Friday, 5 April 2019

வாசிப்பை நேசிப்போம் ...#கல்வி_ஒருவர்க்கு_....

#கல்வி_ஒருவர்க்கு_....

நூல் பற்றி ..

இது ஒரு தொகுப்பு நூல் , கல்வி குறித்து பலரும் எழுதியுள்ள கட்டுரைகளை , தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்று  , கிராமப்புற மாணவர்களின் கல்விக்காகவேர்கள் அமைப்பை நடத்தி வரும் விரிவுரையாளர்
ச .பாலகிருஷ்ணன் என்பவர் தொகுத்தளிக்க
, 2013இல் புலம்பதிப்பகம்வெளியிட்டுள்ளது, பக்கங்கள் 216 ஐக் கொண்டுள்ள இந்நூல் ,கல்வித் துறை சார்ந்து கல்விச் சமத்துவத்தை எதிர்நோக்கித் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுமைகள் பலரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு .

கல்வியின் நோக்கமே விடுபட்டவர்களை சேர்த்துக் கொள்வது , ஆனால் ஏதாவது காரணம் காட்டி கிராமப்புற மாணவர்களைப்  புறந்தள்ளும்  போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது என்பதை இங்குப் பதிவு செய்வது கவனம் எடுக்க வேண்டிய ஒன்றாக நாம் பார்க்க வேண்டும். 

மொத்தம் 22 கட்டுரைகள் உள்ளன  , மெக்காலே கல்வி முறை பற்றிய முதல் கட்டுரையில்  , முனைவர் தவி. வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டுள்ள தகவல்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றது. கல்வி மறுக்கப்பட்ட சமூகம் கல்வி கிடைக்கும் வாய்ப்பாக அமைந்ததாக
அதைப் பார்க்க வைக்கின்றது. நவீனக் கல்வி தான் மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் அறிவியல் முறைக்  கல்வியாக மெக்காலேவால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவிற்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாக எண்ணுகிறேன்.

அடுத்ததாக என்னைக் கவர்ந்தது, பாகுபடுத்தும் கல்வியைக் கட்டமைத்தல் என்ற முனைவர் வசந்தி தேவி Vasanthi Devi அவர்கள் எழுதிய கட்டுரை . … எப்போதும் போல காட்டமாக தன் பாணியில் நம் நாட்டுக் கல்வியின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதோடு , உயர் கல்வியிலிருந்து தொடக்கக் கல்வி வரை பரவியுள்ள நோயை மாற்றுவது எப்போது?  என்கிறார் . மேலும் பல இடங்களில் பெற்றோரின் பேராசை , பாடத்திட்ட சுமையின் அழுத்தம் இப்படி பல வித காரணங்களின் வழியே எப்படி கல்வி ஏமாற்றப்படுகிறது  என்பதை வஞ்சப் புகழ்ச்சி அணியில் எள்ளி நகையாடுவதும் சில பகுதிகளில் இவரது கட்டுரையில் காண முடிகிறது.

தொடர்ந்து முனைவர் சு .இரவிக்குமார் காரல் மார்க்ஸின் வரிகளான , ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதின் அடிப்படையில் வர்க்க சமுதாயத்தில் கல்வியும் வர்க்கநலன்களைச் சார்ந்தே வடிவமைக்கப்படுவதாக தனது  கொள் வினை கொடுப்பினை , பொதுக் கல்வியும் ஊடகங்களும் என்றகட்டுரைையில் தந்துள்ளார்.

ஊடகங்கள் மக்களிடம் பரப்பும் உளவியல்களே அரசுப் பள்ளிகள் குறைந்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெருக்கத்திற்குக் காரணம் என வலுவான கருத்தை முன்வைத்து இக்கட்டுரையாளர் வாதம் செய்வது வரவேற்கத் தக்கது.

காலத் தேவையான கலாச்சார மாற்றங்கள் என்ற பெயரில் சி. என். மாதவன் Madhavan Narasimhachari N தந்துள்ள எழுத்துகள் அருகாமைப் பள்ளி , பொதுப் பள்ளி குறித்த கவலைகளையும் தனியார் பள்ளிகளை பிராண்ட் படுத்தும் நிலையையும் தொடர்பு படுத்தி விவாதித்துள்ளார்.

மொ. பாண்டியராஜன்  தந்துள்ள சமச்சீர் கல்வி பிறப்பும் - இறப்பும் என்ற பகுதியில் 1975 இல் உருவான 10 ஆண்டுக் கல்வித்திட்டம் முதல் இன்றைய நடைமுறையில்  இருக்கும்  சமச்சீர்  வரை பேசப்பட்டு இருக்கிறது.  தமிழக அரசு சமச்சீர்க் கல்வியை செயல்படுத்துவதில் செய்த தவறுகள் , ABL முறை , பேரா முத்துக்குமரன் கமிட்டி அறிக்கை என நிறைய தெளிவான வரலாறுகள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத் தக்கது.

நல்ல ஆசிரியர் எவ்வாறு நல்ல நாடகக் காரராக இருக்கிறார் என்பதை முன்வைத்து , நாடகம் உருவாக்குவதென்பது  கற்றல் - கற்பித்தல் இணைந்த ஒரு கல்விப் பணி என்று பொழுது போக்க மட்டுமே  அல்ல கலை , மாறாக பொழுதை அறிவு வயப்படுத்துவதும் அது , வகுப்பறைக் கல்வியான நிகழ்த்து முறைக் கல்விக்கான ஆசிரியர் ஒரு நல்ல நடிகராக இருப்பார் என வாதிடுகிறார் மு.இராமசாமி , இங்கு பிரளயன்  Pralayan Shanmugasundaram Chandrasekaran
அவர்கள் கண் முன் வருகிறார் , அவரது படைப்பான கல்வியியல் நாடகமும் நம்மை இந்தக் கட்டுரையோடு பிரயாணம் செய்கிறது. அதே போல் அனைவரும் அறிந்த அரசுப் பள்ளி ஆசிரியர் தெரு விளக்கு கோபிநாத்  Street Light Gopinath
போன்ற நாடகக் கற்பித்தல் முறையை அன்றாட வகுப்பறைகளில்  பயன்படுத்துவோரும் நம் நினைவில் வருகின்றனர்.

வகுப்பறை ஜனநாயகம் பற்றி பேசுகிறது கே. எஸ் கனகராஜின் கட்டுரை , உயர் கல்வி , கல்லூரி குறித்து பேசுகிறது கல்விக்கு ஏது வேலி ? என்கிற இரா. முரளியின் கட்டுரை .

மதுக்கூர் இராமலிங்கம் எழுதிய கானல் நீராகுமோ கல்வி ?என்ற கட்டுரை , சமூகத்தின் கல்வித் தாகம் அதிகரித்திருந்தாலும் கானல் நீராகத் தான் கல்வி இருந்து வருகிறது என்பதைப் பதிவு செய்துள்ளது.

ரமணன் தந்துள்ள பாடறியேன் ..படிப் பறியேன் , பள்ளிக் கூடம் தானறியேன் என்ற கட்டுரை ஆய்வுகளுடன் புள்ளி விபரங்களின் வழியே கல்வி நிதி நகர , கிராமங்களில் எவ்வாறு ? மாநில அரசும் மத்திய அரசும் எவ்வளவு கல்விக்காக செலவழிக்கிறது ? தனியாரின் செலவு எவ்வளவு ?பாலினப் பிரிப்பு என விவரங்களுடன் தருகிறது.

ஒளிபடைத்த கண் என்ற தலைப்பில் அமர்த்தியா சென் தந்துள்ள கட்டுரை வேறு மாதிரியான சிந்தனையை நமக்குக் கொடுக்கிறது. நம் இந்தியக் குழந்தைகளது சாப்பாடு குறைவு , ஊட்டக் குறைவு பிரச்சனைகளைக் கூறி , இந்தியாவில் தான் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் அதிகம் என்கிறார். நாம் தரமான பள்ளிகளை இன்னும் அதிகம் திறக்க வேண்டும்.  பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் பெற்றோரின் நிலையும் அரசின் நிலையும் என்ன என்பதை PROBE (PUBLIC REPORT of BASIC EDUCATION) அறிக்கை கொண்டு  விளக்குகிறார். கழிப்பறை வசதிகள் இல்லாதது தான் முதல் குறையாக உள்ளது.

டியூஷன் வகுப்புகள் பள்ளிக் கல்வியின் செயல்திறன் (efficience) எவ்வளவு மோசமாகி வருவதற்கும் பொருளாதாரக்கோணத்தின் ஒரு பார்வையில் விளக்கும் இவர் , பள்ளிக் கல்வி எதற்காக ? என்ற கேள்விக்கான பல விஷயங்களை அடையாளம் காட்டுகிறார்.
சமூக வாய்ப்பை உருவாக்கித் தரும் பள்ளியின் அனுபவத்தை மிக அழகாகத் தரும் இக்கட்டுரை  2004 இல் எழுதப்பட்டு அருணா ரத்தினம் Aruna Rathnam மொழி பெயர்த்து இருப்பது சிறப்பு , ஆனால் இங்கு பேசப்படும் பிரச்சனைகள் 15 வருடங்கள் கடந்தும் முடிவுக்கு வராமல் இருப்பது கண்டு அரசின் மீது
சீற்றம் கொள்ள வழி வகுக்கிறது.

பொன்னுராஜ்.வி என்பவர் ஆசிரியர்களுக்கான சமூக அங்கீகாரம் பற்றி சில அலசல்களையும் முதலாளித்துவ சமூகத்தின் கல்வி , என்று இன்னும் சில உபதலைப்புகளில்  வரலாற்றுப் பார்வையைத் தருகிறார்.

சாலை செல்வம் தந்துள்ள பெண் கல்வி என்ற தலைப்பிலான கட்டுரையில்  பிரச்சனையின் வடிவங்களில் வித்தியாசங்களைக் காட்டுகிறார். தலித் பெண் குழந்தையாயிருந்தால் , மாற்றுத் திறனுள்ள பெண் குழந்தை , பொருளாதாரத்தில்  பின் தங்கிய விட்டுப் பெண் குழந்தை , இப்படி பலவற்றிலும் பாகுபாடு உள்ளது. முற்போக்கான சிந்தனை முறையைக் கொண்ட பள்ளிகளும் கல்வி முறையும் வீடுகளும் அரிதாகவே உள்ளன  என்ற அவரது கருத்து நாம் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது .

தொடர்ந்து கல்வி உரிமைச் சட்டம் வரமா ? சாபமா? மார்க்ஸ் .அ தந்துள்ளதும் , நூலகம் பற்றிய ஐ.ராமமூர்த்தி கட்டுரையும் , தனியார் கல்வி தரமானது அல்ல என்ற பேராசிரியர் கல்யாணியின் நேர்காணல் கட்டுரையும் கூட வேறு வேறு தளத்திற்கு நம்மை அழைத்துச்  செல்கின்றன.

ஆசிரியர்கள் வாசிப்புப் பழக்கமற்றிருப்பதால்  என்ன நிலை , உலகளவில் ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய சில புத்தகங்கள் என்ற விதத்தில் ஆசிரியர்களை விரல் நீட்டி விமர்சிப்பதை இன்றைய தமிழக ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

ஆரோக்கிய மற்ற அரசுப் பள்ளிகளின் அவலத்தை கழிப்பறை காணாத கல்விக் கூடங்கள் என்ற தலைப்பில்  சாடுகிறார் பரமேசுவரி , இன்றைய நிலைகளும் அதுவாகவே இருப்பது அவமானம் ,

எழுத்துலகில் பெரிய முரணை உருவாக்கியவராக  சூழலை எதிர் கொண்ட பெருமாள் முருகன் சமச்சீர் கல்வி நீடிக்குமா என்ற தலைப்பில் தந்த கட்டுரை அடித்தட்டு பிரிவிலிருந்து கல்வி கற்க வரும் குழந்தைகளை மனதில் வைக்கக் கூறுவதோடு கல்விக்க ட்டணங்கள் பற்றி ஒரு பெரிய விவாதம் வைக்கிறார் .

இறுதியாக கல்விப் போராட்டம் என்பதைக் கருத்தியல் போராகப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் போராட்டத்தின் ஒரு அங்கமாகக் கல்வியையும் … இணைத்து அணுக வேண்டும் , கல்வி ஜனநாயக உரிமை என தனது கட்டுரையை முடிக்கிறார் , தொகுப்பாளர் ச.பாலகிருஷ்ணன்.

கல்வித் தளம் சார்ந்து பணிபுரியும் யாரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நல்ல புத்தகம் இது.கல்வி  வரலாற்றை அறிய  சுருக்கமான நூலாகவும் இதைக் கொள்ளலாம்.

பெருமூச்சு வாங்கி , உடனடியாக நம்மை அடுத்த பணிகளை  நோக்கி முடுக்குகிறது இந்த நூல்.

வாசிப்பு தொடரும்
உமா

சினிமா விமர்சனம் - சூப்பர் டீலக்ஸ்

#Super_Delux

பேசப்பட வேண்டிய திரைப்படம் .... எத்தனையோ புத்தகங்களின் வழியே சமூகத்திற்குக் கடத்தப்பட வேண்டிய கருத்துகளை பளிச்சென புரியும்படி அடித்தட்டு மக்களும் எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையில் திரைப்படமாகத் தந்திருக்கும் இயக்குநரை வாழ்த்த வேண்டும்.

பதின் பருவ விடலைப் பருவ பையன்களுக்கு மத்தியில் உடலுறவு குறித்த எதிர்பார்ப்புகள் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் CD வாங்கிப் பார்த்து தீர்த்துக் கொள்ளும் சமூகமாகத் தான் இந்த சமூகம் இருக்கிறது.

(இது குறித்து சக ஆசிரியர்களிடம் பேசுகையில் அவர்களது பகிர்வுகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன. 11 வருடம் முன்பு தாம்பரம் பகுதி மெட்ரிக் பள்ளியில் இது போன்ற நீலத் திரைப்படம் என வழக்கில் உள்ள CDக்கள் 500க்கும் மேல் ஒரே நாளில் பிடிபட்டுள்ளது. விசாரித்ததில் அவரவர் அம்மாக்கள் வேலைக்குச் சென்ற பிறகு மாணவர்கள் 4 /5 பேர் சேர்ந்து ஒருவரது வீட்டில் இப்படங்களைப் பார்ப்பது கண்டறியப்படுகிறது. ஏறத்தாழ 11 வருடங்கள் கழித்து சினிமாவில் இதே காட்சி இடம் பெறுகிறது )

அது போன்று தவறுகின்ற குழந்தைகள் சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் கழுகுகளாய் நம் சமூகத்தில் சுற்றிக் கொண்டு இருப்பதும் எதார்த்தமாகத் திரைக் கதையாக்கப்பட்டிருக்கு.

அப்போ நமது கல்வி முறையின் சறுக்கல்கள் அறிவியலை இதுவரை சரியாக போதிக்காதது தான் எனலாமா ?

ஒரு புறம் மதத்தின் பேரில் கடவுளின் பேரில் வெறி பிடித்து அலையும் மனிதர்கள் உயிர் போகும் தருவாயில் கூட மருத்துவத்தை விஞ்ஞானத்தை நம்பாமல்  கடவுள் சிலை முன்னே மன்றாடும் பழக்கம் , அவர்களுக்கு யார் புரிய வைப்பது ? கடவுள் மீது நம்பிக்கை வைப்பது வேறு , மூடநம்பிக்கையாக காயம் பட்ட இடத்திலிருந்து கொட்டும் ரத்தத்தை கடவுள் நிறுத்துவார் அற்புதங்கள் படைப்பார் என அவர் தலையை உருட்டும் கூட்டம் , காலம் காலமாக சிந்தனையை மாற்ற விடாமல் குருட்டு நம்பிக்கை வைத்திருக்கும் மக்களின்  ஒரு பிரிவினரை உணர்த்தி அது வெறும் கல் தான் எனப் புரிய வைக்க முயன்றிருக்கிறதும் அதற்கான நடிப்பை மிஷ்கின் வெகு தத்ரூபமாக செய்திருப்பதும் க்ளாசிக் , இதுவும் சமூகத்தை அப்படியே காட்டுகிறது  .

இந்த வேளையில்  காயம் பட்ட சிறுவனை கடவுளின் நம்பிக்கையிலிருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அரசியல்வாதி ஒருவரை (கவுன்சிலர் ) துணைக்கழைக்கும்  வேலையில்  , அவரது முயற்சியை தொடர்ந்து வீடியோ வாக்கி இணையத்தில் பகிர ஒரு உதவியாள் ... என்னங்கடா நடக்குது ? வரலாறு முக்கியமில்ல , வீடியோ எடுப்பது இன்றைய நடைமுறை தானே .. அதுவும் பதிவு செய்யப்பட ,

திருநங்கைகளுக்கு நமது சமூகம் பல வழிகளில் தரும் அழுத்தங்கள் , உறவுகளின் புறக்கணிப்பு , சாடைப் பேச்சுகள் , பலவித மனிதர்களும் அவர்களை நடத்தும் வேதனை மிகு அணுகுமுறைகள் , காவல் துறையின் அதிகாரிகள் அளவில் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் , பள்ளிகளில் சிறு மாணவர்கள் பார்வையில் அவர்களை 9 என்பதும் , உஸ் என்று     கிண்டல் செய்வதும் மிக மிக எதார்த்தமாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒரு இளம் கணவன் மனைவிக்கிடையில் இருக்கும் எதார்த்த வாழ்க்கை , முன்பே காதலித்த கல்லூரி நண்பனுடன் பேசியதால் அவனது கஷ்டத்தைப் போக்கி மன அழுத்தத்தைப் போக்கும் எண்ணத்தில் வீட்டிற்கு அழைக்க , உடலுறவு நிகழ்ந்து விட அதை இயல்பாக ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கும் பெண்ணின் உண்மை நிலை , இறந்து போகிறான் காதலன் அதை கணவன் மனைவியுமாக இணைந்து அப்புறப்படுத்த முயலும் போது ,  கண்காணித்து சாட்சி உருவாக்கி அதைக் கொண்டே  அந்தத் தம்பதியரை மிரட்டி மனைவியை தன்னுடன் அனுப்ப கணவனையே ஏவி விடும் காவல் தெய்வம் (போலீஸ்) ...அப்பப்பா .... எத்தனை விதமான புரையோடிய சமூகமாய் இருக்க ..... அதையும் அனுசரித்துப் போகும் மனநிலை .

நீ ஆம்பளையா இரு இல்லாட்டி பொம்பளயா இரு , எப்படி வேணா இரு ஆனா ... எங்க கூட இருந்து தொலச்சுட்டுப் போயேன்னு ஒரு 5 வயசு பையன் , அப்பா பாசத்தால்  பேசும் வசனங்கள் நெகிழ வைக்குது.

டாக்டர் , டிரைவர் மாதிரி விபச்சார படங்களில் நடிப்பதும் ஒரு தொழில் தான் , லட்சக்கணக்கான பேர் அதைப் பார்க்கும் நிலையில் இருக்க , அவர்களைக் கேள்விக்குள்ளாக்காமல் நடிக்கும் என்னை அசிங்கப் படுத்துவது எந்த விதத்தில் சரி என சமூகத்தை அறைகிறார் ரம்யா .

நகம் வெட்டிக்கிற மாதிரி , முடி வெட்டிக்கிற மாதிரி , என் உடலை மாத்திக்கிட்டு எனக்குப் புடிச்ச மாதிரி வாழறேன் என்ற திருநங்கையாக வரும்  விஜய் சேதுபதியிடம், நீ சொல்வது நியாயம் தான் , ஆனா இங்க  நியாயம் வேற , நடமுறை வேற ன்னு சம்மட்டில அடிப்பது போல பூக்கார அம்மா சொல்வது செம.

எல்லாமே தற்செயலாத்தான்  நடக்குது.  நம்ம கிட்ட நிறைய கற்பிதங்கள் இருக்கு அதை மாற்றி மகிழ்ச்சியா வாழுங்க என்று ஒரு மெஸேஜ் சொல்ல வராங்க.

அதோடு ....... சமூக எதார்த்தத்தைப் பதிவு செய்கிற இப்படம் மன உணர்வுகளை அடுக்கடுக்காகப் பதிவு செய்கிறது .ஒரு காமெடி டிராக் இல்ல , பாட்டு இல்ல , மியூசிக் இல்ல .... ஆனா அப்படி ஒரு அட்டகாச நிறைவைத் தரும் படமாக இருக்கு.

#உமா

வாசிப்பை நேசிப்போம் - புனைவும் நினைவும்

#புனைவும்_நினைவும்   #நூல்

வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்

மிகச் சமீபத்தில் பதிப்பிக்கப்பட்ட (2018) நூல் ... நூலாசிரியர் சமயவேல் Samayavel Karuppasamy தன் எழுத்துகள் வழியாக அவரது ஊரின் பழக்க வழக்கம் , மக்களின் வாழ்வியல் நெறி , வழிமுறைகள் , சமயம் , வழிபாடு , பண்பாடு , மதம் , சாதி உள்ளிட்ட செய்திகள் , அவர்களின் பொழுது போக்கு என அத்தனையையும் கண் முன்னே கொண்டு வருகிறார்.

இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ள நூல் 135 பக்கங்களை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதி முழுவதும் கலாச்சார எச்சங்கள் என்ற தலைப்பில் மேற் சொன்ன அத்தனையையும் தருகின்ற இவர் இரண்டாம் பகுதியில் ஊரில் எனது மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு 12 மனிதர்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.

பாரதியின் எட்டயபுரத்திற்கு அருகில் இருக்கும் ஒரு கரிசல் கிராமமான வெம்பூர் தான் நூலாசிரியரின்  கிராமம். பல நண்பர்களின் நினைவூட்டுதலாலும் ஒரு நண்பரின் தூண்டுதலாலும் இதை எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்  சமயவேல்.

துள்ளு மாவும் துயர நெருப்பும் அத்யாயம் என்னை எனது  வளர்ந்த நாட்களுக்கும் , எனது ஊருக்கும் அழைத்துச் சென்று விட்டது. இந்த ஒரு அத்யாயம் மட்டுமல்ல மொத்த புத்தகமும் வாசிக்க வாசிக்க என்னை இன்னொரு நினைவுக்கு அழைத்துச் செல்கிறது ,

பண்டிகைகளும் விழாக்களும் நம் இளமைக்கால நினைவுகளும் எல்லோருக்கும் பசுமரத்து ஆணியாகப் பதிந்து இருக்கும் , அந்தப் பசுமையை தொட்டு உணர்ந்து சுவாசித்து ரம்மியமாக ரசிக்க வைத்து நெகிழ வைக்கிறது துள்ளு மாவு எழுத்துகள் . கஞ்சி ஊற்றும் பண்டிகை எங்கு ஆரம்பித்து எப்படி மக்களிடையே உறவுப் பாலம் அமைத்து ஒற்றுமையை  வலுக்கச் செய்தது பற்றிய பகிர்வுகள் சிறப்பாக இருக்கின்றது. பல துவையல்களின்  பெயரில் ஏரோப்ளேன் துவையல் தான் நான் கேள்விப் படாத ஒன்று.

உருமித் திரியும் தற்கொகொலைகள் பக்கங்களைப் படிக்கும் போது இன்றைய பொள்ளாச்சி , கோவை குழந்தைகளின் பாலியல் வன்கொடுமைகள் மனதில் வந்து போகின்றன. இப்படி ஒவ்வொரு கிராமங்களிலும் ஆண்களின் பாலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளுக்கும் பெண்களையே பலி கொடுத்துக் கொண்டுள்ளோம்  என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது போலவே உள்ளது இந்த உருமியின் துயரம் .

கடவுள் பற்றிய பொய் நம்பிக்கைகள் உதிரத் தொடங்கிய பஞ்ச காலம் பற்றி குறிப்பிட்டுள்ள காலத்தைத் துரத்திய மனிதர்களை வாசிக்கும் போது எனது அம்மாவும் பாட்டியும் அடிக்கடி சொல்லி என் மனதில் பதிந்திருந்த பஞ்ச காலம் தான்  நினைவுக்கு வந்தது.

கண்மாய்களைப் பற்றிய வாசிப்பில் கூட எனது இளமைக் காலம் , ஏற்றம் இரைக்கும் கிணறு , வாய்க்கால் சலசலப்பு
, ஊரில் மழைக்காலத்தில் கேட்கும் தவளைச் சத்தம் இவைதான் என்னை ஆட்கொண்டது.

கரம்பை யுத்தம் முழுவதும் , கரம்பை மண் பற்றிய விளக்கமும் அது எவ்வாறு தோட்டங்களில் கலந்து வெள்ளாமையை மீட்டெடுக்கிறது என்பதையும் , அது திருடப்படுவதன் சம்பவங்களும் தான் வருகின்றன. கட்சிகளும் ஜாதிகளும் பின்னிப் பிணைந்த நமது மக்களாட்சியில் , ஜாதிகள் மக்களாட்சி முறையின் கழுத்தை அறுத்துக் கொண்டிருப்பதை நிகழ்ச்சிகளின் பதிவுகளால் நம்மை வந்தடையச் செய்கிறார் நூலாசிரியர்.

1972 இலேயே தன் ஊரில் பாரதி இளைஞர் மன்றத்தை உருவாக்கி , பாரதி படிப்பகம் ஏற்படுத்தியதையும்  கண்மாய்க்கு அணை வழியே நீர் கொண்டு வர அரசு செலவிட்ட தொகை சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து , பிரச்சனைகளைக் களைய 500க்கும் மேற்பட்ட மக்களிடம் கையெழுத்து வாங்கி ஆட்சியரை சந்தித்து செய்த பணிகள் இவரை ஒரு சமூக செயல்பாட்டாளராக ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பே அடையாளப்படுத்துகிறது. சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டு அணை காணாமல் போன கதையை என் மனம் இதோடு இணைத்துப் பார்த்தது.

கனவின் இருள் பெய்யும் பாவைக் கூத்து
வாசிக்க வாசிக்க என் ஜலகை ஊரில் தை மாதம் நடக்கும் கூத்துகள் நினைவுக்கு வருவதோடு , 10 மணிக்கு ஆரம்பிக்கும் கூத்துக்கு சாக்குப் பையோடு பக்கத்து வீட்டு பார்வதி அக்காவுடன் போய் நடுஜாமம் வரை சந்தைக் கடை மணளல் உட்கார்ந்து பார்த்து வரும் நாட்கள் கண்களின் வழியே மனதை ஈரப்படுத்தியது.

இங்கு கீதாரி ,பாவைக் கூத்துக் குடும்பம் , நிகழ்த்து கலைகள் இவற்றை சுவாரஸ்யமாகக் கூறும் ஆசிரியர் ஜடாயு போர் பற்றி விரிவாகக் கூறியுள்ளார். கலாச்சாரத்தின் நுண்ணிய வேர்களை அறியாதவர்களால்  தான், பாவைகள் தீப்பிடித்து எரியும் காட்சிகளைப் படமாக்க முடியும் என்று வருத்தப் படுகிறார் தசாவாதாரக் கதையின் காட்சிகளைக் கூறி வருந்துகிறார் .

இப்படியாக சேத்தாண்டி ஊர்வலம் , கோயிந்தா கோய்ந்தா , மனசுக்குள் மத்தாப்பு கொளுத்தும் பெரிய கார்த்திகை , எங்க ஊர் வெம்பூர் , ஊர் நீங்குதல் என்பதான மேலும் சில தலைப்புகளில்  எழுதியுள்ளார். சாதிப் பிரச்சனை , இரட்டை டம்ளர் முறை பற்றி கூட பேசுகிறது நூல். அதன் தொடர்ச்சியாக 
25 வருடத்திற்கு முன் இன்றுள்ள எடப்பாடி ஊரின் 10 கி.மீ தூரத்தில் கட்டி நாயக்கன்பட்டி என்ற சிறு கிராமத்து அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு கண் பார்வை போனது பற்றிய வரலாறு உங்களுக்கு நினைவிருக்கலாம்  , அங்கே பிரச்சனையே இந்த இரட்டை டம்ளர் முறை தான்.

ஊரின் வரைபடமும் புத்தகத்தின் 96 , 97 ஆம் பக்கங்களில் தரப்பட்டு இரண்டாம் பாகத்தில் எனது மனிதர்கள் என்ற தலைப்பில் அவரது நினைவில் நிற்கும் மறக்க முடியாத  மனிதர்களுடனான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

படிக்கும் ஒவ்வொருவருக்கும்  மனசை இலேசாக்க அவரவர் வாழ்க்கை , ஊர் ,மக்கள் என அழைத்துச் செல்லும் நல்ல தொரு படைப்பு .இதன் அட்டைப்படம் நம்மை மெதுவாக தொட்டு ரசிக்க வைக்கிறது.

இதன் ஆசிரியர் சமயவேல் அவர்களைக்
கேட்க, நூல் தனைஅடுத்த நாளே அனுப்பி வைத்தார், அன்பும் நன்றியும் தங்களுக்கு .

வாசிப்பு தொடரும்
உமா

வாசிப்பை நேசிப்போம் - ரபேல் ஊழல்

#நாட்டை_உலுக்கும்_ரபேல்பேர_ஊழல்

#நூல்விமர்சனம்

திரும்பிய பக்கம் எல்லாம் ஊழல் எனப் புலம்பும் நம்மைப் போன்ற சாதாரண குடிமக்களுக்கு இந்தப் புத்தகத்தின் செய்திகள் அனைத்தும் பேரதிர்ச்சியாக இருக்கிறது.  ஆம் , நம்மைச் சுற்றி சின்ன சின்ன விஷயங்கள் ( உ. ம் ) ரேஷன் கடை ஊழல் , அரசு கட்டிடம் கட்டுவதில் ஊழல் , சாலை போடுவதில் ஊழல் என இவற்றையே கண்டு பொங்கி அடுங்கும் மனோபாவம் , புலம்பும் மனோபாவம் , கண்டும் காணாமல் போகும் மனோபாவம் ,நமக்கென்ன என்ற மனோபாவம் கொண்டு அணுகும் போது இத்தனை லட்சம் கோடிகளை ஊழலில் பார்த்து அது பற்றி கடந்து போகும் மனோபாவம் கொண்ட கைப்பாவை மக்களாகவே ஆக்கப்பட்டிருக்கிறார்கள்  மக்கள்.

என்றால் அப்படியே விட்டு விடுவதா ? கூடாது என்று தான் 48 பக்கங்களை ஒரு பெரும் போராட்ட நாட்களோடு நேற்று இரவு இப்புத்தகத்தை வெளியிட்டது பாரதி புத்தகாலயம். எஸ்.விஜயன் எழுதி ரூ 15க்கு விற்பனைக்கு வந்துள்ளது .

இதில் வருவதெல்லாம் என்னென்ன ? பாதுகாப்பு அமைச்சகம் , விமான உற்பத்தி , இராணுவத் தளவாடம் , அம்பானி , போர் விமானம் , தணிக்கை அமைப்பு , உச்ச நீதிமன்றம் , நிபுணர் குழு
தேர்தல் பத்திரம் (Electoral Bond)
இத்யாதி இத்யாதி ....

விமானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விடும் மக்களே பெரும்பான்மையானவர் நமது நாட்டில் , இவர்களை ஏமாற்றி விடலாம் என்று தான் மக்களைக் காக்க வேண்டிய வேந்தர் கூட்டம் இப்படி வில்லத்தனமான வேலை எல்லாம் தைரியமா செய்யுது.

இப்படிப் பாருங்கள் ..இந்த ரபேல் ஊழலை ஒப்பிடும் போது மினியேச்சர் ஊழல் விவகாரங்களை உள்ளடக்கிய சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். என்றாவது இந்த மினியேச்சர் ஊழல்களைப் புறந்தள்ளாமல் எதிர்க்கத் துணிந்து கேள்வி கேட்கிறோமா ? நமது ஒவ்வொருவரது பணி சார்ந்த துறையிலும் இது போன்ற ஊழல்களை சமீப காலங்களில் ஏராளமாக சந்தித்து வருகிறோம்.
உதாரணம் : கல்வித்துறை  ... இதில் கூட கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 38 கோடி ஊழல் என்று பல தொலைக்காட்சி , இதழ்களில் தொடர்ந்து செய்தி வந்தது. அது உண்மையா ? பொய்யா ? அல்லது அதன் முடிவு என்ன எதுவுமே பேசப்பட வில்லை. இப்படி சின்ன ஒரு இடத்தில்  குறைவான  பணப்புழக்கம் உள்ள இடத்திலேயே இத்தனை கோடிகள் ஊழல் , அதுவும் மக்களின் வரிப்பணம் , எதுவுமே கண்டு கொள்ள ஆளில்லாத ஒரு சமூகம் , அப்படி என்றால்  பெரிய நாடு , கைக்கு எட்டாத தூரம்காதுக்கு எட்டாத செய்திகள் மக்கள் ஏமாற்றப்பட்டு இவ்வளவு லட்சம்கோடிகளின் ஊழல் ..

டென்டர் வாங்கி ஒரு ஒப்பந்தம் போடுவது தான் முறை எனத் தெரிந்தும்  அனைத்தையும் ஒதுக்கி , ஆறு நிறுவனங்கள் சமர்ப்பித்த தொழில்நுட்ப
விபரக்குறிப்புகளின் அடிப்படையில் அவற்றை மதிப்பீடு செய்யும்
பணி கண்துடைப்பாக
நடைபெற்று ,தொழில்நுட்ப பரிசீலனையில் ரசியாவின் மிக்-35
மட்டும்தான் விமானப்படை முடிவு செய்திருந்த அனைத்துத்
தேவைகளையும் நிறைவேற்றும் விதமாக இருந்த போதிலும் , ரஷ்யா
பாரம்பரியமாக  தேவையான ராணுவதளவாடங்களை இந்தியாவிற்கு தருவதில்  முதல் இடம் வகிக்கும் நாடாக இருந்த போதும் அதைத் தவிர்த்து பிரெஞ்சு நாட்டின் தசால்ட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது முதல் , பல பல முடிச்சுகள் ..

ஏறத்தாழ இராணுவத் தளவாட உற்பத்திக் கொள்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஊழல் நடப்பதைப் பதிவு செய்கிறது இப்புத்தகம் , அப்போ  தலைமுறை தலைமுறையா
மக்கள் ஏமாந்து வருவது பெரும் அவலமில்லையா ?

கல்வி எதுக்கு ? நியாயம் ? மக்களாட்சி ? நீதிமன்றம் ? அரசியல் சாசனச் சட்டம் ?
இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் ?
அப்புறம் எதுக்கு நீதி நூல்கள் எல்லாம் சொல்லித் தறீங்க ?  யாரை ஏமாத்தறீங்க ?

சட்டப் பூர்வமா ஊழலை அல்லவா இந்த அரசு செய்துள்ளது ?இந்திய நீதித்துறை வரலாற்றில் இது ஒரு தவறான
முன்னுதாரணமாகி விட்டதை நாம் எப்படி அனுமதிப்பது ?

விசாரணைக் கமிஷன்களிலிருந்தும் வழக்கிலிருந்தும் மாட்டிக்
கொள்ளாமல் விஞ்ஞான பூர்வமாக செய்யப்பட்டு வந்த ஊழலை எப்படி ஏற்றுக் கொள்வது ?

விழிப்புடன் இருப்போம் இனிவரும் நாட்களிலாவது...

குறைந்தபட்சம் நிகழ்கால வரலாற்றை சரியாகக் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வாவது ஆசிரியர்கள் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் உடனடியாகப் படிக்க வேண்டும். வரலாறு தவறாக எழுதப்படாமல் இருக்கவும்   கவனமாக வரும் நாட்களை எதிர் கொள்ள வேண்டும்

உமா