து கொள்வதில் கடினம் இல்லை. 

 அன்புடன் 
உமா